Advertisement

Chapter 29

 

ஊருக்கு வந்தவுடன் முழுவதுமாக ஒரு வாரம் ஓய்வெடுத்துக் கொண்டார்கள்.  வீட்டில் இருந்த அனைவருக்கும் வாங்கி வந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்தார்கள். பெரியவர்களுக்கு குளிர்காலத்தில் போர்த்திக் கொள்ள ஷால்கள், சபாவுக்கு ஐ- பாட், சுபாவுக்கும் அண்ணிக்கும் ஒரே மாதிரியான ஃபர்ப்யூம், ஹேண்ட்பேக். முரளிக்கும், ராஜாவிற்கும் வாட்சுகள் என்று எல்லோருக்கும் திருப்தியாக இருந்தது.

   தான் எடுத்த முடிவைத் தெளிவாகக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சொல்ல நினைத்த ஜெய், அந்த வார இறுதியில், மாலையில் அனைவரும் ஓய்வாக அமர்ந்திருக்கும் நேரத்தில் அதை ஆரம்பித்தான்.

         “அம்மா! அப்பா! நான் கடலூருக்குக் குடித்தனம் போகலாம்னு இருக்கேன். இப்ப, அங்க ஒரு தொழற்சாலை கட்டிட்டி இருக்கறதுனால, என்னால டெய்லி சீர்காழிக்கு வந்துட்டுப் போக முடியாது. இராத்திரி வேலை முடியவே பத்து, பதினொண்ணு ஆகும். அதுக்கு மேல சீர்காழி வந்துட்டு, திரும்பக் காலைல கிளம்பிப் போறது டயர்டாயிருக்கும்.

 அதோட, தீபாவுக்குப் படிப்பு முடிஞ்சிடுச்சு. இனி வேலைக்குப்  போறதுன்னா,ஒரு பெரிய ஊராயிருந்தா தான் வசதி. அதனால், அடுத்த வாரத்துல ஒரு நாள் ஷிப்ட் பண்ணலாம்னு இருக்கோம்ப்பா.”

         எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், போகட்டுமா… என்ற அனுமதியாகவும் இல்லாமல், ஒரு தகவலாக  மட்டுமே இதை ஜெய் கூறியதும், அங்கே அமைதி நிலவியது.

         தாத்தாவும், ஆயாவும் சோபாவில் அமர்ந்திருக்க, ஜெய் எதிரில் இருந்த

நாற்காலியில் அமர்ந்திருந்தான். மஹாலஷ்மி தூணில் சாய்ந்தபடி தரையில்

அமர்ந்திருக்க, தீபா சற்றுத் தள்ளி  பயத்துடன் நின்றிருந்தாள்.  அவள் பயந்தபடியே, மகன் சொன்னதைக் கேட்டதும், ஆயாவின் பார்வை தீபாவின்

பக்கம் திரும்பியது. அவர் பார்வையிலேயே அனல் வீசியது.  தீபா பயத்துடன்

பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.

“பார்க்கப் பூனையாட்டம் ஒருந்துகிட்டு… இது செய்யற வேலையைப் பாரு! ஒரு வாரம் புருஷனோட ஊருக்குப் போனா… ஆனா, வந்தவுடனே… இத்தனை நாள் என் மேல பாசமாயிருந்த என் புள்ள, தனிக்குடித்தனம் போறேன்றான்.ஓடிப்போனதுக குடும்பத்துலருந்து வந்தா, புத்தியிலே நல்ல விதமா சேந்து வாழ்வோம்னு தோணுமா? இப்படித்தான்  தோணும்!”  அவள் வார்த்தைகள் நெருப்புத் துண்டங்களை வாரி இறைத்தன.

    ஆயாவின் கொடூரச் சொற்களால் தீபாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. தலையைக் குனிந்தபடி பேசாமல் நின்றாள். அம்மாவின் அபாண்டமான வார்த்தைகளுக்கு அப்பாவின் பதில் என்னவென்று ஜெய் அவரைப் பார்க்க, அவரோ மனைவியைப் பார்த்து விட்டுத் தலையைக் குனிந்து கொண்டார். எப்போதுமே மனைவியின் பேச்சைத் தட்டாதவர், இப்போது மட்டும் எதிர்த்தா பேசப் போகிறார்?

மஹா வழக்கம் போல மகளைக் கண்டிக்கும் தொனியுடன்.   “தீபா! என்ன இதெல்லாம்? நீ தான் இதுக்குக் காரணமா? கட்டிக் கொடுத்தா, பொண்ணுங்க புகுந்த வீட்டுல கட்டுப்பட்டுத்தான் இருக்கணும். நீ ஒரு வேலையும் பார்த்துக் கிழிக்க வேணாம். பழையபடி நீ இங்கேயே வீட்டு வேலைகளைக் கவனிச்சுக்கிட்டு இரு. தம்பி மட்டும் போய் வரட்டும்.” மஹாலக்ஷ்மிக்கு பழசெல்லாம் மறந்து போய்விட்டது. என்ன செய்வது?

         அதுவரை எல்லோருடைய ரியாக்‌ஷனையும் கவனித்துக் கொண்டிருந்தான் ஜெய்.

  “அம்மா! நான் சொன்னது உனக்குப் புரியலியா? என்னால தினமும் சீர்காழிக்கு வந்து போக முடியாது” என்று அழுத்தமாகக் கூறினான்.

 “சரிடா! வர முடியலைன்னா, வாராவாரம் சனி, ஞாயிறு வந்துட்டுப் போ. மத்த நாள்ள அங்கேயே தங்கிடு. தீபா இங்கேயே இருக்கட்டும்.”

          ‘இங்கேயே இருந்து, உங்களுக்கு வேலை செய்து கொண்டு, திட்டும் வாங்கிக் கொண்டு இருப்பதற்கா?’ என்று மனதில் நினைத்தபடி, அம்மாவை இப்படிச் சரிக்கட்ட முடியாது என்பதைப் புரிந்து கொண்டவன், வேறு வழியில் தான் இதைச் சமாளிக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

         “இதுக்குத் தானேம்மா நான் கல்யாணமே வேண்டாம்னு சொன்னேன்? என்னோட வேலைகளைப் பார்த்துக் கொண்டு, குடும்பத்தையும் பாக்க முடியாதுன்னு எவ்வளவோ தடவை சொன்னேன். நீங்க தானே ஒத்தக் கால்ல நின்னு, கல்யாணம் பண்ணி வச்சீங்க? இப்ப, நான் மட்டும் தனியா போய் அங்க இருக்கவா? எனக்கு யாரு சமைச்சுப் போடுறது? இப்பல்லாம் எனக்கு ஹோட்டல் சாப்பாடு சரிவரல. அதனால, நான் தீபாவைக் கூட அழைச்சுட்டுப் போறேன்!” என்று தன் முடிவை இன்னொரு முறை ஆணித்தரமாகச் சொன்னான். அவ எதுக்குடா அங்க? நீ உங்க அக்காவைக் கூட அழைச்சிட்டுப் போ. சின்னப் பொண்னு தனியா வீட்டுல இருக்கறது பாதுகாப்பில்லை.”

    ஆயாவிற்கு இன்னமும் மனது ஆறவில்லை.

“ஏம்மா! அக்காவைக் கூட்டிட்டுப் போனா, அவங்க கடையை யாரு பாக்கறது?சபா வேற படிச்சிட்டு இருக்கான். அதோட, சுபாவும் இப்ப பிரசவத்துக்கு வந்துடும். அதெல்லாம் சரி வராது.”

   நானும் சளைத்தவனா என்று ஜெய் நிரூபித்தான்.

“அதோட, அக்காவுக்கும் தோணியப்பர் கோயில்கிட்டயே தனியா ஒரு வீடு பாத்திருக்கேன்.  ஏன்னா,  இனிமே  தீபாவுக்கும், சுபாவுக்கும் சமயம்னா வர, போக தாய்வீடு வேணும்தானே? நீங்களும், எத்தனை நாள் தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருப்பீங்க? இனிமேயாவது, அக்காவோட பொறுப்பு உங்களுக்கு வேணாம். அண்ணனும் அண்ணியும் இங்கதானே இருக்காங்க… அவங்க உங்களை நல்லாப் பாத்துப்பாங்க!”

   அதற்கு மேல் பேச ஆயாவிற்கு வழியில்லை. ஜெய் தான் நினைத்தது அனைத்தையும் செய்து முடித்து விட்டே, கடலூருக்குக் கிளம்பினான்.

    மஹாலக்ஷ்மி  கூட, தனியாக அவனிடம் பேசிப் பார்த்தாள்.

“அக்கா! நீ செஞ்ச ஒரு தப்புக்கு, இன்னும் எத்தனை நாளைக்குத் தான் அம்மாவோட வாயில அரைபடப் போற? அவங்களுக்கும், தனியா இருந்தா தான் உங்களோட அருமை தெரியும்.”

“நீ தனியா இருந்தால்தான் உன் எதிர்காலத்துக்கு நல்லது. உனக்கும் இப்பத் தான் நாப்பது வயசாகுது. இப்பவே நீயும் நாலு காசு சேர்த்து வச்சிகிட்டாதான், நாளைக்கு அது உனக்கு உதவும். நாங்க எல்லோரும் இருக்கோம்னாலும், நீயா சம்பாதிச்சா… அது உன்னோட தன்னம்பிக்கையை வளர்க்கும். அதனால, நீ தைரியமா கிளம்புக்கா.

இனிமே தீபா என்னோட பொறுப்பு. இதுவரைக்கும் அவ.. அவளோட வாழ்க்கைல…. உழைப்பையும், கஷ்டத்தையும் தவிர வேற எதையும் பார்க்கல. அவளை நான் சந்தோஷமா வச்சுப்பேன்கா” என்று உறுதியுடன் பேசிய தம்பியைக் கண்டு மகாவிற்கு மனம் பூரித்தது.

 

 

Chapter 30

சொன்னபடியே அக்காவையும், சபாபதியையும் புதுவீட்டில் குடி வைத்தான் ஜெய். ஒருநாள் தீபாவை அழைத்துக் கொண்டு கடலூரில் அவர்கள் இருக்கப் போகும் வீட்டைக் காட்டி, அவளுடைய அபிப்பிராயத்தைக் கேட்டான். வீடு சிறியதாக இருந்தாலும், அவர்கள் இருவருக்கும் போதுமானதாக இருந்தது.

நுழைந்தவுடன் சிறிய ஹால். அதற்கு இடது பக்கத்தில் இரண்டு அறைகள் அடுத்தடுத்து இருந்தன. ஹாலைத் தாண்டினால் சமையல் அறையும், அதற்கு இடதுபுறத்தில் குளியலறையும் இருந்தன. அந்த வீடு முதல் மாடியில் இருந்ததால், கீழேயே ஆஃபீஸ் போலக் கட்டப்பட்டிருந்த இடத்தையும் சேர்த்தே வாடகைக்குப் பார்த்திருந்தான்.

அங்கேயே தீபாவிற்கான அலுவலகத்தை அமைப்பதென்று, ஏற்கெனவே முடிவு செய்திருந்தான். தீபாவிற்கு அந்த வீடும், சூழ்நிலையும் மிகவும் பிடித்திருந்ததால், மகிழ்ச்சியோடு ஒப்புதல் அளித்தாள்.

ஆயாவிற்குப் பிடிக்கவில்லையென்றாலும், பிள்ளைக்காக மட்டுமே புதுவீட்டிற்கு பால் காய்ச்ச வந்தாள். தீபாவிடம் பேடுவதே சுத்தமாக நின்று போனது. ஆனால், ஜாடையாகப் பேசும் வசை மொழிகளை விடவில்லை. அதைக் கேட்கும் போது தீபாவின் கண்களில் கண்ணீர் பெருகினாலும், எதிர்த்துப் பேசமாட்டாள். ஏன், ஜெய்யிடம் கூட அதைப் பற்றிச் சொல்வதில்லை.

தன் அம்மா செய்வதெல்லாம் ஜெய்க்குத் தெரிந்தே இருந்தாலும், தீபா அதைப் பற்றி தன்னிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்ததில், அவள் மீதிர்ந்த அன்பும், காதலும் கூடிக் கொண்டே போனது. முன்பு ஜெய் தன்னுடைய முடிவைச் சொன்ன அன்று இரவில் கூட, தான்… சீர்காழியிலேயே தங்கிவிடட்டுமா என்றுதான் தீபா கேட்டாள்.

“மாமா! நான் வேணா இங்கேயே இருந்துக்கறேன். நீங்க வேணா போயிட்டு வரீங்களா? ஆயா வேற ரொம்பக் கோபப்படுறாங்க. அம்மாவும், குடும்பத்தைப் பிரிக்கக் கூடாதுன்னு எனக்கு அட்வைஸ் பண்றாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல மாமா!” என்று கண்ணீருடன் கூறினாள்.

ஆனாலும், ஜெய்க்கு அவள் மேல் தான் கோபம் எழுந்தது.

“உனக்கு இங்க இருக்கறது தான் பிடிச்சிருக்கா? என்னோட வர்றதுக்கு உனக்கு இஷ்டமில்லையா?” என்று இறுகிய முகத்துடன் கேட்ட போது, தீபா அழவே ஆரம்பித்து விட்டாள்.

அவள் என்னதான் செய்ய முடியும்? கடலூருக்குப் போனால், பாட்டி மற்றும் அம்மாவின் கோபத்திற்கு ஆளாக வேண்டும். சீர்காழியிலேயே இருக்கிறேன் என்றாலோ, மாமாவிற்கு மூக்கிற்கு மேல் கோபம் வருகிறது! ஆக, இவை இரண்டுமே அவளுக்குப் பயத்தைத் தந்தது.

அவன் முறைத்துப் பார்த்தாலும் பரவாயில்லை என்று நினைத்தவள், அவன் கழுத்தையே இறுக்கிக் கட்டிக் கொண்டு, ‘ஓ’வென்று அழ ஆரம்பித்தாள்.

ஜெய்க்கு அவள் அழுவது கஷ்டமாக இருந்தாலும், வேறுவழி தெரியவில்லை. சிறுவயது முதலே பயந்து பயந்து, தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறனையே இழந்து விட்டாளே என்று நினைத்தான்.

அவளை இந்த அளவிற்குக் கண்டிப்பாலும், எமோஷனல் ப்ளாக் மெயிலாலும் கட்டிப் போட்டிருக்கும் தன் அம்மாவின் மீதும், அக்காவின் மீதும் தான் கடுமையான கோபம் வந்தது. தான் கடுமையாகக் கேட்டால் தான், அவள் அவர்களுடைய பிடியைத் தாண்டி வருவாள் என்பதால், கஷ்டமாயிருந்தாலும் கோபமாக இருப்பது போல் நடித்தான்.

தீபாவை விலக்கி நிறுத்தி, “அப்பா, அம்மா கூட தானேயிருக்காங்க. அண்ணனும், அண்ணியும் ஒண்ணாத்தானே இருக்காங்க. சுபா, முரளிகூட தானேயிருக்கா? அப்ப உனக்கு மட்டும் என்ன? அவங்க ஏதாவது புத்தி கெட்டுச் சொன்னா, நாம அதை அப்படியே கேட்டுடணும்னு ஒண்ணும் அவசியமில்லை தீபா. நான் முன்னாலயே ஒரு தடவை சொல்லிட்டேன்…

இனிமே, திருப்பிச் சொல்ல மாட்டேன். நான் உன்னை யாருக்கும் விட்டுத் தரதாயில்ல.  இனி உனக்கு நான் தான் எல்லாம். அவங்க  கோபத்துக்குப் பயந்து, நீ நம்ம வாழ்க்கையைத் தொலைச்சுடாதே!” என்று கண்டிப்பான குரலில் சொனானான்.இப்படிக் கெஞ்சியும், கொஞ்சியும், மிரட்டியும் தான் அவன் கடலூருக்கு தீபாவை அழைத்துச் சென்றான். ஐயோ பாவம்!

Advertisement