Advertisement

Chapter 21

காலம் எதற்காகவும் காத்திருப்பதில்லை. மாதங்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது. தீபாவின் படிப்பை நிறுத்த வேண்டும் என்ற சண்டை முடிந்து, மேலும் மூன்று மாதம் ஆனது. ஜெய்யின் அம்மா, பிள்ளைக்குப் பயந்து வாயைத் திறக்காவிட்டாலும், அவ்வப்போது முணுமுணுப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

தம்பி சொன்னதைக் கேட்டதிலிருந்து, மஹாலக்ஷ்மி மகளை எதற்காகவும் கண்டிப்பதைக் கூட விட்டுவிட்டாள். அவளுக்குக் கல்லூரியில் வேலை அதிகமாக இருக்கும்போது, வீ்ட்டு வேலையைச் செய்வதைக் கூடத் தடுத்து விட்டாள். ஆனால், எதற்கும் ஒரு முடிவு வரவேண்டும் அல்லவா?

         அன்று தீபாவைப் பார்க்க, அவள் வகுப்புத் தோழர்கள் பத்து பேர் வந்திருந்தனர். வசந்தியும் வந்திருந்தாள். கூடவே பிரவீனும்! பிரவீன்,  வசந்தியோடு படிப்பவன். டெல்லியில் படித்திருந்ததால், தொட்டுப் பேசுவது அவனுக்குத் தவறாக தெரியவில்லை. சில மாதங்களாக அவனும் வசந்தியும் காதலித்து வருகின்றனர் என்றாலும், படிப்பு முடிந்த பின்பே கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். இது அவர்கள் வீட்டுக்குத் தெரியாவிட்டாலும், நண்பர்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் அதை வைத்து ஒருவருக்கொருவர் விளையாட்டாகக் கிண்டல் செய்து கொள்வார்கள்.

         அவர்கள் விளையாட்டாகப் பேசினாலும், உண்மையில் நல்ல பண்பாடு கொண்டவர்கள் என்பதால், தீபா அவர்களிடம் சரி்க்குச் சரியாகப் பேசுவாள். இப்போதும் அப்படியொரு விளையாட்டான வாக்குவாதத்தில், பிரவீன் தீபாவின் கையைப் பற்றிக் கொண்டு, “ஹனி! நான் உன்னைத் தான் முதல்ல சைட் அடிச்சேன். நீ கல்யாணம் ஆனவன்னு தெரிஞ்ச பிறகு, வேற வழியில்லாம… இந்த வாயாடிகிட்ட மாட்டிக்கிட்டேன்! இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல. நீ மட்டும் ‘உம்’ னு ஒரு வார்த்தை சொல்லு…, இவளைக் கழட்டி விட்டு, உன்னத் தூக்கிட்டுப் போயிடறேன்!” என்று சொன்னான்.

         “போடா அரட்டை!” என்று அவன் முதுகில் அடித்துவிட்டுச் சிரி்த்தபடி நிமிர்ந்த தீபா, கோபத்தில் இறுகிய முகத்துடன் நின்றிருந்த ஜெய்சங்கரைப் பார்த்தாள்.

         அன்று, ஏனோ காலையில் இருந்தே ஜெய்யின் மனதில் சலிப்பும், அலுப்பும் மிகுந்திருந்தது. ‘எப்போது தான், தன் இல்லற வாழ்க்கை சரியாகும்? இன்னும் சில மாதங்களிலா…? இல்லை… வருடங்களிலா?’ என எதையெதையோ நினைத்து அவன் மனம் களைத்திருந்தது. ஏற்கனவே அவர்களுக்குத் திருமணமாகி ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டன. அவர்களுடைய மண வாழ்க்கையோ சாண் ஏறுவதும், முழம் சறுக்குவதுமாக கண்ணாமூச்சி ஆடுகிறதே!.

         இதில், இருக்கும் பிரச்சனைகள் போதாதென்று அம்மாவும், அக்காவும் அவர்கள் பங்குக்குப் புதுப் பிரச்சனைகளை உருவாக்குகின்றனரே! முன்னர் இருந்த சலனமில்லாத மனது மீண்டும் எப்போது வரும்? இருள் சூழ்ந்த இந்தக் குழப்பங்கள் எப்போது விலகும்?’ என்று யோசித்தபடி, இருந்த வேலையைத் தொடர மனமில்லாமல், நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று வீட்டுக்குள் நுழைந்தபோது தான், அந்தக் காட்சியைக் கண்டான். அதனால், ஏற்கனவே உள்ளே இருந்த எரிச்சலை அவன் முகம் சட்டென்று எடுத்துக் காட்டியது.

         தீபா ஜெய்யின் கடுகடுத்த முகத்தைப் பார்த்ததும், அவன் எதற்காகக் கோபமாக இருக்கிறான் என்பதை உணராமல், அலுவலகத்தில் ஏதும் பிரச்சனையோ என்று நினைத்தாள். வந்திருந்த அவளுடைய தோழிகள் யாரோடும் எதுவும் பேசாமல், விடுவிடுவென்று மாடியில் இருந்த அவர்களுடைய அறையை நோக்கிச் சென்றான்.

சூழ்நிலை சரியாக இல்லை என்பதை குறிப்பால் உணர்ந்து கொண்ட தீபாவின் தோழிகள் அனைவரும், ஒவ்வொருவராக விடைபெற்றுக் கிளம்பினா். செல்லும்முன் யதேச்சையாகவே அல்லது விளையாட்டாகவோ வசந்தி மட்டும் அவளருகில் வந்து, அவள் காதில் மட்டும் கேட்கும்படியாக, என்னடி! உங்க மாமாவுக்கு நீ பிரவீனோடு நெருக்கமாகப் பழகுனது பிடிக்கலியா? ஒருவேளை பொறாமையா?” என்று கேட்டாள்.

         அவள் கூறியதைக் கேட்ட தீபா ஆச்சரியமாக, “என்னடி உளர்றே! உனக்கு மட்டும் எப்படிடி இப்படியெல்லாம் தோணுது? எங்க மாமா ஒண்ணும் அப்படிப்பட்டவர் இல்லை!” என்றாள்.

வசந்தி செல்லமாக அவள் கன்னத்தில் தட்டி, “நீ இன்னும் வளரவேயில்லைடி! போகப் போக எல்லாம் புரிஞ்சுப்பே” என்று சிரிப்புடன் கூறினாள்.

“சரிங்க பாட்டியம்மா! கத்துக்கணும்னா, கண்டிப்பா உங்ககிட்டயே வரேன். போடி அரட்டை!” என்று கடைசியாக அவளையும் அனுப்பிவிட்டு மாடிக்கு விரைந்தாள்.

 ‘மாடிக்குப் போகும் வழியில் மாமாவுக்கு பிஸினஸால ஏதும் நஷ்டமா…? இல்லை… வேறு ஏதாவது பிரச்சனையா? யாரோடாவது சண்டையா?’ என்று ஏதேதோ யோசித்தாளே தவிர, ‘வசந்தி சொன்னபடி இருக்குமோ’ என்ற சந்தேகம், சிறிதளவு கூட வரவில்லை.

அதனால், அறையில் நுழைந்தபோது ஜெய் தலைமேல் கைவைத்தபடி தலையைக் கவிழ்ந்து அமர்ந்திருக்கவும், மற்றதையெல்லாம் மறந்து வேகமாக அவன் அருகில் போய் “என்ன மாமா? உடம்பு சரியில்லையா? தலை வலிக்குதா?” என்று கேட்டபடி அவன் தோளைத் தொட, கையைத் தள்ளி விட்டவன், அவளை நிமிர்ந்து பார்த்தான்.

பதில் எதுவும் சொல்லாமல் அவளையே பார்த்தபடி இருந்ததால், மீண்டும், “என்ன மாமா? ரொம்ப முடியலியா? தலையை ரொம்ப வலிக்குதா? நான் போய் காபி போட்டுக் கொண்டு வரவா?” என்று  பரிவுடன் கேட்டாள்.

அதற்கும் பதிலி்ல்லாமல் போகவே, “என்ன மாமா! பேசவே மாட்டேங்கறீங்க? என் மேல ஏதும் கோபமா?” என்று கேட்டாள் தீபா.

‘அவசரப்பட்டு வார்ததைகளைக் கொட்டி விடக்கூடாது!’ என்று அதுவரை பொறுமையாக இருந்த ஜெய்யால், அதற்கு மேல் பொறுமையை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.

“உன் மனசுல நீ என்னதான் நினைச்சுட்டு இருக்கே? ஏற்கனவே அம்மாவும், அக்காவும் உன் படிப்பை நிறுத்தச் சொல்லி, சொல்லிட்டு இருக்காங்க. நீ என்னன்னா… பசங்களையெல்லாம் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து, நடு வீட்ல கூத்தடிச்சுட்டு இருக்கே. அம்மா இதைப் பாத்துட்டு மூஞ்சியைச் சுளிச்சுட்டுப் போனாங்களே…! நீ அதைப் பாக்கலியா?” என்று கடுமையாகப் பேசினான்.

“இதுல என்ன தப்பு மாமா? அவங்க எல்லாம் என் ப்ரெண்ட்ஸ். அதுலயும், அவங்க எல்லாம் நல்ல பசங்ச தான். காலேஜ்ல ரொம்ப நாளா பாக்காததுனால, என்னைப் பாக்க வீட்டுக்கே வந்தாங்க. ப்ராஜெக்ட் பத்தி டிஸ்கஸ் பண்ணினோம். அவ்வளவு தான்!” இதுல என்ன தப்பு இருக்கு என்பதுபோல அவனைப் பார்த்தபடி கேட்டாள் தீபா.

“நீ படிக்கிற சிதம்பரத்துல வேணா பசங்க நார்த்ல, மத்த பெரிய ஊா்ல இருந்து வந்து படிக்கறதுனால, இது தப்பா இல்லாம இருக்கலாம். ஆனா, இது சீா்காழி! இங்க இருக்கறவங்க பழைய காலம் மாதிரி தான். அதுலயும், தொட்டுப் பேசறதையெல்லாம், இங்க தப்பா தான் எடுத்துப்பாங்க. நீ இருக்கற இடத்துக்குத் தகுந்த மாதிரி நடந்துக்க வேணாமா? ம்..!”

“மாமா! மத்தவங்க தப்பா நினைச்சா என்ன? ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கறது, பக்கத்துல உக்காருவது எல்லாம் இப்போ காலேஜ்ல சகஜம். அதுக்கு எந்த அர்த்தமும் இல்ல. எனக்கு இதுல எதுவும் தப்பாத் தெரியல.”

“ஓஹோ, அப்படியா? அப்ப, இதுவும் உன் கண்ணுக்குத் தப்பா தெரியுதா… இல்லயான்னு சொல்லு!” என்று சொல்லியபடி எழுந்தவன், அவள் கண்களை ஆழமாகப் பார்த்தபடி… அவளது கையைப் பற்றி சரக்கென்று இழுக்க, அதைச் சற்றும் எதிர்பார்க்காத தீபா அவன் மேல் மோதித் தடுமாறி, அவன் மீதே சாய்ந்தாள்.

மேலே சாய்ந்தவளை விடாமல், இடது கையால் அவள் இடுப்பைச் சுற்றி இறுக்கி அணைத்தபடி, வலதுகையால் அவள் முகத்தை நிமிர்த்தினான். நிதானமாக அவள் உதடுகளை நோக்கித் தலைகுனிந்தான்.

அதுவரை பிரமையில் இருந்த தீபா, அவன் உதடுகள் அவள் உதடுகளைத் தொட்டதும், கண்களை உயர்த்தி அவனைப் பார்த்தாள். அதுவரை அவள் கண்களையே பார்த்திருந்த அவன் கண்கள், ஒருமுறை கண் சிமிட்டி விட்டு மூடிக்கொண்டன.

சிறிது நேரம் அந்த அறையில் எந்தப் பேச்சுமே இல்லை. அமைதி அவர்களைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டது. மெல்ல அவள் முகத்திலிருந்து விலகி நிமிர்ந்து, தீபாவின் முகத்தைப் பார்த்தான்.

கண் மூடியிருந்த அவள் முகத்தில், கோபத்திற்கான சாயலே இல்லை. ஆனால், மனதிற்குள் அவள் என்ன நினைக்கிறாள் என்று சுத்தமாகப் புரியவில்லை அவனுக்கு.

சுற்றியிருந்த கைகளை விலக்கி, கைகளைக் கட்டியபடி அவள் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தவனை, மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தாள் தீபா.

ஒரு புருவத்தை தூக்கியபடி “சொல்லும்மா! இது தப்பா… இல்லையா?” என்று லேசான புன்சிரிப்புடன் கேட்டான்.

“இதுல…” என்று ஆரம்பித்தவளுக்குள் சட்டென்று குழப்பம் எழுந்தது. அதில் தப்பு இல்லை என்று சொன்னால், அவள் இதுபோல் அவள் மாமாவைத் தவிர வேறு யாரையேனும் அனுமதித்திருப்பாளா? நினைக்கவே பிடிக்கவில்லை அவளுக்கு. ஆமாம் தப்பு தான் என்றால், அவள் அடிமனதே சற்றுமுன் நடந்ததை தப்பென்று ஒத்துக் கொள்ளவில்லை.

ஏதோ பேச ஆரம்பித்துவிட்டு சட்டென்று பேச்சை நிறுத்திவிட்ட தீபாவைப் பார்த்துக் கொண்டே இருந்த ஜெய், அவள் எண்ண ஒட்டத்தைச் சரியாகப் புரிந்து கொண்டான்.

மேலும் எதையும் பேசி அவளைக் குழப்ப விரும்பாமல், லேசான புன்னகையுடன் அந்த அறையை விட்டு வெளியேறினான்.

Advertisement