Advertisement

தேவா என்ன என்பது போல் புருவம் உயர்த்த “தெய்வமே.. ஏதாவது தப்பா பேசி இருந்த மன்னிச்சிடுங்க..” என்று கையெடுத்து பிரசன்னா கும்பிட, அவனை சந்தேகமாக பார்த்தாள் தேவா.

                        சார் பிகாம் இல்ல… அவருக்கு என்ன செஞ்சாலும் பாலன்ஸ் ஷீட் டால்லி ஆகாது. அதான் உங்களை ஐஸ் வைக்கிறான்..” என்று வானதி போட்டு கொடுக்க, அவள் மண்டையில் கொட்டினான் பிரசன்னா. இருவரும்  சிறுபிள்ளைகள் போல் அடித்துக் கொள்வதை பார்வையிட்டுக் கொண்டே அமர்ந்திருந்தவள் சட்டென “காவேரி எங்கே..நீங்க மட்டும் வந்திருக்கீங்க..” என்று கேட்க

                      “அவ பொதுவாவே எங்களோட ஓட்டமாட்டா அண்ணி. நாங்க ரெண்டு பெரும் தான் வாலுங்க.. இப்போ சித்தியும் ஏதோ சொல்லி இருப்பாங்க போல, அதான் உங்ககிட்ட தள்ளி இருக்கா..” என்று வானதி தயங்கி கொண்டே கூற, அவள் கூறாமல் விட்டதும் புரிந்தது தேவாவுக்கு.

                      “உங்களை எதுவும் சொல்லமாட்டாங்களா..” என்று அவள் கேட்க

                      “என்னை சொல்ல அம்மா விடமாட்டாங்க, இவன்கிட்ட சொன்னாலும் கேட்கமாட்டான்.. சோ சொல்லமாட்டாங்க..” என்று அவள் சிரிக்க, தேவாவும் சிரித்துக் கொண்டே அவர்களுடன் அமர்ந்திருந்தாள்.

                         அன்றைய பொழுது அவர்களுடனே கழிய மதிய உணவுக்கு தான் கீழே இறங்கினர் இருவரும். ரகு மதியம் உணவு உண்ண வந்தவன்  தேவாவை பார்க்காமலே கிளம்பி விட்டான்.

                           அவன் மீண்டும் வயலுக்கு செல்லும்போது அவனுக்கு எதிரில் நடந்து வந்து கொண்டிருந்தாள் ஜனனி. ரகுவை கண்டுவிட்டவள் சாலையின் குறுக்கே வர, வண்டியை ஓரமாக நிறுத்தி இருந்தான் ரகு. அவன் ஜனனியை முறைக்க

                         “ஏன் அத்தான் இப்படி பண்ணீங்க… ஏன் எனக்கு இப்படி ஒரு துரோகம் பண்ணீங்க..” என்று அவள் கோபமாக கேட்க, இறுதியில் குரல் கண்ணீரில் நனைந்திருந்தது.

                        “என்ன சொல்ற ஜனனி.. என்ன துரோகம் பண்ணேன் நான், எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம் பேசுற..” என்று அமைதியாகவே கேட்க

                          “நீங்க செஞ்சதுக்கு பேர் துரோகம் இல்லாம என்ன அத்தான்.. உங்களுக்கு தெரியாது நான் உங்களை விரும்புறது??” என்று அவள் கூர்மையாக பார்த்து நிற்க

                           “நான் இதுவரைக்கும் உன்னை விரும்புறதா சொல்லி இருக்கேனா..” என்று ரகுவும் கேட்டுவிட்டான்.

                         “சொன்னா தான் புரியுமா அத்தான்.., உங்களுக்கு நான் உங்களை பார்க்கிறது தெரியும் தானே.. உங்களுக்கு பிடிக்கலைன்னா பிடிக்கல என் பின்னாடி வராத ன்னு அப்போவே சொல்லி இருக்கலாம் இல்ல.”

                         “உன்கிட்ட ஏற்கனவே நிறைய பேசிட்டேன் ஜனனி.. உங்க அக்கா ஒருத்தவங்களை வச்சிட்டே எங்களால சமாளிக்க முடியல.. இதுல உன்னையும் கூட்டிட்டு வர நாங்க நினைப்போமா..

                         “நீ சின்னப்பொண்ணு ன்னு பொறுமையா சொல்லி பார்த்தேன்.. நீ கேட்கவே இல்ல கண்டுக்காம விட்டா நீயே சரியாகிடுவ ன்னு நினைச்சா நீ இப்போ என்னையே குறை சொல்வியா..” என்று ரகு முறைக்க

                         “உங்களுக்கு என்னை பத்தி தெரியாதா அத்தான், நீங்களும் பெரியவர்களை போல அவளை வச்சு என்னை எடை போட்டிங்களா..” என்றவளுக்கு கண்களில் கண்ணீர் வழிந்து விட, இதேதடா வம்பு என்று நின்றுவிட்டான் ரகு.

                         “இங்கே பாரு.. நான் எப்பவும் உன்னை விரும்பினதோ, கட்டிக்க நினைச்சதோ இல்ல… நீயா ஏதாவது ஒன்னை நினைச்சுட்டு, எல்லாரையும் சங்கடப்படுத்திட்டு இருக்காத..அதோட இப்படி ரோட்ல வழி மறுக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத..” என்று கோபமாக கூறியவன் வண்டியை உதைக்க

                          “பணம் வந்தா மனுஷங்க மாறிடுவாங்க ன்னு கேள்வி பட்டு இருக்கேன் அத்தான். இன்னிக்கு கண்முன்னாடி பார்த்துட்டேன். என் ரகு அத்தான் இப்படி ன்னு நான் நினைக்கவே இல்ல.. ” என்று அழுது கொண்டே கூறியவள் நிற்காமல் சென்றுவிட, ரகுவுக்கு தான் தலைவேதனையாக போனது.

                           ஏற்கனவே கட்டிக் கொண்டவளை கண்ணீர் விட வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. இதில் இவள் வேற… என்று தலையிலடித்துக் கொண்டு அவன் அங்கிருந்து புறப்பட்டான்.

                           இங்கு வீட்டிலோ அறையிலேயே அடைந்து கிடப்பது ஏதோ போலாக, மதியத்திற்கு மேல் வானதியுடன் கீழே இறங்கி விட்டாள் தேவா. வீட்டின் பின்கட்டில் இருந்த திண்ணையில் அமர்ந்து கொண்டு இருவரும் பேசிக் கொண்டிருக்க, அந்த நேரம் தான் அங்கு வந்தார் சங்கரி.

                      வானதியை தேவாவுடன் கண்டவர் அவளை தீயாக முறைத்துவிட்டு கோடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை எடுத்து கொண்டிருக்க, அவர் பின்னாலேயே சஞ்சனாவும் அங்கு வந்து சேர்ந்தாள். வானதியை கண்டவள், தன் அத்தையிடம் “அது எப்படித்தான் அடுத்தவங்க பொருளை எடுத்து வச்சிக்கிட்டு நிம்மதியா இருக்க முடியுதோ சிலரால..இப்படியும் சில ஜென்மங்க அத்தை..” என்று கூறிவிட

                   தேவாவுக்கு அவளின் பேச்சு புரியவே இல்லை. யாரையோ சொல்வதாக நினைத்து அவள் கண்டுகொள்ளாமல் இருக்க “என்ன இருந்து என்ன பிரயோஜனம், கடைசியில என் தங்கச்சி வாழ்க்கையை பறிச்சுக்கிட்டு நிற்க வச்சிருக்கான் பாருங்க கடவுள்.. அவனுக்கு தெரியும் யாரை எங்கே வைக்கணும்ன்னு..” என்று மேலும் அவள் பேச

                         வானதி கொதித்து போனவளாக “பெரிய அண்ணி.. ஏன் தேவையில்லாதது எல்லாம் பேசிட்டு இருக்கீங்க..நீங்க எது பேசுறத இருந்தாலும் அம்மா இருக்கும்போது பேசணும்.. இப்படி அவங்க இல்லாதப்போ ஏன் பேசிட்டு இருக்கீங்க..” என்று சட்டென கேட்டுவிட

                          சஞ்சனாவின் கோபம் மண்டைக்கேறியது. “ஏய்.. நீயெல்லாம் ஒரு ஆளுன்னு என்னை எதிர்த்து பேசுறியா.. என்ன பணக்காரியை பார்க்கவும் அவளுக்கு ஜால்றா தட்ட கிளம்பிட்டியா.. அதெல்லாம் ஒன்னும் தேறாது, அவ அப்பன் அவளை தண்ணி தெளிச்சு விட்டுட்டானாம்..” என்றவள் மேலே என்ன பேசி இருப்பாளோ..

                        தேவா “வாயை மூடுறீங்களா.. ” என்று கத்தி இருந்தாள்.

              சஞ்சனா நிறுத்தி அவளை பார்க்க “என் அப்பாவை பத்தி பேசுற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தா..யாருன்னு நெனைச்சு அவரை பத்தி பேசிட்டு இருக்கீங்க நீங்க, இன்னும் ஒரு வார்த்தை பேசினீங்க..பேசிப்பாரு.. அப்புறம் தெரியும்..” என்று முகம் சிவந்து போகுமளவுக்கு கத்தி விட்டாள் தேவா.

                 சஞ்சனாவுக்கு லேசான பயம் வந்தாலும் “ஏன் பேசினா என்ன, என்ன பண்ணுவ.. உன் அப்பன் யாரா இருந்தாலும், உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க துப்பில்லாம தானே என் தங்கச்சி வாழ்க்கையை நாசம் பண்ணி இருக்கீங்க.. உனக்கு தெரியுமா?? என் தங்கச்சி தான் இந்த வீட்டுக்கு மருமகளா வர்றதா இருந்துச்சு.

                  “எல்லாமே பேசி முடிச்ச நேரத்துலதான் உன்னால, உன்னால அவள் வாழ்க்கை நாசமாகிடுச்சு.. இதுக்கெல்லாம் நீயும் உன் அப்பனும் தானே காரணம்.. நான் உன்னைப்பத்தி பேசக்கூடாதா.. உன் வண்டவாளம் எல்லாம் தெரிஞ்சு தான் அந்த மாப்பிள்ளையும் ஓடிட்டான் போல.” என்றவள் “உன் அப்பன் யோக்கியதை என்னண்ணு எங்களுக்கு தெரியாது பொண்டாட்டி செத்த ஆறு மாசத்துலயே அடுத்தவளை கட்டிக்கிட்டவன்..” என்றவள் அதற்கு மேல் என்ன பேசி இருப்பாளோ அதற்குள் அவளை நோக்கி கையை உயர்த்தி இருந்தாள் தேவா.

                      அவள் இருந்த வேகத்திற்கு அடித்திருந்தால் கையில் இருந்த குழந்தையுடன் அருகில் இருந்த அடிக்கல்லில் விழுந்து வைத்திருப்பாள் சஞ்சனா. ரகு தேவாவின் கையை பின்னாலிருந்து பிடித்து இழுத்திருக்க, தேவா வைக்காமல் விட்ட அறையை பார்வதி கொடுத்திருந்தார் சஞ்சனாவுக்கு.

                     ரகுவின் கைப்பிடியில் இருந்த தேவா விடாமல் திமிர, ரகு அவளை சுலபமாக அடக்கியவன் “ஏய் அமைதியா இரு.. இதென்ன பழக்கம்..” என்று அதட்ட

                    அவன் குரலில் அடக்கமுடியாத அளவுக்கு ஆத்திரம் வர “மரியாதையா என் கையை விடுங்க..இல்ல..” என்று மிரட்டியவள் அவன் பிடி லேசாக இளகவும் கையை உதறி கொண்டு, சஞ்சனாவை பார்த்தவள் “உனக்கெல்லாம் என் அப்பாவை பத்தி பேச தகுதியே இல்ல.. யாரும் பிச்சையா போட்டோ, இல்ல வேற ஒருத்தியோட வாழ்க்கையை பங்கு போட்டோ வாழற தலையெழுத்து எனக்கு இல்ல..

                    “நான் குணசேகரன் பொண்ணு.. என்னை கைநீட்டி பேசக்கூட, நீ ஒர்த் இல்ல.. இனி ஒருமுறை நீ என்னைப்பத்தியோ என் அப்பாவை பத்தியோ ஏதாவது பேசின.. உன்னை கொன்னுட்டு தான் அடுத்த வேலையே..” என்றவள் நிற்காமல் உள்ளே சென்று விட்டாள்.

                   காலில் வலி உயிர் போனாலும் கண்டுகொள்ளாமல் நிற்காமல் நடந்தவள் தன்னறைக்கு வந்துவிட்டாள். தான் எடுத்து வந்திருந்த கேசில் வெளியில் கிடந்த தன் உடைகளை எடுத்து போட்டவள், அந்த கேஸை நகர்த்தி வைத்துவிட்டு தன் பாட்டிக்கு அழைக்க, அழைப்பை ஏற்கவில்லை சுந்தராம்பாள்.

                  வந்த கோபத்தில் தன் அலைபேசியை அவள் விட்டெறிய எதிரில் இருந்த சுவரில் பட்டு தெறித்தது அந்த அலைபேசி. அதன் திரை நொறுங்கி சரியாக உள்ளே நுழைந்து கொண்டிருந்த ரகுவின் காலடியில் விழுந்து உயிரை விட்டிருந்தது அது.

Advertisement