Advertisement

காதல் தருவாயா காரிகையே 12

தன் அறையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த தனது திருமண சீர்வரிசையை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேவா. அந்த சிறிய அறையை முழுவதுமாக அடைத்துக் கொண்டு இருந்தது அவள் பாட்டி அவளுக்கு கொடுத்திருந்த சீர்.

சுந்தராம்பாள் அப்படி என்ன செய்து விட்டார் என்றால் சுமார் 200 பவுன் நகைகள், அதில்லாமல் தனியாக வைரத்தால் இழைக்கப்பட்ட அவரின் பரம்பரை நகைகள், இருபது லட்சம் ரொக்கம், அவள் பூஜைக்கும், வீட்டுக்கும் பயன்படுத்தவென தனியே வெள்ளி, வெண்கல பாத்திரங்கள், பூஜை சாமான்கள்..

அவளுக்கென அவரே பார்த்து பார்த்து எடுத்த பட்டுபுடவைகளும், சாதாரண புடவைகளும், சுடிதார்களும் என்று அதுவேறு ஒரு ஆறேழு பெரிய பெட்டிகளில் தனியாக வைக்கப்பட்டு இருக்க, அவரின் பேத்தி பாசத்தை அவர் வழியில் காட்டி விட்டிருந்தார் சுந்தராம்பாள்.

உண்மையில் கேட்டவளுக்கும் தெரியாது, அவர் இத்தனை செய்து விடுவார் என்று. அவளுக்கு அந்த நேரம் இருந்த எண்ணம் எல்லாம் சஞ்சனா தன்னை பேசிவிட்டாள் என்பதே.. அந்த நேர கோபத்தில் அவரிடம் பேசி இருக்க, அவரோ சிறப்பாக செய்து விட்டிருந்தார்.

அன்று காலையிலேயே விருந்துக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட, விருந்து நடப்பதாக இருந்த அவர்களின் தோட்டத்திற்கு காலையிலேயே சென்று விட்டனர் அனைவரும். அங்கு சுந்தராம்பாள் முன்னமே வந்து காத்திருக்க, பேத்தியை கண்டதும் பாசத்தோடு வந்து அணைத்து கொண்டார். பேத்தியும் அவரோடு ஒட்டிக் கொள்ள, அதன் பின்னர் அவர் தான் அவளை ரகுவோடு இருத்தி விட்டு தான் வந்து மாணிக்கத்துடன் நின்று கொண்டார்.

குணசேகரன் வராதது குறை தான் என்றாலும், இம்மியளவும் அது வெளிப்பட்டு விடாமல் அழகாக சமாளித்தார் சுந்தராம்பாள். காலையிலேயே வந்துவிட்டவர் அன்று நாள் முழுவதும் மாணிக்கத்துடனே இருக்க, உறவினர்கள் குணசேகரனை பற்றி கேட்ட கேள்விகளுக்கும் அவரே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

மாணிக்கம் கூட “நீங்க போய் உட்காருங்க அத்தை.. பேசுறவங்க பேசிட்டே தான் இருப்பாங்க.. நான் பார்த்துக்கறேன்.” என்று சொல்லியும் கூட, அவருடனே இருந்தார் சுந்தராம்பாள். அவரின் ஆளுமையான குரலில் அவர் அழுத்தமாக கேட்பவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க, வந்தவர்களும் அதற்கு மேல் அவரிடம் எதுவும் கேட்க முடியாமல் நகர்ந்து விட்டனர்.

அந்த வகையில் மாணிக்கத்துக்கு சற்றே நிம்மதி தான். மகனின் விருந்தை அவர் முழு நிம்மதியுடன் நடத்திக் கொண்டிருக்க, திருமணத்திற்கு அழைப்பு கொடுக்காததால்  ஊர் மொத்தத்தையும் விருந்துக்கு அழைத்திருந்தார் அவர். அவன் திருமணத்திற்கு எதுவும் செய்யாததால் உறவுகளும் மொய் என்ற பெயரில் தங்கள் பாசத்தை காண்பிக்க அது ஒரு புறம் நடந்து கொண்டிருந்தது.

அன்றைய விருந்தில் கூட, ரகு ம்முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. ஐந்து நாட்களாகவே இருவருக்கும் பிணக்கு தான் என்றாலும், அவள் பாட்டியிடம் பேசியதை கேட்டதிலிருந்து இன்னும் முறுக்கி கொண்டான்.

இருவருக்கும் இடையே சாதாரண பேச்சு வார்த்தைகளுக்கே வழியில்லாமல் போயிருக்க, இன்று காலையில் தான் அவளிடம் சற்றே இயல்பாக பேச தொடங்கி இருந்தான். அதுவும் அவன் உறவுகளுக்காகவோ என்ற எண்ணமும் இருந்தது தேவாவுக்கு.

விருந்தில் அந்த பேச்சுக்கள் தொடர, தங்களுக்குள் இருந்த வருத்தங்களை கூட லேசாக மறந்து சற்றே நெகிழ்ந்த நிலை தான் நந்தனாவுக்கு. ரகுவும் அவளுடனே இருக்க, விருந்து இனிமையாகவே முடிந்திருந்தது. விருந்துக்கு வந்த சொந்தங்கள் பெரும்பாலும் கிளம்பி இருக்க, நெருங்கிய உறவுகள் மட்டும் வீட்டிற்கு வந்திருந்தனர்.

சுந்தராம்பாளும் பார்வதியுடன் வீட்டிற்கு வர, முன்கட்டில் அமர்ந்து கொண்டார் அவர். இயல்பான பேச்சு வார்த்தைகள் போய் கொண்டிருக்க, அப்போது தான் பேச்சை ஆரம்பித்தார் சுந்தராம்பாள்.

“அப்புறம் மாணிக்கம்… உங்க விருந்தை நீங்க முடிச்சிட்டீங்க.. என் பக்கத்துக்கு நான் முறையா சீர் அடுக்கிடவா..” என்று சபையில் அவர் கேட்டுவிட, முதலில் புரியவில்லை மாணிக்கத்துக்கு.. பிறகே அவர் சொல்ல வருவதை உள்வாங்கியவர்

“என்ன அத்தை.. இப்போ எதுக்கு சீர் எல்லாம், நமக்குள்ள என்ன அத்தை..” என்று அவர் தயங்கி மறுக்க

“அதென்ன மாணிக்கம் அப்படி சொல்லிட்ட.. ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்தாலும் முறை ன்னு ஒன்னு இருக்குல்ல.. என்னதான் உன் தங்கச்சி மகளா இருந்தாலும் இப்படி எதுவுமே செய்யாம எப்படி அனுப்பி வைப்பேன் என் பேத்தியை..

“நாளை பின்ன ஊருக்குள்ள எவளாவது ஒண்ணுமில்லாதவ, வெறும் கையை வீசிட்டு வந்துட்டா ன்னு என் பேதியை ஒரு வார்த்தை சொல்லிட்டா, என் உடம்புல உசுரு தங்குமா…? அவளுக்கும் தான் அப்படி என்ன தலையெழுத்து..” என்று மறுக்க முடியாத வகையில் சுந்தராம்பாள் வாதிட

“இல்ல அத்தை.. கொஞ்ச நாள் போகட்டுமே.. ரகுவும் இதெல்லாம்.” என்று ஆரம்பித்தவரை முடிக்க விடாமல் “எப்போ செஞ்சாலும் என் பேத்திக்கு நான் நிச்சயமா செய்யத்தான் போறேன் மாணிக்கம்… ஆனா என் உசுரு இருக்கணும் இல்லையா.. என் கைகால் சுகமா இருக்கறப்பவே என் பேத்திக்கு செஞ்சு அழகு பார்க்கணும் ன்னு நான் நினைக்கிறது தப்பா…”

“நீயே கூட வேற வீட்ல பொண்ணு எடுத்திருந்தாலும் இதையெல்லாம் வாங்கிட்டு தான இருப்பிங்க.. என் பேத்திக்கு மாட்டும் நான் செய்ய கூடாது ன்னு சொன்னா எப்படி..”

“நான் ஒன்னும் குணசேகரன் மகளுக்கு சீர் செய்ய வரல.. நான் சுந்தரம்பாளோட பேத்திக்கு முறை செய்ய வந்திருக்கேன்.. நான் திரும்ப இந்த வீட்டுக்குள்ள அடியெடுத்து வைக்கணும் ன்னு நீ நெனைச்சா, என்னை தடுக்காம என் வழமையை செய்ய விடு..” என்று அவர் முடிவாக கூறிவிட

ரகுவுக்கு முகம் இறுகி போனது. சுந்தராம்பாள் தன்னை சரியான நேரம் பார்த்து உறவுகளின் முன் எதுவும் பேசவோ, செய்யவோ முடியாத நிலையில் நிறுத்தி விட்டது புரிந்தது அவனுக்கு. அதற்குமேல் எது பேசினாலும் அங்கு எடுபடாது என்பதும் புரிய, அமைதியாக தன் தந்தையிடம் தலையசைத்தான் அவன்.

மாணிக்கத்திற்கும் அதன் பிறகே நிம்மதியாக இருக்க, “நீங்க செய்ங்கம்மா..” என்று விட்டார் சுந்தராம்பாளிடம். சுந்தராம்பாள் தன்னோடு வந்த ஓட்டுனருக்கு அழைத்து ஏதோ பேச அடுத்த பத்து நிமிடங்களில் அவர் எடுத்து வந்திருந்த சீர் பொருட்கள் அங்கே அந்த முற்றத்தில் கடை விரிக்கப்பட்டன.

தேவா உடை மாற்றுவதற்காக அறைக்கு சென்றிருந்த நேரத்தில் இந்த பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்து விட்டிருக்க, அவளுக்கு கீழே நடந்த எந்த விஷயமும் தெரியவே இல்லை. வானதி வந்து கீழே அழைப்பதாக சொல்லவும், அவளுடன் கீழே வந்திருந்தாள் தேவா.

அவள் வரவும், சுந்தராம்பாள் எழுந்து நின்றவர் தன் பரம்பரை நகைகளைகையில் எடுத்துக் கொண்டு “ரகுவோட சேர்ந்து நில்லு தேவா..” என்று கூற, அவள் அடியெடுத்து வைக்கும் முன்பாகவே

“நீங்க உங்க பேத்திக்கு செய்றது தானே பாட்டி.. அவகிட்டேயே கொடுத்துடுங்க.. அதோட நானும் அவளும் வேற இல்லையே.. யார் வாங்கினா என்ன??” என்று விட்டான். அவன் விட்டு கொடுக்காமல் பேசினாலும், தன் மறுப்பை நிலைநிறுத்தி விட்டதாகவே தோன்றியது தேவாவுக்கு.

அந்த வைர நகைகளை தேவாவின் கையில் கொடுத்தவர், “இது எல்லாம் என்னோட பரம்பரை நகை.. என் மருமகளுக்கு ஏற்கனவே நான் கொடுத்தது தான்.. அவ இல்லாம போனதிலிருந்து மறுபடியும் நானே பாதுகாத்து வச்சிருந்தேன்..

“இன்னிக்கு இதை எல்லாம் என் பேத்திகிட்ட ஒப்படைக்கவும் தான் நிம்மதியா இருக்கு..” என்றவர் கீழே வைத்திருந்த நகைகளை பற்றி எதுவும் பேசவே இல்லை. முத்து மாணிக்கத்திற்கும், வேலுமாணிக்கத்திற்கும் அவற்றின் மதிப்பு புரிய, ரகுவின் கோபம் தான் பிரதானமான பிரச்சனையாக தோன்றியது.

பார்வதிக்கு சுந்தராம்பாள் செயலுக்கு ஏதோ காரணம் இருக்குமோ என்று உறுத்திக் கொண்டே இருக்க, எதுவும் கேட்காம உடையாமல் அமைதியாகவே நின்றார். சிறியவர்கள் அங்கிருந்த பொருட்களை ஆசையாக பார்க்க, சஞ்சனாவும், சங்கரியும் பொறாமையில் வெந்து போயிருந்தனர்.

சுந்தராம்பாள் அவர்களின் அதிர்ச்சியை கண்டு கொள்ளாமல் “நீ பாரு பார்வதி… என் பேத்திக்கு நீதானே மாமியா.. இந்த சீர் அது இதெல்லாம் பொம்பளைங்க விஷயம்.. நீ பாரு எதுவும் குறை இருந்தா சொல்லு எனக்கு..” என்று தன்மையாகவே அவர் பார்வதியிடம் கேட்டு நிற்க

“என்னம்மா பேசுறீங்க.. நீங்க செஞ்சதுல நான் குறை சொல்வேனா.. நீங்க உங்க பேத்தி சந்தோஷத்துக்காக தானே செஞ்சீங்க.. அவ முகத்தை பாருங்க..அந்த சந்தோஷம் போதாதா..” என்று பார்வதி கூற, தேவாவின் கண்களில் கண்ணீர் தான்..

பாட்டி பேத்தியை நெருங்க, அவரின் தோளில் சாய்ந்து கொண்டவள் குலுங்கி அழ, சுந்தராம்பாளுக்கும் கண்கள் கலங்கி போனது… சற்றே நெகிழ்ச்சியான தருணம் அது. சுற்றி இருந்தவர்களுக்கும் கண்கள் கலங்கி போக, பார்வதி தேவாவின் முதுகில் தட்டிக் கொடுத்தவர் “தேவா.. பாட்டியும் அழறாங்க பாருடா..” என்று மருமகளை தேற்ற, முயன்று கண்ணீரை அடக்கி கொண்டவள் தன் பாட்டியின் முகம் பார்த்து சிரித்தாள்.

அவர் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவள் மீண்டும் அவரை அணைத்து விடுவிக்க, அந்த மகிழ்ச்சியான மனநிலையிலேயே விடைபெற்று கிளம்பி இருந்தார் சுந்தராம்பாள். அவர் சென்று விடவும், பார்வதி தேவாவிடம் அந்த நகைகளை எடுத்து சென்று அறையில் வைக்குமாறு கூற, திருதிருவென முழித்தவள் ரகுவை பார்க்க, ரகு அவன்பாட்டிற்கு வெளியே நடந்து விட்டான்.

பார்வதியிடம் “இதெல்லாம் நீங்களே வைங்க அத்தை.. நான் அப்புறம் எடுத்துக்கறேன்..” என்று அவள் கூற

“எல்லாத்தையும் எடுத்துட்டு போய் உன்னோட ரூம்ல வை.. இந்த பணத்தையும் சேர்த்து தான் சொல்றேன்.. ரகுவோட நாளைக்கு பேங்குக்கு போய் இதையெல்லாம் லாக்கர்ல வச்சிடு.. பணத்தையும் உங்க ரெண்டு பேர் பேர்ல பேங்க்ல கட்டிடுவோம்..” என்று அவர் கூற, அமைதியாக தலையாட்டியவள் வானதி உதவியுடன் எல்லாவற்றையும் தன் அறையில் எடுத்து வந்து வைத்துவிட்டாள்.

இன்னும் ரகு அறைக்கு வந்திருக்கவில்லை. அந்த அறையில் இருந்த ரகுவின் பீரோவில் நிச்சயம் அது மொத்தத்தையும் வைக்க முடியாது என்பது புரிய, என்ன செய்வது என்று கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டிருந்தாள் அவள்.

அவள் வெகுநேரம் அப்படியே அமர்ந்து விட, ரகு அந்த அறைக்குள் நுழைந்தான். கன்னத்தில் கையை வைத்து அமர்ந்திருந்த மனைவியின் தோற்றம் சற்றே கோபத்தை தணிக்க முயல, இழுத்து பிடித்தவன் அவளை கண்டுகொள்ளாமல் துண்டை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றான். அவள் பரப்பி வைத்திருந்த பொருட்களின் மேல் படாமல் அவன் விலகி நடக்க, அழுகையே வந்தது தேவாவுக்கு.

இத்தனைக்கும் அன்றைய வாக்குவாதத்திற்கு பிறகு இந்த நிமிடம் வரை அதை பற்றி அவன் ஒருவார்த்தை கூட பேசியிருக்கவே இல்லை. காலையில் அத்தனைப் பேர் கூடி இருந்த அந்த விருந்தில் கூட, அவளை தாங்கி கொண்டு தான் நின்றான்.

அப்படி இருக்க, இந்த சீர் பொருட்களை வாங்கி கொண்டது முதலாக அவன் நடவடிக்கைகள் மாறிப் போயிருக்க, அவனை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறித்தான் நின்றாள் அவள். அவன் மனநிலை புரிந்தாலும் என்னை பற்றி இவன் யோசிக்கவே மாட்டானா ?? என்ற கேள்வி எப்போதும் போல் விஸ்வரூபம் எடுக்க, என்ன வாழ்க்கை இது என்ற சலிப்பு தான்.

பாட்டியை கட்டிக்கொண்ட போது இருந்த இலகுத்தன்மை நிச்சயம் இப்போது இல்லை… ஏன் சீர் வாங்கி கொண்ட நிறைவோ, நிம்மதியா கூட இல்லை. யாருக்காக சீர் வேண்டும் என்று நினைத்தாளோ அவர்களை பற்றி கூட யோசிக்கவே இல்லை அவள். சங்கரியும், சஞ்சனாவும்அவள் மனதிலிருந்து எங்கோ சென்று விட்டிருக்க, இந்த நிமிடம் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை அவர்களை.

அவள் மனதில் நின்றதெல்லாம் ரகுவின் இறுகிய முகமும், இப்போது சில நிமிடங்களுக்கு முன் பார்த்த அவனின் உணர்ச்சி துடைத்த முகமும் தான்… ஏன் இப்படி இருக்கிறான்?? என்று மனது அதிலேயே உழன்றது. இந்த இடைப்பட்ட நாட்களில் அந்த நெடியவன் மீது காதலும் அவளை கேட்காமலே வந்து விட்டிருக்க அவனின் பாராமுகம் வருத்தி கொண்டே இருந்தது.

சில நிமிடங்களில் ரகு குளித்து முடித்தே வந்துவிட, உணவுக்கு கூட கீழே செல்லாமல் அவள் அருகில் காலியாக இருந்த இடத்தில் வந்து படுத்திருந்தான். அவளுக்கு முதுகை காட்டியவாறு அவன் படுத்துக் கொள்ள, ஒரு வார்த்தை கூட இப்போதும் அந்த பணத்தை பற்றியோ, நகையை பற்றியோ பேசவில்லை அவன்.

அவன் சாப்பிட்டும் இருக்கமாட்டான் என்பது புரிய மதியம் சரியாக சாப்பிடாததும் நினைவில் வந்தது தேவாவுக்கு. அவன் இரண்டு வார்த்தை திட்டி பேசிவிட்டால் கூட போதும் என்ற நிலைக்கு அவள் வந்திருக்க, இதற்கெல்லாம் காரணமானவனோ எதை பற்றியும் கவலை கொள்ளாமல் படுத்திருந்தான்.

Advertisement