Advertisement

Chapter 27

ஸ்விட்சர்லாந்து, தீபாவுக்குச் சொர்க்கமாகத் தெரிந்தது. எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலேன்று மரங்கள், செடிகள், வண்ண வண்ணப் பூக்கள், பனிபடர்ந்த மலைகள் என்று பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவளுக்கு.

 ஜெய் தேனிலவுத் தம்பதிகளுக்கான சுற்றுலா ஒன்றைக் கேட்டிருந்ததால், அவர்களுக்கு மலையுச்சியில் அழகான் மர வீடு ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது எல்லோரும் சுற்றுலா செல்வதென்றால் அந்தந்த ஊர்களில் உள்ள கட்டிடங்கள், ஆலயங்கள், பூங்காக்கள் என்று பொதுவாகச் செல்வது வழக்கம். ஜெய்சங்கருக்கு அவ்வாறு தேனிலவு முழுவதையும் கழிக்க விருப்பமில்லை. கடைசி இரண்டு நாட்களுக்கு மட்டும் அது போன்ற ஏற்பாட்டைச் செய்து கொண்டு, முதல் எட்டு நாட்களையும் தீபாவுடன் தனிமையாக, அமைதியாகக் கழிக்க விரும்பினான். எப்போதும் உள்ள பரபரப்பான, சந்தடி மிகுந்த வாழ்க்கையில் இருந்து விலகி, தனக்கும் தீபாவுக்கும் மட்டுமேயான நேரமே, அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள உதவும் என்று தோன்றியது அவனுக்கு.  வீட்டிலும் எப்போதும் அம்மா, அப்பா, அக்கா, சபாபதி என்று கூட்டமாகவே இருந்ததால், அவனால் சுதந்திரமாகத் தான் நினைப்பதைச் செயல்படுத்த முடியவில்லை. கூட்டத்தில் தீபாவின் அருகில் உட்காருவதாக இருந்தாலும், சற்றுத் தள்ளித்தான் உட்கார வேண்டியிருந்தது.

ஏற்கனவே ஒதுக்கத்துடன் இருந்த தீபா, இப்போது தான் மலையிறங்கி

அவனைப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறாள். ஆகையால், இந்தத் தேனிலவு நேரத்தைப் பயன்படுத்தி  அவளை முழுவதுமாகத் தன் வசப்படுத்த, ஒரு புது மாப்பிள்ளையான அவன் நினைப்பதில் தவறில்லை தானே?

அங்கு தங்கிருந்த ஒரு வாரம் முழுவதும், அவர்களுக்குச் சந்தோஷமாகப் பொழுது போனது. புதுக் கணவனாக  தீபாவின் மேல் மோகம் அதிகமாக இருந்தாலும், அதை மட்டுமே எதிர்பார்த்து,  அவன் தீபாவைக் காதலிக்கவில்லையே!  காதலி, மனைவி என்பதற்கு முன்னால், தீபா அவனுக்குத் தோழியும் அல்லவா?

சில நாட்களாக இழந்திருந்த தோழமையை மீண்டும் பெற, இந்தச் சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள அவன் முடிவு செய்திருந்தான்.முதல் நாள் ஒரு வாடகைக்காரில் அந்த மரவீட்டுக்கு அவர்கள் வந்து இறங்கிய போது, அங்கிருந்த இதமான குளிரும், இயற்கைச் சுழலும் அவர்களை வெகுவாகக் கவர்ந்தது.  வெளியே எவ்வளவுக்கெவ்வளவு இயற்கைச் சூழல் நிலவியதோ, அந்தளவிற்கு மாறாக… உள்ளே நவீன வசதிகள் அனைத்தும் நிறைந்து இருந்தன.

பிரபலமான அந்த ரிசார்ட், அந்தப் பகுதிக்குத் தேனிலவுக்கு வரும் தம்பதிகளின் விருப்பமான இடமாக இருந்ததால், ஆங்காங்கு இருந்த மரவீடுகளில் தேனிலவுக்கு வந்திருந்த பல தம்பதிகள் தங்கியிருந்தனர்.

அவர்கள் வந்த போது காலை நேரம் என்பதால், யாரையும் காண முடியவில்லை.  அந்த நாட்டில் இரவில் வெகுநேரம் விழித்திருந்து விட்டு, காலையில் தாமதமாக எழுந்திருப்பது சகஜம். அதனால், ஓரிருவரைத் தவிர யாரையும் வெளியே பார்க்க முடியவில்லை.

அந்தக் காலை நேரத்தில் பனி படர்ந்த மலையுச்சிகள், இதமான குளிர்,எங்கும் பச்சைப் பசேலென்று மரங்கள் என்று நிறைந்திருந்து, கண்களுக்கு விருந்தளித்தன.

அந்த மர வீட்டின் உள்ளே நுழைந்த போது, வெளிப்புறத் தோற்றத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாமல், ஒரு ஐந்து நட்சத்திர விடுதி போல இருந்தது. வீடு சிறியதாக இருந்தது.  நுழைந்தவுடன் ஒரு சிறிய வரவேற்பறை  அல்லது ஹால் என்று சொல்லலாம். அதில் வட்ட வடிவக் கண்ணாடி டீபாயுடன், சுற்றிலும் அமரும் வகையில் வசதியான சோபாக்கள் போடப்பட்டிருந்தன.  சுவர்களில் கலைநயத்துடன் புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள்  அழகாச் சட்டமிடப்பட்டு ஆங்காங்கே மாட்டப்பட்டிருந்தன. அந்த ஹாலைத் தாண்டிச் சென்றால் படுக்கையறையும், ஹாலின் வலது புறத்தில் சிறிய சமையலறையும் இருந்தன.

     படுக்கையறையின் நடுவில் தண்ணீர் நிரம்பிய வாட்டர் பெட் ஒன்றும் இருந்தது. மிகவும் குளிராக இருக்கும் சமயத்தில் அந்தப் படுக்கைக்குள் நிரம்பியுள்ள நீரை, இதமான சூடு வருமளவிற்கு சூடேற்றிக் கொள்ள மின் இணைப்பு  இருந்தது. ஒரு சுவரில் முழுஅளவு நிலைக் கண்ணாடி பதிக்கப்பட்ட வார்ட்ரோப் இருந்தது. அதில், அறை வாசிகள் தங்கும் வரையில் துணிகள், அலங்காரப் பொருட்கள் வைக்க என அதற்கு ஏற்றவாறு வடிவமைப்புடன் அழகாக இருந்தன ஷெல்புகள். இரவு நேரக் கடுங்குளிரைச் சமாளிக்க ஹீட்டர் வசதியுடன் கூடிய படுக்கையறை. ஒரு புறம் குளியலறை இருந்தது. ஷவர் குளியலுக்கான தடுப்பு தவிர, ஒருவர் சாய்ந்து உட்கார்ந்தவாறு குளிக்கும் அளவிற்கு இடம் மிகப் பெரியதாக இருந்தது.

தீபா இது போல வசதிகளை முன் பின் பார்த்திராததால், அசந்து போய் விட்டாள். அகல விரிந்த இமைகள், சுற்றிலும் இருந்த அழகைப் பார்த்து, பிரமித்துக் கொண்டிருந்தன. மெய்மறந்து, வந்ததில் இருந்தே எதுவும் பேசாமல் பிரமிப்பில் இருந்தவளின் பின்னால் சென்று, இரு கைகளாலும் அவள் தோள்களைப் பிடித்துச் செல்லமாக ஆட்டியவன், “தீபா! நீ திறந்திருக்கும் வாயின் அளவிற்கு நம்மூர் கொசுக்காளாக இருந்தால்… ஒரு நூறு… நூற்றி ஐம்பதாவது உள்ளே போயிருக்கும். ஆனா, இந்த ஊர்ல கொசுவோட சைஸ் என்னன்னு தெரியலியே!” என்று கூறிச் சிரித்தான் ஜெய்.

பரவசமாகத் திரும்பியவள், “இந்த வீட்டுக்கு வெளியே தெரியற இயற்கைக் காட்சிகள் எல்லாமே ரொம்பச் சூப்பரா இருக்கு மாமா! நான் வெளியூருக்கே வந்ததில்லை. இதுல வெளிநாட்டுக்கு முதமுதல்ல வரேன்.  இந்த மாதிரியான அழகையெல்லாம் சினிமால பார்த்ததோட சரி. அதான் பிரமிச்சுப் போய் நிக்கறேன்!

தீபா! இந்தக் கட்டிலைப் பார்த்தவுடனே, எனக்கு நம்ம காஞ்சிபுரம் ட்ரிப்தான்  ஞாபகம் வருது. நாம ரூம் தேடி ஒவ்வொரு ஹோட்டலா போனோமே… அது ஞாபகமிருக்கா?”

         “ஆமா! நீங்க கூட அங்க முதல்ல பாத்த இரண்டு, மூன்று ஹோட்டல்ல

ரூம் க்ளீனா இல்லைன்னு…” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள், “ஹா!

ஹா…!” என்று  வெடித்துச் சிரித்தான் ஜெய்.

         அவன் எதற்காகச் சிரிக்கிறான் என்று புரியாமல் அவள் தோளைத் தட்டி,  “என்ன மாமா? எதுக்குச் சிரிக்கிறீங்கன்னு சொல்லுங்க!” என்று கேட்டாள் தீபா.

ஜெய் சிரித்துக் கொண்டே தலையை இடதும் வலதுமாக ஆட்டி, “இல்ல தீபா!”  என்றவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு, “அதெல்லாம் ரூம் நல்லாதான் இருந்தது; ஆனா, அந்த ஹோட்டல் ரூம்ஸ்ல பெட்டை சிங்கிள் பெட்டா தனித்தனியா போட்டு, நடுவுல டீபாய் வைச்சு, நைட்லேம்ப் செட் பண்ணியிருந்தாங்க. நீ வந்திருந்தேன்னா, அந்த ரூமைத் தான் ஓ.கே பண்ணியிருப்பே. அதனால் தான் நான் உன்னை ரிசப்ஷன்லேயே உட்கார வெச்சுட்டு, ரூம் நல்லாயில்லன்னு ட்ராமா பண்ணி…” என்றவன் மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்.

தீபா எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, ஜெய்யின் சிரிப்பு மெல்லக் குறைந்து அவனது முகம் தீவிரமானது.

“தீபா! இந்த ஐந்து வருஷமா நான் மனசுக்குள்ள பட்டபாடு இருக்கே; அதை வார்த்தையில்  சொல்ல முடியாது.  நீ என் அக்கா பொண்ணுதான். நாம ஒண்ணா தான், ஒரே வீட்ல தான் இருக்கோம். இருந்தாலும்… என் மனசுல தோணின காதலுக்கு, உன் கிட்ட இருந்து எதிரொலி வருமோ… வராதோன்னு, எத்தனையோ நாள் தவிச்சிருக்கேன்.”

“அப்பயும், நான் முன்னாலயே சொன்ன மாதிரி, நான் உனக்குச் செஞ்ச

உதவிகளுக்கு நன்றிக்கடனா மட்டும் நீ என்னைக் கல்யாணம் செஞ்சுக்கக்

கூடாதுன்னு நினச்சேன்.  நீ வேற யாரையாவது நினைச்சுட்டு இருக்கேன்னு

தெரிஞ்சா, எனக்கு அது மரண வேதனையா இருந்தால் கூட ஒதுக்கிடணும்னு

தான் நினைச்சேன்.  அப்படி யாருமில்லன்னு உறுதியா தெரிஞ்ச பின்பு தான், நான் உன் மனசை என் பக்கம் திருப்ப முயற்சி செய்யவே ஆரம்பிச்சேன்.

    ஆனா, இந்த ஒரு வருஷத்தில, நான் பட்ட பாடு இருக்கே… ஐயோ சாமி!

அவனவன், ஊருக்குள்ள பல ஃபிகர்களை கரெக்ட் பண்ணி, சந்தோஷமா போயிட்டிருக்கான்.  நான் ஒரே ஒரு பொண்டாட்டிய வச்சுக்கிட்டு கரெக்ட் பண்ண பட்ட பாடு…! ஹீம்!” என்று  பொய்யாகச் சலித்துக் கொண்டவன்,

   “அது சரி தீபா! படிப்புல நல்லா, கெட்டிகாரியாதான் இருக்கே! ஆனா,

இந்த வாழ்க்கைப் பாடத்துல,  நீ நிஜமாவே ஒரு ட்யூப்லைட். நான் செஞ்ச

முயற்சிகள் எதையும் நீ புரிஞ்சுக்கலியே.”

          ஜெய் சிரிப்பில் துவங்கி சீரியஸாகப் பேசி, கிண்டலுடன் முடிக்க, அவன் மனதினுள் பொதிந்திருந்த உணர்வுகளைக் கொட்ட, அவன் சொல்ல

வந்ததைச் சரியாகப் புரிந்து கொண்டாள் தீபா.

          மெல்ல அவனை மேலும் நெருங்கி இரு கைகளாலும் அவனை வளைத்து,அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.  அவன் பல ஆண்டுகளாகப் பட்ட துன்பத்தை, ஒரு நாளேனும் அவளும் அனுபவித்தவள் தானே!

Advertisement