Advertisement

Chapter 35

மாலையில் ஜெய், தீபா இருவருமே பலத்த யோசனையுடன் வீட்டுக்குள் நுழைந்தனர். இருவரும் வழக்கமாக மாலையில் சந்திக்கும் போது, ஆவலுடன்அன்று காலை முதல் நடந்ததைப் பேசுவதும், அடுத்தவருடைய நாளைப் பற்றிய விசாரணையும் இருக்கும். இடையில் அவர்களுடைய தனிப்பட்ட கொஞ்சல்களும் வரும். ஜெய் தான் பெரும்பாலும் ஏதாவது கலாட்டா செய்வான்.

ஒரு நாள் அவள் அன்று சொன்னதை நினைவில் வைத்து பஞ்சுமிட்டாயை, ப்ளாஸ்டிக் வரில் பாக் செய்து கொண்டு வந்தான். ஒரு நாள் பேமலி பேக் ஐஸ்கிரீம் வாங்கி வந்து, முழுவதையும் அவளே சாப்பிட வேண்டும் என்று வம்படித்தான். ஆனால், கடைசியில் ஒரு டம்ளர் சுடு நீர் கொண்டு வந்து கொடுத்து, வற்புறுத்தி அவளைக் குடிக்க வைத்தான்.

மற்றொரு நாள், ஒரு பார்சல் கலர் தாளில் பாக் செய்து வந்தது. அதன் மேல், ‘என் அழுமூஞ்சி பாப்பாவுக்கு’ என்று எழுதி இருந்தது. என்ன என்று பார்த்தால் அவள் சின்ன வயதில் ஆசைப்பட்ட பாவாடை டிசைன் கொஞ்சம் மாறியிருந்தாலும் கிட்டத்தட்ட அதே கலரில் இருந்தது. எங்கே கண்டு பிடித்தானோ? அவன் செய்யும் குறும்புகளைப் பார்த்து, அவளுக்குத் தினமும் சிரிப்பு பொங்கி வரும்.

   அதோடு விடாமல், அவள் சொல்லி விட்டாள் என்று, தினமும் ஒரு முறையாவது அவளைத் தூக்கி உப்பு மூட்டை விளையாடிவிட்டுத் தான் விடுவான். அவள் வெட்கப்பட்டுத் தடுத்தாலும் விடமாட்டான். ஆனால் இன்று

அந்த மாதிரி கலகலப்பு இன்றி, இருவருமே அவரவர் சிந்தனையில் இருந்தனர்.

    தீபா உள்ளே போய் இருவருக்கும் காபி கலந்து கொண்டு வர, இருவரும்

சோபாவில் அமர்ந்தபடி அதைப் பருகினர்.

                 தீபா தான் முதலில் ஆரம்பித்தாள்.

         “மாமா!அப்பா இன்னிக்கு ஆபிஸுக்கு வந்தாரு. கூட அவரோட பொண்ணையும் கூட்டிட்டு வந்தார். அவருக்கு வேலை போயிடுச்சாம். ஊரைச் சுத்திக் கடன் வாங்கிட்டாராம். அதையெல்லாம் அடைச்சு, மேல வியாபாரம் செய்ய அஞ்சு லட்சம் பணம் வேணுமாம். அவரு பணம் கேட்டது கூடப் பரவாயில்லை. ஆனா, எங்களைக் கஷ்டப்பட்டு வளத்ததுனால, இப்ப அவரு கஷ்டப்படற நேரத்துல கைதூக்கி விடவேண்டியது… எங்க கடமையாம். என்ன கஷ்டப்பட்டாருன்னு தான் தெரியல!”

எப்போதும் போல அவள் எண்ணங்களை ஜெய்யிடம் கொட்டினாள்.

         “எங்களை விட்டுட்டுப் போன பிறகு, ஒரு தடவை கூட நாங்க என்ன ஆனோம்…எப்படி இருக்கோம்னு… எட்டிப் பாக்கல.  ஆயா, தாத்தாவும், நீங்களும் எங்களை ஆதரிக்கலைன்னா, எங்க கதி என்ன ஆயிருக்கும்? நடுத்தெருவுல தானே நின்னிருப்போம்? அதனாலதான், ஆயா என்ன திட்டினாலும் நான் பொறுத்துப் போறேன். அவங்க என்னதான் திட்டினாலும், மூணு வேளை சோறு போட்டு, தங்கறதுக்கு இடமும் தந்தாங்களே!  பெத்ததோட தன் கடமை முடிஞ்சு போனவரு, இப்ப நாம நல்லாயிக்கோம்னு தெரிஞ்சி வந்து, உரிமையைப் பேசறாரு. எனக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா? ஆனா, எடுத்தெறிஞ்சு  பேசிப் பழகாததால,  பேசாம இருந்துட்டேன். நீங்க சொல்லுங்க மாமா. நாம என்ன செய்யலாம்?”

         இருவருக்கும் அன்று ஒரே அனுபவம் தான் போலும். ஒருவன் எந்தப் பின்புலமும்  இல்லாமல் கடினமாக உழைத்து முன்னேற, அதன் பலன்களை

மட்டும் உரிமையாக அடைய, சொந்தங்கள் போட்டி போடுவது ஏன்?

அவரவர்  வாழ்க்கையைச் சரியாக வாழாமல் தவற விட்டுவிட்டு, அதன் பலன்களை அடுத்தவர் தலையில் திணிப்பது என்ன நியாயம்? அதையும் கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் செய்வது இன்னும் மோசம்! ஆக,  ஸ்டாலினும்மஹாலக்ஷ்மியும் அதைத்தான் செய்தார்கள்.

 தீபாவுக்கு என்ன பதில் சொல்வது என்று  யோசித்து விட்டு, பின் தன் வலதுகையால் அவள் தோளை அணைத்துத் தன் பக்கம் திருப்பினான் ஜெய். தீபா அவன் தோளில் மெள்ளச் சாய்ந்து கொண்டாள்.

    “தீபா! அக்காவும் இன்னிக்குக் காலைல என்னைப் பாக்க வந்தாங்க. அவசரமா ஒரு லட்சம் பணம் வேணுமாம். இப்படித் தான் பல செலவுகளைச்

சொல்லி, இரண்டு மாசமா காசு வாங்கிட்டுப் போனாங்க. எதையோ மறைக்கிறாங்கன்னு தோணுச்சு.  நான் என் ப்ரண்ட் ஒருத்தன் கிட்ட போன் பண்ணிக்கேட்டப்போ விவரம் சொன்னான். அக்கா, ஆறுமாசமா ஏலச்சீட்டு நடத்தறாங்களாம். அதுல நல்ல லாபம் வருதுன்னு, யார் கிட்டயும் சொல்லாம பத்து லட்ச ரூபா சீட்டு ஒண்ணு ஆரம்பிச்சி இருக்காங்க. ஒருத்தன் காசை ரெண்டே மாசத்துல எடுத்துட்டு, காணாம போயிட்டான். அவன் கிட்ட எந்த உத்தரவாதமும் வாங்கிக்கல. அவனைப் பத்தி எந்த விவரமும் சொல்லல.

   இப்பவும் அக்கா என்கிட்ட எதையும் சொல்லல. ஆனா அவங்க கஷ்டத்துக்கு உதவறது நம்ம கடமைன்னு நினைக்கிறாங்க. எதுல ஒத்துமையா இருந்தாங்களோ… இல்லையோ, அக்காவும் மாமாவும் இதுல ஒத்துமையாக இருக்காங்க!” என்று சொல்லிவிட்டு, கசப்புடன் சிரித்தான்.

   சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது. பிறகு ஜெய்,

“தீபா! நான் முன்னாடியே சொன்ன மாதிரி அவங்களோட சுமையைநாம சுமக்க ஆரம்பச்சோம்னா, நம்ப வாழ்க்கையை நாம வாழ முடியாது! ஏற்கெனவே நீ அவங்களோட தவறுகளோட பலன்களை நிறைய அனுபவிச்சுட்டே. மீண்டும் மீண்டும், நாம அவங்க ப்ரச்சனைகளைச் சரி

பண்ணப் போனா சரி வராது. நான் இதைப் பார்த்துக்கறேன்.  நீ இனிமே யாராவது உன்னைக் கேட்டா, என்கிட்டச் சொல்லு. நான் பார்த்துக்கறேன்.”

   “என்ன மாமா செய்யப்போறீங்க?”  என்று தீபா கவலையாகக் கேட்டாள். ஜெய் பேச்சை மாற்ற எண்ணி அவள் தலையைச் செல்லமாக ஆட்டி, “ இந்த அழகான மண்டைக்குள்ள, இந்தக் கவலையையெல்லாம் போட்டுக்காதே. இன்னிக்கு மருந்து எல்லாம் ஒழுங்கா சாப்பிட்டியா? கேல்ஷியம், அயன் டாப்லட்ஸ் டெய்லி சாப்பிடணும்-னு டாக்டர் சொல்லியிருக்காங்க.  அஞ்சு மாசம் முடிஞ்சுடுச்சு…நம்ப ஜீனியர் என்ன சொல்றாங்க? என்று குனிந்து கேட்டான்.

         இப்போது தீபாவின் வயிறு லேசாக மேடிட்டிருந்தது. தாய்மையின் பூரிப்புஅவளை மேலும் அழகாகக் காட்டியது. அதற்குப் பிறகு அவர்கள் பேச்சு

அவர்களைப் பற்றியிருந்ததே தவிர, மறந்தும் கூட அடுத்தவரைப் பற்றியில்லை. தீபா மசக்கையால் அவதிப்பட்டபோதும், யாரும் உதவிக்கு வரவில்லை. ஆயா உடம்பு முடியவில்லை என்று கூறிவிட்டார். மஹாலக்ஷ்மியோ, சபாபதிக்குப் பரிட்சை என்று காரணம் கூறி வர மறுத்து விட்டாள். அவளுடைய சுபாவமும் மாறியிருந்தது. சுபாவிற்கு ஓடி ஓடிச் செய்வதும், அவளை அடிக்கடி வீட்டிற்கு அழைத்துக் கவனித்துக் கொள்வதும், அவளுக்கு அவ்வப்போது பொருட்கள்… மளிகையிலிருந்து, பாத்திரம், புடவை, நகை என வாங்கித் தருவது என்று மாறியிருந்தாள். தீபாவை “எப்படி இருக்கிற?” என்று கேட்பதோடு சரி.

  ஜெய் தான் சாந்தாம்மாவை உதவிக்கு வைத்துக் கொண்டுச் சமாளித்தான்.

அம்மா முறைப்படி வந்து பார்த்துக் கொள்ளவில்லையே என்று தீபா வருந்திய போது.

  “தீபா! வெளிநாட்டுல எல்லாம், கல்யாணமாயிட்டா கணவன் மனைவிதான்

அவர்களைப் பார்த்துக்கணும். அம்மா, அப்பா எல்லாம் விருந்தாளி மாதிரி தான் வந்து போவாங்க. வைப் ப்ரெக்னடா இருந்தா, ஹஸ்பெண்ட் தான் வீட்டு வேலை செய்யறது, டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போறது… ஏன்… டெலிவரிக்கு

முன்னாடி, லேபர் பெயின் வந்தா… எப்படி டாக்டருக்கு ஒத்துழைக்கறதுன்னும்

கோச்சிங் க்ளாஸ் கூட, கணவன் கூடத் தான் செய்யணும். மத்ததுக்கெல்லாம் வெஸ்டர்ன் கல்ச்சரை பாலோ பண்றோம். இதுலயும், நாம ஏன் அப்படியிருக்கக் கூடாது? அதோட, இதையெல்லாம் செய்யறது எனக்கு நிறைவா இருக்கு. நம்ம குழந்தைக்காக நீ இவ்வளவு கஷ்டப்படும் போது,

கொஞ்சம் உடல் உழைப்பால நான் தேஞ்சுட மாட்டேன். இன்னும் சொன்னா,

அங்க உன்னை டெலிவரிக்குக் கூட நான் அனுப்பறதாயில்லை. உனக்கு அம்மா கூட இருக்க முடியலையேன்னு ஏக்கமாயிருந்தா வேண்ணா சொல்லு. நான் அக்காவைக் கூப்பிடறேன்!” என்று ஆறுதல் சொன்னான்.

  தீபா நெகிழ்ச்சியுடன் இல்லையென்று தலையை அசைத்தாள். அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “ எனக்கு நீங்க மட்டும் போதும் மாமா!” என்று

சொல்லிவிட்டு, அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

   “அட! இதுக்கே…  பத்துக் குழந்தைகளுக்கு உனக்கு உதவியா இருக்க நான் ரெடி!”என்று ஜெய் உல்லாசமாகக் கூற,  தீபா  “ஆசை தோசை அப்பளம் வடை” என்று கூறிச் சிரித்தாள்.

Advertisement