Advertisement

Chapter 22

         அதற்குப் பிறகு அவர்களுக்கிடையே நிலவிய சகஜமான பேச்சு மீண்டும் குறைந்து விட்டது. நத்தை மீண்டும் தன் ஒட்டுக்குள் புகுந்து கொண்டதை எண்ணிய ஜெய், பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான். தன்னுடைய உணர்வுகளை மறைத்துக் கொண்டு, தொழிலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தான்.

         தீபாவிற்கும் இரண்டாம் வருடத்தின் இறுதித் தேர்வு நெருங்கி விட்டதால், அதில் முழு மூச்சுடன் கவனம் செலுத்தினாள்.

         அதற்கு ஏற்றாற்போல் இறுதித் தேர்வும் சீக்கிரமே வந்து விட, அதை நல்ல முறையில் செய்து முடித்தாள்.

         வீட்டுக்கு வந்து இவ்வளவு நாட்கள் தீவிரமாக வேலை செய்த களைப்பு தீர படுத்துத் தூங்கியவள், உணவைக் கூட மறுத்துவிட்டு, மறுநாள் காலையில் தான் எழுந்தாள்.

         எங்கேயும் அவசரமாக ஒடவேண்டியதில்லை என்பதால் நிதானமாக எழுந்தவள், அதன் பிறகே ஜெய் முன்தினம் இரவு வீட்டிற்குத் திரும்பி வராததை உணர்ந்தாள்.

         கீழே இறங்கி சமையலறையில் இருந்த மஹாலக்ஷ்மியிடம், “அம்மா! மாமா எங்கே?” என்று விசாரித்தாள்.

         அவள் கையில் காபியைக் கொடுத்தபடி “தம்பி நேத்தே கடலூர் போயிட்டானே. அங்க, நம்ம தங்கம் வீட்டுலயே… நைட் தங்கறதா சொல்லிட்டான். நீ தூங்கிட்டு இருந்ததுனால, உங்கிட்டச் சொல்லல” என்றாள்.

         “மாமா எதுக்கும்கும்மா அங்க போயிருக்காரு?” என்று கேட்டபடி, தீபா கையில் இருந்த காபியைக் குடித்தாள்.

         “ஏதோ வக்கீலைப் பாக்கணும்ணு சொல்லிட்டுப் போனான்.” என்று சொல்லிவிட்டு தன் வேலையில் கவனத்தைச் செலுத்தினார் அவர்.

         அம்மா சொன்னதைக் கேட்டபடியே திரும்பிய தீபாவின் கண்களில் நாள்காட்டி தென்பட்டது. மே இருபத்தி எட்டு! இன்றோடு அவா்களுக்குத்  திருமணம் முடிந்து, ஒரு வருடம் ஆகிவிட்டது. இந்த ஒரு வருடம் எவ்வளவு வேகமாக ஓடிவிட்டது? அதற்குள் எத்தனை மாற்றங்கள்? என்னென்ன சம்பவங்கள்!

         ஒரு வருடம் வரை ஒன்றாக இருப்போம், பிறகு பிரிந்து விடலாம் என்று சொன்ன நாளும் வந்தேவிட்டது! அப்போதுதான் அம்மா சொன்னது நினைவில் வந்தது. “ஏதோ ஒரு வக்கீலைப் பார்க்க மாமா கடலுார் போயிருப்பதாக சொன்னாங்களே…! ஒரு வேளை விவாகரத்துக்காக இருக்குமோ?” என்று நினைத்த போதே மனம் திடுக்கிட்டது அவளுக்கு.

         அங்கே இருந்தால் தன் அம்மாவின் கேள்விகள் தொடருமோ என்று பயந்து, தனிமையில் யோசிக்க எண்ணி தன் அறைக்கு விரைந்தாள் தீபா.

         அறைக்குச் சென்று கட்டிலில் அமா்ந்தவளின் மனதில், கடந்த ஒரு வருடத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் ஓடின.  அதில் ஓவ்வொன்றிலும் அவள் மாமா அவளிடம் காட்டிய அன்பும், பரிவும், காதலும், ஆசையும் அவளுக்கு தெள்ளெனப் புரிந்தது.

 ‘முன்பு சொன்னது போல, இப்போது தன்னால் மாமாவைப் பிரிந்து விட முடியுமா?’ என்று யோசித்த போதே, ‘முடியாது!” என்று அவள் மனம் பெருங்குரலில் பதில் சொன்னது. மாமா இல்லாத எதிர்கால வாழ்வை, அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

         ஆனால், அம்மா இப்போது சொன்னார்களே… மாமா வக்கீலைப் பார்க்கப் போயிருப்பதாக. அப்படின்னா, மாமாவுக்கு ஒரு வேளை இந்தத் திருமணத்தை நிஜமாக்குவதில்  விருப்பமில்லையோ? என்ற ஐயம் மனதில் தோன்றிய போதே, மாமா அவளிடம் நெருக்கம் காட்டிய சம்பவங்கள் வந்து, ‘இல்லை’ என்பது போல் தோன்றின.

         எல்லாச் சந்தா்ப்பங்களிலும் மாமாவே அவளிடம் ஆசையோடு நெருங்கியதாகவே தோன்றியது.  அவள் தயக்கத்தோடும், வெட்கத்தோடும் விலகிய போதும்… அவளுடைய விருப்பத்திற்கு மதிப்புக் கொடுத்து, அவராகவே விலகியதுபோல் தானே இருந்தது?  இப்போது சிந்தித்துப் பார்த்தால், தன்னிடம் ஒவ்வொரு முறையும் எதையோ எதிர்பார்ப்பது போல இருந்ததே! ஒருவேளை, தன்னுடைய சம்மதத்தையும், விருப்பத்தையும் எதிர்பார்த்திருப்பாரோ?

         யோசிக்க யோசிக்க, அவளுடைய மனம் தெளிவாகப் புரிந்தது. மாமாவின் விருப்பமும் அவளுக்குப் புரிந்தது போலவே தோன்றியது. அதற்கு மேல் அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

         ஒரு நிமிடம் யோசித்தவள், ஒரு சின்னப் பையில் மாற்று உடையை எடுத்து வைத்துக் கொண்டாள். ஒருவேளை, மாமா இன்றும் அங்கே தங்கம் சித்தி வீட்டில் தங்கிவிட்டு வருவதாக இருந்தால், தானும் அவருடனேயே வர வேண்டும் என்று முடிவு செய்தாள்.

         மடமடவெனத் தலைசீவி முகம் கழுவினாள். பீரோவிலிருந்து மாமா அவளுக்கு வாங்கித் தந்திருந்த பச்சையில் முத்து வேலைப்பாடு செய்திருந்த டிசைனர் புடவையை எடுத்து, அதே பச்சை வண்ண செட் அணிந்து, கண்ணாடியில் தன் அலங்காரத்தைப் பார்த்துக் கொண்டாள்.

முதல் முறையாக ஆடையிலும், தோற்றத்திலும் தான் இவ்வளவு துாரம் அக்கறை எடுப்பது, அவளுக்கே புது அனுபவமாக இருந்தது. எத்தனை முறை அவளுடைய  தோழிகளைக் கிண்டல் செய்திருப்பாள்?  இன்று, தானே…, தன் மனங்கவா்ந்தவன் முன்னால் அழகாகத் தோன்ற வேண்டும் என்று நினைப்பது, சிரிப்பாகவும் வெட்கமாகவும் இருந்தது.

சிறு துள்ளலுடன் பையையும், பர்ஸையும் எடுத்துக் கொண்டு மஹாலஷ்மியிடம் வந்து நின்றாள்.

         “அம்மா! நான் கடலூருக்குப் போயிட்டு வரேம்மா. வரும் போது மாமாவோடயே வந்துடறேன்” என்று சொல்லி விட்டு, அம்மாவின் பதிலுக்குக் கூடக் காத்திராமல் கிளம்பினாள் தீபா.

       ‘முன்தினம்  தீபாவிற்குப் பரிட்சை இருந்ததால், தம்பி தனியாகக் கடலுார் போனான் போலும்…, இன்று ஒரு நாள் கூட அவளைப் பிரிந்து இருக்க முடியாமல், கிளம்பி வரச் சொல்லி விட்டான் போலிருக்கிறது! இவளும் அதுதான் என்று கிளம்பி விட்டாள் போல. ஏதோ, இனியாவது அவர்கள் குடும்ப வாழ்க்கை நன்றாகப் போனால் சரி!’ என்று நினைத்துக் கொண்டாள். திடீரென்று நினைவு வந்தவளாக, “தீபா! கொஞ்சம் நில்லும்மா!”  என்று அவள் பின்னாலேயே ஓடி வந்தவள், தான் ப்ரிட்ஜில் வைத்திருந்த மல்லிகைப் பூவை எடுத்து அவள் தலையில் சூடினாள்.

“பத்திரமாப் போய் வாம்மா! நான் தம்பிகிட்ட போன் பண்ணிச் சொல்லிடறேன்!” என்றவளின் பேச்சு, தீபாவின் காதில் அரைகுறையாகத் தான் விழுந்தது. அவள் தான் ஏற்கனவே கனவில் மிதந்து கொண்டிருந்தாளே!

கடலூர் பஸ்ஸில் ஏறி அமர்ந்தவளின் மனம், சற்று நேரம் பழைய சம்பவங்களை அசை போட்டது. இப்போது, ‘மாமா எப்படித் தன் பதிலை எதிர்கொள்வார்’ என அவள் மனம் இன்பக் கனவுகளில் மூழ்கியது.

இதுவரை தன் படிப்பிலும், குடும்பப் பொறுப்பாலும் இந்த வயதிற்கே உரிய உணர்வுகளைப் புதைத்து வைத்திருந்தாள். இப்போது அவையெல்லாம் தீர்ந்துவிட, அவள் மனம் வாயு வேகத்தில், விட்டதைப் பிடித்து விடும் நோக்கத்தில் பறந்தது.

‘இந்தப் பஸ் ஏன் இப்படி இவ்வளவு மெள்ளப் போகிறது? எப்போது வீடு போய்ச் சேருவது?’ என்று பொறுமையில்லாமல் இருந்தாள். புவனகிரியில் ஒரு இளம்பெண் சிறு குழந்தையுடன் பஸ்ஸில் ஏறினாள். குழந்தை மிகவும் அழகாக இருந்தது. பஸ்ஸில் கூட்டமாக இருந்ததால், அந்தப் பெண் உள்ளே நகர்ந்து, இவள் அருகில் வந்து நின்றாள்.

“குழந்தையுடன் பையையும் வைத்தபடி அவள் தடுமாறியதைப் பார்த்துவிட்டு, குழந்தையை நான் வெச்சுக்கறேன்!” என்று வாங்கிக் கொண்டாள் தீபா.

மடியில் வைத்துக் கொண்டதும், குழந்தை அவளைப் பார்த்து பொக்கை வாயுடன் சிரிக்க, அதைப் பார்க்கவே அழகாக இருந்தது. ‘தனக்கும், மாமாவுக்கும் குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும்?’ என்று கற்பனை செய்து பார்த்தாள். நினைப்பதற்கே இனிமையாக இருந்தது அவளுக்கு.

பஸ்ஸில் ஏறிய ஒரு மணி நேரத்தில், அவள் கற்பனை குழந்தை வரை வந்து விட்டதை எண்ணிச் சிரிப்பு வந்தது. அந்தப் பெண் புதுச் சத்திரத்தில் இறங்குவதற்காகக் குழந்தையை வாங்கிக் கொண்டாள். குழந்தையைக் கொடுக்கும் போது தான், தன் புடவை ஈரமாக இருப்பதை உணர்ந்தாள். குழந்தை சிறுநீர் கழித்திருந்தது. ‘அதைக் கூட உணராமல், தான் இருந்திருக்கிறோமே!’ என்று ஆச்சரியப்பட்டாள்.

‘ஏய் தீபா! ஓரே நாளில் எவ்வளவு மாறிவிட்டாய்? ரொம்பத் தேறிட்டேடி!’ என்று மனதிற்குள் தன்னையே சொல்லிக் கொண்டவள், “கடலூர் ஒ.டி. இறங்குங்க!” என்ற கண்டக்டரின் குரலைக் கேட்டு, பையை எடுத்துக் கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கினான்.

         சித்தியின் வீடு பஸ் ஸ்டாப்பிறகு அருகிலேயே இருந்ததால் நடந்தே சென்றாள். தெரு முனையில் திரும்பிய போதே அவர்களது கார், தங்கம் சித்தியின் வீட்டு வாசலில் நின்றிருப்பதைக் கண்டதும், படபடத்த மனதுடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.

கதவைத் திறந்த தங்கம் சித்தி, “வாங்கம்மா வாங்க இன்ஜினியரம்மா! எத்தனைத் தடவை உங்க ரெண்டு பேரையும் விருந்துக்குக் கூப்பிட்டு இருப்பேன்! ஒரு வழியா, இன்னிக்கு உன் வீட்டுக்காரன் இங்கே வந்தவுடன், பின்னாலயே வந்துட்டே போயிருக்கே?” என்றவரின் பேச்சில் கேலி இருந்தாலும், அன்புடன் அவளது கைகளைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றாள்.

தீபாவின் கண்கள் மாமா எங்கே இருக்கிறார் என்று கண்களால் துழாவ, முன்னால் சென்ற தங்கம் அதைக் கவனிக்காமல், வீட்டில் இருப்பவர்களின் நலத்தை விலாவாரியாக விசாரிக்க ஆரம்பித்தாள்.

 மாமா எங்கேயிருக்கிறார் என்பதைத் தானாகவே சொல்வார் என்று சற்று நேரம் பொறுத்துப் பார்த்த தீபா, பொறுமையிழந்தவளாக, “சித்தி! மாமா எங்கே?” என்று ஆவலாக விசாரித்தாள்.

“என்னடியம்மா! ஒருநாள் கூட மாமாவைப் பிரிந்து இருக்க முடியவில்லையாக்கும்?”

“இல்ல சித்தி. மாமா முக்கியமான பேப்பர் ஒண்ணைக் கொண்டு வரச் சொன்னாங்க. அதான்” என்று தீபா சமாளித்தாள்.

“அவன்  மாடில இருக்கற ரூம்ல தூங்கிட்டு இருப்பான். போய்ப் பாரு” என்று அப்பாவியாகச் சொன்னார் அவர்.

‘தனக்கெப்படி, அப்படிச் சட்டென்று பொய் சொல்லத் தோன்றியது?’ என்று வியந்தாள். ‘காதல் கண்ணை மறைப்பது என்பது இதுதான் போலிருக்கு!’ என்று மனதிற்குள் வியந்தபடி மாடிக்கு விரைந்தாள்.

ஜெய் இருந்த அறைக்கதவு மூடியிருந்தது. மெல்ல அறையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள். ஜெய் அங்கிருந்த மேஜையின் எதிரே இருந்த நாற்காலியில் சரிந்து அமர்ந்தபடி, மோட்டு வளையை வெறித்தபடி இருந்தான். அவன் முகம் வேதனையிலும், விரக்தியிலும் வாடியிருந்தது. இரண்டு மணி நேரம் முன்புதான் மஹாலக்ஷ்மியிடம் இருந்து அவனுக்குத் தொலைபேசி அழைப்பு வந்திருந்தது.

Advertisement