Advertisement

Chapter 7

இரவு வழக்கம் போல எல்லோரும் உறங்கிய பிறகு தான், அவன் வீட்டிற்குத் திரும்பினான். கதவைத் திறந்தவள், எதுவும் பேசாமல் சமையலறைக்குச் சென்று சாப்பாட்டை எடுத்து வைத்தாள். அவன் கைலிக்கு மாறி கைகால் கழுவி அமர்ந்ததும், அவன் முன்பாகத் தட்டை வைத்தாள். ஜெய்சங்கர் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். வழக்கமாக மலர்ச்சியுடன் இருக்கும் அவள் முகம், இன்றோ ஒரு தீவிர முகபாவனையுடன் இருந்தது. ‘எதுவென்றாலும் அவளே ஆரம்பிக்கட்டும்!’ என்ற முடிவில், எதுவும் பேசாமல் தட்டில் இருந்த டிபனைச் சாப்பிட ஆரம்பித்தான்.

அவனாகவே ஏதாவது கேட்பான் என்று எதிர்பார்த்த தீபா, ஏமாந்து போனாள். எதுவும் சொல்லாமல் அவன் சாப்பிடுவதைப் பார்த்ததும் பொறுமை இழந்தவள், “மாமா! அம்மா இன்னைக்கு ஒண்ணு சொன்னாங்க. அது  நிஜமா?” என்று கேட்டாள்.

அவள் எதைப் பற்றி  பேசுகிறாள் என்பது தெரிந்திருந்தாலும், அவளே அதைச் சொல்லட்டும் என்று முடிவு செய்தவன்… நிதானமாக, “எதைப்பத்தி?” என்று கேட்டபடி சாப்பாட்டில் கவனமாக இருந்தான்.

தீபாவுக்குச் சுருசுருவென்று கோபம் வந்தது. ”எதைப் பத்தியா? எல்லாம் என் கல்யாணம் என்ற கண்றாவியைப் பத்தித் தான்!” என்றாள் எரிச்சலாக.

அவள் சொன்ன விதம் சிரிப்பை வரவழைக்க, சிரித்தால் அவளுக்கு இன்னும் கோபம் வருமென்று சிரிப்பை அடக்கியபடி, “கல்யாணத்தை இதுவரை யாரும் கண்ருவின்னுசொல்லி நான் கேட்டதில்லை” என்று மட்டும் சொன்னான்.

“விளையாடாதீங்க மாமா! நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன். முன்ன இந்த மாதிரி ஒவ்வொரு தடவையும் அம்மா இந்தக் கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கும் போதெல்லாம், நீங்கதான் எனக்குச் சப்போர்ட் பண்ணினீங்க. இப்ப, அம்மா உங்களையே கல்யாணம் பண்ணிக்கச் சொல்றாங்க!  அதுவும் ரொம்பத் தீவிரமா இருக்காங்க!” என்று படபடவென்று பொரிந்து தள்ளினாள்.

“நிதானமாக அருகில் இருந்த டம்ளரில் இருந்து தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு ஒரு அளந்த பார்வையுடன் அவளைப் பார்த்த ஜெய், இப்ப உன் ப்ரச்சனை என்ன? கல்யாணமா…? இல்ல, என் கூடக் கல்யாணமா?” என்று கேட்டான்.

பதட்டத்துடன் இரண்டு கைகளையும் பிசைந்தபடி எதிரே நின்ற தீபா, “இதென்ன கேள்வி! எத்தனைத் தடவை உங்க கிட்டவே சொல்லியிருக்கேன்? நான் எவ்வளவு தூரம் கல்யாணத்தையும், ஆண்களையும் வெறுக்கறேன்னு… உங்களுக்கே தெரியுமே? அதோட உங்களோட கல்யாணங்கறதை என்னால் நெனச்சுப் பார்க்கவே முடியல, உங்களை நான் எவ்வளவு பெரிய இடத்துல வச்சிருக்கேன்! உங்களைப் போய் என்னோட கணவரா… ம்ஹும்! என்னால் நெனச்சுக்கூட பாக்கமுடியல!” என்று சொன்னாள்.

”அவ்வளவு மோசமாகவா நான் இருக்கேன்?” என்று வருத்தப்படுவதைப் போல் கேலியுடன் ஜெய்சங்கர் கேட்க, ஒரு நிமிடம் அவன் என்ன சொல்கிறான் என்பது புரியாமல் விழித்த தீபா பதற்றமானாள்.

“ஐயோ! நான் உங்களை மட்டமாச்  சொல்லல. உங்களைக் கல்யாணம் பணணிக்கற பொண்ணு, ரொம்பக் குடுத்து வெச்சிருக்கணும். ஆயா கூட அன்னிக்கு வசந்தியைக் கல்யாணம் செஞ்சுக்க விருப்பமான்னு கேட்டாங்களே? அவ ரொம்ப நல்ல பொண்ணு மாமா! நீங்க ஏன் அவளைக் கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது?” என்று தன் ஆலோசனையைச் சொன்னாள். தன் யோசனையை அவன் ஏற்றுக் கொள்கிறானா என்று ஆர்வமாகவும் பார்த்தாள்.

அவளுக்குப் பதிலேதும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்து நிதானமாகக் கையைக் கழுவியவன், பின்பு சூடாய் எப்போதும் போல் வைத்திருந்த பால் டம்ளரைக் கையில் எடுத்தபடி நிதானமாகத் தீபாவைப் பார்த்தான்.

ஒரு குழந்தைக்குப் புரிய வைக்கும் பாவனையில், “பாரு தீபா! இப்பப் பிரச்னை, என்னொட கல்யாணத்தப் பத்தியில்ல. உன்னோட கல்யாணம் தான். சுபாவுக்குக் கல்யாணம் செய்யறதுக்கு முன்னால உன்னோட கல்யாணத்த முடிக்கறதுல, அக்கா தீவிரமா இருக்காங்க. நான் வேண்டாம்னு சொன்னலும், உனக்கு வேற யாராவது ஒருத்தனைப் பார்க்கத்தான் போறாங்க” என்றான் சிரிப்புடன்.

“ஆனா, நான்தான் கல்யாணமே வேண்டாம்னு…” என்று இடைமறித்தாள் தீபா.

“அதை, உங்கம்மா காது குடுத்துக் கேக்கவே போறதில்ல! இந்த மாதிரி ஒரு நடுத்தரமான, கிட்டத்தட்ட கிராமச் சூழ்நிலைல பிறந்து காதல் கல்யாணம் பண்ணி, சூடு பட்டதுனால, அக்கா இப்ப ரொம்பவே பயந்து போயிருக்காங்க. எப்படியானாலும் உனக்கு இப்பக் கல்யாணம் பண்ணிடனும்னு தான் முடிவா இருக்காங்க. அதனால்தான், நான் ஒரு யோசனை வெச்சிருக்கேன்!” என்று பீடிகையோடு ஆரம்பித்தான்.

கல்யாணத்தைத் தவிர வேறு எதுவானாலும் சரி என்று நினைத்த தீபா, “என்ன மாமா?” என்று ஆர்வமாகக் கேட்டாள். உடனே அவளுக்குப் பதில் சொல்லாமல், ஆற அமர நிதானமாகப் பாலைக் குடித்தான்.

 “விஷயத்தைச் சொல்லிவிட்டு, பிறகு குடித்தால் தான் என்ன?” என்று மனதுக்குள் கடுகடுத்தபடி அதை வெளியே காட்டமுடியாமல் பொறுமையில்லாமல் தவித்தாள். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் ஒரு முறை, பி.ஈ. படித்தவுடன் ஒருமுறை, என இதுவரை தப்பித்த மாதிரி, இப்போது தான் அவ்வளவு எளிதாக தட்டிக் கழிக்க முடியாது என்பதும் தெளிவாகப் புரிந்தது அவளுக்கு. எனவே, பிடிவாதமாக வரவழைத்த ஒரு பொறுமையுடன் அவன் முகத்தை ஆவலாகப் பார்த்தாள்.

“நான் சொல்றதைக் கவனமாகக் கேள் தீபா. உனக்குக் கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு நீயே பல தடவை சொல்லியிருக்கே. எனக்கும், இப்போதைக்குக் கல்யாணம் செஞ்சுக்க விருப்பம் இல்ல தான். தொழில்ல முன்னேறி, பெரிய அளவுல வரணும் என்பதுதான் என்னோட ஆசை, லட்சியம் எல்லாம். இப்பக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, என்னோட முழுக் கவனத்தையும் தொழில்ல செலுத்த முடியாது. அம்மாகி்ட்ட எத்தனையோ தடவை சொல்லிச் சொல்லிப் பார்த்தாலும் விடறதாயில்லை!” அதனால…” என்று இழுத்து விட்டு, மீண்டும் அவளைப் பார்த்தான்.

“அதனால என்ன?” என்ற ஆவல் தாங்கமாட்டாமல் மீண்டும் கேட்டாள் தீபா. ‘இந்த மாமா விஷயத்தைப் பட்டென்று சொல்லாமல், ஏன் இப்படி இன்னைக்கு பொறுமையைச் சோதிக்கிறார்?’ என மனதுக்குள் அவனைத் திட்டினாள்.

“அதனால, நாம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கலாம்!” என அவன் முடிக்கும்முன் மீண்டும் அவசரமாக, “அதானே வேண்டாங்கறேன்!” எனக் குறுக்கிட்டாள் தீபா.

“என்னைக் கல்யாணம் செஞ்சுக்க இவ்வளவு ஆர்வமா நீ ஒத்துப்பேன்னு நினைக்கலை தீபா! தாங்க்ஸ்!” என்று கேலியாக ஜெய்சங்கர் தீபாவைப் பார்த்துச் சிரிக்க, தீபாவின் முகம் சிறுத்துப் போனது. அவன் தவறாக எடுத்துக் கொண்டானே என்ற கவலையுடன், “அதில்ல மாமா! வந்து…” என்று மீண்டும் ஆரம்பித்தாள்.

கையை உயர்த்தி அவளை நிறுத்தும்படி சைகை காட்டிவிட்டு, விட்டதில் இருந்து தொடர்ந்தான்.

“அதனால, நாம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கலாம் உனக்கு உங்கம்மாவோட தொல்லை இருக்காது; நீ நிம்மதியா இந்த வருஷப் படிப்பை முடி. நானும் என் தொழிலைப் பார்க்கறேன். உன் தங்கைக்கும் கல்யாணம் ஆயிடும். நீ அடுத்த வருஷம் வேலை தேடிக்கிட்டு வெளியூரு, ஏன் வெளிநாட்டுக்குக் கூடப் போகலாம். நானும், அதுக்குள்ள தொழில்ல ஒரு நல்ல நிலைக்கு வந்துடுவேன். அதிகபட்சம் ஒரு வருஷம் தான், நாம ரெண்டு பேரும் சேர்ந்து இருப்போம். அப்புறம், நாம விவாகரத்து பண்ணிக்கலாம். நீ உன் விருப்பம் போல இருக்கலாம். நான் என் வழில போறேன். சரியா?” என்று கேட்டுவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான்.

“என்னோட நோக்கம் என் இஷ்டம் போல இருக்கறதில்லை. நிறையச் சம்பாதிக்கணும். தம்பியை நல்லாப் படிக்க வெக்கணும். எனக்கு உங்களையெல்லாம் பிரிஞ்சு, வெளியூருக்குப் போகல்லாம் விருப்பமில்லை. இப்ப மாதிரியே, எப்பவும் இருந்தாலே போதும்!” என்று கண்ணீருடன் சொன்னாள் தீபா. அவன் அவளைப் பிரிப்பது போலப் பேசியதைத் தாங்க முடியவில்லை அவளால்.

 எப்போதுமே, இப்போது இருப்பது போல் இருக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? ஏனோ, அவளால் இந்தக் குடும்பத்தைத் தாண்டி வேறொரு வாழ்க்கையை நினைக்கவே முடியவில்லை.

“தீபா! எல்லாரும் எப்பவும் ஒண்ணாவே இருக்க முடியாது. நேரம் வந்தா, அவங்கவங்க பிரிஞ்சு போய்… அவங்கவங்க வழியைப் பார்த்துட்டுப் போக வேண்டியது தான். அதனால, இந்த ஒரு வருஷக் கல்யாண வாழ்க்கை, உனக்குச் சம்மதம் தானா?” என்று அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்தபடியே கேட்டான் ஜெய்சங்கர்.

“மாமா! வந்து… அப்புறம் நீங்களும், நானும்… வந்து… நானும், நீங்களும்” என்று, தான் சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல், முகம் சிவந்து தலையைக் குனிந்து கொண்டாள் தீபா.

அவள் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்ட ஜெய்சங்கர், ஒரு குறும்புப் புன்னகையுடன், “இந்தக் கல்யாணம் ஊருக்கு மட்டும் தான் நிஜம். மத்தபடி உள்ளுக்குள்ள நாம ரெண்டு பேரும் வெறும் ப்ரெண்ட்ஸ் தான். அதுக்கு மேல, வேறு எதுவும் கிடையாது. புரியுதா? வேற எதுவும் கிடையாது! என்றவன், ‘வேற எதுவும்’ என்பதை அழுத்திச் சொன்னான்.

புரிந்து கொண்டதாகத் தலையை மட்டும் ஆட்டிய தீபா, தலையை நிமிர்த்தி, “மாமா! நான் வேற கல்யாணமே பண்ணிக்கப் போறதில்ல. ஆனா, நீங்க….. உங்களுக்கு இந்த டெம்பரரி கல்யாணத்தால ப்ரச்சனை ஒண்ணுமில்லையா?” என்று கவலையாகக் கேட்டாள்.

“இதனால, எனக்கு மறுபடி கல்யாணம் நடக்கவே நடக்காதோன்னு தானே கவலைப்படறே? அதையெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ இப்பப் போய் நிம்மதியாத் தூங்கு. காலையில அம்மாகிட்ட உன் சம்மதத்தைச் சொல்லு. சரியா?” என்ற ஜெய், அவள் தலையில் சிரித்தபடியே தட்டினான்.

“சரி மாமா! குட்நைட் மாமா! தாங்க்ஸ் மாமா!” என்று வார்த்தைக்கு வார்த்தை மாமா என்று கூறிவிட்டு, ‘மாமா எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்’ என்ற நம்பிக்கையை மனதில் விதைத்துக் கொண்டபடி படுக்கச் சென்றாள் தீபா.

தீபா மகிழ்ச்சியுடன் செல்வதையே பார்த்தபடி நின்றிருந்த ஜெய்சங்கரின் முகத்தில் சிரிப்பு மெல்ல மறைந்தது. ஒரு ஏக்கப் பெருமுச்சுடன் முகத்தில் வேதனையுடன் நின்றான். லைட்டை அணைத்துவிட்டுத் தன்னுடைய அறைக்குச் சென்றவனுக்கு, வெகுநேரம் தூக்கமே வரவில்லை.

Advertisement