Advertisement

அந்த சில நிமிடங்கள் அப்படியே அமைதியில் உறைந்து போக, அந்த அமைதி சகிக்கவே இல்லை அவளுக்கு.அங்கு இருக்க பிடிக்காமல் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டவள் கால்களை மடக்கி அந்த ஈரத்தரையில் அப்படியே அமர்ந்து கொள்ள, கண்களில் மளமளவென்று கண்ணீர் வடிந்தது.

                  இல்லாத தன் தாயை நினைத்தும் அந்த நிமிடம் அழுகை வர, பெரிதாக எந்த காரணங்களும் சொல்ல முடியாத, சொல்ல தெரியாத ஒரு அழுகை தேவாவிடம். அழுது கொண்டே இருந்தவள் களைத்து போய் கால்களில் முகத்தை புதைத்துக் கொண்டு அமர்ந்துவிட, எத்தனை நேரம் அப்படி கழிந்ததோ கதவு தட்டப்படும் ஓசை.

                    பிரம்மையோ என்று அவள் நினைக்கும் போதே படபடவென்று அவள் முதுகில் இடிப்பது போல் கதவு தட்டப்பட, சட்டென எழுந்தவள் “வரேன்..” என்று மெல்லிய குரலில் கூற, என்ன முயன்றும் விசும்பல் ஒலி வெளியில் நின்றவனை எட்டிவிட்டது.

                              கையை கட்டிக் கொண்டு அந்த குளியல் அறையின் முன்பாக அவன் நின்றுவிட, உள்ளே என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தாள் அவன் மனைவி. கீழே அமர்ந்ததில் கட்டியிருந்த புடவை நனைந்து போயிருக்க, அழுதழுது கண்களும்,முகமும் சிவந்த உப்பியிருந்தது.

                          கண்டிப்பாக இன்று மீண்டும் சண்டை வரப்போகிறது என்று பயந்து போனவளாக அவள் நின்றுவிட, மீண்டும் கதவை தட்டிவிட்டான் அவன். இந்த முறை சற்றே வேகமாக… பொறுமையிழந்தவனாக அவன் கதவை உடைத்து விடுவதை போல தட்ட, கீழே கேட்டு விடப்போகிறது என்ற பயத்தில் சட்டென கதவை திறந்திருந்தாள் தேவா.

                           அவள் கதவை திறந்து விடவும், மீண்டும் கைகளை கட்டிக் கொண்டவன் அசையாத பார்வையாக அவளை பார்த்து நிற்க, அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை அவளால். சட்டென அந்த உடைமாற்றும் தடுப்புக்குள் புகுந்து கொண்டவள் தன் புடவையை அவிழ்த்துவிட்டு வேறு புடவைக்கு

                              மாறி வெளியே வர, இன்னமும் நின்ற இடத்திலேயே அசையாமல் நின்றிருந்தான் ரகு.

                            தேவா அவனை பார்த்தவள் கட்டிலுக்கருகில் செல்ல “ஏய் நில்லு..” என்று அதட்டி இருந்தான் ரகு. அவன் வார்த்தையில் நின்றவள் திரும்பி பார்க்க “அதான் சீரெல்லாம் வாங்கியாச்சே. அப்புறம் எதுக்கு அழுதுட்டு இருக்க..” என்று கடுகடு குரலில் கேட்க

                          “நான் ஏன் அழணும்.. நான் அழல..” என்றவள் மீண்டும் ஒரு அடி எடுத்து வைக்க “இங்கே வா தேவா..” என்று அழைத்திருந்தான் ரகு. அவன் குரலில் அவள் திரும்ப “இங்கே வா ன்னு சொன்னேன்..” இம்முறை சற்றே அழுத்தமாக, ஆணையாக வந்தது குரல்.

                         அவன் குரலை மீற முடியாமல் தேவா அமைதியாக அவன் அருகில் சென்று நிற்க,அவள் முகவாயை பற்றி நிமிர்த்தியவன் அவள் கண்களை பார்க்க, சட்டென இரு கண்ணீர் முத்துகள் எட்டி பார்த்தது அங்கே. அவன் கையை தட்டி விட்டவள் விலக முற்பட, அவளை இழுத்து நிறுத்தியவன் அவள் கன்னங்களை தன் கையால் அழுத்தி பிடிக்க அவனை மீறி அசையக்கூட முடியவில்லை அவளால்.

                        கண்களில் மீண்டும் கண்ணீர் வழிய, தன் இதழ்களால் அவள் கண்ணீரை ஒற்றி எடுத்தவன் அவள் கண்களை தின்று விடுபவன் போல் அழுத்தமாக தன் இதழ்களை புதைத்து எடுக்க, கண்களில் இருந்த ஈரம் அவன் இதழ்களில் கலந்திருந்தது. தேவா அதிர்ச்சியில் நின்றுவிட, “இப்போ சொல்லு எதுக்கு அழற..” என்று மீண்டும் பழைய பல்லவியை தொடங்கி இருந்தான்.

                         தேவா பதில் கூறாமல் “உனக்கு தெரியாதா??” என்ற பார்வை பார்த்து வைக்க,

                       “எனக்கு தெரியுதா இல்லையா ன்னு அப்புறம் பார்க்கலாம்… நீ பதில் சொல்லு.. “என்று வாய்விட்டே கூறினான் அவன்.

                         அவனின் இந்த பதிலில் கோபம் வர “என்னை நினைச்சு அழுதேன்.. எனக்காக அழுதேன்..” என்றவள் அவன் கைகளை விலக்க பார்க்க, அவள் இடையை பற்றி இருந்த கையால் அவளை தன்னோடு அழுத்தினான் ரகு.

                      அவன் செயலில் “என்ன செய்யறீங்க நீங்க..” என்று மெலிய குரலில் தேவா வினவ

                     “ஏன் உனக்கு தெரியலையா..” என்று எகத்தாளமாக வந்தது பதில்.. தேவா அப்படியே முறைத்து நிற்க, அவள் தோளில் புதைந்தவன் அவள் ரவிக்கையின் விளிம்பில் தன் பற்களை அழுத்த,  திணறி போனாள் அவள்.

                      அவள் “என்ன நடக்கிறது..” என்று புரியாமல் நிற்கும்போதே “எனக்காகதானே நந்தனா..” என்று ஆழ்ந்த குரலில் அடுத்த கேள்வி.. பதில் வராது என்று தெரியவும் அவள் தோளிலிருந்த பற்கள் மெல்ல அவள் பின்கழுத்தில் பதிய, “இந்த கண்ணீர் எனக்காக தான் இல்லையா..” என்று மீண்டும் கேட்டிருந்தான்.

                      தேவாவின் உடல் மெல்ல அழுகையில் குலுங்கிவிட, நிமிர்ந்து அவள் முகம் நோக்கியவன் அவளை தன் கைகளுக்குள் புதைத்து கொள்ள, அவனிடம் இருந்து திமிறி விலக முற்பட்டாள் தேவா. அவள் அழுகையில் ரகுவுக்கு அவள் மீது ஏதோ ஒரு உணர்வு பிரவாகமெடுக்க, அவள் விலக விலக அவளை விட்டுவிட கூடாது என்பதில் திண்ணமானான் அவன்.

                        ஒரு கட்டத்தில் அவன் நெஞ்சில் புதைந்தவள் அழுகையை மட்டும் தொடர, “இப்படி அழுதுட்டே இருந்த, உன் பாட்டிக்கு போன் பண்ணி இதெல்லாம் எடுத்துட்டு போக ஆள் அனுப்ப சொல்ல போறேன் பாரு..” என்று அவன் மிரட்ட

                       “போங்க.. சொல்லுங்க போங்க.. எதுவுமே வேண்டாம் எனக்கு.. என்னை சாகடிக்கிறிங்க நீங்க..” என்று அவள் கத்திவிட

                       ரகு அவளை கண்டுகொள்ளாமல் மீண்டும் தனக்குள் இழுத்துக் கொண்டவன் “என் கைக்குள்ள இருந்து சண்டை போடு.. ஏண்டி தள்ளி போற..” என்று கேட்டு வைக்க

                     “இப்போதான் தெரியுதா நான் தள்ளி இருக்கறது.. விடுங்க என்னை..” என்றவள் மீண்டும் விலக பார்க்க

                     “பார்த்துக்கோ..அப்புறம் உன் பாட்டிக்கு தான் போன் போட போறேன்… ” என்று அவன் மிரட்ட

                    “பண்ணிக்கோங்க.. என்ன வேணாலும் பண்ணுங்க.. ஏன்னு கேட்க மாட்டேனே..” என்றவள் அவள் கைகளுக்குள் நிற்க, “என்ன வேணாலும் பண்ணவா..” என்றவன் அவளை கைகளில் ஏந்திவிட

                     “ரகு விடுங்க.. விடுங்க என்னை.. எனக்கு உங்களை பிடிக்கவே இல்ல.. விடுங்க..” என்று விடாமல் தொணதொணக்க, அவளை கண்டு கொள்ளாமல் கட்டிலில் கிடத்தியவன் அவள் மீது சரிந்து “இப்போ சொல்லு.. “என்று கேட்க

                    “என்ன பண்றிங்க நீங்க.., தள்ளி போங்க..” என்று விட

                   “ஏன் போகணும்…அதெல்லாம் போக முடியாது.. உனக்கு நான் வேண்டாம் ன்னா நீ போ..” என்றவன் சட்டமாய் அவள் மீது அழுந்தி கொண்டிருக்க, அவனை கொலைவெறியோடு முறைத்தாள் அவள்.

                                          “எல்லாமே உங்க விருப்பமா.. ஒன்னு பக்கத்துலேயே வரமாட்டிங்க..இல்ல இப்படி ஒட்டிட்டு கிடப்பிங்க.. மரியாதையா தள்ளி போய்டுங்க..” என்று அவள் விரல் நீட்டி சண்டையிட

                “நீ என் பக்கத்துல வந்தியா..” என்று நிதானமாக கேட்டான் ரகு.

                “நானா உங்ககிட்ட சண்டை போட்டேன்.. ” என்று அவள் மீண்டும் சண்டையை துவங்க, “நான்தாண்டி சண்டை போட்டேன்.. ஆனா என்னை சமாதானம் செய்ய மாட்டியா நீ..” என்று அவன் கேட்டு நிற்க

                  “என்ன சமாதானம் செய்யணும்.. மூஞ்சிய கூட பார்க்காம திரும்பிட்டு போறீங்க.. உங்களை தூக்கி இடுப்புலயா வச்சுக்க முடியும்..” என்று அவள் வாயை விட

                   அவள் இடையை லேசாக தடவி பார்த்தவன் “தாங்குமா..டெஸ்ட் பண்ணுவோமா..” என்று கிண்டல் குரலில் கேட்க

                   “பேச்சை மாத்தாதீங்க…” என்று அவள் முறைக்க

                    “ஏய் நந்தனா.. நாந்தான் சண்டை போட்டேன்.. ஆனா சீர் வேண்டாம்ன்னு நான் சொல்லியும் நீ வாங்க போறியே ன்னு கோபம்… அதான் பேசாம இருந்தேன். அப்படியாவது வேண்டாம் ன்னு சொல்லிட  மாட்டியா ன்னு தான் செஞ்சேன்..” என்று அவன் ஒப்புக்கொள்ள

                      “இதை நேரடியாவே என்கிட்டே சொல்லிட்டு போயிருக்கலாம்…” என்று அவள் நொடிக்க

                   “அதெப்படி சொல்லுவேன்.. அதான் சீர் வேண்டாம்ன்னா நானும் வேண்டாம்ன்னு அர்த்தம் ன்னு சொல்லிட்டியே.. உன் அப்பன் கொடுக்கற சீர் வேண்டாம்ன்னு சொல்லலாம். என் பொண்டாட்டியை எப்படி வேண்டாம்ன்னு சொல்ல முடியும்..” என்று ரகு அவளை சீண்ட

                       “ஹப்பா.. அப்படியே பொண்டாட்டிக்காக உருகுறவர் தான் நீங்க.. ஏதாச்சும் சொல்லிட போறேன்.. போங்க..” என்று அவள் மீண்டும் முறுக்கினாலும், உடல் சற்றே தளர்ந்திருந்தது.. ஏதோ ஒரு ஆசுவாசம்…

                       “எவ்ளோ பண்றிங்க நீங்க… இதுல என்னையே வேற குறை சொல்றது.. கொஞ்சமாவது பாவம் பார்க்கிறிங்களா.. உங்களை கட்டிட்டு வந்த நாளா இதே பொழப்பா போச்சு எனக்கு.. எப்ப என்ன செய்விங்க ன்னே யோசிக்க முடியல..”

                       “எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுட்டே இருக்கீங்க.. இதுல பொண்டாட்டியை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாராம்.. வேண்டாம் ன்னு சொல்ல மாட்டிங்க ஆனா கூடவே வச்சு டார்ச்சர் பண்ணுவீங்க அதானே..” என்று நந்தனா அவனை குதறி வைக்க

                      “அடடா கண்டுபிடிச்சிட்டியே… பார்த்தியா நான் உன்னை நல்லாதான் ட்ரெயின் பண்ணி இருக்கேன்.. முழுசா ரகுவோட பொண்டாட்டியா மாறிட்ட பாரு..” என்று அவன் சிரிக்கவும், சட்டென அவன் வாயின் மீது ஒன்று போட்டாள் தேவா..

                     “ஹேய் வலிக்குதுடி.. என்னடி அடிக்கிற..” என்று அவன் முறைக்க,

                     “உங்களை கொல்லனும் போல கோபம் வருது எனக்கு..” என்று தேவா அவனை தள்ளிவிட, நகராமல் அவளை சிறையிட்டவன் “சில விஷயங்கள் எல்லாம் மாத்திக்கவே முடியாது தேவா.. ஆனா ஒரு விஷயம் நிஜம் என்ன நடந்தாலும் உன்னை விட முடியாது என்னால.. “

                      “எனக்கு ஒரு விஷயம் பிடிக்கலைன்னா என் முகமே காட்டி கொடுத்திடும்.. உன் பாட்டி கொடுத்தாலும் என்னை பொறுத்தவரைக்கும் அது உன் வீட்டு சீர் தான்.. என்னால இப்போ வரைக்கும் ஏத்துக்க முடியல தான்..

                      ஆனா உனக்கு அது வேணும்ன்னு நீ நினைக்கிறப்போ நான் குறுக்க நிற்க கூடாது ன்னு தோணுச்சு.. அன்னிக்கு நீ சொன்னியே உன் அப்பா காசு வேண்டாம்ன்னு அப்பவே எனக்கு தெரியும், நீ எனக்காக தான் சொல்ற ன்னு..

                 “இன்னிக்கும் இதோ உன் பாட்டி இப்படி கொண்டு வந்து குவிச்சிட்டு போயிருக்காங்க.. வேற பொண்ணா இருந்தா எதை என்ன பண்ணலாம், எந்த ட்ரஸ்க்கு போடலாம்ன்னு பிளான் பண்ண ஆரம்பிச்சிருப்பா…”

                   “நீ என்ன செஞ்ச.. எதையும் தொட்டுக்கூட பார்க்கல.. என் முகத்தையே பார்த்திட்டு நான் என்ன சொல்வேன்னு பயந்துட்டே இருந்தியே எனக்காக தான.. நான் பேசல ன்னு தானே அழுத..” என்று அமைதியான குரலில் அவன் கூறிக் கொண்டிருக்க, அவன் நல்லவிதமாக புரிந்து கொண்டிருந்ததில் நிம்மதி தான் தேவாவுக்கு.

                   அது அவள் முகத்திலும் தென்பட, “நான் சீர் வாங்கினது பிடிக்கலையா உங்களுக்கு..” என்று அவள் மீண்டும் பாவமாக கேட்க

                  “அதான் வாங்கிட்டியே.. விடு பார்த்துக்கலாம்..” என்றவன் என்று இலகுவாக கூறிவிட்டான்.

                       தேவா “சாரி..” என்று மெல்லிய குரலில் அவன் காதருகில் நெருங்கி கூற, அவள் கழுத்தில் கையை போட்டு இறுக்கி கொண்டவன் அவள் இதழ்களை தன் கன்னத்தோடு அழுத்திக் கொள்ள, அமைதியாக கண்களை மூடிக் கொண்டாள் தேவா.

                     ரகு ஐந்து நாட்களுக்கு பிறகு அவளிடம் நெருங்கியவன் தன் ஏக்கங்களை வெளிப்படுத்த முற்பட, அவள் அறிந்து கொண்டதென்னவோ காதல் மட்டும் தான். ஆம்,, முதல் ஒருவார உறவுக்கும் இன்றைய அணைப்பிற்குமான வித்யாசம் நிச்சயம் உணரப்பட்டது நந்தனாவால்.

Advertisement