அலை 4

                             ஒரு பூந்தென்றல் தாலாட்ட

                              சில மேகங்கள் நீரூற்ற

                              இளஞ்சோலை பூத்ததா…

                               என்ன ஜாலம் வண்ண கோலம்

                ”   சா… சாரி.. பாப் … அது தங்கச்சினு நினைச்சிட்டேன்…” என்ற தேவராஜிடம் ,

“பரவாயில்ல தேவாத்தான் .. ” என்றவாறு புன்னகைத்தவளைக் கண்டு உலகையே மறந்தான் தேவராஜன். இத்தனை நேரம் இளம் பெண்கள் பலரைக் கண்டு அவர்களை நண்பர்களோடு இணைந்து கலாட்டா கேலி செய்துக்கொண்டிருந்தவன் தான்.. ஆனால் தாமரையைக் கண்டவனுக்கு பேசவே மறந்து போனது… அவளது புறத்தோற்றம் கவர்ந்ததா… இல்லை ‘அத்தான் ‘ என்ற அழைப்பு கவர்ந்ததா.. அவனறியான்.

அதற்குள் ஆதவன் அங்கு வந்திருக்க.. அவன் கையில் நான்கு பெப்ஸி பாட்டில்கள் இருந்தன. 

” ண்ணா .. நானே பெப்ஸி வாங்கி .. ” என சொல்ல இருந்தவளை அருகில் இழுத்து , அவள் காதருகே குனிந்து, 

“ஏன்டி… எங்கம்மா சத்தமா பேசாத பேசாதனு சொல்லும் .. நான் அங்க சொன்னது இங்க கேட்டுருச்சா..” என்றாள்.

ஆதவனோ தேவராஜனைக் கண்டு விட்டு , “மாப்ள நீயும் இங்க தான் இருக்கியா.. இதைப் பிடி … நான் இன்னொன்னு வாங்கிட்டு வாறேன்..” என கிளம்ப போக ..ராஜனுக்கு தாமரையால் மனதிலும் உடலிலும் வந்த புது விதமான உணர்வை தணிக்க தனிமை தேவைப்பட்டது .. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி…

“இரு மச்சான்.. நானே போய் வாங்கிக்கிறேன் அப்படியே அம்மாவுக்கும் அத்தைக்கும் சாப்பிட வாங்கிட்டுப் போறேன்… நீங்க நிதானமா வாங்க..” என்றவாறு நகர்ந்து விட்டான்.

போகும் வழியெல்லாம் … ” மாமா பொண்ணுதான் … ஆனா தங்கச்சிக் கூட படிக்கிறவளாச்சே.. அதிகமா பார்க்காததால இப்படி பார்க்க தோணுதா” இப்படி தாமரையைப் பார்த்ததிலிருந்து மனதோடு கேள்விகளை எழுப்பிக் கொண்டே அவன் சென்று விட , விஜயோ கைகளில்  இரண்டு ரோஜா வண்ண பஞ்சுமிட்டாய் குச்சியை பிடித்தவாறு அங்கு வந்து நின்றான்.

ஆதவனிடம் அதனைக் கொடுக்கையில் விழிகள் தாமரையை தான் பார்த்துக் கொண்டு இருந்தது.வரும் வழியில் பார்த்த தாமரை அண்ணனிடம் கேட்டு வாங்க ஆசைபட்டாள்.. ஆனால் விஜயும் கூட இருப்பதால் சங்கடப்பட்டு அமைதியாக வந்து விட்டாள். இப்போது அவன் வாங்கி வரவும் விழிகள் ஆச்சரியத்தில் விரிய .. விஜய்க்கு அது போதுமே… அவனுள்ளம் மேலும் சிறகடிக்க துவங்கியது. 

எந்த சொந்தங்கள் யாரோடு என்று

காலம் தான் சொல்லுமா..

பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம்

தேதி தான் சொல்லுமா

சோலை எங்கும் சுகந்தம்..

பேச்சு ஆதவனிடம் இருந்தாலும் பார்வை தாமரையிடம் தானே இருந்தது.. பஞ்சு முட்டாய் விற்கும் இடத்தை ஆவலோடு பார்த்துக் கொண்டே கடந்து செல்வதை கவனித்திருந்ததால் தான் வாங்கி வந்திருந்தான்.

தில்லையும் ஆச்சரியத்தோடு , “தாமரை எனக்கு பிடிச்சது எனக்கும் உனக்கு பிடிச்சது உனக்கும் தானா தேடி வருது பாரேன்.. ” என்றவள் ஆதவனிடமிருந்து ஒன்றை கேட்காமலயே வாங்கியவள் விஜயிடம்,

“தேங்க்ஸ் அண்ணா.. இவளுக்கு ரொம்ப பிடிக்கும் .. போகும் போது வாங்கிக்கலாம்னு நினைச்சு இருந்தேன்…” என்றவாறு தோழியின் கைப்பிடித்தவாறு நடக்க ஆரம்பித்து விட்டாள்.ஆதவனுக்கு தில்லையிடம் ஆச்சரியமும் ஆர்வமும் அதிகமாக பொங்கியது.

தாமரை அவனுக்கு செல்ல தங்கை… அவனுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து மீனாட்சி பல உடல் உபாதைகளால் அவதியுற்ற காரணத்தால் அடிக்கடி மருத்துவமனை செல்வதும் வருவதுமாக இருப்பார். அப்படிச் செல்லுகையில் வீட்டில் பார்த்துக் கொள்ள உறவினர்களும் , வேலையாட்களுமாக எத்தனை பேர் இருந்தாலும் , “அம்மா … ” என கத்தி அழும் குழந்தையை அவனிடம் கொடுத்து ” தங்கையை பார்த்துக் கொள்..” என்ற வார்த்தைகளை இன்று வரை விடாமல் பிடித்துக் கொண்டான். 

 இன்று மட்டுமல்ல காலங்கள் கடந்தும் தங்கை மீதான பாசம் மட்டும் அவனுக்கு குறையவே இல்லை. கல்லூரி பயில வெளியூர் செல்கையில் தாமரை அண்ணனைப் பிடித்துக் கொண்டு அழுத அழுகை அவனுக்கு இன்றும் நினைவில் உண்டு. அவனது ஏழு வயதில் இருந்தே தாய் தந்தை சகோதரன் என மூவரின் உருவாக தானே தாமரைக்குத் தெரிந்தான். அவனைப் பிரிய தாமரை சத்தமாக அழுதாள்.. ஆதவன் மனதிற்குள் அழுதான்.. அவ்வளவுதான் இருவருக்குமான வித்தியாசம்.

அதன் பிறகு கடந்த ஆறு வருடங்களாக எப்போது கல்லூரியில் விடுமுறை விட்டாலும் ஓடி வந்து விடுவான். இந்த ஒரு வருடமாக வெளிநாட்டில் மேற்படிப்பு படித்துக் கொண்டு இருக்கிறான். அதற்கு முன்பு சென்னையிலிருந்த பொறியியல் கல்லூரியில் ஒரே வகுப்பில் ஆதவனும் விஜயும் பயிலும் போது தான் நல்ல தோழர்களானது. கல்லூரி நாட்களில் ஆதவனது பர்ஸில் ஒரு கருப்பு வெள்ளை குடும்ப புகைப்படம் வைத்திருப்பான்.’செல்விமா.. எங்க பாப்பா.. ‘ என்று மட்டுமே விஜயிடத்தில் தன் தங்கையைக் குறித்து நினைவுகளை பகிரும் போது விஜயின் கண்களுக்கு தந்தை மடியில் அமர்ந்திருந்த சிறுமி மட்டுமே கண்ணில் வருவாள் .. 

ஆனால் இன்றோ .. ஈரக் கூந்தல் தன் தொடையில் உரச… அவளது கயல் விழிகள் இதயத்தையும் உரச… அவனுக்கு எந்த சிறுமியும் நியாபகத்தில் வரவில்லை … இளங்காற்றாக இதயம் நுழைந்த … இந்த இளமங்கை தான் நினைவில் நிற்கிறாள்.

இப்படி பார்ப்பவர்களை எல்லாம் கவர்ந்த தாமரை செல்வியை தன்னைப் போலவே அன்பாக…பாசமாக … தான் பார்த்த நேரத்திலிருந்து அக்கறையாக அவளுக்கு பிடித்தது பிடிக்காதது என பார்த்து பார்த்து செய்யும் அத்தை மகள் மீதான ஆர்வம் பெருகிக் கொண்டே போனது ஆதவனுக்கு.

இப்படி அந்த சித்திரை திருவிழா பொருட்காட்சி வந்திருந்த இளைஞர் இளஞிகளை ஒவ்வொரு வகையில் கவர்ந்துக் கொண்டே இருந்தது.

நேரம் செல்ல ஆரம்பிக்க மீனாட்சி அமர்ந்திருந்த இடத்திற்கு அனைவரும் வரவும் …வெளியே வண்டியை எடுத்து தயாராக வைப்பதற்கு ஆண்கள் மூவரும் சென்று விட்டனர். இவர்கள் பேசிக் கொண்டே மெல்ல நடந்து வெளியே வந்துக் கொண்டு இருந்தனர்.

“தாமரை… அடுத்து எப்போ பார்ப்போம்னு இருக்குடி.. என்னவோ எனக்கு டாக்டர் படிப்பு மேல ஆர்வம் வர மாட்டிக்குது. இல்லனா உன் கூடவே சேர்ந்து படிக்க வந்துருவேன். பேப்பர் ல ரிசல்ட் வந்து மார்க்ஷீட் வாங்க வரும் போது தான் பார்க்க முடியும்… பேச முடியும்.. அம்மாச்சி தாத்தா இருக்கும் போது அம்மா அடிக்கடி அங்க அழைச்சிட்டு வருவாங்க.. இப்ப ம்ஹூம்.. ” என சோர்வாக பேசிய தில்லையிடம் …

” நான் டெலிஃபோன் பண்ணும் போதெல்லாம் நீ தூங்கறடி… நீயா போடும் போது நான் அம்மாவுக்கு துணையா ரூமுக்கு போய்டுறேன் டி ..” என்றும் பேசிக் கொண்டே நடக்க …

“அது டி… படிப்பு படிப்புனு இந்த ரெண்டு மூணு வருஷமா சினிமாவுக்கே கூட்டிட்டு போகலல… அதான் எங்கண்ணன் சினிமா பட கேசட்டா நிறைய வச்சுருந்துச்சா… எல்லாத்தையும் போட்டு போட்டு பார்த்துட்டு இருக்கேன்… அதான் நைட் ரொம்ப நேரம் பார்த்துட்டு இருக்கவும் ரொம்ப நேரம் தூங்கறேன்.. அண்ணன் சாமி படமா நிறைய வச்சுருக்கு சொன்னேன்ல அதைய மட்டும் கடைசியா பார்க்கலாமுனு இருக்கேன்.. “

“ஓ…அப்ப அந்த கேசட்ட எல்லாம் யாருகிட்டயாவது கொடுத்து விடுடி… அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் .. ” என்ற தாமரையிடம் சரி என தலையாட்டியவள், தங்களது காருடன் நின்ற தேவராஜன் அருகில் வந்த தில்லை …

“அண்ணா அந்த சாமி பட கேசட் எல்லாம்.. யார் மூலமாவது மாமா வீட்டுக்கு கொடுத்து விடு .. அத்தை சாமி படம் பார்ப்பாங்களாம்…” என சத்தமாக சொல்லி விட… மிரண்டு விழித்த தேவராஜன்..

“ஐயோ.. என் தங்கச்சி என் மானத்த வாங்காம விட மாட்டா போல… ” என நினைத்தவன், மேலும் எதுவும் பேசவிடாது …

“சரி.. பாப்பா.. வா.. கிளம்பலாம்… நேரமாகிடுச்சு.” எனும் போதே ,

 மீனாட்சியை அருகில் வந்து அழைக்க வந்த ஆதவன்…

” என்ன சாமி படமா…” என இழுக்க…

“ஆமா… சாமி படம் தான் திருவிளையாடல்.. அப்புறம்… ” என சொல்ல வந்த தில்லையை வேகமாக கைப் பிடித்து … காருக்குள் தள்ளிய தேவராஜன்…

“பாப்பா கொடுத்து விடுறேன் நீ ஏறு..” ஆதவனிடம் சொல்ல வர.. அவன் மெல்லிய குரலில் தேவராஜனிடம் ,

“மாப்ள… அப்படி என்னடா சாமி படம் … நாம பார்க்கிறதா.. நம்ம அம்மாக்கள் பார்க்கிறதா..” என கண்ணடிக்க…

“மச்சான்… நீயுமா …” என திகைக்க …

“அப்ப அது தான் … ” என வாய் விட்டு சிரித்த ஆதவனின் தோளில் தட்டி,

” என்னைய ஆள விட்டுரு சாமி… ஐயோ இனி சாமினே சொல்ல 

மாட்டேன் .. ” என்றவன் மீனாட்சியிடம் வாய் வார்த்தையாக, போய் வருகிறேன் என்று விட்டு தாமரையிடம் அதே புன்னகையுடன்,

“வாறேன் செல்வி … ” என, .அவளும் பதிலுக்கு புன்னகைத்து,

“வாங்க அத்தான்.” என  அவனுக்கு விடை கொடுத்தாள்.

தேவராஜனுக்கு உடலும் மனமும் சிறகடிக்க..பயணத்தில் தங்கை கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் சளைக்காமல் பதிலளித்துக் கொண்டே வந்தான்.

அங்கு ஆதவன் காரில் ஏற வந்த விஜயின் கைகளில் ஏகப்பட்ட வீடியோ கேசட்டுகள் மற்றும் ஆடியோ கேசட்டுகள். அதைப் பார்த்ததும் தேவராஜனின் ஞாபகம் வந்து ..

“என்ன கேசட்டுங்கடா… ஓ ‘பூமாலை’ கேஸட்டுகளா.. இதை நிறுத்தி ரொம்ப நாளாச்சுன்னு சொன்னாங்க..” என அப்போதைய மின்னிதழ் ஒளிநாடாவைக் குறித்துப் பேச … காரில் ஏறி அமர்ந்துக் கொண்டே ..

” நான் வாங்காத ரெண்டு…. பூமாலை..” என நிறுத்தி தாமரையின் விழிகளை கார் கண்ணாடியில் பார்க்க.. அவளும் அந்த வார்த்தைகள் காதில் விழ விழ அவனைத் தான் பார்த்தாள்… நொடியில் பார்வைகளை இருவருமே தழைத்துக் கொள்ள.. விஜய் தொடர்ந்தான்.

” கேசட்கள் இங்க கிடைச்சது … அதான் வாங்கிட்டேன்.” என்றவனிடமிருந்த ஒலிநாடா ஒன்றை வாங்கி பார்த்த ஆதவன்…

“இதுவும் அருமையான கலெக்ஷன்ஸ்டா… கடையவே காலி பண்ணிட்ட போல… இதுல ஒன்னு போட்டுவிடு…” என்றதும் வேகமாக அவன் தனியாக வைத்திருந்த ஒன்றை எடுத்து போட்டு விட்டான் விஜய் ..”

மிகவும் பிரபலமான ..ரேடியோவில் அடிக்கடி ஒலிக்கும் பாடல்… வார்த்தைகளற்ற ஆரம்ப இசையே அது என்ன பாடல் என்பதை தாமரைக்கு உணர்த்திவிட… உறங்க ஆரம்பித்திருந்த தாயாரையும் பார்க்க முடியாமல் … உள்ளே அண்ணனையும் பார்க்க முடியாமல் மனம் குழம்பி போய் கார் ஜன்னல் கண்ணாடி வழியாக இருளை வெறித்திருந்த அவளது விழிகள் அலைபாய ஆரம்பித்தன.

இன்றுக் காலை முதல் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவளை பருவப் பெண்ணாக பல உணர்வுகளுக்குத் தள்ளிக் கொண்டிருக்க… இசை முடிந்து பாடல் வார்த்தைகளாக ஆரம்பிக்கவும் விழிகள் தன்னையும் மீறி முன்னிருந்த ரியர்வியூ கண்ணாடியில் நிலைத்து விட்டது.

அதில் தெரிந்த விழிகளும் இமை சிமிட்டாமல் அவளையே பார்க்க ஆரம்பித்தன… அந்த பாடலின் ஆரம்ப வரிகளே அதற்கு காரணம்…

 

அது…

பூமாலையே தோள் சேர வா

பூமாலையே

ஏங்கும் இரு தோள்..

தோள் சேர வா

ஏங்கியது இளைய மனது,

இளைய மனது…

காலை முதல் அந்த ஆரம்ப வார்த்தைகள் தானே இருவரையும் ஒருவரை ஒருவர் பார்க்க வைத்துக் கொண்டிருந்தது. தாமரைக்கு இப்போது அந்த வார்த்தையோ  பாடலின் வரிகளோ சாதாரணமா தெரியவில்லை … மேலும் ஒருவரிடம் ஒருவர் கேள்வி கேட்பது போல தான் இருந்தது இருவருக்கும் …

இணையும் பொழுது,

இணையும் பொழுது, இளைய மனது

தீம்தன தீம்தன….

தீம்தன தீம்தன என இரு இதயங்களும் ஓசையின்றி இசைப்பது போலவே ஒரு தோற்றம் …