Advertisement

Chapter 26

திரும்பி வீடு வந்த இருவரும், பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கினர். கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் ஆயா காலில் விழுந்த இருவரிடமும், “ ஒரு வருஷம் ஓடிப்போச்சு. இனிமேலாவது புள்ள, குட்டி பெத்துகிட்டு ஆனந்தமா வாழுங்க!” என்று ஆசி கூறினார்.

மகாலஷ்மி அன்று இரவு உணவோடு, பால் பாயசமும் செய்திருந்தாள். அவர்களுடைய முதல் திருமண நாளை முன்னிட்டு சாப்பாடு ஸ்பெஷலாக இருந்தது. உதவி செய்ய தீபா வந்த போதும், அவளை மறுத்துவிட்டு, தானே எல்லாவற்றையும் செய்திருந்தாள். இரவு உணவு முடிந்ததும், எல்லாவற்றையும் தானே எடுத்து வைத்துக் கொள்வதாகக் கூறி அவளை அனுப்பி விட்டாள்.

படியேறி அறைக்குள் நுழைந்தவளின் கையைப் பற்றிய ஜெய், அவளை அழைத்துச் சென்று அறையின் நடுவிலிருந்த கட்டிலில் அமர்ந்தான். பின்பு, அவளைத் தன் மடியில் அமர்த்திக் கொள்ள, தீபா மெல்ல அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

“தீபா! உன்னோட பரிட்சையெல்லாம் முடிஞ்சதா? வேற எதுவும் வேலையிருக்கா?”

“முடிஞ்சிருச்சி மாமா! இனிமேல் ரிசல்ட் வந்ததும் வேலை தேடவேண்டியது தான் பாக்கி. இந்த செமஸ்டர்ல ப்ராஜக்ட் மட்டும் தான். அதனால, அடுத்த வாரம் ரிசல்ட் போட்டுடுவாங்க.”

“நீ என்ன முடிவு பண்ணியிருக்க தீபா? மும்பை, பெங்களூர், சென்னை மாதிரி பெரிய ஊருக்குப் போனால் தானே, ஐ.டி. கம்பெனியில் வேலை கிடைக்கும்?”

“மாமா! அங்க போனா நல்ல வேலை கிடைக்கும்தான். ஆனா, உங்களோட தொழிலெல்லாம் இங்கேதானே இருக்கு? அதுவுமில்லாம, நம்ம வீடும் இங்க தானே இருக்கு; அப்புறம் எப்படிப் போகமுடியும்?”

“நீ அங்கெல்லாம் போகணும்னு ஆசைப்பட்டா, என்கிட்டச் சொல்லு தீபா. நான், இதே தொழிலை எங்க வேணும்னாலும் ஆரம்பிச்சி நடத்த முடியும். முதல்ல உன் விருப்பத்தைச் சொல்லு. இவ்வளவு வருடங்களா நீ கஷ்டப்பட்டுப் படிச்ச படிப்பு… வீணாகக் கூடாது இல்லையா?”

“மாமா! எனக்கு வெளிநாட்டுக்குப் போகணும்னோ, இல்ல… பெரிய ஊர்ல இருக்கற ஐ.டி. கம்பெனில வேலைக்குப் போகணும்னு விருப்பம் இல்ல. நானே சொந்தமா ஒரு கன்சல்டன்சி ஆரம்பிக்கணும்னு தான் நினைக்கறேன் மாமா. ஆனா, எனக்கு பிசினஸைப் பத்தி எதுவுமே தெரியாது. அதனால, நீங்கதான் எனக்கு என்ன பண்ணணும்னு ஐடியா சொல்லணும்.”

“ஹேய்! நான் இருக்கும்போது  நீ ஏன் கவலைப்படறே?  நீ டெக்னிக்கலா  என்ன தேவையோ அதைப் பாரு. மத்ததை நான் பார்த்துக்கறேன்.”

“ஆயா வேற இன்னும் குழந்தை பொறக்கலயேன்னு ரொம்ப வருத்தப்படறாங்க. நமக்கு  அப்புறம் கல்யாணமான சுபாவிற்குக் குழந்தை பொறக்கப் போகுது.  நமக்கு ஏதும் ப்ரச்சனையோன்னு அம்மா கவலைப்படறாங்க! இந்த மாதிரி வேலையெல்லாம், அதாவது கன்ஸல்டன்ஸிலாம் வெச்சா, கடுமையா உழைக்க வேணாமா மாமா? என்ன பண்றதுன்னே தெரியல!”

 சிறுவயது முதலே, குருவித் தலையில் பனங்காயாக அவளது சக்திக்கும் வயதுக்கும் மீறிய பொறுப்புகளைக் கொடுத்து, அவளைக் கட்டிப்போடும் அம்மா, அக்காவின் மீது ஜெய்யிற்கு அந்த நேரம் மிகுந்த கோபம் வந்தது.  எப்போதும் மற்றவர்களுக்குக் கட்டுப்பட்டு , தன்னுடைய விருப்பத்தைக் கூடச் சொல்ல வாயில்லாமல், இதுவரை சொன்ன வேலைகளை செய்து கொண்டு வாழ்ந்த தன் மனைவியை, இனிமேல் மிகவும் சந்தோஷமாக  வைத்துக் கொள்ள வேண்டும் என்று மனதிற்குள் முடிவு செய்து கொண்டான்.

கவலையோடு தன் முகத்தைப் பார்த்தபடியிருந்த தீபாவின் தலையை அன்பாகத் தடவி,  “தீபா! நீயேன் இனிமேல் இதைப் பத்தியெல்லாம் கவலைப்படாதே. மத்த எதுக்காக இல்லேன்னாலும், எனக்கே எனக்காக… நீ ஒரு வருஷமாவது வேணும். அதனால, யார் என்ன சொன்னாலும்… நீ கவலைப்படாதே. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்!” என்றான் ஜெய்.

“ஆனா தீபா! இனிமே இந்தச் சீர்காழில நாம இருக்கறது சரியா வராது. உன்னோட கன்ஸல்டன்ஸிக்குக் குறைந்த பட்சம் இதை விடப் பெரிய நகரத்திற்குப் பக்கத்துல இருக்கிற, சிதம்பரத்துக்காவது, குடித்தனம் போகணும். என்னோட தொழிலும், மெல்லச் சிதம்பரம் தாண்டி  கடலூர்னு விரிவடைஞ்சிட்டே வருது. நாம் அங்கே போனா, நம்ம குழந்தைகளுக்கும் வசதியாயிருக்கும்.”

அப்ப… அம்மா, ஆயா தாத்தா எல்லாரையும் அங்க கூட்டிட்டுப் போயிடலாமா? ஆயா இந்த ஊரை விட்டு வருவாங்களா?”

எத்தனையோ முறை  மகள் செய்த தவறுக்காக, பேத்தியை மனசாட்சியே இல்லாமல் கடிந்து கொண்ட தன் தாயைப் பற்றி இப்போதும் சிந்திக்கும் தீபாவை, “ மை டார்லிங்!” என்று மனதிற்குள் செல்லமாகக் கொஞ்சினான் அவன்.

    “இல்ல தீபா! நாம மட்டும் தான் போகப் போறோம். நான் யோசிச்சு எடுத்த முடிவுதான் இது. அதனால, குறுக்கே பேசாம… நான் சொல்றதைக் கேளு. அக்கா அவசரப்பட்டு  ஒரு முடிவு  எடுத்துட்டாங்க தான். ஆனா அதனால, மாமாவும் அக்காவை மதிக்கலை. அம்மா, அப்பாவும் அவளை மன்னிக்கலை!

இன்னிக்கு வரைக்கும், அம்மா அவளைச் சொல்லிக் காட்டிட்டே தான் இருக்காங்க. இந்த வீட்ல அக்காவும், நீயும், ஒரு வேலைக்காரி மாதிரி தான் வேலை செஞ்சிட்டிருக்கீங்க. இனிமே, இந்த நிலைமையை நீடிக்க விட மாட்டேன்.

அக்காவுக்குக் கடை வெச்சு ஓரளவு வருமானம் வருது. அதனால், அவங்களுக்குக் இந்தச் சீர்காழில அக்கா கடைக்குப் பக்கத்திலேயே வீடு சொல்லி வச்சிருக்கேன்.நாம கடலூர் போகும் போது… அவங்களும், அதாவது அக்காவும், சபாவும் அங்க போயிருவாங்க, சுபாவுக்கு இப்ப மாசமா இருக்கறதால,பிரசவத்துக்கு வீட்டுக்குக் கூட்டிட்டு வரணும். நாம எல்லாத்துக்கும் உதவியா இருக்கணுமே தவிர, அவங்க நம்மளைச் சார்ந்து இருக்கும்படி விட்டுடக் கூடாது. அதுவுமில்லாம, சபாவும் இப்ப ப்ளஸ்டூ படிக்கிறான். அவங்க தனியா இருந்தாத் தான், அவனுக்குக் குடும்பப் பொறுப்பு வரும். தானும் படிச்சி சீக்கிரம் வேலைக்குப் போகணும்னு  நினைக்க மாட்டானா?” என்றான் ஜெய்.

“சரி! அப்ப ஆயாவும், தாத்தாவும் என்ன பண்ணுவாங்க?”

“அண்ணன், இங்க தானே இருக்கறாரு; அவரு பாத்துப்பாரு. நீ மருமகளானாலும், அவங்க  பேத்தி. இது வரைக்கும் அந்தப் பாசம் கொஞ்சம் கூட இல்லாம, உன்னை எப்படில்லாம் படுத்தியிருக்காங்க? அண்ணியைத் தலைல தூக்கி  வெச்சுக்கிட்டு, உன்னை எப்படில்லாம் ஆட்டி வெச்சிருப்பாங்க.  கொஞ்சநாள், அந்த அண்ணிட்டே இருந்தாத் தான், அவங்களுக்கும் உன் அருமை தெரியும். அதனால் விடு!”

         அவன் ரொம்பக் கடுமையாக முடிவெடுக்கிறானே?  இதை எப்படி அவனிடம் சொல்வது என்று தீபா யோசனையாக அவனைப் பார்க்க, அவள் மனதில் இருப்பதைப் புரிந்து கொண்டான் ஜெய்.

அதனால், அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டு,  “ஹேய்! நாம யாரையும் அப்படியே விட்டுடப் போறதில்ல. அவங்கவங்களுக்குத் தேவையானதைச் செஞ்சுட்டே தான் இருப்போம். என்ன… இப்ப ஒரே இடத்துல நெருக்கமா இருக்கறதை விட்டுட்டு, அவங்கவங்க கொஞ்சம் தள்ளியிருப்போம். அப்பதான் அவங்களுக்கும் உலகம்னா என்னன்னு தெரியும். நாமளும் எல்லோரையும் ஒண்ணா கூட்டி வெச்சுக்கிட்டா, நம்மோட வாழ்க்கை காணாமப் போயிடும். மத்தவங்களுக்காக  நாம வாழ்ந்து கிட்டேயிருந்தா, நம்ம வாழ்க்கையை யாரு வாழறது?”

   “சரி சரி!  நாம் ரொம்பச் சீரியஸா பேசிட்டேயிருக்கற மாதிரி தெரியுது. இதைப் பார்த்தியா?” என்று தலையணையின் அடியில் இருந்த கவரை எடுத்து அவளிடம் நீட்டினான் ஜெய்.

      “என்ன மாமா இது? என்று கேட்டவாறே, தீபா அதைப் பிரித்தாள். அதில் இரண்டு விமான டிக்கெட்டுகள் இருந்தன.

  நாளைக்கு, நாம ரெண்டு பேரும் சென்னையிலருந்து புறப்படற மிட்நைட் ப்ளைட்ல, ஸ்விட்ஸர்லாந்து போறோம். பத்து நாள் கழிச்சுத் தான் ரிடர்ன்.  நம்ம ஹனிமூன் அங்கதான்.”

“ஏன் மாமா?  நாமதான் காஞ்சிபுரம், பாண்டிச்சேரி போனோமே!’

“ஏய்!  ஊருக்குள்ள போய்க் கேளு… காஞ்சிபுரத்துக்கு ஹனிமூன் போனேன்ணு சொன்னா… சிரிப்பாங்க!!!  அப்ப நம்மச் சூழ்நிலை சரியா இல்லாத்துனால, சும்மா உனக்குப் பிடிச்ச ஒரு இடத்துக்குப் போனோம். இதுதான் நம்ம ரியல் ஹனிமூன்!”

         “சரி! எப்படி அதுக்குள்ள டிக்கட், பாஸ்போர்ட், விசா எல்லாம் ஏற்பாடு

பண்ணினீங்க? அதுவும், நாம இன்னிக்கு இப்படி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுப்போம்னு, அப்ப உங்களுக்குத் தெரியாதே? அப்புறம் எப்படி?” என்றாள் அவள்.

          “தீபா! அன்னிக்கு ஒரு நாள்…  நீ, அம்மாவும் அக்காவும் உன் படிப்பை

நிறுத்திட்டாங்கன்னு சொல்லி, அழுதுகிட்டே வந்து என்னைக் கட்டிக்கிட்டே

இல்லியா? அன்னிக்கே, உன் மனசுல எனக்கு இடமிருக்குன்னு புரிஞ்சுகிட்டேன்.  அதுக்கும் மேல நாம நெருக்கமா இருந்தப்போ வெக்கப்பட்டியே தவிர, விலகல! அதனால, எப்பவுமே உன் மனசுல என் மேல வெறுப்போ, ஒதுக்கமோ இல்லன்னு புரிஞ்சுகிட்டேன்.  அன்னிக்கு இங்கிருந்து கிளம்பி நான் ரோட்ல போகும்போது, நீ என்னைப் பாத்திருக்கணும்.

என்னால சிரிப்பைக் கண்ட்ரோலே பண்ண முடியல. ரோட்ல போறவங்க என்னை கவனிச்சிருந்தா, லூசுன்னு நெனச்சிருப்பாங்க. எதிர்காலம் ரொம்ப பிரகாசமா தெரிஞ்சதுனால, ரொம்பக் குஷியா இருந்தது, அதனால, நம்ப முதல் திருமண நாள் அன்னிக்கு, உன்னை எப்படியாவது அசத்திடணும்னு ப்ளான் பண்ணி இந்த டிக்கெட்ஸ், நகை, புடவை எல்லாமே ஏற்பாடு செஞ்சேன். விசா அப்ளிகேஷன்ல கூட, உன்னோட கையெழுத்தை நானே போட்டேன்.

 நீ தான் கையெழுத்து போடுன்னா, உன் பேரைக் குண்டு குண்டா எழுதி வெப்பியே! அதைப் போடறது ரொம்ப ஈஸியா இருந்தது. மத்ததெல்லாம் ரொம்ப ஸிம்பிள்.  இந்தப் ப்ளவுஸ் தைக்கக் கூட, அளவுக்கு அப்படித் தான் உன்னோட பிங்க் ப்ளவுஸ நைஸா எடுத்துட்டுப் போயி ரெண்டு நாள்ல கொண்டு வந்து வெச்சுட்டேன். அந்த ப்ள்வுஸ் உனக்கு பெர்ஃபெக்டா ஃபிட் ஆச்சு. அதான், உஸ்! அப்பாடா! ரொம்ப நேரமா மூச்சு விடாமல் பேசிட்டேன். இப்ப உன் சந்தேகம் கிளியராயிடுச்சா?

       வாய் மூடாமல், கண்கள்  ஆச்சரியத்தால் அகல, ஜெய்சங்கர்  பேசுவதைக் கேட்ட, தீபா அசந்து விட்டாள். ஜெய் கொடுத்த பரிசுகளின் பண மதிப்பை விட, அதில் தெரிந்த அவனுடைய அன்பும், அக்கறையும் அவளை மிகவும் கவர்ந்தன. நெகிழ வைத்தன. அவன்  பிங்க் ப்ளவுஸ் அவளுக்குச் சரியாக இருந்தது என்று சொன்னவுடன், இதையெல்லாம் கூடக் கவனித்திருக்கிறாரே!” என்று வெட்கமாக இருந்தது.

          வெட்கத்துடன் அவன் கையைக் கிள்ளி, “இன்னும் என்னல்லாம் கவனிச்சிருக்கீங்க?” என்று தீபா சிணுங்க, ஜெய் குறும்போடு கண்ணைச் சிமிட்டி, “நிறையக் கவனிச்சிருக்கேன் தீபூ செல்லம்! உனக்குச் சல்வாரை விட, பாவாடை தாவணி, சாரிதான் நல்லா சூட் ஆகுது. அதுவும் பட்டுச்சேலை கட்டினா, நான் ஃப்ளாட் தான்!” என்று மயங்குவது போல நடித்தான்.

         ‘எப்போதும் நிதானத்துடனும், பொறுப்புடனும் பேசுகிற மாமாவா இது?’ என்று அவளுக்கு ஆச்சரியம் தாளவில்லை. வசந்தி  சொன்னது அந்த நேரத்தில் அவளுக்கு நினைவில் வந்தது. தான் எவ்வளவு கொடுத்து வைத்தவள் என்பதை நினைக்க நினைக்க, அவளுக்குச் சந்தோஷத்தில் கண்ணீர் துளிர்த்தது. அந்தப் பரவசத்துடனேயே அவன் கழுத்தைத் தன் இரு கைகளாலும் இறுக்கி, கண்களில் நீருடன், “நான் ரொம்ப லக்கி மாமா! தாங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்!” என்று அவன் கன்னத்தில் தன் உதடுகளை அழுத்தமாகப் பதித்தாள்.

அவள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருப்பதைப் புரிந்து கொண்ட ஜெய், அவளைச் சகஜமாக்கும் நோக்கத்துடன், “ஏன் இந்தக் கொலைவெறி தீபா? உனக்குப் பிடிச்சதாத் தானே எல்லாம் வாங்கியிருக்கேன்? இவ்வளவு இறுக்கமா என் கழுத்தைப் புடிச்சேன்னா, மாமா சுவிட்ஸர்லாந்துக்குப் பதிலா, சொர்க்கத்துக்கு டிக்கட் வாங்க வேண்டியிருக்கும் செல்லம்!’ என்று கூறி, தன் கழுத்தைச் சுற்றியிருந்த கைகளை விலக்கி அவள் உள்ளங்கைகளில் முத்தம் பதித்தான்.

அவன் தன்னை மீண்டும் ஜாலியான மூடிற்கு கொண்டு வருவதற்காகவே இப்படிச் சொல்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட தீபா, அவன் கைகளுக்குள் இருந்த தன் வலது கையை உருவி, கண்களைத் துடைத்துக் கொண்டு, மிகுந்த  மனநிறைவுடன் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். அதுவரை அவனுடைய பரிசுகளைக் கொண்டாடியவள், சராசரி மனைவியானாள்.

          “மாமா! ஆல்ரெடி புடவை, நெக்லஸ்னு நெறய செலவு பண்ணிட்டீங்க.  இப்ப இதுவும்னா, நிறைய செலவு ஆகுமே!” எனக் கவலையாக கேட்டாள் தீபா.

     “இதோ பாரு! பணத்தைச் சம்பாதிச்சு பெட்டியல வெச்சிட்டேயிருந்தா, ஒரு ப்ரயோஜனமும் இல்லை. அந்தந்த வயசுக்கான நியாயமான சந்தோஷத்த, அப்பப்பவே அனுபவிக்கணும்.நீயும் சின்ன வயசுல இருந்து, பொறுப்பா உழைச்சுட்டு இருக்கே.இப்ப நீ நினைச்சாலும், அந்த வயசுக்கான விஷயங்களைச் செய்ய முடியுமா? எப்பவும் கடமையாவே வாழ்ந்தா, அந்த வாழ்க்கைலஒரு சுவாரசியமும் இருக்காது.”

 “யாரோ ஒருத்தர் காலைல தான் சொன்னாரு…  நான் எவ்ளோ பெரிய ரவுடின்னு காட்டறேன்னு!  அவரும் ஒரு பொறுப்பாவே பேசிட்டேஇருக்காரே தவிர, செயல்ல ஒண்ணையும் காணும். சரியான டம்மி பீஸ் போலருக்கு!” என்று கண்ணைச் சிமிட்டிக் குறும்பாகக் கேட்டாள் தீபா.

   “சும்மா பேசிட்டே இருக்காதேடா மடையா! இப்ப என்ன வேலையோ, அதைப் பாருன்னு சொல்லறியா? நான், என் பொண்டாட்டி கிழிச்ச கோட்டைத் தாண்டாதவன். இதோ வந்துட்டேண்டா செல்லம்!” என்ற ஜெய் அவளை அணைத்துக் கொள்ள, அந்த அறையில் அதற்குப் பின் பேச்சுச் சத்தம் மெல்ல மெல்ல அடங்கியது. சொன்னது போலவே, மறுநாளே தீபாவை ஹனிமூனுக்கு அழைத்துச் சென்றான் ஜெய்.

Advertisement