Advertisement

Chapter 23

“தம்பி! நான்தான் மஹாலக்ஷ்மி பேசறேன்பா. தீபா இப்பத் தான் உன்னைப் பாக்கக் கிளம்பி, கடலூருக்கு வந்துட்டுருக்கா. அதைச் சொல்லத் தான்பா போன் பண்ணேன்.”

“தீபாவா? இங்கே எதுக்கு?….”

“காலையில எழுந்ததும், நீ எங்கன்னு கேட்டா? நீ கடலூருக்கு வக்கீலைப் பார்க்கப் போயிருக்கேன்னதும், நானும் போறேன்னு கிளம்பிட்டா. ரெண்டு பேருமா தங்கம் வீட்ல இருந்துட்டு, பத்திரமா வாங்க. போனை வைக்கட்டா?” என்ற மஹாலக்ஷ்மி போனை வைத்து விட்டாள்.

வக்கீலைப் பார்க்க என்றதும், தீபா கிளம்பிவிட்டாள் என்பது மட்டுமே ஜெய்யின் மனதில் பதிந்தது. அக்கா போனை வைத்ததைக் கூட உணராமல், காதிலேயே வைத்திருந்தவன், பின்பு அதை மெள்ள மேஜையில் வைத்தான்.

இன்றோடு அவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. ‘முதல் வருடத் திருமண நாளை, புதுமணத் தம்பதிகள் எவ்வளவு உற்சாகமாக வரவேற்றுக் கொண்டாடுவார்கள்? கணவன், மனைவிக்குப் புடவை, நகையென்று பரிசுகள் வாங்குவான்! ஆனால், விவாகரத்தைத்தான் அவளுக்குப் பரிசாக தரப் போகிறோமா?’ அவனும் இந்த ஒரு வருடமாக அவள் மனதை மாற்ற எவ்வளவோ முயற்சிகளைச் செய்துவிட்டான். ஆனால், பலன் என்ன…?’ என்று எண்ணியபடியே பெருமூச்சு விட்டான்.

‘அதுவும், தீபா சரியாக ஒரு வருடம் முடிந்ததும், ஒரு நாள் கூடக் காத்திருக்க முடியாமல், இங்கேயே வந்து கொண்டிருக்கிறாளே! அவ்வளவு மோசமாகவா அவர்களது மணவாழ்க்கை இருந்தது? எப்போதடா வெளியேறுவோம் என்று, தான் ஊருக்கு வரும்வரை கூடப் பொறுத்திருக்க முடியாமல் வந்து கொண்டிருக்கிறளே! தன்னுடைய காதலை அவள் கடைசி வரை ஏற்கவில்லையே! ஏன்? என் ஐந்து வருடக் காதல் தவம், தோல்வியில் முடிந்ததே! அதை ஏற்காவிட்டாலும் பரவாயில்லை…, குறைந்த பட்சம், புரிந்து கொள்ளக்கூட முயற்சி எடுக்கவில்லையே அவள்!’ என்று பலதையும் எண்ணி அப்போதிருந்தே உட்கார்ந்து விட்டான்.

தான் வந்தவுடன் மாமா தன்னைப் பார்ப்பார் என்று சில வினாடிகள் காத்திருந்து விட்டுப் பொறுமையிழந்தவள், “மாமா!” என்று அழைத்தாள்.

மோட்டு வளையில் இருந்த கண்களைத் திருப்பி தீபாவின் முகத்தில் பதித்த ஜெய், “என்ன தீபா? உன்னால ஒரு நாள் கூட பொறுத்துக்க முடியலியா?” என்று வரண்ட குரலில் விவாகரத்தைப் பற்றி நினைத்தபடிக் கேட்டான்.

வெட்கத்துடன் தலையைக் குனிந்து, “ஆமாம் மாமா” என்றாள் தீபா. ‘என்னைப் பிரிந்து ஒருநாள் கூட அவளால் இருக்க முடியவில்லையா?’ என்பதைக் கேட்கிறான் என்று நினைத்தே பதில் சொன்னாள் அவள்.

அவள் பதிலைக் கேட்ட ஜெய்க்கு, அந்தப் பிரவீனின் நினைவு வந்தது. ஒருவேளை, இப்போது இருவருக்கும் படிப்பு முடித்து விட்டதால், இந்த விவாகரத்தை வாங்கி விட்ட பின்னர், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறார்கள் போலிருக்கிறது’ என்று நினைத்தான்.

அதான், அவன் அன்றே சொன்னாளே, ‘உனக்கு மட்டும் கல்யாணம் ஆகவில்லையென்றால், உன்னைத்தான் கல்யாணம் செஞ்சுக்குவேன்னு! இப்போ அதுவும் பரவாயில்லை என்று முடிவு செய்துவிட்டான் போல!’ என்று நினைத்தவனுக்கு, கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

இருந்தாலும் கோபத்தை அடக்கிக் கொண்டு, “எப்பக் கல்யாணம்? விவாகரத்து வாங்கின உடனேயேவா…? இல்ல… வேலையும் கிடைச்சதுக்கு அப்புறமாவா?” என்று வறண்ட குரலில் கேட்டான் ஜெய்.

அப்போதுதான் அவன் குரலில் இருந்த வெறுமையை உணர்ந்தாள் தீபா. குழப்பத்துடன், “ யாருக்கு மாமா கல்யாணம்?”  என்று கேட்டாள்.

“அதான் பிரவீனுக்கு!” என்று சொன்னவனால், அப்போதும் உங்கள் இருவருக்கும் என்று சொல்ல மனம் வரவில்லை.

 ‘அவனைப் பற்றி இப்போது என்ன?’ என்று மனதுக்குள் எண்ணினாள். ஆனாலும், அவனுக்குப் பதில் சொல்லும் விதமாக, “அநேகமாக இன்னும் ஒரு மாதத்தில் இருக்கும்” என்றவள், தங்கள் விஷயத்திற்குத் தாவினாள்.

 “மாமா! நீங்க வக்கீலைப் பார்க்க வந்தீங்கன்னு அம்மா சொன்னாங்க. அதுக்கு…” என்று தன் மனதில் இருந்ததைச் சொல்வதற்காக தீபா ஆசையும், வெட்கமுமாக மேலே பேசுமுன், குறுக்கிட்டான் ஜெய்.

‘தன் காதலையும், அன்பையும் அவள் உணரவேயில்லையே. இன்று இவ்வளவு ஆவலாகத் தன் திருமணத்தைப் பற்றித் தானே பேச்செடுக்கும் தீபா, அன்று தங்களுடைய திருமணத்தின் போது எப்படி உம்மென்று, வேண்டா வெறுப்பாக இருந்தாள்?’ என்பதை நினைக்க நினைக்க, அவனால் தாங்க முடியவில்லை.

விருட்டென்று நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளியபடி எழுந்தவன், மேஜையைச் சுற்றி வந்து அவன் எதிரில் வந்து நின்றான்.

அவளுடைய தோள்கள் இரண்டையும் இறுகப் பிடித்தபடி, “இன்னும் நான் என்ன தான் தீபா செய்யணும்? என்னுடைய உணர்வுகளை நீ என்னைக்குத் தான் புரிஞ்சுப்பே?” என்று உணர்ச்சி பொங்கக் கேட்டான்.

திடீரென்று அவன் தன் தோள்களைப் பற்றி உணர்ச்சி பொங்கப் பேசியதும், தீபா குழம்பி விட்டாள். ‘ஒருவேளை, இப்போது மாமாவுக்குத் தன்னோடு சேர்ந்து வாழ விருப்பம் இல்லையோ? அதனால், இப்போது அவர் வக்கீலைப் பார்க்க வந்ததைத் தான் தடுப்பது, அவருக்குப் பிடிக்கவில்லையோ?’ என்று நினைத்தாள்.

அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, வழக்கம் போல் அவள் மௌனமாக இருக்கிறளோ என்று எண்ணியவன், அதற்கு மேலும் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல், “தீபா! என்னால் உன்னை விட்டுக் கொடுக்க முடியாது” என்று கூறியபடி அவளை இழுத்து அணைத்து, அவள் உதடுகளை வேகமாகக் கவ்வினான்.

கடைசியாக அவன் கூறிய வார்த்தைகள் அவள் மனதில் பதிந்து, அதன் முபு அர்த்தத்தை உணரும் முன்பே, அவன் செயல் அவளைத் திசைதிருப்பிவிட, மோகத்தில் மூழ்கினாள் தீபா!

இரு கைகளையும் அவன் கழுத்தைச் சுற்றி மாலையாக்கினாள். அவன் ஆரம்பித்த முத்தத்தில், அவளும் தன் பங்கை அளித்தாள். கைகள் கழுத்திலிருந்து இறங்கி அவள் முதுகை அணைத்துத் தடவிச் சுற்றி வந்த அந்த நேரத்தில் அவன் மார்பில் அவளது முகம் அழுத்தமாகப் பதிந்தது.

அதுவரை வேதனையில் மூழ்கியிருந்த ஜெய்யிற்கு சுய உணர்வு பெற்று தீபாவின் செயலை உணரச் சற்று நேரம் ஆனது. அந்தச் செயல்களின் மூலம் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்ததும் ஆச்சரியமும் ஆனந்தமு போட்டி போட, அவளை மெல்ல விலக்கி நிறுத்தி, “தீபா!” என்று ஆச்சரியத்தோடு வினவ, அந்தச் சிறிது நேரம் கூட அவனை விட்டு விலக விரும்பாமல், அவன் மார்பிலேயே முகம் புதைத்துக் கொண்டாள் தீபா.

இருந்த கொஞ்ச நஞ்க சந்தேகமும் இப்போது தீர்ந்து விட, ஜெய் ஆனந்தமாக அவளை இறுக அணைத்துக்கொண்டான். உணர்ச்சி மிகுதியில் அவன் கண்ணோரங்களில் நீர் துளிர்த்தது. எத்தனை வருடக் காத்திருப்பு இன்று நிறைவேறியது. ஏனோ அந்த நொடியில் அவன் கேட்டதெல்லாம் கிடைத்துவிட்டதைப் போன்ற மன நிறைவு ஏற்பட்டது. சற்றுநேரம் அந்த உணர்வை அனுபவிக்க விரும்பி இருந்த நிலையிலேயே இருவரும் இருந்தனர்.

Advertisement