Advertisement

Chapter 32

தீபாவிற்கு அன்று காலையில் எழுந்திருக்கும் போதே தலை சுற்றியது.

எழுந்தவள் தலை சுற்றியதும் பயந்து போய், மீண்டும் படுத்துக் கொண்டாள். காலையிலேயே  எழுந்து உடற்பயிற்சியாக நடந்து விட்டு, ஜெய் உள்ளே காபிக்காக பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்தான். பொதுவாக தீபாவையும் வற்புறுத்தி அழைத்துச் செல்பவன், அன்று தீபா அயர்ந்து தூங்கியதால் அவளை விட்டுவிட்டு, தான் மட்டும் போய் வந்திருந்தான்.

ஏழு மணியாகியும் தீபா எழுந்து வராததால், என்ன காரணம் என்று பார்ப்பதற்காகப் படுக்கையறைக்குள் எட்டிப் பார்த்தான்.

 தீபா படுக்கையில் படுத்தபடியே திருதிருவென்று முழிப்பதைப் பார்த்துவிட்டு, “என்னாச்சு தீபா! என்ன யோசனை? எழுந்திருக்க மனசு வரலியா?” என்று சிரித்தபடியே கேட்டான் ஜெய்.

         “மாமா! படுத்தா எதுவும் தெரியல. எழுந்தா, ஒரே தலை சுற்றலாயிருக்கு மாமா! ஏன்னு தெரியல!”

    “நேத்து நைட் பத்து மணிக்கு, சோலா பூரி வேணும்னு அடம்பிடிச்சுச் சாப்பிட்டே! அதுல ஒரே எண்ணெய். அதனால பித்தமாயிருக்கும். எழுந்திரு! எலுமிச்சை, இஞ்சிச் சாறு தரேன். குடிச்சா சரியாயிடும்.”

         உடம்பிற்கு முடியாவிட்டாலும், அவன் கூறியதால் மெள்ள எழுந்து பாத்ரூமிற்குள் போனாள். பேஸ்டை ப்ரஷ்ஷில் வைத்து வாயில் வைத்ததுமே பயங்கரமாகக் குமட்டியது.  ‘பித்தம் ரொம்ப ஏறிடுச்சு போலருக்கு!’ என்று நினைத்துக் கொண்டு ஒரு வழியாகச் சமாளித்து பல் தேய்த்து முகம் கழுவினாள். கொஞ்சம் பரவாயில்லை போல இருந்தது.

மாமா! இப்பப் பரவாயில்லை. எனக்கு ஜிஞ்சர் லெமன் வேண்டாம். காபி வாசனை சூப்பராயிடுக்கு. அதையே குடிக்கிறேன்” என்று கெஞ்சினாள் தீபா.

         பொதுவாக இருவரும் வாக்கிங் போய்விட்டு வரும்போது பாலையும், அன்றைய சமையலுக்குத் தேவையான காய்கறிகளும் வாங்கி வருவார்கள். ஒருவர் பால் காய்ச்ச, அடுத்தவர் காய் நறுக்க என்று வேலைகளை இருவரும் பகிர்ந்து கொள்வார்கள்.

தீபா தானே செய்வதாகச் சொன்னாலும், ஜெய் ஒத்துக்கொள்ள மாட்டான்.

  “இதோ பார்! நீ சீர்காழியில செஞ்சேன்னா, அங்க அக்காவோட ஹெல்ப் இருந்தது. அதோட, அம்மாவும், அப்பாவும் அந்தக் காலத்து ஆளுங்க. அவங்க இதை ஒத்துக்க மாட்டாங்க. இல்லேன்னாலும் செஞ்சிருப்பேன். அப்ப நமக்குள்ள, இந்த அண்டர்ஸ்டாண்டிங் இல்லையே.    ஆனா, இப்ப நாம ரெண்டு பேரும் நாள் பூரா வேலை பார்க்கறோம். வீட்டு வேலையையும் ஷேர் பண்ணிகிட்டாதான் வேலையும் சீக்கிரமா முடியும். அதோட, நாம சேர்ந்திருக்கற நேரமே கொஞ்சம் தான். அப்பயும் நான் ஹால்லயும், நீ கிச்சன்லயும் இருந்தா எப்படி?

நாம பேசிக்கவே இதுதானே நேரம்? அதோட, அப்பத் தானே நம்ம நெருக்கமும் ஜாஸ்தியாகும்” என்று சொல்லிவிட்டுக் கண் சிமிட்டினான்.

         திருமணத்திற்குப் பிறகு சீர்காழிக்குப் போகும் போதும், தீபா தனியாக

வேலை செய்யும் போது தானும் உதவி செய்வதாக வம்படிப்பான். ஆனால் தீபா ஆயாவின் பேச்சுக்குப் பயந்து திட்டவட்டமாக மறுத்து விடுவாள். இப்போதும் அது போல காபி குடித்தால் தெம்பாக இருக்கும். எழுந்து மீதி வேலைகளைத் தானும் கவனிக்கலாம் என்று நினைத்தாள். வீட்டு வேலைக்கு

சாந்தாம்மா என்ற வயதான பெண்மணியை ஏற்பாடு செய்திருந்தனர். சாந்தாம்மாவை வேலைக்கு வைத்ததும் ஜெய்தான்.

    ஆயா பால் காய்ச்ச வந்தபோது தன்னுடைய கருத்தை முக்கியமாக சொல்லிவிட்டுப் போயிருந்தார், அதுவும் ஜெய்யிடம்.  தீபாவிடம் சம்மதமா,

சரிவருமா என்று கூடக் கேட்கவில்லை.

     “தம்பி! இருக்கறது நீங்க ரெண்டு பேருதான். அதனால, வீட்டு  வேலைக்கு ஆளெல்லாம் தேவையில்ல;  எல்லாம் தீபாவே செஞ்சுக்கலாம்.

அந்தக் காலத்துல, நானெல்லாம் பத்து பேர் இருந்த குடும்பத்துல… ஒண்டியா

எல்லா வேலையும் செஞ்சிருக்கேன் தெரியுமா?  இந்த  வேலையெல்லாம்

ஒரு கணக்கா?”

     தீபா பதிலே பேசவில்லை. ஜெய்யும் மறுத்துப் பேசவில்லை. ஆனால், அவர்கள் இரண்டு நாட்களில் கிளம்பியவுடன், சாந்தாம்மாவை வீட்டு வேலைக்குக் கூட்டி வந்தான்.  தீபா ஆயாவின் பேச்சினால், தானே எல்லா

வேலைகளையும் செய்வதாகச் சொன்னாள். ஜெய் அவள் கூறியதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சாந்தாம்மாவிற்குச்  சொந்தம் என்று

யாரும் கிடையாது. அதனால், இவர்கள்  வீட்டில் வேலை செய்து கொண்டு,

இரவில் அலுவலகத்திலேயே  படுத்துக் கொள்வார். அதனால், ஒரு துணையாகவும் இருந்தது.

     ஜெய் காபியைக் கையில் கொடுத்ததும், ஆசையாக அதை முகர்ந்து

பார்த்துவிட்டு ஒரு வாய் காபியைக் குடித்தவளுக்குக் குமட்டிக் கொண்டு வர,

வாயைப் பொத்திக்கொண்டு பாத்ரூமுக்கு ஓடினாள். அவள் பின்னாலேயே பதறியபடி வந்த ஜெய், அவள் முதுகை ஆதரவாகத் தடவி விட்டு, தண்ணீர் எடுத்துக் கொடுத்தான்.

     “பாரு! அதுக்குத் தான்  அப்பவே இஞ்சிச் சாறு குடிக்கச் சொன்னேன். வா! அதைக் குடி. மதியம் ரசம் சாதம் சாப்பிட்டால் எல்லாம் சரியாகிவிடும்” என்று அவளை ஆதரவாகப் பற்றி அழைத்துச் சென்றான்.

         தீபா வந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்த சாந்தம்மா, ஜெய் சொன்னதையும் காதில் வாங்கியவுடன், அனுபவத்தினால் அவளுடைய உடம்புக்கு என்ன என்பதைச் சட்டென்று புரிந்து கொண்டார்.

   “தம்பி! பாப்பாவுக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்ல. எல்லாம் நல்ல சேதி தான்!”

     ஜெய்யும், தீபாவும் எத்தனைத் தமிழ் படங்கள் பார்த்திருப்பார்கள். அதனால், சாந்தம்மா சொன்னதும் இருவருக்குமே உடனே புரிந்து விட்டது.

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, ஜெய்யின் கண்கள் கேள்வி கேட்க, தீபாவின் கண்கள் ஆமோதித்தன. பேசாமலே அவர்கள் உணர்வுகளைப்

பரிமாறிக் கொண்டனர்.

    ஜெய் மட்டும் திரும்பி, “தாங்க்ஸ் சாந்தம்மா!” என்று கூறிவிட்டு, தீபாவை உள்ளே அழைத்துச் சென்றான்.

   “தீபா! இப்ப என்ன செய்யுது? டாக்டர் கிட்டப் போகலாமா? வரியா?’ என்று

கேட்டான்.

   அதற்குள் அவள் மனதிற்குள் கணக்கு போட்டு முடிவு செய்து கொண்டு,  “சாந்தம்மா சொல்றது கரெக்ட் தான் மாமா! நம்ப வீட்டுக்கு மூணாவது ஆள்

வரப்போறாங்க!” என்று கூறினாள்.

ஜெய் தெரியும் என்பது போல் தலையை ஆட்டி அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். சற்று நேரம் இருவரும் அமைதியாக அந்தச் சந்தோஷத்தை அனுபவித்தனர்.

பின்னர் அவளை மெள்ள, “தீபா!” என்று அழைத்தான்.

மெல்ல, “ ம்ம்” என்றாள் அவள்.

    “எதுக்கும், நாம டாக்டர் கிட்ட செக்கப் பண்ணி கன்பர்ம் பண்ணிக்கலாமா?”

அப்படியே, இன்னிக்கு நாம ரெண்டு பேருமே,  நம்பளோட ரொட்டீன் வேலைக்கு லீவு விட்டுறுவோம். நம்ப வீட்டுக்கு வரப்போற புது வரவைக் கொண்டாடுவோமே!என்ன சொல்ற தீபா?” என்றான் வாஞ்சையுடன்.

  தீபா ஒகே சொல்ல, இருவரும் அவரவர் தொழில்களில் அன்று செய்ய வேண்டிய வேலைகளுக்கான தகவல்களைத் தெரிவித்து விட்டு, குளித்து விட்டு நிதானமாகக் கிளம்பினர். வெளியே சாப்பிடலாம் என்று முடிவு செய்து விட்டதால், வீட்டில் எதுவும் சமைக்கவில்லை. தீபாவிற்கு இப்போது கொஞ்சம் உடல்நிலை தேவலாம் போல இருந்தது.

மனது உற்சாகமாக இருக்கும் போது, உடல்நிலை சுமாராக இருந்தாலும், அது மறந்து போய் விடும் அல்லவா?   டாக்டர் அவர்களின் சந்தோசத்தை உறுதி செய்தார். சந்தோஷமாக அங்கிருந்து வெளியே வந்தனர். தீபா கோயிலுக்குப் போக வேண்டும் என்று விரும்ப, இருவருமாக திருப்பாப்புலியூர் சிவன் கோயிலுக்குச் சென்றனர். தங்கள் வாழ்வில், கடவுள் மேலும் மேலும் தரும் வரங்களுக்கு, தீபா மனமார நன்றிகூறினாள். அதன்பிறகு இருவருமாக நல்ல ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, வெயில் அதிகமாக இருந்ததால் வீட்டுக்கே திரும்பி விட்டனர்.

Advertisement