தாமரையின் திராட்சை விழிகள் இங்கும் அங்கு மாக ஓடி இறுதியில் தன் விழிகளில் வந்து நின்றதும்.. விஜய்க்கு ஆதவனிடம் காரை நிற்பாட்ட சொல்லி .. ஒரு துள்ளல் போட வேண்டும் போல் உள்ளுக்குள் மகிழ்ச்சி பிரவாகம் எடுத்தது…

கண்ணோடு ஒரு சந்தோசம்

என்னோடு ஒரு சங்கீதம்

இந்நேரம்

இளநெஞ்சே வா

தென்றல் தேரினில்

எங்கும் போய் வரலாம்…

 அவளும் என்னைப் பார்க்கிறாள்.. அவளுக்கும் என்னைப் புரிகிறது.. என்பது மனதில் சொல்லெணா சந்தோஷத்தைக் கொடுத்தது.

காற்று சுதி மீட்ட தாளம் நதி கூட்ட

கனவுகள் இனிவரும் அனுபவம்…

          தேவராஜன் வீடு வந்து தங்கையையும் அன்னையையும் இறக்கி விட்டவனுக்கு ஒரு சிகரெட் புகைக்க வேண்டும் போல் தோன்ற … அப்படியே நடந்து அருகே இருந்த அவர்களது தோட்டத்து கிணற்றடிக்கு சென்றான். அவனுக்கு தாமரையை பார்த்ததிலிருந்து வந்த உணர்வுகளைப் பற்றி சிந்திக்க வேண்டியிருந்தது.

“தேவா இது என்னடா மாமன் மகள பார்த்து இப்படி ஆகிட்ட.. இந்த அம்மா சொல்லும் போதெல்லாம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு … இப்ப எப்புடி அந்த புள்ளய எனக்கு கேளுனு சொல்றது..” என தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டவன், தானே பின்னந் தலையில் தட்டி… வேட்டியை மடித்து கட்டியவாறே … வீட்டை நோக்கி நடந்தவன்,

“டேய் தேவா… பார்த்த பத்து நிமிஷத்துலயே கல்யாணம் பண்ண கேட்கிற அளவுக்கு பிடிச்சுப் போய்ட்டாளா என்ன.. ” தனக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டுக் கொண்டு வீட்டினுள் நுழைய தில்லை தேவகியோடு அவனின் தந்தை சொக்கலிங்கமும் அமர்ந்து இருக்க.. தங்கை தன் அன்னையோடு ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தாள்.சொக்கலிங்கம் …

“தேவி… என் பொண்ணு மனசு வச்சா மட்டும் தான் நான் எதையும் செய்வேன். அவளுக்கு பிடிக்கலனா பிடிக்கல தான் … என் பசங்க சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்..இதுநாள் வரை எதுக்காவது நான் உன் பேச்சுக்கு மாறா நடந்து இருக்னோ .. இது அவங்க வாழ்க்கை சம்பந்தபட்டது. அது அவங்க முடிவு தான்.. வீணா மனச போட்டு உழப்பிக்காத.. நாம மாமா பிள்ளைங்க அத்தை பிள்ளைங்க தான் … நம்ம காலம் வேற தேவி ..” என மனைவியை சமாதானம் செய்துக் கொண்டிருக்க… தில்லை தந்தை அமர்ந்திருந்த இருக்கையின் கைப்பிடியில் அமர்ந்து அவர் தோள் சுற்றி கை போட்டவள்…

“அப்படி சொல்லுங்கப்பா..  அம்மா புரிஞ்சுக்கவே மாட்டிக்கிறாங்க..” என புகார் வாசித்தவள், உள்ளே வந்த தேவராஜனைக் கண்டு விட்டு, 

“இதோ அண்ணனே வந்துருச்சு… அண்ணா கிட்டயே கேட்போம்…” என்றவள் அவனருகே வந்து …

“ஏண்ணா… இந்த அம்மாவ பார்த்தியா … அவங்க மதினிக்கு உடம்புக்கே முடியலயாம்… அவங்க மகனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி பார்க்க ஆசைப்படுறாங்களாம்.” என்பது போல் தில்லை இழுக்க …

“யாரு…ஆதவனுக்கா… செய்யட்டும் நானும் பார்த்தேன் அத்தை இப்போ ரொம்ப முடியாம தான் இருக்காங்க…” என தேவராஜன் சொல்லவும் .. இடுப்பில் கை வைத்துக் கொண்ட தில்லை…

” அதுக்கு … இல்லை உங்களுக்கு ஒண்ணும் இல்ல சரியாகிடும்னு ஆறுதல் சொல்லாம அவங்க சொன்னாங்களாம் இவங்க ..” என்றவள் தேவகியை சுட்டி காட்டியவள்,

“செய்வாங்களாம்… அதுக்கு நான் தான் கிடைச்சேனா… ” என சத்தமாக சொன்னவள் … 

“அந்த சாலிடர் ஹீரோ எனக்கு வேண்டாம்ப்பா…” என முணுமுணுத்துக் கொள்ள.தேவராஜனோ அவளது பதிலில் திகைத்து …

“என்னம்மா … பாப்பா என்ன சொல்றா… ” என புரிந்தும் புரியாமலும்

 கேட்க … தேவகி தயங்கி தயங்கி …

” இல்ல நம்ம பாப்பாவ அண்ணன் பையனுக்கு ரொம்ப நாளா மதினி கேட்கிறாங்க.. இப்ப உடம்பு வேற சரியில்லனதும் பையனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி பார்க்க ஆசை.. அதுவும் இப்பவே….” என்றது தான் தாமதம் …

“ம்மா… ஆதவன் நல்ல சாய்ஸ் தான் … ஆனா இவ்வளவு அவசரம் எதுக்கும்மா.. பாப்பாவுக்கு இனிதான் பதினெட்டே தொடங்கப் போகுது … சின்ன புள்ள மா.. படிக்கிற வயசு … இப்ப போய்… கல்யாணம் அது இதுனு … படிச்சு முடிக்கட்டும்..” என சத்தம் போடவும்… தில்லை மகிழ்ச்சில் தேவராஜனது கையை கட்டிக் கொண்டவள்,

“அப்படி சொல்லுணா… எனக்கு இப்போ கல்யாணம் எல்லாம் வேண்டாம்… நான் அக்ரி படிச்சு … நம்ம ஊர்ல விவசாயம் பண்ணனும். அது மட்டுமில்ல.. எனக்கு இந்த ஊரெல்லாம் விட்டுப் போக முடியாது. அதனால … உன்னையப் போல நல்லா படிச்ச.. உன்னைய மாதிரியே விவசாயத்துல ஈடுபாடு உள்ளவங்களா பார்த்து எனக்கு கட்டி வைங்க.. அவங்க மதினிக்கு அவசரம்னா வேற யாரையாவது பார்க்க சொல்லுங்க.. எனக்கு அந்த சாலிடர் ஹீரோ மணிபாரதி வேண்டாம்… “

” சாலிடர் ஹீரோ மணி பாரதியா…” என தேவராஜன் வாய் விட்டே கேட்டு விட … அவர்களது பெற்றோர் ஒருவரை ஒருவர் பார்த்து திகைக்க … ” தில்லையோ…

“என்ன முழிக்கிறீங்க…’ புது புது அர்த்தங்கள் ‘படத்துல அந்த ஹீரோபேர் அதுதான்…” எனவும் … தேவகி,

“இனி உன்னைய சினிமா பார்க்க விடக் கூடாதுடி…நிமிஷத்துல வயித்துல புளிய கரைச் சுட்ட…”  என …

தேவராஜனோ… சிரித்துக் கொண்டே” பாப்பா நீ சொல்றது போலவே செய்துடலாம்… கொஞ்சம் சினிமா பார்க்கிறத குறைச்சுட்டு நல்லா படி சரியா”

“நான் நல்லா படிக்கிறது இருக்கட்டும்…” என்றவாறு உள்ளே போக இருந்த தேவகியை நிறுத்திய தில்லை …

“ம்மா… இன்னொன்னும் கேட்டுக்கோ.. இப்ப அண்ணன் சொன்னது எனக்கு மட்டுமில்ல..தாமரைக்கும் தான் … இந்த பொண்ணுக் கொடுத்து பொண்ணு எடுக்கிற வேலையெல்லாம் உங்க காலத்தோட நிறுத்திக்கோங்க… பாவம்மா தாமரை வாயே பேசமாட்டா… மாமா அத்தை என்ன சொன்னாலும் சரி சரி னு சொல்லுவா…” என்ற தில்லை தேவ ராஜனிடம் திரும்பி…

“தாமரை என்னைய விட ஒரு மாசம் சின்னவ அண்ணா… நீ பாட்டுக்கு சிகரெட்ட ரவுண்ட ரவுண்டா ஊதி தள்ளுறத நாங்க ரெண்டு பேரும் ராட்டினத்துல உட்கார்ந்து இருக்கிறப்ப பார்த்துட்டுத் தான இருந்தோம்… ” என்றதும் விழித்த தேவராஜன் தாய் தந்தையரைப் பார்த்து விட்டு ..

“ஐயோ .. ப்பா ம்மா அது அது…” என திணற… சொக்கலிங்கம் மகனருகே வந்தவர் ,

“உங்க வயசு.. எல்லாம் என்ன ஏதுனு பார்க்கத்தான் தோணும்.. ஆனா உடம்பையும் மனசையும் அதுக்கு அடிமையாக்காம பார்த்துக்குங்க.. தேவி பால் எடுத்துட்டு வா…” என்றவாறு அறைக்குள் சென்று விட்டார்.

தேவகி மகனருகே வந்தவர்…”ராசா … அதெல்லாம் வேண்டாம் யா… உடம்புக்கு சீக்கு …” என மகனிடம் வருந்தியவாறே உள்ளே செல்ல … தில்லையோ..

” இது மட்டுமில்லமா அன்னைக்கு வெற்றியண்ணாக் கூட சேர்ந்து த ….” என்றவளது வாயை மூடிய தேவராஜன்..

“ஷ்… பாப்பா அதெல்லாம் எப்பவாது தான்…” என்று தங்கையை பேச விடாது செய்ய… அவன் கையை வேகமாக தள்ளி விட்டவள்,

“அது இப்பவோ எப்பவோ .. உனக்கு இந்த கெட்டப்பழக்கமெல்லாம் இருக்கிறப்பா நான் எப்படிணா தாமரைய உனக்கு கட்டிக் கொடுக்க சம்மதம் சொல்வேன்… அவ டாக்டருக்கு வேற படிக்க ஆசைப்படுறா … °” திகைத்த தேவராஜன் , தாமரையை தனக்குப் பேசப் போகிறார்கள் என்ற ஆர்வத்தில் ,

“ஐயோ பாப்பா அதெல்லாம் சும்மா எப்பவாவது ஃபிரண்ட்சுக்காக தான்…”

“நீ என்ன சொன்னாலும் எனக்கு கெட்ட பழக்கம் தான்… அதுனால நீயே எங்க ரெண்டு பேரையும் படிக்க விட சொல்லு.. இந்த கல்யாணப் பேச்செல்லாம் வேண்டாம். எப்படியும் அவங்க அண்ணனும் படிக்க தான் சொல்வாரு” என்றவாறு அவளது அறைக்குள் சென்று விட்டாள்.

தேவராஜன் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் … “தேவா…உனக்கு சர்டிஃபிகேட் தர உன் தங்கச்சியே போதும்.. உனக்கு கல்யாணம் ஆன மாதிரி தான் … ” என நொந்து கொண்டான்.

ஆதவனும் வீட்டிற்கு வந்து காரை நிறுத்தி மீனாட்சிக்கு கைகொடுத்து இறக்கி விடுகையில் அவன் தந்தையும் அப்போதுதான் வீடு வந்து இறங்கினார்.தங்கையிடம் மீனாட்சியை அழைத்து செல்லும் பொறுப்பை விட்டு விட்டு … நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டே வீட்டினுள் வர .. அருணாச்சலம் விஜயிடம் ,

“தம்பி உங்க சித்தப்பா முறையில ஒருத்தருகிட்ட பேசுனேன்… நீங்க உங்க சொத்து எல்லாத்தையும் வித்துட்டு போறீங்கனு கேள்வி பட்டேன்… ரொம்ப வருத்தபடுறாரு தம்பி …உங்க தாத்தா பார்த்து பார்த்து உருவாக்கினது.. ” என்று ஆதவனிடமும் விஜயிடமும் பேசிக் கொண்டு இருக்கையில்… தாமரை சமையலறையிலிருந்து உணவு பாத்திரங்களை எடுத்து சாப்பாட்டு மேசையில் வைத்துக் கொண்டு இருந்தவள் , மீனாட்சியை அழைத்துப் போக ஹாலுக்கு வந்தாள்.

அவளைக் கண்டதும் விஜய்க்கு என்ன தோன்றியதோ, “ஆமா அங்கிள் … சொல்லி வச்சுருந்தேன். ஆனா இப்போ எனக்கு இந்த ஊரை … ஐ மீன் தமிழ் நாட்டை விட்டுப் போகணும்னு தோணல… பேசாம இங்க இருந்து தாத்தா பிஸ்னஸ் பார்த்துக்கலாம்னு யோசிசுட்டு இருக்கேன்…” என்றதும் , மீனாட்சியை எழுப்பிக் கொண்டிருந்த தாமரையின் விழிகள் விஜயை நோக்கின.. உடனேயே பார்வையைத் திருப்பி தாயாருடன் சென்றாள்.

ஆதவனோ அருகில் நின்ற நண்பனின் தோளில் கைப்போட்டுக் கொண்டவன் .. 

“ஹே° நான் கிட்டதட்ட நீ விற்கணும்னு சொன்ன நாளிலருந்து வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன் .. திடீர்னு எப்படிடா.. ரொம்ப சந்தோஷமா இருக்கு …” என ஆச்சரியத்தில் பேசினான்.

” உண்மைதான்… இத்தனை நாள் நமக்கு இங்க என்ன இருக்குனு யோசிப்பேன்… ஆனா இப்போ … ” என்றவனை அணைத்துக் கொண்ட ஆதவன்…

“நான் எப்பவும் உனக்கு சொல்றதுதான் .. நாங்க இருக்கோம் உனக்கு … தொழில்ல என்ன சந்தேகம்னாலும் அப்பாகிட்ட கேளு அவரு உனக்கு ஹெல்ப் பண்ணுவார்… ” என்றதும் மகிழ்ந்த விஜய் ,

” தேங்ஸ் ஆதவ் …பிஸ்னஸ் ஒரு புறம் இருந்தாலும் இராணுவத்துல சேர்றது என்னோட லட்சியம் ..அதனால ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் அதற்கான முயற்சிகள்ல இறங்கலாம்னு இருக்கேன்… பார்ப்போம்.. நாளைக்கு காலையிலயே தாத்தா ஊருக்கு கிளம்பறேன்..” என்றவன் ஆண்களிடம் மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு சென்றான்.

விஜய் அதிகாலையே கிளம்பிச் சென்று விட … தாமரைக்கு அப்போதுதான் தான் இயல்பு நிலைக்கு வந்தது போல் இருந்தது. படித்தது பெண்கள் பள்ளி தான் … அவர்கள் ஊரிலிருந்து பள்ளிக்கு வேனில் தான் செல்வாள்… பெற்றோரோடு வெளியில் சென்றால் பல இளைஞர்களை கடந்து இருக்கிறாள் தான் … ஆனால் யாரின் பார்வையும் அவளை இப்படியொரு உணர்வுக்கு அழைத்துச் சென்றதில்லை… என்னவோ விஜய் வந்த தேரத்திலிருந்து தாமரையை கவர்ந்துக் கொண்டிருக்க அது உடலில் ஒரு இறுக்கத்தை கொடுத்திருந்தது.

இப்போது அவன் வீட்டில் இல்லை என்று தெரிந்ததும் சற்று இறுக்கம் தளர்ந்து வீட்டில் நடமாடிக் கொண்டிருந்தாள். இதோ சித்திரை திருவிழாவும் முடிந்து பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடுத்த வாரத்தில் வர இருப்பதாக அறிவிப்பு வந்திருக்க .. தாமரையும் தில்லையும் ஆவலோடு தங்கள் தேர்வு முடிவுகளை அறிய ஆவல் கொண்டிருந்தனர்.