Advertisement

Chapter 31

     கடலூரில் முன்னரே முடிவு செய்தபடி அவர்கள் குடியிருந்த வீட்டின் கீழே தீபாவுக்கு அலுவலகம் அமைத்துக் கொடுத்தான். முன்பு தீபா படிக்கும் போதே பலருக்கு ப்ராஜெக்ட் செய்து நல்ல பெயர் எடுத்திருந்ததால், இப்போது அவளுக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தன. அவள் எற்கனவே செய்திருந்த ப்ராஜெக்ட்களைக் காட்டியதால், டி.சி. எஸ். போன்ற பெரிய நிறுவனங்களில் இருந்தும் பல ஆர்டர்கள் கிடைத்தன.

அவள் தனியாக அனைத்தையும் கவனிக்க முடியாது என்பதால், சத்யா என்ற பி.டெக். படித்த பெண்ணை வேலைக்குச் சேர்த்தனர். இப்போது நாளாக ஆக ப்ராஜெக்ட்களின் எண்ணிக்கை பெருகவே, மேலும் இரண்டு பேரைப் பணியில் சேர்த்தனர்.

நாட்கள் பறந்தன. இந்தச் சில மாதங்களிலேயே தீபாவின் நிர்வாகத் திறமையைப் பற்றியும் ஜெய் புரிந்து கொண்டான். தீபா படிப்பில் கெட்டி என்பது அவனுக்கு ஏற்கனவே தெரியும். இப்போது அவளுடைய திறமைகளைப் பார்த்தபோது, எப்படிப்பட்ட ஒரு பெண்ணை… அடக்கம், குடும்பம் என்று கூறி வீட்டில் அடைக்க நினைத்தார்களே என்று தோன்றியது.

         ஜெய்யும், தீபாவும் மாதத்தில் ஒரு முறையாவது சீர்காழிக்குச் சென்று வந்தனர். என்றுமே சுமுகமான உறவு இல்லையென்றாலும், இப்போது அவர்களின் தனிக் குடித்தனத்தினால் அது மேலும் விரிசல் விட்டிருந்தது… அவர்களுடைய நடவடிக்கைகளில் தெரிந்தது.

         முதலில் இவர்கள் இருவரும் வரும்போதே அவருக்கு உடம்பு முடியாமல் போய்விடும் (!). அடுத்ததாக, இவர்கள் இருவரையும் பார்க்கவென்று அழைப்பதாக அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்களை…குறைந்தது இருபது பேரையாவது மதிய உணவுக்கு அழைத்து விடுவார். அதற்கான சமையல் வேலை முழுவதும் தீபாவின் தலையில் விழுந்துவிடும். வீட்டு வேலை செய்பவளுக்கும், முன்னரே விடுமுறை கொடுத்து அனுப்பி விடுவார். அதனால், வீட்டு வேலைகளும் தீபாவின் பொறுப்புதான். இது போதாதென்று, “ நாங்க ரொம்ப வயசானவங்க. எங்களால வீட்டை ஒட்டடை அடிக்கறது, பெட்ஷீட் துவைக்கறது எல்லாம் செய்ய முடியாது. வேலைக்காரியும் சுத்தமாகச் செய்வதில்லை. அதனால், நீயே கொஞ்சம் செய்து கொடுத்துடும்மா! என்று கூடுதல் வேலைகளும் அவளுக்கு வழங்கப்படும்.  கோபமாகப் பேசுவதில்லை… நேரடியாகச் சண்டை போடுவதில்லை.

ஆனால், அமைதியான செய்கையாலும் கூடப் பழி வாங்க முடியும் என்பதை ஆயா நிருபித்தாள். அதோடு, வீட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள், முடிவுகளைத்தன் பிள்ளையிடம் மட்டுமேசொன்னால் போதும்! மருமகளாகஇருந்தாலும்

உன்னிடம், இதையெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை என்பது போல் இருந்தது அவருடைய நடவடிக்கைகள்.

மொத்தத்தில், நீ என்னுடைய மருமகள் ஆனாலும்,என்னைப் பொறுத்தவரை… நீ ஒரு வேலைக்காரிதான்!’ என்று சொல்லாமல் சொன்னது அவர் நடத்தை.

         அவர்கள் வருவது இரண்டு நாட்களுக்காக மட்டுமே என்பதால், மஹாலக்ஷ்மியே இங்கே வந்துவிடுவாள். அவருடைய நடத்தையிலும் இப்போது மாற்றம் தெரிந்தது.

முன்னர் இருந்தது போல் மற்றவரைச் சார்ந்து இல்லாமல், இப்போது தானே சம்பாதித்துக் குடும்பம் நடத்துவதால் ஒரு நிமிர்வு தெரிந்தது. முன்பு போல மகளுக்கு வேலைகளில் உதவினாலும், ஒரேடியாக வேலை செய்வதில்லை.

ஓரளவு வேலைகளைச் செய்துவிட்டு ஒதுங்கிக் கொண்டாள். அதேபோல, சுபாவும் முரளியும் வந்தால், சுபாவே, “ஏதாவது வேலை செய்யட்டுமா அக்கா?” என்று கேட்டால் கூட,  “வேண்டாம்மா! நீ போய் ரெஸ்ட் எடு. மாமாகிட்ட பேசிட்டு இரு!” என்று மஹாலக்ஷ்மியே அனுப்பிவிடுவாள்.

    அனுப்புவதோடு நில்லாது… தீபாவிடம், “அது வேற இடத்துல வாழப்போன பொண்ணு. அதை நம்ம வீட்டுல வேலை சொன்னா நல்லாயிருக்காது. பாவம்! இங்கேயாவது ஃப்ரீயா இருந்துட்டுப் போகட்டும்!” என்று சமாதானமும் சொல்வாள்.

         தீபா எப்போதுமே தவறாக நினைத்தோ, எதிர்த்துப் பேசியோ பழகாததால்,  “சரிம்மா!” என்று தலையாட்டி விடுவாள். சாப்பாட்டில் அனைவரும் அவரவர் விருப்பத்தைச் சொல்லி அதைச் செய்து தருமாறு கேட்டாலும், சந்தோஷமாகத் தலையை ஆட்டிவிடுவாள்.

ஜெய்க்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருக்கும். தீபா ஓயாமல் வேலை செய்து சோர்ந்து போவதைப் பார்த்து, கோபமாக ஏதேனும் சொல்ல வாயெடுத்தாலும், தீபா அதைத் தடுத்து விடுவாள்.  ஏற்கனவே குடும்பத்தைப் பிரிந்த குற்ற உணர்வு இருந்தது அவளுக்கு. அதோடு, அவன் எதையாவது கேட்கப் போக, தீபா தான் காரணம் என்று மீண்டும் ஒரு குற்றச்சாட்டு வேண்டாம் என்று தடுத்து விடுவாள்.

   இரவில் வெகு நேரம் கழித்து வந்து சோர்வாலும், உடல் வலியாலும் அவளால் தூங்க முடியாமல் தவிக்கும் போது… அவள் தடுத்தாலும், அவள்

கை கால்களை ஜெய் அமுக்கி விடுவான். அவன் அவ்வாறு வெகு நேரம் செய்த பிறகு, வலி குறைந்த பிறகு தான், தீபாவிற்கு உறக்கம் வரும். அதுவும்

அடுத்த நாள் திரும்பவும் அதிகாலையிலேயே எழுந்து வேலைகளைத் தொடர

வேண்டும் என்பதால், கொஞ்ச நேரம்தான் தூங்க முடியும்.

   சில சமயங்களில் ஆயாவும், மஹாலக்ஷ்மியும் அதற்கும் வேட்டு வைத்து

விடுவார்கள்.  சுபாவையும் முரளியையும் வற்புறுத்தி மஹாலக்ஷ்மி தங்கச்

சொல்லுவாள். இரண்டு அறைகளே இருப்பதால், எங்கு படுப்பது என்பது

கேள்விக் குறியாகி விடும்.  ஆயாவோ, தன் அறையை விட்டு வேறு இடத்தில் தூங்கினால், தனக்குத் தூக்கம் வராது என்று மறுத்து விடுவாள். அதனால், வேறு வழியில்லாமல் ஜெய்யும், தீபாவும் கூடத்தில் படுக்கச் சொல்லி விடுவார்கள்.

முரளி வெளி மாப்பிள்ளை. அதோடு சுபா கர்ப்பமாக இருப்பதால், கூடத்தில் தரையில் படுக்க முடியாது என்ற விளக்கமும் சொல்லப்படும். மொத்தத்தில், மேலோட்டமாக எல்லோரும் சுமுகமாக இருப்பதுபோல் தோன்றினாலும், அவரவர் உள்ளத்தில் ஆயிரம் எண்ணங்கள் இருந்தன.

    மஹாலக்ஷ்மி கடை நடத்தியதோடு சும்மா இருந்திருக்கலாம். ஆனால்,

ஆசை யாரை விட்டது? தெரிந்தவர்கள் சொன்னார்கள் என்று சீட்டுப் பிடிக்கும்

வேலையை ஆரம்பித்தாள். முதலில் சிறிய தொகைக்கான சீட்டுகளை நடத்தும்போது நல்ல லாபம் கிடைத்தது. எல்லோரும் சரியாக மாதத் தவணைகளைக் கட்டியதால் நன்றாகவே போனது. இதையே பெரிய அளவில் நடத்தினால் என்ன என்று பத்து லட்சரூபாய் ஏலச்சீட்டை ஆரம்பித்தாள்.  இருபது பேர் சேர்ந்து மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் கட்டவேண்டும். முதல் இரண்டு மாதங்கள் நன்றாகத் தான் நடந்தது. மூன்றாவது மாதம் ஏலச்சீட்டை எடுத்த ஆளை, அதன் பிறகு காணவில்லை.  அவன் யார், அவனுடைய பின்புலம் என்ன என்று எதையும் விசாரிக்காமல் சேர்த்ததால் வந்த வினை. இப்போது மீதி பதினேழு மாதங்களும் அந்த மோசடிப் பேர்வழியின் தவணையைக் கட்டவேண்டுமே. இல்லையேன்றால், மஹாலக்ஷ்மியை மீதி உள்ளவர்கள் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்களே!

    ஏற்கனவே வந்த ஓரளவு லாபத்தையும் சேர்த்து வைக்காமல், சுபாவின்

சீமந்தத்திற்காக தாம் தூம் என்று செலவு செய்தாகி விட்டது. இப்போது என்ன

செய்வது? இருக்கும் ஒரே வழி, தம்பி ஜெய்யைக் கேட்பதுதான். அவனும் இப்போது நிறையச் சம்பாதிக்கிறான். போதாதற்கு, தீபாவும் ஏராளமாகச் சம்பாதிக்கிறாள். நமக்குத் தேவையென்றால் செய்ய வேண்டியது அவர்களுடைய கடமைதானே! என்று முடிவு செய்து கொண்டாள்.

Advertisement