Advertisement

அவரை கண்டதும் கோதை மீண்டும் அழ “இழப்புதான் கோதை.. ஆனா நடக்காதது இல்லையே.. அந்த பெரிய மனுஷி ஆண்டு அனுபவிச்சு, நல்லபடியா தான் போய் சேர்ந்து இருக்காங்க.. அவங்க காலம் முடிஞ்சுது னு மனசை தேத்திக்க பாரு..

 

“வெளியே உட்கார்ந்து இருக்கானே.. அவனையும் யோசிக்கணும் நீ. அவனுக்கு நீ மட்டும்தான் இருக்க, அதை மனசுல வச்சிக்கோ… அவனுக்கு ஒரு நல்லது கெட்டது பண்ணி பார்க்க வேண்டாமா நீ.. சும்மா படுத்தே கிடப்பியா.. உன்னை பார்த்தே அவனும் சுணங்கியே கிடந்தா பரவாயில்லையா உனக்கு..” என்று அதட்டலாகவே எடுத்துக் கூற

 

பூங்கோதை தன் கண்களை துடைத்துக் கொண்டே அமர்ந்திருந்தார். ரகுவும், செந்தில்குமரனை உள்ளே அழைத்து வர, பார்வதி தான் எடுத்து வந்திருந்த உணவை இருவரையும் சாப்பிட செய்தவர், சற்று நேரம் அவர்களுடன் செலவிட்ட கிளம்பினார். அந்த வீட்டில் வேலைக்கு இருக்கும் காளி வந்துவிட, அவளிடம் கோதை கவனித்து கொள்ளுமாறு கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் பார்வதி.

 

தாயும், மகனும் வீடு திரும்ப அங்கே அதற்குள் அடுத்த பஞ்சாயத்தை தொடங்கி வைத்திருந்தாள் அவரின் மருமகள். எல்லோரும் சாப்பிட்டு முடிக்கும்வரை தோசை வார்த்து கொடுத்த தேவா, அவர்கள் சாப்பிட்டு முடித்து எழுந்து செல்லவும் தான் சற்றே ஓய்வாக அமர்ந்தாள்.

 

அத்தனை நேரம் நின்று கொண்டே இருந்ததில் கால்கள் வேறு வலிக்க, அவளுக்கு ஊற்றி கொள்ளும் எண்ணமில்லை.. உடல் அயர்வாக இருக்கவும் வந்து சோஃபாவில் அமர்ந்து விட்டிருந்தாள். வானதியும் காலையிலிருந்து அங்கே இருந்ததில் தலைவலியாக இருக்க, உண்டு முடித்ததும் அறைக்கு சென்று விட்டிருந்தாள்.

 

சஞ்சனா அத்தனை நேரம் அறையிலிருந்து எட்டிக் கூட பார்க்காதவள் அப்போதுதான் வெளியே வர, வந்தவள் அங்கிருந்த பாத்திரங்களை தான் திறந்து பார்த்தாள். வெறும் மூன்று இட்லிகள் மட்டுமே இருக்க, தொட்டுக் கொள்ளவும் தேங்காய் சட்னி மட்டுமே இருந்தது. அவளுக்கு இறங்கவே இறங்காது இரண்டும். பார்வதி பொதுவாகவே தினம் ஒரு சட்னியோ, குழம்போ வைத்திருப்பார்.

 

இப்போது வெறும் தேங்காய் சட்னியை பார்த்தவள் கோபமாக வெளியே வர, அந்த முற்றத்தில் கண்மூடி சாய்ந்திருந்தாள் தேவா.. இன்னும் அவள் ஆத்திரம் அதிகமாக அவள் முன்னே சென்று நின்றவள் “இன்னிக்கு யார் சமைச்சது..?” என்று அதிகாரமாக கேட்க, தேவா மெதுவாக கண்களை தரைந்து பார்த்தாள்.

 

“ஏன்.. நான் தான் சமைச்சேன்..என்ன..” என்று அவள் பழையதை மறந்து இயல்பான குரலிலேயே கேட்க, சங்கரி அப்போதுதான் அறையிலிருந்து வந்தவர் சஞ்சனாவை பார்க்கவும் அவள் அருகில் வர “பாருங்க அத்தை.. நான் பாப்பாவுக்கு பால் கொடுக்கணும்.. தேங்காய் சாப்பிடக்கூடாது ன்னு தெரிஞ்சும் எனக்கு சாப்பிட அதையே வச்சிருக்காங்க.. இவகிட்ட கேட்டா, நாந்தான் சமைச்சேன்.. என்ன இப்போ ன்னு கேட்கிறா..” என்று அவள் புகார் சொல்ல

 

சங்கரியும் எப்போதும் போல “என்ன பண்றது சஞ்சும்மா.. இந்த வீட்ல நேத்து வந்ததுங்க எல்லாம் அதிகாரம் செய்ய ஆரம்பிச்சிடுச்சுங்க.. எல்லாம் அக்கா கொடுக்கிற இடம்..” என்று தன் பங்குக்கு பேசியவர்

 

“இவளுக்கு சமைக்க வேற ஏதாவது செஞ்சு கொடு.. அவ தேங்காய் சாப்பிடமாட்டா..” என்று தேவாவிடம் கூற, குரலில் பலமான அதிகாரம்..

 

தேவாவுக்கு இவர்களுடன் சண்டையிடுவது கூட கேவலமாக இருந்தது.. தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள் “என்னால இப்போ சமைக்க முடியாது.. கால் வலிக்குது.. நீங்களே ஏதாவது செய்ங்க..” என்றுவிட்டு மீண்டும் கண்களை மூடி சாய்ந்து கொண்டாள்.

அவர் சற்று தன்மையாக சொல்லி இருந்தால் கூட செய்திருப்பாளோ என்னவோ, இப்போது முடியாது என்றே தோன்றியது தேவாவுக்கு. மேலும் என்னை அதிகாரம் செய்ய இவர்கள் யார்? என்ற எண்ணமும் எழுந்துவிட, கண்டுகொள்ளவே இல்லை.

 

சங்கருக்கு மேலும் மேலும் ஆத்திரம் கூடிப்போக, “என்னடி.. ஒரு பெரியமனுஷி பேசிட்டு இருக்கேன்.. அந்த மரியாதை கூட இல்லாம நீ பாட்டுக்கு ஒய்யாரமா சாஞ்சிட்டு இருக்க.. இதென்ன உன் அப்பன்வீடு ன்னு நெனச்சியா “என்று அவர் சத்தமாக அதட்ட

 

தேவா அலட்டிக் கொள்ளவே இல்லை. நிதானமாக “என் அப்பன் வீடு இல்ல.. என் அம்மா வீடு.. இல்லன்னு சொல்ல முடியுமா உங்களால… இல்ல என் மாமாவை கூப்பிடவா, இன்னும் சரியா சொல்வாரு..” என்று கண்களை உருட்டி கோபமாக அவள் கேட்க

 

சங்கரி அடங்கவே இல்லை.. “ஏய் என்னடி வாய் நீளுதா.. இந்த அம்மா வீடு கதையெல்லாம் ஆகாது. எங்க ரகு உன்னை பிடிக்காம தாலி கட்டி இருக்கான்.. நீ இந்தவீட்டுக்கு இப்போதைக்கு வேண்டாத மருமக.. அவ்ளோதான்.. மத்த கதையெல்லாம் பேசாத..” என்று அவர் மீண்டும் அவளுக்கு பாடம் எடுக்க

 

“சரி.. அப்படியே இருக்கட்டும், இப்போ உங்களுக்கு என்ன பிரச்னை அதுல.. என் புருஷனுக்கு பிடிக்கல ன்னு நான்தானே கவலைப்படணும்.. நீங்க ஏன் கவலைப்படறீங்க… ” என்று அதே நிதானத்துடன் அவள் பேச

 

சங்கரிக்கு அவள் தண்னி மதிக்காமல் திமிராக அவமானப்படுத்துவதை போலவே இருந்தது. அவளின் நிதானம் அவருக்கு பிடிக்காமல் போக, “நீ எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன, போய் அவளுக்கு சட்னி அரைச்சு கொடு.. அவ இந்த வீட்டுக்கு மூத்த மருமக.. நீ செஞ்சித்தான் ஆகணும்..” என்று அவர் பேசிவிட

 

“எப்படி நீங்க பார்வதி அத்தையை உட்கார வச்சிட்டு எல்லா வேலையும் பார்க்கிறிங்களே அப்படியா??” என்று வெகுநக்கலாக கேட்டுவிட்டாள் தேவா..

 

“ஏய். யார்கிட்ட என்னடி பேசுற..” என்று சங்கரி முன்னேற, “சங்கரி..” என்று அதட்டினார் பார்வதி. அவருடன் ரகுவும் நின்றிருக்க, “அக்கா இவ என்ன பேசினா தெரியுமா..” என்று அவரிடம் நியாயம் சொல்ல தொடங்க

 

“நான் வந்து ரொம்ப நேரமாச்சு சங்கரி…” என்று முடித்துக் கொண்டார் பார்வதி.

 

“எழுந்து வாடா..” என்று அவர் தேவாவை அழைக்க, சோஃபாவின் பிடியில் கையை ஊன்றி எழுந்து கொண்டாள் அவள். அவள் வலியில் முகம் சுருங்குவதை கண்ட ரகு “என்ன ஆச்சு நந்தனா.. என்ன செய்யுது..” என்று அவள் அருகில் செல்ல

 

“கால் வலிக்குதுங்க.. என்னாச்சு தெரியல..” என்று அவள் காலை பிடிக்க குனிய,

 

“ஏய் உட்காரு நீ.. ஏன் முடியாம அத்தனை வேலை செய்யணும்.. நீ இந்த வீட்டுக்கு மருமகதான், வேலைக்காரி இல்ல..” என்று அவன் கோபமாக கூறிவிட, சற்றுமுன் ரகு பிடிக்காம கல்யாணம் செய்துகிட்டான் என்று பேசியது இப்போது அபத்தமாக தோன்றியது சங்கரிக்கு.

 

சஞ்சனாவுக்கு இவர்களின் செயல்கள் கோபத்தை கொடுக்க “எனக்கு சமைச்சு கொடுக்க கூட இந்த வீட்ல ஆளில்லாம போச்சு.. உங்க பேரப்பிள்ளைக்கு தானே பத்தியம் பார்க்க வேண்டியதா இருக்கு.. ” என்று அவள் மீண்டும் தொடங்க

 

“உனக்கு என்ன வேணுமோ போய் சமைச்சு சாப்பிடு.. இல்ல உன் புருஷனை எழுப்பி கடைக்கு அனுப்பி வாங்கிட்டு வர சொல்லு.. இங்கே யாரும் இப்போ வேலை செய்யுற அளவு தெம்போட இல்லை..” என்றுவிட்டு தேவாவை நெருங்கினார் பார்வதி.

 

சஞ்சனாவிற்கு தேவாவின் மீதான பார்வதியின் அக்கறை விஷத்தை போல் கசக்க, அவர்களின் இந்த ஒன்றுதல் பிடிக்கவே இல்லை. கூடவே இந்த ரகு, அவன் எப்போது இப்படி மாறிப்போனான் என்றும் தெரியவே இல்லை அவளுக்கு.

 

தன் தங்கையின் கதி என்று சிந்தனைகள் ஓட, யோசனையுடன் தன்னறைக்கு சென்றுவிட்டாள். சங்கரியும் அங்கிருந்து நகர்ந்து விட, பார்வதி தன் மருமகளின் அருகில் அமர்ந்திருந்தார்.

 

“அப்போவே சொன்னேன்ல.. எல்லாருக்கும் இட்லியை வச்சு கொடு ன்னு.. தோசை ஊத்துறேன் ன்னு இவ்ளோ நேரம் நின்னுட்டு இருந்தா கால் வலிக்காம என்ன செய்யும்.. சொன்னா சொன்ன பேச்சை கேட்கறியா நீ..” என்று அதட்டியவர் “சாப்பிட்டியா இல்லையா??” என்று கேட்க

 

“பசிக்குது அத்தை..” என்று பாவமாக சொன்னாள் மருமகள். பார்வதிக்கு சங்கரின் மீது இப்போது இன்னும் கூட கோபம் வர, “விடியட்டும் பேசிக்கறேன்…” என்று முடிவெடுத்துக் கொண்டார் அவர்.

 

இப்போது மருமகளுக்கு உணவை எடுக்க அவர் எழுந்து செல்ல, அங்கு அந்த  இருந்த இட்லி ஈரமாக மாறி இருந்தது. மாவை எடுத்துக் கொண்டு அவர் அடுப்புக்கு அருகில் செல்ல, “ம்மா.. போய் உட்காருங்க.. நான் சுட்டு தரேன்..” என்று வந்தான் மகன்.

 

தேவா அவனை வாயை பிளந்து பார்க்க, பார்வதி மகனின் கையில் கொடுத்துவிட்டு வந்து மருமகளுடன் அமர்ந்து கொண்டார். தேவா அப்போதும் “அத்தை வெளியே மழை வருதா.. “என்று பார்வதியிடம் கேட்க

 

“என் புள்ளையை கிண்டல் பன்றியா நீ ” என்று முறைத்தார் அவர்.

 

“பின்ன.. ஒரு தந்தூரி அடுப்பு தோசை சுட போனா, ஷாக்கா தான இருக்கும்…” என்று அவள் கேட்டுவைக்க

 

“அவன் வரட்டும்.. நீ சொன்னான்னு சொல்றேன்…” என்று பார்வதி சிரிக்க

 

“ஏன் அத்தை ஏன்.. என்னை தூக்கி அடுப்புல உட்கார வைக்கவா… மீ பாவம்…” என்று அவளும் சிரிப்போடு கூறிக் கொண்டிருக்க

 

“கால் ரொம்ப வலிக்குதா..” என்று அக்கறையாக கேட்டார் பார்வதி..

 

“வலிக்குதுதான் அத்தை.. ஆனா இப்போ பரவால்ல..” என்று மழுப்பலாக முடித்துக் கொண்டாள் அவள்.

 

ரகு தோசை சுட்டுக் கொண்டு வந்தவன் மனைவியிடம் நீட்ட, வேகமாக உண்டாள் அவள்.. பார்வதியும் அவளுடனே உண்டு முடிக்க, ரகு இவர்கள் தட்டையும் அவனே எடுத்து சென்று வைத்து வந்தவன் தாயை அனுப்பி வைத்தான்.

 

அவர் அறைக்கு செல்லவும் மனைவியை மெதுவாக அழைத்து வந்தவன் படிக்கருகில் வரவும், அவளை கையில் ஏந்திக் கொண்டான். தேவாவின் முகம் ஒரு மலர்ந்த சிரிப்பில் விரிய, அவன் கழுத்தில் கையை இறுக்கி கொண்டாள்.

 

ரகு அறைக்கு வந்தவன் அவளை கட்டிலில் விட்டு தைலத்தை எடுக்க, தேவாவுக்கு முன்பு நடந்த வாக்குவாதங்கள் நினைவுக்கு வந்தது. அவள் அமைதியாகவே அமர்ந்திருக்க, அவள் காலை பிடித்தவன் அவளுக்கு தைலத்தை பூசி நீவிவிட்டு கொண்டிருந்தான்.

 

தைலத்தை பூசி முடித்தவன் அவள் முகம் பார்க்க, ஏதோ சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்குவது போல் அமர்ந்திருந்தாள் அவள். ரகு என்ன என்பதாக புருவம் உயர்த்த “எனக்கு கால்வலி தான்.. ஆனா கீழே சொன்ன அளவுக்கு இல்ல..” என்று கூற

 

“என்னடி சொல்ற.. புரியல எனக்கு..” என்று ரகு கேட்க

 

அவனை நெருங்கி அவன் மீது சாய்ந்து அவன் இடக்கைக்குள் தன் கையை கோர்த்து கட்டிக் கொண்டவள் “உங்க சித்தி சொன்னாங்க.. எங்க ரகு உன்னை பிடிக்காம கட்டிக்கிட்டான் அப்படி ன்னு.. அதான் உங்களுக்கு என்னை எந்த அளவுக்கு பிடிக்காது ன்னு காட்டணும் இல்ல…” என்று அவனை நிமிர்ந்து பார்த்து அவள் கண்களை சிமிட்ட

 

“பிராட்..” என்று அவள் தலையில் தட்டினான் கணவன்..

 

“நான் என்ன பிராட் பண்ணேன்.. என் புருஷனுக்கு என்னை  பிடிக்கும் ன்னு செக் பண்ணேன்..” என்று அவள் அலட்டாமல் கூற,

 

“தெரிஞ்சுதா..” என்று அக்கறையாக கேட்டான் ரகு..

 

“ம்ம் .. கொஞ்சம் கொஞ்சம்..” என்று அவள் விரல்களை சுருக்கி காட்ட

 

“முழுசா நான் தெரிய வைக்கிறேன் வா..” என்று அவளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவன் அவள் மேனியில் தன் பிடிதங்களை உணர்த்த தொடங்கி இருந்தான்.

Advertisement