Advertisement

Chapter 25

 

வீடு வந்து சேர்ந்தவுடன் மஹாலஷ்மி அவர்களுக்கு கதவைத் திறந்து விட்டார். “என்ன… ரெண்டு பேரும் உடனே வந்துட்டீங்க? அங்கே தங்கம் உங்களை எப்படிப் போக விட்டா?” என்று கேட்க, என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல், ஏதோ ஒரு பதிலைச் சொல்லிச் சமாளித்தனர். அவர்கள்தான் ஏதோ ஒரு கனவுலகத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்களே!

ஜெய் கண்களால் தீபாவை மாடியில் உள்ள அவர்களது அறைக்கு வருமாறு சைகை காட்டிவிட்டு, மேலே சென்று விட்டான். தீபா சற்றுநேரம் அம்மாவிடம் பேசிவிட்டு, அவனைப் பின்தொடர்ந்தாள். அவள் என்ன பேசினாள் என்று இப்போது கேட்டால், அவளுக்கே தெரிந்திருக்காது!

அறையில் நுழைந்தவளை… அதற்கென்றே காத்திருந்தவன் போல், அவள் கைகளைப் பற்றி உள்ளே இழுத்து கதவைச் சாத்தித் தாழிட்டான். அவளது கண்களை இரு கைகளாலும் பொத்தி, அவளை அழைத்துச் சென்று ட்ரெஸ்ஸிங் டேபிளின் முன்னால் நிறுத்தினான்.

கண்களை மூடியபடியே அவளை இருக்கச் சொல்லிவிட்டு, அவள் கழுத்தில் ஒரு வைர நெக்லஸைப் போட்ட ஜெய், அதன் பிறகே அவளைக் கண்ணைத் திறக்கச் சொன்னான்.

         கண்ணாடி முன் நின்றிருந்த தீபா, கண்களைத் திறந்தவுடன் தன் கழுத்தில் மின்னிய நெக்லஸைப் பார்த்துப் பிரமித்தாள். நெக்லஸ் அந்த அறையில் லைட் வெளிச்சத்தில் ஜொலித்தது. அதன் மதிப்பு குறைந்தது மூன்று லட்சங்களாவது இருக்கும். அழகான வேலைப்பாட்டுடன், பார்க்கவே வெகு அழகாக இருந்தது.

 கூடவே அதற்குப் பொருத்தமான காதணிகளும், மோதிரமும் இருந்தன. அதிலிருந்த மோதிரத்தை எடுத்து அவளது இடது கை மோதிர விரலில் போட்டவன், அவள் கைகளைப் பற்றி மென்மையாக முத்தமிட்டபின்பே கீழே விட்டான்.பக்கத்திலிருந்த அட்டைப் பெட்டியை எடுத்து, அவள் கையில் கொடுத்தான். அதைத் திறந்து பார்த்த தீபா, அதன் அழகில் அசந்து போனாள்.

ஆழ்ந்த வயலட் கலரில் இருந்த அந்தப் பட்டுப் புடவையில், வெள்ளைப் பட்டு நூலால், புடவை முழுவதும் ரோஜாப் பூக்கள் நெய்யப்பட்டிருந்தன.கணவனின் அன்பில் ஏற்கனவே நெகிழ்ந்திருந்த தீபாவிற்கு, இந்தப் பரிசுகளைப் பார்த்ததும் அழுகையே வந்துவிட்டது. “மாமா!” என்றவள்,அவற்றை அப்படியே வைத்துவிட்டு, அவனை இறுக அணைத்துக் கொண்டு அழுதாள்.

         அவளிடமிருந்து இப்படியொரு ரியாக்‌ஷனை எதிர்பார்க்காத ஜெய்,பதறிப் போய் விட்டான். என்ன செய்தும் சற்று நேரம் அவளது அழுகையை அடக்க முடியவில்லை. அப்படியே அவள் முதுகைத் தடவியபடி இருந்தவன், மெள்ள அவள் சமாதானமானதும், அவள் முகத்தை நிமிர்த்தி, “என்னாச்சு தீபா?” என்று மென்மையாகக் கேட்டான்.

தீபா கல்யாணத்திற்கு முன்பு வரை தங்க நகைகளையே அணிந்ததில்லை. திருமண நகைகளே, அவள் மாமா வாங்கித் தந்தது தானே! இவைகளை முறைப்படி வாங்கித் தர, அவளது தகப்பன் தான் இல்லையே! அம்மாவிடமோ வசதியில்லை.

    “மாமா! நீங்க என் அம்மா, அப்பாவை விட மேலானவர். என் அம்மாகூட எனக்காக இவ்வளவு செய்ததில்லை. தாங்க்ஸ் மாமா!” என்றவள், எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். பின்பு, தானும் ஒரு பொறுப்பான  மனைவிதான் என்பதை நிருபிக்கும் வகையில், “ ஏது மாமா இவ்வளவு பணம்? நிறையச் செலவு ஆகியிருக்கும் போலயிருக்கே!” என்று கேட்டாள்.

ஜெய் அவள் தலையைச் செல்லமாகக் குட்டி, “ஏ பொண்டாட்டி! நான் இப்போ… சாதாரணமான ஆள் இல்லை. நமக்குப் பல தொழில்கள் இருக்கு. மாச வருமானமே பதினைஞ்சு இலட்சத்துக்கு மேல! புரியுதா?” என்று கூறினான்.

தீபாவோ, வருத்தம் தொனிக்கும் குரலில், “மாமா! சுமாரா நீங்க என்ன

பண்றீங்கன்னு தெரியுமே தவிர… உங்க தொழில் விவரங்களைப் பற்றி  முழுசா எதுவும் தெரியாது. நம்ம கல்யாணத்துக்கு, உங்களுக்குத் தெரிஞ்சவங்கன்னு பெரிய ஆளுங்க எல்லாம் வந்தவுடனே, நான் பயந்து போயிட்டேன். இவ்வளவு உயரத்தில் இருக்கற நீங்க… என்னை ஏன்… அதுவும், இப்படிப் பொய்யா கல்யாணம் பண்ணிக்கணும்னு புரியவேயில்லை. ஆயா சொல்றமாதிரி, உங்களைக் கல்யாணம் பண்ணிக்க எத்தனையோ பொண்ணுங்க வரிசையில் நிப்பாங்க!” என்று முடித்தாள்.

 “ஏய்! அவங்க யார் வந்தாலும் என் மனசு திரும்பாது. அவங்ககிட்ட எவ்வளவுதான் பணமிருந்தாலும், அழகிருந்தாலும் அஞ்சு வருஷமா உன்னை நினைச்சுட்டு இருக்கற என்னால… எப்படி அப்படி  நினைக்கமுடியும்? எப்பவும் என் மனசுல முழுசா நிறைஞ்சு இருக்கறவ நீ தான்! ஆனா, அஞ்சு வருஷம் காத்திருந்த என்னால… இப்ப இந்த அஞ்சு மணி நேரம் காத்திருக்க முடியல!” என்று பெருமூச்சு விட்டபடியே சொன்னவன், அவளை அணைத்து, குனிந்து அவள் தோளில் முகம் புதைத்தான்.

“அதென்ன மாமா? எப்பப் பார்த்தாலும் அஞ்சு வருஷமான்னு சொல்லிட்டேயிருக்கிங்க? அஞ்சு வருஷமாவா… நீங்க என்னை விரும்பினீங்க?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள். அவள் கைகள் அவன் முதுகை ஆதரவாகத் தடவியபடி இருந்தன.

ஜெய், ஐந்து வருடங்களுக்குமுன் தான் அவளைப் பார்த்த அந்தச் சம்பவத்தைப் பற்றிச் சொன்னான். அன்று முதல், அவன் மனதில் அவள் மேல் தோன்றி… பெருகி வளர்ந்த காதலைச் சொன்னான். அக்கா சொன்ன வேண்டுகோளை எப்படித் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான் என்பதையும் சொன்னான். எப்படி இந்த ஒரு வருடத்தில் அவள் மனதையும் அவன் வசம் திருப்ப முயன்றான் என்பதையும், அவள் தோளில் இருந்து முகத்தை எடுக்காமல், அவள் காதோரமாக மெள்ளக் கூறினான்.

தீபா! அப்பவும் நான் முடிவு பண்ணியிருந்தேன்; நீ படிக்கும் போது கல்லூரியிலேயே யாரையாவது விரும்பினா, நான் விலகிடணும்னு நினைச்சேன். காதல்னா… நமக்குப் பிடிச்சிருக்கறதை எடுத்துக்கறது இல்லை! நமக்குப் பிடிச்சவங்களோட சந்தோஷத்துக்காக, நாம விட்டுக் கொடுக்கணும்.

முதல்ல, அக்கா உனக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது,  உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க எனக்கு மனசில்லை. அதே நேரத்துல, படிச்சிட்டு இருக்கற உன் மனசைக் கலைச்சு… கல்யாணத்தை அந்த வயசுலயே… இது நம்ம சாதியில பழக்கம் தான் என்றாலும்…, நடத்த எனக்கு இஷ்டமில்லை. ஆனா, நீ காலேஜ் வந்ததும், எனக்குக் கொஞ்சம் பயம் இருந்தது… நீ கூடப் படிக்கற  பையன் எவனையாவது விரும்புவியோன்னு!

ஆனா, அப்படி யாரையாவது நீ விரும்பியிருந்தா, நான் குறுக்கே நிக்கக் கூடாதுன்னும் முடிவு பண்ணிட்டேன். ஆனா, என் அதிர்ஷ்டம்… நீ அப்படிச் சொல்லவேயில்ல. படிக்கணும், வேலைக்குப் போகணும்னு மட்டும் தான் சொன்னே. யாரும் இல்லாத உன் மனசுல, நான் ஏன் வரக்கூடாதுன்னு, அப்புறம் தான் முடிவு செய்தேன்.

நிச்சயமா, நீ இப்பப் படிச்ச படிப்புக்கு, நீ பெரிய இடத்துக்கு வருவே. அப்ப நானும் உனக்கு ஏத்தவனா இருக்கணும்னுதான், நான் கஷ்டப்பட்டு உழைச்சு இந்த நிலைமைக்கு வந்தேன். உண்மையா சொன்னா, நான் உன் மேல வச்சிருந்த காதல் தான்… என் வளர்ச்சிக்குக் காரணம்!”  என்று இத்தனை ஆண்டுகளாக அவன் மனம் பட்ட வேதனை முழுவதையும் கொட்டிப் பேசினான்.

அவனுடைய இந்த நீண்ட பதிலில் தீபா பிரமித்துப் போனாள்.  ‘அவனுக்கு தன் மேல் இவ்வளவு காதலா? தன்னால், தன்னை உணர்ந்ததும், இந்த ஒரு நாளே தாங்க முடியவில்லையே! அவரோ, ஐந்து வருடங்களாகத் தன் காதலை மறைத்து… தன் முன்னேற்றத்திற்கும், மகிழ்ச்சிக்கும் உழைத்திருக்கிறாரே!’ என்று எண்ணியபோதே, அவன் மேலிருந்த காதல் பன்மடங்கு பெருகியது.

“மாமா! நான் உண்மையிலே ரொம்பக் கொடுத்து வச்சவ. என் அம்மா கூட சுயநலமா, என்னைப் பாரமா நினைச்சு தட்டிக் கழிக்க நினைச்சிருக்காங்க. ஆனா நீங்க, எப்பவும் என்னைப் பத்தியே யோசிச்சிருக்கீங்க. நீங்க உண்மையிலேயே என் அம்மாவுக்கும் மேல. ரியலி ஐ யம் வெரி லக்கி!” என்றவள், அவனை நிமிர்த்தி, அவன் கழுத்தை வளைத்து முகத்தை இரு கைகளாலும் இழுத்தாள். அவன் முகமெங்கும் தன் உதடுகளால் முத்திரை பதித்தவள், கடைசியாக அவன் உதடுகளுக்கு வந்தபோது, அதை விடுவதற்கு அவளுக்கு அதிக நேரமானது. வெகுநேரம் அந்த அறையில் அமைதி நிலவியது.

         சிறிது நேரத்திற்குப் பிறகு தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்ட ஜெய், “தீபா! இத்தனை வருஷமா ரொம்ப மந்தமாயிருந்த; இந்த ஒரு நாள்ல, நீ சீக்கிரமா பிக்கப் பண்ணிட்டியே!” என்று கேலியாகக் கேட்க, அவன் எதைக் கேட்கிறான் என்பதை உணர்ந்தவளாக, “ச்சீய்…!” என்றபடியே அவன் தோளில் செல்லமாகத் தட்டினாள் அவள்.

சிறிது இடைவெளி விட்டவள், “மாமா! நாம இன்னிக்குத் தான், உண்மையா நம்முடைய வாழ்க்கையை ஆரம்பிக்கப் போறோம். அதனால, இப்பத் தோணியப்பர் கோயிலுக்குப் போயிட்டு வருவோமா?” என்றாள்.

அதற்கு ஜெய் சம்மதிக்க, இருவரும் கிளம்பினார்கள். ஜெய் வாங்கித் தந்த புடவையை அணிந்து கொண்டு, அவன் வாங்கித் தந்த  வைர நகைச் செட்டையும் அணிந்து கொண்டாள். அந்தப் புடவைக்குப்  பொருத்தமான  பிளவுசும் கூட அவள் அளவிற்கு ஏற்றபடி தைத்து, மடித்து வைக்கப்பட்டிருந்தது.

         பரிசுகளை விட, அவனது அன்பும் அக்கறையும், அவள் மனதை வெகுவாகக் கவர்ந்தது. எல்லாவற்றையும் அணிந்து கொண்டு திரும்பி அவனைப் பார்த்தபோது, அவன் அதே உடையில் தான் இருந்தான். தங்கள் திருமண நாளுக்கு, தான் ஒன்றுமே பரிசாகத் தரவில்லையே என்று அவளுக்கு வருத்தமாக இருந்தது.

         “மாமா! நீங்க எனக்கு இத்தனை வாங்கித் தந்திருக்கீங்க; நான் உங்களுக்கு எதுவுமே வாங்கித் தரலியே மாமா!” என்று வருத்தமாகக் கேட்டாள் தீபா.

         அவளை ஆதரவாக அணைத்தபடி, “யாரு சொன்னா? நீ எனக்கு இன்னிக்கு எவ்வளவு  கொடுத்திருக்கே? உன் மனசை, உன் காதலை, உன் அன்பை, ஏன்… உன்னையே எனக்குக் கொடுத்திருக்க! இதையெல்லாம், நானும் உனக்குத் தந்திருக்கலாம். ஆனா, நம்முடைய அன்புக்குச் சாட்சியா, நம் குழந்தையை நீ தான் எனக்குத் தரமுடியும். அதையெல்லாம் பார்க்கும் போது, இது ஒண்ணுமேயில்ல!” என்று சமாதானம் சொன்னான்.

தான் அந்தக் குழந்தையைப் பார்த்தபோது நினைத்தது போலவே மாமாவும் நினைப்பதை உணர்ந்த தீபா, எதிர்காலக் கற்பனையில் மூழ்கினாள். இந்தச் சந்தோஷமான மன நிலையுடன் இருவரும் தோணியப்பர்  ஆலயத்திற்குச் சென்றனர்.

தங்கள் எதிர்கால வாழ்வு வளமுடன் திகழ, மனமுருக இறைவனை வேண்டிக் கொண்டாள் தீபா. இப்படியொரு அற்புதமான கணவனைத் தனக்குக் கொடுத்தற்காக, ஈசனிடம்  மனமாற நன்றி கூறினாள்.

Advertisement