Advertisement

காதல் தருவாயா காரிகையே 04

                                  எப்போதும் உள்ள வழக்கமாக ரகு காலை ஆறு மணிக்கெல்லாம் கண்விழித்து விட, அவன் கைகளுக்குள் அசந்து உறங்கி கொண்டிருந்தாள் அவன் மனைவி. “நைட் ரொம்ப படுத்திட்டோமோ..” என்று நினைக்கும்போதே, அவளின் வெட்கங்களும், தடுமாற்றங்களும், தவிப்புகளும் நினைவு வர, அழகாக ஒரு புன்னகை முகத்தில்.

                               தூங்கும் போது குழந்தையை போல அத்தனை நிர்மலமாக இருந்தது அவள் முகம். முடி எல்லாம் களைந்து, சேலை சற்றே நெகிழ்ந்து களைப்பாக காணப்பட்டாலும், ஏதோ ஒரு விதத்தில் வசீகரித்தாள் தேவா.. அவளின் முகத்தில் ஆழ்ந்து போயிருந்தவன் சட்டென என்ன நினைத்தானோ “இது ஆகாது ரகு.. இப்படியே மயங்கி போயிடாத..” என்று தனக்கு தானே அறிவுறுத்திக் கொண்டான்.

                            அவளிடம் இருந்து விலகி படுத்தவன் “தேவா..” என்று இருமுறை அழைக்க, அவள் எழவில்லை என்றதும், அவள் தோளை பற்றி லேசாக உலுக்க, பதறி எழுந்து விட்டாள் அவள்.

                        பயந்து போனவளாக எழுந்து அமர, “எதுக்கு இப்படி பதறுற..நேரமாச்சு எழுந்துக்கோ..” என்றவன் அத்தோடு விட்டிருக்கலாம். கூடவே “உன் வீட்ல நீ பத்து மணிக்கு கூட எழுந்துக்கலாம், இங்க காலையில எழுந்துக்கணும்.. அம்மா தனியா வேலை பார்ப்பாங்க.. அவங்க கூட போய் நில்லு.. என்ன செய்யணும் னு கேட்டு செய்யணும்.. புரியுதா.” என்று சேர்த்துக் கொள்ள

                            “என் வீட்ல எப்படி இருந்தேன் ன்னு ரொம்ப தெரியுமா இவருக்கு….” என்று தான் தோன்றியது தேவாவுக்கு. அவள் அமைதியாகவே இருக்க, எதிரில் இருந்தவன் “ஒய்.. என்ன கனவுல இருக்கியா..” என்று மீண்டும் கேட்கவும், மறுப்பாக தலையசைத்தவள் சட்டென கட்டிலில் இருந்து இறங்கி விட்டாள்.

                            குளியலறைக்குள் புகுந்தவள் தன்னை சுத்தம் செய்து கொண்டு வெளியே வரும்போது ரகு அந்த அறையில் இல்லை. “நல்லது..” என்று நினைத்தவள் “அவன் ரூம் இது.” என்று மனம் நினைவூட்டவும், தன்னையே கடிந்து கொண்டாள். வேகமாக சேலையை மாற்றிக் கொண்டு, நெற்றியில் பொட்டை ஒட்டிக் கொண்டு அவள் கீழே இறங்கி வர, பார்வதி ரகு சொன்னது போல் சமையல் அறையில் தான் இருந்தார்.

                         வேகமாக வரும் தேவாவை ஆச்சரியமாக பார்த்தவர் “என்னடா.. தூங்கலையா, இவ்ளோ காலையில எழுந்து வந்துட்ட…” என்று கேட்டு பின் தானே “ரகு எழுப்பி விட்டுட்டானா..” என்றும் கேட்க, பதில் சொல்லாமல் திருத்திரு வென அவள் விழித்ததிலேயே அதுதான் விஷயம் என்று விளங்கி விட்டது பார்வதிக்கு.

                        இருந்தாலும் மருமகளிடம் காட்டிக் கொள்ளாமல் “காஃபி குடிக்கிறியா..” என்று கேட்க

                   “நான்.. நான் ஏதாவது உதவி பண்ணவா அத்தை..” என்று வேகமாக கேட்ட தேவாவை பார்க்கவே பாவமாக இருந்தது பார்வதிக்கு.  தன் மகனையும் கடிந்து கொள்ள முடியாமல், எதிரில் இருப்பவளையும் விட்டுக் கொடுக்க முடியாமல் தடுமாறியவர் தன்னை மீட்டுக் கொண்டு காஃபியை கலந்து அவள் கையில் கொடுத்தார்.

                      தேவா தயங்கியவாறு “உங்களுக்கு..” என்று கேட்க

                     “நான் அஞ்சு மணிக்கே குடிச்சிட்டேன்… டீ குடிக்காம எனக்கெல்லாம் ஒரு வேலையும் ஓடாது..” என்று ரகமாக கூறியவர் அவள் காஃபி குடித்து முடிக்கவும், முன்னாடி உங்க மாமாங்களும், உன் புருஷனும் இருப்பாங்க.. இதை கொண்டு போய் கொடு..” என்று கஞ்சியை அவள் கையில் கொடுக்க, “நானா..” என்று பார்த்தபோதும் மறுப்பாக எதுவும் சொல்லாமல் வாங்கி கொண்டாள்.

                      முன்பக்கம் இருந்த முற்றத்தில் ஆண்கள் அமர்ந்திருக்க, தன் கையிலிருந்த கஞ்சியை முதலில் தன் மாமன்களிடம் நீட்டினாள். “நீ ஏன்டா இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே..” என்று வேலு கேட்க

                    ரகுவோ “ஆமா.. அவளே ஒழுங்கா இருந்தாலும் இவங்க கெடுத்து விட்ருவாங்க.. ஏற்கனவே ஒண்ணை வச்சிட்டு எங்க அம்மா படறது போதாது..” என்று மனதில் திட்ட, தேவா அமைதியாக ஒரு புன்னகை புரிந்து அங்கிருந்து விலகிவிட்டாள்.

                   மீண்டும் பார்வதியிடம் நின்றவள் “என்ன செய்யட்டும்..” என்று கேட்க, “சாமி ரூம்ல இருக்க விளக்கை ஏத்தி வச்சிட்டு வா..” என்றவர் அவள் திரும்பவும் வெட்ட வேண்டிய காய்கறிகளை எடுத்து அவளிடம் கொடுத்தார். டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டவள் காய்கறிகளை பொடியாக நறுக்கி கொண்டிருக்க, அவளை பார்த்து லேசாக சிரித்துக் கொண்டே மடியேறினான் ரகு.

                   காஃபி கேட்பதற்காக சமையல் அறைக்கு வந்த சந்திரன் தேவாவை ஆச்சரியமாக பார்க்க, அவனை கவனிக்காமல் தன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தாள் அவள். அவனுக்கு உள்ளே தூங்கி கொண்டிருக்கும் தன் மனைவியின் முகம் நினைவில் வர, ஒன்பது மணிக்கு முன்னால் அவள் எழுந்ததே இல்லை என்பதும் கூடவே தோன்றியது.

                     தன் அன்னையிடம் தனக்கான காஃபியை வாங்கி கொண்டவன் வந்து டைனிங் டேபிளில் அமர, அப்போது தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள் தேவா.. நேற்று அவனை பார்த்தது நினைவில் இருக்க, லேசாக சிரித்தவள் மீண்டும் தன் வேலையை தொடர, “மா.. இன்னிக்கு அரைவேக்காடு புரியல்ல இருந்து விடுதலை தான் போல, பாருங்க.. உங்க மருமக எவ்ளோ அழகா காய் நறுக்கிட்டு இருக்கா.. கத்துக்கோங்க…” என்று அவரை வம்பிழுக்க

                    ஆச்சரியமாக திரும்பி பார்த்தார் பார்வதி. தன் மகனா என்பது போல் அவர் அதிர்ச்சியில் நிற்க, தேவா அவன் தன்னை வம்புக்கு இழுக்கிறானோ என்று சட்டென நிமிர்ந்து பார்த்தாள். அவன் உண்மையை சொல்வது போலவே இருக்க, அப்போது தான் மாமியாரை நோக்கி திரும்பினாள் மருமகள். அவர் அதிர்ச்சியை கண்டவள் சந்திரனை பார்க்க, “அம்மா..” என்று சந்திரன் மீண்டும் குரல் கொடுக்க

                  சட்டென சுதாரித்துக் கொண்டார் பார்வதி. மகனை முறைப்புடன் அவர் பார்க்க, அவரை பார்த்து சிரித்தவன் “உண்மையை சொன்னா ஏன் முறைக்கிறீங்க… இன்னிக்காவது முழுசா வேக வச்ச பொரியலை போடுங்க…” என்று நக்கலாக சொன்னவன் எழுந்து கொள்ள, ‘இரு.. இன்னிக்கு வெறும் இஞ்சித்துவையலை வச்சு கொடுத்து விடறேன்..” என்று திருப்பி கொடுத்தார் பார்வதி.

                   சந்திரன் சொன்னது உண்மை தான். அவர் ஒருவரே காலை நேர வேலைகளை பார்க்க வேண்டும் அந்த வீட்டில். சங்கரி பொதுவாக காலையில் எழுந்து கொள்ள மாட்டார், அப்படியே எழுந்தாலும் அவரின் வேகத்திற்கு அவர் சமைத்தால் பிள்ளைகள் காலை உணவை மறந்துவிட வேண்டியது தான்.

                    பலமுறை அவரிடம் சொல்லிப்பார்த்து வெறுத்து போனவராக பார்வதி அவரை கூப்பிடுவதையே விட்டுவிட்டார் ஒரு கட்டத்தில். காலை உணவை தனியாகவே முடித்து விடுபவர் மதியத்திற்கு உலையை ஏற்றும் நேரம் தான் சங்கரி எழுந்து வருவார்.

                    அந்த நேரத்தில் காய்கறிகளை நறுக்கி கொடுக்க சொன்னால் குழம்பில் சேர்ப்பது போல, இரண்டு மூன்று துண்டுகளாக வேகமாக வெட்டி கொடுத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விடுவார். பார்வதிக்கும் நேரம் இல்லாததால் அப்படியே அதை சமைத்து பழகி விட்டார்.

                    வந்த மருமகள் தன் அத்தைக்கு மேல் இருக்க, சங்கரி வந்த அடுத்த அரை மணி நேரத்தில் எழுந்து வருபவள் பெரிதாக எந்த வேலையும் செய்ய மாட்டாள். இதில் வந்த மூன்றாம் மாதமே கரு நின்றுவிட, அவ்வளவுதான். செய்து கொண்டிருந்த ஒன்றிரண்டு வேலைகளும் அதோடு நின்று போயிருந்தது.

                  பார்வதியின் அவசர சமையலில் மட்டுமே அந்த வீட்டின் உணவு நேரம் ஓடி கொண்டிருக்க, அவ்வபோது அரைவேக்காட்டிலேயே இறக்கி வைத்து விடுவார். இப்போது மகன் அதை சுட்டிக்காட்ட, வெகு நாட்களுக்கு பிறகு இயல்பாக பேசும் மகனை ஆச்சரியமாக பார்த்தார் பார்வதி.

                  மகன் அன்னையின் ஆச்சரியத்தை கவனிக்காதவன் போல் சென்றுவிட, தேவா அத்தையை பார்த்தவள் தன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தாள். அவள் முழுதாக நறுக்கி முடிப்பதற்குள் பார்வதி காலை உணவை முடித்து வைத்திருக்க, அதை எடுத்து டைனிங் டேபிளில் அவள் அடுக்கி கொண்டிருக்க அந்த வீட்டின் இளையவர்கள் அப்போதுதான் அங்கே வந்து சேர்ந்தனர்.

                  வானதி, காவேரி, பிரசன்னா மூவரும் வர, அங்கு நின்றிருந்த தேவாவை அதிசயமாக பார்த்தனர் மூவரும். அதில் காவேரி தேவாவை சற்றே அலட்சியமாக பார்த்து விட்டு தட்டை எடுத்து வைத்துக் கொண்டு அமர, வானதியும் தனக்கான உணவை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள். பிரசன்னா தான் “ஹாய் அண்ணி.. நேத்து பேசவே முடியல.. எப்படி இருக்கீங்க..” என்று அவளிடம் கேட்க

                    சிரித்தவள் அமைதியாக தலையை மட்டுமே அசைத்தாள். அவனே “நீங்களும் உட்காருங்க.. சாப்பிடலாம்.” என்று அழைக்க, “நீங்க சாப்பிடுங்க.. நான் லேட்டாகும்..” என்றவள் தானாகவே அவர்களுக்கு பார்த்து பரிமாற தொடங்கினாள். வானதிக்கு இட்லியை எடுத்து வைக்க ‘தேங்க்ஸ் அண்ணி..” என்று தாராளமாகவே சிரித்தவள், சாப்பிட்டுக் கொண்டே “ம்மா..லன்ச் ரெடியா.. “என்று கேட்க

                     “வந்து எடுத்து போட்டுக்கோ.. எல்லாம் ரெடியா இருக்கு..” என்று உள்ளிருந்து குரல் வந்தது. அவள் முனகிக்கொண்டே எழ, “நீ சாப்பிடு..” என்று விட்டவள் தானே மூவருக்கும் லன்ச் பாக்ஸை தயார் செய்து எடுத்து வர, “நீங்க தெரியாம இவங்ககிட்டே சிக்குறீங்க அண்ணி.. உங்களையே தினமும் செய்ய விட்டுடுங்க ரெண்டும்… சரியான சோம்பேறிங்க..” என்று பிரசன்னா எச்சரிக்க

                  “ஆமா.. அதை இவன் சொல்றான்.. இவனுக்கே நாந்தான் கட்டி கொடுப்பேன்.. இவனை நம்பாதீங்க அண்ணி..” என்று கூறிவிட்டு தானும் கிளம்பினாள் வானதி. வந்தது முதல் இப்போது வரை ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக செல்லும் காவேரியை தான் பார்த்திருந்தாள் தேவா..

               தேவா பரிமாற வரும்போது கூட “போதும்..” என்ற வார்த்தையோடு எழுந்து சென்று விட்டிருந்தாள். ஏன் என்று புரியாத போதும் அவளின் செயல்கள் காயப்படுத்தியது தேவாவை. அவர்கள் கிளம்பி விடவும் அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் பார்வதியுடன் சென்று நின்று கொள்ள, அந்த நேரம் தான் உள்ளே நுழைந்தார் சங்கரி.

                   தேவாவை கண்டவர் ஒரு நொடி அதிர்ந்தாலும், காட்டிக் கொள்ளாமல் அலட்சியமாக உள்ளே நுழைய, அங்கே சமையல் பெரும்பாலும் முடிந்திருந்தது. சங்கரி “நீங்களே செஞ்சிட்டிங்களாக்கா.. ” என்று கேட்க

                 “தேவா காய் நறுக்கி கொடுத்தா சங்கரி..ஒத்தாசைக்கு அவ இருக்கவும் வேலை வேகமா முடிஞ்சிடுச்சு.. நீ மத்த வேலையை பாரு..” என்று கூறியவர் பாதிரிங்களை ஒதுக்க தொடங்க “ஏன்?? நான்தானே காய்கறி நறுக்கி கொடுப்பேன் தினமும்.. இன்னிக்கு என்ன..” என்று அவர் நொடிப்பாக கேட்க

                 “இதுல என்ன இருக்கு.. அவளும் பழகணும் தானே.. அதோட அவ சீக்கிரமே நறுக்கி கொடுக்கவும் தான் பிள்ளைங்களுக்கு அப்பளமும், ஊறுகாயும் இல்லாம பொரியலை கொடுத்து விட முடிஞ்சுது..விடு..” என்றவர் வேலையை தொடர, சங்கரி அவர்கள் இருவரையும் சற்றே கோபமாக பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

                  பார்வதி அவரை கண்டுகொள்ளாமல் வந்து அமர்ந்தவர் தனக்கான உணவை எடுத்து வைத்துக் கொண்டார். கூடவே மருமகளுக்கும் எடுத்து வைக்க, தேவாவுக்கு ரகுவின் ஞாபகம் வந்தது.. அவன் சாப்பிட வரவே இல்லையே.. மாமாவும்.? என்று அவள் யோசனையாக இருக்க

                    “உன் புருஷன் பதினோரு மணிக்கு முன்னால சாப்பிட மாட்டான்.. அவனுக்காக எல்லாம் பார்த்திட்டு இருக்க கூடாது..சாப்பிடு..” என்று அவர் சொல்லி கொண்டிருக்கும்போதே வந்து சேர்ந்தான் ரகு.

                 “நல்லா கிளாஸ் எடுக்கறீங்க மா..” என்று அன்னையை முறைத்து கொண்டே அவன் வந்து அமர,

              “ஏன் இல்லாததையா சொன்னேன்.. செய்யறவன் தானே நீ.. என்ன இன்னிக்கு அதிசயமா எட்டு மணிக்கெல்லாம் வந்துட்ட..” என்று கேட்க

                      “கொஞ்சம் அவசர வேலை. சரக்கெடுக்க கடலூர் வரைக்கும் போறேன்..” என்று அவன் பதில் கூற, கண்கள் மனைவிடம் பதிந்து மீண்டது. இவர்களை வேடிக்கை பார்த்தாளே தவிர வாயை திறக்கவில்லை.

                      “நேத்து தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு ரகு.. நீ பாட்டுக்கு எப்பவும் போல வேலையை இழுத்து போட்டுக்காத.. விருந்துக்கு ஏற்பாடு பண்ணனும் ன்னு அப்பா சொல்லிட்டு இருந்தாரு.. தேவா வீட்ல இருந்து மறுவீட்டுக்கு அழைக்கவும் வருவாங்க.. அங்கேயும் போற மாதிரி இருக்கும்..

                      “எல்லாத்தையும் யோசிக்கணும்.. சும்மா வேலை வேலை ன்னு ஓடிட்டே இருக்க கூடாது..” என்று அவர் கூறிக் கொண்டிருக்க

                      “விருந்துக்கு ஏற்பாடு எல்லாம் அப்பா பார்த்துப்பாங்க… நான் கடையை பார்த்தா போதும்.. அதோட மறுவீட்டுக்கெல்லாம் இப்போ முடியாதும்மா.. கொஞ்ச நாள் போகட்டும்.. அப்புறம் பார்த்துக்கலாம்.” என்று அவன் சாவகாசமாக கூற, தேவாவின் முகம் வாடிவிட்டது.

                       பார்வதி “என்னடா பேசுற.. கல்யாணம் முடிஞ்சி மறுவீட்டுக்கு போகாம இருப்பியா, பார்க்கிறவங்க என்ன பேசுவாங்க..” என்று அவர் எடுத்து கூற

                      “அம்மா.. கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா.. என்ன பேசுவாங்க, என்ன பண்ணாலும் பேசிட்டே தான் இருப்பாங்க.. இப்போ மறுவீட்டுக்கெல்லாம் போக முடியாது.. நீங்க பேசிடுங்க அப்பாகிட்ட.. அவ்ளோதான்..” என்றவன் கோபமாக எழுந்து செல்ல, தேவாவுக்கு அதற்கு மேல் உணவு இறங்கவில்லை.

                     கண்கள் கலங்கி இருக்க, அதை பார்வதிக்கு காட்டாமல் மறைத்து கொண்டவள் கையை கழுவி கொண்டு தன்னறைக்கு வந்துவிட்டாள். அங்கே இருந்த அந்த ஒற்றை நாற்காலியில் அமர்ந்து கொண்டவள் கால்களை மடக்கி அதில் முகம் புதைத்துக் கொண்டு அமர்ந்துவிட, கண்களில் கண்ணீர் பெருகியது.

                    மனம் தன் பாட்டியை தேடி ஏங்க, “அழைத்து செல்லமாட்டான்..” என்ற நினைவே அழ வைத்தது. “அப்படி என்னை பிடிக்காம ஏன் கல்யாணம் செய்யணும்.. நானாவது என் பாட்டியோடவே நிம்மதியா இருந்து இருப்பேன்ல..என்னை ஏன் இப்படி அழ வைக்கிறாங்க..” என்று நினைத்து கொண்டவள் கண்ணீருடன் அமர்ந்து விட்டாள்.

                  அவள் இருக்கும் இடத்திலிருந்து சென்னை ஒன்றும் மிகப்பெரிய தூரம் இல்லை. அவளை கட்டி வைத்திருக்கும் இந்த குடும்பமும் அவளை தடுக்க முடியாது. அப்படி கேட்டுக் கொள்பவளும் இல்லை அவள். அவளை இங்கே நிற்க வைத்து அவள் பாட்டியின் வார்த்தைகள்.

                   “என்ன நடந்தாலும் இனி உனக்கு அதுதான் வீடு தேவா.. நீ இந்த வீட்டுக்கு ரகுவோட தான் வரணும்..நீ சின்ன பெண்ணில்ல, புரிஞ்சி நடந்துக்கணும்.. இனி அதுதான் உன் வாழ்க்கை.. பழகிக்கணும்..” என்று அவர் அறிவுரையாக கூறி அனுப்பி வைத்திருக்க, நினைத்து நினைத்து மருகி கொண்டிருந்தாள்.

                 தனக்கு தெரியாமல் ஏதோ இருக்கிறது” என்பது வரை புரிய அதன் அடியும்,முடியும் புரியாத நிலை.

                       இவள் தன்னில் உழன்று கொண்டிருக்கும்போதே ரகு அந்த அறைக்குள் நுழைய அவன் வருகையை கூட உணரவில்லை அவள். கையை கட்டிக்கொண்டு கால்களில் முகம் புதைத்து அமர்ந்திருக்க, “என்ன இப்போ, கெஞ்சி கொஞ்சி சமாதான படுத்தணுமா..” என்று தான் எண்ணம் ஓடியது ரகுவிற்கு.

                     சலிப்பாக உணர்ந்தவன் அவள் அருகில் சென்று நிற்க, அப்போது தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள் தேவா. சட்டென கண்களை துடைத்துக் கொண்டவள் கால்களை பிரித்து எழுந்து நிற்க, அவளை அசையாமல் பார்த்தவன் “எதுக்கு இப்போ இந்த அழுகை..” என்று கேட்க, வழக்கம் போல் அவள் தலையசைக்க

                  “உனக்கு வாய் இல்லையா..” என்று சூடாக வந்து விழுந்தது அடுத்த வார்த்தைகள்.

               கண்கள் கலங்கி போக “உங்களுக்கு பிடிக்காம தான் என்னை கல்யாணம் செஞ்சீங்களா..” என்று மெல்லிய குரலில் தேவா கேட்டுவிட

               “நம்ம கல்யாணம் எப்படி நடந்துச்சு ன்னு தெரியும்ல உனக்கு.. நீயே என்னை ரொம்ப பிடிச்சு தான் கட்டிகிட்டியா..” என்று அவன் பதில் கேட்க, என்ன சொல்வது என்று தெரியவில்லை தேவாவுக்கு.

                 அடுத்து அவனே “இப்போ எதுக்கு இந்த சந்தேகம்..” என்றும் கேட்க

               “உங்களுக்கு பிடிக்கலைன்னா, என்னை என் வீட்டுக்கு அனுப்பிடுங்க..” என்று சட்டென பேசிவிட்டாள். பேச வேண்டும் என்று பேசவில்லை தான்.ஆனால் அவன் குரலில் இருந்த அலட்சியம் தேவாவை பேச வைத்திருந்தது.

                 அவள் பேசிய வார்த்தைகளில் ரகுவின் ஆத்திரம் தலைக்கேற, அவளை அடிக்கவே கையை ஓங்கிவிட்டான். அதன்பின்னரே தன் செய்கை புரிய கையை இறக்கி கொண்டவன் அவள் முழங்கையை பற்றிக் கொண்டு “உன் கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது.. உனக்கு நான் வேண்டாம் ன்னா நீயே கிளம்பி போடி.. ” என்றவன் அவளை அலட்சியமாக உதற கட்டிலில் விழுந்து விட்டாள்.

                அவன் “போடி.. “என்று கூறிவிட்டதில் அழுகை பெருக “நிச்சயமா போய்டுவேன்.. என் பாட்டியோட வார்த்தைக்காக தான் இங்கே இருக்கேன்.. அவங்க வர சொன்னதும் நிச்சயம் கிளம்பிடுவேன்..” என்று அழுதுகொண்டே கூறியவள் தலையணையில் முகத்தை புதைத்துக் கொள்ள, அழுகையில் உடல் குலுங்கியது.

                 அவள் “பாட்டிக்காக” என்றதில் மீண்டும் கோபம் வர, அவளை கண்டு கொள்ளாமல் வெளியே கிளம்பி விட்டான் ரகு. அவள் அழுவதும் கோபத்தை கொடுக்க அதற்குமேல் அங்கிருந்தால் வார்த்தைகள் தடித்து விடும் என்றே அவன் வெளியேறியது. ஆனால் தேவாவோ தன்னை ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டானா இவன்?? என்று இன்னுமின்னும் கலங்கி போனாள்.

Advertisement