Advertisement

காதல் தருவாயா காரிகையே 08

 

                           தனக்கு முன்னால் நின்றிருந்த ரகுவை ஏறெடுத்தும்  பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேவா. அவன் உள்ளே நுழையும் நேரம் அவன் காலடியில் வந்து விழுந்த மொபைல் இப்போது அவன் கையில் இருக்க, அழுத்தமாக நின்றிருந்தான் அவன்.

 

                            தேவா இன்று அவனின் அழுத்தத்திற்கு படிவதாக இல்லை போலும். அவளும் உக்கிரமாகவே தான் இருந்தாள். ரகு அவளை பார்த்தவன் “ஊருக்கு கிளம்பியாச்சு போல..” என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் கேட்க

 

                              “ஆமா.. பிடிக்கலைன்னா கிளம்புன்னு சொன்னிங்கல.. நான் இப்போ சொல்றேன், எனக்கு பிடிக்கல… நான் கிளம்புறேன்” என்று விட ரகு ஓங்கி உதைத்ததில் அவளின் பெட்டி சற்று தூரமாக போய் விழுந்தது.

 

                               தேவா அதிர்ந்து அவனை பார்க்க “நான் சொல்லி போறதா இருந்தா அன்னைக்கே போயிருக்கணும்.. இப்போ உன் கொழுப்புக்கு நீ கிளம்பிட்டு என்னை கைகாட்டுவியா??” என்று கோபமாக அவன் கேட்க

 

                             “என்  கொழுப்புக்கு கிளம்புறேனா.. இவன் அண்ணி பேசினது சரி ன்னு சொல்றானா இவன்..” என்பது போல் பார்த்தவள் ‘எனக்கு இந்த வீட்ல இருக்க பிடிக்கல.. உங்களை காரணமா சொல்லுவேன் ன்னு நீங்க பயப்பட வேண்டாம்.. எனக்கு கொழுப்பு அதிகமா இருக்குன்னே உங்க வீட்ல சொல்லிட்டு நான் கிளம்புறேன்…” என்றவள் அவனை தாண்டி கொண்டு வெளியில் செல்ல முற்பட

 

                           அவள் கையை பிடித்து இழுத்து தனக்கு முன்னால் நிறுத்தியவன் “என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல.. உனக்கு கல்யாணம் அவ்ளோ ஈஸியா போச்சா.. கல்யாணம் பண்ணிட்டு வந்த மூணாவது நாளே பெட்டியை கட்டிட்டு நிற்பியா..” என்று அவன் முறைக்க

 

                          “கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தவளை வந்த ரெண்டாவது நாளே வீட்டை விட்டு கிளம்ப சொன்னிங்களே.. அப்போ தெரியலையா, இதெல்லாம்.. ” என்று அவளும் சரிக்கு சரியாக நிற்க,  அமைதியாக இருந்தவளா என்பது போல் அதிர்ந்து நின்றிருந்தான் ரகு.

 

                          “உங்ககிட்ட பேச எனக்கு எதுவுமே இல்ல.. இப்போகூட உங்க அண்ணி பேசினது தப்பே இல்லன்னு தான் சொல்விங்க நீங்க.. எனக்கு அதை கேட்க வேண்டாம். என் பாட்டி என்னை உங்க தலையில கட்டி வச்சது தப்புதான்.. அவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.. நீங்க உங்க வாழ்க்கையை நிம்மதியா வாழுங்க..” என்று கூறியவள் கூடவே

 

                          “அதான் உங்க அண்ணியோட தங்கச்சி தயாரா இருக்க போலயே… அவளை வேணாலும் கட்டிக்கோங்க.. எனக்கு எந்த பிரச்னையு..” என்று அவள் முடிக்கும் முன்னமே அவளை அடிக்க கை ஓங்கி இருந்தான் ரகு.

 

                          “ரகு..” என்று முத்துமாணிக்கமும், பார்வதியும் ஒரேகுரலில் கத்தி விட, அவர்களை அப்போதுதான் பார்த்தவன் சுதாரித்தவனாக கையை கீழிறக்கி கொண்டான். கண்களில் வழிந்த நீரோடு துடைக்கும் எண்ணம் கூட இல்லாமல் அப்படியே தேவா நிற்க, ரகு பெற்றவர்களை பார்க்கவே முடியாமல் தலையை குனிந்து கொண்டான்.

 

                        முத்து மாணிக்கம் வந்து மருமகளின் அருகில் நின்று கொண்டவர் “என்ன காரியம் பண்ற ரகு.. என் தங்கச்சி பொண்ணு அவ, உன் பொண்டாட்டி எல்லாம் அதுக்கு பிறகு தான்.. என் முன்னாடியே அவளை அடிக்க கையை தூக்கிட்டு போவியா நீ..”  என்று கோபப்பட

 

                    பார்வதி அமைதியாக மகனை முறைத்து கொண்டிருந்தார். வெளியில் கிடந்த தேவாவின் பெட்டியும் அவள் கண்ணில்பட, மனம் விட்டு போனது.. பெரியவர்கள் பிரச்சனையை மனதில் வைத்து இவன் தன் வாழ்வை கெடுத்துக் கொள்கிறானே.. என்று ஆதங்கம் தான் வந்தது அந்த தாய்க்கு.

 

                    ரகு பதில் எதுவும் பேசாமல் நிற்க “நான் எங்க வீட்டுக்கு போறேன் மாமா.. எனக்கு என் பாட்டியை பார்க்கணும்.. என்னால இங்கே இருக்க முடியாது” என்று தேவா கண்ணில் கண்ணீரோடு கூறிவிட்டாள்.

 

                   முத்துமாணிக்கம் ரகுவை பார்க்க, அமைதியாகவே நின்றிருந்தான் அவன். பெற்றவர்கள் என்றாலும் அவர்களின் முன் இப்படி நிற்பது பிடிக்கவே இல்லை அவனுக்கு. இப்போதும் கோபம்தான் தேவாவின் மீது. அவள் போகிறேன் என்று கிளம்பி நிற்பது பிடிக்கவே இல்லை.

 

                   “போய்டுவாளா இவ..” என்ற எண்ணம்தான் இப்போதும்… எந்த இடத்திலும் இப்படி நின்றவன் கிடையாது ரகுநந்தன். அவன் இருக்கும் இடங்களில் அவனின் பேச்சு தான் முதன்மையாக இருக்கும்.. வீட்டிலும் கூட ரகு பேசினால் சரியாக இருக்கும் என்ற எண்ணம் தான் இதுவரைக்கும்.

 

                    ஆனால் இன்று பெற்றவர்கள் கண்டிக்கும் நிலையில் நின்றிருக்கும் தன்னை நினைத்தே ஆத்திரம் பெருகியது அவனுக்கு. எதிரில் நின்றிருந்த தேவாவின் மீதும் பெரிதாக கோபமெல்லாம் இல்லை அறைக்குள் வரும்வரை. அவள் பெட்டியை கட்டிக் கொண்டு நிற்கவும் தான் கோபம் தலைக்கேறி வார்த்தைகள் வந்துவிட்டது.

 

                  அதுவும் அமைதியாக இருப்பவள் இன்று எதிர்த்து பேச இன்னும் தூண்டிவிட்டது போலாக, இறுதியில் ஜனனியுடன் சேர்த்து பேச வந்த கோபத்திற்கு கையை உயர்த்தி இருந்தான். விட்டால் அடித்தும் இருப்பான் ஆனால் தாயும், தந்தையும் அந்த நேரத்தில் வந்து நிற்பார்கள் என்று கனவா கண்டான் அவன்.

 

                     அவன் யோசனையில் நின்றுவிட, பார்வதி மருமகளின் அருகில் வந்தவர் அவளை அழைத்து சென்று கட்டிலில் அமர்த்தி இருந்தார். வானதியும் அப்போது தான் அறைக்குள் நுழைய, தன் அண்ணியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

 

                     “அண்ணி மேல எந்த தப்பும் இல்லம்மா.. நாங்க ரெண்டு பெரும் தான் அங்கே இருந்தோம், பெரிய அண்ணிதான் தேவை இல்லாமல் மாமாவை பத்தி பேசினாங்க.. அண்ணி என்னன்னு கேட்கவும் இன்னும் அதிகமா அண்ணியையும் தப்பா பேசிட்டாங்க.. அண்ணி செஞ்சது தப்பே இல்ல..

 

                      “அந்த ஜனனியை நீங்க அண்ணனுக்கு பேசி முடிச்சிட்டது போல, பெரிய அண்ணி பேசிட்டாங்கமா..” என்று அவள் அழுகையுடன் கூற, தேவா குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.

 

                      பார்வதி தேவாவை தோளோடு அணைத்து கொள்ள, அவரின் தோளில் சாய்ந்து கொண்டவள் அப்படி ஒரு அழுகை.. எதை நினைத்து அழுவது என்று தெரியவில்லை அவளுக்கு. நேற்றுவரை இந்த திருமணம் சரியா? தவறா?? என்ற எண்ணத்தில் இருந்தவள் இன்று இந்த திருமணம் நடந்தே இருக்க வேண்டாம் என்று நினைக்க தொடங்கிவிட்டாள்.

 

                       அவள் அழுது கொண்டிருக்கும் போதே, வேலு அந்த அறைக்குள் வந்தவர் “என் மச்சானும், அவன் பொண்டாட்டியும் வந்திருக்காங்க அண்ணே.. கூடவே அந்த ஜனனி பொண்ணும் வந்து இருக்கு..சஞ்சனா போன் போட்டு ஏதோ சொல்லி இருக்கும் போல..” என்று அவர் சங்கடத்தோடு கூற

 

                         முத்துமாணிக்கம் மனைவியை ஒரு பார்வை பார்த்து கீழே இறங்க, வேலு அவரோடு சென்றார். ரகுவும் தந்தையின் பின்னால் செல்ல, பார்வதி மருமகளிடம் இப்போது வந்துவிடுவதாக கூறி விட்டு வெளியேற, வானதி மட்டுமே தன் அண்ணியுடன் இருந்தாள்.

 

                     தேவாவுக்கு கீழே என்ன நடக்கிறது என்று தெரிந்தே ஆக வேண்டும் என்பது போல் ஒரு அழுத்தம் கூடி போக, வானதியை அழைத்துக் கொண்டு கீழே வந்துவிட்டாள். அவள் கீழே வந்த நேரம் முன்கட்டில் சத்தம் அதிகமாக கேட்டுக் கொண்டிருக்க, அவள் அங்கு செல்வதற்கு முன்பாகவே வானதி அவள் கையை பிடித்துக் கொண்டவள் அவளை அவர்கள் கண்ணில்படாதவாறு ஒரு இடத்தில நிறுத்தி விட்டாள். தானும் தேவாவுடன் அவள் நின்று கொள்ள, அவர்களை அங்கே இருப்பவர்கள் பார்க்க முடியாமல் போனது.

 

                       இங்கே முற்றத்தில் சஞ்சனா திமிராக பார்த்துக் கொண்டு நிற்க, அவளின் அருகே அவள் அம்மா கனகாவும், அத்தை சங்கரியும் அமர்ந்திருந்தனர். ஜனனி கைகளில் இருந்த சஞ்சய் அழுது கொண்டே இருக்க அவனுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டு நின்றிருந்தாள் அவள்.

 

                          ஆனால் ரகு இறங்கி வந்த நேரமாக அவனை அடிப்பார்வையாக அவள் பார்த்துக் கொண்டு நிற்க, தூரத்தில் இருந்தாலும் அவள் பார்வையை கவனித்து விட்டாள் தேவா. முத்துமாணிக்கமும், வேலுமணிக்கமும் அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் சஞ்சனாவின் தந்தை சிதம்பரம் அமர்ந்திருந்தார்.

 

                    ராமச்சந்திரனும், ரகுவும் ஒரு ஓரம் நின்றிருக்க, சிதம்பரம் “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க சம்பந்தி நீங்க.. என் மகளை உங்க மகன் கூட வாழத்தான் இந்த வீட்டுக்கு அனுப்பி வச்சது.. நீங்க குடும்பமே சேர்ந்து அவளை அடிக்க பார்ப்பீங்களா.. நேத்து வந்தவ என் மகளை கையோங்கிட்டு வருவா…

 

 

                  “உங்க வீட்டம்மா அவளை என்னன்னு கேட்காம என் மகளை அடிப்பாங்களா.. அப்புறம் என் மகளுக்கு இந்த வீட்ல என்ன மரியாதை இருக்கும்..” என்று அவர் சற்று சத்தமாகவே பேச

 

                 “இங்கே பாரு சிதம்பரம்.. என் அண்ணன் முன்னாடி இப்படி குரலை உசத்தி பேசுற வேலையெல்லாம் வேண்டாம்.. என் அண்ணி உன் மகளை கண்டிச்சு இருக்காங்க ன்னா நிச்சயம் அவ தப்பு பண்ணி இருப்பா.. முதல்ல பெத்தவனா அது என்னன்னு விசாரி..” என்று வேலுவும் கோபமாக கூறிவிட்டார்.

 

                  “ஏன்.. சங்கரியும் அங்கே தானே இருந்திருக்கா.. என் மக தப்பா பேசி இருந்தா அவளை என் தங்கச்சியே கண்டிச்சு இருக்க போறா.. இவங்க ஏன் என் மக மேல கையை  வைக்கணும்..” என்று அவர் நியாயம் பேச

 

                   ரகு மிகவும் முயன்றே அமைதியாக நின்றிருந்தான். அவன் அன்னையை அந்த மனிதர் பேசி கொண்டிருக்க, வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை அவனால். அவன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நிற்க சந்திரனுக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லை போல.

 

                   தன் மாமனாரிடம் பேசாதவன் தன் அன்னையை நேராக பார்த்து “அதுதான் அவர் கேட்கறார் இல்ல.. சொல்லுங்கம்மா..” என்று விட்டவன் அன்னை நிமிர்ந்து அவனை பார்க்கவும்

 

                 “எதுக்கு அடிச்சீங்க ன்னு அவ அப்பா கேட்குறார் இல்ல.. என் மருமக நான் அடிச்சேன் ன்னு சொல்லுங்க.. அப்படி நீங்க எதுவும் பேசவோ, செய்யவோ கூடாது ன்னு சொன்னா கையோட கூட்டிட்டு போக சொல்லுங்க.. உங்களுக்கு கேட்க உரிமை இல்லன்னா அவ இந்த வீட்ல இருக்கவே தேவையில்ல..” என்றவன் தன் அன்னையின் அருகில் வந்து நிற்க, சஞ்சனா அதிர்ந்து போனவளாக தன் கணவனை பார்த்து நின்றாள்.

 

                 சிதம்பரம் “என்ன என்ன பேசுறீங்க மாப்பிள்ளை..” என்று கொதித்துக் கொண்டு எழ,

 

                  “என்ன..என்ன பேசிட்டேன்.. நீங்க பேசினதை விட ஒன்னும் அதிகமா பேசிடல.. இவங்க ஏன் பேசுறாங்க ன்னு கேட்கறீங்க…, என் அம்மா கேட்காம வேற யார் கேட்பா.. முதல்ல உன் மகளோட லட்சணம் என்னன்னு என் அம்மாகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க நீங்க.. அப்புறம் நியாயம் பேசலாம்..

 

                   “என் தம்பி பொண்டாட்டி, எங்க சொந்த அத்தைமக.. ரெண்டு நாள் முன்னாடி தாலி கட்டிட்டு இந்த வீட்டுக்கு வந்தவ.. அவளுக்கு சப்போர்ட் பண்ணி இவளை அடிக்கிற அளவுக்கு போயிருக்காங்க ன்னா, இவ அந்த அளவுக்கு ஏதோ பண்ணி இருக்கா ன்னு அர்த்தம். உங்க பொண்ணை விசாரிங்க முதல்ல..” என்று அழுத்தம் திருத்தமாக அவன் கூற

 

                      முத்துமாணிக்கம் அவனை தடுக்கப்பார்க்க, வேலு அவர் கைகளை பிடித்து கொண்டார். “அவன் சரியாதான் அண்ணே பேசுறான்.பேசட்டும்..” என்று அவர் அண்ணனை அடக்கிவிட

 

                      சிதம்பரம் “என்ன கேட்கணும்.. ஏன் கேட்கணும் என் மகளை அதான் உங்க நடவடிக்கையிலேயே தெரியுதே.. பணக்கார தங்கச்சி பொண்ணு மருமகளா வரவும் அவளுக்கு ஏத்திட்டு என் குடும்பத்தை அசிங்கப்படுத்திட்டு  இருக்கீங்களா.. அதெல்லாம் ஒரு பைசா கூட தேறாது..”

 

                       “அவ அப்பன் அவளை துரத்தி விட்டுட்டானாமே… அப்புறம் என்ன..அந்த ஒண்ணுமில்லாதவளுக்காக என் மகளை பேசுவீங்களா.. ஐம்பது பவுன் போட்டுட்டு இந்த வீட்டுக்கு வந்தவ என் மக.. எவளோ ஒருத்திக்காக..” என்று அவர் முடிப்பதற்குள்ளாக,

 

                      “இன்னொரு வார்த்தை என் பொண்டாட்டியை அவ இவ ன்னு சொன்ன, அடுத்து பேச வாய் இருக்காது..” என்று வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ரகு கிளம்ப

 

                       “என்னடா.. என்ன பண்ணிடுவ என்னை ..” என்று சிதம்பரமும் அவனுக்கு சரியாக நிற்க, எட்டி அவரின் சட்டையை பிடித்து விட்டிருந்தான் ரகு.

 

                      அவன் இருந்த வேகத்திற்கு என்னவாகி இருப்பாரோ.. அதற்குள் சந்திரன் அவரை பிடித்து இழுத்து தூர நிறுத்த அவர் சட்டையின் முதல் இரண்டு பட்டன்கள் தெறித்து எங்கோ விழுந்திருந்தது. சங்கரி இத்தனை நேரம் பேசாதவர் “என்ன மாமா.. எங்க அண்ணனை அசிங்கப்படுத்தவே கங்கணம் கட்டிட்டு இருக்கீங்களா..

 

                   “சின்ன பையன் அவரை அடிக்க போறான், நீங்களும் வேடிக்கை பார்த்திட்டு நிற்ப்பீங்களா..” என்று முத்துமாணிக்கத்திடம் கேட்க

 

                  “ஏன் இவ்ளோ நேரம் உன் அண்ணன் பேசும்போது அமைதியா தானே நின்ன.. இப்போ என்ன சத்தம் அதிகமா வருது.. குரல்வளையை நெரிச்சிடுவேன்.. அத்தனைக்கும் நீதான் மூலகாரணம்.. இப்போ நியாயம் கேட்கறியா..”

 

                “உன் அண்ணன் யாரடி, என் தங்கச்சி பொண்ணை பேச.. நாளைக்கு இந்த சொத்தை பங்கு போட்டா கூட, மூணு பாகம் தான். என் தங்கச்சிக்கு ஒரு பங்கு கொடுத்தே ஆகணும்.. இதுல அவ அப்பன் கொடுத்தா என்ன, கொடுக்காம போனா என்னடி..

 

                  “முதல்ல உன் அண்ணனுக்கும், இந்த விஷயத்துக்கும் என்ன சம்பந்தம்.. இது இந்த குடும்ப விஷயம்.. அதை நாங்க பார்த்துக்குவோம்.. வந்த வேலையை பார்த்துட்டு அவனை கிளம்ப சொல்லு முதல்ல..” என்று பொரிந்து தள்ளி விட்டார் வேலுமாணிக்கம்.

 

                    சிதம்பரத்தின் மனைவி கனகா “நல்ல மரியாதை அண்ணி.. ரொம்ப நல்ல மரியாதை கொடுத்திட்டீங்க.. உங்க பேச்சை கேட்டு என் மகளை இந்த வீட்டுக்கு அனுப்பினதுக்கு என் புருஷன் சட்டையை பிடிக்க வந்துட்டாங்க..

 

                   “என் சின்ன மகளோட வாழ்க்கையை ஏற்கனவே நாசம் பண்ணிட்டீங்க.. இப்போ பெரியவளையும் வாழா வெட்டியா என் வீட்டுக்கே அனுப்பி வச்சிடுங்க… ” என்று அவர் சங்கரியை உலுக்க

 

                   அப்போது தான் பார்வதி வாயை திறந்தார். “என்ன பேசுற கனகா.. யாரு யார் வாழ்க்கையை நாசம் பண்ணது. இதோ நிக்கிறான் பாரு என் மகன், அவனைக் கேட்டா தெரியும். உன் மகளை என் மருமகளா ஏத்துக்கறதா இந்த வீட்டுல இருந்து யாராவது உனக்கு வாக்கு கொடுத்தோமா…

 

                    “இல்ல என் மகன் ஏதும் உன் மக பின்னாடி சுத்தி அவ  மனசை களைச்சு விட்டுட்டானா.. என்ன அர்த்தத்துல நீ பேசுற.. என் சின்ன மருமக, தாயில்லாதவ.. எங்க வீடு பொண்ணு அவ.. அவ கொண்டுவந்துதான் இங்கே நிறைய போகுதா.. அவளை பத்தி என்னல்லாம் பேசி இருக்கா தெரியுமா உன் மக.. உன் நாத்தனார் தானே இவ.. இவகிட்ட கேளு சொல்லுவா..”

 

                     “எங்கே இருந்து அத்தனை வாய் வரும் ஒரு பொட்டப்பிள்ளைக்கு.. என் மக பேசி இருந்தாலும் அப்படிதான் அடிச்சு இருப்பேன்..” என்று அவர் பொறுமையாகவே பேச

 

                      சந்திரன் “ம்மா.. நீங்க ஏன் இவங்களுக்கு விளக்கம் சொல்லிட்டு இருக்கீங்க..” என்று தன் அன்னையிடம் கேட்டவன் “ஏய், கிளம்பு உன் அப்பன் வீட்டுக்கு.. எப்போ என் தம்பி மேல கையை வச்சாரோ, நீ தேவையில்லை எனக்கு.. கிளம்பு..” என்று முடித்துவிட, சஞ்சனாவின் முகம் அதிர்ச்சியில் வெளுத்துப்போனது அங்கே.

 

                 முத்துமாணிக்கம்தான் “என்ன பேசுற சந்திரா.. அமைதியா இரு.. பெரியவங்க பேசிக்கிறோம்..” என்று அவனை தூர நிறுத்தியவர் “இங்க பாரும்மா, உன் மகளுக்கு ஒரு குறையும் வராது இந்த வீட்ல.. ஆனா என் தங்கச்சி பொண்ணை பத்தி இனி ஒரு வார்த்தை இந்த பொண்ணு பேசக்கூடாது..அதையும் சொல்லி விட்டுட்டு போ..” என்று கனகாவிடம் கூற

 

                 சிதம்பரம் துள்ளிக் கொண்டு எழுந்தவர் மீண்டும் ஏதோ பேசபோக, வேலுமாணிக்கம் அவரை தடுப்பதற்குள் சங்கரி தன் அண்ணன் கையை பிடித்துக் கொண்டார். வேலுமாணிக்கம் சங்கரியை முறைத்தவர் “இனி ஒருவார்த்தை உன் அண்ணன் பேசினாலும், நீயும் உன் அண்னன் கூடவே கிளம்பிடு..” என்று கூறியவர்  “வாங்கண்ணே..” என்று தன் அண்ணனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.

 

                  ரகுவும், சந்திரனும் தந்தையை தொடர்ந்து சென்றுவிட, பார்வதி “நீ கிளம்பு கனகா.. நான் பார்த்துக்கறேன்..” என்று மட்டும் கூறிவிட்டு அவரும் உள்ளே சென்றுவிட, அந்த முற்றத்தில் சங்கரியின் அண்ணன் குடும்பமும், சங்கரியும், அவர் மருமகளும் மட்டுமே நின்றிருந்தனர்.

 

                  சங்கரி தன் அண்ணனிடம் “நீ கிளம்புண்ணே.. சஞ்சனாவை நான் பார்த்துக்கறேன்.. இவங்களை எப்படி வழிக்கு கொண்டு வர்றது ன்னு நான் பார்த்துக்கறேன்..” என்று சங்கரி கூற, கோபத்துடனே புறப்பட்டனர் அவர்கள்.

             அந்த முற்றத்தின் ஒருபுறம் நின்றிருந்த தேவாவுக்கு சற்றே மனம் அமைதியடைந்ததை போல இருந்தது. ரகு அந்த மனிதரின் சட்டையை பிடித்தது ஏதோ ஒரு விதத்தில் சற்றே ஆறுதலாக இருந்தது அவளுக்கு. கண்களை துடைத்துக் கொண்டவள் சக்தி மொத்தமும் வடிந்தவள் போல், அங்கேயே அந்த அறையின் ஒருபுறம் அமர்ந்துவிட்டாள்.

 

                   ரகு இப்போது பேசியது ஆறுதலாக இருந்தாலும் அவனோடு வாழ முடியுமா ?? என்ற எண்ணம் பூதமாக எழுந்து நிற்க, அவள் அடுத்து என்ன என்று யோசிக்கும்போதே ரகு அவள்முன்னால் வந்து நின்றிருந்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement