Advertisement

Chapter 20

வீட்டை விட்டு வெளியில் வந்த ஜெய்சங்கரின் முகத்தில் புன்னகையும் மனதில் அளவில்லாத மகிழ்ச்சியும் மின்னின. தான் சிரித்துக் கொண்டே சாலையில் பைக்கில் போவதை யாரும் பார்த்து “லூசோ!” என்று நினைப்பார்களோ என்ற எண்ணமே கொஞ்ச நேரம் சென்ற பிறகு தான் அவனுக்கு உரைத்தது.அதுவரை தன்னுள்ளிருந்து பொங்கிய ஆனந்தத்தை அனுபவித்தவனுக்கு சுற்றுப்புறம் தெரிய ஆரம்பித்தது.

தீபா அவனிடம் காட்டிய நெருக்கத்தையும், உரிமையையும் பார்த்த பிறகு, அவனுக்கு எதிர்காலத்தின் மீது நம்பிக்கை பிறந்தது.

அவன் மனதில் திடீரென்று ஒரு எண்ணம் தோன்றவே, வண்டியை ஓரமாக நிறுத்தினான். தன் செல்போனை எடுத்து, அதில் இருந்த காண்டாக்ட் லிஸ்டிலிருந்து ஒரு நம்பரைத் தேர்ந்தெடுத்து, அந்த நம்பருக்கு உரியவரை அழைத்தான். ஓரிரு நிமிடங்கள் பேசியவன், அழைப்பைத் துண்டித்து விட்டு சட்டைப்பையில் போட்டபின்னர், விசிலடித்தபடியே வண்டியை உதைத்து வேகமாக கிளம்பிப் பறந்தான்.

பொதுவாக அமைதியாக அமர்த்தலாக இருக்கும் ஜெய்சங்கர், இப்படி ரோட்டில் தனியாகச் சிரித்தபடி செல்வது, விசிலடிப்பது என்ற சேட்டைகளை செய்வதை, அவனுக்குத் தெரிந்தவர்கள் யார் பார்த்திருந்தாலும், ஆச்சரியப்பட்டு இருப்பார்கள். ஒருவேளை அதைத் தீபா பார்த்திருந்தால், அதுவும்…. அதற்கான காரணம் தெரிந்திருந்தால்…. உடனே அவன் அன்பை உணர்ந்திருப்பாளோ …. என்னவோ?

ஆனால், அப்படிப் பார்க்காததால், அவள் மனதை வெல்ல இன்னும் ஜெய்சங்கர் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ?

         அன்று இரவே மஹாலக்ஷ்மியை அழைத்து, “அக்கா! நீ தீபாவைப் படிக்க வேண்டாம்னு சொன்னியா? அவகிட்ட, படிப்பை நிறுத்திடச் சொன்னியா” என்றும் கேட்டான்.

         “அதில்லடா தம்பி! அம்மா கேக்கறது போல, கல்யாணமான பொண்ணுக்கு எதுக்குடா படிப்பு? புள்ள குட்டிய பெத்துகிட்டு, புருஷனைப் பாக்கறதுதானே முறை? அவ என்ன, இனிமே வேலைக்கா போகப் போறா? ஏற்கனவே படிச்சதே அதிகம். நீ ஏற்கனவே எனக்குச் செஞ்சிருக்கிற உதவியே ரொம்ப அதிகம். இதுக்கே, நான் ஏழேழு ஜென்மத்துக்கும் கடமைப் பட்டிருக்கேன். இதுல, இவளுக்கு உன்னைப் பாக்கறத விட வேறென்ன வேலை கிடக்கு?” என்று மஹாலக்ஷ்மி பொரிந்து தள்ளினாள்.

         “அக்கா! நீ என்ன சொல்ல வரே? உனக்கு நான் செஞ்ச உதவிக்குப் பதிலா, நீ தீபாவை எனக்கு நேர்ந்து விட்டுட்டியா? இந்தக் கோயில்ல எல்லாம் சாமிகிட்ட வேண்டுனது கிடைச்சா, ஆடு, மாடு, கோழியை நேர்ந்து விடுவாங்களே… அது மாதிரி… உன்னையும், உன் புள்ளைங்களையும் நான் பார்த்துக்கிட்டதுக்குப் பதிலா…, தீபாவை எனக்குப் பலி கொடுத்திட்டியா? என் மேல நீ வெச்சிருக்கற மதிப்புக்கு ரொம்ப நன்றிக்கா!” என்று சலித்துக் கொள்ள, மஹாலக்ஷ்மி பதறிப் போனாள்.

         “அய்யய்யோ! தம்பி நான் அப்படிச் சொல்ல வரலப்பா…!” என்று ஆரம்பித்தவளை இடைமறித்தான் ஜெய்.

         “பின்ன எப்படிக்கா? நீ என்னவோ தீபாவை எனக்குக் கல்யாணம் செஞ்சு குடுத்ததை, உனக்கு நான் செஞ்ச உதவிக்குப் பரிகாரமா ஏன் நினைக்கற? இந்த அம்மா என்னான்னா… ஏதோ ஊருல இருக்கற பேரழகிகளும், பணக்காரப் பொண்ணுங்களும், என்னவோ என்னைக் கல்யாணம் செஞ்சுக்க வரிசை கட்டி நிக்கறதைப் போல பில்டப் குடுக்கறாங்க. நீங்க ரெண்டு பேரும் மாறி மாறிப் பேசி, எங்க ரெண்டு பேர் மனசுலயும்… தாழ்வு மனப்பான்மையைக் கொண்டு வந்துருவீங்க போல!” என்றான் வருத்தத்துடன்.

         “அய்யய்யோ! தம்பி… அப்படியெல்லாம் இல்லப்பா…! என்று மீண்டும் தொடங்கிய மஹாலக்ஷ்மியை, மீண்டும் கைகாட்டி நிறுத்தினான்.

         “இருக்கா! நான் சொல்ல வந்ததைச் சொல்லி முடிச்சுடறேன். அம்மா, உன்னை ஒடுகாலின்னு சொல்றத விடறதா இல்ல; பழசையும் மறக்கறாதாவும் இல்ல. இனிமே, இத்தனை வயசுக்கு மேல… அவங்களை மாத்த முடியாது. அவங்களா புரிஞ்சுகிட்டாதான் உண்டு.

         ஆனா… நீ செஞ்ச தப்புக்கு, உன் புள்ளங்க…, அதுவும் முக்கியமா தீபாவை, இன்னும் எத்தன வருஷம்தான் பலிகடாவா ஆக்கப் போற? அவளோட வயசுல காதல் கண்ண மறைக்க, நீ ஒரு அயோக்கியனைக் கல்யாணம் பண்ணி உன் வாழ்க்கையைப் பாழாக்கிட்ட! அப்ப நீ படிச்சிருந்தா, இன்னிக்கு நீ இப்படிக் காலத்துக்கும் அம்மா கைல ஏச்சும், பேச்சும் கேட்டுக்க வேண்டிய நிலைமை இருந்திருக்குமா?”

         “அந்தப் பொண்ணு இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து, அது வயசுக்கு உண்டான சந்தோஷம் எதையாவது பாத்திருக்கா? நீ, அவ வயசுல இவ்வளவு வேலை செஞ்சிருக்கியா? காதலிச்சு இந்த வீட்டை விட்டுப் போறவரைக்கும் மகாராணி போலத் தானே இருந்த?”

         “அது நாள் முழுக்க வீட்டுல வேல செஞ்சுட்டு, போட்டதைச் சாப்பி்ட்டுட்டு, குடுத்த துணியை போட்டுக்கிட்டு, கூடவே படிக்கவும் செஞ்சது. ஒரு நாளாவது, இது வேணும்… அது வேணும்னு கேட்டிருக்குதா? அடம் பிடிச்சிருக்குதா? உன் மத்த புள்ளங்க கூட, கொஞ்சம் அடம் பிடிப்பாங்க.”

        “ஆனா தீபா? சின்ன வயசுலயே மூத்த பொண்ணுன்னு, நீ அது தலைல சுமக்க முடியாத பாரத்தைத் தூக்கி வச்ச. நீ எடுத்த முடிவு தவறா போனதுனால வந்த விளைவை, அவளையும் சுமக்க வெச்ச. உன் கடன் கழியணும்னு… எவனோ நொண்டியோ, முடமோ… கட்டிக்குடுன்னு ஒத்தக் கால்ல நின்ன! இப்ப, அவ படிப்பை நிறுத்தச் சொல்ற. உனக்கு அப்படி என்னக்கா அவமேல கோவம்?”

         “அய்யய்யோ தம்பி!” என்று மீண்டும் மஹாலக்ஷ்மி அலறினாள்.

         “இல்லக்கா! இன்னிக்கு, இதுக்கு ஒரு முடிவு எடுத்துடலாம். இது நாள் வரைக்கும், நீ உன்னோட வாழ்க்கையிலயும், தீபாவோட வாழ்க்கையிலும் நிறைய தப்புத் தப்பா முடிவு எடுத்திருக்கே. ஆனா, இப்ப அவ என் பொண்டாட்டி. எங்க வாழ்க்கைய எப்படி அமைக்கணும்னு, எங்களுக்கும் தெரியும்கா. அம்மா சொல்றதுக்காகவோ… இல்ல… ரோட்ல போறவங்க சொல்றதுக்காகவோ, அவ படிப்பை நிறுத்த… நான் அனுமதிக்க மாட்டேன்.”

         “எப்பக் குழந்தை பெத்துக்கணும்கறது எங்களோட சொந்த விஷயம். இனிமே, அதுல மத்தவங்க தலையிடறத நான் அனுமதிக்க மாட்டேன். எப்ப நீ அவளை எனக்குக் கல்யாணம் செஞ்சு குடுத்துட்டியோ, இனிமே உனக்கும் இதுல தலையிற உரிமை இல்ல. நான் சொல்றது உனக்குக் கொஞ்சம் கடுமையா இருக்கலாம். ஆனா, இனிமே என் பொண்டாட்டியை, அவ அம்மா கூட அநியாயமா பேச… நான் விடமாட்டேன். என் பொண்டாட்டிய அவளுக்கு ஏத்த இடத்துல உக்கார வெச்சுப் பாக்காம, நான் விடமாட்டேன்.”

         ஜெய் தீவிரமான முகத்துடன் உறுதியாக மஹாலக்ஷ்மியிடம், தன் மனதில் இருந்ததைக் கொட்ட, திறந்த வாய்மூடாமல் அவன் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த மஹாலக்ஷ்மி, கண்ணீர் மல்க அவன் கைகளைப் பற்றிக் கொண்டார்.

         “தம்பி! நீ சொன்னது மனசுக்குக் கஷ்டமாக இருந்தாலும், நீ சொன்னது பூரா உண்மைப்பா. என் பொண்ணு… தப்பு தப்பு! உன் பொண்டாட்டி… இதுவரைக்கும் எந்தச் சுகமும் அடைஞ்சதில்ல. வயசு புள்ளைங்களுக்கு இருக்கற சின்னச் சின்ன ஆசைகளைக் கூட, அவ கண்டது கிடையாது. நீ சொன்னது போல… நான் வயசுக் கோளாறுல முடிவெடுத்து, என் புள்ளைங்களையும் கஷ்டப்பட வெச்சுட்டேன். என் சுமையை அதுங்க மேல ஏத்திட்டேன். ஆனா, அத்தனைக்கும் பரிகாரமா உன்னப் போல அவளை நல்லா புரிஞ்சுகிட்ட ஒரு புருஷன் கிடைச்சது…, அந்தச் சாமி புண்ணியம். நீ சொன்னது போல, இனிமே நான் அவளை எதுவும் சொல்ல மாட்டேன்!” என்று உறுதி அளித்தாள்.

         “அக்கா! நான் வேகமா பேசினத மனசுல வெச்சிக்காத. திரும்பத் திரும்ப ஏதாவது பிரச்னை வந்து, அவ கண்ணு கலங்க நிக்கறத, என்னால பாக்க முடியல!” என்று ஜெய் சமாதானமாகப் பேசினான்.

         மஹாலக்ஷ்மி கண்களில் கண்ணீரும், அதற்கு மாறாக உதட்டில் புன்னகையுமாகத் தலையை மறுப்பாக அசைத்து, அவன் கைகளை இறுகப் பற்றி அழுத்தினாள். இருவரும் அவர்களது மனதில் இருந்த எண்ணங்களைத் தீவிரமாகப் பரிமாறிக் கொண்டிருந்ததால், மாடியிலிருந்து இறங்கிய தீபாவைச் சுத்தமாகக் கவனிக்கவில்லை.

         குடிக்கத் தண்ணீர் எடுத்து வருவதற்காக வந்த தீபா, ஜெய் பேசியது முழுவதையும் கேட்டது அவர்களுக்குத் தெரியாது. தன் தாயை விடத் தன் மேல் அன்பும், பரிவும் வைத்திருக்கும் மாமாவை எண்ணி, அவள் மனம் நெகிழ்ந்தது. உணர்ச்சி மிகுதியால் கண்களில் வழிந்த நீரைத் துடைத்தபடி, வந்த வழியே திரும்பிச் சென்று படுக்கையில் அமர்ந்தாள் அவள்.

         மனம் முழுக்க முழுக்க, மாமா அவள் மேல் காட்டிய பரிவையும், பாசத்தையும் எண்ணிப் பெருமிதம் பொங்கியது. இதுதான் காதல் என்பதை இன்னும் அவள் உணரவில்லை. அதற்காகத் தான் அவளது மாமா காத்திருக்கிறார் என்பதையும் அவள் உணரவில்லை.

Advertisement