Advertisement

அலை.9

           தில்லையைத் தேடிச் சென்ற தேவகி , அவள் தாமரையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுவதைப் பார்த்து அருகில் வந்தவர் ,

“பாப்பா அழாதமா… உங்கத்தை தெய்வமா இருந்து அவுக பிள்ளைகள பார்த்துக் கிடுவாக.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. இப்ப மருமவனுக்கு ஏதோ வேணுமாம் உன்னையத் தேடுதாகளாம்… போம்மா போய் என்னனுக் கேளு…” எனவும் , கண்ணீரைத் துடைத்துக் கொண்டே நிமிர்ந்தவள்,

“அவருக்கு எதுவும் வேணுமின்னா என்னைய ஏன் தேடனும்.. போம்மா” என்றவளிடம் ,

“என்ன வேணும்னாலும் உன் கிட்ட தான பாப்பா கேட்க முடியும் … பொண்டாட்டிக்கிட்ட கேட்காம வேற யாருட்ட கேட்க… சீக்கிரம் போ… நாளைக்கு காலையிலயே ஊருக்கு கிளம்பிருவாரு… பையில எதுவும் எடுத்து வைக்கணும்ல … ” என்றவாறே அண்ணன் மகளிடம் ,

“கொஞ்சம் இரு சாமி … இப்ப வந்துடுவா… ” என தில்லையின் கையினைப் பிடித்து இழுத்துக் கொண்டே வீட்டின் பின்புற தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அவனருகில் போகமாட்டேன் என்றவளை கெஞ்சி கொஞ்சி , கையில் ஒரு மோர் குவளையையும் கொடுத்தனுப்பினார்.

இந்த பத்து நாட்களாக தேவகியின் வற்புறுத்தலால் கட்டிப் பழகி இருந்த புடவையை இடது கையால் சற்றுத் தூக்கிக் கொண்டு ஒரு கையில் குவளையோடும் ஆதவனைத் திட்டி வாயில் முனுமுனுத்துக் கொண்டும் வந்தவளின் கெஎலுசு சத்தம் சிறிய குறிப்பேட்டில் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தவனின் கவனத்தை திசை திருப்ப நிமிர்ந்து பார்த்தான்.

அன்று தான் புதிதாக தில்லையைப் பார்ப்பது போல் இருந்தது ஆதவனுக்கு..அன்று மருத்துவமனையில் பார்த்த போது வந்த அதே உணர்வு இன்றும் வந்தது. மீனாட்சியின் மறைவும் அதற்கு பின்னான நிகழ்வுகளும் அவனை வேறு எதுவும் யோசிக்க விடவில்லை. நாளை ஊருக்கு கிளம்புவதால் இங்கு என்னென்ன வேலைகள் உண்டோ அத்தனையும் பார்த்துக் கொள்ள எல்லா ஏற்பாடுகளும் செய்தாகி விட்டது என்ற திருப்தியுடன் இருந்ததால் மனம் சற்று இலகுவாகவும் இருந்தது.

இத்தனை நாட்களாக தில்லையை வீட்டில் பார்க்கிறான் தான் … ஆனால் அப்போதெல்லாம் தாமரையோடுதான் இருப்பாள் என்பதால் தங்கை தனியாக இல்லை.. தில்லை இருக்கிறாள் ,நன்குப் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை மட்டுமே வரும் .ஆனால் இன்று தனியாக வரவும் ” இவள் “… என நினைத்தவன் ,

“என் மனைவி ..” என்ற எண்ணம் தோன்ற முகத்திலும் குறுநகை பூக்க… கையிலிருந்த குறிப்பேட்டை அருகிலிருந்த நார் கட்டிலில் வைத்து விட்டு கைகளை கட்டி நின்று தில்லையையேப் பார்க்க ஆரம்பித்தான்.

தாலி கட்டிய அன்றிலிருந்து இன்று வரை தேவகியை முன்னிருத்தி தான் ஏதாவது பேசுவாள். அவனிடம் நேரடியாக எதுவுமே பேசவில்லை. இன்று தான் தன்னை நோக்கி தனியாக வருகிறாள். அதுவும் தனக்குத்தானே ஏதோ பேசிக் கொண்டு என்பதாக தில்லையையே பார்த்திருக்க … அவளோ முனுமுனுத்துக் கொண்டே வந்தவள் அவன் பார்வையை உணர்ந்து..

“என்ன இப்படிப் பார்க்கிறாங்க.. ஆளும் மூஞ்சியும் பாரு… ” என மனதுக்குள் சொல்லிக் கொண்டாலும் ,

“ஆள்  மணி பாரதி கணக்காஇப்படி ஸ்மார்ட் டா ஹான்ட்சம்மா இருந்தா அந்தப் படத்தைப் போல பொண்ணுங்க பின்னாடி வர தான் செய்வாளுங்க… ம்ஹ்ம் எங்க அத்தை இதுக்குதான் பயப்படுமாமே… வெள்ளைகாரிய கட்டிட்டு வந்துரக் கூடாது.. சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு.” என தேவகி மீனாட்சி புலம்பியதாக தன்னிடம் கூறியதை எல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டே வந்து ஆதவனின் எதிரில் நின்றாள்.

ஆதவன் கைகளைக் கட்டிய வண்ணமே அவளைப் பார்த்துக் கொண்டிருக்க தன் கையிலிருந்த குவளையை அவன் முன் நீட்டினாள். உடனேயே வாங்கிக் கொண்டவன் அவளைப் பார்த்துக் கொண்டே குடிக்க..அவனது பார்வை அவஸ்தையைக் கொடுத்தது. வேறு யாரும் இப்படிப் பார்த்திருந்தால் “கண்ணை நோண்டிருவேன்” என வாயாலும் சைகையாலும் சொல்பவளால் இன்று எதுவும் பேச வேமுடியவில்லை.

தலையைக் குனிந்து புடவை முந்தானையை எடுத்து விரலில் சுழற்ற ஆரம்பித்து விட்டாள். “என்ன இப்படி பார்க்கிறாங்க… எதுக்கு கூப்பிட்டாங்கனு சொன்னா உடனே கிளம்பலாம்…” என யோசித்துக் கொண்டே அவனை நிமிர்ந்துப் பார்க்க காலி குவளையை எங்கு வைக்கலாம் என யோசித்து சுற்றிலும் பார்க்க , எதுவும் பேசாமலே அவன் கையிலிருந்து வாங்கிக் கொண்டாள்.

வாங்கியதும் போய் விடுவாளோ என ஆதவன் நினைத்துக் கொண்டிருக்க அங்கேயே நின்றவளை அவனும் பார்க்க அவளும் பார்க்க நொடியில் அந்தப் பார்வைகள் கலக்க ஆரம்பித்ததோ.. இது நாள் எட்டிக்கூடப் பார்க்காத நாணம் தில்லையை ஆக்கிரமிக்க பார்வையை தவிர்த்தாலும் முகம் முழுக்க சிவக்க ஆரம்பித்துவிட்டது.

அது அவனுக்குள்ளும் காதல் அலையைக் கொடுக்க முகத்தில் புன்னகையுடன் பின்புறமாகவே நடந்து அந்த பனை நாரால் பின்னப்பட்ட கட்டிலில் அமர்ந்து இரு கைகளையும் தொடையில் ஊன்றி கோர்த்திருந்தவன் தில்லையையேப் பார்த்திருந்தான். அவளை.. அவளது செய்கைகளை பார்த்துக் கொண்டிருக்கையில் மற்ற எல்லாம் மறந்து வானில் மிதப்பது போல் உணர்வு. அதிகம் அவனருகில் இப்படிப் பார்த்ததில்லை..எனவே ஏன் நிற்கிறாள் எதற்கு நிற்கிறாள் என்றெல்லாம் கேட்க தோன்றா ஒரு மயக்கம் ஆதவனுள்.

தில்லையோ அவனது விழி வீச்சு தாங்காமல் கீழே குனிவதும் நிமிர்வதும் புடவையை விரலில் சுழற்றியதோடு பார்வையையும் சுழற்றி ..

“எதுக்கு கூப்பிட்டாங்கனு சொல்லாம.. என்ன முழி இது … முத்தாரம்மா அவர சீக்கிரம் பேச சொல்லுங்க..” என கடவுளிடம் வேண்டிக் கொண்டு நின்றாள்.

இப்படி அவர்கள் இருவரும் அங்கு பார்த்துக் கொண்டும் யோசித்துக் கொண்டும் இருந்த அதே நேரத்தில் தில்லையும் அவளது அம்மாவும் தாமரையுடன் இல்லை என்பதை அறிந்த விஜய் வேகவேகமாக தான் தாமரையை சந்திக்க அந்த தோட்டத்திற்கு சென்றான். 

தாமரை அந்த ஜன்னல் திண்டில் அமர்ந்து தலையை அந்த கம்பியில் சாய்த்து மாமரத்தை பார்த்த வண்ணமே அமர்ந்திருக்க ,

“பாப்பா அந்த தண்ணி புட்டிய கொஞ்சம் எடுத்து தாறீயா ” என்ற மீனாட்சியின் குரல் ஒலித்தது. முதலில் எதுவும் காதில் விழவில்லை தாமரைக்கு.. மீண்டும் அவரது குரல் ஓங்கி ஒலிக்க , ஜன்னலில் சாய்த்திருந்த தலையை நிமிர்த்தி “இதோ எடுத்து தாறேன் மா…” என தாமரை உரைப்பதற்குள் அவளது குரலே அவளுக்கு கேட்டது.

காதுகள் கூர்மை பெற.. தால நரம்புகள் வெடித்து விடும் போல் இருக்க மீனாட்சியோடு அவள் பேசிய வார்த்தைகள் கேட்டுக் கொண்டே இருக்க….உடல் நடுங்க விழிகளை சுழற்றிய தாமரையின் கண்ணில் ஜன்னலுக்கு வெளியேயும் இருந்த திண்டில் சிறிய கையடக்க டேப் ரிக்கார்டர் பட்டது. அதிலிருந்து தான் மீனாட்சியின் குரல் காற்றில் வந்தது. கூடவே அன்று சித்திரை திருவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் அதனடியில் இருந்தது.

கைகள் நடுங்க தாமரை அவற்றை எடுக்க .. சுவற்றின் மறைவில் இருந்த விஜய் ஆனந்த் அவளது முன் வந்து நின்றான். அந்த பதற்றத்தில் கையிலிருந்த டேப் ரிக்கார்டர் நழுவப் பார்க்க வேகமாக அது கீழே விழாமல் பிடித்துக் கொண்டான்.

இருவருக்கும் இடையில் ஜன்னல் கம்பிகள் மட்டுமே … சோர்ந்து குழிந்துப் போன விழிகளைப் பார்த்துக் கொண்டே …

“நான் பேசுறது உனக்கு புரியுதா கேட்குதா தெரியல… ஆனால் நான் பேசியே ஆகணும்.. ஆன்ட்டி.. அதாவது உங்கம்மா உன் கூடவே தான் இருக்காங்க… உன் ஃபிரன்ட் சொன்னது போல இந்த பூவா.. அதோ அந்த மரமா… எப்பவும் உன்னோட தான் … இதோ இந்த ஃபோட்டோ பாரேன் உன்னைய தெய்வமா இருந்து பார்த்துட்டே தான் இருக்காங்க. இப்படி நீ சரியா சாப்பிடாமா தூங்காம.. உன் உடம்ப கவனிக்காம இருந்தா கவலைப்பட மாட்டாங்களா…

நான் இங்க வந்தப்போ அவங்க உன்னைய எப்படிப் பார்த்துக்கிட்டாங்கனு எனக்குத் தெரியும்… இப்ப இந்த கோலத்துல உன்னையப் பார்த்தா வருத்தப்பட மாட்டாங்களா…

 நீ படிச்சு டாக்டராகரத அவங்க பார்த்து சந்தோஷப்பட வேண்டாமா… அம்மாவ இழக்கிறது எந்த வயசானாலும் கொடுமை தான்… அதை நானும் அனுபவிச்சேன்… எனக்குனு யாரும் இல்லைனு நினைச்சேன் தான் … ஆனா.. எப்போ உன்னையப் பார்த்தேனோ… அப்பதான் எனக்கு தெரிஞ்சது.. என் அம்மா பக்கத்துல இல்லைனாலும் அவங்க தான் உன்னைய என் கண்ல காட்டினாங்கனு நம்புறேன். அதுவும் இங்க வரவா இல்ல டெல்லி பக்கமே போயிரலாமானு யோசிச்சுட்டு இருந்தப்ப எனக்காக நீ இங்க இருக்கிறேனு உன் கண்கள் சொல்லவும் தான் இங்க உன் பக்கத்துலயே இருக்க ஆசைப்பட்டு வந்தேன். ஆனா வந்த இடத்துல… ” என்றவனுக்கு கண்கள் கலங்கி விடும் போல் இருந்தது.

தாமரையோ அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால்அவன் இதுவரை பேசியது அவள் காதில் விழுந்ததா இல்லையா என்றுக் கூட தெரியவில்லை. ஆனால் விஜய் தன் மனதில் உள்ளதை கூறி விட்டோம் என்ற திருப்தியில் முதலில் டேப் ரிக்கார்டரை மட்டும் பிடித்திருந்தவன் மெல்ல அவள் மணிக்கட்டை பிடித்து ,

“ப்ளீஸ் நிகழ்காலத்துக்கு வா… அம்மா உன் பக்கத்துல தான் இருப்பாங்க..” என்று விஜய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தாமரையின் கைகள் நடுங்க ஆரம்பிக்க கண்கள் கலங்கி கண்ணீரைக் கொடுத்தது. 

தந்தை மற்றும் தமையனின் தொடுகைக்கு மாறாக அந்நிய ஆடவனின் தொடுகை பதற்றத்தைக் கொடுக்க… அவன் மீனாட்சியைப் பற்றி பேசியது மட்டும் காதில் விழுந்து தாய் தற்போது உயிருடன் இல்லை என்பதை உணர்த்தி விட்டதோ என்னவோ கண்ணீர் வர ஆர ஆரம்பித்துவிட்டது.

அவள் கண்களில் கண்ணீரைக் கண்டவனுக்கு அப்படியொரு மகிழ்ச்சி…

” அழுதிடு தாமரை.. நல்லா அழுதிடு … ” எனும் போதே தேவகி அறையை திறப்பது தெரிய … அவளது கரத்தினை விட்டவன்,டேப் ரிக்கார்டரையும் வாங்கிக் கொண்டு ,

” எனக்கு நீ மட்டும் தான் … எனக்காக இயல்புக்கு வா…” என்றவன் நகர்ந்து விட்டான்.

தேவகி உள்ளே வரும் போது “அம்மா… ” என கத்திய தாமரையை, “சாமீ…. நல்லா அழுசாமி… ” என அணைத்துக் கொண்டு புலம்பி அழ ஆரம்பிக்க… கூடத்தில் அமர்ந்திருந்த உறவுப்பெண்களும் அந்த அறைக்குள் நுழைந்து அழ ஆரம்பித்து விட்டனர்.

Advertisement