தாமரை நிலையும் வேறாக தான் இருந்தது … காலை முதல் பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒரு அந்நிய ஆடவனது அருகிலே நிற்பது அந்த சித்திரை மாத இரவில் உடலில் வியர்வை முத்துக்களை அதிகம் பூக்கச் செய்தது. அதுவரை அவனைக் காண முடியாது விழிகளை அலையவிட்டவள் காதுகளில் ..
பூமாலையே தோள் சேர வா
பூமாலையே
ஏங்கும் இரு தோள்..
தோள் சேர வா…
என்ற பாடல் கேட்க… சட்டென்று விழிகளை உயர்த்தி விஜயைப் பார்க்க … அதுவரை விழி மூடி நின்றவனின் காதுகளிலும் அதே பாடல் கேட்க அவனும் அருகில் நின்றவளை இமை பிரித்துப் பார்த்தான்.
அருகில் ஒலிநாடாக்கள் விற்றுக் கொண்டிருந்த கடையில் தான் அந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனால் பார்வைகளை பரிமாறிக் கொண்ட அந்த இளம் வயதினருக்கு அந்த பாடல் வரிகள் வேறு நினைவுகளைத் தூண்டியது.
“தாமரைப்பூ.. மாலை எடுத்து வா “
” தாமரை… பூமாலை.. எடுத்து வா..”
தமிழில் தான் எத்தனை வார்த்தை ஜாலங்கள் .. விஜயின் தந்தை உதகை ராணுவ பயிற்சி மையத்தில் அதிகாரியாக பணியாற்றிய போது ஆரம்பபள்ளிக் கல்வியை உதகையிலும் பயின்றான் .. என்ன முயன்றும் விஜயின் தாயை ஏற்க மறுத்த விஜயின் தந்தைவழிக் குடும்பத்தாரால் மட்டுமே வடக்கேயே அதிகம் இருந்துக் கொள்ள வேண்டிய நிலை … அதன் பின் தாயின் மூலம் பஞ்சாபி மொழியை அறிந்துக் கொண்டவன்.. தந்தையின் மூலம் தமிழை கற்க துவங்கினான்.. அதிகம் கற்றது இசை மீது இருந்த பற்றில் மட்டுமே… தமிழ் மொழி திரை இசைப்பாடல்களோடுதான் அவனது நாளின் பொழுதே துவங்கும் … அப்படி தான் இன்று காலை முதல் இசையோடு தன் வாழ்கையை தேடிக் கொண்டிருந்தான். அதற்கேற்றாற்போல் பாடல்களும் அவனோடு தொடர…இதோ இப்போதும்..
“தாமரை… “சத்தமில்லாமல் உச்சரித்தாலும்… அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அந்த மெளன மொழி கேட்டதோ… அவனது உதடுகள் அவள் பெயரை தான் உச்சரித்ததோ..
அந்த தாமரை பூவையின் உடலிலும் ஒரு அதிர்வு …
அந்த பாடல் முடிந்து அடுத்த பாடல் வரவும் திடுக்கிட்ட தாமரை விழிகளை தாழ்த்திக் கொள்ள … விஜயும் திரும்பி நண்பன் சென்ற திசையை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
அதே நேரம் தில்லையை தேடி கூட்டத்தில் நுழைந்த ஆதவன் தில்லை சரியாக கடைக்காரரை நெருங்குகையில்… அவளது வலது கையைப் பிடித்து தன் புறம் இழுத்துக் கொண்டவன்’.. அவள் கரத்தை விடாமலையே தன் சட்டைப் பையிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்து இரண்டு ஜிகர்தண்டா இருந்த கண்ணாடி டம்ப்ளர்களில் ஒன்றை அவள் கையிலும் மற்றைான்றை அவனும் பிடித்துக் கொண்டே …
“என்ன வேணும்னாலும் என் கிட்ட கேட்க வேண்டியது தான… இப்படி கூட்டத்துல வந்து சிக்கிட்டு..” என எரிச்சலுற்றவன்.. கூட்டத்தை விட்டும் வெளியே வந்தும் அவள் கையைப் பிடித்தவாறே நடக்க…
” கைய விடுங்க… விடுங்க … ” என்றவாறு வந்தவள், அவனது பிடி வலி தரவே …
” விடுங்க மாமா.. வலிக்குது…” என குழந்தையாக சிணுங்க.. சட்டென்று நடையின் வேகத்தினை குறைத்து .. பிடியை சற்று தளர்த்த மட்டுமே செய்தான்.
“முடியாது… பாப்பாவ கைப் பிடிச்சு பொறுப்பா கூட்டிட்டு போறாளே.. நல்ல மெச்சூர்டான பொண்ணுதான்னு உன்னைய ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னால தான் நினைச்சேன்… ஆனா .. நீ… ” என்றவன் …கரத்தினை விடாது அவள் முகம் பார்த்து..
“நீ இன்னும் ஸ்கூல் பாப்பா தான்னு நிருபிக்கிற… ” என சிரித்தான். முதலில் கூட்டத்தில் இருக்கிறாளே என கோபமாக தான் இருந்தான். ஆனால் அவளது ‘மாமா ‘ என்ற அழைப்பா இல்லை அந்த சிணுங்கலா என்று தெரியவில்லை … அந்த கோபத்தை அப்படியே தணித்திருக்கவும் தான் இந்த சிரிப்பு .
அவன் கையை வேகமாக உதறியவள்…
“ப்ளஸ் டூ இப்பதான முடிச்சேன்.. அப்ப நான் ஸ்கூல் பாப்பா தான… கொண்டங்க அதையும் …” என்றவள் அவனிடமிருந்து மற்றொரு கிளாசையும் வாங்கிக் கொண்டு தாமரையிடம் நடந்தாள்.
ஆதவன் இப்போது வாய் விட்டு சிரித்துக் கொண்டே அவர்கள் அருகில் வர..தோழியிடம் மற்றொன்றை தந்துக் கொண்டே …
“இப்ப எதுக்கு இந்த கெக்க பிக்க.. ஜிகர்தண்டா குடிக்க ஆசைபட்டது தப்பா டி.. உன் பாச மலர்கிட்ட சொல்லி வை…நீ மட்டுமில்ல நானும் ஸ்கூல் தான் முடிச்சேன்னு… வா நாம நடந்துகிட்டே குடிக்கலாம்…” என்றவள் முன்புறமாக நடக்க ஆரம்பித்தாள்.
தில்லையின் இந்த பேச்சும் ஆதவனை வசீகரிக்க மேலும் அவன் சிரிக்க … விஜய் அவனது தோளில் தட்டியவன்..
“ஆதவ்… என்னாச்சு மேன்… இப்படி ஒரு பிரகாசம் உன் முகத்துல…”
“அப்படியா..” என மேலும் சிரிக்க…. விஜயும் ” அப்படி தான்…” என சிரிக்க… நண்பர்களுக்கான இந்த உரையாடல் இருவரையும் புன்னகை முகமாக பெண்களை தொடர வைத்தது.
மிகப் பெரிய ராட்டினத்தின் முன் வந்த பெண்கள் இருவரும் அதில் ஏற விருப்ப பட..ஆதவன் தங்கையிடம் ,
“பாப்பா நீ பயப்படாம ஏறுவியா …” எனவும்,
“நான் கூட இருக்கிறப்ப அவ எப்படி பயப்படுவா.. சொல்லுடி உங்க அண்ணன்கிட்ட .. ” என்ற தில்லையின் பதிலில்…
” சரி பாப்பா நாம நாலு பேரும் ஒரே கூடைல உட்காரலாம்..” என்றதில் விஜயின் விழிகள் தாமரையை நோக்க..தாமரையும் திடுக்கிட்டு ஆதவனைக் காண , தில்லையோ…
“ஐயயோ சாலிடர் ஹீரோ கூடவா…” என நினைத்தவள்.. இரு பெண்கள் மட்டும் அமர்ந்திருந்த ஒரு கூடையைக் கண்டதும் ..
“நாங்க அங்க போறோம்..” என்றவாறு தாமரையை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.
துளி ஏமாற்றமே விஜயிடம் … ஆதவனோ…
” சொன்ன பேச்சு கேட்குதா பாரேன்… நான் இங்கேயே நிற்கிறேன்… நீ போடா…” எனவும் ,
” இல்ல நான் கொஞ்சம் கேசட்ஸ் வாங்கப் போறேன்” என்றவன் அந்த ஒலிநாடா விற்பனையகத்துக்கு சென்று விட்டான். அங்கு சென்றவனுக்கோ மனமெங்கும் ஒரு வித சுகமான மயக்கம்.. எப்போதும் மெலோடி பாடல்கள் என்ற பெயரில் சோக கீதங்கள் அதிகமாக இருப்பதையே வைத்திருந்தவன் .. இன்று காதல் பாடல்களாக பார்த்து பார்த்து வாங்கியவன்.. அங்கேயே நின்று தாமரையை பார்க்க ஆரம்பித்து விட்டான். நிச்சியம் அங்கிருந்து அவளைப் பார்க்க முடியாது.. அதோடு ஒவ்வொரு கூடையாக நிரம்ப உயர உயர செல்லும் மகிழ்ச்சியில் தோழியிடம் இயல்பாக தலையை ஆட்டி… கைகளை ஆட்டி பேசும் அந்த அழகை ரசிக்க முடியாதே … அங்கேயே நின்று விட்டான்.
அதே வேளையில் தில்லை தோழியிடம் உயரே இருந்து பார்க்கும் போது தெரிந்த மதுரையின் அழகை ரசித்து கூறிக் கொண்டிருந்தவள் திடலுக்கு வெளியே நின்று நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த தேவராஜனைக் கண்டாள்.
“ஐ..தாமரை எங்கண்ணனும் வந்துட்டான்.. டிவில காட்டுறானே பெப்ஸி .. அது வாங்க ஆசை பட்டேன்.. நல்ல வேளை கண்லபட்டான்…” என்றாள். தேவராஜன் சிகரெட் புகைத்துக் கொண்டே நண்பர்களோடு இணைந்து … ஒரு இடத்தில் குழுமியிருந்த இளம் பெண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.
“ஏன்டி.. எங்கண்ணாட்ட சொன்னா வாங்கி தருவாங்க” இறங்கினதும் சொல்லலாம்…”
“வேண்டாம் சாமி … நான் எங்கண்ணன்கிட்டயே … ” என்றவள் தேவராஜனை பார்த்துக் கொண்டே ..
” பாரேன் சிகரெட்ட வட்ட வட்டமா ஊதி தள்ளுறத.. கையில கேமரா கொண்டு வந்து இருந்தா எங்கப்பா கிட்ட போட்டோ எடுத்து காண்பிச்சு இருப்பேன்…” எனவும் , தாமரையும் திரும்பி பார்த்து விட்டு …
“வேண்டாம்டி உடம்புக்கு ரொம்ப கெடுதல் … அத்தான அந்த பழக்கத்த விடச் சொல்லு… ” என்பது போல பேசிக் கொண்டிருக்க ..தேவராஜனின் நண்பர்கள் அவர்களை பார்த்து விட்டார்கள். அதில் ஒருவன் ,
“வாங்க டா உள்ள போகலாம்…” என்றழைத்தான். அவன் காட்டியதிசையில் பார்த்த தேவராஜன் பார்க்கும் போது தில்லைநாயகி படவும் சட்டென்று சிகரெட்டை கீழே போட்டு மிதித்தவன்…
“டேய் மாப்ள. அது என் தங்கச்சி டா … போச்சு.. இன்னைக்கு வீட்ல எனக்கு பூஜை இருக்கு …” என்றவன் வேகமாக திடலுக்குள் செல்ல ஆரம்பித்தான்.
ராட்டினத்தில் சுழன்று முடித்து தோழிகள் இருவரும் இறங்கி வெளியேறும் பகுதிக்கு வர கூட்டத்தில் சிக்கிக் கொண்டனர்.தேவராஜனும் சரியாக அங்கு வந்தவன் மறுபுறம் திரும்பி நின்றவளின் கரம் பிடித்து,
“பாப்பா அண்ணன் பின்னாடி வா…” என்றவாறே கூட்டத்தை விலக்கி வெளியே இழுத்துக் கொண்டே வந்து வெளியே விட்டவனிடம் ,
“தேங்க்ஸ் அத்தான்..” என்ற குரல் தேனாக காதில் விழ.. திடுக்கிட்டு திரும்பினான். தாமரையின் கரத்தினை அவன் பிடித்திருக்க … அவள் கரத்தினை தில்லை பிடித்திருந்தாள். தேவராஜன் விழிப்பதைப் பார்த்து ,
“நான் னு நினைச்சுட்டியா… எப்படி இருக்கு எங்க டிரஸ் … டிசைன் தான் வேற. ஆனா ஒரே கலர்…” என்ற தில்லையின் வார்த்தைகளில் தாமரையின் கரத்தினை விட்டவன்.
“பாப்பா இது.. இந்த பொண்ணு… “
” தாமரை…தாமரை செல்வி… மாமா பொண்ணு… நீ தான் அம்மாச்சி வீட்டுக்கு வர மாட்டியே … அது தான் உனக்கு தெரியல… “
“பரவாயில்லத்தான்… நான் உங்கள பார்த்திருக்கேன் … ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும் போது தில்லைய கூப்பிட வருவீங்க தானே.”
“ஹா..ஹான் … ” என்றவனுக்கு பேச்சே வரவில்லை… எப்போதேனும் பள்ளிச் சீருடையில்… அதுவும் அவர்கள் பயின்றது ஆங்கிலோ இந்திய பள்ளி என்பதால் பழைய பாணி ஃபிராக் போன்றுதான் இருக்கும்.அதில் இரட்டை ஜடையில் சிறுமியாக மட்டும் தெரியும்… இன்று குமரியாக … அதுவும் ‘அத்தான்’ என்ற அழைப்பில் மெய் மறந்து நின்று விட்டான்.