Advertisement

Chapter 37

   தீபா, ஜெய்யை ஏகமாகக் கவலைப்பட வைத்து விட்டு, அழகான ஓரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பார்ப்பதற்கு அப்படியே தீபாவை உரித்து வைத்தது போலவே இருந்தது. அதைப் பார்த்தவுடனேயே, ஜெய்யின் மனது மிகவும் நிறைந்து விட்டது.  ஒருவரின் கல்யாண வாழ்க்கையின் நிறைவுக்கான சின்னம் குழந்தைகள் அல்லவா?

டாக்டர் சொன்ன விவரங்கள் அவனை ரொம்பவே பயமுறுத்தியிருந்தாலும், எந்தப் பாதிப்பும் இல்லாமல் குழந்தை பிறந்ததில், அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தீபாவின் பிடிவாதத்தால் இன்னொரு ஆண் குழந்தையும் பிறந்தது. முதலில் பிறந்த பெண் குழந்தைக்கு தங்கள் இருவரின் முதலெழுத்தும் வருமாறு, ‘ஜெயந்தி’ என்று பெயர் வைத்திருந்தார்கள். இப்போது பிறந்த பையனுக்கு, இருவரது பெயரையும் சேர்த்து ‘ஜெய்தீப்’  என்று வைத்தனர்.

  ஜெய்யின் தொழில்கள் இப்போது பல மடங்கு வளர்ந்திருந்தன. கடலூரில் மூன்று பேக்டரிகளும், சிதம்பரம, மாயவரம் மற்றும் கடலூரில் செயின் ஸ்டோர்களாக வீட்டு உபயோகப் பொருட்களை விற்கும் பிரம்மாண்டமான கடைகள் இருந்தன. சிதம்பரத்தில் ஒன்று, கடலூரில் ஒன்று என இரண்டு திருமண மண்டபங்களைக் கட்டியதில், அவையும் சிறப்பாக லாபம் தந்தன.

   இந்த ஐந்து ஆண்டுகளில் தீபாவின் கன்ஸல்டன்சியும் பிரபலமாகி இருந்தது. பெரிய கம்பெனிகளின் ப்ராஜெக்ட்களைப் பெற்று , வெளி நாடுகளிலும் கிளைகளை ஆரம்பிக்கும் அளவுக்கு வளர்ந்திருந்தது. பிரவீனும், வசந்தியும் அவற்றில் ஒன்றை நடத்தி வருகின்றனர். மற்ற இடங்களிலும், தன் நண்பர்களுடன் கூட்டாக அதை நடத்தினாள் தீபா.

         அவர்களுடைய குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள, இருவரும் நேரத்தைப் பிரித்துக் கொண்டனர். உதவி செய்ய ஆட்களை வைத்திருந்தாலும், சம்பாதிப்பதே குடும்பத்திற்காகத் தான் என்பதால், அதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர்.

         இப்போது அவர்கள் சிதம்பரத்தில் ஒரு பெரிய பங்களாவைக் கட்டி, அதில் குடி போயிருந்தனர்.

    ஜெய்தீப்பின் முதலாவது ஆண்டு நிறைவு விழாவிற்கு, உறவினர்கள் அனைவரையும் அழைத்திருந்தனர். ஆயா, தாத்தா, மஹாலெஷ்மி, சபா, சுபா, முரளி, ராஜா, ஜெயா என அவர்களுடைய அனைத்துக் குடும்பத்தினரையும், நெருங்கிய நண்பர்களையும், விழாவுக்கு அழைத்திருந்தனர்.

ஜெய்சங்கருக்காக, ப்ரவீனிடம் சொல்லி, சஸ்பென்ஸாக வைரக் கற்கள் பதித்த ரோலக்ஸ் வாட்சை வாங்கி வைத்திருந்தாள் தீபா. ஜெய் அவளுக்காகப் ப்ளாட்டினத்தில் ரூபிக் கற்கள் பதித்த  ஸெட் ஒன்றை வாங்கியிருந்தான். அவன் வாங்கியிருந்த மாதுளை நிறப்  பட்டுப் புடவைக்குப் பொருத்தமாக, அந்தச் செட்டை அணிந்து கொண்டு ஜொலித்தாள் தீபா.

    விழா முடிந்து அனைவரையும் அனுப்பி விட்டு, அவர்கள் படுக்க வரும்போது மணி பதினொன்று.  ஜெய் மாடியில் அவர்கள் அறையில் இருந்த மற்றொரு கட்டிலில் குழந்தைகளைத் தூங்க வைத்துவிட்டு, தங்கள் கட்டிலில் சாய்ந்து படுத்தவாறு, தீபாவிற்காகக் காத்திருந்தான்.

    எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு மாடியேறி வந்து  அறையில் நுழைந்ததும், கட்டிலில் ஜெய்யின் அருகே அமர்ந்தாள்.

அன்று நாள் முழுவதும் அவளுக்கு வேலை அதிகமாக இருந்ததால் களைத்திருந்தவனை, ஜெய் தன் மடியில் சாய்த்துக் கொண்டு மென்மையாக அவள் கைகளை அமுக்கினான்.  இருவருமே எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.

   எளிமையாக ஆரம்பித்த அவர்கள் வாழ்வில், அவர்கள் இவ்வளவு தூரம் வளர்ந்ததற்குக் காரணமே, ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதல் அல்லவா?

  திடீரென்று தான் வாங்கிய பரிசு நினைவிற்கு வர, தீபா எழுந்து சென்று பீரோவில் அவள்  ரகசியமாக  வைத்திருந்த இடத்தில் இருந்து அதை எடுத்து வந்தாள். ஜெய்யிற்கு மிகவும் பிடித்த வாட்ச், இந்த ரோலக்ஸ். முன்னர் எப்போதோ பத்திரிக்கையில் செய்தி வந்தபோது, அதைப் பற்றிச் சொல்லிவிட்டு, ஜெய் மறந்து விட்டான்.

இந்தக் கைக்கடிகாரத்தை கடைக்குச் சென்று உடனே வாங்க முடியாது. ஆர்டர் கொடுத்துத் தான் வாங்க வேண்டும். தனக்காக எவ்வளவோ செய்திருக்கும் தன்னுடைய  மாமாவிற்கு, அவர் விருப்பப்பட்ட இதையாவது வாங்கித் தர வேண்டுமென்று தீபா ஆசைப்பட்டாள்.

    அதை எடுத்து வந்தவள், ஆசையாக அவனது கையைப் பற்றி, அவனது

மணிக்கட்டில் அதைக் கட்டி விட்டாள் தீபா.

அவள் என்ன செய்கிறாள் என்று சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெய், தன் கையில் இருந்த வாட்சைப் பார்த்ததும் அசந்து போனான்.

 தனக்குப் பிரியமானவர்கள் கொடுக்கும்போது, ஒரு பரிசின் மதிப்பு இன்னும் அதிகமாகிறது. தீபா தனக்குக் கொடுத்த பரிசை விட, அதற்காக அவள் எடுத்துக் கொண்ட முயற்சி அவனை சந்தோஷப்படுத்த, தீபாவின் கைகளைப் பற்றித் தன் உதட்டில் பதித்து , “தாங்க்யூடா!” என்றான் நெகிழ்ச்சியாக.

     “நான் இவ்வளவு கஷ்டப்பட்டு வாட்சு வாங்கினா, உங்களோட ரியாக்‌ஷன் ரொம்பச் சுமார் தான்! நானே எனக்குத் தேவையான பரிசை எடுத்துக்கறேன்!” என்றவள் , அவன் சட்டையைப் பற்றி இழுத்து, அவன் முகமெங்கும் முத்தம் பதித்தாள்.

அவள் செய்ததையெல்லாம் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்ட  ஜெய், அவள் விட்டதும்,  “ஹேய்! நீ இப்ப கொடுத்த கிப்ட் சூப்பர்தான். ஆனா, அதோ நீ கொடுத்திருக்கியே…, அந்த கிப்ட்ஸ் போல வருமா?” என்று தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளைச் சுட்டிக் காட்டினான்.

       “அந்த கிப்ட்ஸ்க்கு,  நீங்க பதிலா என்ன குடுத்தீங்களாம்?” என்றாள் தீபா சிணுங்கலாக.

    “அப்படிக் கேளுடி… என் அக்கா பெத்த மகளே! அதை இப்போ காட்டறேன்!” என்றவன் அவளை வாரி அணைக்க, இருவருடைய சிரிப்பும் அங்கு சேர்ந்து ஒலித்தது.

காதல் என்பது கல்யாணத்தில் முடிவது அல்ல…! கல்யாணத்தில் துவங்குவது.

ஜெய், “காதலெனும் தேர்வெழுதி”  வாழ்க்கை பாடத்தில் வெற்றியாளனாக வந்து விட்டான். தன் மேல் அவன் வைத்திருந்த காதலை, என்றென்றும் பசுமையாக இருக்கும்படி பார்த்துக் கொண்டாள் தீபா.

Advertisement