Advertisement

“ஓ… கூடப் பிறந்தவங்க…” என்ற மீனாட்சியிடம் ,

” இல்லமா… இவன் மட்டும் தான்…அவங்க அம்மாவோட அப்பாவும் ராணுவத்துல இருந்தப்பதான் விஜய் அப்பா அவங்க  அம்மாவ பார்த்து விருப்பட்டு கல்யாணம் பண்ணியிருக்கார். ஆனா அவங்க அப்பா தாத்தா அவங்க கல்யாணத்த ஏத்துக்காததால வடக்கையே செட்டில் ஆகிட்டாங்க… சமீபத்துல அப்பா அம்மானு ரெண்டு பேரையும் இழந்துட்டான். என்னவோ கடைசி நேரத்துல மனசு மாறி அவங்க தாத்தா  எல்லா சொத்தையும் இவன் பேர்ல எழுதி வச்சுட்டுப் போய்ட்டார். இப்ப அவனுக்குனு யாரும் இல்லமா..”

ஆதவன் அதைச் சொல்லும் போது மீனாட்சியோடு … தாமரையின் மனமும் வாடியது என்னவோ உண்மை. ஆதவன் மேலும் ,

“அப்பா கிட்ட அந்த சொத்துக்கள விற்கிற விஷயமா பேசணும்னு இருக்கிறேன். அதையெல்லாம் இங்கேயே வித்துட்டு கிளம்ப தான் இப்ப இங்க வந்தான். நான் தான் இங்க சித்திரை திருவிழாவுக்கு வந்துட்டு உங்க ஊருக்குப் போனு கூட்டிட்டு வந்தேன்… ” என்றவன் நண்பனின் படிப்பு குணம் என மேலும் தன் அன்னையிடம் பகிர்ந்துக் கொண்டிருந்தான்.

“அது என்னவோ பா இங்க உங்க தாத்தாவும் கெளரவம் கெளரவம்னு தான் பேசிட்டு இருப்பார். இந்த சாதி, மதம், மொழி, இனம்லாம் மனுஷன நிம்மதியா வாழ விடுறதே இல்ல… உங்க அப்பா அந்த மாதிரி இல்லனாலும்.. கூட இருக்கிறவங்க உசுப்பேத்திட்டே இருக்காங்க.. நீ வேற வெளிநாட்டுக்கு படிக்க போறேன்னு போய்ட்ட.. அங்குள்ள பொம்பள புள்ளைய பிடிச்சிருக்குனு சொல்லிட்டா… உங்கப்பா எனக்கு புள்ளையே இல்லனு ஒதுக்கிருவார்… ” என்றவர் மகனின் தாடையைப் பிடித்து…

” என் ராஜால்ல… இந்த தடவை கல்யாணம் பண்ணிட்டு போப்பா.. பாப்பாவுக்கும் கல்யாணத்துக்கு பாக்கலாம்னா அது சின்ன புள்ள படிக்கட்டும்னு நீயும் சொல்ற.. எனக்காக யா.. ஒருத்தர் கல்யாணத்தயாவது நான் பார்க்கணும் ” என மகனிடம் கெஞ்சுவது போல பேச… ஆதவன்..

“ம்மா ..உங்களுக்கு ஒன்னும் ஆகாது.. எனக்கு இன்னும் ஆறு மாச படிப்பு இருக்குமா …வயசும் இருபத்தஞ்சு தான் ஆகுது.. கல்யாணத்த பத்திலாம் நாம அப்புறமா பேசலாம்… அதோட நான் எந்த வெள்ளைக்கார புள்ளையையும் கல்யாணம் பண்ண மாட்டேன் மா.. நீங்க சொல்ற பொண்ணுதான் எனக்கு மனைவியா வருவா போதுமா” என்றவன் மேலும் அவரை சமாதானம் செய்துக்கொண்டிருந்தான்.

அங்கு திலோ என அழைக்கப்படும் தில்லை நாயகி , கட்டிலில் இருந்து எழ மாட்டேன் என அவள் அம்மாவிடம் அடம் பிடித்துக் கொண்டிருந்தாள்.

“எவடி இவ… என்னையப் போட்டு பொருட்காட்சிக் கூட்டிட்டுப்  போனு அடம் பிடிச்சிட்டு … இப்ப தூங்குனா எப்படி … செல்வி போனுல இருக்கு … மருமவன் வந்துருக்காரம் … பொருட்காட்சி போலாமானு கேட்குது அந்த புள்ள… ராஜனையும் இன்னைக்கு மில்லுக்கு போவ வேண்டாமுனு சொல்லிபுடுதேன்…” என்ற தேவகியின் குரலில் வேகமாக எழுந்த தில்லையும் அவர்கள் வீட்டு நடுக்கூடத்தில் இருக்கும் தொலைப்பேசியை நோக்கி ஓடினாள்.

வேகமாக வந்து எடுத்த தில்லையின் மூச்சுக்காற்றிலிருந்தே அவளை உணர்ந்த செல்வி அவளிடம்…

“ஏன்டி இப்பதான் எழுந்தியா… ஓடி வந்துருக்கப் போல.. “

“அதை விடு… பொருட்காட்சி போறமாடி … உங்க நொண்ணன் வந்துருக்காரம்.. அம்மா சொன்னாங்க…”

“இங்க பார் எங்க அண்ணன கிண்டல் பண்ணினா… நீ ஒன்னும் வர வேண்டாம் … நான் தனியாவே போய்க்கிறேன்…”

“போதும்டி உங்க நொ… அண்ணன் பாசம் …எப்ப கிளம்புறோம்… அம்மாகிட்ட சொல்லணும்…” என்றவள் மற்ற விவரங்களைப் பெற்றுக் கொண்டு தொலைப்பேசியை வைத்தாள். அப்போதுதான் தன் அறையிலிருந்து மில்லிற்கு கிளம்பி சாப்பாடு மேசையருகே வந்த ராஜன் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் தில்லைநாயகியின் தமையன் தேவராஜன் தன் தங்கையிடம் ,

” என்ன பாப்பா மில்லுக்கு நான் கிளம்புறதுக்குள்ள எழுந்து வந்துட்ட .. பரிட்சை முடிஞ்சது என்னைய யாரும் சீக்கிரம் எழுப்ப வேண்டாம்னு சொன்ன … ” என்றவாறே தேவகி கொண்டு வந்த இட்லியை சாப்பிட ஆரம்பித்தான்.

“எய்யா.. இன்னைக்கு சாயந்திரம் பாப்பாவ அழைச்சிட்டு பொருட்காட்சிக்குப் போகலாம்னு இருக்கேன். அங்க மருமவன் வந்துருக்காப்புல… நீயும் வறியா.. அப்பாகிட்ட இன்னைக்கு மில்லுக்கு வரலனு சொல்லிக்கிடலாம் … ” என தேவகி கூறும் போதே ..

” எம்மா… என்ன வறீயானு கேக்குற ….அண்ணன் வரணும்…” என்றவள் தேவராஜனின் அருகில் சென்று அமர்ந்து …

“அண்ணா .. ப்ளீஸ்.. அம்மாவும் அத்தையும் கால்வலினு ஒரு இடத்துல உட்கார்ந்துடுவாங்க.. அப்புறம் எங்கண்ணா சுத்திப் பார்க்கிறது. உன் மச்சான் வந்திருக்கிறதால தாமரை போறாளாம்… அதான் என்னையும் கூப்பிட்டா…” அதுவரை தமிழில் உரையாடியவள் சட்டென…,

“நீயும் மில்லுல எவ்வளவு நேரம் தான் அரிசி மூட்டையப் பார்த்துட்டு இருப்ப அங்க வந்தா ஏப்ரல் மே யில பசுமையே இல்லனு பாட்டுப் பாட வேண்டாம்ல..” ஆங்கிலத்தில் கூறி கண் சிமிட்ட , பதறிய ராஜன் அம்மாவைப் பார்த்து விட்டு , இடது கையால் தங்கையின் காதைத் திருகினான்.

அவனும் ஆங்கிலத்திலயே, “அம்மா முன்னாடி என்ன பேசுற…”

“ஷ்.. விடுண்ணா… நீயும் உன் ஃபிரன்ட்ஸும் பேசிக்கிட்டத நான் மாடி பால்கனிலருந்து கேட்டுட்டு தான் இருந்தேனாக்கும் … ” என்றவள் , தேவகியிடம்,

“எம்மா எம்மா… இன்னைக்காவது அந்த சல்வார் கமீஸ் போடுறேனே..”

“முதல்ல அண்ணனும் தங்கச்சியும் என்ன பேசிக்கிட்டீங்கனு சொல்லுங்க… இங்கிலீசுகாரவுங்க பள்ளிக்கூடத்துல படிச்சதுதான் படிச்சதுக எப்ப பாரு தஸ்ஸு புஸ்ஸுனு … ” என தேவகி புலம்ப… தில்லை அவரிடம் ,

“அதுவாம்மா… நம்ம பரம்பரை பேர் சொல்ல… நம்ம குடும்பத்துக்கு வாரிசு வேணும்… வாரிசு பெத்துக் கொடுக்க அண்ணனுக்கு முதல்ல கல்யாணம் பண்ணனும்ல.. அதான் திருவிழாவுக்கு வா… பொண்ணுங்க நிறைய பேர் இருப்பாங்க.. உனக்கு பிடிச்சவள அம்மாகிட்ட சொல்லலாம்னு சொல்லிட்டு இருந்தேன்… ” எனவும் தேவாவிற்கு புரையேற … அவன் தலையைத் தட்டிவிட்ட தேவகி…

“என்  புள்ளய இப்பவே கல்யாணத்துக்கு ‘ இம்’ முனு ஒரு வார்த்தை சொல்ல சொல்லு.. வரிசையா பொண்ணுங்கள கொண்டாந்து நிப்பாட்டுறேன்… அவந்தேன் தங்கச்சி படிச்சு முடிச்சு அவ கல்யாணத்துக்கு பொறவு தான் என் கல்யாணம்னு சொல்லிப்புட்டானே…”

“அப்படியா.. அப்ப காத்துட்டு இருக்க வேண்டியதுதான்… ” என்ற தில்லை எழுந்து வீட்டின் பின்புறம் முகம் கழுவச் சென்றாள். தேவகியோ “எங்க அண்ணன் பொண்ணு படிக்கட்டும்ங்கிறாரு.. இல்லனா மதினி ஆசைதான் எனக்கும் ..” என

” ராஜா  வேணி மதினி தங்கச்சி மக திருவிழாவுக்கு பெரியகுளத்துலருந்து வந்துருக்கு … பார்க்க மூக்கும் முழியுமா நல்லா இருக்கு பேசட்டுமா..

“ம்மா.. தங்கச்சி தான் விளையாடுறான்னா நீங்களுமா … இப்ப என்ன மா.. இருபத்து அந்த வயசுதான் ஆகுது…. என் கூட படிக்சவங்கள்லாம் இன்னும் படிச்சுட்டே இருக்காங்க… நாந்தான் டிகிரி போதும்னு அப்பாக்கூட வேலைக்கு வந்துட்டேன்… அப்பாவுக்கும் முன்ன மாதிரி முடியலலாமா … முதல்ல தொழிலகத்துக்கணும் .. அது எனக்கு பிடிபடறதுக்குள்ள தங்கச்சியும் படிச்சி முடிச்சுரும்.. அதனால இன்னும் நாலஞ்சு வருஷமாவது ஆகட்டும் … ” என்று விட்டான்.

தேவகியோ…” தங்கச்சி படிக்கனும்னு சொல்றான்… மதினியும் கல்யாணம் பண்ணி தா… நாங்க படிக்க வைக்கிறோம்னு சொல்றாக.. என்னதேன் பண்ண… அழகரதேன் கேக்கணும்.” என முணுமுணுத்துக்கொண்டார்.

முகம் கழுவி விட்டு வீட்டினுள் வந்த தில்லை அண்ணன் கூறுவதைக் கவனித்து விட்டு அவனிடம் ரகசியமாக ….

“அதுவரை சைட் மட்டும் அடிக்கலாம்னு முடிவு பண்ணிட்ட அப்படித்தானே…” என்று விட்டு ஓடி விட்டாள்.தங்கையின் கேலியில் புன்னகைப் பூக்க தொழிற்சாலைக்கு கிளம்ப இருந்தவனிடம் தேவகி …

“அப்பாகிட்ட நான் பேசிக்கிறேன்.. மதியத்துக்கு மேல வீட்டுக்கு வந்து எங்கள மதுரைக்கு கூட்டிட்டு போயிருப்பா…” என்றதும் சரி என தலையாட்டி விட்டுச் சென்றான். தேவராஜன் நல்ல கம்பீரமான இளைஞன். மதுரையில் உள்ள பெரிய கலைக் கல்லூரியில்  பி.காம் முடித்து விட்டு… சில வருடங்களாக தந்தையுடன் இருந்து தொழில் செய்துக்கொண்டிருக்கிறான். அவனது தாய் மாமன் மக்கள் தான் ஆதவ மூர்த்தியும், தாமரை செல்வியும்.

ஆதவனும் , தேவராஜனும் சம வயது உடையவர்களே … ஆதவன் பொறியியல் படிக்கச் சென்றதால் இப்போது தான் முதுகலைப் படிப்பும் முடித்துவிட்டு மேற்படிப்பை வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தான். இருவரது தங்கைகளும் மதுரையில் உள்ள பெயர் பெற்ற ஆங்கிலோ இந்திய பள்ளியில் தங்களது பனிரெண்டாம் வகுப்புத் தேர்வை சென்ற மாதம் எழுதி முடித்திருந்தனர்.

மீனாட்சி ஒற்றை பிள்ளையாகிப் போனதால் சொத்துக்கள் அதிகமாக இருந்தாலும் அவரது தாய் தந்தையின் மறைவிற்குப் பின் பெற்றோர் வீட்டுச் சொந்தமாக பெரிதாக யாருமில்லாதுப் போனார்கள். கணவன்.. கணவனது வீட்டினர் என்று மட்டுமே இருந்தவர்.. தற்போது என்ன முக்கியத்துவம் வாய்ந்த செய்தியோ நிகழ்ச்சியோ கணவனின் தங்கையான தேவகியை முன்னிருத்திக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். 

இன்றும் மதுரை கோவில் விழாவிற்குச் செல்வதற்காக அவரிடமும் தொலைப்பேசியில் தெரிவித்து அழைத்துக் கொண்டார்.தாமரை செல்வியின் ஊர் தேனிக்கும் மதுரைக்கும் இடையே என்றால் , தில்லை நாயகியின் ஊர் திண்டுக்கல்லுக்கும் மதுரைக்கும் இடையே இருக்கும்.இருவரும் படிப்பது மதுரையில் ஒரே பள்ளி என்பதால் உறவு என்பதனைத் தாண்டி இருவருக்குள்ளும் நல்ல நட்பு என்பது எப்போதுமே உண்டு. வீட்டு உறவினர்கள் எப்போதாவது தான் சந்தித்துக் கொள்வர். ஆனால் தில்லையும் தாமரையும் தினமும் பள்ளியில் சந்தித்துக் கொண்டதால் ஒரு இறுக்கமான நட்பு இருக்கும். பள்ளித் தேர்வுகள் முடிந்ததிலிருந்து இருவரும் நேரில் சந்தித்து சில நாட்கள் ஆகவும் இதனை வாய்ப்பாக பிடித்துக் கொண்டனர்.

இன்றும் திருவிழா காணச் செல்கிறோம் என்றதும் தோழியை அழைத்து விட்டாள். தாமரையின் அம்மா எப்படியும் அத்தையை அழைப்பார் என்று தெரிந்ததாலயே அவளும் தோழிக்கு அழைத்துக் கூறியது.

ஆதவமூர்த்தி.. அருணாச்சலமூர்த்தியின் தவப்புதல்வன்.. பரம்பரை பரம்பரையாக ஏகப்பட்ட சொத்துக்கள் ,தங்கை தேவகிக்கு கொடுத்தது போக .. அவர் பெருக்கியதும் ஏராளம். மகன் வெளிநாட்டிற்கு சென்று படிக்க விரும்ப அதனையும் நிறைவேற்றிக் கொடுக்க … ஆதவன் இன்னும் ஆறு மாதத்தில் படிப்பை முடித்துக் கொண்டு திரும்ப இருக்கிறான். தற்போது விடுமுறைக்கு வந்திருந்தான்.

அதோடு ஆதவனுக்கு அவனது ஏழாவது வயதில் பிறந்தவள் தான் தங்கை தாமரை செல்வி.. அவள் என்றால் உயிர்…தங்கை சித்திரை திருவிழாவைக் காண ஆசைப்படுகிறாள்.. தந்தை வீட்டில் தங்குவதே பெரிய விஷயம்… எப்போதும் தொழில் தொழில் என் இருப்பார். அம்மாவுக்கு உடல் நிலை சற்று பாதிக்கப்படவே தங்கையை அழைத்துச் செல்வது முடியாத என்றதும் உடனேயே கிளம்பி இருந்தான்.

இப்படியாக தந்தைக்கு நேரமிருக்காது , தாயின் உடல்நிலை ஒத்துழைக்காது .. இதனாலெல்லாம் அவனது பாசதிற்குரிய தங்கை திருவிழாவைக் காணும் வாய்ப்பை இழந்து விடக் கூடாது என்பதாலயே விரைந்து வந்திருந்தான்.

அச்சமயம் கடிதப் போக்குவரத்து மற்றும் தொலைப்பேசியில் வெளியூருக்கு பேசும் ஐ.எஸ்.டி.எனும் வசதியே… அவளது தேர்வுகள் முடிந்ததும் தங்கைக்கு அழைத்துப் பேசியிருந்தவனிடம் திருவிழாவில் பொருட்காட்சிக்கு செல்லும் ஆசையை தெரிவித்திருக்க .. இதோ இன்று அதற்கான ஏற்பாடுகளை செய்துக்கொண்டிருந்தனர்.

ஆதவன்  விஜயைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்ததை, தில்லையிடம் தொலைப்பேசியில் பேசிவிட்டு வந்த தாமரை ஈரக் கூந்தலை துவாலையால் உலர்த்திக் கொண்டே கேட்க.. மீனாட்சி அவளின் ஈரக் கூந்தலை உலர்த்தி சாம்பிராணி தூபம் போட்டுக் கொண்டே கேட்டுக் கொண்டும் , விஜயின் குடும்பம் பற்றியும் பேசிக் கொண்டு இருந்தார்.

அவர்களது பேச்சை தாமரையும் உள்வாங்கிக் கொண்டிருக்க… உலர்த்தி முடித்த மீனாட்சி ,

“பாப்பா … போய் ரிப்பன் எடுத்துட்டு வா.. ரெட்டை ஜடை போட்டுவிடுறேன் … ” என்றார்.  மாடியிலுள்ள அவளறையில் தான் ரிப்பன் கிளிப்புகள் என்று வைத்திருப்பாள். எனவே அவற்றை எடுக்க மாடியேற , பாதி வழியில் விஜய் கீழே இறங்கி வருவது தெரிந்தது. இப்போது தாமரையால் மேலே செல்வதும் சிரமம் .. அவனை மிக நெருங்கித்தான் ஏற வேண்டும். திரும்பிக் கீழே செல்வதும் நாகரீகமாகாது என்பதை உணர்ந்தவள் .. படிக்கட்டின் தேக்குமரப்பிடியை நெருங்கி… தலையை குனிந்துக் கொண்டே மெல்ல ஏற ஆரம்பிக்க…விஜயும் அவளைப் பார்த்துக் கொண்டே மெல்ல இறங்கினான். 

இப்போது ஈரமில்லாது மயில் தோகையாக காற்றில் சில கூந்தல்கற்றைகள் மிதக்க மேலேறிக் கொண்டிருந்தவளை பார்த்துக் கொண்டே இறங்கியவனை… அவளது கூந்தல் நொடியில் மடித்து விடப்பட்டிருந்த சட்டையைத் தாண்டிய அவனது மணிக்கட்டில் உரச… அவனுக்கு பூவிதழ் கொண்டு வருடிய உணர்வுதான்…

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

என் மீது மோதுதம்மா

பூ வாசம் மேடை போடுதம்மா…

காலையில் ஈரக் கூந்தல் அவன் தொடையில் பட்டபோதும் இப்படியே… இப்போது அதைக் காட்டிலும் ஒன்று…மேலேறியவளை திரும்பிப் பார்க்கும் ஆவல் பொங்கியது.. ஆனாலும் கீழே இறங்கி கடைசிப் படியில் கால் வைக்கவும் திரும்பி மேலேப் பார்க்க அலை அலையான கருங்கூந்தல் பாதி உடலை மறைக்க அவளறைக்குள் நுழைந்துக் கொண்டிருந்தாள். விஜய்யின் உதட்டோரம் மெல்லிய புன்னகை ….

தேகம் தன்னை மூடவே 

கூந்தல் போதும் போதுமே …

குழலைப் பார்த்து முகிலென 

மயில்கள் ஆடும்…

விஜய் ஆனந்த் வளர்ந்ததெல்லாம் பம்பாய் .. தில்லி .. சென்னை போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே… அங்கெல்லாம் இப்படி நீளக் கருங்கூந்தலுடன் பெண்களைப் பார்த்திராதவனுக்கு தாமரை செல்வியின் அடர்ந்து நீண்டிருந்த கருங்கூந்தல் வந்ததிலிருந்து ஈர்த்துக் கொண்டிருந்தது.

அந்த ஈர்ப்பு நேரம் செல்ல செல்ல… நாட்கள் செல்ல செல்ல ஈர்ப்புக்கு அடுத்த இடத்திற்கு அழைத்துச் சென்றது அவனை …

அதோ மேக ஊர்வலம் 

அதோ மின்னல் தோரணம்…அங்கே 

இதோ காதல் ஊர்வலம் 

இதோ காமன் உற்சவம்… இங்கே

Advertisement