Advertisement

Chapter 8

காலையில் இந்தச் செய்தியைக் கேட்டதும் மகிழ்ச்சியடைந்தது மஹாலக்ஷ்மியும், சுபாவும் தாள். மஹாலக்ஷ்மிக்குத் தன் இரண்டு பெண்களுக்கும் நல்லபடியாகத் திருமணம் ஆவதில் சந்தோஷம் என்றால், சுபாவுக்கு ‘லைன் க்ளியரா’னதில் மகிழ்ச்சி.

தனபாக்கியத்திற்கு இதில் அவ்வளவாக விருப்பம் இல்லையென்றாலும், ஏதோ ஒரு வழியாக இப்பவாவது தன் மகன் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டானே என்று வேண்டாவெறுப்பாகத் தன் சம்மத்தைத் தெரிவித்தார். கணவரையும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ள வைத்தார்.

ராஜாவும் வந்து இருவருக்கும் தன் வாழ்த்துக்களைக் கூறினான். முன் போல அவர்களுடைய நலனில் அவனால் அக்கறை காட்ட முடியாவிட்டாலும், தன் மனதுக்குப் பிடித்த இருவர், வாழ்க்கையில் இணைவதில் அவனுக்கும் மகிழ்ச்சியே. ஆனால், ஜெயாவால் தான் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் தங்கைக்குக் கிடைக்க வேண்டிய நல்வாழ்வு கைதவறிப் போனது ஒருபுறம், எங்கேயோ அனாதரவாகக் கிடந்தவளுக்கு திடீர் வாழ்வு வந்து உயர்வது ஒரு புறம்… எனக் குரோதமும், ஆத்திரமும் அவளை வாட்டியது.

வாழ்த்துவது போல தீபாவிடம், “ வாழ்த்துக்கள் தீபா! வீட்டிற்குள்ளேயே இருந்ததாலே, எப்படியோ பாடுபட்டு அவரை வளைச்சுப் போட்டுட்டே போலிருக்கே!” என்று குத்தலாகச் சொன்னாள்.

பொதுவாக அவளுடைய குணம் அந்த வீட்டில் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், ராஜாவுக்காக அவளைப் பொறுத்துப் போய்க் கொண்டிருந்தனர்.

அவளது வார்த்தைகள் வலித்தாலும், “தாங்க்ஸ்!” என்பதோடு முடித்தாள் தீபா. ஆனால், அவளுடைய தோழிகளைச் சமாளிப்பது தான் ரொம்பக் கடினமாக இருந்தது. எல்லாருமே, “நாங்கள் அப்போதே சொன்னோம்; நீதான் மறைத்து விட்டாய்!” என்று கேலி செய்தபோது, வெட்கப்படுவது போல் நடிக்க வேண்டியிருந்தது. முன்பே ஜெய்சங்கர் கண்டிப்பாகச் சொல்லியிருந்ததால், உண்மையைச் சொல்ல முடியவில்லை.

“தீபா! இந்த விஷயம் நம்ம ரெண்டு பேருக்கு மட்டும்தான் தெரியணும். மத்தவங்க எல்லாருக்கும் தான், இது நிஜக் கல்யாணம். நாம இருவரும், காதலித்துக் கல்யாணம் செய்வதாகத்தான் அவங்க நினைப்பாங்க. அதுபோலவே நீ நடந்துக்கோ!” என்று அவன் சொல்லியிருந்தது மனதிற்குள் வந்து போனது. அதனால் யாரிடமும் எதுவும் சொல்ல முடியவில்லை. அதிலும் வசந்தியும், சுபாவும் சேர்ந்து கொண்டு தீபாவை ரொம்பவே கிண்டலடித்தனர். அவள் அக்கறையுடன் மாமாவுக்குச் செய்த பணிவிடைகளை எல்லாம், காதலுடன் செய்ததாக இருவரும் சேர்ந்து சொல்லி, அவளை ரொம்பவே வெறுப்பேற்றினர்.

ஆனாலும் வசந்தி அவளை அணைத்துக் கொண்டு, “நீ ரொம்ப லக்கி தீபா! மாமா மாதிரி ஒருத்தரைக் கல்யாணம் செஞ்சுக்க, நீ ரொம்பக் குடுத்து வச்சிருக்கணும். நான் முன்னாடி மாமா ஒரு டெடிகேடட் ஹஸ்பண்டா இருப்பார்னு சொன்னது நினைவிருக்கா? நீ அதை இப்பவே உணர்ந்திருப்பியே! அவரும்தான் லக்கி! உன்னை மாதிரி தங்கமான பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க, அவரும் குடு்த்து வெச்சிருக்கணும். யூ ஆர் மேட் ஃபார் ஈச் அதர்” என்று தன் வாழ்த்தைத் தெரிவித்தாள்.

முதலில் அடுத்து மாதத்தில் தீபாவுக்கும்- ஜெய்சங்கருக்கும் திருமணம் நடத்துவது என்றும், அதற்கு இரண்டு மாதங்கள் கழித்து சுபா-முரளி திருமணத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

என்ன சீர்வரிசை செய்வது என்பதைப் பற்றி தம்பியிடம் பேசவந்த மஹாலக்ஷ்மியிடம், ஒரு சின்ன தோல் பையைக் கொடுத்த ஜெய், “அக்கா! இதுல ஐந்து லட்சம் இருக்கு. தீபாவுக்கு என்ன நகை வாங்கணும்னு விருப்பமோ, அதை வாங்கிடுங்க. எங்க கல்யாணத்துக்கு நீங்க ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டாம். நீங்க சேர்ந்து வச்சிருக்கற பணத்தை, அப்படியே உங்க ரெண்டாவது பொண்ணு கல்யாணத்துக்கு வெச்சுக்குங்க. போதாதுக்கு, மேற்கொண்டு நான் தரேன். நாளைக்குத் தீபாவுக்குப் புடவை வாங்க பணம் தரேன். ஒரு லட்சம் போதுமா? மற்ற கல்யான ஏற்பாட்டையெல்லாம் நானே பாத்துக்கறேன்!” என்றான்.

மஹாலக்ஷ்மிக்கு உணர்ச்சி மிகுதியில் அழுகையே வந்துவிட்டது. ”தம்பி! உனக்கு நல்ல மனசுப்பா. நீங்க ரெண்டு பேரும் நல்லாருப்பீங்க!” என நா தழுதழுக்கக் கூறினாள்.

இந்த விஷயத்தைக் கேட்டதும் சுபா, தீபாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “அக்கா! மாமா ரொம்ப க்ரேட்கா! பாரேன், முரளி என்னைக் காதலிச்சாலும், சீர் செனத்தியைக் கறந்துட்டுத் தான் என்னைக் கல்யாணம் செஞ்சுக்கப் போறார். ஆனா, மாமாவோ ஒண்ணுமே வேணான்னுட்டு சொன்னதோட விடாமல், அவரே உனக்கு நகை, புடவை எல்லாம் எடுத்துக் குடுத்துட்டு, கல்யாணமும் பண்ணிக்கப் போறார்.

எப்படிக்கா மாமாவை இந்த அளவுக்கு வசியம் பண்ணினே? முதலிலேயே இது தெரிஞ்சிருந்தா, நானே மாமாவை ட்ரை பண்ணியிருப்பேன்!” என்றாள் குறும்பாகத் கண்ணைச் சிமிட்டியபடி.

கடைசியாக அவள் முடித்த விதத்தைப் பார்த்துத் தூக்கி வாரிப்போட்டு, “அதிகப் பிரசங்கி! இந்த மாதிரியெல்லாம் பேசக்கூடாது. யார் காதுலயாவது விழுந்தா, தப்பா நினைப்பாங்க! என்று கண்டித்தாள் தீபா.

அவள் சீரியஸாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் மனதின் ஒரு ஓரத்தில்  சுருக்கென்றது.

இரண்டு நாள் கழித்து நல்ல நாள் பார்த்து நகைக்கடைக்குப் போய், பிடித்த நகைகளை வாங்கி வந்தார்கள். ஜெய்சங்கர் கல்யாண ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்ததால், அவனால் வரமுடியவில்லை. புடவைகளையும் பெண்களே போய் வாங்கி வந்தார்கள். தீபாவுக்கு மட்டுமல்லாது, வீட்டுப் பெண்கள் எல்லோருக்கும் புடவை வாங்கவென்று பணம் கொடுத்திருந்தான். தீபாவுக்கும் நிறைய ஜரிகை வேலைப்பாடுடன் கூடிய விலையுயர்ந்த ஒன்றையே வாங்கச் சொன்னான்.

மற்றதையெல்லாம் அவன்  கொடுத்த பணத்தில் வாங்கினாலும், திருமாங்கல்யம், சரடு, முகூர்த்தச் சேலை என்ற மூன்றையும், தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் வாங்கிய மஹாலக்ஷ்மி, அவன் கொடுத்த பணத்தைப் பிடிவாதமாக மறுத்துவிட்டாள். அதற்கு மேல் வற்புறுத்தாமல் ஜெய்சங்கரும் விட்டுவிட்டான்.

திருமண வேலைகள் வீட்டில் துரிதமாக நடந்தன. தீபாவுக்கு முதல் வருடப் பரிட்சை முடிந்தாலும், இன்னும் ரிஸல்ட் வரவில்லை. இரண்டாம் ஆண்டில் மாணவர்கள் ஆய்வுசெய்து ஒரு ரிப்போர்ட்டை எழுத வேண்டிய வேலைதான். அவளுடைய கம்ப்யூட்டர் துறையின் தலைவரே அவளுக்குக் கைடாக இருக்கச் சம்மதித்ததால், அவளுக்கு ஒரு மாதம் விடுமுறையும் இருந்தது.

Chapter 9

இந்தத் திருமண ஏற்பாடுகளின் போது தான், ஜெய்சங்கரின் பலம் அவளுக்கு முழுமையாகப் புரிந்தது. வீட்டில் இதுவரை அவன் எளிமையாக, வசதி வந்தபோதும் பழையபடியே இருந்ததால், அவன் எவ்வளவு வசதி படைத்தவன் என்பது அவளுக்குத் தெரியவில்லை. அதை விசாரிக்கக் கூட அவளுக்குத் தோன்றியதில்லை.

சீர்காழியில் மண்டபங்கள் பெரிதாக இல்லாததாலும், அவனுடைய தொழில்முறை நண்பர்களைக் கவனிக்க வசதி போதாததாலும், சிதம்பரத்தில் ஒரு பெரிய மண்டபத்தை ஏற்பாடு செய்திருந்தான் ஜெய். ஒரு நாள் வாடகையே, லட்சத்தைத் தொட்டது. மற்ற ஏற்பாடுகளை எடுத்துச் செய்ய ஆளில்லாததால், சென்னையிலிருந்து ஒரு பெரிய மேரேஜ் மேனேஜ்மென்ட் நிறுவனத்திடம் பேசி ஏற்பாடு செய்திருந்தான். அச்சிட்ட திருமணப் பத்திரிகைகளின் எண்ணிக்கையே ஐயாயிரத்தைத் தாண்டியது. தொழில்முறை நண்பர்கள், வாடிக்கையாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் என அவன் அழைக்க வேண்டியவர்களுக்கே, இந்தப் பத்திரிகைகள் முழுவதும் தேவைப்பட்டது.  உறவினர்களுக்காக என்று, சம்பிரதாயமான முறையிலும் திருமணப் பத்திரிகைகள் தனியாக அச்சிடப்பட்டன.

அவளுடைய தோழிகளுக்குக் கொடுப்பதற்காகத் தனியாக தீபாவிடம் சில பத்திரிகைகளைக் கொடுத்தான். அவன் செய்த பிரம்மாண்டமான ஏற்பாடுகள் அவளைப் பயமுறுத்தின. ‘ஒரு வருடம் வாழ்வதற்கு… எதற்கு இத்தனைச் செலவும், ஆடம்பரமும்?’ என அவள் அடிவயிறு  கலங்கியது.

அவனுடைய பலம் என்னவென்று புரிந்தபோது, அவளுக்கு அவனிடம் இயல்பாகப் பேசவே பயமாக இருந்தது. சில நாட்களாக அவள் தன்னைக் கண்டால் ஓதுங்கிப் போவதை ஜெய்சங்கரும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். அவளுடைய இந்தப் போக்கை, மற்றவர்கள் கவனித்தால் என்ன ஆகுமென்றும் யோசித்தான்.

திருமணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு புது ஸ்விஃப்ட் டிசையர் காரில் வந்து இறங்கியதை எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்த போது, இதை அன்றுதான் வாங்கியது என்றான். சுபா அவனிடம் விளையாட்டாக “புதுப் பொண்டாட்டி…, புதுக் காரு… கலக்கறீங்க மாமா!” என்று கிண்டலடித்தாள்.

சிரித்துக் கொண்டே, “பின்னே! முன்னாடி நான் தனி ஆளா இருந்தேன். பைக்கே போதும். இப்போ, புதுசா பொண்டாட்டி வந்தாச்சு. குடும்பம் பெரிசாச்சுல்ல? அதான் புதுக் கார் வாங்கிட்டேன்!”  என்று சிரித்துக் கொண்டே சொன்னபடி, தீபாவைக் கவனித்தான்.

அவளது முகத்தில் தெரிந்த கலவரத்தைப் பார்த்ததும், “அக்கா! நான் தீபாவைக் கார்ல கொஞ்சம் வெளிய அழைச்சிட்டுப் போகவா?” என்று அனுமதி கேட்டான்.

தன் மகளுக்கு வந்த வாழ்வை எண்ணிப் பூரித்தபடி, “தாராளமா போயிட்டு வா தம்பி! தீபா! போய் முகம் கழுவி வேற நல்ல உடை உடுத்திட்டு வாம்மா!” என்று பெண்ணைத் தயாராகச் சொன்னாள்.

தீபா பள்ளி இறுதிவரை பாவாடை, சட்டை, தாவணி என அந்த ஊர் சூழ்நிலைக்கேற்ற உடைகளைத் தான் அணிந்திருந்தாள். பிறகு கல்லூரியில் சேர்ந்த பின்பே, அதுவும் ஜெய்சங்கரின் சிபாரிசில் தான்… சுடிதார் அணிய ஆரம்பித்திருந்தாள். ஆனாலும், அவளிடம் எளிமையான ஆடைகளே இருந்தன.

ஆடம்பரமான உடைகளை வாங்கும் ஆசையோ, வசதியோ இதுவரை அவளிடம் இருந்ததில்லை. அவளுடைய கவனமும் படிப்பைத் தவிர வேறு எதிலும் புகுந்ததில்லை. அவளுடைய தோழிகள் எல்லாம், புதிதாக வந்திருக்கும் உடை வகைகளைப் பற்றிப்  பேசும் போது கூட, வெறுமனே கேட்டுக் கொண்டிருப்பாளே தவிர, பெரிதாக ஆசைப்பட்டதி்ல்லை. தீபாவளி, பொங்கல் எனப் பண்டிகை நாட்களில் மட்டும், அவா்கள் வீட்டில் கொடுப்பவை தாம். அவைகளும் தரமானதாக, உழைப்பவையாக இருக்கிறதா என்பதைத் தவிர, நிறத்தையோ… விலையையோ… ஸ்டைலையோ… அவள் பார்த்ததில்லை.

இப்போது அம்மா கிளம்பச் சொன்னதும் முகத்தைக் கழுவிக் கொண்டு, தன்னிடம் இருந்ததில் நல்லதாக ஒரு சுடிதாரை அணிந்து கொண்டாள். அவளிடம் புடவைகள் அவ்வளவாக இல்லை. இப்போது அவளது கல்யாணத்திற்காகத் தான், முதன்முறையாக பட்டுப் புடவையை வாங்கியிருந்தாள்.

முன்னர் பலமுறை மாமாவுடன் அவள் சென்றிருந்தாலும், இப்போது ஏனோ அவளுக்குக் கூச்சமாக இருந்தது. கிளம்பியபின், கூடத்திற்கு வந்தவளை அழைத்த தனபாக்கியம், தன் கையிலிருந்த மல்லிகைப் பூவை அவளது கூந்தலில் வைத்து விட்டாள். முதல்முறையாக அவரது அன்பான இந்தச் செயல், தீபாவின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இந்த வீட்டிற்கு வந்த இத்தனை நாட்களில், இன்று தான் முதன்முறையாக அவளை அன்பாக நடத்தியிருக்கிறார் அவர்.

“சந்தோஷமா, சங்கரோட வெளிய போய் வா!” எனப் பாட்டி சொன்னதும், சரியென்று தலையசைத்துவிட்டு எல்லோரிடமும் விடைபெற்றாள். காரின் முன் கதவைத் திறந்து விட்டதும் குனிந்த தலை நிமிராமல் அவள் ஏறி அமர, கதவைச் சாத்திவி்ட்டு, டிரைவர் சீட்டில் அமர்ந்தான் ஜெய்சங்கர். சுபா அருகில் வந்து அவள் காதோரமாக, “அக்கா! மாமா… காரைக் கூட உனக்குப் பிடிச்ச கலர்லதான் வாங்கியிருக்காரு பாரு! ஹேவ் எ நைஸ் டைம்!” என்று சொல்லிவிட்டுக் கையை ஆட்டினாள்.

கார், அவளுக்குப் பிடித்த ஆழ் நீல வண்ணத்தில் இருந்தது. சுபா சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜெய்சங்கர், அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். அவள் எதுவும் சொல்லாதிருக்கவும் ஒரு பெருமூச்சுடன், “விண்டோவை க்ளோஸ் பண்ணு தீபா! ஏசி போடறேன்!” என்றான். அவள் காரில் வருவது இதுதான் முதல் முறை என்பதால், கண்ணாடியை ஏற்றத் தெரியவில்லை அவளுக்கு. அவள் புரியாமல் விழிப்பதைப் பார்த்து, கையை நீட்டித் தானே கண்ணாடியை மேலே ஏற்றினான்.

அவன் கையை நீட்டும் போது, மேலே பட்டுவிடாமல் இருக்க உடலைக் குறுக்கிக் கொண்டு ஒதுங்கினாள் தீபா. அவளது செய்கையைக் கவனித்துவிட்டு, அவள் முகத்தைப் பார்த்தான் ஜெய்சங்கர். அப்போதும் அவள் தலை குனிந்திருக்கவே, ஒன்றும் பேசாமல் காரிலிருந்த சிடியை ஒடவிட்டான். அதிலிருந்து அவளுடைய அபிமானப் பாடகர் எஸ்.பி்.பி.யின் குரலில் இனிமையான பாடல் ஒன்று கேட்டது.

மீண்டும் திரும்பி அவளுடைய முகத்தைப் பார்த்த ஜெய்சங்கர், “ரிலாக்ஸ் தீபா!” என்றான். தனக்குள்ளேயே ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்த தீபா, திடுமென அவன் குரல் கேட்டதும், திடுக்கிட்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.

அவளைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு, சாலையில் கவனம் செலுத்தியபடி, “முன்னெல்லாம் எங்கிட்ட வாய் ஓயாம பேசுவ நீ! இப்பல்லாம் எதுவுமே பேசறதேயில்ல… என்னாச்சு தீபா?” என்று கேட்டான்.

எப்போதும் மனதில் பட்டதை அவனிடம் பேசியே பழகியிருந்ததால், “இல்லை… வந்து, இந்தக் கல்யாணத்துக்கு இவ்வளவு பணம் செலவு செய்யறது தேவை தானா? நிறையப் பணம் கொடுத்து எனக்கு நகை, புடவைன்னு வாங்கியிருக்கீங்க. கல்யாணத்துக்கும் நிறையப் பேரைக் கூப்பி்ட்டு, தடபுடலா விருந்தும் ஏற்பாடு பண்றீங்க. பொய்யா நாம செஞ்சுக்கப் போற இந்தக் கல்யாணத்துக்கு, இவ்வளவு செலவு தேவை தானா மாமா?” என்று நேரடியாக அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.

“பொய்யா ஏன் இருக்கணும்? இந்தக் கல்யாணத்தை நிஜமாக்கிட்டா என்ன? என்ன சொல்ற தீபா?” என்று அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்த படியே கேட்டான்.

திடுமென அவன் கேட்ட கேள்வியில் அதிர்ச்சியடைந்தவள், “நீங்க… நான்…. நீங்கதானே… நாம ஒரு வருஷம் கழிச்சுப் பிரிஞ்சிடலாம்னு சொன்னீங்க! அதனால தானே நான் ஒத்துக்கிட்டேன்?” என்று திகைப்புடன் கேட்டாள்.

ஒரு நொடியில் வாடிய முகத்தை மறு நிமிடமே சரி செய்து கொண்டவன், “தீபா! நான் சும்மா தான் கேட்டேன். இங்க பாரு தீபா! நம்ம ரெண்டு பேரைத் தவிர, மத்தவங்க எல்லாருமே நாம விரும்பித் தான் கல்யாணம் பண்ணிக்கறோம்னு நினைக்கறாங்க. அப்போ, என்னோட ஸ்டேட்டஸ்க்கு என்னுடைய நண்பர்கள், தொழில்ல பழக்கமானவங்கன்னு எல்லாரும், இப்படித்தான் இதை எதிர்பார்ப்பாங்க. அதுமட்டுமில்லாம, இதுக்கு அப்புறம் நாம ரெண்டு பேருமே கல்யாணம் பண்ணிக்கப் போறோமோ இல்லையோ….. யார் கண்டா?

அதனால, நம்ம கல்யாணத்தை ரொம்ப கிராண்டா பண்ணலாம்னு நெனக்கறேன். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்… ஒரு வருஷம் கழிச்சுத் தான் நாம பிரியப் போறோம். அதுக்கான காரணத்தை, அப்போ பாத்துக்கலாம்! இப்போ நீ என்னப் பார்த்தாலே ஒதுங்கி ஒதுங்கிப் போனா, பாக்கறவங்க எல்லாம் சந்தேகப்படுவாங்க.

விரும்பிக் கல்யாணம் பண்ற ஒருத்தன்… நிச்சயமா தன் வருங்கால மனைவியை, தனியா வெளிய அழைச்சுட்டுப் போக ஆசைப்படுவான். அதனால, நம்ம வீட்டுல இருக்கறவங்களும் நம்மகிட்ட இதைத் தான் எதிர்பார்ப்பாங்க. அதனாலதான் இன்னிக்கு உன்னை வெளியே அழைச்சிட்டு வந்தேன்!” என்று சொல்லவும், ஒரு நிமிஷம் காரணமே புரியாமல் தீபாவின் மனம் வாடியது.

அவர்கள் பேசிக் கொண்டேயிருக்கையில், கார் மாயவரம் வந்து முக்கியக் கடை வீதி ஒன்றில் நுழைந்தது. அவளை இறங்கி அங்கேயே நிற்கும்படிச் சொல்லிவிட்டு, காரை ஒரிடத்தில் நிறுத்திவிட்டு வந்தான் ஜெய்.

Advertisement