Advertisement

Chapter – 6

சுபாவிற்கு, தீபாவின் அளவுக்குப் படிப்பு வரவில்லை. தவிர, ரொம்பப் பொறுப்பானவனும் அல்ல. அதனால் டிகிரி முடித்தவிட்டு, தற்போது டைப்பிங், ஷார்ட்ஹாண்ட் கிளாஸுக்குப் போய்க் கொண்டிருந்தாலும் விளையாட்டும், குறும்புமாகவே இருந்தாள். அதோடு, அம்மாவிடம் எப்போதும் இருக்கும் பிடிவாதம் என்ற குணமும் அவளிடம் அப்படியே ஒட்டிக் கொண்டிருந்தது.

ஜெய்சங்கரின் நண்பன் முரளி சிறு வயது முதலே அந்த வீட்டுக்கு வந்து சென்று கொண்டிருந்தான். அவனும் படிப்பை முடித்த பின்பு சொந்தமாகத் தொழில் நடத்திக் கொண்டிருந்தான். ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் ஜெய்சங்கர் வீட்டுக்கு வந்து விடுவான். இருவரும் தொழில் பிரச்சனைகளை அலசுவார்கள். சில சமயத்தில் எல்லோரும் கட்சி கட்டிக் கொண்டு ஒன்றாக கேரம் விளையாடுவார்கள். எப்போதும் தீபாவும், ஜெய்சங்கரும் ஒரு கட்சி என்றால் முரளியும், சுபாவும் மற்றொரு கட்சி. சுபாவும் வந்து உட்கார்ந்து கொண்டதும், ஒரே சிரிப்பும் விளையாட்டுமாகப் பொழுது போகும். சின்னவயது முதவே ஒன்றாக வளர்ந்ததால், யாரும் வித்தியாசமாக நினைக்கவில்லை. ஆனால், கபடமில்லாதிருந்த நட்பு, கடந்த ஆறு மாதங்களாக சுபா – முரளிக்கிடையே காதலாக மாறியிருந்தது. அது மஹாலக்ஷ்மிக்குத் தெரிந்துவிட, வெடித்தது பூகம்பம்.

ஆயாவும், தாத்தாவும் அவர்கள் பங்குக்கு ஆரம்பித்தனர். வீட்டு மானத்தை வாங்க வந்த அடுத்த வாரிசு என்று கண்டபடிப் பேசியதில், வீடே ரணகளமானது. இதற்கும் வழிசெய்தது ஜெய்சங்கர்தான்.

“அக்கா! வருத்தப்படாதே! முரளியும் நல்ல பையன்தான். அவங்க குடும்பமும் நல்ல மாதிரிதான். சுபாவை நல்ல மாதிரி வெச்சுப்பாங்க. நான் அவங்ககிட்டப் பேசறேன்.”

“தம்பி! நம்ப சாதியில சாதாரணமா வேலை பாக்கற பொண்ணுங்களுக்கே, மாப்பிள்ளை தேடறது கஷ்டம். இவ வேலையும் பாக்கல; போதாததுக்கு, எங்களோடக் கலப்புக் கல்யாணம் வேற பெரிய இடைஞ்சலா இருக்கு. அவங்க எப்புடிப்பா ஒத்துப்பாங்க?” என்று அழுதாள்.

“அக்கா! அதை விட இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கு. அவளுக்கு முன்னாடி தீபா இருக்காளே! அவளுக்குக் கல்யாணம் செய்யாம சுபாவுக்கு கல்யாணம் செஞ்சா, பின்னால் தீபாவுக்குக் கல்யாணம் எப்படி ஆகும்?”

“ஆமாப்பா தம்பி! தீபா, இவள மாதிரியில்லை! ரொம்பப் பொறுப்பு. அதுவும் வாழ்க்கையில நிறைய கஷ்டப்பட்டுருச்சுப்பா. இப்போ, இவளால வேற புதுப் பிரச்னை ஆரம்பிச்சிருக்கு. எதையும் யோசிக்காம இந்தச் சனியன் இப்படிச் செய்வாளா?” என்று மேலும் அழுதாள்.

“அக்கா! திருப்பித் திருப்பி நடந்ததையே பேசி அழாதே. மேல என்ன செய்யறதுன்னு யோசி! பழசை நினைக்கறதுனால எதுவும் மாறிடப் போறிதில்ல.“

கண்களைப் புடவைத் தலைப்பால்  அழுந்தத் துடைத்துக் கொண்டு சில நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு, தம்பியின் முகத்தைப் பார்த்தாள் மஹாலக்ஷ்மி.

“தம்பி! அங்க தொட்டு இங்க தொட்டு, என்னடா உன் தலையிலேயே கை வைக்கிறாளேன்னு நினைக்காதே. பேசாமா, நீயே தீபாவைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டா என்ன? இரண்டு பேரும் நல்லாத் தான் பழகறீங்க. அவ உனக்குப் பார்த்துப் பார்த்து செய்யறத, நானே பார்த்திருக்கேன். நீயும் அவளைத் தனியா தான் நடத்தறே. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனா நல்ல இருப்பீங்க. என்னப்பா சொல்ற?” என்று தீடீர் வேண்டுகோளாக முடித்தாள்.

ஜெய்சங்கர் ஒரு நிமிடம் பதிலே பேசவில்லை. மஹாலக்ஷ்மி “என்னப்பா சொல்ற?” என்று அவன் தோளைப் பிடித்து மீண்டும் கேட்டாள்.

“திடீர்னு இப்படிக் கேட்டா, உடனே எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலைக்கா. என்னோட சம்மதம் இருக்கட்டும். முதல்ல தீபாவைக் கேட்டியா? அவளோட விருப்பம் என்னன்னு தெரியாம, நீ பாட்டுக்குச் சொல்றியே?”

மஹாலக்ஷ்மி ஒரு ஆறுதல் பெருமூச்சுடன், “இவ்வளவுதானா? அட போப்பா! நீ எப்படி அவமேல அக்கறையா இருக்கிறயோ, அதே மாதிரி அவளும் மாமா, மாமான்னு உன்மேலே உயிரையே விடறா. பார்த்துப் பார்த்து உன்னைக் கவனிக்கறா. கண்டிப்பா, அவ இதுக்குகெல்லாம் ஒத்துப்பா!” என்று முடித்தாள்.

“அதில்லைக்கா!  நிறையப் படிச்சிருக்கா அதுவுமில்லாம, இப்ப அவளோட கோர்ஸ் வேற முடியல. நான் வெறும் டிகிரி தான் பழச்சிருக்கேன். எதுக்கும் ஒரு வார்த்தை அவகிட்ட கேட்காம…”

அவன் முடிப்பதற்குள் இடைபுகுந்த மஹாலக்ஷ்மி, “தம்பி! உன்னோட உழைப்புக்கும் குணத்துக்கும் முன்னாடி, அந்தப் படிப்பெல்லாம் சாதாரணம்பா. அவ இதுக்கு ஒத்துப்பா!” என்று மீண்டும் வற்புறுத்தினாள்.

“அக்கா! அவ முன்ன மாதிரி சின்னப் பொண்ணு இல்லை. இப்ப வெளியே போயி, நிறையப் பழகறா. ஒருவேளை அவ க்ளாஸ்லயே யாராவது…” என்றவன், மேலே சொல்லாமல் நிறுத்தினான்.

“தம்பி! என்னப்பா சொல்ற! இவளும் யாரோடயாவது நெருக்கமா சுத்தறாளா? அவ மட்டும் அப்படிச் செஞ்சா… நான்….” என்று ஆவேசமானாள்.

“அக்கா! அவசரப்படாத! நான் அப்படியெல்லாம் சொல்லல. இப்பக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறவங்களுக்கு எல்லாம் வெளிநாட்டுல  வேலை கிடக்குது. தன்னை மாதிரியே கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்ச பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, இவளும் வெளி நாடெல்லாம் போகணும்னு ஆசைப்படலாம் இல்லையா? அதைத் தான் சொல்றேன்!” என்று சமாதானப்படுத்தினான் ஜெய்சங்கர்.

“அப்பாடா! நான், ஒரு நிமிஷம் பயந்துட்டேன். இப்பக் கூட நீ அவளைப் பத்தித் தானே யோசிக்கற? இதைத் தான் சொல்றேன். நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுகிட்டா நல்லாயிருப்பீங்க. அதெல்லாம் நான் பாத்துக்கறேன்!” என்று சிரித்தபடியே மஹாலக்ஷ்மி கிளம்பினாலும், கண்டிப்பாகத் தீபாவிடம் சம்மதத்தைக் கேட்ட பின்பு தான் செய்வேன் என்ற வாக்குறுதியுடன் தான், ஜெய்சங்கர் அவளை அனுப்பினான்.

முதலில் அன்னை சொன்னதை மகள் சுத்தமாக நம்பவில்லை. ‘முன்பு பலமுறை தனக்குப் பிரச்சனை வந்த போதெல்லாம் உதவிய மாமாவா இப்படிச் சொன்னது!’ என்று ஆச்சரியமாக இருந்தது. கூடவே, ‘அம்மா வேறு ஏதாவது திட்டம் போட்டிருக்கிறாளா?’ என்ற சந்தேகமும் வந்தது.

         சந்தேகமாக அம்மாவைப் பார்த்தபடி, “ஏம்மா! சுபா, முரளியைக் கல்யாணம் பண்ணிக்க விரும்பினா, பண்ணிக்கட்டுமே! அதுக்காக, நான் ஏன் இப்பவே கல்யாணம் பண்ணிக்கணும்? அவ முரளியைக் கல்யாணம் பண்ணிட்டுப் போகட்டும். எனக்குக் கல்யாணம்-லாம் பண்ணிக்க விருப்பமும் இல்லை. நான் எம்.ஈ முடிச்சதும் வேலைக்குப் போயி நிறையச் சம்பாதிச்சு, தம்பியை நல்லாப் படிக்க வைக்கணும். உன்னையும் வசதியா கடைசி வரைக்கும் வச்சுக்கணும். எப்பவும் உன்னோடவே இருக்கணும்னு நினைச்சுட்டு இருக்கேன்!” என்று மேற்கொண்டு சொல்லி முடிக்கும் முன்னே இடை புகுந்தாள் மகா.

“அடிப்போடி! என்னைக் கல்யாணம் பண்ணினவனே கடைசி வரைக்கும் காப்பத்தணும்னு இல்லாம, விட்டுட்டுப் போயிட்டான். நீ என்ன…  என் பாட்டை நான் பார்த்துப்பேன். இப்ப உனக்கு முன்னாடி அவளுக்குக் கல்யாணம் பண்ணினா, நாளைக்கு உன்னை யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க? உனக்கு என்னவோ பிரச்னைன்னு, ஒரு பயலும் உன்னைக் கட்டமாட்டான். அப்புறம் நீ, கடைசி வரைக்கும் தனியாவே நிக்க வேண்டியது தான்!”

“ரொம்ப நல்லதாப் போச்சு.  அதையே தானே நானும் சொல்றேன்!” என்று மீண்டும் தடை சொன்னாள் தீபா.

மஹாலக்ஷ்மி கண்டிப்புடன் “திருப்பித் திருப்பி அதையே சொல்லாதே. நான் ஒருத்தி இப்படி நிக்கறதே போதும். நீங்கள்ளாம் நல்லா வாழற வழியைப் பாருங்க!” என்று சொல்லிவிட்டு, மேற்கொண்டு அவள் மறுப்பைக் காது கொடுத்துக் கேட்கவில்லை. அதோடு விடாமல் அவளை எச்சரிக்கும் விதமாக, “வழக்கம் போல உங்க மாமாகிட்டயே சிபாரிசுக்குப் போயி, இந்தக் கல்யாணத்தை நிறுத்திடலாம்னு நினைக்காதே! என் பிடிவாதம் உனக்குத் தெரியும்ல. அப்புறம், நீ என்னை உயிரோடு பார்க்க முடியாது!” என்று பயமுறுத்தலுடன் முடித்தாள்.

தாயின் பேச்சில் வாயடைத்துப் போன தீபா, அப்போதைக்கு பேசாமல் இருந்தாலும் சும்மா விடவில்லை, மாமாவைத் தேடிப் போகத்தான் செய்தான்.

Advertisement