Advertisement

Chapter 36

தான் முடிவெடுத்தபடியே  செயல்படுத்தினான் ஜெய். முதலில் ஸ்டாலினைத்தொலைபேசியில் அழைத்து, நேரில் வரச் சொன்னான். பனம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போடு வந்தவரை உட்கார வைத்து, தெளிவாக தனது முடிவைச் சொன்னான்.

  “மாமா! நீங்க வந்து தீபாவைப் பார்த்தீங்களாம். தீபா சொன்னா. அவகிட்ட

நீங்க பணம் கேட்டீங்களாம். நாங்க, இப்பத் தான் உழைச்சு கொஞ்சம் கொஞ்சமா மேல வந்திட்டு இருக்கோம். நீங்க கேட்ட பணத்தை எங்களாலா இப்பத் தரமுடியாது. பணத்தைத் தொழிலில் போட்டிடுக்கறதுனால எடுக்க முடியாது. எனக்குத் தெரிஞ்ச கம்பெனில, சூப்பர்வைசர் வேலைக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன். மாசம் முப்பதாயிரம் ரூபாய் சம்பளம். நீங்க சிக்கனமா இருந்தா, உங்க கடனைக் கொஞ்சம் கொஞ்சமா அடைச்சுடலாம். சம்மதம்னா சொல்லுங்க!” என்று  கட் அண்ட் ரைட்டாகவே பேசினான்.

    ஸ்டாலினுக்கு வேறு வழியிருக்கவில்லை. இருக்கும் நிலைக்கு இதுவே

பரவாயில்லை என்பதால் அதற்கு ஒத்துக் கொண்டார். எழுந்து வெளியேறப் போகும்போது ஜெய் அழைத்து, “மாமா! தீபா இதுவரைக்கும் கஷ்டத்தைத் தவிர எதையும் பார்த்ததில்லை. ஆனா, இனிமே அவளைப் பூ மாதிரி வெச்சுக்க நானிருக்கேன். இனிமே நீங்க அவளைச் சங்கடப்படுத்தற மாதிரி பேசறதைத் தவிர்த்தா நல்லது. அவ இப்பக் கர்ப்பமாயிருக்கறதனால, அவ மனசைப் பாதிக்கற எதையும் அவாய்ட் பண்ணணும்னு விரும்பறேன். உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்!” என்றதும் தலையை அசைத்து வெளியேறியவர், அதன்பின் வரவேயில்லை.

         அடுத்ததாக சீர்காழிக்கு அவனே நேராகக் கிளம்பிச் சென்றான். மஹாலக்ஷ்மியின் வீட்டுக்கே சென்றவன், அவளிடம் ஒருவன் தகராறு செய்வதைப் பார்த்தான்.  அவன் ஜெய்சங்கரைப் பார்த்ததும், ‘உங்க முகத்துக்காகத் தான் இப்போ விட்டுட்டுப் போறேன். சீக்கிரமே பணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க!” என்று கூறிவிட்டுப் போய்விட்டான்.

    அவன் போனதும் மஹாலக்ஷ்மிக்குத் தர்மசங்கடமாக இருந்தது. “அது வந்து தம்பி” என்று ஆரம்பித்தாள்.

“எனக்கு எல்லாம் தெரியும்க்கா. நான் பணத்தோட தான் வந்திருக்கேன். ஆனா, இது என்னோட பணம் இல்ல. நான் ஒருத்தர் கிட்ட, கடனா தான் வாங்கியிருக்கேன். உனக்காக  நான் ஜாமீன் போட்டிருக்கேன். நீ மாசாமாசம் கொஞ்சம் கொஞ்சமாகக் கடனை அடைக்கணும். அதுக்கு, உனக்குக் கூட வருமானம் வந்தா தான் முடியும். அதனால, உன் கடையை கூடியர் சர்வீஸிக்கு டெலிவரி சென்டரா ஒப்பந்தம் போட்டிருக்கேன். நீ வர லெட்டரையெல்லாம் கலெக்ட் பண்ணி, கூரியர் ஆபிஸிக்குத் தந்துடணும். நீ கொஞ்சம் சிக்கனமாயிருந்தா, இந்தக் கடனை அடைக்க முடியும்.

இதான்க்கா என்னால  செய்ய முடிஞ்சது. என்னோட பணம் புது பாக்டரில முடங்கியிருக்கு. அதுலயிருந்து எடுக்க முடியாது. தீபாவும் இப்ப டெலிவரிக்கப்புறம், கொஞ்ச மாசம் வேலை பார்க்க முடியுமான்னு தெரியல. குழந்தையை அவ கவனிச்சுக்கணும் இல்லையா? அதனால, நீ தான் உன் கடனை அடைச்சுக்கணும். என்னக்கா சொல்ற” என்றான்.

  மஹாலக்ஷ்மிக்கு உள்ளுர வருத்தம்தான். நன்றாகப் படித்த பெண்ணை

தம்பிக்குக் கல்யாணம் செய்து கொடுத்தால், காலம் முழுவதும் இருவரும்அவளுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள் என்று நினைத்தால், அது நடக்கவில்லையே!

   “ஹும்! மனுசங்க எல்லாம் மாறிடறாங்க பணத்தைப் பார்த்தவுடனே, சொந்தம் மறந்துடுது. என்ன செய்யறது?” என்று ஜாடையாகக் குத்தினாள்.

ஜெய்யும் விட்டுக் கொடுக்கவில்லை.

    “ஆனா, நீ மட்டும் கொஞ்சம் கூட மாறவேயில்லைக்கா. அன்னிலந்து இன்னி வரைக்கும், ஒரே மாதிரியேதான் இருக்க. தீபாவை எப்பவுமே பலியாடா  மட்டும் தான் பாக்கற. அவளும் உன்னோட பொண்ணுதானே? இதோ, ஆறு மாசமாச்சு…, ஒரு நாளாவது அங்கே வந்து,  ‘என்னம்மா’-ன்னு கேட்டிருக்கியா? சுபாவை எப்படிப் பாத்துகிட்டே?  பாத்துப் பாத்து செய்யறே?இப்ப உனக்கு ஒரு கஷ்டம்னா மட்டும்,  நாங்க ஞாபகம் வந்துடறோமா?

உனக்காக அவ நிறையத் தியாகம் செஞ்சிருக்கா. இனிமே, நீ எங்க வாழ்க்கையை முடிவு பண்ணாதேக்கா. அதை, நாங்க பாத்துக்கறோம்.

அவன் பட்டென்று கத்தரித்தாற் போல் பேசியது மஹாலக்ஷ்மிக்கு பிடிக்காவிட்டாலும்,

இப்போதைய சூழ்நிலைக்கு, அவனை விட்டால் வேறு வழியில்லை என்பதைப்புரிந்து கொண்டாள். என்றுமே அவர்களுடைய நல்வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்காததால், அவளுடைய ஒதுக்கம் ஜெய்யையும், தீபாவையும் பாதிக்கவில்லை.

ஜெய், சீமந்தத்திற்காகவும்  தீபாவைச் சீர்காழிக்கு அழைத்து வரவில்லை. அவனே கடலூரில் மண்டபம் பார்த்து, உறவினர்களைக் கடலூருக்கு வரவழைத்தான்.

ஸ்டாலினும் கூட வந்திருந்தார். ஜெய் கடுமையாகப் பேசினாலும், சமயத்தில் உதவியது அவருடைய நன்றியுணர்ச்சியைத் தூண்டியது. அதிக நெருக்கம் இல்லாமல்… ஒரேடியாக  விலகாமல்… அவர்கள் உறவு தொடர்ந்தது. மஹாலக்ஷ்மிக்கு இன்னும் வருத்தம் இருந்தாலும், சபாபதியின் படிப்புக்கு யாரும் கேட்காமல் ஜெய்சங்கரே முன் வந்து அவன் விரும்பிய மருத்துவப்படிப்பை படிக்க வைப்பதாகச்  சொன்னதும், அவளுக்கு உண்மை புரிந்தது. அது… என்றுமே அவசியத்திற்கு மட்டுமே, அவர்களுடைய உதவி கிடைக்கும் என்பதுதான். அதனால், மனம் விரும்பியே சீமந்தத்திற்கு வந்திருந்தாள். முன்னதாக, சீமந்தத்திற்குச் சீர் செய்வதாக அவள் சொன்னதையும், ஜெய் மறுத்து விட்டான்.

  தீபாவின் டெலிவரியையும் கடலூரிலேயே வைத்துக் கொள்வதாக எடுத்திருந்த முடிவையும் அவளிடம் சொன்னான். அவன் முடிவு உறுதியாக இருந்ததால், மஹாலக்ஷ்மியால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

   இந்த ஆறு மாதங்களில், ஆயாவிற்கு தீபாவின் அருமை புரிந்தது முன்னர் தீபாவிடம் பேசியது போல, இவளிடம் எதையும் பேச முடியவில்லை. தீபாவைப் போல் இல்லாமல் ஜெயா சரிக்குச் சரியாக… பதிலுக்குப் பதில் பேசியதில்,

ஆயாவிற்குப் பயம் வந்து விட்டது. ராஜாவும் மனைவியை அனுசரித்துப் போகச் சொல்லிவிட, அவருக்கு வாயை மூடிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

 தீபா கருவுற்ற பின், அவளது உடல்நிலையைக் கருதி வெளியூர் போவது நின்று விட்டது. ஜெய் அவளை கையில் வைத்துத் தான் தாங்கினான் என்றே சொல்ல வேண்டும்.  வாந்தியால் அவளை முதல் மூன்று மாதங்கள் அவஸ்தைப்பட்ட போது, கூடவே இருந்து அவளது வாய்க்கு பிடித்தமானதை

வாங்கிக் கொடுத்தாலும், சில சமயம் செய்தும் கொடுத்தான்.  தொழிலைப் பார்க்க வேண்டாமா என்று கவலையாகத் தீபா கேட்ட போது,  “நான் சம்பாதிப்பதே நமக்காகத் தானே! உன்னை இங்கே கஷ்டப்பட விட்டுவிட்டு , நான் அங்கே போய் சம்பாதிப்பதால் என்ன  லாபம்” என்று கேட்டு, அவளைச் சமாதனப்படுத்தினான். அவனுடைய தொழில் இப்போது ஓரளவு வளர்ந்து விட்டதால், கணிணியின் உதவியோடு  போன் மூலமாகவே  அவனால் மேற்பார்வை செய்ய முடிந்தது.

   ஏழாவது மாதம் ஆன போது, தீபா எப்போதும் போல ஜெய்யுடன் செக்கப்பிற்குச் சென்றாள். டாக்டர்  பரிசோதனை செய்து பார்த்துவிட்டு குழந்தையின் வளர்ச்சியில் சிக்கல் இருப்பதாகக் கூறி, அவளை மிகவும் ஜாக்கிரதையாக இருக்குமாறு ஆலோசனை கூறினார்.

    பொதுவாக நெருங்கிய சொந்தத்துல கல்யாணம் செஞ்சுகிட்டா, குழந்தை பிறக்கும் போது சில பாதிப்புகளோடு பிறக்கலாம். சில பேருக்கு  மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் கூடப் பிறந்திருக்கு.  நீங்க படிச்சவங்க தானே… இது கூடவா தெரியாது?  என்று கேட்டவர், இப்போது இந்தக் கேள்வியினால் ஆகப் போவது எதுவுமில்லை என்பதை உணர்ந்து கொண்டார்.

    “சரி! டெலிவரி ஆகிற வரை ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க.  இடையில் ஏதாவது ப்ராப்ளம்னா, உடனே வந்துடுங்க!” என்று கூறி அனுப்பினார். அவருடைய பதிலால் தீபாவைவிட அதிகமாகக் கவலைப்பட்டது ஜெய் தான். ஆனாலும், அதை வெளியே காட்டிக் கொண்டால், எங்கே தீபா பயந்து விடுவாளோ என்று எண்ணி, உடனே மறைத்துக் கொண்டான் ஜெய்.

         முன்பை விட இப்போது இன்னும் அதிகக் கவனமாகத் தீபாவை பாரத்துக் கொண்டான். ஆனால், என்னதான் பாரத்துக் கொண்டாலும், இது தீபாவின் உடல் நலக் குறைவினால் மட்டும் இல்லையே!  அவர்கள் சொந்தத்திலேயே திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட மரபணுக்களின் கோளாறு அல்லவா இது? அதனால் இறைவனை வேண்டுவதைத் தவிர, வேறு வழியிருக்கவில்லை.  குழந்தை பிறக்கும் வரை, அந்தக் குழந்தைக்கு என்ன விதமான பாதிப்புகளோ, ஊனமோ ஏற்படலாம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

         அந்த நாளும் வந்தது. பிரசவ வலியெடுக்கும் முன்பே மருத்துவமனைக்கு தீபாவை ஜெய்யே அழைத்துச் சென்றான். முழு விவரமும் தெரியாமல்,  தீபாவைச் சீர்காழிக்கு அழைத்துச் சென்று தானே  பிரசவம் பார்ப்பதாக மஹாலெஷ்மி கேட்டதற்கு, ஜெய் அடியோடு மறுத்து விட்டான்.

         தீபா அவனிடம் அதைப் பற்றிக் கேட்ட போது,   “தீபா!  இந்தக் குழந்தை உண்டான சந்தோஷத்தை , நாம  ரெண்டு பேரும் பங்கு போட்டுக் கொண்டோம்.  இப்ப, இதுல இருக்கற வலியையும், வேதனையையும் உன்னை மட்டும் அனுபவிக்க  விடுவது சரியா?

தன் மனைவி, தன்னோட வாரிசைப் பெற்றுக் கொடுக்க எவ்வளவு கஷ்ட்ப்படறான்னு கண்ணால பார்த்தாத் தான், அந்தத் தாய்மையோட அருமை புரியும்.  தனக்காக இவ்ளோ கஷ்டப்படற மனைவி மேல, இன்னும் காதல் அதிகமாகும்.

         நம்ப ஊர்ல தான், பிரசவம்னா … மனைவியை அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டு, அக்கடான்னு ஒரு கணவனால இருக்க முடியும். அதுவும் குழந்தை பிறந்திருக்குன்னு சொல்லிட்டா…  ஐயா… ஜஸ்ட் ஒரு விஸிட் அடிப்பாரு. அந்தப் பொண்ணு மூணுமாசம் அங்க தூங்காம, சாப்பிடாமக் குழந்தையைக் கஷ்டப்பட்டு வளர்த்துட்டு இருக்கும்.

ஆனா, இவர் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படறார்ன்னு,  அந்தப் பெண்ணை கொண்டாந்து விட்ருவாங்க. முன்ன அந்தக் கால பொண்ணுங்களாம் வேலை பார்க்கலைன்னு, காசைக் கறந்து கொண்டு போய் விடுவாங்க.

         ஆனா இப்ப, பொண்ணுங்கல்லாம் நல்லா படிச்சு… நல்ல வேலைக்கும் போகும்போது,  ஆம்பிளைகளும் மாற வேண்டியது தானே? அப்படியே இருந்தா எப்படி?” என்று  நீண்ட கருத்தைக் கூறி முடித்தான்.

 அது வரை அவன் பேசுவதையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த தீபா, டக்கென்று அவன் கன்னத்தில் முத்தம் ஒன்றைக்  கொடுத்தாள்.

   “மாமா! யூ ஆர் ஸோ ஸ்வீட்! எப்படி மாமா உங்களுக்கு மட்டும் இப்படில்லாம் தோணுது?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் தீபா.

    “தோணினா பத்தாது தீபா. நமக்கு வசதியாயிருக்குன்னு பழைய பழக்கங்களைப் பழகிட்டா, அப்புறம் இந்த கணவன் – மனைவி உறவில் என்ன இருக்குன்னு  நீயே சொல்லு! கஷ்டப்படற நேரத்துல எல்லாம் பொண்டாட்டியைக் கை விட்டுட்டு, தன்னோட சுய நலத்துக்கு மட்டும் ஒரு உறவைப் பயன்படுத்திக்கிட்டா, அது எந்த உறவாயிருந்தாலும் நிலைக்காது தீபா.

 சும்மா வார்த்தையால, நான் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கறேன்னு சொல்றதுனால, எதுவும் பிரயோஜனம் கிடையாது. இதைச் செயல்ல காட்டணும். அப்பத் தானே, ஈரேழு பதினாலு ஜென்ம பந்தம்னு சொல்றாங்களே… அது… இந்த ஜென்மத்திலயாவது நிலைக்கும்?’ என்று

கேட்டபோது, அவலுக்குப் பதிலே சொல்ல முடியவில்லை.  ‘எப்படியெல்லாம் யோசிக்கிறார்? காதல்னு வாயால் சொல்றதுல, என்ன இருக்கு? மாமா சொல்ற மாதிரி, அதைச் செயலில் காட்ட வேண்டாமா? இதெல்லாம் நிறைய யோசிக்க வேண்டிய விஷயம்!’

Advertisement