Advertisement

அலை 1

 தொண்ணூறுகளின் ஆரம்பகாலங்கள்…

                               

                               பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்

                               பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி

                               காலாற மலையேற வைப்பாண்டி..

             

                               மதுரைக்கும் தேனிக்கும் இடையில் அமைந்துள்ள நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத சிற்றூரில் அமைந்துள்ள அந்த பெரிய வீட்டினுள்ளிருந்து தான் அந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. கூடத்திலுள்ள படியில் மெதுவாக ஏறிக் கொண்டிருந்த மீனாட்சி,கீழே இருந்த பெரிய கூடத்தில் அமர்ந்து நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்த அவரது கணவர் அருணாச்சலமூர்த்தியிடம் ,

“ஆதவன் வந்ததும் பழநிக்கும் போகனுமுங்க… பழநி முருகா…” என ஒவ்வொரு படியாக மேலேறிக் கொண்டே ஏறினார்.

“மீனா ஆதவன் வர்ற நேரமாச்சு … நான் பார்த்துட்டு ஃபாக்டரி போறேன். நீ மாடிக்கும் கீழயுமா நடந்து கால் வலிய வர வச்சுக்காத.. ” என்றவரிடம்

“செல்விக்கிட்ட ஆதவன் வர்றத இராத்திரி சொல்ல மறந்துட்டேன். அப்புறம் என்னைய தான் சண்டை பிடிப்பா…” என்றவாறே மெல்ல நடந்து மகளது அறைக்கு மீனாட்சி செல்ல .. அவருக்கு மூச்சு அதிகமாக வாங்கியது. மகளது கட்டிலில் ஓரமாக சென்று அமர்ந்தவர் ,

“செல்விமா… பரிட்சை முடிஞ்சதும் பொருட்காட்சி கூட்டிட்டுப் போனு சொன்ன தானே … ” உறக்கம் கலையத் துவங்கியவள் ,

“உங்களுக்கு கால் வலி இருக்கேமா.. அப்பா கூட்டிட்டுப் போறாரா..” என்றவாறு எழுந்து அமர்ந்துக் கொண்டே , தாயைப் பார்த்தவள்,

“என்னம்மா இப்படி வேர்த்துப் போகுது..” என்றவள் எழுந்து சென்று சன்னலில் மாட்டியிருக்கும் ஏ சி இயந்திரத்தை இயக்கிவிட்டு வந்தாள்.

“எதுனாலும் நான் கீழ வந்ததும் சொல்லியிருக்கலாமே…” என்ற செல்வி எனும் தாமரை செல்வி , அவரது முன் நெற்றி வியர்வைகளைத் துடைத்து விட்டுக் கொண்டே ,

“அம்மா நான் நல்லா பரிட்சை எழுதியிருக்கேன்.. கண்டிப்பா டாக்டர் சீட் வாங்கி டாக்டருக்கு படிச்சு.. இந்த மூச்சு வாங்குறது, முட்டி வலி இதெல்லாம் இல்லாம பண்ணிரலாம் சரியா மா… பொருட்காட்சி இந்த வருஷம் போகலனா என்ன அடுத்த வருஷம் போய்ப் பார்த்துக்கிறேன் … நாம கோவிலுக்கு மட்டும் போய்ட்டு வரலாம்.. குளிச்சிட்டு வாறேன் மா…” என்றவள் குரலில் இருந்த வருத்தத்தை உணர்ந்தவர் , அவளுக்குப் போட்டுக் கொள்ள உடைகளை எடுத்து வைத்துக் கொண்டே …

“குளிச்சுட்டு வரட்டும் சொல்லிக்கலாம்..” என நினைத்தவர், அடுத்தாற்போல் இருக்கும் மகனுக்கான அறைக்குச் சென்று அங்கு எல்லாம் சரியாக சுத்தப்படுத்தப்பட்டிருக்கிறதா என்றுப் பார்த்தார். ஆதவன் வந்தாலும் அதிக நாட்கள் தங்கப் போவது இல்லை தான்.. ஒரு மாத கல்லூரி விடுமுறையில் தான் வருகிறான் இருந்தாலும் வெளிநாட்டில் தங்கிப் படிக்கச் சென்ற மகன் வருகிறான் என்றதும் , உடலுக்கு முடியாத நிலையிலும் ,வேலையாட்களை வைத்து ஏற்கனவே சுத்தப்படுத்தியிருந்தாலும் அவரும் சரி பார்த்துக் கொண்டிருந்தார்.

அதற்குள் குளித்து முடித்து பாவாடை தாவணி அணிந்து தலையை துவட்டிக் கொண்டே வெளியே வந்த தாமரை , அண்ணனது அறைக்கதவு திறந்து இருப்பதைக் கண்டு எட்டிப் பார்க்க அன்னையைக் கண்டதும் உள்ளே வந்தவள் ,

” ம்மா என்ன இங்க நிக்கறீங்க … அண்ணன் அடுத்த வாரம் தானே வருவாங்க … இப்பவே ரூம ரெடி பண்றீங்களா…”

“உங்கண்ணன் நேத்து ராவுல ஃபோன் பண்ணி, பம்பாய் வந்து இறங்கிட்டதா சொன்னான் மா. உடனேயே மெட்ராஸுக்கும் போய் அங்குள்ள வேலையும் முடிஞ்சது… அதனால உடனே ரயில்ல ஊருக்கு கிளம்புறதாவும்  விடிய காலையிலயே  வண்டிய மதுரைக்கு அனுப்புங்கனு சொல்லி… “அவர் முடிக்க கூட இல்லை….

“ம்மா… என்ன சொல்ற அண்ணன் வந்துட்டுருக்காரா… ” எனும் போதே அவர்கள் வீட்டு அம்பாசிடர் சத்தம் கேட்கவும் , பாவாடையை தூக்கிப்பிடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓட ஆரம்பித்துவிட்டாள். அண்ணன் என்றால் அத்தனைப் பாசம் அவளுக்கு.. ஆதவனுக்கும் அதே போல் தான்.

“செல்வி… செல்வி மா பார்த்து மா…” என்ற அருணாச்சலமூர்த்தியின் குரல் கூட அவளுக்கு கேட்கவில்லை. அண்ணன் வந்து விட்டான் என்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஓடினாள்.

ஏழெட்டுப் படிகளாவது இறங்கிய பின்னர் தான் போர்டிகோவையே அடைய முடியும். அந்த அளவுக்கு உயரமாக கட்டப்பட்ட அரண்மனைப் போன்ற அக்காலத்து வீடு … அவள் இறங்கவும், கார் வீட்டினுள் வந்து நிற்கவும் சரியாக இருக்க … உள்ளிருப்பவர்கள் திறப்பதற்குள் , வேகமாக திறந்து , குனிந்து …

“அண்ணா… ” என்றவள்.. திகைத்து விழித்தாள். அவளால் மறுபடியும் பின்னால் நகரக் கூட முடியவில்லை.. அதற்குள் வண்டியின் மறுபுறம் இறங்கிய ஆதவன் ,

“பாப்பா…” என்றவாறு புன்னகையோடு அழைத்தவாறு நின்றான். குனிந்திருந்தவள் அருகில் ஓர் அந்நிய ஆடவன் முகம் … திகைத்து விலகப் பார்க்க … அவளது ஈரம் சொட்டிய விரித்து விடப்பட்டிருந்த கூந்தல் திறந்திருந்த காரின் கைப்பிடியில் சிக்கிக் கொண்டதோடு அமர்ந்திருந்த அவனது தொடையிலும் ஈரம் சொட்ட சொட்ட புரண்டுக் கொண்டிருந்தது.

அவனும் எதிர்பார்க்கவில்லை அவளும் எதிர்பார்க்கவில்லை … அடர்ந்து நீண்டிருந்த கருங்கூந்தல் அமர்ந்திருந்தவனை ஒரு நொடி அசைத்து தான் பார்த்தது.

அதோ மேக ஊர்வலம் அதோ 

மின்னல் தோரணம் அங்கே…

திகைத்ததோடு மறுபடி நிமிர முயன்றுக் கொண்டே “ஷ்..” என்றவள் அதனை விடுவிக்க பார்க்க … அது வரவில்லை … நொடியில் உள்ளே அமர்ந்திருந்த விஜயானந்த் அதனை தன் கைக்கொண்டு விடுவித்து விட … ஆதவன் நின்றிருந்த மறுபுறம் ஓடியவள்…

“அண்ணா நீங்கனு நினைச்சுட்டேன்…” எனும் போது தான் மீனாட்சியும் அருணாச்சலமும் மெல்ல வெளியே வந்து படியிறங்கிக் கொண்டிருந்தனர். அதனால் அவர்களுக்கு தாமரை மகனருகே நின்றது தான் தெரியும். பெற்றோரைப் பார்த்தவன் ,

” இறங்காதீங்க மா… கால் வலிக்கப் போகுது என்றவாறே இரண்டு இரண்டு படிகளாக ஏறி அவர்கள் நின்றிருந்த இடத்திற்குச் சென்றான். பின்னாடியே தாமரையும் சென்று அருகில் நின்றுக் கொண்டாள்.மீனாட்சிக்கு மகனைப் பார்த்ததும் எப்போதும் போல் ஆனந்த கண்ணீர் … அதை துடைத்து விட்டவன் ,

“சரி..சரி.. அதுதான் வந்துட்டேன் தானே… இன்னும் ஆறே மாசம் தான் மா.. இங்க வந்துருவேன்.. “

“இன்னும் ஆறு மாசம் ..அது தான் பா எப்படி இருக்கப் போறேன்னேத் தெரியல… வர வர உடம்பு வேற ரொம்ப படுத்தி எடுக்குது யா…” என மகனிடம் மீனாட்சி கூறினார்.

“அதெல்லாம் சரியாகிடும் நான் இப்ப தானேம்மா சொன்னேன்.. நான் டக்டருக்கு படிச்சு முடிச்சதும் உங்கள குணப்படுத்துறது தான் முதல் வேலைனு…”அந்த நொடி தாமரைக்கு சகோதரனது நண்பன் நிற்பது எல்லாம் எண்ணத்தில் இல்லை.. பெற்றோரும் சகோதரனும் மட்டுமே மனதில் இருந்தனர்.

அருணாச்சலமும் மீனாவும் அப்போதுதான் புதியவனைப் பார்க்க…

“ப்பா.. நான் சொல்லுவேனே… பம்பாய் ல படிக்கிறப்ப என் கூட நம்ம ஊரு பையன் ஒருத்தன் படிக்கிறான்..பழநி பக்கத்துல…” என்ற ஆதவனைத் தொடர்ந்து ,

“ஓ.. மிலிட்டரிகாரர் பையனா …” எனவும் …

“அவனேதாம்பா.. அவங்க அப்பா.. தாத்தா… எல்லாரும் தெரியும்னு சொல்லுவீங்களே… இப்ப சாரும் மிலிட்டரி ஆபிசர் ஆகணும்னு தான் தீவிரமா ட்ரை பண்ணிட்டு இருக்கான்.. பம்பாய் வந்தா அவன் கூட தான் தங்குவேன். இப்ப மெட்ராஸ்ல படிச்சான். அது முடிஞ்சதுனு பம்பாய்க்கே திரும்ப போறானாம்..அதுக்கு முன்னாடி இங்க இருக்கிற அவங்க தாத்தா வீட்டுக்குப் போய்ட்டு ஊருக்கு கிளம்பறதா இருக்கான்.. நான் தான் நாளைக்கு ஒரு நாள் இருந்து சித்திர திருவிழாவ பார்த்துட்டுப் போனு இங்க அழைச்சிட்டு வந்தேன்…” என அவர்கள் பேசிக் கொண்டு இருக்கையிலயே ,

” வணக்கம் அங்கிள் ..” என்ற விஜயிடம் , அருணாச்சலம் ..

” தம்பி உங்க அப்பா எனக்கு மச்சான் முறை தான். நீங்க மாமானே சொல்லுங்க.. ஆதவன் உங்களப் பத்தி என்கிட்ட சொல்லியிருக்காப்புல.. இருந்து சாமிய கும்புட்டுட்டு போறது…” எனவும் ,

“யா..ஷ்யர் அங்கிள்… ” என்றவன், மறுபடியும் ,

“சரி மாமா..” என்றான் தமிழில். மகனிடமும் , அவன் நண்பனிடமும் அருணாச்சலம் விடை பெற்றுக் கிளம்பியதும் மீனாட்சி …

“வாங்க தம்பி.. ” என்றவர் வீட்டினுள் அழைத்துச் சென்றார். தாமரை அண்ணனைப் பார்த்தவள் தான்.. அதன் பிறகு அவன் பக்கம் திரும்பக் கூட இல்லை. ஆதவன் நண்பனை அவனது அறைக்கு அழைத்துச் செல்ல… தாமரைக்கு மேலே அவள் அறைக்குச் செல்ல வேண்டியது இருந்தாலும் புதியவனைக் கண்ட தயக்கத்தில் மீனாவோடயே நின்றுக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் குளித்து விட்டு கீழே வந்த ஆதவன் தங்கையிடம் , 

“பாப்பா… சாயந்திரமா பொருட்காட்சி போகலாம் ரெடியா இரு..” என ,

“அண்ணா..  நிஜமா தான் சொல்றிங்களா… ஆனா ஊருல இருந்து வந்தது அலுப்பா இருக்குமே.. ” என்ற தங்கையிடம் ..

“நான் ஒரு நாள் முன்னாடியே இந்தியா வந்ததுல நல்லா ரெஸ்ட் எடுத்துட்டுத்தான் பாப்பா வந்தேன். அதனால டையர்ட் தெரியல.. அதனால நாம போகலம்.” என்றதும் முகம் பிரகாசிக்க …

“அப்ப கிளம்பலாமா… நான் இந்த வருஷம் பொருட்காட்சி போக முடியாதோனு பயந்துட்டே இருந்தேன்.. நான் போய் திலோவயும் கிளம்ப சொல்றேன்…” என்றவள் தொலைப்பேசி அருகே சென்றாள்.

“யாரு திலோ… உன் ஃபிரண்டா …”என்றவனை முறைத்த தாமரை, 

“என் ஃபிரண்ட் தான்.. ஆனா அவ நம்ம அப்பாக்கூட பிறந்த தங்கச்சி பொண்ணு.. அதாவது உங்களுக்கும் எனக்கும் அத்தைப் பொண்ணுங்கிறத மறந்துட்டீங்களா…” என்றவள் , தொலைப்பேசியில் அத்தை வீட்டிற்கு அழைப்பு விடுத்தாள்.

அங்கு அவளது அத்தை தேவகி  தான் எடுத்தார்.மருமகள் என்றதும் ,

“என்ன செல்வி மா வெள்ளனவே போனப்போடுத … எல்லாரும் நல்லா இருக்கீங்க தானே…” எனப் பதற…

“நல்லா இருக்கோம் அத்தை….அண்ணன் ஊருலருந்து வந்திருக்காரு.. மதுரைக்கு பொருட்காட்சி பார்க்க போவலாம்னு சொன்னார். திலோவும் வராளானு கேட்க தான் ஃபோன் போட்டேன்…” என்றவளிடம் ,

“என்ன மருமகன் வந்துருக்காரா. அண்ணன் போன வாரம் பேசும் போது இன்னும் பதினஞ்சு நாளாவது ஆகும்னு சொல்லிச்சு…” என்ற அத்தைக்கு விளக்கம் கொடுத்த தாமரைசெல்வி தோழிக்காக தொலைப்பேசியில் காத்திருந்தாள்.

அந்நேரம் ஆதவன் அறைக்கு காஃபி எடுத்துக் கொண்டு சென்ற செண்பகம்… அவர்கள் வீட்டில் வெகுகாலமாக வேலை செய்பவர்… வேகமாக கீழே இறங்கிக் கொண்டே,

“சின்னய்யா ..அந்த கலக்டர் தம்பி … கீழ வந்து சாப்புட்டுக்கிறேன்னு சொல்லிருச்சு…” என்றவாறு சமையலறைக்கு செல்ல இருந்தவரை நிறுத்திய ஆதவன்…

“செண்பாக்கா நீங்க யாரைச் சொல்றீங்க … ” எனவும் , மீனாட்சியும்…

“அதானே யார செண்பா கலக்டருனு சொல்ற..” 

“அதான் சின்னய்யக்கூட படிச்ச தம்பி வந்துருக்கே அந்த தம்பிதேன்… புதன்கிழமை கோவில் திருவிழாவுல திரை கட்டிப் போட்ட  ரஜினி படத்துல வந்த கலக்ட்டர் தம்பி மாதிரி இருக்குதே… அதேன் அப்படிச் சொன்னேன்.”

மீனாட்சி செண்பகாவின் தோளில் புன்னகையோடு தட்டினார் என்றால் ஆதவன் வாய் விட்டு சிரித்தான்… தோழிக்காக காதோடு தொலைப்பேசியை காதில் வைத்து காத்திருந்த தாமரை முகத்திலும் மென்னகை…

“அக்கா.. விஜய பார்க்க அரவிந்த்சாமி மாதிரி இருக்கிறான்றதுக்காக கலக்டரா நடிச்சதே அவன்தான்னு சொல்லிடுவீங்களா…” என்றவாறு சிரிக்க… செண்பகாவோ,

“நல்லா வெள்ளையா வளர்த்தியா அப்படியே இருக்காருல்ல..”

“செண்பா… செண்பா… போ போய் அந்த சாப்பாடு எல்லாம் மேசைல எடுத்து வை..” என அவரை அனுப்பி விட்ட மீனாட்சி..

“அந்த பையன் அம்மா வடக்கத்திப் பொண்ணுனு கேள்விப்பட்டு இருக்கேன்… அவங்க அம்மா நிறம் போல…”

“ஆமாம்மா.. படிக்கும்போது அவன விளம்பரத்துலக் கூட நடிக்க கூப்பிட்டாங்க… நார்த் அன்ட் சவுத் கலந்து பார்க்க ஹான்ட்சம்மா இருக்கிறான்னு.. ஆனா அவனுக்கு படிப்புல தான் ஆர்வம் ..இப்பக்கூட இந்திய ராணுவத்துல வேலை செய்ய என்ன என்ன படிக்கனுமோ அதெல்லாம் தான் செய்றான்…”

Advertisement