Advertisement

காதல் தருவாயா காரிகையே 09

                             ரகு விழி எடுக்காமல் தேவாவை பார்த்து நிற்க, தயங்காமல் அவன் பார்வையை எதிர்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். அவள் பார்வையை கண்டு முறைத்தவன் வானதியை ஒரு பார்வை பார்க்கவும் அவள் ஓடியே விட்டாள்.

                         தேவா மெதுவாக எழுந்து கொண்டவள் தன் அறையை நோக்கி நடக்க, சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவன் யாருமில்லாமல் போகவும் அவளை தன் கைகளில் தூக்கி கொண்டான் மீண்டும். தேவா சட்டென அவன் தூக்கியதில் அதிர்ந்தாலும், கடுப்புடன் “என்னை கீழே விடுங்க..” என்று மெல்லிய குரலில் கூற

                        “அதான் உன் வீட்டுக்கு கிளம்பிட்டியே. இன்னிக்கு ஒரு நாளைக்கு தூக்கி வச்சிருக்கேன்..” என்று கூறிவிட்டு அவன் போக்கில் நடந்து செல்ல

                         “என்னை போகாத ன்னு சொல்லாம, இது என்ன பேசுறான் இவன்..” என்று யோசித்துக் கொண்டிருந்தாள் அவள். அவன் அடிக்கும் கூத்தில் “இவன் பைத்தியமா இல்ல நானா” என்றுவேறு சந்தேகம் வந்துவிட, அமைதியாகவே இருந்தாள்.

                        தன் அறையின் கட்டிலில் அவளை இறக்கி விட்டவன் தானும் படுத்து கண்களை மூடிக் கொள்ள “உங்களை ஒன்னு கேட்கட்டுமா..” என்று மென்மையாகவே வினவினாள் தேவா.

                      அவன் என்ன என்பது போல் பார்க்க “உங்க அப்பாவை பேசினதும் உங்க சித்தப்பாவுக்கு அவ்ளோ கோபம் வருது… உங்க அம்மாவை ஏன் பேசினாங்க ன்னு கேட்டதுக்கே உங்க அண்ணன் மாமனார்கிட்ட சண்டைக்கு நிற்கிறார்..

                         “என் அப்பாவை பத்தி பேசும்போது எனக்கும் அப்படித்தானே இருக்கும்… நான் பேசினது மட்டும் எப்படி தப்பு ஆகும்??” என்று கண்களை உருட்டி அவள் கேட்க, அவள் வார்த்தைகள் அவன் மண்டையில் ஏறியதோ இல்லையோ அவளின் கருவிழி அசைவுகள் அழுத்தமாக மனதில் பதிந்தது.

                         அவன் பதில் சொல்லாமல் அமைதியாக பார்க்கவும், “அதானே வாயை திறக்கவே மாட்டான்..” என்று நினைத்துக் கொண்டு தேவா திரும்பிவிட,

                         “ஏய்.. ” என்று அவளை அழைத்திருந்தான் ரகு.

                      “என் பேரு ஏய் இல்ல… தேவா.. தேவநந்தனா.. ” என்று அவள் அழுத்தமாக கூற

                   புருவம் உயர்த்தி அவளை பார்த்தவன் “தேவநந்தனா..” என்று அவளை போலவே கூறி “பதில் வேணாமா தேவநந்தனா..” என்று கேட்க

                    அவள் அமைதியாக அவனையே பார்த்திருக்கவும் “நீ பேசினது தப்பு ன்னு நான் எப்போ சொன்னேன்..” என்று கேட்க

                    “அப்போ என்னை அடிக்க வந்திங்க..” என்று வேகமாக அவள் கேட்க

                  “உன்னை எதுக்கு அடிக்க வந்தேன்..” என்று ரகு கூர்மையாக கேட்க, தலையை குனிந்து கொண்டாள் அவள்.

                   “அது.. அவங்க அதுபோல தான் ஏதோ சொன்னாங்க.. நீங்க சண்டை போடவும் அந்த கோபத்துல சொல்லிட்டேன்.. சாரி..”என்றவள் “ஆனா அதுக்காக தான் நீங்க என்கிட்டே சண்டைக்கு வந்திங்க..” என்று அவள் குற்றம்சாட்ட

                      ரகுவுக்கு ஏதோ ஒரு ஈர்ப்புவிசை வேலை செய்தது அவ்விடத்தில். அவளை ஆழ்ந்து பார்த்தவன் “எதுக்காக சண்டை போட்டேன்..” என்று அவளையே கேட்க

                      “நான் உங்க அண்ணிகிட்ட சண்டை போட்டதுக்காக, அவங்களை அடிக்க போனதுக்காக..” என்று அவள் மீண்டும் கூறவும்

                     “நல்லா தெரியுமா உனக்கு… ” என்று கேட்டவன் ” இந்த வீடு பெரியவர்களை நீ மரியாதை இல்லாம பேசினா, அந்த இடத்திலேயே இழுத்து ரெண்டு அறை விட்ருவேன்.. ரூமுக்கு கூட்டிட்டு வந்து எல்லாம் பேசிட்டு இருக்கமாட்டேன்..”

                       “நீ அங்கே பேசினதுல எந்த தப்பும் இல்ல, அதனாலதான் அமைதியா உன்கூட நின்னேன்.. ஆனா அடிக்கப்போறது தப்பு. அவங்க பேசினா பதிலுக்கு பேசலாமே தவிர, கையை எல்லாம் நீட்டக்கூடாது.. அதுக்குதான் உன்கையை பிடிச்சேன்..” என்று ரகு கூற

                 அவன் சொல்லிய விஷயத்தை விட்டு விட்டவள் “உங்க வீட்டு பெரியவர்களை மரியாதை இல்லாம பேசினா அறைஞ்சிடுவீங்க.. ஆனா நீங்க மட்டும் என் அப்பாவை மரியாதை இல்லாம பேசுவீங்களா.. அப்போ உங்களை என்ன பண்ணலாம்..” என்று தேவா நிதானமாக கேட்டுவிட

                 “உன் அப்பா எனக்கு மாமன் முறை.. மாமன் மச்சான் அடிச்சுக்கறோம் ன்னு நினைச்சு விட்டுடு.. அதுதான் உனக்கு நல்லது.. உன் அப்பா எங்க குடும்பத்தை ரொம்பவே அசிங்கப்படுத்தி இருக்காரு.. இன்னிக்கு உன்னை கட்டிட்டு வந்ததால எல்லாம் உடனே மாறிடாது…”

                  “எனக்கு வாய் கொஞ்சம் நீளம்.. நீ ஒன்னு பேசினா நான் நாலு வார்த்தை பேசுவேன்.. உன் அப்பா விஷயமும் அப்படி ஆரம்பிச்சது தான்…” என்று ரகு கூறிவிட

                 “இது என்ன பதில்..” என்பது போலத்தான் அவனை பார்த்திருந்தாள் தேவா..

                  “நிஜமா உனக்கு என்ன பதில் சொல்றது ன்னு தெரில எனக்கு.. ஆனா உன் அப்பாவை எனக்கு எப்பவுமே பிடிக்காது…” என்று அழுத்தமாக மீண்டும் கூற

                     “அதுக்கு என்னை டார்ச்சர் பண்ணுவானா..” என்று கோபமாக வந்தது தேவாவுக்கு. அவள் அந்த கட்டிலில் இருந்து இறங்க முற்பட, அவள் கையை பிடித்து இழுத்தவன் அவளை தன் மீது சாய்த்துக் கொண்டான்.

                  தேவா விலக முற்பட “கொஞ்ச நேரம் அமைதியா இருடி தேவநந்தனா..” என்று ரகு அவளை தனக்குள் வளைக்க, “என்ன பண்றிங்க நீங்க, என்னை விடுங்க..” என்று அவள் கோபமாக கூற

                   “ஏன் பிடிக்கலையா தேவநந்தனாவுக்கு..” என்று கிசுகிசுப்பாக வந்தது குரல்.

                   “உங்களுக்கு என்னை பிடிக்காது இல்ல.. அப்புறம் ஏன் இப்படி நடந்துக்கறிங்க..விடுங்க” என்றவள் விலக பார்க்க

                  “நான் சொன்னேனா உன்கிட்ட..” என்று ரகு அவளை விடாமல் கேட்க

                 “என்னால நிம்மதி போச்சு ன்னு சொன்னிங்கள்ல, உங்க தலையில என்னை கட்டி வச்சுட்டாங்க ன்னு சொன்னிங்க..” என்று குற்றம் சாட்டியவள் “என்னை விடுங்க..” என்று விலக முற்பட

                   “கட்டிக்கிட்டு வந்தவ சண்டை பிடிச்சுட்டே இருந்தா வேற எப்படி சொல்வாங்க..” என்று அவன் கேட்க

                      அடப்பாவி என்று நினைத்துக் கொண்டவள் துள்ளி கொண்டு விலகி அமர்ந்து விட்டாள். ரகு வடை போச்சே என்பது பார்க்க “நான் சண்டை போட்டேனா உங்ககிட்ட..நீங்கதான் எப்பவும் என்னை ஏதாச்சும் சொல்லிட்டே இருந்திங்க.. எந்த தப்புமே செய்யாம, உங்ககிட்ட பேச்சு வாங்கினேன் நான்..” என்று கூறும்போதே கண்ணீர் வந்துவிட

                         “இப்போ எதுக்கு அழற..” என்று அதட்டினான் ரகு. அவள் அப்படியே அமர்ந்திருக்க “ஏய் உன்னை கட்டிக்கிட்டு வந்துட்டா உடனே கொஞ்சிகிட்டே உன் பின்னாடி சுத்திட்டு இருக்கணுமா.. என்னை பண்ணேன் உன்னை.. ” என்று ரகு மீண்டும் எகிற ஆரம்பிக்க

                         தேவா வாயை திறக்கவில்லை. அவள் அமைதியாக கண்களை துடைத்துக் கொள்ள “ஏதாவது பேசு.. ” என்று ரகு மீண்டும் கேட்கவும்

                        “எனக்கு என்ன பேசறது ன்னு தெரியல.. என்ன பேசினா சண்டை வரும் ன்னு யோசிச்சு யோசிச்சே பேச முடியல என்னால.. கல்யாணமாகி முழுசா ஒரு வாரம் கூட ஆகல, அதுக்குள்ள இத்தனை சண்டை…”

                        “எனக்கு பயமா இருக்கு.. இப்படி சண்டை போட்டே வாழ்க்கை போய்டுமோ னு” என்றவள் கண்களில் கண்ணீர் வழிய, ரகுவின் கை தானாக அவள் கண்களை துடைத்துவிட

                         “உனக்கு வாய் இருக்குல்ல.. நான் சண்டை போட்டா பதிலுக்கு நீயும் பேசு.. இப்படி அழணும்ன்னு அவசியம் இல்ல… அதோட என்ன சண்டை போட்டாலும் இங்கே இருந்து கிளம்புறதை பத்தி யோசிக்காத..” என்றவன் “இங்கே வா..” என்று அவளை அணைத்து கொள்ள, லேசாக அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள் தேவா.

                        “உனக்கு இந்த வீட்டை பத்தி நிறைய விஷயங்கள் தெரியாது நந்தனா.. நான் இங்கேயே இருக்கேன் இல்லையா.. சோ, எனக்குள்ள சில விஷயங்கள் எப்பவும் தோணிட்டே இருக்கும்.. எங்க அண்ணியை பார்த்தே பொண்டாட்டிக்கு எப்படி எல்லாம் இடம் கொடுக்க கூடாது ன்னு யோசிச்சு வச்சுக்கிட்டவன் நான்.

                       “சந்திரன் என்கூட பிறந்தவன் தான். ஆனா அவன் மட்டும் ஆரம்பத்திலேயே கொஞ்சம் அடக்கி வச்சிருந்தா என் அண்ணி இந்த அளவுக்கு வந்திருக்க மாட்டாங்க.. வீட்ல பெரியவர்களை மதிக்காம, யாரோடயும் ஒட்டாம, சந்திரன் மட்டும் போதும் ங்கிற மைண்ட்செட் தான் அவங்களுக்கு..

                       “எனக்கு வர்றவ அப்படி இருக்க கூடாது ன்னே பெருசா கல்யாணத்தை பத்தி யோசிக்காம இருந்தேன் நான்.. அப்போதான் உன் பாட்டி உன்னை கட்டி வச்சுட்டாங்க.. ஆனா எந்த நம்பிக்கையில்லா கொடுத்தாங்க ன்னு தான் இதுவரைக்கும் புரியவே இல்ல எனக்கு..”

                      “எங்க அம்மாவுக்கு சந்திரன், நான், வானதி தான் பிள்ளைங்க.. ஆனா அவங்க எப்பவுமே அப்படி பார்த்தது இல்ல.. எங்க மூணு பேரையும் எப்படி பார்க்கிறார்களோ அப்படிதான் காவேரி, பிரசன்னாவையும் பார்ப்பாங்க…அப்பாவும் அப்படிதான்..

                       “ஏன் வேலு சித்தப்பா கூட எங்களை பிரிச்சு பார்க்கமாட்டாங்க.. ஆனா சங்கரி சித்தி எப்போதுமே காவேரி, பிரசன்னாவை ஒருபடி அதிகமா தான் பார்ப்பாங்க.. இப்போவும் இங்க எல்லாம் ஒண்ணா இருக்கவும், பிரசன்னா சின்னவனா இருக்கவும் தான் அமைதியா இருக்காங்க…

                       “பிரசன்னா கொஞ்சம் வளர்ந்து இருந்தா, எப்பவோ சொத்தை பிரிச்சு கேட்டு இருப்பாங்க… அவங்க குணமே இதுதான்.. அம்மாக்கு புரிஞ்சாலும் பெருசா எடுத்துக்க மாட்டாங்க.. காவேரியையும், பிரசன்னாவையும் எங்களை போலத்தான் நினைப்பாங்க.. பிரசன்னா, காவேரி கூட அப்படிதான்…

                        “எனக்கு வர போறவ என் சித்தி மாதிரியோ, இல்ல என் அண்ணி மாதிரியோ இருந்துட்டா என் நிலைமை என்ன ஆகுறது.. என்னை விட்டுட்டாலும் என் அம்மாவை யோசிச்சசு பாரு..

                         “ஏற்கனவே சந்திரன் இப்படி மாறிப்போனதுல அவங்களுக்கு ரொம்ப வருத்தம்.. அவன் சரியா பேசறது கூட இல்லன்னு ரொம்ப கஷ்டப்படுவாங்க.. அடுத்ததா என் குடும்பம் என் அண்ணி மாதிரி நீயும் ஒட்டாம நின்னுட்டா இன்னும் எவ்ளோ நாளைக்கு எல்லாரும் ஒண்ணா இருக்க முடியும்..

                         “எனக்கு வர்றவ என் அம்மா இடத்துல இருந்து பார்க்கணும்ன்னு நினைக்கிறது தப்பில்லையே..” என்று அவன் கேட்க, அவன் பக்க நியாயங்கள் புரிந்தது தேவாவுக்கு. கூடவே அவன் நடந்து கொண்டதற்கான காரணமும் புரிந்தது..

                     ஆனால்  “இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்.. ” என்று தோன்ற, “என்னை பத்தி எதுவுமே தெரியாம, நீங்களே ஒரு முடிவுக்கு வந்து என்னையும் படுத்தி வைப்பிங்களா..” என்று அவள் கேட்க

                      “ஏன் தெரியாம.. பணக்காரி, அந்த திமிர்பிடிச்சவரோட பொண்ணு, உன் ஆபிஸை நீதான் பார்த்துட்டு இருக்க.. எல்லாமே ஓரளவு தெரியும்.. உண்மையை சொன்னா அதுதான் பயமே.. எப்படி இருப்பியா ன்னு” என்று அவன் வெளிப்படையாகவே கூற

                     “ஏன் பணக்காரியா இருந்தா என்ன..” என்று அப்போதும் விடாமல் அவள் கேட்டு வைக்க

                     “ம்ம்.. என் அண்ணன் உறவு விட்டு போய்டும் ன்னு அழுது ட்ராமா பண்ணி, அம்மாவை நம்ப வச்சு தான் சங்கரி சித்தி அவங்க அண்ணன் மகளை இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்தாங்க… ஆனா இன்னிக்கு அவங்க பேச்சை கேட்ட இல்ல, எங்க அம்மா ஏன் பேசுறாங்க ன்னு அந்தாள் கேட்கறாரு..”

                     “நீ என் அப்பாவோட தங்கச்சி பொண்ணு.. பணத்துலயே வளர்ந்தவ, அதோட உன் அப்பனோட குணம் கொஞ்சமாவது உனக்கு இருக்கும் ன்னு நானா நினைச்சதுல என்ன தப்பு..” என்று அவன் நியாயம் கேட்க

                     “உங்களுக்கு என் அப்பாவை இழுக்காம இருக்கவே முடியாதா??” என்று அவள் கேட்க

                    “நீ என் வழிக்கு வந்தா நான் ஏன் அந்தாளை இழுக்க போறேன்.. ” என்று சீண்டியவன் அணைப்பில் சற்றே அழுத்தத்தை கூட்ட “உங்க வழிக்கு வராம தான் இப்படி..” என்று சொல்ல வந்தவள் பாதியிலேயே வார்த்தைகளை முழுங்கி விட்டாள்.

                      ரகுநந்தனின் மற்றுமொரு பரிமாணம், இந்த அரைமணி நேர பேச்சுவார்த்தையில் புரிந்திருக்க, சற்றே பெருமையாய் கூட இருந்தது கணவனை எண்ணி.. ஆனால் தந்தையை புரிந்து கொள்ளாமல் அவன் பேசுவது தான் எங்கோ ஒரு இடத்தில வலித்தது.

                      இப்போதுதான் ஏதோ மனம்விட்டு பேசவே ஆரம்பித்து இருக்கிறான். இப்போது வாதம் செய்து அதை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்தவளாக அவன் வழியிலேயே செல்ல முடிவெடுத்தாள் தேவநந்தனா..

                       இவள் யோசனையில் இருக்கும்போது இடையில் அவன் கைகள் தன் ஊர்வலத்தை தொடங்கி இருக்க, அவன் கையை தடுத்தவள் அவன் கையை பிடித்துக் கொள்ள, சுலபமாக அவள் கையேடு சேர்த்து தன் கையையும் உயர்த்தியவர் அவள் தோள்பட்டையின் மீது கையை போட்டுக் கொள்ள, சரியாக அவள் முன்பக்க சேலைய உரசி கொண்டிருந்தது அவன் கை.

                         அவன் கையை இடுப்பிலே விட்டிருக்கலாம் என்று அவள் நொந்து கொள்ளும்போதே வலது கையை அவள் இடுப்பு சேலைக்குள் அவன் நுழைந்துவிட, அவன் விரல்கள் அவள் மென்மைகளை அளக்க தொடங்கி இருந்தது.

                       அவள் வயிற்றில் ஊர்ந்த விரல்கள் கூச்சத்தை கொடுக்க, அவன் கைகளில் நெளிந்தவள் அவன் கையை எடுத்துவிட, அவன் அழுத்தமாக மீண்டும் தீண்டவும் “அச்சோ. கூசுதுங்க..” என்று அவன்நெஞ்சிலே புதைந்து கொண்டாள்.

                               சிறிது நேர கொடுக்கல் வாங்கல்களுக்கு பின் அவன் அவளை விடுவிக்க, அவன் இதழ்கள் “நந்தனா..” என்று காதலாக மொழிந்து கொண்டிருந்தது..

                      அவனை ஆச்சர்யமாக பார்த்தவள் “தேவநந்தனா..” என்று திருத்த, “நந்தனா தான்…” என்று அழுத்தமாக முடித்து விட்டான் அவன். அவர்கள் அறைக்கு வந்து வெகுநேரம் ஆகி இருக்க, “நான் கடைக்கு கிளம்பனும்.. உன்னை ராத்திரிக்கு பார்த்துக்கறேன்..” என்றுவிட்டு கிளம்பினான் அவன்.

                        தேவாவுக்கு மனம் சற்றே அமைதியடைந்து இருக்க, கால்களின் வலி பெரிதாக தெரியவில்லை. மெல்ல கீழே இறங்கியவள் கூடத்தை எட்டிப்பார்க்க பார்வதி தனியே அமர்ந்திருந்தார். மெல்ல நடந்து அவர் அருகில் சென்று அமர்ந்தவள் “சாரி அத்தை..” என்று கூற

                      “நீ ஏன் சாரி சொல்ற.. என்ன தப்பு செஞ்ச..” என்று அவர் கேட்க

                    “வீட்டுக்கு போறேன் ன்னு சொன்னது தப்புதானே.. ” என்று அவள் கூறவும்

                  “உன் புருஷன் மன்னிப்பு கேட்க சொன்னானா..” என்று அடுத்த கேள்வியை கேட்டார் பார்வதி. அவள் தலையை ஆட்டி வேகமாக மறுக்க, சிரித்துக் கொண்டார் பார்வதி.

                    அப்போதும் அவள் சஞ்சனாவை அடிக்க கை ஓங்கியதற்கு மன்னிப்பு கேட்கவில்லை என்பதை அவர் குறித்துக் கொள்ள, மெச்சிக் கொண்டார் மருமகளை. அந்த நேரத்தில் சந்திரன் அங்கு வர அவன் கைகளில் குட்டி சஞ்சய்..

                      தேவாவை கண்டதும் அவன் மகிழ்ச்சியுடன் கையை நீட்ட, தேவாவுக்கும் ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் அவன் அன்னை என்ன செய்வாளோ என்று அவள் தயங்கி நிற்க, “அந்த பொண்ணுக்கு நீ வேண்டாவாம்டா.. விடு.. நம்ம ரூமுக்கு போயிடுவோம்..” என்று சந்திரன் குழந்தையிடம் பேச

                      “நான் தூக்கவா அத்தான்.. அக்கா..” என்று அவள் இழுக்க

                 

                      “அவ கேட்டா, என் அத்தை மகனோட மகன். நான் அப்படிதான் தூக்குவேன் ன்னு சொல்லிடு..” என்று அவன் சொல்லி கொடுக்க, முகம் நிறைந்த சிரிப்போடு பிள்ளையை வாங்கி கொண்டாள் தேவா..

                        வானதி அறையில் இருந்தவள் தேவாவுடன் வந்து சேர்ந்து கொள்ள, காலையில் நடந்த களேபரங்களின் கனம் மெதுவாக குறைய தொடங்கி இருந்தது அங்கே…

                    

                     

Advertisement