Advertisement

காதல் தருவாயா காரிகையே 11

                       வானூர் கிராமத்தின் முடிவில் புத்துப்பட்டு என்னும் இடத்தில அமைந்திருந்தது ரகுவின் குலதெய்வ கோவில். மஞ்சனீஸ்வரர் அய்யனார் என்ற பெயரில் கடவுள் அங்கே அருள்பாலிக்க, நினைத்ததை நினைத்தபடி நடத்திக் கொடுக்கும் வல்லமை படைத்த ஊர்காவலனாக ஒய்யாரமாக குதிரையின் மீது அமர்ந்திருந்தார் அவர்.

                        உள்ளே கோவிலின் கர்ப்பகிரகத்தில் அவர் மனைவியுடன் சாந்தமாக காட்சி கொடுப்பவர், கோவிலின்  எல்லையில் ஆக்ரோஷமாக அமர்ந்து மிரட்டிக் கொண்டிருந்தார். சுற்றிலும் கருவேல மரங்களும், இன்னும் சில காட்டு செடிகளும் சூழ்ந்திருக்க, அந்த காட்டின் முடிவில் இருந்தது கோவில்.

                      அந்த காட்டில் கிடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டு பெண்கள் பொங்கல் வைத்து கொண்டிருக்க, ஒருபுறம் ஆடு, கோழி என்று பலியிடுவதும் நடந்து கொண்டிருந்தது.. காதுகுத்து, கல்யாண விருந்து என்று திங்கள், செவ்வாய் கிழமைகளில் விசேஷமாக இருக்குமிடம், மற்ற நாட்களில் யாரும் தனித்து வர முடியாத அளவுக்கு மிரட்டுவதாக இருக்கும்.

                         இன்று ஒரு செவ்வாய் கிழமையாக இருக்க, கோவில் களைகட்டி இருந்தது. அந்த கோவிலை சுற்றி இருந்த இடத்தில் ஒருபுறம் அமர்ந்து சேலையை தூக்கி சொருகி கொண்டு தன் மாமியார் சொல்ல, சொல்ல அவர் கற்று கொடுத்ததை போலவே வேண்டிக் கொண்டு பொங்கலிட்டுக் கொண்டிருந்தாள் புதுப்பெண்.

                        அவள் கர்மசிரத்தையாக பொங்கலிட்டுக் கொண்டிருக்க, அதைவிட அதிக சிரத்தையுடன் அவளை நோட்டமிட்டு கொண்டிருந்தான் அவள் கணவன். கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல் அந்த விறகுகளை வைத்து மூட்டி இருந்த செங்கல் அடுப்பை அவள் சமாளித்துக் கொண்டிருக்க, ஏனோ மனம் இன்னுமின்னும் அவளில் மூழ்கி கொண்டிருந்தது.

                         காலையில் தந்தை அவ்வளவு நகைகளை எடுத்து கொடுத்து இருந்தாலும், அளவோடு அதில் ஒன்றிரண்டை மட்டும் அணிந்து கொண்டு அவளுக்கே உரிய தனி அழகுடன் அவள் மிளிர்ந்து கொண்டிருக்க, அவளின் ஒரு பார்வைக்காக தவம் கிடக்கிறான் அவன்.

                          காலையிலிருந்து ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவள். அவனை கண்டுகொள்ளாமல் அவள் பாட்டிற்கு வானதி, பிரசன்னாவுடன் சுற்றி வர, கண்ணெடுக்காமல் பார்த்து இருந்தான் அவன். அவன் பார்வையை கண்டுகொண்டாலும் அவனை இந்த முறை லேசில் விடுவதாக இல்லை அவன் நந்தனா.

                         இப்போதும் அவளுக்கு உதவியாக வானதியும், பிரசன்னாவும் அவளுடன் இருக்க, பார்வதியும் அவர்களுடன் தான். காவேரி சங்கரியுடன் சற்று தள்ளி அமர்ந்து கொண்டனர். முத்துவும், வேலுவும் கோவிலில் அபிஷேகத்திற்கு சொல்லி வைக்க சென்றிருக்க, சந்திரன் தன் பிள்ளையுடன் உடன் சென்றிருந்தான்.

                       இதில் தனித்து விடப்பட்ட ரகுநந்தன் தன் வேலையை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். இவன் சைட் அடித்த நேரத்தில் அங்கே பொங்கல் பொங்கி இருக்க, மிகுந்த மனநிறைவு பார்வதிக்கு. மனதார அந்த மஞ்சனீஸ்வரனுக்கு நன்றி சொன்னவர், பொங்கல் பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு மற்றொரு தட்டில் பழம், வெற்றிலை பாக்கு, புதுத்துணி என்று எடுத்து வைத்ததை மருமகளிடம் கொடுத்தார்.

                       குடும்பத்தினர் அனைவரும் சன்னதிக்கு செல்ல, அங்கு சந்தனத்தாலும், மஞ்சளாலும், பால், பன்னீர்  முதலிய பொருட்களாலும் குளிர்ந்து போயிருந்தார் அவர். அவரை கண்குளிர தரிசித்தவர்கள் மணமக்களின் வாழ்வு சிறக்கவும் வேண்டிக் கொண்டு வெளியில் வந்து, ஒரு ஓரமாக அமர்ந்தனர் அனைவரும்.

                         இப்போது ரகுவின் அருகில் நந்தனா அமர்ந்திருக்க, அவள் சேலை அவனை உரசிக் கொண்டிருந்தது.. ஆனால் அவன் மனைவி அவனை கண்டுகொள்ளாமல் சஞ்சயுடன் விளையாடிக் கொண்டிருக்க, வழக்கம் போல நந்தனாவிடம் செல்லம் கொஞ்சி கொண்டிருந்தான் அவன்.

                         அவன் நெற்றியில் தீட்டி இருந்த சந்தனம், குங்குமம் அனைத்தையும் நந்தனாவின் புடவையில் துடைத்துக் கொண்டே அவன் ஒளிந்து விளையாட, அதை பற்றிய கவலையே இல்லாமல் அவனை கொஞ்சி கொண்டிருந்தாள் அவள். ரகுவுக்கு அவளை அருகில் வைத்து இப்படி பார்த்துக் கொண்டே இருப்பது கொடுமையாக இருக்க “எப்போதடா வீட்டுக்கு கிளம்புவோம்..” என்ற எண்ணம் தான்.

                       ஒருவழியாக கோவிலில் இருந்து கிளம்பியவர்கள் வீட்டிற்கு வர, பூஜையறையில் வணங்கி முடிக்கவும், அவரவர் அறைக்கு சென்றனர் அனைவரும். நந்தனா தன் அறைக்கு வந்தவள் ஒரு சேலையை எடுத்துக் கொண்டு உடைமாற்றும் தடுப்புக்கு அருகில் செல்ல, அவளை தொடர்ந்து மேலே வந்திருந்தான் ரகு.

                      அவனை பார்த்தவள் ஒரு நொடி தயங்கி விட்டு மீண்டும் நடக்க, மிக நிதானமாக அந்த தடுப்புக்குள் வந்தவன் தன் சட்டையை கழட்டி அங்கிருந்த ஹாங்கரில் மாட்டிவிட்டு தன் மனைவியை நெருங்கினான். அவள் கையில் வைத்திருந்த சேலையுடன் அப்படியே நிற்க, “இப்போ மட்டும் என்னையே பார்க்கிற… காலையில இருந்து எவ்ளோ அலையவிட்ட” என்று நினைத்தவன் மூச்சுக்காற்று மோதி கொள்ளும் நெருக்கத்திற்கு வந்து விட

                   நந்தனாவின் விழிகள் நிலம் நோக்கி தாழ்ந்து விட்டிருந்தது. அவள் முகவாயை பற்றி நிமிர்த்தியவன் அவள் முழுதாக நிமிர்வதற்குள் அவள் இதழ்களை தனதாக்கி கொண்டிருந்தான். லேசாக மூச்சிரைக்கும் வரைக்கும் அவளை கொள்ளையிட்டவன் கைகள் அவள் இடுப்பில் ஊர்வலம் வர, அன்று போல துள்ளி குதிக்க முடியாமல் அவளை இறுக்கி பிடித்திருந்தான் மற்றொரு கையால்.

                     அவள் அசையாமல் நிற்க முடியாமல் நெளிந்தவள் ஒரு கட்டத்தில் தளர்ந்து அவன் மார்பில் விழ, “இந்த நிமிஷம் என் பொண்டாட்டிதான் என் கண்ணுக்கு தெரியுறா..” என்று மீண்டும் இதழ் ஒற்றினான். “இந்த நகையெல்லாம் இன்னிக்கு ரொம்ப அழகா தெரியுதே எனக்கு..” என்று கேட்டுக் கொண்டே அவள் கழுத்து, காது என்று அவன் வலம் வர, நந்தனா சுதாரித்து இருந்தாள் இதற்குள்.

                        அவனிடம் இருந்து விலகி நின்றவள் “நான் டிரஸ் மாத்தணும்..” என்று சொல்லி வேறு புறம் பார்க்க , அவளை முறைத்தவன் அவளை நெருங்கி அவள் கழுத்தில் அழுத்தமாக கடித்து வைத்தான். அவள் லேசாக கத்தி விடவும், அவளை விடுவித்தவன் அவளை திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட, கழுத்தை லேசாக தடவிக் கொண்டு நின்றாள் அவள்.

                     அவள் கழுத்தில் லேசான பல்தடங்கள் தெரிய, சட்டென கண்ணாடி முன் சென்று தன்னை அலசியவள் “சரியான வாத்து..” என்று அவனை திட்டிவிட்டு, சேலையை மாற்றிக் கொண்டு படுத்துவிட்டாள். அன்றைய நாள் அப்படியே கழிய அன்றைய மாலை நேரத்தில் இவர்களின் திருமண விருந்தை பற்றிய பேச்சு மீண்டும் தொடங்கியது.

                      முத்து மாணிக்கம் அடுத்து வந்த ஞாயிற்று கிழமை விருந்தை வைத்துவிடலாம் என்று கூற, அதற்கான ஏற்பாடுகளை பற்றி பேச்சு நீண்டு கொண்டிருந்தது. யாரை அழைக்க வேண்டும்?? சமையலுக்கு யாரை அழைப்பது?? என்னென்ன வகையான உணவுகள் ?? எத்தனை பேர் வருவார்கள்?? என்று கேள்விகள் நீண்டு கொண்டே இருக்க, பேச்சு தீவிரமாக சென்று கொண்டிருந்தது.

                      பேசி முடித்து அவர்கள் சுந்தராம்பாளுக்கு அழைத்து விருந்து பற்றி விவரம் கூற, அவர் ஞாயிற்று கிழமை காலையிலேயே வந்துவிடுவதாக கூறிவிட்டார். குணசேகரனை அழைக்க எப்போது வரவேண்டும்?? என்று முத்துமாணிக்கம் கேட்க, “அதெல்லாம் வேண்டாம் மாணிக்கம்.. நான் சொல்லிக்கறேன்..” என்று முடித்துக் கொண்டார் அவர்.

                      இவர்கள் பேச்சை முடித்துக் கொண்டு உறங்க செல்லும் நேரம் சங்கரியும், சஞ்சனாவும் பேசி கொண்டிருப்பது அந்த வழியாக வந்த நந்தனாவின் காதில் விழுந்தது..”இந்த ஒண்ணுமில்லாதவளுக்கு ஒரு விருந்து.. அதுக்கு ஊரையே வளைக்க திட்டம் போடுறாங்க இவங்க.. ஏன் அத்தை, வர்றவங்க பொண்ணு வீட்டு சீரை கேட்பாங்களே , எங்கே இருந்து கொண்டு வருவாங்க..” என்று சஞ்சனா திமிருடன் கேட்க, சங்கரி சிரித்துக் கொண்டு நின்றார்.

                    தேவா இவர்களை கவனித்ததை இவர்கள் இருவரும் கவனிக்காமல் போக, தேவா அடுத்து என்ன என்பதை தனக்குள் முடிவெடுத்துக் கொண்டாள். தன் கையிலிருந்த மொபைலை எடுத்துக் கொண்டு அவள் வீட்டின் பின்புறம் செல்ல யாரும் இல்லை அங்கே.

                    அங்கிருந்த திண்ணையில் அமர்ந்து கொண்டவள் தன் பாட்டிக்கு அழைக்க, முதல் இரண்டு ரிங்கிலேயே எடுத்து விட்டார் அவர்..” சொல்லுடா தேவா..” என்று எப்போதும் போல அன்பாக அவர் கேட்க

                    “பாட்டி.. ” என்று அழுத்தமாக அழைத்து நிறுத்தியவள் “என் கல்யாண சீரை எப்போ செய்ய போறீங்க..” என்று அவரிடம் கேட்க, எதிர்முனையில் துல்லியமாக அதிர்ந்து நின்றார் சுந்தராம்பாள். தன் பேத்திக்கு இந்த அளவுக்கு சமைத்து கிடையாதே என்று யோசித்தவர்

                     “ஏன் அம்மாடி.. உன் புருஷன் தான் எதுவும் செய்ய கூடாது ன்னு முறுக்கிட்டு இருக்கானே.. நான் என்ன செய்ய..” என்று அவர் ஒன்றுமறியாதவர் போல் கேட்க

                     “நீங்க அவருக்க சீர் செய்யறீங்க.. அவர் என்ன சொன்னா உங்களுக்கு என்ன.. எனக்கு செய்ய வேண்டியதை நீங்க செஞ்சுதான் ஆகணும்..” என்று அழுத்தி அவள் சொல்ல

                   “சரிடா தேவா… உனக்கு செய்யாம நான் யாருக்கு செய்ய போறேன்.. உன் அப்பனுக்கும் இதுதான் கோபம்.. நான் இப்போவே அவன்கிட்ட..” என்று அவர் சொல்லும்போதே

                   “பாட்டி..” என்று கோபத்துடன் குறுக்கிட்டவள் “நான் சீர் கேட்டது உன்கிட்ட.. உன்னால உன் பேதிக்கு என்ன செய்ய முடியுமோ அது மட்டும்தான் என் வீட்டுக்கு வரணும்.. உன் மகன் பணத்துல இருந்து எதுவுமே எனக்கு வேண்டாம்… உனக்கு புரியுதா..” என்று கேட்க

                   “ஏண்டி அப்படி சொல்லுற.. என் மகன் இல்லாம நீ வந்துட்டியா..” என்று சற்று சத்தமாகவே சுந்தராம்பாள் அதட்ட

                    “உன் மகன் தான் சொன்னாரு… நான் அவரை அசிங்கப்படுத்திட்டதா.. அவர் பேச்சை கேட்காம கல்யாணம் பண்ணிட்டு வந்தவளுக்கு அவர் சீர் எதுவும் செய்ய வேண்டாம்.. எப்போ எனக்கு அப்பா ன்னு அவர் வந்து நிற்கிறாரோ அப்போ அவர் சீர் கொடுக்கட்டும்..” என்று அவள் முடிவாக கூறிவிட்டாள்.

                     சுந்தராம்பாளுக்கும் மகன்மீது கோபம் வர “சரி சீர் கொடுன்னு சொல்லிட்ட… என்ன செய்யட்டும் நான்.. நான் அதிகமா எதுவும் செஞ்சிட்டா, உன் வீட்டாளுங்க எதுவும் நினைச்சிட்டா என்னம்மா செய்ய..” என்று அவர் கேட்க

                 “எனக்கு அதெல்லாம் தெரியாது.. எனக்கு நீதானே கல்யாணம் செஞ்சு வச்ச.. அப்போ இதெல்லாம் உனக்கு தான் தெரியணும்… நீ செய்யிற சீர் எனக்கு சொந்தமானது, இதுல யார் என்ன சொன்னாலும் உனக்கு என்ன..?? எனக்கு வேணும்.. அவ்ளோதான்.. அதுவும் உன் பணத்துல..” என்று அவள் முடிக்க

                  “நீ சொல்லிட்டல.. பாட்டி அசத்திடறேன் பாரு…” என்று விட்டார் சுந்தராம்பாள்..

                   மீண்டும் அவரே  “சரி அதெல்லாம் இருக்கட்டும்.. என் மக்கு பேத்தி எப்படி என் உரிமையை கொடு ன்னு கேட்குற அளவுக்கு புத்திசாலி ஆகிட்டா..” என்று கேட்க

                    “ஹான்.. நீ ஒரு புத்திசாலியை பிடிச்சு என் தலையில கட்டி வச்ச இல்ல, அவரோட சேர்ந்து இப்படி ஆகிட்டேன் போல..” என்றாள் பேத்தி..

                   “அவனா.. அவனுக்கு இந்த அளவுக்கு விவரம் பத்தாதுடி.. அது தெரிஞ்சு தான் உன்னை அவன் தலையில கட்டினேன்..மக்கு பையன் அவன்.. ” என்று அவர் சொல்லிவிடவும்

                   “பாட்டி..” என்று சற்று சத்தமாகவே அதட்டி விட்டாள் பேத்தி..

                   சுந்தராம்பாளுக்கு ஏக திருப்தியாக இருக்க இன்னும் சில  பேத்தியை வம்பிழுத்தவர் பேச்சினூடே “அங்கே எல்லாம் எப்படி பழகுறாங்கடா.. உனக்கு பிடிச்சிருக்கா எல்லாரையும்..” என்று கேட்க

                  “நல்லா பழகுறாங்க பாட்டி.. அத்தையும், மாமான்களும் என்னை அப்படி பார்த்துப்பாங்க.. வானதி, பிரசன்னா தான் இப்போ எனக்கு பிரெண்ட்ஸ் இங்கே. இங்கே ஒரு குட்டிப்பையன் இருக்கான் தெரியுமா.. அவனுக்கு என்னை ரொம்ப பிடிக்குமே..” என்று அவள் வரிசையாக வீட்டில் இருக்கும் அனைவரையும் பற்றி கூறியவள் சஞ்சனாவையும், சங்கரியையும் தவிர்த்துவிட, அந்த அனுபவசாலிக்கு நூலின் நுனி பிடிபட்டது…

                    தன் பேத்தியுடன் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு அவர் அழைப்பை துண்டித்துவிட, தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு அவள் எழுந்து கொள்ள, கைகட்டி அவளை முறைத்திருந்தான் ரகு. அன்று போல பயப்படவும் இல்லை, தலைகுனியவும் இல்லை அவள்.

                  எழுந்து கொண்டவள் மைதியாக முன்னே நடக்க, படிகளின் அருகில் வரவும் சட்டென நின்றுவிட்டாள். ரகு தூர நின்று அவளையே பார்க்க, அவனை திரும்பி பார்த்தவள் படிகளில் ஏற முற்பட, சட்டென நின்ற இடத்திலிருந்து வேகமாக வந்தவன் அவள் பாதிப்படிகளை தொடும் நேரம் அவளை கைகளில் தூக்கி கொண்டிருந்தான்.

                 நந்தனா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, தன் அறையின் கட்டிலில் அவளை பொத்தென போட்டு விட்டவன் “என்னடி பேசிட்டு இருந்த உன் பாட்டிகிட்ட..” என்று கேட்க

                 “அதான் முழுசாக கேட்டிங்களே..” என்று அவனை அதிரவைத்தாள் நந்தனா..

                ரகு சற்றே கோபமாக அவளை பார்க்க “உங்களுக்கு குணசேகரனோட பணம் வேண்டாம்.. அப்படியே இருங்க.. எனக்கு என் பிறந்தவீடு வேணும்.. என் பாட்டி எனக்கு கொடுக்க போற சீர், என்னோட கௌரவம்.. என்னால அதை விட்டு கொடுக்க முடியாது” என்று நந்தனா அவள் பாட்டியிடம் பேசிய அதே தோரணையில் அவனிடமும் பேச முகம் இறுகியது ரகுவுக்கு.

                  “நான் இதுக்கு சம்மதிக்கலன்னா.. இதெல்லாம் வேண்டாம் ன்னு சொன்னா..” என்று அவன் கூர்மையாக கேட்க

                   “ஏன் சம்மதிக்கமாட்டிங்க.. ஏன் வேண்டாம் ன்னு சொல்விங்க.. உங்களால முடியாது… அப்படி நீங்க  வேண்டாம்ன்னு சொன்னா, நான் வேண்டாம் ன்னு அர்த்தம்… என் பாட்டி கொடுக்கப்போற சீரை ஏத்துக்க முடியாது ன்னு சொன்னா, என்னையும் என் பாட்டியோடவே அனுப்பிடுங்க.. அப்போதான் அந்த சீரெல்லாம் வெளியே போகும்…”

                    “இல்ல அனுப்ப மாட்டேன் ன்னு சொன்னா, அந்த சீரும் இங்கே வந்தே தீரும்..” என்று அவள் முடிவாக கூற

                  “ஏய்.. என்ன மிரட்றியா..” என்று ரகு முகம் சிவக்க அதட்ட

                    “நிச்சயமா இல்ல.. என்ன நடக்க போகுதோ அதை சொல்றேன்.. மதியம் சொன்னிங்கல, நான் உங்க பொண்டாட்டியா தெரியுறேன் ன்னு, அது உண்மை ன்னா அமைதியா இருக்கணும் நீங்க.. நீங்க யாரை கட்டி இருந்தாலும் சீர் வந்திருக்கும் தான..

                     “இப்பவும் அப்படியே நினைங்க.. உங்களுக்கு வேண்டாம் னு நினைச்சதால தான் என் அப்பாவோட பணத்தை தொடவே கூடாது னு என் பாட்டிகிட்ட சொல்லி இருக்கேன்.. அவரோட பணம் உங்கவீட்டுக்குள்ள வராது. அவ்ளோதான்..வேற எதுவும் கேட்காதீங்க..” என்றவள்  தன்னிடத்திற்கு நகர, அவள் தன்னை முழுமையாக வளைப்பது புரிந்தது ரகுவுக்கு.

               ஆனால் அதற்காக அவளை வெளியே அனுப்புவது எல்லாம் சாத்தியம் என்று தோன்றவில்லை அவனுக்கு.. அவளின் இந்த அவதாரத்தில் அவன் வாயடைத்து நிற்க, அடுத்து வந்த விருந்தன்று அவள் பாட்டி கொண்டு வந்த சீரில் மயக்கமே வந்துவிடும் போல் ஆகிவிட்டான்.

Advertisement