Advertisement

காதல் தருவாயா காரிகையே 06

                         தன் அறையில் அமர்ந்திருந்த தேவாவின் எண்ணங்களை முழுமையாக நிறைத்திருந்தான் ரகு. அவன் செயல்களால் முழுதாக குழப்பி விட்டிருந்தான் தேவாவை. நேற்று தன் பாட்டியிடம் அத்தனை கோபமாக பேசியவன் அதே நாள் இரவில் தனக்கு உணவு ஊட்டி உறங்க வைத்ததை நம்பவே முடியவில்லை அவளால்.

                       அந்த நேரம் அவன் முகத்தில் தெரிந்த கனிவும், அவன் அதட்டலில் ஓங்கி இருந்த அக்கறையும் இதுவரை அவள் உணர்ந்தே இராதது. பாட்டி அவளை பாசமாக கவனித்து கொண்டாலும் கூட, பெரிதாக அதட்டி அடக்கி மிரட்டி எல்லாம் வைத்ததே இல்லை.

                       தந்தை அவருக்கும் மேல், அவர் குரலில் “தேவாம்மா..” என்று அழைக்கும் போது பாசம் மட்டுமே விரவி இருக்கும். மகள் எது செய்தாலும் அதற்கு மறுபேச்சே இருந்ததில்லை அவரிடம். அவளுக்கு நினைவு தெரிந்து அவர் கோபப்பட்டு கூட பார்த்ததில்லை தேவா.

                      அப்படி இருக்க ஒருவன் தாலி கட்டிய நொடி முதல் முறைத்து கொண்டே திரிய, முழுவதுமாக உடைந்து போயிருந்தாள். ஆனால் நேற்று அவன் நடந்து கொண்ட விதம் முற்றிலும் மாறாக இருக்க, தான் தவறாக கணிக்கிறோமோ அவனை என்று தோன்ற தொடங்கி இருந்தது.

                    இரவு கண்ணை மூடிக் கொண்டாலும் வெகுநேரம் ரகுவின் சிந்தனையில் மூழ்கி போயிருந்தவள் வெகுநேரம் கழித்தே உறங்கி இருந்தாள். நேற்று போல் அவன் எதுவும் சொல்லிவிட கூடாது என்ற எண்ணத்தில் மாலையே அலைபேசியில் அலாரம் ஒன்றை வைத்து விட்டிருந்தாள்.

                      அவள் வீட்டிலேயே கூட அவள் நினைத்த நேரவரை தூங்குபவள் எல்லாம் கிடையாது. காலை தன் பாட்டி எழும் நேரமே எழுந்து கொள்பவள் காலை ஆறுமணிக்கெல்லாம் பூஜை அறையில் இருக்க வேண்டும். சுந்தராம்பாள் கட்டளையாக கூறா விட்டாலும் இதுவரை தவறியதில்லை அவள்.

                      ஆனால் திருமணத்தன்று இருந்த அழுத்தத்தாலும், சோர்வாலும், முன்தினம் வெகுநேரம் கழித்து உறங்கியதாலும் தான் நேற்று அவள் கண்ணசைந்தது. அதையும் அவன் பேசி வைத்திருக்க, அடுத்த நாளுக்கு அலாரம் வைத்துக் கொண்டிருந்தாள்.

                       ஆனால் இருந்த வலியில் அதை மறந்து விட்டிருக்க, காலையில் அந்த அலாரம் தன் வேலையை சரியாக செய்திருந்தது. கைநீட்டி அலைபேசியை அணைத்து வைத்தவள் எழுந்து கொள்ள பார்க்க ரகு அவள் கையை பிடித்திருந்தான். அவள் சட்டென திரும்பி பார்க்கவும் “படுத்து தூங்கு.. உடம்பு முடியாம கீழே போய் என்ன செய்ய போற.. படுத்துக்கோ… நான் அம்மாகிட்ட சொல்லிடறேன்..” என்று கூறிவிட

                       அப்போது இருந்த அயற்சியில் எதையும் யோசிக்காமல் படுத்துக் கொண்டாள். வலி இன்னமும் இருக்க, படுத்த நிமிடத்தில் உறங்கியும் விட்டாள். ரகு அவள் படுத்த அடுத்த பத்து நிமிடங்களில் எழுந்து கொண்டதோ அவளை சில கணங்கள் அமைதியாக, ஆழ்ந்த பார்வையாக பார்த்துவிட்டு சென்றதையோ எதையுமே அறியவில்லை அவள்.

                       அதன்பின் அவள் காலைநேரம் எட்டு மணிக்கே தொடங்கி இருக்க, குளித்து முடித்தவள் கீழே இறங்கி விட்டாள். சமையலறை மேசையில் அமர்ந்திருந்த சங்கரி அவளை ஏளனமாக பார்க்க, அவர் கையில் அன்று நறுக்க வேண்டிய காய்கறிகளை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

                            தேவாவுக்கு அவர் பார்வையின் அர்த்தம் புரிந்தாலும், அமைதியாக அவரை கடந்தவள் பார்வதியிடம் சென்று நிற்க, “வாடா.. இப்போ பரவால்லையா.. சோர்வா தெரியுற பாரு.. இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்க வேண்டியது தானே..” என்று அன்பாக கேட்க, வெளியில் இருந்த சங்கரி நொடித்துக் கொண்டிருந்தார் அவர்களை.

                        தேவா சிரித்துக் கொண்டே நிற்க “என்ன கேட்டாலும் சிரிப்பு தானா.. வாயத் திறந்து பதில் சொல்லி பழகு.. ஏன் தூங்கல..” என்று அவள் மிரட்டுவது போல கேட்க

                          “சிரிப்பு வருது அத்தை…” என்று விட்டவள் நாக்கை கடித்து கொள்ள “சேட்டை தான் நீ.. நான் கூட நீ அமைதின்னு நினைச்சேன்.. பேச்சு வருது..”  என்று அவர் இலகுவாக பேச

                           “அதெல்லாம் வரும்.. கொஞ்சம் கொஞ்சமா பேசிடறேன்..” என்று தேவாவும் பதில் கொடுக்க, திருப்தியாக இருந்தது பார்வதிக்கு…

                            நான் ஏதாவது செய்யட்டுமா?? என்று அவள் கேட்டபோதும், “இங்கே ஒரு வேலையும் இல்ல, ஒரு ரெண்டு நாளுக்கு அமைதியா ஓய்வெடு.. உடம்பை அலட்டிக்க வேண்டாம்..” என்றவர் “காஃபி வேண்டாம் இந்த கூழை குடிக்கறியா.. கொஞ்சம் குளுமையா இருக்கும் இந்த நேரத்துக்கு..” என்று கேட்க

                          எப்படி இருக்கும் என்று தெரியாத போதும் அவர் கொடுத்ததற்காகவே வாங்கி கொண்டாள். வெங்காயம் வெட்டி சேர்த்து மோரை ஊற்றி பதமாக கரைத்து கொடுத்திருக்க, ஒரு வாய் குடித்தவளுக்கு அந்த ருசி பிடித்து போகவே அவர் கொடுத்த கூழ் மொத்தத்தையும் குடித்து முடித்திருந்தாள்.

                         “சூப்பரா இருக்கு அத்தை..” என்று வேறு சொல்லி இருக்க, பார்வதியை கையில் பிடிக்க முடியவில்லை. எத்தனை பெரிய குடும்பத்தில் பிறந்தவள், அவள் வாழ்வில் பார்த்தே இருக்க மாட்டாள் இந்த கம்பங்கூழ் எல்லாம். ஆனால் அலட்டிக் கொள்ளாமல் வாங்கி குடித்ததும் இல்லாமல் நன்றாக இருக்கிறது என்று வேறு கூறிவிட

                           அவர் மனம் தானாக தன் மூத்த மருமகளை ஒப்பிட்டு கொண்டது. சஞ்சனாவுக்கு இந்த கிராமத்து உணவுகள் எல்லாம் பெரும்பாலும் தொண்டையில் இறங்காது. ஏன் சாதாரணமாக இட்லி கூட பிடிக்காது. ஆனால் தோசை வேண்டும் என்றால் அடுப்படியில் நிற்க வேண்டுமே என்பதற்காகவே இரண்டு இட்லியோடு உணவை முடித்துக் கொண்டு அறைக்கு திரும்பி விடுவாள்.

                         பிள்ளைக்கு கூட பக்குவம் பார்த்து சமைக்க முடியாது மகாராணிக்கு.. உடல் வளைய வேண்டும் அல்லவா.. மகனை பெற்ற கடமைக்கு அவன் மகனின் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த பார்வதி, சஞ்சயின் வயிற்றை நிரப்பி விடுவார். அவன் எழும் நேரம் அவனுக்கான உணவை சரியாக கொடுத்து பார்த்துக் கொள்வார்.

                      அதற்கும் முதலில் ஆட்சேபம் தெரிவித்து, கடையிலிருந்து சில ஊட்டச்சத்து டின்களை வாங்கித்தான் ஊட்டிக் கொண்டிருந்தாள் மருமகள். ஒருமுறை பிள்ளைக்கு உடம்பு முடியாமல் போகவும், சந்திரன் ஆடிய ஆட்டத்தில் மகனை மாமியாரிடம் விட்டு ஒதுங்கி கொண்டிருந்தாள்.

                       அடுப்பில் சாதத்தை வைத்துவிட்டு அவர் இத்தனையும் யோசித்துக் கொண்டிருக்க, சாதம் பொங்கி வழிந்ததில் தேவா அடுப்பை குறைத்து விட்டு, “என்ன அத்தை.. என்ன யோசனை..” என்று கேட்க

                       “ஒன்னும் இல்லடா..நீ போய் கொஞ்ச நேரம் படு.. இந்த வேலையெல்லாம் தினமும் இருக்கும் தான்.. முடியலைன்னா ரெண்டு நாள் ஓய்வா இருக்கலாம் தப்பில்ல.. உன் புருஷன் பேச்சை எல்லாம் காதுல வாங்காத.. சரியா..” என்று கூற

                     நமட்டு சிரிப்புடன் தலையாட்டிவிட்டு தன்னறைக்கு வந்துவிட்டிருந்தாள் தேவா. அவளுக்கு தன் மாமியாரை பிடித்திருந்தது. இந்த இரண்டு நாட்களில் அவரிடம் மட்டுமே சற்றே நெருக்கம் தோன்றி இருந்தது அவளுக்கு.

                       தனிமை இரண்டு நாட்களாக நடந்த நிகழ்வுகளை பொறுமையாக அலசும் சுதந்திரத்தை கொடுக்க, தன் தந்தை இன்னும் தனக்கு அழைக்கவே இல்லை என்பதும் அப்போது தான் நினைவு வந்தது. தான் இந்த வீட்டிற்கு வந்து முழுதாக ஒரு நாள் முடிந்திருக்க, இதுவரை தன்னிடம் அவர் பேசவில்லையே என்று தோன்றும்போதே அவர் திருமணத்தன்றும் தன்னிடம் எதுவுமே பேசவில்லை என்பதும் நினைவு வந்தது.

                       என்ன யோசித்தும் ஒன்றும் புரியாதவளாக அவள் தன் தந்தைக்கு அழைத்துவிட, முழுதாக முடியும் நேரம் அழைப்பு எடுக்கப்பட்டது. “ப்பா..” என்று அவள் பாசமாக அழைக்கும்போதே

                        “என்ன விஷயம் தேவா..?” என்று பொருந்தாமல் ஒலித்தது தந்தையின் குரல்.

                    இப்படி கண்டிப்பான குரலில் தன்னிடம் பேசுவது அவர்தானா என்று அவள் அதிர்ச்சியாக உள்வாங்கும் போதே “அதுதான் மறுவீட்டுக்கு வரமுடியாது ன்னு சொல்லி உன் புருஷன் என்னை அசிங்கப்படுத்திட்டானே… நீ உன் பங்குக்கு நான் போட்ட ஒரு நகையை கூட தொடாம அவனோட கிளம்பி போய்ட்ட…இன்னும் என்ன இருக்கு தேவா..” என்று அவர் கோபத்துடன் கேட்க

                  நொந்து போனாள் அவள். தாலி கட்டியவன் புரிதல் இல்லாமல் பேசுகிறான் என்று தேற்றிக் கொண்டாலும் தந்தை தன்னை புரிந்து கொள்ளாமல் இப்படி பேசுவதை ஏற்க முடியவில்லை. “ப்பா.. நான் என்ன செய்யட்டும்.. அவர் வேண்டாம் ன்னு சொன்னதுக்கு நான் என்ன பண்ணுவேன்ப்பா.. ” என்று மகள் அழுகுரலில் கேட்க

                  “அந்த ஒன்னுமில்லாதவனுக்கு இவ்வளவு ரோஷம் ஆகாது தேவா..” என்று தந்தை கொதிக்க

               “ப்பா.. நீங்கதானேப்பா கட்டி வச்சிங்க.. இப்போ ஏன்ப்பா இப்படி பேசறீங்க.. அவர் எப்படிப்பட்டவர் ன்னு முன்னாடியே தெரியும் தானே.. இப்போ ஏன் பேசணும்ப்பா..” என்று மகள் இறைஞ்சுதலாக கேட்க

                     “நான் கட்டி வச்சேனா.. யார் சொன்னது உனக்கு..? உன் பாட்டி தான் ஊர்ல இல்லாத மாப்பிளை ன்னு அவனை கை காட்டியது.. நீயும் உன் பாட்டி பேச்சுக்கு மறுபேச்சு பேசாம தலையாட்டிட்டு இப்போ என்னை சொல்றிங்களா…”

                             “ப்பா.. நான் வேறென்ன செய்யட்டும்.. பாட்டி..” என்றவளுக்கு அதற்குமேல் வார்த்தை வரவில்லை.

                    ஆனால் குணசேகரனுக்கும் கோபம் குறையாமல் போக, “எல்லாரும் சேர்ந்து என்னைத்தான் அசிங்கப்படுத்தி இருக்கீங்க.. அம்மா, பொண்ணு, பொண்டாட்டி எல்லாரும்…”

                        “அவனுக்கெல்லாம் என் வீட்டு பொண்ணை கட்டிக் கொடுத்ததே பெரிய விஷயம்.. இதுல என்னையே வந்து பாருன்னு நிற்கிறான்.. பார்த்துக்கறேன்..” என்றவர் கோபமாக அழைப்பை துண்டித்து விட்டார்.

                     தேவாவுக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியாத நிலை. யாரையாவது காதலித்து திருமணம் செய்திருந்தால் கூட தந்தை இந்த அளவு கோபித்திருக்க மாட்டாரோ என்றுதான் தோன்றியது. தன்னை சுற்றி நடக்கும் அணைத்து நிகழ்வுகளும் விசித்திரமாக இருக்க, எதையும் யோசிக்கக்கூடாது என்று முடிவெடுத்து கொண்டவளாக கட்டிலில் இருந்து எழுந்து விட்டாள்.

                        எழுந்தவள் வெளியே செல்வதற்காக திரும்ப அந்த அறையில் நின்று அவளையே கவனித்து கொண்டிருந்தான் ரகு. கண்கள் கலங்கி கண்ணீர் கன்னங்களை நனைத்திருக்க, சோகப்பதுமையாய் திரும்பியவள் ரகுவை கண்டதும் அதிர்ந்ததெல்லாம் ஒருநொடி தான்.

                        அடுத்த கணமே தன்னை தயார்படுத்திக் கொண்டாள். இவன் பேசுவதையும் கேட்டுக் கொண்டு தானே நிற்க வேண்டும். வேறு பெரிதாக என்ன செய்துவிட முடியும் என்னால்?? என்று எண்ணியவளாக அவள் நிற்க, அதிசயமாக அவன் ஒன்றுமே கேட்கவில்லை.

                        கையில் வைத்திருந்ததை அவளிடம் நீட்ட, என்ன என்பது போல் பார்த்தவள் அசையாமல் தான் நின்றாள். ஒரு சொம்பில் இளநீரை ஊற்றி இருந்தவன் அதில் நுங்கை சேர்த்து கொண்டு வந்திருக்க, வாய் மூடாமல் அவனை பார்த்து நின்றிருந்தாள் அவள்.

                        அவள் அதிர்ச்சியை புரிந்தவனாக “என்ன ஆச்சு இப்போ?? எதுக்கு இப்படி முழிக்கிற..” என்று அவன் வழக்கமான தொனியில் கேட்க, பதில் வரவில்லை.

                         “உன் மாமா தான் கொடுத்து விட்டாரு.. வேணுமா, வேண்டாமா??” என்று கேட்டுக் கொண்டு நின்றான் அவன். அவன் நீட்டிய சொம்பை கையில் வாங்கி கொண்டவள் கட்டிலில் அமர்ந்துவிட, அங்கிருந்த நாற்காலியை அவளுக்கு எதிரில் எடுத்து போட்டுக் கொண்டு அமர்ந்துவிட்டான் அவன்.

                       அவள் நிமிர்ந்து பார்க்கவும் “என்ன.. என்ன சொல்றாரு உன் அப்பா..” என்று ரகு தொடங்க, ஒன்றுமில்லை என்பதை போல தலையாட்டினாள் அவள்.

                       “ஒண்ணுமே இல்லாமலா இப்படி முகம் சிவந்து போகிற அளவுக்கு அழுது இருக்க..”

                                          “என்ன வேணும் உங்களுக்கு.. நான் என்ன சொல்லணும் ன்னு எதிர்பார்க்கிறிங்க..” என்று அவள் சற்றே கோபமாக கேட்க, புருவம் உயர்த்தி பார்த்தான் ரகு.

                  “பரவால்லையே.. உங்க அப்பன்கிட்ட பேசின உடனே கோபமெல்லாம் வருது..” என்று நக்கலாக அவன் கேட்க

                   “மரியாதை இல்லாம பேசாதீங்க..” என்று பட்டென சொல்லிவிட்டாள்.

                 “ஏய்.. என்ன அப்பனை சொன்னதும் கோபம் பொத்துக்கிட்டு வருதா… மொதல்ல உன் அப்பனுக்கு போய் மரியாதையை சொல்லிக்கொடு..வந்துட்டா..” என்று அவன் கோபத்தில் கொதிக்க

                   “எங்க அப்பாவை ஏன் இழுக்கறீங்க..உங்களுக்கு என்னை பிடிக்கல ன்னா என்னை பேசுங்க.. அவரை பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல..” என்று அவளும் எதிர்த்து பேச

                      “என் அப்பாவையும், என் குடும்பத்தையும் பேசுறதுக்கு உன் அப்பனுக்கு யாரடி உரிமையை கொடுத்தது, நான் அவனை பேசியதும் உனக்கு இவ்ளோ கோபம் வருதா.. அவன் பொண்ணுதானே நீ.. உன்கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்..”

                        “ஆமா.. நான் அவரோட பொண்ணுதான்.. நான் அதை எப்பவும் மறைச்சதே இல்லை.. தெரிஞ்சிதானே கட்டிக்கிட்டிங்க..ஏன் அவரோட பொண்ணை கட்டிக்கிட்டிங்க..” என்று அவளும் சற்றே கோபமாக கேட்க,ஆத்திரம் கூடியது அவனுக்கு.

                       “நான் ஒன்னும் உன் அப்பன்கிட்ட போய் நிற்கல. உன் பாட்டி தான் உன்னை என் தலையில கட்டிட்டாங்க.. நானாவது நிம்மதியா இருந்திருப்பேன்..” என்று அவன் கூறிவிட, அதற்குமேல் எதுவுமே பேசவில்லை ருத்ரா.

                           அவனையே வெறித்து பார்த்தவள் கண்களை துடைத்துக் கொண்டு கீழே இறங்கிவிட, தலையில் அடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான் ரகு. அன்று நாள் முழுவதுமே ரகுவின் முன்வராமல் ஒதுங்கியே இருந்தவள் இரவு உணவு நேரத்தின் போது கூட, அவன்முன் வரவில்லை.

                          அவளின் இந்த செயல்களில் இன்னுமின்னும் கோபம் கூடிப்போனவனாக உண்டு முடித்து அவள் மேலேறிவிட, தன் அத்தையிடம் வயிறு வலிப்பதாக கூறி இன்றும் உணவை மறுத்து விட்டவள் அவர் கொடுத்த ஜூஸை குடித்துவிட்டு தன் அறைக்கு செல்ல படிகளின் அருகில் வந்திருந்தாள்.

                        பார்வதி உள்ளே பாத்திரங்களை கழுவி வைத்துக் கொண்டிருக்க, அவரும் அவள் தனியாக செல்வதை கவனிக்கவே இல்லை. அந்த படிகளில் சூழ்ந்திருந்த இருளில் ஒருநிமிடம் பயந்து நின்றவளுக்கு ரகுவின் வார்த்தைகள் நினைவு வர அவனை அழைக்க விரும்பாமல் தானே படிகளில் ஏற முற்பட்டாள்.

                         அந்த இருள் மனம் முழுவதும் ஒரு புரியாத அச்சத்தை கொடுக்க, அந்த பயத்திலேயே அவளின் கவனமும் சிதறியது. அவள் மேல்படிகளை நெருங்கும் நேரம் காலில் ஏதோ ஊர்வது போல இருக்க, பயத்தில் கால்களை உதறியவள் ஒரு அடி பின்னால் வைக்க, அந்த குறுகிய படிகளில் பின்னோக்கி விழுந்திருந்தாள்.

                          பயத்தில் “ஆ.. அம்மா.. “என்ற அலறலுடன் அவள் கீழே விழ, அறையில் இருந்த ரகுவும், சமையல் அறையில் இருந்த பார்வதியும் பதறிக் கொண்டு ஓடிவர, படிகள் தொடங்கும் இடத்தில் மயங்கி கிடந்தாள் தேவா.

                              அவளை பார்த்த ரகு நான்கே எட்டில் அந்த படிகளை கடந்து அவளிடம் ஓடி வந்தவன் அவள் கைகளில் அள்ளிக் கொண்டிருந்தான்.

Advertisement