Advertisement

காதல் தருவாயா காரிகையே 10

                           ரகுவும், நந்தனாவும் மனம் விட்டு பேசியதில் இருந்து சின்ன முன்னேற்றமாக தேவாவை திட்டிக் கொண்டே இருப்பதை விட்டுவிட்டிருந்தான் ரகு. தேவாவும் அவள் தந்தையை பற்றி அவனிடம் பேசுவதை தவிர்த்துவிட, அவர்கள் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ளும் எண்ணம் இருவருக்குமே இருந்தது.

                            அன்று அவள் ஆத்திரத்தில் உடைத்திருந்த அலைபேசியை சரி செய்து கொண்டு வந்து அவளிடம் ரகு கொடுத்திருக்க, அவ்வபோது தன் பாட்டிக்கு அழைத்து பேசுவாள். அன்றைய அழுகைக்கு பின்னர் தந்தைக்கு அழைக்கவே இல்லை. தவறு செய்ததாக எந்த எண்ணமும் இல்லாததால் அவர் கோபம் குறையட்டும் என்று முடிவெடுத்திருந்தாள்.

                            காலை ஐந்து மணிக்கு துவங்கும் அவளின் அன்றாட பொழுதுகள் அதன்பின்னர் பெரும்பாலும் பார்வதியுடன் தான் கழியும். அன்றைய வாக்குவாதத்திற்கு பிறகு சங்கரி, சஞ்சனாவை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை அவள். அவர்கள் இருக்கும் இடங்களில் கூட பெரும்பாலும் நிற்கவே மாட்டாள்.

                         அவள் அந்த வீட்டிற்கு வந்து முழுதாக ஒரு வாரம் கடந்து விட்டிருக்க, இந்த ஒருவார காலத்தில் தன் மாமன்களுடன் சற்றே இயல்பாக பேசத் தொடங்கி இருந்தாள். காலை அவர்களுக்கு கேழ்வரகு கஞ்சி கொடுக்கும் வேலையை அவளே தொடர, இப்போதெல்லாம் ரகுவும், சந்திரனும் கூட அந்த நேரங்களில் தவறாமல் கலந்து கொண்டனர்.

                         சந்திரனுக்கு அத்தை மகளை நினைத்து ஒருவித பிரமிப்பு தான். எதிர்பாராத கல்யாணம், அதை தொடர்ந்த பல சஞ்சலங்கள் ஆனாலும் கூட அவள் முகத்தில் சிரிப்பை தவிர எந்த உணர்ச்சியையும் காட்டியதே இல்லை அவள்.

                        பணத்திலேயே பிறந்து வளர்ந்தவள் என்றாலும் பார்க்கும் அத்தனை பேரிடமும் மரியாதையாகவும், அன்பாகவும் அவள் பேசு வார்த்தைகளும், அவள் செயல்களும் அவனை கவர்ந்திருந்தது. ஏதோ ஒரு வகையில் அவள் இப்படி இருப்பது நிம்மதியாக கூட இருந்தது.

                          வானதியும், பிரசன்னாவும் அவளுக்கு உற்ற தோழர்களாக மாறி இருக்க, அவர்களுடன் சரிக்கு  வாயடித்து கொண்டு அவள் அமர்ந்திருப்பதையும் சில நேரங்களில் பார்த்திருக்கிறான். அந்த நேரங்களில் மனம் தானாகவே தன் மனைவியிடம் செல்லும். அவள் ஒருநாள் கூட தன் தம்பி, தங்கைகளிடம் இப்படி பேசி பார்த்ததே இல்லை அவன்.

                           அந்த வகையில் தேவாவை நினைத்து நிம்மதிதான். அன்னையின் வேலைகளிலும் அவள் பங்கெடுத்துக் கொள்ள, பார்வதியின் வேலைகள் ஓரளவு குறைந்திருந்தது என்றால் சங்கரி சமையலறை பக்கமே செல்வது இல்லை.

                         பார்வதி முதல் இரண்டு நாட்கள் பார்த்தவர் மூன்றாம் நாளிலிருந்து அவரை அழைப்பதே இல்லை. எப்போதும் வீட்டில் இருப்பவர்களின் துணிகளை பார்வதியும், சங்கரையும் சேர்ந்து துவைப்பதே வழக்கமாக இருக்க, இப்போதெல்லாம் பார்வதி துணி துவைக்கும் பின்கட்டு பக்கமே செல்வது இல்லை.

                         வானதியை அவள் துணிகளை அவளே துவைத்து எடுக்கும்படி அவர் பழக்கி இருக்க, அவள் எப்போதுமே தானே துவைத்துக் கொள்வாள். தேவாவும் தன் அறையிலேயே அவளின் துணியை துவைக்கும் போதே ராகுவின் துணிகளையும் சேர்த்தே துவைத்து விட, பார்வதி தான் குளிக்கும் நேரத்திலேயே தன் துணிகளை துவைத்து கையோடு பிழிந்து போட்டுவிட, மீதம் இருப்பவர்களின் துணியை துவைக்கும் வேலை மொத்தமாக சங்கரியின் தலையில் விழுந்திருந்தது.

                         காவேரி கல்லூரிக்கு செல்வதை காரணமாக காட்டியே பல நேரங்களில் அவளுக்கு வேலை எதுவும் கொடுக்காமல் காப்பாற்றி விடுபவர் இப்போது அவளை உதவிக்கு அழைக்க, அப்படியெல்லாம் வளைந்து பழகி இராததால் கண்டுகொள்வதே இல்லை அவள்.

                          சஞ்சனாவும் அவர் வேலை செய்யும்போது அருகில் நின்றாலும் பெரிதாக ஒன்றும் செய்யமாட்டாள் என்பதால் சங்கரிக்கு வேலை சற்று அதிகம் தான். சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார் அவர்.

                        நாட்கள் அதன் போக்கில் கழிந்து கொண்டிருக்க, தேவாவின் கால்களில் வலியும் குறைந்திருக்க, அவர்களின் திருமண விருந்தை பற்றி மீண்டும் பேச்சை ஆரம்பித்தனர் முத்துமாணிக்கமும், வேலுவும். பார்வதி ஒரே முடிவாக முதலில் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு வருவோம் என்று கூறிவிட்டார்.

                        மகன், மருமகளுக்குள் வந்த சண்டைகள், தேவாவுக்கு அடிபட்டது எல்லாம் சேர்ந்து அவரை யோசிக்க வைத்திருக்க, குலதெய்வ வழிபாட்டிற்கு பிறகு அனைத்தையும் பார்த்துக் கொள்வோம் என்று முடிவெடுத்திருந்தார் பார்வதி.

                       அடுத்த நாளே நல்ல நாளாக இருக்க, குலதெய்வ கோவிலும் அவர்கள் வீட்டிலிருந்து அருகிலேயே இருக்கவும் அடுத்தநாளே சென்று வருவது என முடிவு செய்ய பட்டது. அடுத்த நாள் காலை கோவிலுக்கு செல்ல தேவையான பொருட்களை எடுத்து வைக்கும் வேலையில் பார்வதி ஈடுபட்டிருக்க, அவருக்கு துணையாக வானதியும், தேவாவும் நின்றனர்.

                       அவர் சொல்ல சொல்ல தேவையான பொருட்களை எடுத்து வைத்தவர்கள் அணைத்து ஏற்பாட்டையும் முடித்துவிட, அன்று மாலை அனைவரும் இருக்கும்போது விஷயத்தை சொல்லவும் தன்னால் வர முடியாது என்றுவிட்டாள் சஞ்சனா.

                     மாதாந்திர பிரச்சனையை காரணம் காட்டியவள் வர முடியாது என்று கூறிவிட, சந்திரன் பெரிதாக கண்டுகொள்ளவே இல்லை. “ம்மா.. அவ வீட்ல இருக்கட்டும்.. நானும் பாப்பாவும் வரோம்..” என்று முடித்துவிட்டான்.

                    நிஜத்தில் சஞ்சனாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவளுக்கு அவர்களுடன் செல்வதில் விருப்பம் இல்லாது போக, வாய்க்கு வந்த காரணத்தை சொல்லி இருந்தாள். ஆனால் சந்திரன் அவளை கண்டுகொள்ளாமல் “நாம போவோம்..” என்று கூறியது கோபத்தை கிளறிவிட, உணவு முடித்து அறைக்கு வந்தவனை தூங்கவிடாமல் சண்டை இழுத்து கொண்டிருந்தாள்.

                     “உங்களுக்கு என் மேல அக்கறையே இல்லல.. அன்னிக்கு அவ என்னை அடிக்க வந்தப்பவும் என்னன்னு கேக்கல.. இப்போ முடியல ன்னு சொல்றேன், நீங்க பாட்டுக்கு நாம போவோம் ன்னு சொல்றிங்க.. என்ன  நீங்க..” என்று அவள் சத்தமிட

                      “என்ன உன் பிரச்சனை.. நீதானே சொன்ன, வீட்டுக்கு தூரமாகி இருக்கேன் ன்னு.. அதான் நானும் என் மகனும் போயிட்டு வரோம் ன்னு சொன்னேன்.. இதுக்கு என்ன குறையை கண்டுட்ட நீ..

                       “நியாயமா இங்கே நாந்தான் சண்டை போடணும்… நீ வீட்டுக்கு தூரமாகி இருக்கியா…” என்று அழுத்தமான பார்வையுடன் அவன் கேட்க, சற்றே திணறினாள் சஞ்சனா.

                       “உன் புத்தி தெரியும்டி எனக்கு.. உன்கூட மூணு வருஷமா குடும்பம் நடத்திட்டு இருக்கேனே.. உனக்கு எப்போ தேதி ன்னு கூடவா எனக்கு தெரியாது.. ஏன் என் அம்மாக்கு கூட தெரியும், நீ பொய் சொல்றது.. சின்ன பசங்க முன்னாடி உன்னை அசிங்கப்படுத்த வேண்டாம் ன்னு தான் அமைதியா இருக்காங்க..”

                        “நீயே உன் மரியாதையை கெடுத்துக்காம படுத்து தூங்கு..” என்றவன் தன்னிடத்தில் படுத்துவிட்டான். சஞ்சனாவுக்கு அவன் செய்கை அப்படி ஒரு கோபத்தை கொடுக்க, திருமணமாகி இந்த மூன்று வருடங்களில் அவன் இப்படியெல்லாம் பேசியதே இல்லை அவளிடம்.

                       இப்போது அதுவும் நினைவு வர, கோபம் மொத்தமும் தேவாவிடமும், தன்னை அடித்த மாமியாரிடமும்  தான் திரும்பியது. தன் கைக்குள் இருந்த கணவன் தன்னை விட்டு விலகுவதாக நினைத்துக் கொண்டவள் அழகாக அதற்கு அடுத்தவரை காரணம் காட்டி கொண்டிருந்தாள்.

                        தேவா தன் வேலைகளை முடித்தவள் தன் அறைக்கு கிளம்ப, சரியாக அதே நேரம் கீழிறங்கினான் ரகு. இன்னும் அந்த படிக்கட்டில் ஒரு விளக்கை பொருத்தி இருக்கவில்லை அவன். ஆனால் தேவா அடிபட்ட மறுநாள் சரியாக அவள் படிகளில் கால்வைக்கும் நேரம் அவள் முன்பாக வந்து நின்றிருந்தான்.

                      பாதி படி வரை அவள் தானே ஏறிச் செல்ல, மீதி பதிப்படிகள் இருக்கும் நிலையில் வெளிச்சம் முழுதாக மறைந்துவிடும் இடம் வந்ததும் அவளை கைகளில் தூக்கி கொண்டான் ரகு. அன்றிலிருந்து இன்று வரை அந்த பழக்கம் தொடர்ந்து கொண்டிருக்க, தேவாவுக்கும் பிடித்தமான நேரங்கள் அவை.

                        இப்போதும் அதுபோலவே அவன் வந்து நிற்க, லேசாக சிரித்து கொண்டே அவன் கையை பிடித்துக் கொண்டு அவள் படிகளில் ஏற, அவளை கைகளில் தூக்கிக் கொண்டான் ரகு. அந்த படிகளை கடந்துவிட்டால் அவர்களுக்கான தனி உலகம் தான்.

                       பெரும்பாலும் யாரைப்பற்றியும் பேச்சுக்கள் இருக்காது என்பதை விட, பெரிதாக பேச்சுக்களே இருக்காது.. தன் கையணைப்பில் அவளை வைத்திருப்பவன் அவளை சீண்டி கொண்டே இருப்பதை தன் முக்கிய வேலையாக மாற்றி கொண்டிருந்தான் இந்த நாட்களில்.

                      இப்போதும் அவளை தூக்கி வந்தவன் அவளை அறையின் வாசலில் இறக்கிவிட, நந்தனா பாத்ரூமிற்கு சென்றவள் குளித்துவிட்டு அவளின் இரவு உடையை மாற்றிக் கொண்டு வந்தாள். ரகு சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டு கால்களை முன்னால் நீட்டி இருக்க, அவன் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.

                      அவன் கண்களை மூடி சாய்ந்திருக்க, “என்ன ஆச்சுங்க..” என்று மெல்லியதாக வந்தது குரல்.

                    “கால் லேசா வலிக்குது நந்தனா, மதியம் தோட்டத்துல வேலை கொஞ்சம் அதிகம்… ரொம்ப நேரம் நின்னுட்டேன் போல..” என்று அவன் கண்களை மூடிக் கொண்டே கூற

                    “என்ன வேலை செய்வீங்க நீங்க…” என்று ஆச்சர்யமாக கேட்டாள் அவள்.

                    அவன் வேலை வாங்குவான் என்று அவள் நினைத்திருக்க, அவன் வேலை செய்ததாக கூறவும் என்ன வேலை என்று கேட்டுவிட்டாள்.. ரகு லேசாக சிரித்தவன் “மல்லி பூ மேடம்.. மல்லி பூ.. அதை பறிக்கனும்… அது பூத்து போறதுக்குள்ள பறிக்கனும்..ஆள் கிடைக்கல.. அதான் நானும் கூட நின்னேன்..” என்று அவன் கூற

                     “ஏன் இங்கே வேலைக்கு யாரும் வரமாட்டாங்களா..” என்று அவள் கேட்க

                     “ஏன் வராம.. வருவாங்க, ஆனா ஒருசில நாள்ல வேற இடத்துல வேலை இருக்கும் அங்கே போய்டுவாங்க… இப்போ இந்த ஏரி வேலை ன்னு மிச்சம் இருக்கவங்களையும் சோம்பேறி ஆக்கிட்டானுங்க..” என்று அவன் கடுப்பாக கூற, தலையாட்டிக் கொண்டிருந்தாள் மனைவி.

                         அவன் பேசும்போதே எழுந்து சென்றவள் தன்னிடமிருந்த தைலத்தை எடுத்து வந்து அவன் கால்களில் பூசிவிட, சட்டென கால்களை இழுத்துக் கொண்டான் அவன். கண்களை திறந்து

                          “என்னடி பண்ற..” என்று கேட்க

                     “ஏன் தைலம் போடறேன்.. கால்வலி ன்னு சொன்னிங்கள்ல.. நீட்டுங்க..” என்று காலை இழுக்க

                     “என்கிட்டே கொடு..நான் போட்டுக்கறேன்..” என்று அவன் கையை நீட்ட

                      “நான் போட்டா என்ன, அன்னைக்கு நீங்க எனக்கு கால் பிடிச்சு விட்டிங்கல.. நானா பண்ணா என்ன??” என்று அவள் பிடிவாதமாக பார்க்க

                        “எதுக்கு உன் அப்பன் என் பொண்ணை கட்டிக்கிட்டு கொடுமைப்படுத்துறான் ன்னு சொல்லவா.. ஏண்டி ஏழரையை கூட்டுற. கொடு” என்று அவன் கையை நீட்ட, சட்டென அவன் கைகளில் கொடுத்து விட்டாள். அத்தோடு எழுந்து சென்று அவள் இடத்தில் படுத்தும் விட, சலிப்பாக வந்தது ரகுவுக்கு.

                        தன் கால்களில் தைலத்தை தேய்த்து முடித்தவன் எழுந்து வந்து கட்டிலில் படுத்து, அவளை தன் புறம் திருப்ப, கண்களில் கண்ணீர் நிறைந்து இருந்தது.. “என்ன சொல்லிட்டேன்னு இப்படி அழுதுட்டு இருக்கா..” என்று நினைத்தவனுக்கு கோபம் வர

                        “ஏய்.. என்ன சொன்னேன் உன்னை எதுக்கு அழுதுட்டு இருக்க..” என்று கேட்க

                       “எனக்கு தூக்கம் வருது… விடுங்க…” என்று அவன் கைகளில் இருந்து விலகினாள் தேவா. “ம்ச்.. நந்தனா இங்கே பாரு..” என்று அவன் அதட்ட

                         “நான் நந்தனா எல்லாம் இல்ல, நான் தேவா.. குணசேகரனோட பொண்ணு தேவா தான்…” என்று அழுத்தமாக அவள் கூற

                          “இப்போ எதுக்கு அந்தாளை இழுக்கிற.. என்னடி உன் பிரச்சனை..” என்று அவன் குரலை உயர்த்த

                        “நான் அவரை இழுக்கல, நீங்க தான் அவரை தூக்கி சுமந்துட்டே இருக்கீங்க… அவரோட பொண்ணா மட்டும்தான் என்னை பார்க்கிறிங்க.. அதுதான் உண்மை..”

                         “நான் சொன்னேனா உன்கிட்ட..”

                  “தனியா வேற சொல்லனுமா… அதான் எப்பவும் குத்திட்டே இருக்கீங்களே..”

                   “ஏண்டி தைலம் போடா வேண்டாம் ன்னு சொன்னதுக்கு இவ்ளோ பெரிய பஞ்சாயத்து வைப்பியா நீ.. ” என்று சலிப்பாக அவன் கேட்டு வைக்க

                      “ஏன் இவ்ளோ சலிச்சுட்டு பேசணும்.. படுத்து தூங்குங்க..” என்று விட்டாள் தேவா. இரண்டு நிமிடங்கள் அவளையே பார்த்தவன் “ஏய்.. நீ சட்டுன்னு காலை பிடிக்கவும் என்னாலேயே ஏத்துக்க முடியலடி.. ஏதோ அந்த நிமிஷம் உன் அப்பன் பேரை சொல்லிட்டேன்.. அதுக்கு அழுவியா..” என்று சமாதானமாக கூற

                     “ஏன் உங்களால ஏத்துக்க முடியல..”

                   “ஒருமாதிரியா இருந்ததுடி.. பொண்டாட்டியை கால்பிடிச்சு விட சொல்றது எல்லாம் பெருமையா.. இவ்ளோ படிச்சிருக்க, ஒரு ஆபிஸையே தனியா பார்த்து இருந்திருக்க.. என் காலை பிடிப்பியா??” என்று கேட்க

                  ” இன்னொரு விஷயத்தை விட்டுடுங்க.., பணக்காரியா வேற பிறந்துட்டேன்.. இதெல்லாம் ஏன் நமக்குள்ள கொண்டு வர்றிங்க.. எனக்கு தெரியாதா.. நான் படிச்சிருக்கேன், வேலைக்கு போயிருக்கேன், பணம் இருக்கு இதெல்லாம் ஒரு விஷயமா?? “

                  “என்னை இயல்பாவே இருக்க விட மாட்டிங்களா நீங்க.. பணம், பணம், பணம் ன்னு ஏன் எப்போ பார்த்தாலும் அதை  சொல்லி நோகடிக்குறிங்க.. ” என்று லேசாக கத்தியவள்

                   “என் பக்கத்துலயே வராதீங்க இனிமே.. எப்போ இதெல்லாம் இல்லாம உங்க பொண்டாட்டி ன்னு மட்டும் தோணுதோ அப்போ பேசுவோம்..” என்றவள் படுத்து விட்டாள்.

                   ரகு படுத்திருக்கும் அவளையே பார்க்க, “உன் வாய் இருக்கே..” என்று அசிங்கமாக திட்டியது அவன் மனசாட்சி.. இப்போது ஏதாவது செய்தாலும் அவள் தவறாக நினைக்கவே வாய்ப்புகள் அதிகம் என்பதால் அமைதியாக அவள் அருகில் படுத்து கொண்டான்.

                    அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து விட்டவள் தன் அத்தை சொன்னது போலவே குளித்துவிட்டு, தன்னிடமிருந்த கரும்பச்சை நிற பட்டை நேர்த்தியாக உடுத்திக் கொண்டாள். பார்வதி அன்று கொடுத்திருந்த நகைகளை அன்றைய தினத்திற்கு பிறகு அவள் தொடவே இல்லை.

                  அவரிடம் திருப்பி கொடுக்கா விட்டாலும், அதை வைத்து அத்தனை பேச்சு பேசி விட்டிருக்க திரும்ப அதை தொடும் எண்ணம் மட்டும் வரவே இல்லை. இப்போது இப்படியே கீழே இறங்கவும் முடியாது, பார்வதி விடமாட்டார் என்று புரிய தயாராகிய பின்னும் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.

                     ரகுநந்தன் எழுந்தவன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு குளித்து முடித்து வெளியே வர, அப்போதும் அங்கேயே இருந்தவள் அவன் இடுப்பில் துண்டோடு வெளியே வருவதை கண்டதும் எழுந்து வெளியே வந்துவிட்டாள்.

                       அவள் இந்த வீட்டிற்கு வரும்போது அணிந்திருந்த அதே மெல்லிய செயின், தோடு, கையில் ஒரு வைர மோதிரம் இவற்றை மட்டுமே அணிந்து கொண்டு அவள் கீழே வர, பார்வதி அவளை ஆழ்ந்து பார்த்தாரே தவிர எதுவும் சொல்லவில்லை.

                        சங்கரி அவளை நக்கலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, தன் கழுத்தில் இருந்த நகைகளை சரிசெய்து கொள்ள தேவா அவரை கவனிக்கவே இல்லை. அவள் பாட்டிற்கு ஏதோ ஒன்றை செய்து கொண்டு பிரசன்னாவுடனும், வானதியுடனும் சுற்றிக் கொண்டிருக்க, ரகுவும் அதற்குள் கீழே இறங்கி வந்துவிட்டான்.

                        பார்வதி தன் கணவரிடம் சென்றவர் எதுவோ பேசி கொண்டிருக்க, முத்துமாணிக்கமும், வேலுவும் தேவாவை திரும்பி பார்த்தனர். வேலுவின் கண்கள் முறைப்பாக மனைவியை வேறு பார்த்து வைக்க, ஏதோ வேலையிருப்பது போல் நகர்ந்து விட்டார் சங்கரி.

                      முத்துமாணிக்கம் தன் மனைவி கூறியதற்கு ஆமோதிப்பாக தலையசைத்தவர் தன் வீட்டின் பூஜையறைக்கு செல்ல, அந்த அறையின் ஒருபுறம் இருந்த, லாக்கரை திறந்து அதில் தனியாக எடுத்து வைத்திருந்த ஒரு அழுக்கான பையை கையில் எடுத்துக் கொண்டு வந்து பூஜையறையின் முன் நின்றார்.

                       பார்வதி “ரகு.. தேவா..” என்று சத்தமாக அழைக்க, வானதியும், பிரசன்னாவும் கூட சேர்ந்தே வந்தனர் அவர்களுடன். முத்து மாணிக்கம் மகனையும், மருமகளையும் ஒன்றாக நிற்க வைத்தவர் தன் கையிலிருந்த அந்த அழுக்கான பையிலிருந்து ஒரு பெட்டியை வெளியே எடுக்க, தூரத்திலிருந்து பார்த்திருந்த சங்கரிக்கும், சஞ்சனாவுக்கும் கொதித்துக் கொண்டு வந்தது.

                       முத்து மாணிக்கம் தன் கையிலிருந்த பெட்டியை தன் தங்கை மகளிடம் நீட்டியவர் “இதெல்லாம் உன் பாட்டியோட நகைம்மா… அவங்க ரெண்டு மருமகளுக்கும் கொடுத்தது போக, மகளுக்குன்னு எடுத்து வச்சது.. உன் அம்மா இல்லாததால இதையெல்லாம் உன்கிட்ட கொடுக்கணும்ன்னு கடைசி வரைக்கும் காத்திட்டு இருந்தாங்க…

                       “சூழ்நிலை என்னன்னவோ நடந்து போச்சு.. இப்போதான் இதை உன்கிட்ட கொடுக்க சரியான நேரம் வந்திருக்கு போல… இந்த நகை உனக்கு சொந்தமானது..இந்த வீட்ல இருக்க யாரும் இதுக்கு உரிமை கொண்டாடவோ, எதுவும் பேசிடவோ முடியாது…நீ வாங்கிக்கோடா..” என்று அவர் கூற

                      அந்த பெட்டியை பார்த்தாள் தேவா.. சற்றே பழமையான நகைகள், ஆனால் அதன் மதிப்பு இன்றைய கணக்கில் சிலபல லட்சங்களில் தான் இருக்கும்.. நிமிர்ந்து அவரை பார்த்தவள் “இப்போ எதுக்கு மாமா.. வேண்டாமே.. உங்ககிட்டேயே இருக்கட்டும்.. அப்புறம் வாங்கிக்கறேன்..” என்று தயக்கமாகவே கூற

                      “இதையெல்லாம் இதுக்கு மேல என்னால பாதுகாக்க முடியாதுடா.. இதுக்கு உரிமைப்பட்டவை நீதான்.. உன்கிட்ட சேர்த்திட்டா என் பொறுப்பு முடிஞ்சிடும் வாங்கிக்கோ..” என்று அவர் கையை இறக்காமல் நிற்க, ரகு “அப்பா சொல்றாங்க ல வாங்கிக்கோ..” என்று தேவாவிடம் கூற, பார்வதியும் அவளை “வாங்கு” என்பது போல் பார்வையால் மிரட்ட

                         தயக்கத்தோடு வாங்கி கொண்டாள் அவள்..  ரகு அவளின் கையை பிடித்துக் கொண்டவன் எதிரில் நின்றிருந்த தன் தந்தை,சித்தப்பா, அன்னை என்று மூவரின் காலிலும் ஒரே நேரத்தில் விழுந்து எழ, முத்து மாணிக்கம் நெற்றியில் விபூதி வைத்து ஆசிர்வதித்தார் அவர்களை.

                         “போய் இந்த நகையெல்லாம் போட்டுட்டு சீக்கிரமா கீழ இறங்கி வா..” என்று மெலிய குரலில் அவளிடம் கூறிய பார்வதி, வானதியை உடன் அனுப்ப அடுத்த அரைமணி நேரத்தில் கோவிலுக்கு புறப்பட்டு இருந்தனர் அனைவரும்.

                   

                       

Advertisement