Advertisement

காதல் தருவாயா காரிகையே 14

                              தேவா தன் அத்தை பார்வதியுடன் தீவிரமாக சமையலில் ஈடுபட்டிருந்தாள். பார்வதி அடுப்பில் எதையோ வதக்கி கொண்டிருக்க, அவர் அருகில் நின்று காய்கறிகளை நறுக்கி கொண்டிருந்தாள் தேவா. அந்த சமயத்தில் தான் முத்துமாணிக்கம் பரபரப்பாக அந்த அறைக்குள் நுழைந்தார்.

                             வந்தவர் பார்வதியிடம் “ராக்காயி பாட்டி தவறிடுச்சு பார்வதி..கிளம்பு போயிட்டு வந்திடுவோம்..” என்று கூற, “அய்யோ..” என்று நெஞ்சில் கைவைத்தவர் அடுத்த நொடியே அவருடன் கிளம்பினார். அரைகுறையாக தொடங்கி இருந்த சமையலை அவர் தேவாவிடம் ஒப்படைத்துவிட்டு நகர, மீத சமையலை தானே முடித்து வைத்தாள் தேவா.

                           கூடவே இட்லி அவித்து வைத்தவள், அதற்கான சட்னியையும் அரைத்து உணவு மேசையில் வைத்து விட்டாள். அந்த சமயலறையில் இருந்த ஒன்றிரண்டு பாத்திரங்களை அவள் கழுவி முடித்து அடுக்கும் நேரம்தான் ரகு கீழிறங்கி வந்தான்.

                            அன்றைக்கு “நீங்களே என்ன செய்யுறது ன்னு முடிவு பண்ணுங்க..” என்று சொன்னதோடு சரி. அதற்குமேலாக அதை பற்றி அவள் பேசவே இல்லை. ஆனால் ராகு பொறுப்பாக தன் காரை எடுத்து வந்தவன் அன்றே அவளை வங்கிக்கு அழைத்து சென்று பணத்தையும் அவள் பேரில் ஒரு கணக்கை தொடங்கி அதில் போட்டுவிட்டான்.

                             அதே வங்கியின் லாக்கரில் நகைகளையும் அவன் வைத்துவிட, நிச்சயம் தேவாவுக்கு கோபம்தான்.. இது தனக்கு தெரியாதா?? என்பதே மனதில் இருக்க, முகத்திலும் அதே உணர்வு தான். ஆனால் அவனை ஒரேடியாக கட்டாயப்படுத்துவதும் சரியாக படாததால், என்னவோ நடக்கட்டும் என்று விட்டு விட்டாள்.

                             அதன்பிறகு அதை பற்றி அவனிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவும் இல்லை. அத்துடன் அந்த விஷயத்தை மறந்து விட்டவள் போல தான் நடமாடிக் கொண்டிருந்தாள் தேவா.  ரகு நடுவில் ஒருமுறை ஏதோ கூற வந்தபோதும் “எனக்கு நீங்க விளக்கம் எல்லாம் சொல்ல வேண்டாம்.. என்னால புரிஞ்சிக்க முடியுது..விட்டுடுங்க..” என்பது முடித்துவிட்டாள்.

                             இப்போது அவன் காலை உணவுக்கு வர, ஆவி பறக்க இட்லியை அவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள் தேவா. அவன் “அம்மா எங்கே தேவா..” என்று கேட்க

                         “யாரோ பாட்டி இறந்துட்டாங்க ன்னு மாமா வந்து கூட்டிட்டு போனாங்க..பேர் கூட ராக்காயி ன்னு சொன்னாங்க..” என்று அவள் கூற

                         அவளை திரும்பி பார்த்தவன் எதுவும் பேசவில்லை.. அமைதியாக உண்டு முடித்து “நீயும் சாப்பிடு..” என்று அங்கேயே அமர்ந்து விட்டான். தேவாவும் உண்டு முடிக்க ” ராக்காயி பாட்டி யாரு ன்னு தெரியுமா உனக்கு..?” என்று அவன் கேட்க

                         “எனக்கு எப்படி தெரியும்??”  என்று அப்பாவியாக கேட்டு வைத்தாள் தேவா.

                 அவள் முகத்தையே பார்த்தவன் “உன் அம்மாவோட சித்தி அவங்க.. உன் பாட்டி தேவகியோட தங்கை.. உடம்பு முடியாம இருந்தாங்க.. ” என்று அவன் விவரம் சொல்ல அப்போதுதான் ராக்காயி யார் என்று தெரியும் தேவாவிற்கு.

                     அவளுக்கு இப்போது வரை அவள் தாய் வழி பாட்டியின் பெயர் கூட தெரியாது.. இதோ இப்போது ரகு சொல்லித்தான் அவள் பாட்டியின் பெயர் தேவகி என்பதே அவளுக்கு தெரியவர, இதற்கு யாரை நொந்து கொள்வது என்றும் தெரியவில்லை.

                  அவள் ரகுவையே பார்த்திருக்க, “உன்னை சொல்லி என்ன செய்ய.. இவங்களும் மனுஷங்க தான்.. நம்மளோட உறவுக்காரங்க ன்னு சொல்லி இருந்தா தானே தெரியும்..” என்று அவனே பேசிக்கொள்ள

              “நாம  வேண்டாமா..” என்று மெல்லிய மெல்லிய குரலில் அவள் கேட்க

                “இந்த புடவையை மாத்திட்டு வா.. கிளம்புவோம்.. ” என்று அவன் எழுந்து கொள்ள, தேவாவும் வேகமாக தயாராகி வந்தாள். இருவரும் அந்த துக்க வீட்டிற்கு சென்று நிற்க, வேலுமாணிக்கம் வேகமாக எழுந்து இவர்களின் அருகில் வந்தார்.

                 “ஏன் கண்ணா.. தேவாவை எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்த..” என்று அவர் கேட்க

               “வரட்டும் சித்தப்பா.. அவளும் எல்லாம் தெரிஞ்சிக்கணும் இல்லையா.. கூட இருக்கட்டும்..” என்றவன் தேவாவிடம் தன் அன்னையை சுட்டி காட்டினான். அவன் பார்வை புரிந்தவளாக தேவா அவருடன் சென்று அமர்ந்து கொண்டாள்.

                  அதன் பின்னான நேரங்கள் அந்த துக்க வீட்டிலேயே கழிய, ரகு அங்கிருந்த அவன் வயதை ஒத்த சிலருடன் நின்றுவிட்டான். ராமச்சந்திரனும், பிரசன்னாவும் வந்திருந்தவர்கள் தங்களுடன் காவிரியையும், வானதியையும்  அழைத்து வந்திருக்க, பெண்கள் உள்ளே சென்றுவிடவும் தன் தந்தைகளுடன் வந்து நின்று கொண்டனர்.

                         அங்கு வந்திருந்த சொந்தங்கள் அத்தனையும் புதிது தேவாவுக்கு. அன்று விருந்தில் கண்ட பலரை அவள் இன்றைக்கும் கண்டாள். அவர்கள் பார்வதியிடம் ஏதேனும் பேசிட்டே செல்ல, உடன் அமர்ந்திருந்த தேவாவிடமும் ஒருசில வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தனர்.

                     அங்கேயும் சில வம்பர்கள் “ஏன் உன் பெரிய மருமக வரலையா..” என்று பார்வதியிடம் கேட்டு வைத்தனர் என்றால் “உன் பாட்டியாத்தா சாவுக்கு தான் வரல.. அவ தங்கச்சி சாவுக்காவது வந்திருக்கியே.. அது வரைக்கும் சந்தோஷம் தான்..” என்று கூறிவிட்டே சென்றனர்.

                     தேவாவுக்கு தேவகி எப்போது இறந்தார் என்பதே தெரியாது இன்று வரையில். தன் அம்மாவின் குடும்பத்தை பற்றி எதுவுமே தெரியாது அவளுக்கு. ரகுவுடனான திருமணத்திற்கு பின்பு தான் தன் சொந்தங்களே அவளுக்கு தெரியும்.

                     அப்படி இருக்க, இவர்கள் தன்னை குறை சொல்வது போல பேசி செல்கின்றனரே என்று தேவா யோசிக்க, பார்வதிதான் “இவங்க பேசுறதுக்கெல்லாம் வருத்தப்படக்கூடாது தேவா.. இது இல்லேன்னா இன்னொன்ன பேசுவாங்க.. அமைதியா அவங்களோடவே விட்டுடு..” என்று கூறி கொண்டிருந்தார் அவளிடம்.

                    இறந்து போன அந்த பாட்டிக்கு ஒரே மகள் மட்டுமே இருக்க, அவரும் கணவனை இழந்தவர் என்பதால் தன் தாயுடன் தான் வசித்து  வந்தார். இப்போது ராக்காயி இறந்து போனது அவருக்குதான் பெரிய துக்கமாக போயிருந்தது.தனக்கும், தன் மகனுக்கும் அரணாக இருந்த தாய் இறந்து விட்டதில் அழுகையில் கரைந்து கொண்டிருந்தார் அவர் பூங்கோதை..

                     அவரின் ஒரே மகன் செந்தில்குமரன். தன் பாட்டிக்கு ஈமக்கிரியைகள் செய்வதற்காக அவன் தயாராக நிற்க, அந்த வாழ்வரசியின் இறுதி யாத்திரை அமைதியாக தொடங்கி இருந்தது. அன்றைய பொழுது முத்து மாணிக்கத்தின் குடும்பத்திற்கு அங்கேயே கழிய, அந்த நாளின் முடிவில் தான் வீடு திரும்பி இருந்தனர் அனைவரும்.

                     முத்து மாணிக்கமும் சரி, வேலு மாணிக்கமும் சரி.. பூங்கோதையை  இல்லை. சொந்த தனகையாகவே அவரை நடத்தி இருக்க, அதன் பொருட்டே அனைத்து காரியங்களிலும் உடன் நின்றனர். காலையில் விஷயம் கேள்விப்பட்டவுடன் வேலு முதலில் சென்றுவிட்டிருக்க, முத்து மாணிக்கம் மனைவியை அழைத்து செல்ல தான் வீட்டிற்கு வந்திருந்தார்.

                    தன் தந்தையை பற்றி நன்கு அறிந்திருந்ததால் தான் காலையிலேயே ரகு தேவாவை அழைத்துக் கொண்டு கிளம்பி இருந்தது. அப்படி இருக்கையில் அவன் சித்தியும், அண்ணியும் அங்கே வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை.

                   வேலுவும் இதை மனதில் வைத்துக் கொதித்து கொண்டே தான் இருந்தார் காலையில் இருந்து.. இப்போது வீட்டிற்கு வரவும் அவர் தன் மனைவியை அழைத்து கேட்க, சங்கரி அலட்டிக் கொள்ளவே இல்லை. “அதான் மொத்த குடும்பமும் கிளம்பி போய்ட்டீங்களே.. அப்புறம் என்ன?? நானும்  வந்துட்டா வீட்டை யார் பார்க்கிறது..” என்று சாவகாசமாக அவர் சொல்லிவிட, வேலுவுக்கு தான் “ச்சி..” என்று ஆனது.

                    “உன்னையெல்லாம் ஒரு மனுஷி ன்னு மதிச்சு கேட்டேன்ல, என்னை சொல்லணும்..வீட்டை பார்த்துக்கறதாடி கவலை இப்போ..” என்று அவர் கொதிக்க

                    “ஆமா… இல்லையா பின்னே, அவங்க செத்துட்டாங்க ன்னு கூட இந்த வீட்ல இருக்க யாரும் சொல்லல என்கிட்டே.. பெரிய மாமா அக்காவை கூட்டிட்டு கிளம்பிட்டாரு.. இந்த வீட்டு பெரிய மனுஷன் அவன் பொண்டாட்டியை கூட்டிட்டு போய் சபையிலே நிற்க வச்சிட்டான்.. நான் பெத்தது கூட என்னை மதிக்காம அது பாட்டுக்கு கிளம்பி போயிருக்கு.. அப்புறம் நான் எதுக்கு அங்கே வந்துட்டு..” என்று அவர் ஏற்ற இறக்கங்களுடன் சொல்ல

                   “இங்கே பாரு சங்கரி.. உன்கிட்ட சொல்லாம போகணும்ன்னு நான் நினைக்கல.. அவர் வந்து கூப்பிடவும் பதட்டத்துல என்ன செய்யுறது ன்னு தெரியல.. அடுப்பை கூட தேவா கிட்ட விட்டுட்டு அவசர அவசரமா கிளம்பி போய்ட்டேன்.. இது ஒரு விஷயமா?? விஷயம் கேள்விப்பட்ட உடனே நீயே வந்து நின்னிருக்க வேண்டாமா..” என்று அமைதியாகவே பார்வதி கேட்க

                   “நீங்க ஏன்க்கா பேச மாட்டிங்க.. உங்க வீட்டுக்காரர் அத்தனை துக்கத்துலையும் வீட்டுக்கு வந்து உங்களை அழைச்சிட்டு தானே போயிருக்காரு.. உங்களுக்கு புரியாது என் வேதனை..” என்று அவர் வராத கண்ணீரை துடைக்க

                      முத்து மாணிக்கம் தான் “வேலு.. ஏன் இப்போ இதையெல்லாம் பேசிகிட்டு.. அதான் எல்லாம் முறையா செஞ்சு இருக்கோமே.. யார் வந்தா என்ன வராட்டி என்ன?? இனி இதை பேசி என்ன ஆக போகுது..” என்று விட்டு “போய் சாப்பிட்டு படுங்க எல்லாரும்..போங்க..” என்று  அனுப்பிவிட்டார்.

                       பார்வதி சமையலறைக்கு சென்று பார்க்க அந்நேரம் வரையிலும் கூட வீட்டில் இருந்த இரண்டு பெண்களும் எதுவும் சமைத்து இருக்கவில்லை. இப்போது இதைப்பற்றி பேசினால் ஒருவர் கூட நிம்மதியாக உறங்க செல்ல முடியாது என்பதை உணர்ந்தவராக பார்வதி மாவை எடுத்து இட்லிக்கு ஊற்றி வைக்க, தேவா உடையை மாற்றி வந்தவள் சட்னிக்கு தயார் செய்தாள்.

                        அடுத்த அரைமணி நேரத்தில் சுடசுட அங்கிருந்தவர்களுக்கு அவர்கள் பரிமாற, அடுத்த ஈடு இட்லியை ஊற்றி வைத்திருந்தார் பார்வதி. தேவா மேலும் தோசையும் ஊற்றிக் கொடுக்க, ஆண்கள் அனைவருமே உண்டு முடித்திருந்தனர்.

                      பார்வதி சமையல் அறையில் இருந்த ஒரு தூக்கை எடுத்தவர் அதில் இட்லியை நிரப்பி, அதை கையில் எடுத்துக் கொண்டு வெளியில் வர, ரகு தயாராக நின்றான். தன் அன்னையின் எண்ணம் புரிந்தவனாக அவன் அன்னையை அழைத்துக் கொண்டு கிளம்ப, இருவரும் சென்றது பூங்கோதையின் வீட்டுக்கு தான்.

                     அன்னை ஒரு மூலையில், மகன் ஒரு மூலையில்  என்று இருவரும் ஆளுக்கொரு பக்கமாக படுத்து விட்டிருக்க, பார்வதி செல்லவும் தான் எழுந்து அமர்ந்தான் செந்தில்குமரன். பூங்கோதை அவர்கள் வந்தது கூட உணராமல் படுத்தே இருக்க, ரகு தன் மச்சானுடன் அமர்ந்து கொண்டு,அன்னையை அவரிடம் அனுப்பினான்.

                    “என்ன கோதை பண்ணிட்டு இருக்க நீ.. இப்படியே கிடந்து உடம்பை கெடுத்து வச்சா ஆச்சா..எழுந்திரு முதல்ல..” என்று அவரை அதட்டி எழுப்பி அமர வைத்தார் பார்வதி.

Advertisement