Advertisement

காதல் தருவாயா காரிகையே 05

                             தேவா அழுது கொண்டே இருந்தவள் அப்படியே உறங்கி போயிருக்க, அவள் என்ன செய்கிறாள் ?? என்று பார்க்க வந்த பார்வதி கண்டது கண்ணீர் கோடுகளோடு உறங்கி கொண்டிருந்தவளை தான். பார்த்தவருக்கு சங்கடமாக போக, கீழே வந்தவர் ரகுவுக்கு அழைத்து விட்டார்.

                                மகன் எடுக்காமல் போனதில் இன்னமும் கோபம் பெருக, “வரட்டும் இன்னிக்கு” என்று நினைத்துக் கொண்டே அவர் மற்ற வேலைகளை கவனித்துக் கொண்டிருக்க, அடுத்த ஒருமணி நேரத்தில் தேவா கீழே வந்து விட்டாள்.

                             பொதுவாகவே மதிய நேரங்களில் உறங்குவது எல்லாம் பழக்கம் இல்லை அவளுக்கு. கல்லூரி முடித்த கையோடு தந்தையுடன் அலுவலகத்திற்கு செல்வதை அவள் பழக்கமாக்கி கொண்டிருக்க, இடையில் தூக்கமெல்லாம் தூரம் தான்.

                         இரண்டு நாட்களாக ஏற்பட்ட மனா உளைச்சலிலும், உடல் சோர்விலும் கண்கள் தானாக மூடியிருந்தது. தூக்கம் தெளிந்து எழுந்ததுமே “இதற்கும் ஏதாவது பேசிவிட போகிறான்..” என்ற பயத்திலேயே சட்டென முகம் கழுவி அழுதது தெரியாமல் மறைத்துக் கொண்டு கீழே இறங்கி விட்டாள்.

                         அவள் வந்த நேரம் பார்வதி வீட்டின் முன்பக்கம் இருந்த முற்றத்தில் அமர்ந்திருக்க, சங்கரியும் உடன் இருந்தார். தேவாவை பார்த்து விட்டவர் “வா..” என்று அழைத்து அருகில் அமர்த்திக் கொள்ள, அவரின் கையில் இருந்த குட்டி சஞ்சய் தேவாவை கண்டு கையை நீட்ட, அழகாக சிரித்தவள் “வர்றியா..” என்று கையை நீட்ட, சட்டென தாவினான் அவன்.

                       எதிரில் இருந்த சங்கரி சற்றே பொறாமையாக பார்க்க, தேவா அதை கவனிக்கவே இல்லை. அவள் முழுதாக குழந்தையிடம் லயித்து போயிருந்தாள். சிறிதாக முளைத்திருந்த பற்களை நீட்டிக் கொண்டு முயல் குட்டி போல் கைகளில் தவழ்ந்தவனை யாருக்குதான் பிடிக்காது.

                        அந்த குட்டி வாண்டு கைகளில் அவள் முடியை பிடித்து இழுத்துக் கொண்டு, அவளை அடிப்பது போல் பாவனை  செய்தும் கிளுக்கி சிரிக்க, தேவாவின் மனம் மெல்ல மெல்ல இயல்புக்கு திரும்பி கொண்டிருந்தது. அவள் மனதிலிருந்து ரகு தூரமாக செல்ல, அவன் ஏற்படுத்திய காயங்களையும் சற்றே மறந்திருந்தாள் அவள்.

                         வந்த நாளே எப்படி இவளிடம் ஒட்டிக் கொண்டான் இவன் என்று வியப்பாகா இருந்தது சங்கரிக்கு. பார்வதியின் கையில் இருந்தால் யார் அழைத்தாலும் வரமாட்டான் சஞ்சய். சங்கரி பாசமாக அவனை தூக்கினாலும் கூட இரண்டு நிமிடங்களுக்கு மேல் அவரிடம் நிற்காமல் இறங்கி தவழ்ந்து கொண்டே பார்வதியிடம் சென்று விடுவான்.

                         அதில் லேசான புகைச்சல் கூட சங்கரிக்கு. இப்போது தேவாவிடம் குழந்தை அழகாக பொருந்தி கொள்ள, பொறாமை தூக்கலாக இருந்தது அவரின் பார்வையில். பார்வதி அவர் பார்வையை உணர்ந்தாலும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை. மருமகளின் புன்னகை அவரை குளிர்வித்து இருக்க, அவளையே பார்த்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தார்.

                         நேரம் மதிய உணவு நேரத்தை கடந்திருக்க, முத்துவிற்கும், வேலுவிற்கும் உணவை கொடுத்து அனுப்பி இருந்தனர்.சந்திரன் அப்போது தான் சாப்பிட வர, அங்கே குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த தேவாவிடம் தான் பார்வை பதிந்தது.

                        அவளை பார்த்தவன் தன்னறைக்கு செல்ல, அங்கே மனைவி ஆழ்ந்த சயனத்தில். அந்த மதிய நேரத்தில் நைட்டியை மாட்டிக் கொண்டு உறங்கி கொண்டிருக்க, அவள் வந்து உணவு எடுத்து வைப்பதெல்லாம் நடக்காத காரியம்.அவளை ஒருநிமிடம் வெறித்தவன் டைனிங் டேபிளுக்கு வர, அங்கு ரகுவிற்கு உணவு எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் தேவா.

                         இவனின் பின்னாலேயே உள்ளே நுழைந்தவன் பின்கட்டில் முகம் கழுவி அமர்ந்திருக்க, அவளை பரிமாற்ற சொல்லிவிட்டு சமையல் அறையில் நின்றுவிட்டிருந்தார் பார்வதி. அவன் மீது கோபம் இருந்தாலும், பார்வதியின் முன் காட்ட முடியாமல் அவனுக்கு அமைதியாக உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் தேவா.

                    அந்த நேரம் சந்திரன் வர, அவனுக்கும் தட்டை எடுத்து வைத்தவள் பரிமாற தொடங்க, அவன் மனம் தானாக மனைவியை நினைத்துக் கொண்டது. இத்தனை நாள் பெரிதாக தெரியாத, கண்ணில்படாத சில விஷயங்கள் இப்போது துரும்பாக உறுத்த ஆரம்பிக்க, யோசனையோடு உண்டு முடித்து கிளம்பினான் அவன்.

                   முத்துமாணிக்கம்- வேலு மாணிக்கம் இருவருக்கும் விவசாயமே பூர்வீகமாக இருக்க, இப்போதும் அதையே தொடர்ந்தனர் இருவரும். பெரியவன் படித்து முடித்ததும் தனியாக உரக்கடை ஒன்றை போட்டுக் கொண்டு அமர்ந்துவிட, அவ்வபோது பெரியவர்களுக்கும் உதவியாக இருப்பான்.

                   ஆனால் திருமணம் முடியவும் அதெல்லாம் நின்று போக, முழுநேரமும் உரக்கடை தான் என்றானது அவன் வாசம். சிறியவன் ரகு படித்து முடித்தாலும் தந்தைக்கு உதவியாக விவசாயத்தை மட்டுமே பார்த்து வந்தவன், ஆறு மாதங்களுக்கு முன்னர் தான் ஒருவர் கைமாற்றி விட்ட ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டார் ஒன்றை வாங்கி இருந்தான்.

                   பணம் முத்துவும், வேலுவும் கொடுத்திருந்தாலும் உழைப்பு அவனுடையது. கடையை இன்றைய மக்களின் தேவைக்கேற்ப வடிவமைத்து, சில விஷயங்களை மாற்றி அவன் புதுப்பித்து திறந்திருக்க, சொல்லிக்கொள்ளும்படியான வியாபாரம் தான். ஆனால் போட்டிருந்த முதலை எடுக்கவே இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் ஆகும்.

                     கடையை திறந்தவன் சரக்கு எடுப்பது, பிரித்து அடுக்குவது, இரவு நேரங்களில் கணக்கு பார்ப்பது மட்டுமே தன் வேலையாக வைத்திருக்க, கடையை மேற்பார்வை செய்யும் பொறுப்பு பெரியவர்கள் இருவருடையதும் தான்.

                        வேகாத வெயிலில் விவசாயத்திற்காக போராடிக் கொண்டிருந்தவர்களை, கடையில் ஏசி அறையில் அமர்த்திவிட்டவன் தான் விவசாய வேலைகளை கவனித்து கொள்வான். வேலுவிற்கும், முத்துவிற்கும் மகனின் செயலில் பெருமைதான்.

                        ஆனால் அப்போதும் அவன் வெயிலில் வாடுவது பிடிக்காமல், அவர்கள் சொல்லிப்பார்க்க கண்டு கொள்ளாதவன் அவர்களை கடையை விட்டு வெளியே வர அனுமதிப்பதே இல்லை. இப்போதும் அந்த பகல் பொழுது நேரத்தில் சூரியன் மண்டையை பிளக்க, கடலூர் வரை தன் வண்டியில் சென்றுவிட்டு வதங்கி போனவனாக தான் திரும்பி இருந்தான்.

                       வந்த நேரத்திற்கு இதமாக மனைவி அருகில் நின்று பரிமாறுவது திருப்தியாக இருக்க, செல்லும்போது அவளிடம் கோபப்பட்டதும் தானாகவே கண்முன் தோன்றியது. முகத்தில் அழுத அடையாளங்கள் உற்று கவனித்தால் இப்போதும் தெரிய, “இவ ஏன் இவ்ளோ சிகப்பா இருக்கா..” என்பது தான் அவனின் அப்போதைய கவலையாக இருந்தது.

                    மனைவியை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டுக் கொண்டே அவன் உணவை முடிக்க, சந்திரனும் உண்டு முடித்திருந்தான். பாத்திரங்களை ஒதுங்க வைத்தவள் கிட்சனுக்கும், சாப்பாடு மேசைக்கும் நடந்து கொண்டே இருக்க, அவள் கடைசி முறை உள்ளே செல்லும் போது “மேலே வா..”  என்று கூறிவிட்டு சென்றான் கணவன்.

                    தேவாவுக்கு “இப்போ என்ன செய்ய போறாரோ..” என்பதே எண்ணமாக இருக்க, அவள் படிகளில் கால் வைக்கும் நேரம், பார்வதி சத்தமாக “தேவா..” என்று அழைத்திருந்தார். இவள் அவரை காண்பதற்காக முன்னறைக்கு செல்ல, அங்கு அவளின் பாட்டி சுந்தராம்பாள் அமர்ந்திருந்தார்.

                    அவரை கண்டதும் கண்கள் கலங்கிவிட “பாட்டி..” என்று அழைத்தவள் ஓடிச்சென்று அவரை கட்டிக் கொள்ள, கண்கள் நிற்காமல் கண்ணீரை பொழிந்தது. சுந்தராம்பாளுக்கும் கண்கள் கலங்கி இருந்தாலும், சமாளித்துக் கொண்டவர் பேத்தியை தன் அருகில் அமர்த்திக் கொண்டார்.

                    பார்வதி குடிப்பதற்கு மோர் கொண்டுவந்து கொடுக்க, “எப்படி இருக்க பார்வதி..” என்று கேட்டவர் சங்கரியிடமும் நலம் விசாரிக்க,

                  பார்வதி தான் “நாங்க நல்லா இருக்கோம் அம்மா.. நீங்க எப்படி இருக்கீங்க.. தேவா அப்பா நல்லா இருக்காங்களா..” என்று கேட்க

                        “இருக்கோம் பார்வதி…” என்று கசந்த சிரிப்போடு கூறினார் அவர்.

                  “என்னை விடு.. என்ன சொல்றா உன் மருமக..” என்று பார்வதியை கேட்க

                “என்ன சொல்றா.. யோசிச்சு யோசிச்சு ரெண்டு வார்த்தை பேசுவோமா, இல்ல ஒரே வார்த்தை போதுமா ன்னு தேடிட்டு இருக்கா..” என்று சிரிப்புடன் கூறினார் பார்வதி…

                 “இவ உன் பொறுப்பு தான் பார்வதி.. உங்கமேல இருக்க நம்பிக்கையில தான் கண்ணை மூடிட்டு உங்ககிட்ட கொடுத்திட்டேன்..பார்த்துக்கோ..” என்றவருக்கு கண்கள் கலங்கிவிட, பாட்டியின் வார்த்தைகளில் காலையில் ரகு “கிளம்பி போடி..” என்றது தான் நியாபகம் வந்தது தேவாவுக்கு.

                      “தான் வேண்டாத பொருளாக இங்கே எத்தனை நாள் இருக்க முடியும்..” என்று கேட்டுக் கொண்டவளுக்கு, கண்ணீர் தான் வந்தது. பாட்டி தன்னை அழைத்து செல்ல சம்மதிக்கமாட்டாரோ??? என்பதே மனதில் ஓடிக் கொண்டிருக்க, ரகுநந்தன் கீழே இறங்கி வந்திருந்தான் அதற்குள்.

                        வந்தவனுக்கு முதலில் கண்ணில்பட்டது கலங்கி அமர்ந்திருந்த மனைவிதான். அவளையே பார்த்தபடி ரகு நிற்க, சட்டென கண்களை துடைத்துக் கொண்டாள் தேவா.

               அதன்பிறகே அவனும் பாட்டியிடம் திரும்பியவன் “வாங்க பாட்டி.. எப்போ வந்திங்க..” என்று கேட்க

                 “இப்போதான் வந்தேன் தம்பி.. உட்காருப்பா..” என்று தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார். அதே நேரத்தில் முத்துவும், வேலுவும் வீட்டிற்கு வர, அவர்களும் சுந்தராம்பாளை வரவேற்க பேச்சு இயல்பாக சென்றது. சிறிது நேரம் கழித்து பாட்டி “மறுவீட்டுக்கு பிள்ளைகளை அழைக்கணும் இல்லையா முத்து.. அதான் நானே வந்துட்டேன்.. எப்போ அனுப்பி வைக்கிற..” என்று அவரிடமே கேட்க

                  தேவா சட்டென ரகுவைத் தான் பார்த்தாள். அவள் பார்வையை உணர்ந்தாலும் அவள் பக்கம் திரும்பாமல் “இங்கே நிறைய வேலை இருக்கு பாட்டி.. அதான் நேத்தே வீட்டுக்கு வந்துட்டு தானே வந்தேன்.. விடுங்க.. அப்புறம் பார்த்துக்கலாம்..” என்று அவன் பாட்டியிடம் கூறிவிட

                சுந்தராம்பாள் முத்துவை பார்க்க “என்ன பேசுற ரகு, நமக்கு வேலை எப்போதும் இருக்கத்தானே செய்யும்.. அதுக்காக முறையை விட்டுட முடியுமா..”  என்று அவர் ரகுவிடம் கேட்க

                  “அப்பா… என்னால அங்கே போக முடியாது.. இங்கே என்ன முறையா நடந்துட்டு இருக்கு.. நீங்க முறையை பத்தி யோசிச்சுட்டு இருக்கீங்க..” என்று அவரிடம் காய்ந்தவன்

                   பாட்டியிடம் “நான் இவளை நல்லபடியா வச்சு பார்த்துப்பேன் ன்னு நம்பித்தானே எனக்கு கட்டி கொடுத்தீங்க.. அதை நான் காப்பாத்துவேனா ன்னு மட்டும் பாருங்க..

                     “மத்தபடி இதெல்லாம் வேண்டாம்… எல்லாருக்கும் சங்கடம் தான். ஏன் நீங்க இங்கே வர்றது கூட உங்க மகனுக்கு பிடிக்காம இருக்கலாம்.. இதுல முறை அது இதுன்னு எதுக்கு பேசிகிட்டு..”

                     “நான் என் பேத்தியை பார்க்க வர்றதை யாரால தடுக்க முடியும் ரகு. எனக்கு இருக்க ஒரே பேத்தி இவ, நான் இவளுக்கு எல்லாம் செஞ்சு பார்க்கணும் ன்னு ஆசைப்படறது தப்பா…”

                       “நீங்க உங்க பேத்திக்கு செய்யுறதை நான் எதுவும் சொல்லவே இல்லையே.. என்னை உங்க வீட்டுக்கு கூப்பிடாதிங்க ன்னு தான் சொல்றேன்..”

                         “சொல்லாதவன் தான் அவளை ஒண்ணுமில்லாதவன் வீட்டு பொண்ணை கூட்டிட்டு வர மாதிரி கூட்டிட்டு வந்தியா… நீ சொல்லாமலே அத்தனையும் கழட்டி வச்சிட்டு உன்கூட வந்துட்டாளா என் பேத்தி..” என்று சுந்தராம்பாள் கேட்க

                         “நான் கூட்டிட்டு வந்தது என் பொண்டாட்டியை தான். எங்களை மதிக்காத உங்க மகன் போட்ட நகை என் பொண்டாட்டிக்கு வேண்டாம்ன்னு தான் விட்டுட்டு வந்தேன்.. உங்களை அவமானப்படுத்த நினைக்கல.. நீங்க கஷ்டப்பட்டு இருந்தா மன்னிச்சிடுங்க..”

                       “உன் பொண்டாட்டியே என் மகன் மூலமா வந்தவ தானேப்பா.. அவளை ஏத்துப்ப, அவ குடும்பத்தை வேண்டாம் ன்னு சொல்வியா..”

                       “இதுக்கு நான் பதில் சொல்லிடுவேன் பாட்டி.. ஆனா..” என்றுவிட்டு மனைவியை பார்த்தவன் “அவ குடும்பத்தை நான் வேண்டாம் ன்னு சொல்லவே இல்ல இப்போவரைக்கும். ஏன் இப்போ எங்களை தேடி வந்திருக்கிங்களே.. உங்களை வேண்டாம் ன்னா சொல்லிட்டேன்…

                        “அது போலத்தான் யாருக்கு அவ வேணுமோ, வந்து பார்த்திட்டு போகட்டும்.. இங்கே யாருக்கும் எந்த கௌரவக்குறைச்சலும் நடக்காது.. மகளை கூட்டிட்டு போய் சீராட்டி கூட அனுப்பட்டும்..”

                        “பாசம் இருந்தா வரணும் இல்ல, இப்போ நீங்க வந்திருக்கிங்களே..” என்று ரகு சற்று கோபமாகவே பேச, அவனை ஒன்றும் சொல்ல முடியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றனர் பெரியவர்கள். சுந்தராம்பாளுக்கு அவன் பேச்சில் இருந்த நியாயம் புரிந்தாலும், பேத்தியை அப்படியே விட்டுவிட முடியாது அல்லவா..

                          அவர் தேவாவின் கையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்க, தேவா இத்தனை பேச்சுக்கும் நிமிரவே இல்லை.

                         ரகுவிற்கு அவளை அதிகம் படுத்தி வைக்கிறோம் என்று புரிந்தாலும், குணசேகரனை அத்தனை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவனால். இப்போது அவள் தலைகுனிந்த தோற்றம் வருத்தத்தை கொடுத்தாலும் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

                   முத்து மாணிக்கம் தான் “அவன் ஏதோ கோபத்துல பேசறான் அத்தை.. நான் பேசி புரிய வைக்கிறேன்.. நீங்க கவலைப்படாதிங்க..” என்று ஆறுதலாக கூறி “இங்கே ஊர்ல நம்ம சொந்தக்காரங்களுக்கு ஒரு விருந்து வச்சுட்டா நல்லா இருக்கும் அத்தை.. கல்யாணம் எதிர்பாராம நடந்ததுல யாருக்கும் சொல்ல முடியல. இப்போ ஒரு விருந்து வச்சுட்டா சொந்தத்துக்குள்ள ஒரு பேச்சு வராம இருக்கும்.

                    “நீங்க உங்களுக்கு எப்போ வசதிப்படும் ன்னு சொன்னா, இந்த வாரத்துலேயே ஒருநாள் பார்த்து எல்லாருக்கும் சொல்லி விட்டுடுவேன்..” என்று கூற

                       “அதுக்கு என்ன முத்து.. நீ நல்லபடியா ஏற்பாடு பண்ணு.. எப்போ நீ சொல்றியோ, அப்போ நான் வந்து நிற்கிறேன்..” என்று அவர் கூறிவிட, முத்துமாணிக்கம் அப்போதே நாட்காட்டியை பார்த்தவர் அந்த வார ஞாயிற்றுக்கிழமையில் நாள் நன்றாக இருப்பதாக கூற, அன்றே விருந்தை வைத்துக் கொள்வது என்று முடிவானது.

                       சுந்தராம்பாள் அதன் பின்பும் கூட நீண்ட நேரம் தன் பேத்தியோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர், அன்று மாலை வேளையில் தான் கிளம்பினார். ரகு மதியத்திற்கு மேல் கடைக்கு கிளம்பி இருந்தவன் அவர் கிளம்பும் நேரம் வழியனுப்ப தான் வந்து சேர்ந்தான்.

                           சுந்தராம்பாள் அனைவரிடமும் சொல்லிக் கொண்டவர் ரகுவிடம் “அவ சின்னப்பொண்ணு ரகு. யார்மேலேயோ இருக்க கோபத்துக்கு அவளை பலியாக்க வேண்டாம்.. என் பேத்தி ரொம்ப பாவப்பட்டவ ரகு.. தாய்ப்பாசமே இல்லாம போலியை நிஜம் னு நம்பியே வாழ்ந்துட்டா..

                      “அவளுக்கு ஒரு தாய்மாமன் இருக்கறது கூட தெரியாது அவளுக்கு.. நான் சொன்ன ஒரே வார்த்தைக்காக உன்னை கட்டிக்கிட்டா… அவளை நல்லா பார்த்துக்கோப்பா..” என்று சற்றே உணர்ச்சிவசப்பட்டவராக பேசிவிட்டு செல்ல, கடைக்கு திரும்பியவனுக்கு தேவாவின் நினைவு தான்.

                         மதியம் அவள் அழுததை தாங்க முடியாமல் தான் அவன் கிளம்பி வந்தது. இப்போது பாட்டி வேறு பேசி சென்றிருக்க, சிந்தை மொத்தமும் அவள்தான். கடையை அடைக்கும் வேலையை தந்தையை பார்த்துக் கொள்ள சொல்லியவன் வீட்டிற்கு கிளம்பிவிட்டான் உடனே.

                    அவன் வீடு வந்த நேரம் இரவு உணவு நேரமாக இருக்க, தேவா கீழே இல்லை. எங்கே போனா?? என்பது போல் பார்த்தவன் யாரிடமும் கேட்கவும் செய்யாமல் அமர்ந்து கொள்ள, தம்பி, தங்கைகளுடன் அரட்டை அடித்துக் கொண்டே உணவு நேரம் கழிந்தது.

                      உணவை முடித்தவன் தங்கள் அறைக்கு வர, அந்த நேரத்திற்கே உறங்கி இருந்தாள் அவன் மனைவி. தலைக்கு வேறு குளித்திருக்க, ஈரத்தலையுடனே உறங்கி இருந்தாள்.

                        “இந்த நேரத்துல எதுக்கு குளிச்சிருக்கா..” என்று நினைத்தவன் அவள் தலை முடியை பிரித்து விட முனைய, அவன் தொடுதலில் விழித்துக் கொண்டவள் அன்று காலை போலவே பதறி எழுந்து அமர்ந்து கொள்ள, அவள் பதட்டம் அவனுக்கு ரசனைக்குரியதாக இருக்க, மதியம் நடந்த நிகழ்வுகளை மறந்தவனாக அவளை நெருங்கினான் ரகு.

                    அவன் நெருங்கியதில் அதிர்ந்து விழித்தவள் முகத்தை திருப்ப, அவளை தன்புறம் திருப்பியவன் அவள் இதழ்களை நெருங்க, அவனிடம் இருந்து திமிறிக் கொண்டு விலகினாள் தேவா. கூடவே பயந்து போனவளாக அவனை பார்க்க, அவள் விலகியதில் கோபம் கொண்டு தான் அவனும் முறைத்து கொண்டிருந்தான்.

                     அவன் கோபத்தில் இன்னுமே நொந்து போனவளாக அவள் பார்க்க, பார்வதி அழைக்கும் குரல் கேட்டது ரகுவுக்கு.. அவர் குரலில் தன்னை மீட்டுக் கொண்டவன் எழுந்து வெளியே செல்ல, படிகளுக்கு அருகில் நின்றிருந்தவர் மூன்று இட்லிகளை ஒரு கிண்ணத்தில் வைத்து கூடவே கொஞ்சம் பாலும் கொடுத்து தேவாவுக்கு கொடுக்க சொல்ல,

                                 ஏன் என்பது போல் பார்த்தவனிடம் “அவ சாப்பிடவே இல்லடா.. வயிறு வலிக்குதுன்னு போய் படுத்துட்டா.. தூங்கிட்டு இருக்கவும் எழுப்பாம விட்டுட்டேன்..” என்று கூறியவர் கூடவே “அவளுக்கு வலி அதிகமா இருக்கும் போல.. பார்த்துக்கோ.. சும்மா எதுவும் சொல்லிட்டு இருக்கக்கூடாது..” என்று மகனை முறைத்துவிட்டு செல்ல, ரகுவுக்கு எதுவோ புரிவது போல் இருந்தது.

                  அவள் பயந்த முகமும் நினைவுக்கு வர, கோபம் தான் வந்தது. கோபத்துடன் அறைக்கு செல்ல மீண்டும் கட்டிலில் சுருண்டு படுத்து விட்டிருந்தாள். வயிற்றை இறுக்கியபடி அவள் படுத்து இருக்க, இவனை கண்டதும் எழுந்து அமர்ந்து விட்டாள்.

                  அவளை முறைத்தவன் கையிலிருந்த கிண்ணத்தை நீட்ட, சாப்பிடும் எண்ணமே இல்லை அவளுக்கு. கொஞ்ச நேரம் தூங்கவிட்டால் போதும் என்றுதான் தோன்றியது. பொதுவாகவே முதல் நாளில் வலி படுத்தி வைக்கும் அவளை. வாந்தி வேறு இருக்கும் என்பதால் பெரும்பாலும் படுத்தே தான் கிடப்பாள்.

                    இப்போது அவன் உணவை நீட்ட, குமட்டுவது போல் இருந்தது. கை, கால்களிலும் வலி அதிகமாக இருக்க, “எனக்கு பசி இல்ல, நான் கொஞ்ச நேரம் படுக்கிறேன் ப்ளீஸ்..” என்றவள் படுக்க முயற்சிக்க

                    “ஏய்.. அதெப்படி பசிக்காம இருக்கும்.. ஒழுங்கா சாப்பிட்டுட்டு தூங்கு..” என்று ரகு அதட்ட,

                    “எனக்கு வாமிட் வரும்.. கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க..ப்ளீஸ்.. எனக்கு வேண்டாம்..” என்று இறைஞ்சலாக கூற

                      “ஏற்கனவே ரொம்ப சோர்வா தெரியுற.. இன்னும் பட்டினி வேற கிடப்பியா..” என்று அவள் அருகில் அமர்ந்தவன் “வாயைத்திற..” என்று அவனே அந்த இட்லியை பிய்த்து ஊட்டிவிட, வாந்தி வந்து விடுமோ என்று பயத்திலே அவள் இருக்க

                        “நீ வாந்தி எடுத்தா, திரும்ப கீழே போய் எடுத்து வந்து மறுபடியும் ஊட்டுவேன்… ஞாபகம் வச்சிட்டு முழுங்கு..” என்றவன் அதட்டியே அந்த மூன்று இட்லியையும் ஊட்டிவிட, அவனை கண்களை விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள் தேவா..

                         வாந்தியும் எங்கோ ஓடியிருக்க, பார்வை முழுவதும் அவன் மீதுதான்.. இவன் நல்லவனா ?? கெட்டவனா??? என்று அதிமுக்கியமான ஆராய்ச்சியில் இறங்கி இருந்தாள் அவள்.

Advertisement