Advertisement

காதல் தருவாயா காரிகையே 03

                        ரகுவின் வீடு அடுத்தடுத்து மூன்று கட்டுகளை கொண்ட பழைய காலத்து வீடு. வீட்டின் கீழ் தளத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அறைகள் இருந்தது.முத்துமாணிக்கம்- பார்வதி தம்பதி ஒரு அறையில் தங்கி கொள்ள, அவர்களுக்கு எதிர்புறம் வேலுமாணிக்கம்- சங்கரியின் அறை.

                     அடுத்த பகுதியில் வானதி, காவேரி இருவரும் ஒரு அறையில் இருக்க, அதற்கு எதிரில் வேலுவின் மகன் பிரசன்னாவின் அறை. அந்த பகுதியில் இருந்த மற்றொரு அறை ராமசந்திரன் – சஞ்சனாவின் அறையாக இருக்க, கடைசி பகுதியில் வீட்டின் சமையல் அறை ஒருபுறமும், அதற்கு அருகில் பூஜை அறையும் அமைந்திருந்தது.

                   அந்த பின்கட்டின் கடைசிப்பகுதியில் மரத்தினாலான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருக்க, முதல் தளம் அந்த பின்கட்டில் மட்டும் தளம் போடப்பட்டு மேலே ஒரு ஓடு வேய்ந்த கூரை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த படிகளின் முடிவில் அந்த சிறிய அறை அமைந்து இருக்க,தனிமை விரும்பியான ரகுநந்தனுக்கு அந்த அறை இதுவரை ஒரு அமைதியையே கொடுத்து வந்தது இதுநாள் வரை.

                   அதே வீட்டில் பிறந்து இருந்தாலும் வீட்டில் நடக்கும் சில நிகழ்வுகள் பிடிக்காமல் தான் தம்பியின் அறையில் தங்கி இருந்தவன் தன் சொந்த செலவில் தளம் எடுத்து மேலே தனக்கென ஒரு அறையை தடுத்துக் கொண்டிருந்தான்.

                     இதுவரை அவன் தனியனாக இருந்திருக்க, இப்போது தேவா, வானதியுடன் அந்தஅறைக்கு வந்திருந்தாள். வானதி தேவாவை நேற்று இரவுதான் பார்த்திருக்க, அவளுக்கு இயல்பாக பேச்சுகள் வரவில்லை. அந்த அறையில் இருந்த கட்டிலில் தேவாவை உட்கார சொன்னவள் இப்போது வந்துவிடுவதாக சொல்லி கீழே இறங்கிவிட்டாள்.

                    தேவாவுக்கு அந்த அறையில் மூச்சு விடவே சிரமமாக இருந்தது. அறையில் காற்றுக்கு குறைவில்லை என்றாலும் அவள் மனதில் நிம்மதி குறைவாக இருந்தது. அதன்பொருட்டு அவள் சுவாசம் இயல்பில் இல்லாமல் போக, ஒரே நாளில் முழுதாக மாறிவிட்ட வாழ்க்கை வேறு பூதமாக நின்று மிரட்டியது.

                   அதுவும் தாலி கட்டியவனின் முரட்டு பேச்சும், அவன் கோபப்பார்வைகளும் எட்டியே நிற்கும்படி அறிவுறுத்த, மனம் தானாக தன் பிறந்த வீட்டை தேடியது. தந்தையின் பாசத்திற்கும், பாட்டியின் வாஞ்சைக்கும் மனது தானாக எங்க ஆரம்பிக்க, கண்களில் நீர் கட்டிக் கொண்டது.

                     ஏன் இப்படி பண்ணீங்க பாட்டி?? நான் உங்களோடவே இருந்திருப்பேன்ல..” என்று மானசீகமாக அவரிடம் சண்டையிட்டவள் ஏகுநேரம் அப்படியே அமர்ந்து விட்டாள். மாலை நெருங்கும் வேளையில் பார்வதி அவளை தேடிவர வாசலில் வந்து நின்றவரை கண்டதும் சட்டென கண்களை துடைத்துக் கொண்டாள்.

                     பார்வதி அறைக்குள் நுழைந்தவர் “என்னடா வீட்டு ஞாபகமா..” என்று பாசமாக கேட்க, லேசாக சிரிக்க முயன்றவள் ஆம் என்று தலையசைத்தாள். அவரின் பின்னால் முத்துமாணிக்கமும், வேலுவும் அந்த அறைக்கு வர அவர்கள் மூவருமே தேவாவை பாசத்துடன் தான் பார்த்து நின்றனர்.

                     அதுவும் முத்து மாணிக்கம் “என் தங்கையை பார்க்கிற மாதிரியே இருக்குடா… என் தங்கையோட எங்க உறவு முடிஞ்சே போச்சு ன்னு கவலைப்படாத நாள் இல்ல.. கடவுள் எங்க வேண்டுதலை கேட்டுட்டாரு போல… அதான் என் தங்கை மகளை எங்க கிட்டயே கொடுத்துட்டாரு..

                   “இது உன் அம்மா வீடுடா.. உன் அம்மா சின்னப்பிள்ளையில ஓடி ஆடி விளையாண்ட வீடு.. இங்கே உனக்கு இல்லாத உரிமை யாருக்குமே கிடையாது.. இப்படி தயங்கி நிற்காதடா… என்ன சங்கடம் இருந்தாலும் மாமாகிட்ட சொல்லணும்..சரியா??” என்று அவர் கேட்க

                   அவர் சொன்னதில் “உன் அம்மா வாழ்ந்த வீடு..” என்பது மட்டும்தான் அவள் மனதில் உடனே பதிந்தது. பார்த்த நியாபகமே இல்லாத தன் தாய் இந்த வீட்டில் தான் வாழ்ந்து இருக்கிறார் என்று கேட்டதில் மனம் தானாகவே தன் அன்னையை தேடியது. தாய் இருந்திருந்தால் தன்னோடு இப்போது இங்கே வந்திருப்பாரே.. தான் இப்படி தனியாக தவிக்க வேண்டி வந்திருக்காதே என்ற எண்ணமும் தோன்ற எதிரில் இருப்பவர்களை மறந்து அமர்ந்திருந்தாள் அவள்.

                 வேலு “தேவாம்மா ..” என்று அவள் தலையில் கையை வைக்க, “ஹான்..” என்று சட்டென அதிர்ச்சியானவள் அதன் பின்பே தெளிந்தாள். நடந்த நிகழ்வுகளில் அவள் மிகவும் பதித்து இருப்பது புரிய பார்வதி “நீங்க கீழே இருங்க.. நான் தேவாவை கீழே கூட்டிட்டு வரேன்..” என்று அவர்களை அனுப்பிவிட்டாள்.

                   ஆண்கள் இருவரும் வெளியேற, அந்த அறையில் இருந்த குளியல் அறையில் அவளை முகம் கழுவ சொன்னார். அவள் வெளியே வர, புடவையை மாற்றிக் கொள்ள சொல்லி வெளியேறியவர் அவள் புடவைக்கி மடிப்பு எடுத்து முடிக்கும் நேரம் அறைக்குள் நுழைந்திருந்தார்.

                 “பரவாயில்லையே.. சேலை நல்லா கட்டிட்டியே.. இந்த வனிக்கு  இன்னும் நாந்தான் புடவை கட்டி விடணும்…” என்று செல்லமாக அலுத்துக் கொண்டே, அவளை கட்டிலில் அமர வைத்தார் பார்வதி.

                        தான் கொண்டு வந்த பெட்டியில் இருந்த நகைகளை வெளியே எடுத்தவர் “உன் புருஷனுக்கு விவரம் கிடையாது தேவா… பிறந்த வீட்லயிருந்து வர பொண்ணை இப்படியா கூட்டிட்டு வருவாங்க.. பார்க்கிறவளுங்களுக்கு இளப்பமா போயிடாது..போடா வேண்டாம் ன்னு சொல்றவன் நகை வாங்கி கொடுத்து கூட்டி வந்திருக்கணும் இல்ல..” என்று மகனை திட்டிக் கொண்டே, தன் கையிலிருந்த ஆரத்தை அவளுக்கு அணிவிக்க முயல

                       “இருக்கட்டும் அத்தை…எனக்கு இதே போதும்..” என்று தயங்கியபடியே மருமகள் கூற

                    “இதெப்படி போதும்.. இன்னிக்கு தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு.. சொந்தபந்தம் எல்லாம் என் மருமகளை பார்க்க வருவாங்க… அவங்க முன்னாடி இப்படியே நிற்பியா…போட்டுக்கோ..” என்று அதட்டியவர் அவள் கழுத்தில் மாட்டியே விட்டார்.

                     இன்னும் முகப்பு வைத்த சங்கிலி, இரண்டு கைக்கும் வளையல்கள், நான்கு மோதிரங்கள் மாட்டி அழகு பார்த்தவர் “ம்ம்.. இப்போதான் அழகா இருக்க..” என்று விட்டு “தலை வாரிக்கோ வா..” என்று கையில் சீப்பை எடுத்துக் கொண்டார்.

                          அழகாக தலையை வாரி பின்னலிட்டவர் மருமகளை கையேடு அழைத்துக் கொண்டு கீழே இறங்கி விட்டார். தன் ராஜ்ஜியமான சமையல் அறைக்கு முதலில் அழைத்து செல்ல, குளிர்சாதன பெட்டியில் இருந்து மல்லிகை பூவை எடுத்து சாரமாக அவள் கூந்தலில் வைத்துவிட்டு நெட்டி முறித்துக் கொண்டார்.

                   மாலையாகி இருக்க அனைவருக்கும் தேனீர் தயாரிக்க பாலை அடுப்பில் வைத்தவர் “உனக்கு சமைக்க தெரியுமா…?” என்று அவளிடம் பேச்சு கொடுக்க, தெரியும் என்பது போல் தலை மட்டுமே அசைந்தது.

                   அவள் பதில் சொல்லாததால் “வேற என்னல்லாம் தெரியும்?? ” என்று அவர் மீண்டும் கேள்வி கேட்க

             “வேற.. வேற என்ன??” என்று முழித்துக் கொண்டு நின்றாள் மருமகள்..

             பார்வதி சிரித்துக் கொண்டே “என்னவெல்லாம் சமைப்ப..” என்று கேட்க

            “எல்லாமே தெரியும்.. ஓரளவுக்கு சமைப்பேன்.. பாட்டி பழகி கொடுத்திருக்காங்க..” என்று மென்மையான குரலில் கூற

               “டீ வைக்க தெரியுமா..” என்று அடுத்த கேள்வி வந்தது. அவள் மண்டையை உருட்ட “அப்போ இன்னிக்கு உன்னோட டீ தான் எனக்கு.. எங்கே எனக்கு டீ போடு..” என்றவர் அடுப்பை விட்டு சற்று தள்ளி நிற்க, புடவையை இடுப்பில் சொருகி கொண்டு டீ வைக்க தயாரானாள் தேவா.

                  மாமியார் ஒரு சிரிப்போடு டீத்தூள், சர்க்கரை, டம்ளர்கள் என்று எடுத்து அவள் அருகில் வைக்க, வெற்றிகரமாக டீயை முடித்து பார்வதியிடம் நீட்டி விட்டாள். பார்வதி தான் எடுத்துக் கொண்டு அவளுக்கும் ஒரு டம்ளரில் ஊற்றிக் கொடுக்க அங்கேயே நின்று குடித்து முடித்தனர் இருவரும்.

                  மற்ற அனைவருக்கும் பார்வதியே டீ வைத்தவர், அவளை தன்னுடனே நிற்க வைத்துக் கொண்டிருந்தார். பெரிய பாத்திரத்தில் அவர் டீ கலந்து கொண்டிருக்க, அவரை அதிசயமாக பார்த்திருந்தாள் தேவா.

                 டீயை கலந்து வைத்து விட்டவர் தன் கணவனுக்கும், கொழுந்தனுக்கும் மட்டும் டம்ளர்களில் வடிகட்டி எடுத்து சென்று கையில் கொடுத்தார். மற்றவர்கள் அவரவர் வசதிக்கேற்ப அவர்களே வந்து குடித்துக் கொள்வது தான் எப்போதும். பிளாஸ்கில் ஊற்றி வைத்து விட வேண்டியது தான் என்று மருமகளின் சொல்லிக்கொண்டே அவர் அமர்ந்திருக்க, அந்த நேரம் தான் பின்கட்டுக்கு வந்தாள் சஞ்சனா.

                  அவளை கண்டவுடன் தேவாவின் முகம் மாறிப்போக, பார்வதி அமைதியாகவே அமர்ந்திருந்தார். தன் கையில் இருந்த பிள்ளையை தன் மாமியாரிடம் கொடுத்தவள் பார்வை தேவாவின் கையிலும், கழுத்திலும் பதிந்து மீள, கொதித்துக் கொண்டு கொண்டு வந்தது அவளுக்கு.

                      அது  அனைத்தும் தன் மாமியாரின் நகைகள் என்று முதல் பார்வையிலேயே புரிந்து விட்டது சஞ்சனாவுக்கு. வந்த முதல் நாளே அவளுக்கு தன் நகைகளை தூக்கி கொடுத்திருந்த மாமியாரின் மேல் ஆத்திரமாக வர, கோபத்துடன் திரும்பியவள் “என்ன அத்தை.. மருமக மேல பாசம் பொங்குது.. வந்த முதல் நாளே இருந்த மொத்த நகையையும் தூக்கி கொடுத்துட்டீங்க போல..” என்று நக்கலாக கேட்க

                      “அந்த நகையெல்லாம் என்னோடது தானே.. யாருக்கு கொடுக்கணும்ன்னு எனக்கு தெரியும்.. நீ வந்த வேலையை பாரு..” என்று அவர் பதில் கொடுக்க

                      “அதெப்படி தூக்கி கொடுக்க முடியும்.. நானும் இந்த வீட்டு மருமகத்தானே.. என்னை விட்டுட்டு எப்படி கொடுப்பீங்க.. அதுவும் எல்லாம் பொதுவில் இருக்கும்போது..” என்று மீண்டும் சத்தமாக அவள் கத்த, அவள் சத்தத்தில் தான் சங்கரி அறையை விட்டு வெளியே வந்தார். வானதியும், காவேரியும் கூட அறையிலிருந்து வெளியே வந்தவர்கள் வேடிக்கை பார்த்து நிற்க, தேவாவிற்கு அவமானாக இருந்தது அந்த நொடிகள்.

                        இதெல்லாம் பார்த்ததே இல்லை அவள். இப்போது அவள் அணிந்திருக்கும் நகைகளை முன்னிட்டு சண்டை அங்கே. என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாக அவள் அமர்ந்துவிட, சங்கரி “என்ன சஞ்சுமா.. எதுக்காக கத்திட்டு இருக்க… நாம பேசி இந்த வீட்ல என்ன நடந்திருக்கு.. நீ ஏன் உன் வேலையை விட்டுட்டு வந்து இங்கே நிற்கிற..” என்று என்ன விஷயம் என்று தெரியாமலே பேசிக் கொண்டிருக்க

                       சஞ்சனாவோ “இங்கே பாருங்க அத்தை.. இந்த வீட்டுக்கு மூத்த மருமக நான் இருக்கும்போது, இன்னிக்கு வந்தவளுக்கு நகையெல்லாம் தூக்கி கொடுத்தாச்சு… என் புருஷனை என்ன தவிட்டுக்கா வாங்கிட்டு வந்தாங்க..” என்று அவரிடமும் பெரிய குரலில் அவள் நியாயம் கேட்க

                          சங்கரி அதிர்ந்து தான் பார்த்தார் தேவாவை.. “என்னக்கா.. என்ன பண்ணி வச்சிருக்கீங்க… ரெண்டு பொண்ணுங்களை வச்சிருக்கோம் ஞாபகம் இருக்கா.. புது மருமக வந்ததும் என் அண்ணன் பொன்னையும் மறந்துடுவீங்களா.. ஏற்கனவே ஒருத்தியை ஆசைகாட்டி மோசம்  பண்ணியாச்சு.”

                           “இப்போ இவளையும் அம்போன்னு விட போறிங்களா.. இவை உங்க மகனை கட்டிக்கிட்டு இந்த வீட்டுக்கு வாழத்தானே வந்திருக்கா..” என்று அவர் பேசி முடிக்க

                       பார்வதி நிதானமாக அவர்களை பார்த்தவர் “பேசி முடிச்சாச்சா.. இந்த நகையெல்லாம் என் அம்மா வீட்ல எனக்கு போட்டது.. இதை நான் யாருக்கு வேணாலும் கொடுப்பேன்.. அது என்னோட முடிவு.. ஏன் கொடுக்கறீங்க ன்னு கேட்டா என் மகள் மட்டும்தான் கேட்கலாம்…வேற யாருக்கும் உரிமை இல்லை..

                      “எனக்கு ரெண்டு பொண்ணுங்க இருகாங்க ன்னு எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு.. கூடவே உன் அண்ணன் மக நியாபகமும் திவ்யமா இருக்கு… என் மாமியார் கொடுத்திட்டு போன நகையெல்லாம் லாக்கர்ல பத்திரமா இருக்கு.. நீங்க கவலைப்பட வேண்டியதில்லை..”

                      “அதோட உன் அண்ணன் பொண்ணு ஒருத்தியை கட்டி வச்சிட்டே நான் என் ஒரு பிள்ளையை மொத்தமா தாரை வர்த்திட்டேன்.. இன்னும் இன்னொருத்தியையும் கொண்டு வந்தா வயசான காலத்துல பிச்சை எடுக்க விட்டுடுவாளுங்க ரெண்டு பேரும்..

                        “உன் அண்ணன் மகளை ரகுவுக்கு கட்டிகிறதா நானோ, என் மகனோ பேசி இருக்கோமா, அப்புறம் எந்த தைரியத்துல நீ இப்படி பேசிட்டு இருக்க..” என்று பார்வதி சூடாக கேட்டுவிட

                        “நேத்து வந்தவ முன்னாடி என்னை அசிங்கப்படுத்துறீங்களா நீங்க.. பெரிய மாமாகிட்ட இவங்க கல்யாணம் நடந்தப்போவே என் அண்ணன் பேசி இருந்தாங்க…” என்று அவர் அப்பொதுவும் விடாமல் வாதம் செய்தார்.

                         “வீட்டுக்கு புதுசா வந்தவளை வா ன்னு கூட கூப்பிட வரல நீ.. இப்போ குறை சொல்ல மட்டும் முன்னாடி வந்து நிற்கிறியா.. இதுல நான் அசிங்க படுத்துறதா பேச்சு வேற.. போய் அவங்கவங்க வேலையை பாருங்க…” என்றவர் “நீ வா..” என்று தேவாவை அழைத்துக் கொண்டு வீட்டின் முன்பக்கம் வந்துவிட்டார்.

                           ஊரிலிருந்த உறவுகள் ஒவ்வொருவராக புதுப்பெண்ணை பார்க்க வர, நேரம் ஓடியது..தேவாவும் அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு வந்து கொண்டிருந்தாள். அவர்கள் எல்லாம் கிளம்பும் நேரம் தான் வீட்டிற்கு வந்தான் ரகு.

                         வந்தவன் அங்கே இருந்தவர்களை வாங்க என்று அழைத்து மரியாதைக்காக இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு வீட்டினுள் சென்றுவிட்டான். “எல்லார்கிட்டயும் இப்படித்தானோ..” என்று தோன்றிவிட்டது தேவாவுக்கு.

                         அவன் முகம் கழுவி வரவும் முத்து மாணிக்கமும், வேலுவும் அவனுடன் வந்து அமர, அவன் தங்கைகளும், தம்பியும் கூட சேர்ந்து கொண்டனர்.  பார்வதி  உணவு எடுத்து வைக்க, முத்து மாணிக்கம் மருமகளையும் தன்னோடு அமர்த்திக் கொள்ள தேவாவுக்கு உணவு இறங்கவே இல்லை.

                         தட்டில் வைத்த மூன்று இட்லியோடு அவள் எழுந்து கொள்ள, அவளை கேலியாக பார்த்தான் ரகு. அவன் பார்வையை உணர்ந்தாலும், எதற்கென்று புரியவில்லை அவளுக்கு. அமைதியாகவே அந்த நேரம் கழிய, உண்டு முடித்தவன் தன் அறைக்கு சென்றுவிட்டான்.

                      பார்வதி பாத்திரங்களை எடுத்து சமையல் அறையில் வைத்து விட்டவர் தேவாவை அவள் அறைக்கு அனுப்பி விட்டார். அந்த படிகளின் அருகில் வந்துவிட்டவள் பயத்தில் அப்படியே நின்றுவிட, அவள் பின்னால் வந்த பார்வதிக்கு சிரிப்பு வந்தது.

                  அந்த படிகள் மேலே முடியும் இடத்தில தான் விளக்கு பொருத்தி இருக்க, அதுவும் ஒரு கோடாக ஒரு ஓரத்தில் மட்டுமே விழ, அந்த படிகள்  முழுவதும் இருட்டாக இருந்தது. அந்த இருட்டு பழக்கம் இல்லாததால் அவள் தவித்து நிற்க, பார்வதி அவள் கையை பிடித்துக் கொண்டவர் “ரகு..” என்று குரல் கொடுத்தார்.

                  மகன் எட்டி பார்க்கவும் “கீழே வா..” என்று அழைத்தவர் “அவ பயப்படறா பாரு.. முதல்ல இங்கே ஒரு லைட்ட போடு.. இல்ல நாளையில இருந்து நீ போகும்போதே கூட்டிட்டு போ..” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தது சென்றார் அவர்.

                  ரகு தேவாவின் கையை பிடித்துக் கொண்டவன் அந்த படிகளில் ஏற, பயத்தோடு கால்களை எடுத்து வைத்து அவனை பின்தொடர்ந்தாள் மனைவி. நடுவில் ஒரு படியில் அவள் தடுமாறி கீழே விழப்பார்க்க, “அம்மா..” என்று பயத்தில் அலறிவிட்டாள் அவள்.

                  ரகு அவள் கைகளை அழுத்தமாக பிடித்துக் கொள்ள, நெஞ்சில் கைவைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் அவன் கை விரல்களை மேலும் அழுத்தமாக பற்றிக் கொள்ள, அவள் பயத்தை உணர்ந்தவன் அவளை கைகளில் தூக்கி கொண்டான்.

               தேவா அதிர்ச்சியில் உறைந்து போனவளாக பார்க்கும்போதே அவளை கைகளில் ஏந்திக் கொண்டு படியேறியவன், தன் அறைக்குள் வந்து தான் அவளை கீழே இறக்கி விட்டான். தேவா  அதிர்ச்சியிலேயே இருக்க, “ஓய்.. என்ன..” என்று அவன் அதட்டவும் தான் சுயநிலை அடைந்தாள்.

               “ஒன்றுமில்லை” என்பது போல் அவள் தலையசைக்க, “இங்கே வா..” என்பது போல் தலையசைத்தான் அவன். அவள் புரியாமல் நிற்க, அவளை மெல்ல நெருங்கியவன் இடையில் கைகொடுத்து தன்னோடு சேர்த்துக் கொண்டான் அவளை.

                 தேவா அவனை இப்போது நிச்சயம் தவிப்பாக தான் பார்த்து கொண்டிருந்தாள். அவள் பார்வையை உணர்ந்தவன் “என்ன..” என்று மீண்டும் கேட்க, இப்போதும் தலையசைப்பு தான். ரகு சிரித்தவன் “ஏன் வாய் திறந்து பேசமாட்டியா..” என்று கேட்க, வார்த்தை எங்கே வந்தது அவளுக்கு.

                 அவள் திரு திரு வென முழித்துக் கொண்டு தான் நின்றாள் அவனின் இந்த பரிமாணங்களில். அவன் காலையிலிருந்து நடந்து கொண்ட விதத்திற்கு தன்னை நெருங்க மாட்டான் என்று முடிவு செய்திருந்தாள் அவள்.

                   இன்று நடந்த திருமணமே மனதில் சரியாக பதியாமல் முரண்டு பிடிக்க, இப்போது அடுத்த கட்டத்திற்கு அழைத்து கொண்டிருக்கிறான் அவன். மனம் முரண்டினாலும் “எப்போ இருந்தாலும் நடக்க போறது தானே..” என்று அவள் தன்னையே தேற்றிக் கொண்டு இருக்க, அவன் கைகள் இடுப்பிலிருந்து முதுகில் ஏறி இருந்தது.

                     அவள் கண்களையே பார்த்திருந்தவன் “என்ன யோசிச்சாலும் நீயும் நானும்தான்.. அப்புறம் ஏன் தள்ளி இருக்கணும்… இந்த நிமிஷத்தை ஏத்துக்கோ ” என்று அவளை மீண்டும் கைகளில் ஏந்தி கொள்ள, நிச்சயம் தேவா தயாராக இல்லை. ஆனால் மறுத்தால் கோபம் கொள்வானோ என்று பயமாக வேறு இருக்க, அமைதியாக அவன் செயல்களுக்கு தன்னை ஒப்புக்கொடுக்க ஆரம்பித்து இருந்தாள் அவள்.

Advertisement