அதற்குள் தேவகி..தேவராஜன் என அனைவரும் வந்து விட அவர்களுக்குள் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை … ஆனால் கிளம்பும் வரை ஆதவனுக்கு முறைப்பை மட்டும் கொடுத்துக் கொண்டே இருந்தாள் தில்லை.

ஒரு வாரம் சென்று இருக்கும்… ஒரு நாள் அதிகாலையில் மீனாட்சிக்கு உடல்நிலை சரியில்லாது போகவும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அதுவும் அவசர சிகிச்சைப் பிரிவில் வேறு வைத்து விட்டனர். மருத்துவர்கள் ஆதவனிடம் ஏற்கனவே கூறியிருந்தது தான்.. இருந்தாலும் ஆதவனால் அவனது அன்னையின் இந்த நிலையை தாங்க முடியாது இடிந்து போய் அமர்ந்திருக்க…தாமரையும் அழாமல் வெறித்து பார்த்த வண்ணமே அமர்ந்திருந்தாள்.

அருணாச்சலமும் வெளியே கம்பீரமாக தெரிந்தாலும் மனைவி மக்களின் நிலை கலக்கத்தைக் கொடுத்திருந்தது. தங்கை வீட்டிற்கு தொலைப்பேசியில் அழைத்துப் பார்க்க எடுக்கப்படவில்லை. எனவே தங்கை கணவருக்கும் அழைத்து தகவல் தெரிவிக்க அவரது தொழிற்சாலைக்கு அழைக்க… அவர்கள் அனைவரும் வெளியூரில் உள்ள கோவிலுக்கு சென்று இருப்பதாக தகவல் வந்தது. எனவே விவரங்களைக் கூறி வைத்து விட்டார். 

மாலை வரை அவசர சிகிச்சைப் பிரிவிலேயே இருந்த மீனாட்சியை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை. இருள் சூழத் துவங்கிய நேரம் தேவகி வீட்டினர் அனைவரும் மருத்துவமனைக்குள் நுழைந்திருந்தனர்.

தேவராஜன் ஆதவன் அருகில் வர… பெரியவர்கள் இருவரும் அருணாச்சலத்தின் அருகில் சென்றிருக்க… தில்லையோ தோழியின் அருகில் வந்து அமர்ந்தாள். அவளைக் கண்டது தான்… காலை முதல் அடக்கி வைத்திருந்த கண்ணீர் மழையாக பொழிய ஆரம்பித்துவிட்டது தாமரைக்கு.

“திலோ … அம்… அம்மா நல்லாகிருவாங்க தானடி … ” என தோழியின் மடியில் படுத்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். குலுங்கி குலுங்கி அழும் தோழியின் தலையையும் முதுகையும் தடவிக் கொடுத்து சமாதானம் செய்துக்கொண்டிருந்தவளை இப்போது அனைவரும் சூழ்ந்துக் கொண்டனர்.

ஆதவனுக்கு தங்கையின் அழுகை மன வலியை அதிகம் கொடுத்தது. அதுவும் தில்லை வந்ததும் அவளிடம் மட்டுமே தன் வருத்தத்தையும் அழுகையையும் காட்டியது தில்லையின் புறம் அவன் பார்வை அதிகம் செல்லக் காரணமாகிற்று. தில்லையும் அதற்கேற்றாற்போல் தாமரைக்கு ஆறுதல் அளித்த விதம் அந்த நேரத்திலும் மனதில் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

காலையில் இருந்து பட்டினியாகவே இருந்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வாங்கி வந்து உண்ணக் கொடுக்க .. யாருக்கும் உணவருந்த மனமில்லை … அந்த நேரம் செவிலியர் மீனாட்சி கண் விழித்ததால் உள்ளே சென்றுப் பார்க்க அனுமதிக் கொடுத்தார். வேறு யாரோவாக இருந்தால் அனைவரையும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் மருத்துவமனையே அவர்களது நெருங்கிய உறவினருடையது என்பதால் அனைவரும் உள்ளே சென்றனர்.

தாமரை ஓடிச் சென்று மீனாட்சியின் நெஞ்சின் மீது படுத்துக் கொண்டு…

“அம்மா சீக்கிரம் சரியாகி வீட்டுக்குப் போகலாம்… நீங்க இல்லாம வீட்டுக்குப் போகமாட்டேன்.. ” என அழுக..மீனாட்சிக்கும் பேச முடியாமல் கண்ணீர் மட்டும் வந்துக் கொண்டே இருந்தது. ஆனால் அவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றாகப் பார்த்ததும் என்னத் தோன்றியதோ , ” மதினி … ” என தேவகியை அழைத்தார்.

அவரும் அழுதுக் கொண்டே அருகில் வந்து ” சொல்லுங்க மதினி ..” என்றவாறு மீனாட்சியின் ஒரு கரத்தைப் பிடித்துக் கொண்டார். அவர் என்ன கேட்கப் போகிறார் என்பதையும் அறிந்திருந்தவர் ,

” குணமாகி வீட்டுக்கு வாங்க மதினி நாம பேசுவோம் … ” என ஆறுதலளிக்க மற்றவர்களுக்கும் என்ன பேசுவதென்றும் தெரியவில்லை … அதற்குள் அங்கு வந்த மருத்துவர் அனைவரையும் வெளியே காத்திருக்கும் படி கூறி விட்டு மீனாட்சியை பரிசோதித்தார்.

வெளியே வந்த தேவகி தன் கணவரைப் பார்க்க.. மனைவி என்ன சொல்ல வருகிறாள் என்பதை கணித்தவர் ,

“தேவி … நம்ம பசங்க விருப்பத்துக்கு எதிரா நான் எதுவும் செய்ய மாட்டேன். அதை மட்டும் மனசுல வச்சுக்க.. அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்.. ” என்று விட்டார்.

இதையெல்லாம் தோழியைத் தேற்றிக் கொண்டிருந்த தில்லையும் கேட்டுக் கொண்டு இருந்தாள். அவளுக்கு என்னவாக இருக்கும் என்பது புரிபட சிறிது படபடப்பாகியது. தோழியைத் தேற்றினாலும் பெரியவர்கள் என்ன முடிவெடுப்பார்களோ என்ற எண்ணமே அதிகம் ஆக்கிரமித்தது.

அன்று இரவில் மீனாட்சியை அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண அறைக்கு மாற்றினார்கள். தாமரை தாயை விட்டு நகர மாட்டேன் என்று விட்டாள். 

“சாமி … வீட்டுக்குப் போ தூங்கி எந்திச்சு வா.. நான் மதினிய பார்த்துக்குவேன்…” என்ற தேவகியிடம் ,

” இல்லங்கத்த நான் போகமாட்டேன்.. நான் அம்மாக்கூட தான் இருப்பேன்..” என்ற தாமரையைத் தேற்ற முடியவில்லை. தில்லையும் ,

” ம்மா நானும் கூட இருக்கேன். நாளைக்கு பேசுவோம்.” என்று விட , தேவகி..

“இந்த உடுப்போட எப்படி பாப்பா… சரி… வளவி , அட்டிகை எல்லாத்தையும் கழட்டித்தா. நான் அம்மா வீட்டுக்குப் போய் சீல மாத்திட்டு உனக்கும் வேற தாவணி எடுத்துட்டு வாறேன்…” என்றவர் மகனுடன் கிளம்பினார்.ஆதவன் தேவகி கூறிய பிறகு தான் தில்லையின் உடையைக் கவனித்தான். சிவப்பில் கருநீல பட்டு ஜரிகையிட்ட பாவாடையும் அதே நிறத்தில் ரவிக்கையும் கருநீல நிற தாவணியும் உடுத்தியிருந்தாள். கூடவே கழுத்து நிறைய , கை நிறைய தங்க வைர நகைகளை அணிந்திருந்ததோடு , சந்தனம் குங்குமம் என நெற்றி நிறைய, அணிந்திருந்த நெற்றிச் சுட்டிக் கூட விலகி வியர்க்க விறு விறுக்க கோவிலுக்கோ திருமணத்திற்கோ சென்றிருந்த அடையாளங்களோடு பார்க்கவே அழகாக இருந்தாள்.

தேவகியிடம் அனைத்தையும் கழற்றி அவர் முந்தானையில் போட்டவாறு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தவள் ஆபரணங்கள் அதிகமல்லாமல் மேலும் அழகாக இருந்தாள்.

என்னவோ.. மீனாட்சியை மருத்துவமனையில் சேர்த்ததிலிருந்து பல குழப்பங்கள் … கவலைகள்.

மீனாட்சிக் குறித்து மருத்துவர் முன்பே அவனிடம் தெரிவித்தது தான்.. அவரது இதயம் மிகவும் பலகீனமாக இருப்பதால் உறுதியான பதில் எதுவும் தற்போது கூற இயலாது என்றிருந்தார் … ஆனால் இப்போதே எதுவும் நடக்கலாம் என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை… எல்லா ஆண் பிள்ளைகள் போலவே… தந்தையைக் காட்டிலும் தாயின் மீது அதிக பாசம் வைத்திருந்தவனுக்கு தவிப்பு அதிகமாக இருந்தது.தாயின் உயிரை பிடித்து வைக்க முடியுமா , தந்தை… தங்கை.. அவனது முடிவடையாத படிப்பு  என கவலைகள் மனதை அழுத்திக் கொண்டிருக்க… அதனை வெளிப்படுத்த முடியாமலும் தவித்துக் கொண்டிருந்தவன் மன பாராமல்லாம் தில்லை வந்த நேரத்திலிருந்து காணாமல் போவது போலிருந்தது.

இப்போது தேவகி உடைக்குறித்துப் பேசியதும் அவளது வெளித்தோற்றமும் மனதில் பதிய .அது முகத்திலும் ஒரு சிறு முறுவலைக் கொடுத்தது.

தேவகி சென்ற பிறகு தங்கையை தேற்றி அவளுக்கு உணவருந்த வைத்து .. கலைந்து கிடந்த தங்கையின் கூந்தலை ஒதுக்கி , ஓய்ந்து போய் இருந்தவளை சிறு குழந்தையாக தன் மடியில் தலை சாய்த்துப் படுக்க வைத்து அவள் உறங்கியதும் தானும் அமர்ந்திருந்தவாறே சுவற்றில் சாய்ந்து உறங்கிய தில்லைநாயகியை அருகிருந்துப் பார்த்தவன் மனதில் அவள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கத் துவங்கியது.

மறுநாள் ஓரளவு உடல் தேறியிருந்தவர் கண் விழித்ததும் தன் நாத்தனாரை தான் அழைத்தார்.அருணாச்சலமும் மனைவியைப் புரிந்துக் கொண்டவர் ,

“மீனா உடம்பு கொஞ்சம் தேறட்டும் வீட்டுல போய் பேசிக்கலாம்..” என்றவரது கைகளையும் பிடித்துக் கொண்ட மீனாட்சி சிறியவர்களைப் பார்க்க.. அவர்களும் அறையை விட்டு வெளியேறினர். அவர்கள் சென்றதும் , தேவகியிடம் ,

“மதனி.. நான் இன்னும் எத்தனை நாள்… இல்ல இன்னைக்கு இருப்பேனானுக் கூடத் தெரியல.. எப்படியாவது நம்ம குலதெய்வ கோயில்ல வச்சு புள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணிடலாம்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு… பா… பாப்பா நான் இல்லாம எப்படி தனியா… நினைக்கவே முடியல மதனி … நீங்களும் வயசு பொண்ண வச்சுருக்கும் போது… என் மகள உங்க வீட்டுக்கு அனுப்பறது பெரிய பாவம் மதனி…அதனால தான் ரெண்டு பேருக்குமே ஒரே நேரத்துல கல்யாணம் பண்ண கேட்கிறேன். எம்புள்ள பொண்டாட்டிய படிக்க வைப்பான் மதனி …” என்றவர் சத்தமாக அழ ஆரம்பித்து விட்டார்.

அந்த சத்தத்தில் வாசலருகே நின்ற ஆதவனும் தில்லையும் உள்ளே வரப் பார்க்க… அருணாச்சலத்தின் பேச்சில் அப்படியே நின்று விட்டனர்.

“மீனா  பிள்ளைங்கள நினைச்சு கவலைப்படுற நீ.. என்னைய யோசிச்சுப் பார்த்தியா… உடம்பு சரியாகணும்னு நினைச்சு படுத்து தூங்கு… வீட்டுக்குப் போய் நீ சொல்றத செய்யலாம் … ” என்றதும் தேவகியும் அழ ஆரம்பித்தார்.

“ஆமா மதனி எங்கண்ணன நினைச்சு உடம்ப தேத்துங்க…” எனும் போதே மருத்துவர் அழைப்பதாக தகவல் வரவும் ஆதவனும் அருணாச்சலமும் சென்றனர்.

மருத்துவர் மீனாட்சிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை.. ஆனால் அவரது உடல் நிலை தாங்குமா என்பது சந்தேகமே என்று விட்டனர். ஆயினும் மனதை திடப்படுத்திக் கொண்டு இன்னும் இரண்டு நாட்களில் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி கூறி விட்டு வந்தனர்.அருணாச்சலம் அதற்கான பண ஏற்பாடுகளை கவனிக்கச் செல்ல, ஆதவன் அறைக்கு வந்துக் கொண்டிருந்தான்.

வழியில் அறைக்கு அருகே இருந்த பெரிய பால்கனியில் தேவகியும் தில்லையும் கோபமாகவும்  அழுகையோடும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்க நேரிட்டது.

” உங்க கிட்ட எத்தனை தடவை சொல்றது மா.. நீங்க தான் அத்தைக்கு புரிய வைக்கனும்னு… படிப்புதான் முக்கியம் கல்யாணம் எல்லாம் அதற்குப் பிறகு தான்னு… பாவம்மா அவ… டாக்டர் ஆகிறது… அவ ஆசை… கனவு லட்சியம் எல்லாமே தெரியுமா.. அதுக்கு எப்போதும் நான் துணை நிற்பேன் மா… அதோட என்னை அந்த மணிபாரதிக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கிற நினைப்பையும் தயவு செய்து மூட்டைக் கட்டுங்க… ” என்றவாறு கோபமாக பேசியவளிடம், தேவகி அழுது கொண்டே…

“சாமி … என் அண்ணனும் மதனியும் என் தாய் தகப்பன் மாதிரி .. எப்படி என் தாய் சொல்லுக்கு நான் மறு பேச்சு பேசாம சரினு சொல்லுவேனோ அது மாதிரி தான் என் மீனாட்சி மதனிக்கும்.. இன்னைக்கும் எனக்கு அம்மா வீடுனு ஒன்னு இருக்குனா அது அவங்களால தான் … அதனால அவங்க என்ன சொன்னாலும் நான் செய்வேன் .” என்றவர் அறைக்குள் செல்ல முயல … தில்லையும் ,

“ம்மா.. ப்ளீஸ் ப்ளீஸ்…” எனக் கெஞ்சிக் கொண்டே அவர் பின்னால் சென்றாள்.ஆதவன் சற்றுப் பின்னால் நின்றுக் கொண்டிருந்ததால் அவர்கள் இருவரும் ஆதவனைக் கவனிக்கவில்லை.ஆதவனுக்கும் ஒன்றும் புரியவில்லை. மீனாட்சியின் உடல்நிலை அவனை மேலும் யோசிக்க விடவில்லை.

மீனாட்சியிடம் அறுவை சிகிச்சைக் குறித்து அவர்கள் தெரிவிக்க வில்லை என்றாலும் செவிலியர்கள் பேசிக் கொண்டது மூலமாகத் தெரிந்துக் கொண்டவர், கணவனிடமும் தேவகியிடமும் ,

” நான் என் பிள்ளைங்க கல்யாணத்தப் பார்க்காம எந்த சிகிச்சையும் செய்ய மாட்டேன். குலதெய்வக் கோயில்லக் கூட வேண்டாம்.. இப்பவே இங்கேயே கல்யாணத்த நடத்தி வைங்க .., “என்றவாறு சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் இருக்கவும் தான் ஆதவனும் தாமரையும் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்தனர்.

திகைத்த ஆதவன் , ” ம்மா உங்களுக்கு ஒன்னுமில்ல.. நீங்க ஆபரேஷன் முடிஞ்சு திரும்பி வந்ததும் நாம மற்றது பேசிக்கலாம்.”

“இல்லப்பா.. இன்னும் ரொம்ப நாளைக்கு உயிரோட இருப்பேன்ற நம்பிக்கை எனக்கு இல்லை.. நீ படிக்க வெளிநாட்டுக்குப் போனதுமே நான் மதனி கிட்ட பேசி வச்சதுதான்… எனக்காக சரி சொல்லு யா…” என அழுதவரை தாமரைசெல்வியும் இப்போது திகைத்த முகத்தோடுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.