Advertisement

காதல் தருவாயா காரிகையே 07

                       ரகுவின் அறைக்கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தாள் தேவா. பார்வதி தண்ணீரை தொட்டு அவள் கண்களை ஒத்தி எடுக்க, மெதுவாக கண்விழித்து பார்த்தாள். வலியில் முகம் சுருங்க அவள் கண்களை மூடிக் கொள்ள, பின்தலையிலும், தோள்பட்டையிலும் வலி இருந்தது.

                        பார்வதியை கண்டவள் எழுந்து கொள்ள பார்க்க, கால்களை அசைக்கவே முடியவில்லை அவளால். கணுக்காலில் கீழ்ப்பகுதியில் தசை பிரண்டு இருக்க, சுளுக்கி கொண்டது போல் வலித்தது. வலியில் கண்கள் கலங்கி போக, பார்வதி தான் பதறி போனார்.

                        “என்னடா.. என்ன செய்யுது ரொம்ப வலிக்குதா..” என்று கேட்க

                       “கால்.. கால் வலிக்குது அத்தை. அசைக்கவே முடியல..” என்றவள் கால்களை பிடித்துக் கொள்ள, பார்வதி அருகில் நின்றிருந்த ரகுவைத் தான் முறைத்தார். உன்னாலதான் என்று நேரடியாகவே குற்றம் சுமத்தியது அவர் பார்வை.

                         தேவா கண்களை இறுக மூடி வலியை பொறுத்துக் கொள்ள, ரகு அவளின்  வந்து அமர்ந்தான். தேவா கண்களை மூடி இருந்தவள், கால்களை அழுத்தமாக தீண்டிய உணர்வில் கண்களை திறக்க, அவள் வலது காலை அழுத்தமாக பற்றி இருந்தான் ரகு.

                        அவள் பதறி போனவளாக காலை விலக்கி கொள்ள பார்க்க, அவன் பிடி அத்தனை அழுத்தமாக இருந்தது. தேவா அதிர்ந்து அவனை பார்க்கும்போதே, “அவளை பிடிச்சுக்கோம்மா..” என்றவன் அவள் என்ன ஏது என்று யோசிக்கும் முன்னமே அவள் பாதத்தை பற்றி, அழுத்தமாக நீவிவிட, வலி உயிர் போனது.

                         “அம்மா.. ” என்று கண்களை மூடிக் கொண்டு அவள் கத்திவிட, பார்வதி அவளை அணைத்தது போல் பிடித்து கொண்டிருந்தார். சில நொடிகள் வலிக்க நீவியவன் அவள் கால்களை முன்னும் பின்னுமாக திருப்பி உடைத்து, சொடுக்கெடுக்க கண்களில் கண்ணீர் வழிந்து விட்டிருந்தது தேவாவுக்கு.

                        பார்வதி “சரியாகிடும்.. சரியாகிடும்டா.. அவ்ளோதான், ஒண்ணுமில்ல பாரு.. வலி குறைஞ்சிடும் தேவாம்மா..” என்று அவளை கொஞ்சலாக சமாதானம் செய்தவர் அவள் அழுகை சிறிது மட்டுப்படவும், “எதுக்கு தனியா மேல வந்த தேவா… என்னை கூப்பிட வேண்டியது தானே..” என்று கேட்க

                       “இல்ல.. நானே வந்திடலாம் ன்னு நினைச்சேன் அத்தை.. ஏதோ கால்ல ஏறின மாதிரி இருந்தது, சரியாத் தெரியல.. பயத்துல கீழே விழுந்துட்டேன்..” என்று அவள் தயங்கி கொண்டே கூற, ரகுவுக்கு புரிந்தது. தன்னை கூப்பிட விரும்பாமல் அவளையே காயப்படுத்திக் கொண்டுள்ளாள் என்பது.

                      அன்னையின் முன் எதுவும் பேச விரும்பாதவனாக, அவன் கையை கட்டிக் கொண்டு நிற்க, பார்வதி மேலும் சில நிமிடங்கள் அவளுடன் இருந்தார். தேவாவின் கண்கள் தூக்கத்தில் சொருக, அவளை படுத்து கொள்ள சொல்லிவிட்டு அவர் கீழே இறங்கிவிட்டார்.

                      அவர் கீழே இறங்கியதும், ரகு படுக்கையில் அமர்ந்து கொள்ள, தேவா தன்னிடத்தில் இருந்து மெல்ல எழ முயற்சித்து காலை கீழே வைக்க, “ஏய் என்ன பண்ற..” என்று சத்தமாக அதட்டிவிட்டான் ரகு. அவள் பயந்து போனவளாக திரும்பி பார்க்க, “காலை இப்போதான் நீவி விட்டிருக்கேன்.. ரெண்டு நாளைக்கு கால்ல அழுத்தம் கொடுக்க கூடாது.. ” என்று அவன் கண்டிப்புடன் கூற

                      தன் நிலையை கசப்புடன் நினைத்துக் கொண்டவள் கட்டிலில் படுத்து கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள். மூடிய விழிகளில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, அவனுக்கு முதுகு காட்டி படுத்திருந்ததால் கண்களை துடைக்க கூட முற்படவில்லை. அசையாமல் அவள் படுத்திருக்க, திடீரென அந்தரத்தில் பறப்பது போன்ற உணர்வு.

                      சட்டென கண்களை திறந்து பார்க்க, ரகு அவளை கைகளில் தூக்கி கொண்டிருந்தான். அவள் என்ன செய்கிறான் இவன்?? என்று பார்த்திருக்கும்போதே அவளை குளியலறை வாசலில் இறக்கி விட்டவன் “காலை அழுத்தமா ஊனாம பார்த்துக்கோ..” என்று கூறிவிட

                       குளியலறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டவள் இருநிமிடங்கள் அப்படியே நின்றுவிட்டாள். பைத்தியம் பிடித்து விடுமோ என்றும் தோன்ற, தன் நிலை நித்தம் அச்சப்படுத்திக் கொண்டிருந்தது பெண்ணவளை.

                      வெளியில் நிற்பவன் நினைவு வரவும் வேகமாக தன் வேலையை முடித்துக் கொண்டு அவள் கதவை திறக்க, அவளை மீண்டும் கொண்டு வந்து கட்டிலில் இறக்கிவிட்டான் ரகு. நேற்றிலிருந்து இது மூன்றாவது முறை, இப்படி இவன் என்னை தூக்கி வருவது என்று நினைத்துக் கொண்டவள் எதுவுமே பேசாமல் மீண்டும் திரும்பி படுத்து கொண்டாள்.

                      ரகு அவளை பார்த்துக் கொண்டே நிற்பது போல் தோன்றினாலும், கண்களை திறக்கவே இல்லை. ரகு அழுத்தமாக அவளை பார்வையிட்டவன் அவள் முழங்கையை பிடித்து எழுப்பி அமர்த்த, பயத்துடன் அவனை பார்த்தாள் அவள்.

                      “உனக்கு என்னதான் பிரச்சனை?? எதுக்கு அழுதுட்டு இருக்க.?? ” என்று இளக்கமே இல்லாத குரலில் ரகு வினவ, வாயை திறக்கவில்லை தேவா. அவள் அழுத்தமாக அமர்ந்திருப்பதை கண்டவன் “பதில் சொல்லு தேவா..” என்று கட்டளையாக கூற

                      “நான் பேசினா உங்களுக்கு பிடிக்காது, அதோட எனக்கு பேசவும் தெம்பில்லை இப்போ.. கொஞ்ச நேரம் தூங்கணும் நான்..ப்ளீஸ்.” என்றவள் கண்களை மூடிக் கொண்டு மீண்டும் படுத்து விட்டாள்.

                     ரகுவுக்கு அவள் கோபம் புரிந்தாலும், இப்படி முகத்திலடித்ததை போல் அவள் படுத்துக் கொண்டது பிடிக்கவே இல்லை.

                   சற்றே கோபத்துடன் அவளை பார்த்தவன் தன்னிடத்தில் வந்து படுத்து கொண்டான்.தேவா அழுது கொண்டே இருந்தவள் ஒருகட்டத்தில் உறங்கிவிட, ரகு அன்று இரவு முழுவதும் ஒருநொடி கூட உறங்கவில்லை. அவளின் இந்த கண்ணீர் தன்னால்தான் என்ற எண்ணம் வலி கொடுத்த போதும், எப்படி தன்னை கட்டுப்படுத்துவது என்று புரியவில்லை அவனுக்கு.

                    யார்மீதோ உள்ள கோபம், இவள் மீது வெளிப்பட்டு கொண்டிருக்க அவளின் வாழ்வை நரகமாக்கி கொண்டிருக்கிறோம் என்பதும் புரிந்தது அவனுக்கு. அதுவும் முதல் நாள் இருட்டில் பயந்து நின்றவள், இன்று தானாகவே படியேற முற்பட்டு விழுந்து வைத்திருக்க, இனி அவளிடம் கோபப்பட்டு கத்துவதில்லை என்று ஒரு அவசர முடிவை எடுத்துக் கொண்டான் ரகு.

                    விடும் நேரம் நெருங்கி விடவே எழுந்து சத்தமிடாமல் குளித்து முடித்தவன் வெளியில் கிளம்பிவிட, அவன் சென்று விட்டதை கூட அறியாமல் உறக்கத்தில் இருந்தாள் மனைவி. அவள் கண்விழித்து எழுவதற்கும் முத்துவும், வேலுவும், பார்வதியுடன் அவள் அறைக்கு வரவும் சரியாக இருக்க, அவர்களை எதிர்பார்க்காதவள் சங்கடத்துடன் எழுந்து அமர்ந்தாள்.

                       முத்து மாணிக்கம் “அம்மாடி.. என்னடா.. கீழே விழுந்துட்டியாமே.. அடி எதுவும் பட்டுடுச்சா..” என்று பாசமாக கேட்க, கண்கள் கலங்கும் போல் இருந்தது.

                     “என்னமா… இன்னும் வலி இருக்கா எங்கேயும்.. ஹாஸ்பிடலுக்கு போவோமா..” என்று வேலுவும் கேட்க

                     “இப்போ பரவாயில்ல மாமா.. வலி இல்ல, கொஞ்சம் அசதியா இருக்கவும் படுத்திருந்தேன்.. வேற ஒண்ணுமில்ல..” என்று அவள் சொல்லிவிட

                     “நீ ஏண்டா தனியா இருட்டுல வந்த, உங்க அத்தையை கூப்பிட வேண்டியது தானே..” என்று அவரும் கேட்க

                       “இல்ல மாமா, தொந்தரவு பண்ண வேண்டாம் ன்னு..” என்று அவள் கூறும்போதே ‘

                    “என்ன பேசுற தேவாம்மா.. உன்னை போய் தொந்தரவா நினைப்போமா நாங்க. ஏண்டா விலகியே இருக்க..” என்று அவர் வருத்தமாக வினவ

                      “அப்படி எல்லாம் இல்ல மாமா.. நான் இப்போதான் வந்திருக்கேன், கொஞ்ச நாள் பழகிட்டேனா சரியாகிடுவேன்.. விலகி எல்லாம் நிற்கல மாமா. நீங்க வருத்தப்படாதிங்க.” என்று தேவா அவரை சமாதானப்படுத்த

                     “நீ அப்படியே எங்க ஜானகி தான் தாயி.. உனக்கு அப்படியே உன் அம்மாவோட குணம் தான் இருக்கு..” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போது தான் ரகு உள்ளே நுழைய, தேவாவின் பார்வை அவன்மீது படிந்து மீண்டது.

                   ரகு அவள் பார்வையை உணர்ந்தாலும் கண்டுகொள்ளாதவன் போல், அறைக்குள் நுழைந்து அங்கிருந்த இருக்கையில் அமர, “ஏன்ய்யா.. அந்த படிக்கு ஒரு விளக்கை பொருத்தி இருக்கலாம் இல்ல..” என்று வேலு கேட்க

                       “மறந்துட்டேன் சித்தப்பா.. இன்னிக்கு மாட்டிடறேன்..” என்று பதில் கொடுத்தவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்க, முத்துவும், வேலுவும் மேலும் சிறிது நேரம் தேவாவுடன் பேசிக் கொண்டிருந்து விட்டே கீழே இறங்கினர்.

                         அவர்கள் வெளியேறவும் குளிப்பதற்கு உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தவன் குளித்து விட்டு வெளியே வர வானதியும், பிரசன்னாவும் தேவாவுடன் அமர்ந்திருந்தனர். பிரசன்னா “நல்ல இடம் பார்த்தீங்க அண்ணி, புதையல் எடுக்க.. ஏன் அண்ணி பகல்ல ட்ரை பண்ணி இருக்கலாம்ல..” என்று கேலி செய்ய, சிரிப்போடு அமர்ந்திருந்தாள் தேவா.

                          வானதி ஆவலுடன் கட்டிலில் அமர்ந்திருக்க, பிரசன்னா எதிரில் சேரில் அமர்ந்திருந்தான். ரகு குளித்துவிட்டு வரவும் “நீங்க ஏன் அண்ணி தனியா வந்திங்க, பயமா இருந்தா அண்ணனை கூப்பிட வேண்டியது தானே..இப்போ  பாருங்க, இந்த மலைகுரங்கெல்லாம் கலாய்க்குது..” என்று வானதியும் கூற, அமைதியாக சிரித்தாளே தவிர, எதுவும் பேசவில்லை.

                      பிரசன்னாவிடம் “காலேஜுக்கு கிளம்பலையா ரெண்டு பேரும்..” என்று ரகு கேட்க

                     “இன்னிக்கு சனிக்கிழமை அண்ணா.. நாங்க நிறை படிச்சு களைச்சு போய்ட்டோம் இல்லையா.. அதான் இன்னிக்கு லீவ்..” என்று வானதி பெருமையாக பதில் கூற

                      “நீ படிக்கிற, அதை நீ சொன்னதுமே அண்ணன் நம்பிடும்.. என்னவொரு நம்பிக்கை உனக்கு வானரம்..” என்று பிரசன்னா கேலி செய்ய, தேவாவுக்கு அவர்களை பார்க்கவும் தானாக புன்னகை வந்தது. முதல் ஆண்டிலும், மூன்றாம் ஆண்டிலும் இருப்பவர்கள் இருவரும்.

                     சிறுபிள்ளைகள் போல் அவர்கள் ஒருவரை ஒருவர் வம்பிழுத்துக் கொண்டு இருக்க, சின்ன சிரிப்போடு அவர்களை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேவா. ரகு வானதியிடம் “பார்த்துக்கோ..” என்று தேவாவை கண்ணை காட்டி சொல்லி செல்ல, வானதி சிறு சிரிப்புடன் தன் அன்னையை நோக்கினாள்.

                        பிரசன்னா “சரி சொல்லுங்க அண்ணி, நீங்க என்ன படிச்சு இருக்கீங்க.. எத்தனை அரியர். எத்தனை கிளியர் பண்ணி இருக்கீங்க.. உங்க வரலாறு, புவியியல் எல்லாம் சொல்லுங்க..” என்று கேட்க

                       தேவா அழகாக சிரித்தவள் “இதுவரைக்கும் அரியர் எல்லாம் வச்சதே இல்ல… படிச்ச அஞ்சு வருஷமும் நான் தான் காலேஜ் டாப்பர். ” என்று கூற

                        “நீங்க மட்டும் தான் படிச்சீங்களா அண்ணி.. ஹோம் சயின்ஸ் எதுவும் படிச்சீங்களா..” என்று பிரசன்னா அப்போதும் கேலி செய்ய

                         “MBA படிச்சிருக்கேன்..” என்றவள் சென்னையின் மிகமுக்கியமான ஒரு கல்லூரியின் பெயரையும் சேர்த்து கூற, இப்போது அவளை வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர் அண்ணனும், தங்கையும்.

Advertisement