Advertisement

Chapter 34

ஜெய், கடலூர்ல் இருந்த அவர்களுடைய கடைக்குக் கணக்குப் பார்க்க வந்திருந்தான். அவன் வந்த சிறிது நேரத்தில், மஹாலக்ஷ்மியும் வந்திருந்தாள். வந்தவள், முறைக்காக விசாரிப்பது போல் அவர்களுடைய நலனை விசாரித்தாள். தீபா கர்ப்பமாகயிருப்பது அவளுக்குத் தெரியும். ஆனாலும் ஒரு முறை வந்து பார்த்ததோடு சரி. ஜெய்யும் இப்போது சீர்காழிக்கு தீபாவை அழைத்துச் செல்வதில்லை. அங்கு போனால், அவளுக்கு ஓய்வில்லாத வேலையிருக்குமே! அதனால், டாக்டர் அலையக் கூடாது என்று

சொல்லியிருக்கிறார் என்று கூறிவிட்டு, அவன் மட்டும் போய் வந்து கொண்டிருந்தான்.

         மஹா அவன் அறைக்குள் வந்து அமர்ந்ததும் வேலையாளைக் கூப்பிட்டு குளிர் பானம் கொண்டு வரச் சொன்னான்.

  “சொல்லுக்கா! என்ன விஷயம்?”

அது வந்து…, தம்பி! இந்த மாசமும் கொஞ்சம் செலவு ஜாஸ்தி ஆயிடுச்சு. சுபாவுக்கு அடுத்த வாரத்துல நாள் பாத்து, ஆஸ்பத்திரில வந்து சேந்துக்கச் சொல்லியிருக்காங்க! அதனால, நீ ஒரு லட்சம் கொடுத்தியானா உதவியாயிருக்கும்” என்று சொல்லிவிட்டு, மஹாலக்ஷ்மி அவன் முகத்தையே பார்த்தாள்.  அவள் வந்து ஜெய்யிடம் பணம் கேட்பது இது மூன்றாவது முறை. இரண்டு முறை எந்தச் சந்தேகமும் இல்லாமல் எடுத்துக் கொடுத்தவன், இந்த முறையும் அவள் வந்தவுடன் யோசிக்கத் தொடங்கினான். ‘இதில் ஏதோ விஷயம் இருக்கிறது போலிருக்கிறதே’ என்று தோன்றியது.

   “அக்கா! இப்ப என்கிட்ட அவ்வளவு இல்லை. அடுத்த வாரம் நான் சீர்காழிக்குக் கொண்டு வந்து தரேன்”  என்று பதில் சொன்னான்.

   ஆனால் மஹாலக்ஷ்மியால் அவ்வளவு நாட்கள் காத்திருக்க முடியாதே!

அதனால், அவள் மீண்டும் உடனடித் தேவைக்காக என்று வற்புறுத்திச் சொன்னாள்.

மஹாலக்ஷ்மி தன்னுடைய ப்ரச்சனையைக் கூறி, அவனிடம் உதவி கேட்டிருக்கலாம். ஆனால், அவளுடைய வழக்கமான அவசரம் மற்றும் பிடிவாத குணமும், அவனிடம் சொன்னால் உன்னை யார் இதையெல்லாம்

செய்யச் சொன்னது என்று திட்டுவானோ என்ற பயமும், அவளை உண்மையைக் கூறவிடவில்லை. மேலும் வற்புறுத்த முடியாமல், முடிந்தவரை சீக்கிரமாகத் தரச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

  அக்கா கிளம்பிப் போனதும் போனை எடுத்த ஜெய், சீர்காழியில் இருக்கும் அவனுடைய நண்பனிடம் போனில் பேசி, விஷயம் என்னவென்பதைத் தெரிந்து கொண்டான். அவனால், இப்போது அந்தப் பத்து லட்சத்தைக் கொடுக்க முடியும்தான். ஆனால், திரும்பவும் மஹாலக்ஷ்மி இது போலச் சிக்கலில் மாட்டிக் கொள்ள மாட்டாள் என்று என்ன நிச்சயம்? சிறிது நேரம் யோசித்து விட்டு ஒரு முடிவு எடுத்தான். வேலை முடிந்ததும் அதற்கான ஏற்பாட்டைச் செய்து விட்டுத் தான் கடலூருக்குக் கிளம்பினான். ஆனால் ஒரு ப்ரச்சனையோடு போகுமா என்ன?

****************

   தீபா அலுவலகத்தில் வேலையில் மும்முரமாக இருக்கும் போது, பத்தரை

மணியளவில் யாரோ அவளைப் பார்க்க வந்திருப்பதாக, சாந்தம்மா சொன்னாள். யார் என்று சாந்தம்மாவிற்குத் தெரியாததால், தீபா யாராவது தொழில் விஷயமாக பேச வந்திருப்பார்கள் என்று நினைத்து, உள்ளே அழைத்து வரச் சொன்னாள். வந்தவரை நிச்சயமாக அவள் எதிர்பார்க்கவில்லை என்பதால் அதிர்ந்து போனாள். ஏனென்றால், அவரைப் பார்த்தே கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலே ஆகிவிட்டதே! வந்திருந்தது, சாட்சாத் அவளுடைய அப்பா ஸ்டாலினே தான்!

கூடவே பன்னிரண்டு வயதில் ஒரு சிறுமியும் வந்திருந்தாள்.

   ஒரு நிமிடம் திகைத்துவிட்டு பின் சுதாரித்துக் கொண்டவள், “வாங்கப்பா!

நல்லா இருக்கீங்களா? என்று சாதாரணமாகக் கேட்டாள்.

  ஸ்டாலினுக்கு முன்பிருந்த மிடுக்கு வெகுவாகக் குறைந்திருந்தது. உடல்நிலையும் ரொம்ப ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரியவில்லை. தலையில் ஆங்காங்கே நரை  தெரிந்தது.. அணிந்திடுந்த சட்டை, பேண்ட்கூட லேசாகக் கசங்கியிருந்தது.

‘ஒரு காலத்தில் துணியில் கொஞ்சம் அழுக்கிருந்தாலோ, கசங்கியிருந்தாலோ அதை அம்மாவின் முகத்திலேயே தூக்கி எறிவாரே!’ என்று அவளுக்கு நினைவு வந்தது. ஆள் கூட சற்று இளைப்பாக இருப்பது போலிருந்தது. காலம் எப்படி மாறுகிறது? தீபா எதையும் காட்டிக் கொள்ளாமல் அவர் முகத்தைப் பார்த்தாள்.

    “ஏதோ இருக்கேன்மா! நீ எப்படியிருக்க? உனக்கும் ஜெய் தம்பிக்கும் கல்யாணம் ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன். சுபாவுக்கும் கூட, கல்யாணம்ஆயிருச்சுன்னு சொன்னாங்க. சபாபதி எப்படிம்மா இருக்கான்? நீங்க தான் எதுக்கும் என்னைக் கூப்பிடாம, ஒதுக்கி வச்சுட்டீங்க. உங்க அம்மா எப்படி இருக்கிறா?

சில பேருக்கு இப்படிச் சாதுரியமாகப் பேசவரும். இவர்களையெல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு புது உறவைத் தேடிச் சென்றவர் தானே அவர்? இத்தனை நாட்களாக இவர்கள் என்னவானார்கள் என்று கூடக் கவலைப்பட்டதில்லை. பெண்டாட்டியைத் தான் பிடிக்கவில்லை. ஆனால்… பிள்ளைகள்? அவருடைய இரத்தம்தானே! அவர்கள் படித்தார்களா? எப்படி எங்கே வாழ்கிறார்கள் என்று யோசிக்காதவர், இன்று திடீரென்று வந்து உட்கார்ந்து கொண்டு என்னை ஒதுக்கிவிட்டீர்களே என்று பேசுவது, சாதுர்யம்

இல்லாமல் வேறு என்ன?

அம்மாவைக் கூட, பேர் சொல்லாமல்…  ‘உங்கம்மா’ என்று தானே சொல்கிறார்? ஒரு வேளை சித்தி… அதுதான் அவரது இரண்டாவது மனைவி, அப்படி அவரைக் கண்ட்ரோலில் வைத்திருக்கிறாளோ என்னவோ?

இப்போது கூட  தனியாக வராமல், ஒரு சிறுமியுடன் தானே வந்திருக்கிறார்!

பொதுவாகப் பிறர் பேசும் பேச்சில் உள்ளர்த்தம் கண்டுபிடிக்கத் தெரியாத தீபாவிற்குக் கூட, அவர் பேச்சு எரிச்சலை ஏற்படுத்தியது.  ஆனாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், “பரவாயில்லப்பா! எல்லோரும் எப்படியோ மேல வந்து நல்லா இருக்கோம். சபாபதி பன்னிரண்டாவது படிக்கிறான். அம்மா சீர்காழில ஜெராக்ஸ் கடை   வெச்சு நடத்திட்டு இருக்காங்க. சுபாவும் அங்கதான் இருக்கிறா.” என்றாள்.

         எல்லாம் தெரிந்து கொண்டு வந்தவரிடமே,  விவரங்களைச் சொன்னாள்.

“நீங்க எங்கே இருக்கீங்க! சித்தி எப்படியிருக்காங்க? பசங்க இருக்காக்களா?

   அவள் கேட்பாளா என்று காத்திருந்து போல், ஸ்டாலின் பேச ஆரம்பித்தார்.

பின்னே! அவர் வந்ததும்  அதற்குத்தானே?

    “நான் கொள்ளிடத்துல இருக்கேம்மா. சித்திக்கு, இப்ப அவ்வளவா உடம்பு

சரியில்ல. ஒரே பொண்ணு… இதோ இவதான். பேரு சித்ரா. எட்டாவது படிக்கிறா. நான் பார்த்துட்டு இருந்த வேலை போயிடுச்சும்மா. இப்பக் கொஞ்சம் கஷ்ட நிலைமைதான்.  உன் கிட்ட சொல்றதுக்கென்ன? சாப்பாட்டுக்கும், இவளுடைய படிப்புக்குமே சிரமப்படறோம். நான் கூடத் தயங்கினேன். உங்க சித்தி தான் வற்புறுத்தி பொண்ணோட போங்கன்னு சொல்லிட்டா என்ன?

நீங்களும், அந்தக் காலத்துல எவ்வளவு கஷ்டப்பட்டு அவங்களை வளத்திருப்பீங்க. உங்களுக்கு கேக்க உரிமையில்லையா என்னன்னு சொன்னா. நான் கூடச் சொன்னேன்…  பிள்ளைகளைக் கஷ்டப்பட்டு வளக்கறது பெத்தவங்க கடமை. அதுக்காக, பிள்ளைங்ககிட்ட கைம்மாறு கேக்கறதான்னு?அவதான், கஷ்டப்படற பெத்தவங்களைக் கைதூக்கி விடறது பிள்ளைகளோட கடமைதான்னு சொல்லி, என்னை இங்க அனுப்பி வெச்சா. இத்தனை நாளா வேலையில்லாம இருந்ததுல, ஊரைச் சுத்தி கடனாப் போச்சு. பெத்த பொண்ணு இருக்கும் போது,  சொந்தக்காரங்க கிட்ட கேட்டா தப்பில்லை? அதான், கடனை அடைக்க  ஒரு இரண்டு லட்சமும், மேற்கொண்டு ஒரு மூணு லட்சமும் குடுத்தா, நாம இங்க கொள்ளிடத்துல ஒரு மளிகைக் கடை வெச்சுப் பொழச்சுக்கலாம்னு சொன்னா. நான் கேட்டா, நீயோ… இல்ல…  ஜெய்தம்பியோ. இல்லன்னா சொல்லிடப் போறீங்க?  அதான் கிளம்பி வந்தேன்.”

          ஒரு நிமிடம் தீபாவுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. கோபம் வேறு உச்சந்தலைக்கு  ஏறியது, மற்ற கஷ்டங்கள் கூட அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. பெற்ற பெண்ணைப் படிக்க வைக்க வேண்டிய பொறுப்பை இவர் தட்டிக் கழித்ததினால் தானே, அம்மா கூட அவளுடைய படிப்பை நிறுத்தி. ஒரு ப்யூனுக்கோ, பெயிண்டருக்கோ கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தாள்?

              அம்மாவவது, வேறு வழியில்லாமல் சுமையைக் குறைக்க எண்ணி அப்படிச் செய்ய நினைத்திருக்கலாம். ஆனால், அதற்குக் காரணமே இவரல்லவா?  அப்படிப்பட்டவர், இன்று என்னவோ அவர் தான் அவளைப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டு வந்தது போலப் பேசியது, அவளது கசப்பை அதிகமாக்கியது.  அவருடைய கடமையையும் செய்தது மாமா தானே? அம்மாவாக அரவணைத்து, அப்பாவாக அவளுக்கு நல்ல வழியைக் காட்டி, கணவனாக இன்று அன்பைப் பொழியும் அவருடைய அருமை, அவளுக்கு இன்னுமொரு முறை புரிந்தது.

சற்று யோசித்து விட்டு, “அப்பா! நானாக மாமாவைக் கேட்காமல் எதுவும் சொல்ல முடியாது. அதனால், அவர்கிட்டப் பேசிட்டுச் சொல்றேன்!” என்றவள், அதற்குமேல் அவரிடம் பேசாமல், சித்ராவிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.

         பெரியவர்களுடைய தவறில் குழந்தையை ஏன் ஒதுக்க வேண்டும் என்பதே அவள் எண்ணம். ஆளனுப்பி கடையில் ஒரு பை நிறையத் தின்பண்டங்களை வாங்கி வரச் சொல்லி, அதை அவள் கையில் கொடுத்தாள்.

    அதற்குமேல் அவளிடம் கேட்க ஒன்றுமில்லை என்பதால், ஸ்டாலினும்

சிறிது நேரத்தில் கிளம்பி விட்டார். தீபாவிற்கும் அதன் பிறகு அவரைப் பற்றி

சிந்திக்கப் பிடிக்காமல் போகவே, வேலையில் கவனம் செலுத்தினாள்.

Advertisement