Advertisement

காதல் தருவாயா காரிகையே 01

                      அந்த திருமண மண்டபம் முழுவதும் பல வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருக்க, மண்டபம் முழுவதும் மக்கள் வெள்ளம் என்று சொல்லும்படி கூட்டம் நிறைந்திருந்தது. கூட்டம் என்றால் சாதாரணமாவார்கள் இல்லை, அந்த மண்டபத்தின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கார்கள் உள்ளே இருப்பவர்களின் வசதியை பற்றி தெரிவித்துவிடும்.

                        எங்கும் எதிலும் குறை சொல்ல முடியாதபடி அப்படி ஒரு நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அத்தனையும். அந்த மண்டபத்தின் ஒவ்வொரு இண்டு  இடுக்கிலும் ஆடம்பரம் தலை நிமிர்ந்து நிற்க மேடையில் நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

                      திருமணத்திற்கு முதல் நாள் இரவு நிச்சயம் என குறித்திருக்க, அடுத்த நாள் திருமணம் அன்று மாலை வரவேற்பு என்று அமர்க்களமாக திட்டமிட்டிருந்தார் நகரின் மிக முக்கிய தொழிலதிபர் குணசேகரன். அவரின் விருப்பப்படியே அத்தனையும் நடந்து கொண்டிருக்க மனிதரை கையில் பிடிக்க முடியவில்லை. அவரின் பூரிப்பு முகத்தில் தெரியும்படி ஆர்ப்பாட்டமாக சிரித்தபடி அந்த மண்டபத்தை வளம் வந்து கொண்டிருந்தார் அவர்.

                      அங்கே மேடையில் அவரின் மனைவி நிச்சயத்திற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருக்க, முதல் வரிசையில் அமர்ந்து கொண்டு நடப்பது அனைத்தையும் ஒருவித கணக்கிடலோடு பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தராம்பாள். அவர் குணசேகரனின் அன்னை.

                      அவர் முகம் எப்போதும் போல் நிர்மலமாக இருக்க, தன்னை தேடி வந்து வணக்கம் வைப்பவர்களிடம் ஆளுக்கு தகுந்தவாறு இரண்டொரு வார்த்தைகள் பேசிக் கொண்டும், தலையசைத்துக் கொண்டும் அமர்ந்திருந்தார் அவர்.

                      மேடையில் வேலையாக இருக்கும் மருமகளின் மீதே கண்ணை வைத்திருந்தவருக்கு, மனதில் ஆயிரம் எண்ணங்கள் வளம் வந்து கொண்டிருந்தது. எங்கே தவறினேன்?? என்று அவர் தன்னையே கேட்டுக் கொண்டு அமர்ந்திருக்க, நடக்கவிருக்கும் திருமணத்தை குறித்த எந்த எண்ணங்களும் இல்லை அவர் மனதில்.

                      மகனிடம் ஆயிரம் முறை பேசி இருக்க, அத்தனையும் மீறி இதோ இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறான் என்று எண்ணமிட்டவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மேடையிலிருந்து தன் மாமியாரை ஏளனமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டு தன் வேலையில் கவனமாக இருந்தார் சாவித்ரி.

                    குணசேகரனின் இரண்டாவது மனைவி. முதல் மனைவி திருமணம் முடிந்த மூன்று ஆண்டுகளில் இறந்திருக்க, அவரின் அன்னையின் வற்புறுத்தலால் சாவித்ரியை மணம் முடித்திருந்தார் குணசேகரன். தாலி கட்டிக் கொண்ட நாள் முதலாக கணவருக்கு சிறந்த துணையாகவே இருந்து வருகிறார் சாவித்ரி.

                    அவர்களுக்கு பிள்ளைகள் என்று எதுவும் இல்லாமல் போக, குணசேகரனின் மகள் தேவநந்தனா தான் ஒரே வாரிசு. இதுவரை சிற்றன்னை என்று வித்யாசம் காட்டாமல் நல்ல முறையிலே அவளை கவனித்து வந்திருந்தார் சாவித்ரி.

                      இப்போது திருமணம் என்று யோசிக்கையில் தன் ஒரே தம்பி இளங்கோவை அவர் கைகாட்டி இருக்க, தகப்பனும், மகளும் பெரிதாக மறுக்கவே இல்லை. சற்று யோசித்த குணசேகரன் கூட வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க இளங்கோ ஒப்புக் கொண்டதில் சம்மதித்து விட்டிருந்தார். ஆனால் தேவநந்தனா தந்தையின் வார்த்தை ஒன்றுக்காக மட்டுமே சம்மதித்தது இருந்தாள்.

                  “உங்க விருப்பம்ப்பா..” என்பதே அவளது பதிலாக இருக்க, அவளுக்கு எப்படிப்பட்ட மாப்பிளை பார்க்க வேண்டும், எப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்து நினைத்தே குணசேகரன் அனைத்திலும் சிறந்ததை தேடி எடுத்திருந்தார்.

                    அவளது பாட்டியும் என் பேத்தியின் குணத்திற்கும், அவளது அழகிற்கும் எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று நினைத்து தான் பொருமிக் கொண்டிருக்கிறார் இன்னமும். இதுவரை நடந்ததை அவரால் தடுக்க முடியாமல் போயிருக்க, இனி எதையும் அனுமதிக்க முடியாது என்று முடிவு செய்து சில பல வேலைகளை செய்து வைத்திருக்கிறார் சுந்தராம்பாள்.

                      அதன் முடிவுகளுக்காகவே அவர் இப்போது காத்திருக்க, இன்னமும் முடிவு தெரிந்த பாடில்லை. இவர்  தனக்குள்ளே புலம்பிக் கொண்டு அமர்ந்திருந்த நேரம் அவர் முன் வந்து கைகுவித்தார் முத்துமாணிக்கம். அவரை கண்டவுடன் தான் சுந்தராம்பாளுக்கு சிறிது நம்பிக்கை வர, “வா முத்து வா வா..” என்று அவரை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டார்.

                   அவர் அவரது பேத்தியின் தாய் மாமன்.. குணசேகரனின் முதல் மனைவி ஜானகியின் உடன் பிறந்த அண்ணன். அவர் அருகில் அமரவும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த சுந்தராம்பாள் “வா உன் மருமகளை பார்த்திட்டு வருவோம்..” என்று அவரை மணமகளின் அறைக்கு அழைத்து சென்றார்.

                     அங்கு தேவநந்தனா தேவலோக ரதியாக தயாராகி நின்றிருக்க, சுந்தராம்பாளுக்கும், முத்து மாணிக்கத்திற்கும் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. தேவநந்தனா அப்படியே அவள் அன்னையின் மறுபதிப்பு என்றே சொல்லலாம். அழகிலும் சரி, குணத்திலும் சரி அவள் அப்படியே அவள் அன்னையை கொண்டு பிறந்திருந்தாள் அவள்.

                    முத்து மாணிக்கம் கண்களை துடைத்துக் கொண்டவர் மருமகளை தலையில் கைவைத்து ஆசிர்வதிக்க, அவர் யாரென்றே தெரியவில்லை அவளுக்கு. அவள் அறியாத பார்வை பார்க்க சுந்தராம்பாள் தங்கள் நிலையை எண்ணி நொந்து கொண்டார்.

                 தன் பேத்தியிடம் “இவன் என் மருமகன் போல.. என் அண்ணன் மகன்.. உன் கல்யாணத்துக்காக வந்திருக்கிறான் தேவா.. கால்ல விழுந்து கும்பிட்டுக்கோ.. உன் அம்மாவுக்கு இவனை ரொம்ப பிடிக்கும்.. அண்ணன் அண்ணன்னு உயிரை விடுவா.. “என்று கூற, அவர் கால்களில் பணிந்து எழுந்தாள் தேவா…

                 முத்து மாணிக்கத்திற்கு அழுகையே வரும்போல் ஆகிவிட, மறைத்துக் கொண்டவர் சுந்தராம்பாளுடன் வெளியில் வந்து விட்டார். இவர்கள் வந்து அமரவும் நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் முடிந்திருந்தது. புரோகிதர் மாப்பிளையை அழைத்து வர சொல்லி இருக்க, தன் தம்பியின் அறைக்கு விரைந்தார் சாவித்ரி.

                போகும் முன் அதே ஏளனப்பார்வை சுந்தரத்தை நோக்கி. அப்போது தான் அவர் அருகில் அமர்ந்திருந்த முத்து மாணிக்கத்தை கண்டார் அவர். உடல் லேசாக நடுங்க, “இந்தாள் எதுக்கு வந்திருக்காரு..” என்ற யோசனையுடன் தான் தம்பியின் அறைக்கு விரைந்தார் சாவித்ரி.

                 அங்கு அவரின் தம்பி அவருக்கு அதைவிட பெரிய அதிர்ச்சியை பரிசளித்து சென்றிருந்தான். ஆம்.. இளங்கோ அந்த அறையில் இல்லை. கூடவே மன்னித்துவிடுங்கள் என்று இரண்டு வார்த்தையில் ஒரு காகிதம் டேபிளின் மேல். சாவித்ரிக்கு உடல் வெளிப்படையாகவே நடுங்க, திருமணம் நின்று போகுமே என்பதைவிட, குணசேகரன் தன்னை கொன்றே விடுவார் என்ற கவலை தான் பெரிதாக இருந்தது.

                  அவர் தன் கையிலிருந்த அலைபேசியை எடுத்து தன் தம்பிக்கு அழைக்க,எடுக்கவே இல்லை அவன். வெகுநேரம் அவர் அப்படியே நின்றுவிட, குணசேகரன் மனைவியை தேடி வந்தார். சாவித்ரி நடுங்கி கொண்டு நிற்பதிலேயே எதுவோ பிரச்சனை என்பது அவருக்கு புரிந்து விட அவரை நெருங்கியவர் “என்ன சாவி.. என்ன நடந்தது.. ஏன் இப்படி இருக்க..” என்று தோளை பிடிக்க

                   உள்ளங்கைகள் வியர்த்து விறுவிறுக்க, சமாளிக்க முடியாமல் தடுமாறி தன் கையில் இருந்த காகிதத்தை கணவனின் கையில் கொடுத்தார் சாவித்ரி. குணசேகரன் அதை கையில் வாங்கி பார்த்தவர் அதிர்ச்சியில் நின்றது ஒரே நொடிதான். அடுத்த நொடி மனைவியின் கழுத்தை பிடித்து விட்டிருந்தார்.

                     “என்ன அர்த்தம் இதுக்கு… எங்கேடி உன் தம்பி ” என்று அவர் கோபத்தில் சிவந்து போன கண்களுடன் கர்ஜிக்க, அடுத்து பேசக்கூட வார்த்தை வராமல் போனது சாவித்ரிக்கு. அவர் பயத்தில் உதறிக் கொண்டு நிற்க அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார் சுந்தராம்பாள்.

                     அன்னையை கண்டதும் சிறுபிள்ளையாக தேம்பியவர் “ம்மா.. என் மகளோட வாழ்க்கை மா.. ” என்று கலங்கி நிற்க, அந்த நொடிகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார் சுந்தராம்பாள். மகனை தோளோடு அணைத்து கொண்டவர் “உன் தம்பி எங்கே போனான் சாவித்ரி.. போனை போடு அவனுக்கு.. எங்களை எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கீங்க பார்த்தியா.. நீயும் உன் குடும்பமும்.” என்று தன் பங்கிற்கு வர தாளிக்க

                 சாவித்திரி “போன் எடுக்கல அத்தை..” என்று நடுங்கும் போதே அவரை அறைந்து விட்டிருந்தார் குணசேகரன். அவருக்கு மகளின் வாழ்க்கை இருந்த நிலையில் கண்மண் தெரியாத ஆத்திரம் வந்தது. எதிர் அறையில் மணமகளாக தயாராகி நிற்பவளிடம் என்ன பதில் சொல்வேன் என்று தவித்துப் போனார் அவர்.

                 சுந்தராம்பாள் தன் மகனை பிடித்து அங்கிருந்த கட்டிலில் அமர்த்தியவர் “கொஞ்ச நேரம் அமைதியா இரு குணா.. யோசிக்க வேண்டிய நேரத்துல யோசிக்கணும்.. இவளை அடிச்சு என்னவாக போகுது..” என்று கடிந்து கொள்ள

               “என்னம்மா யோசிக்க சொல்றிங்க.. என்ன யோசிச்சு என்ன செய்ய முடியும்?? என் மக வாழ்க்கை போனது போனது தானே..” என்று அவர் புலம்ப

               “கல்யாணத்துக்கு முத்து மாணிக்கம் வந்து இருக்கான்..” என்று அழுத்தமாக சொன்னார் அவர். குணா புரியாமல் அன்னையை பார்க்க “உன் மகளுக்கு தாய் மாமன் தானே அவன்.. அவனுக்கும் ஒரு பையன் இருக்கான்… பேரு ரகுநந்தன்.. என்ஜினீரியங் படிச்சு இருக்கான்.. அவன் அப்பனோட தொழிலை பார்த்திட்டு இருக்கான்.. ” என்று அன்னை கூறும்போதே

              “ம்மா.. உங்களுக்கு புத்தி கெட்டுப்போச்சா..என் மக எப்படி அந்த கிராமத்துல வாழ முடியும்.. அதுவும் அந்த ஒண்ணுமில்லாதவன் குடும்பத்துல…நீங்க விடுங்க நான் பார்த்துகிறேன் என் மக வாழ்க்கையை..” என்று அவர் எகிற

                 “என்ன பார்த்துப்ப… என்ன பார்த்துட்ட இது வரைக்கும்… இப்படி சொல்லி சொல்லியே தான் எங்களை இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்க… இனி என் பேத்தியோட வாழ்க்கையை நான் பார்த்துக்கறேன்.. அவ கல்யாண விஷயத்துல நான் எடுக்கறது தான் முடிவு…” என்று அவர் தீர்மானமாக கூற

                 “ம்மா.. என் மக வாழ்க்கையை நாசம் பண்ணாம ஓயமாட்டிங்களா நீங்க.. நான் என் நண்பன் திருப்பதியோட மகனை கேட்கிறேன்.. அவன் எனக்காக செய்வான்.. நாளைக்கு இந்த கல்யாணம் நடக்கும்..” என்றவர் வெளியே செல்ல முற்பட

                 “இதுக்கு என் பேத்திக்கு நானே விஷத்தை வச்சு கொன்னுடறேன் குணா…” என்று கத்தினார் சுந்தராம்பாள்.

                  ‘நீங்க பார்த்த மாப்பிளைக்கு அவன் எவ்வளவோ மேல். கொஞ்சம் குடிப்பான் அதைத்தவிர எந்த குறையும் சொல்ல முடியாது.. நீங்க பார்த்த மாப்பிளையை விட எந்த விதத்துல குறைஞ்சிட்டான் அவன்..” என்று குணா வாதிட

                 “நீ சொல்ற அந்த கேடுகெட்டவனை விட, முத்துமாணிக்கம் மகன் நல்லவன்.. அப்படியே அவளுக்கு எதுவும் குறையிருந்தா அவன் மாமன் மகன்னு கூட பார்க்கமாட்டான்.. வெட்டி போட்டுடுவான்..என் பேத்தி பாதுகாப்பா இருப்பா..” என்று கூறியவர்

                  “என் பேத்தி விஷயத்துல இனி நீங்க யாரும் எதுவும் பேசக்கூடாது.. அவளை என் மருமக போனப்பவே  அவ மாமன்கிட்ட கொடுத்து இருக்கணும்.. என் சுயநலத்துக்காக என் வாரிசு ன்னு அவ வாழ்க்கையை பணயம் வச்சிட்டேன்.. விடிஞ்சா அவளுக்கும் ரகுவுக்கு தான் கல்யாணம்.. நான் மாணிக்கத்துக்கிட்ட பேசிக்கறேன்”

                  “நீ நாளைக்கு கல்யாணம் முடியுற வரைக்கும் வாயத் திறக்கவே கூடாது.. இவளுக்கும் சொல்லி வை. ஏதாவது எனக்கு தெரியாம செய்யணும்னு நினைச்ச.. உன் அம்மாவை நீ உயிரோட பார்க்க மாட்டே..” என்று மகனை மிரட்டிவிட்டு வெளியில் வந்தவர் நேராக தன் பேத்தியின் அறைக்கு சென்றார்.

                 அங்கு ஏற்கனவே தோழிகளின் வாயிலாக விஷயத்தை அறிந்திருந்தவள் பாட்டியை கண்டதும் அவரை கட்டிக் கொண்டு அழ கொஞ்சம் கொஞ்சமாக அவளை தேற்றியவர் “பாட்டி எது சொன்னாலும் கேட்பியா??” என்று கேட்க

                 பாட்டியை கேள்வியாக பார்த்தவள் ஒன்றும் புரியாத குழந்தையாக முழிக்க, அவளின் நிலையை கண்டு உள்ளத்தில் ரத்தம் வடிய நின்றார் சுந்தராம்பாள். என் பேத்தி வெளியே கிளம்பட்டும் என்று சூளுரைத்துக் கொண்டவராக “தேவாம்மா பாட்டியை பாரு.. என்ன நடந்துடுச்சு ன்னு அழுதுட்டு இருக்க.. உன்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டு போனவனுக்காக அழுதுட்டு இருக்கியா..? ” என்று அவளை கூர்மையாக பார்க்க

                 சட்டென மறுப்பாக தலையசைத்து மீண்டும் அழ தொடங்கினாள் பேத்தி..”ம்ச்.. இப்போதான் சொன்னேன் தேவா உனக்கு.. கண்ணை துடை..” என்று அவளை சரிகட்டியவர்

                   “விடிஞ்சா உனக்கு கல்யாணம்.. உன் தாய்மாமன் மகனோட.. உன் அம்மாவோட ஆசை இது.. எப்படியோ நாம மாத்த திட்டம் போட்டா அந்த மகராசி தெய்வமா இருந்து உன்னை அவ குடும்பத்துல சேர்க்கணும்ன்னு முடிவு செஞ்சிட்டா போல…”

                     “உனக்கு உன் பாட்டி நல்லது செய்வேன் ன்னு நம்பிக்கை இருந்தா இந்த அழுகையை விட்டுடு.. விடிஞ்சா கல்யாணம் ஜாம் ஜாம் ன்னு நடக்கட்டும்.. இல்லையா சொல்லு.. உன் தாய்மாமன் கிட்ட “நான் கேட்டது என் பேதிக்கு பிடிக்கல என்னை மன்னிச்சுடு ன்னு சொல்லி கல்யாணத்தை நானே நிறுத்திடறேன்..” என்று அவர் பொய்யாக கண்களை துடைத்துக் கொள்ள

                   “பாட்டி..” என்று அவரை மீண்டும் கட்டி பிடித்துக் கொண்டாள் பேத்தி.. கைகள் நடுங்க, பயத்தில் மூச்சிரைத்தது.. நடுங்கி கொண்டே “பயமாயிருக்கு பாட்டி… நான் என்ன செய்யட்டும் ” என்று அவள் அவரிடமே கேட்க “கானை மூடிட்டு நான் சொல்றதை கேளு.. உன் வாழ்க்கைக்கு பாட்டி பொறுப்பு..” என்று அவளை தேற்றியவர் அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றிவிட்டு பேத்தியை மடியில் தாங்கி கொண்டார்.

                    அவள் இருந்த மனஉளைச்சலுக்கு ஆறுதலாக அவள் பாட்டியிடம் சரணடைய அவர் மடியிலேயே உறங்கி போயிருந்தாள். இடையில் ஒருவன் தன் அன்னை, தந்தை மற்றும் தம்பி தங்கைகள் என்று குடும்பமாக அந்த அறைக்குள் வந்ததையோ, சத்தம் எழுப்பாமல் அவளை சில நொடிகள் சிறை செய்து சென்றதையோ உணரவே இல்லை அவள்.

                   அவள் உறக்கம் சில மணி நேரங்களாக இருக்க, அவள் பாட்டியே அவளை எழுப்பி விட்டார். அடுத்ததாக அழகு நிலைய பெண்களிடம் அவள் ஒப்படைக்கப்பட அந்த மங்கிய நிலவை மெருகேற்றி விட்டனர்  அவர்கள். குனிந்த தலை நிமிராமல் அவள் மணமேடைக்கு வந்து அமர, அருகில் அமர்ந்து இருந்தவனை நிமிர்ந்து கூட பார்த்திருக்கவில்லை இன்னும்.

                       அதற்குள் ஐயர் கன்னிகாதானத்திற்கு பெற்றவரை அழைக்க குணசேகரன் அழுது கொண்டே நின்றார் அங்கே. அவர் கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருக்க ‘தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம், மமஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..’ என்று மந்திரங்கள் நீண்டு கொண்டே இருந்தது.

                     மகா தானமாக தன் கன்னிகையை தாரை வார்த்து இன்னொருவனுக்கு கொடுக்க மனதே வரவில்லை அவருக்கு. நாளை முதல் அவள் இன்னொருவன் மனைவி என்ற எண்ணமும், திருமணம் நடக்கும் சூழ்நிலையும் அவரை கலங்க வைக்க கண்ணீரோடு நின்றார் அவர்.

                    அன்னை வந்து கையை பிடித்துக் கொண்டதில் சற்றே சுயநிலை அடைந்து அவர் மகளை தாரை வார்த்து கொடுக்க, அடுத்தடுத்த சடங்குகள் நடந்தேறியது. தன் சொந்த பணத்தில் வாங்கி இருந்த மூன்று பவுன் தாலியை மஞ்சளில் கோர்த்து அன்னை கொடுத்திருக்க, அதையே இப்போது தேவாவின் கழுத்தில் பூட்டி அவளை தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான் ரகுநந்தன்.

                     ஏழு அடிகள் எடுத்து வைத்து அவள் பாதங்களை பற்றி மெட்டி அணிவித்தவனுக்கு ஏதோ இனம் புரியாத உணர்வுகள்… அதனுடன் அவன் நிமிர்ந்து பார்க்க, தேவாவும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த நிமிடம்…

                       இவர்களில் காதலை யார் கொடுப்பாரோ ?? யார் பெறுவாரோ??

                  

Advertisement