Advertisement

காதல் தருவாயா காரிகையே 13

                                      தன் பேத்திக்கு செய்ய வேண்டிய சீரை நிறைவாக செய்து முடித்துவிட்ட நிம்மதியில் இருந்தார் சுந்தராம்பாள். அவர் முகத்தில் ஒரு அமர்தலான புன்னகை குடி கொண்டு விட்டிருக்க, காரில் இருந்தவர் நிம்மதியாக வெளியே வேடிக்கை பார்த்து கொண்டே சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

                                    அவர் மனதில் பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்க, தன் பேத்தியின் திருமண பேச்சு தொடங்கிய நாள் முதலாக நடந்தவற்றை எண்ணி பார்த்தவர்,  நேற்று தன் மகனுடன் ஏற்பட்ட உரசலையும் கசப்புடன் எண்ணி கொண்டார்.

                                    அன்றைக்கு தேவாவிடம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவர், அப்போதே வேலையை தொடங்கி இருக்க, அடுத்த நாளே வங்கியில் இருந்த நகைகளை வீட்டிற்கு எடுத்து வந்து விட்டிருந்தார். அவரின் பரம்பரை நகைகளை சரிபார்த்து எடுத்து வைத்தவர் ஆசாரியை வீட்டிற்கே வரவைத்து அதை மெருகேற்றி முடித்தார்.

                                  கூடவே நகரின் பெரிய ஜவுளிக்கடையில் இருந்து உடைகளை வீட்டிற்கே வரவைத்து தன் பேத்திக்கு தானே உடைகளை தேர்வு செய்து கொண்டிருந்தார். இந்த விஷயங்களை எல்லாம் அவர் யாருக்கும் ஒளித்தோ, மறைத்தோ எல்லாம் செய்யவில்லை.

                                    என் வேலையை நான் பார்க்கிறேன் என்ற தோரணையிலேயே தன் வேலைகளை தொடர்ந்தவர் சாவித்ரி அவ்வபோது தன்னை அதிர்ச்சியுடன் பார்த்ததை கண்டு கொள்ளவே இல்லை. சாவித்திரியும் அவரிடம் எதுவும் கேட்காமல் அமைதியாகவே இருக்க, எல்லாவற்றுக்கும் சேர்த்து நேற்று மகன் தன் முன் வந்து நின்றது இப்போது அவர்முன் நிழலாடியது.

                                     நேற்று காலை உணவின் போது குணசேகரன் தன் அன்னையுடன் அமர்ந்தவர் “என்னம்மா… பேங்க்ல இருந்து நகையெல்லாம் எடுத்துட்டு வந்திருக்கீங்க போல… ஆசாரியும் வந்து போயிருக்காரே..” என்று சாதாரணமாக கேட்க

                                  “ஏன் குணா நான் நகையை எடுத்ததுல என்ன ஆகிடுச்சு.. அதோட ஆசாரி வீட்டுக்கு வர்றது என்ன புதுசா..” என்று சுந்தராம்பாளும் கேள்வியே கேட்க

           

                                  “என்னமா.. நம்ம தேவாவுக்கு தானே நகை செய்விங்க.. இப்போ அவ இல்லையே.. எதுக்கு வந்திருப்பார்ன்னு கேட்டேன்…” என்று குணா சமாளிக்க

                              “ஏன்.. என் பேத்தி என்கூட இல்லன்னா என்ன?? எப்பவும் அவளுக்காக தான் நகை செய்வேன்… இப்பவும் அவளுக்கு தன் செஞ்சிருக்கேன்.. என் பேத்தி கல்யாணத்துக்கு அவ மாமன் விருந்து வைக்கிறான்… அதுக்காக தான் என் பேத்திக்கு நகை செஞ்சிருக்கேன்..” என்று சட்டமாக கூறினார் சுந்தராம்பாள்.

                              “நீங்க செஞ்சு கொடுத்துட்டா மட்டும் உங்க பேத்தி போட்டுட போறாளா.. அதுதான் நீங்க பார்த்த மாப்பிளை எதுவுமே வேண்டாம் ன்னு சொல்லிட்டாரே..” என்று சாவித்ரி இடையில் வர

                               “நான் பார்த்த மாப்பிளை தான்.. என்ன இப்போ, கல்யாணத்தன்னைக்கு முதல்நாள் ஓடிப்போகாம மாமனார் வீட்டு சொத்து வேண்டாம் ன்னு சொல்ற நல்லவன் தான்… என்ன குறைஞ்சிடுச்சு இப்போ…” என்று ஆத்திரமாக சுந்தராம்பாள் சாவித்ரியை முறைக்க

                                “அவளை ஏன்மா மிரட்டறீங்க.. அவன் செஞ்சதுக்கு இவ என்ன செய்வா….ஆனா அந்த நாய் ஓடிப்போனதுக்காகவே என் மகளை இப்படி கொண்டு பொய் நீங்க தள்ளி இருக்க வேண்டாம்…”

                                “யாரை சொல்லி என்ன செய்ய.. நான் பெத்தவளே என்னை நம்பலையே..” என்று விரக்தியாக பேசினார் குணா..

                               “இப்போ எதுக்கு வேண்டாத பேச்செல்லாம்… நான் என்னோட நகைகளை எல்லாம் என் பேத்திக்கு கொடுக்க போறேன்… அவளுக்கு சீர் செய்யுறதா முடிவு பண்ணிட்டேன்..” என்று முடிவாக கூறிவிட்டு சுந்தராம்பாள் எழுந்து கொள்ள

                                 “முதல்ல உங்க மருமகன்கிட்ட கேட்டுக்கோங்க.. வீணா போய் நின்னு அசிங்கப்படாதிங்க..” என்று குணா தன் தாய்க்காக பார்க்க

                               “அதெல்லாம் நான் பார்த்துகிறேன்.. என்னை மீறி யார் என்ன செய்யுறாங்கன்னு.. என் பேத்தி வாயைத் திறந்து சொல்லாம போனாலும், மனசுக்குள்ள என்ன பாடு போட்டுட்டு இருக்காளோ… அவளுக்கென்ன பெத்தவளா இருக்கா,… நான் தான் பார்க்கணும்..”

                                “நான் நாளைக்கு சீர் செய்யத்தான் போறேன்..” என்று அவர் நிற்க

                              “அப்போ நம்ம சேட் கிட்ட சொல்லிடறேன்.. புதுசா நகையெல்லாம் கொண்டு வர சொல்றேன்… பணமும் உங்க கணக்குக்கு மாத்தி விடறேன்..நல்லாவே செஞ்சிடுங்க..” என்று மகன் கூற

                              “என் பேத்திக்கு தான் நான் சீர் செய்ய போறேன்.. உன் மகளுக்கு இல்ல..” என்று முறைத்தார் சுந்தராம்பாள். குணா புரியாமல் பார்க்க

                              “என் பேத்திக்கு செய்யுற அளவுக்கு என்கிட்டே பணம் இருக்கு.. உன் பணத்துல இருந்து ஒத்த பைசா கூட நீ கொடுக்க வேண்டாம்..” என்று விட்டார் அவர்.

                             குணா ஏன் என்பது போல் பார்க்க “உன் மக தான் உன் பேச்சை கேட்காம கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டாளேப்பா… நீ ஏன் அவளுக்கு செய்யணும்…

      

                             “எப்போ உன்னை மதிச்சு உன் மகளும், மருமகனும் உன்னை தேடி வாரங்களோ அப்போ பார்த்துக்கலாம்… ஏன்னா உன் மக அவனை இழுத்துட்டு ஓடி இருக்கா பாரு..” என்று சுந்தராம்பாள் வார்த்தையால் குத்த

                   “அம்மா…” என்று அலறினார் குணா..

                    “என்னப்பா .. என்ன தப்பா சொல்லிட்டேன் நான்.. கல்யாணம் நின்னு போனாலும் பரவால்ல ன்னு அப்படியே நிற்காம, அவ எப்படி அவ பாட்டி பேச்சுக்கு தலையாட்டலாம்…தப்பு தானே..” என்று அவர் மேலும் பேச

                  “ஏன்ம்மா இப்படி என்னை வேதனைப்பட வைக்கறீங்க..” என்று அவர் கேட்க

                 “வாயை மூடுடா.. வேதனை பட்டானாம்… என்னடா சொன்ன என் பேத்தியை… அதான் என் பேத்தியை  இல்ல.. அவளை பேச என்ன இருக்கு உனக்கு…”

                  “கொஞ்சமாவது அவ மேல அக்கறை இருந்தா, அவ வாழனும் ன்னு எண்ணம் இருந்தா இப்படி பேசி இருப்பியா.. ஏற்கனவே புது இடம், புது மனுஷங்க ன்னு மருகிட்டு நிற்கிறா..”

                   “இதுல நீயே அவளை பேசுவியா.. என் பேத்திக்கு உன்னால அங்கே எதுவும் பிரச்சனை வந்துச்சு.. அப்புறம் மகன் ன்னும் பார்க்கமாட்டேன்.. மருமக ன்னும் பார்க்க மாட்டேன்…”

                    “நான் இருக்க வரைக்கும் என் பேத்திக்கு செய்ய வேண்டியதை நான் செய்வேன்.. என்னை ஏன் ன்னு யாரும் கேட்க கூடாது.. என் காலத்துக்கு பிறகு அவ புருஷன் இருக்கான்..அவளை ராணி மாதிரி வச்சு காப்பாத்துவான்…”

                   “நீ இன்னும் கூட நாடு நாடா சுத்தி  சொத்து சேர்த்து வை.. ஏன்னா பத்து பதினஞ்சு பெத்து வச்சிருக்க இல்ல..” என்று காட்டமாக கூறியவர் தன் அறைக்கு சென்றுவிட்டார்.

                    குணசேகரன் தாயின் வார்த்தைகளில் அதிர்ந்து நின்றார் என்றால் சாவித்ரி சுந்தரத்தை வன்மத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

                        அடுத்த நாள் கதையிலும் யாரையும் கண்டு கொள்ளாமல் வேலை காரர்களின் உதவியுடன் அனைத்தையும் காரில் ஏற்றியவர், தான் பாட்டிற்கு கிளம்பி விட்டார். இதோ விருந்தும் முடிந்து, பேத்திக்கான முறையையும் அவர் செய்து  விட்டிருக்க மனதில் ஒரு இதமான உணர்வு தான்.

                       ரகுவின் கோப முகம் நினைவில் வந்தாலும் “என் பேத்தி சமாளிச்சுக்குவா.. இவனை கூட சமாளிக்க முடியலைன்னா அப்புறம் என்ன பொண்டாட்டி அவ..” என்று எண்ணிக் கொண்டவர் மீண்டும் சிரித்துக் கொண்டார்.

                      அதே நிம்மதியுடன் அவர் வீட்டை அடைய, அலுவலகத்திலிருந்து நேரமாகவே வந்து காத்திருந்தார் குணசேகரன். அவருக்கு வானூரில் என்ன நடந்தது என்று தெரிந்தே ஆக வேண்டும் போல் இருந்தது.

                      திருமணம் முடிந்த அன்று கையில் கழுத்தில் அணிந்திருந்த நகைகளோடு தன் மகள் வெளியேறியது இன்னமும் நினைவில் இருக்க, இப்போது மட்டும் எப்படி வாங்கி கொண்டிருப்பான் என்பதே அவர் எண்ணமாக இருந்தது.

                      சுந்தராம்பாள் வரவும் “என்னம்மா சீர் எல்லாம் செஞ்சு முடிச்சாச்சா..”என்று நக்கலாக அவர் கேட்க

                      “அதுக்குதான போயிருந்தேன் குணா.. நீ என்ன புதுசா கேட்கிற..” என்று அவரும் கேட்டு வைக்க

                    ‘உங்க மருமகன் வாங்கிக்கிட்டானா.. நீங்க கொடுத்ததெல்லாம்..”

                    “அதெப்படி வாங்காம இருப்பான். நான் அவனை மதிச்சு அவன் வீடு தேடி போய் இருக்கேனே..” என்று சுந்தராம்பாள் ரகுவை விட்டுக்கொடுக்காமல் பேச

                     “அதெப்படிம்மா.. அன்னிக்கு எதுவும் வேண்டாம்ன்னு சொல்லிட்டு போனவன் இன்னிக்கு நீங்க கொடுக்கவும் வாங்கிக்குவான்.. என்னை அவமானப்படுத்தவே இதையெல்லாம் செய்யுறான் அவன்..” என்று குணா கொதிக்க

                     “அவன் உன்னை அவமானப்படுத்தல.. நீதான் வீட்டு மாப்பிள்ளை ன்னு கூட மதிக்கமா அவனை அவமானப்படுத்திட்டு இருக்க… அவனை மதிச்சு அவன் வீடு தேடி நீ என்னிக்கு போறியோ,அன்னிக்குத்தான் உன் மக உனக்கு..” என்று சுந்தராம்பாளும் விடாமல் பேச

                     “அப்படி ஒன்னும் அவன்கிட்ட தாழ்ந்து போகணும் ன்னு எனக்கு தலையெழுத்து இல்ல…ஒரே பொண்ணு சொத்து மொத்தமும் அவளுக்கு ன்னு தெரிஞ்சு தான் ஆடிட்டு இருக்கான்.. இன்னும் கொஞ்ச நாள் போனா தெரியும்..

                    “தானா தேடி வருவான் பாருங்க.” என்று குணா கூறிவிட

                    “உன்னை எல்லாம் ஆண்டவனால கூட திருத்த முடியாது.. நல்ல வேளை என் பேத்தி வாழ்க்கையை நான் முடிவு பண்ணிட்டேன்..” என்றுவிட்டு தன்னறைக்கு வந்துவிட்டார் சுந்தராம்பாள்.

                         இவர்களின் பேச்சை தோரோங் நின்று கேட்டுக் கொண்டிருந்த சாவித்ரிக்கு தான் மனது கொதித்தது. அவர் ரகுவை பற்றி அறிந்ததிலிருந்து எப்படியும் அவன் வாங்கி கொள்ளமாட்டான் என்றே நினைத்திருந்தார்.

                        இந்த கிழவி மூக்குடைந்து திரும்பட்டும் என்று அவர் நினைத்திருக்க, அதற்கு நேர்மாறாக நகைகளை அவர் கொடுத்துவிட்டு வந்திருப்பதை தாங்கவே முடியவில்லை சாவித்ரியால். அத்தனையும் பழமையான பரம்பரை நகைகள்.

                           எப்படியும் இன்றைய மதிப்புக்கு கோடிகளை தொடும். அப்படி இருக்க, இந்த கிழவி அதை தூக்கி பேத்திக்கு கொடுக்குமா.?? என்பது அவர் எண்ணமாக இருந்தது. ஆரம்ப நாட்களில் இருந்தே தன்னை அடக்கி வைக்கும் சுந்தராம்பாளை பிடிக்கவே பிடிக்காது சாவித்ரிக்கு. இத்தனைக்கும் இந்த வீட்டிற்கு சாவித்ரியை மருமகளாக கொண்டு வந்தவரே சுந்தராம்பாள் தான்.

                                அவர் எதிலும் தன் பேத்தியையே முன்னிறுத்த, தேவாவையும் பிடிக்காமல் போனது.. தேவாவை சாவித்ரி நன்றாக பார்த்துக் கொள்வது போல் தோன்றினாலும் அது வெறும் வெளிப்பார்வைக்கு மட்டுமே.

                       மற்றவர்களின் முன்பு தேவா மீது பெரும் பாசமாக காட்டிக் கொள்வார்.. இதை அவர் வந்த ஒரு சில மாதங்களிலேயே சுந்தரம் கண்டு கொள்ள, பேத்தியை இறுக்கி பிடித்துக் கொண்டார் அவர். அவளின் தேவைகளை பெரும்பாலும் அவரே கவனித்துக் கொண்டதால் சாவித்ரி வேறு எதுவும் செய்ய முடியாமல் போனது.

                       அவளை பார்க்கும் நேரங்களில் அவர் “அம்மா.. கண்ணு …” என்று உருகுவது போலவே பேச, தேவாவும் தை உண்மையென்றே நம்பினாள். இன்று வரையும் கூட சாவித்ரி போலியாகவே நடித்து வந்திருக்க, குணாவும், தேவாவும் அவரை உணர்ந்து கொள்ளவே முடியாத வகையில் அவர் நடிப்பு தத்ரூபமாகவே இருந்திருக்கிறது.

                      இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டு வந்தவர் தன் தம்பி, தங்கைகள் என்று அனைவரையும் குணாவின் உதவியோடு கரையேற்றி விட்டு இருக்க, தனக்கென ஒரு பிள்ளை இல்லாமல் போனது தான் அவரின் முதல் தோல்வி.

                     அதிலும் தேவா படிப்பிலும் சூட்டிகையாகவே இருக்க, கல்லூரியில் முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கும்போதே தந்தைக்கு உதவியாக அலுவலகம் செல்ல ஆரம்பித்து இருந்தாள். அதுவும் சாவித்ரிக்கு பிடிக்காமல் இருக்க, ஒரு இனம் புரியாத வெறுப்பை தேவாவின் மீது வளர்த்துக் கொண்டிருந்தார் அவர்.

                     அவள் வெளியில் சென்றால் வருபவன் கை ஓங்கிவிடும் என்று திட்டமிட்டே, தன் தம்பியை அரும்பாடு பட்டு தேவாவுக்கு பேசி முடித்தார். இடையில் சில பல கண்ணீர் நாடகங்களை வேறு அரங்கேற்ற, அந்த முட்டாள் மகளும் தாய், தந்தையின் பேச்சை கேட்டு தலையாட்டி இருந்தாள்.

                      இதில் சாவித்ரியை எதிர்பார்க்காத வகையில் அதிர்ச்சி கொடுத்தவன் அவரின் தம்பி இளங்கோ.. அவன் வேறு ஒரு பெண்ணை விரும்புவதாக சொல்ல, அவனை அதட்டி மிரட்டி, செத்து விடுவேன் என்று பயம் காட்டித்தான் திருமண மேடை வரை கொண்டு வந்திருந்தார்.

                      ஆனால் அதுவரை தன் தமைக்கையின் மீது இருந்த பாசத்தால் அடங்கி அவர் சொல்வதை செய்தவன் திருமணத்திற்கு முதல்நாள் எப்படி ஓடிப்போனான் என்பது இன்றுவரை புரியவில்லை சாவித்ரிக்கு.

                    தேவாவின் திருமணம் அவர் கையை மீறி நடந்து விட, ரகுநந்தன் நடந்து கொண்ட விதத்தில் திருப்தியாகவே இருந்தார் அவர். எப்படியும் அவன் இங்கே வரமாட்டான்.. தேவாவும் அவனை கொண்டு தள்ளி நின்றுவிடுவாள் என்று அவர் யோசித்து வைத்திருக்க, இப்போது நடப்பது வேறாக இருந்தது.

                  அதுவும் அந்த நகைகள்… வீட்டில் ஏதாவது முக்கியமான விசேஷம் என்றால் மட்டுமே வெளியில் வரும் பரம்பரை நகைகள். மருமகளுக்கு கொடுப்பது என்றால் அவள் இறந்து போன பிறகு அதை தன்னிடம் கொடுத்திருக்க வேண்டாமா என்று உள்ளம் குமைந்து கொண்டிருந்தது சாவித்ரிக்கு.

                          அடுத்து என்ன செய்வது ?? எப்படி தேவாவை குணசேகரனிடம் இருந்து தள்ளி நிறுத்துவது என்று அவர் தீவிர சாதி ஆலோசனையில் இருக்க, அவர் ஆலோசனைக்கு காரணம் ஆனவளோ இந்த நிமிடம் எந்த கவலையும் இல்லாமல் ரகுவின் அணைப்பில் சுகமாக நித்திரை கொண்டிருந்தாள்.

                          அவளின் கணவனும் முகம் நிறைந்த புன்னகையோடே அவள் அருகில் உறங்கி கொண்டிருக்க, இவர்கள் இருவரும் முன்னிரவில் சண்டையிட்டுக் கொண்டனர் என்று சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டார்கள் யாரும், அப்படி இருந்தது அவர்கள் இருந்த நிலை.

                             அந்த இரவு இருவருக்கும் மற்றவரின் அணைப்பிலேயே கழிய, காலை எப்போதும் போல் ஐந்து மணிக்கெல்லாம் ரகு விழித்து எழ, அவன் அசைவில் தேவாவும் எழுந்து விட்டாள். தேவாவை பார்த்து ஒரு விரிந்த புன்னகையை ரகு கொடுக்க, தேவாவுக்கு ஊடலின் மிச்சங்கள் இன்னும் இருந்தது போலும்.

                     நேற்றைய இரவை மறந்து விட்டவளாக, “சிரிப்பை பாரு..” என்று நொடித்துக் கொண்டே எழுந்து குளிக்க செல்ல, அவள் நொடிப்பை கண்டு கொள்ளாமல் கட்டிலிலிருந்து எழுந்தவன் அவளை பின்னிருந்து அணைத்து அவள் முதுகில் ஒரு முத்தத்தை பரிசாக்கி, அவளை தன் பக்கம் திருப்பி “தேங்க்ஸ்..” என்று அவள் நெற்றியிலும் முத்தமிட்டிட்டே அறையை விட்டு வெளியேறினான்.

                   தேவாவுக்கு தான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்க, “கொஞ்ச கொஞ்சமா திருந்துங்க ரகு சார்… நெஞ்சு வலிக்குது எனக்கு..” என்று சொல்லும் நிலையில் தான் இருந்தாள் தேவா.

                      அந்த அதிர்ச்சியோடு அவள் குளித்து முடித்து வர, நேற்றைக்கு வைத்து போலவே அந்த நகைகளும், பணமும் இன்னமும் கிடக்க, கொஞ்சம் கூட யோசிக்காமல் மீண்டும் ரகுவுக்கே அழைத்துவிட்டாள். அவனும் என்றும் இல்லாத அதிசயமாக அவள் அழைத்த அடுத்த பத்து நிமிடங்களில் அறையில் இருக்க

                         “இதையெல்லாம் நான் என்ன செய்யட்டும்..” என்று அவனிடமே கேட்டு நின்றாள் மனைவி.

                  ரகு அவளை முறைக்க, “நான் உங்க பொண்டாட்டிதானே.. அப்போ சொல்லலாம் சொல்லுங்க..” என்று தலையை ஆட்டி கைகளை நீட்டி அவள் கேட்ட விதமும், முகத்தில் அங்கங்கே வழிந்து கொண்டிருந்த நீர்த்துளிகளும் அவனை எங்கே யோசிக்க விட்டது…

                 அவன் அப்படியே நின்றிட “நேத்து மட்டும் நிறைய பேசினீங்க.. என் பொண்டாட்டி, அப்படி இப்படி ன்னு..  இப்போ எனக்கு இதெல்லாம் எங்கே வைக்கிறது கூட தெரியல.. ஒழுங்கா இதை எல்லாம் என்ன பண்ணலாம் ன்னு சொல்லுங்க எனக்கு..” என்று பேசிக் கொண்டே அவன் அருகில் வந்திருந்தாள் தேவா.

                 அவளை எட்டி இழுத்து கொண்டவன் “உனக்கு தானே கொடுத்தாங்க.. ஏண்டி என் உயிரை எடுக்கற…” என்று அவள் தோளில் நேற்று போலவே கடித்து வைக்க

                    “எனக்கு தான் கொடுத்தாங்க…நான் இல்லன்னு சொல்லவே இல்லையே.. நீங்களும் நானும் வேற இல்லல்ல.. சோ இதை என்ன பண்றது ன்னு நீங்களே முடிவு பண்ணுங்க..” என்றவள் அவனை விட்டு விலகி

                      “எனக்கு கீழே வேலை இருக்கு.. அத்தை தேடுவாங்க..” என்றுவிட்டு தலையை கூட துவட்டாமல் கீழே இறங்கி விட்டாள்.

Advertisement