Advertisement

Chapter – 2

அவனது பதின்மூன்றாவது வயதில் அவனுடைய அப்பா, அவா்கள் அனைவரையும்– அம்மா மஹாலக்ஷ்மி, அவள், பன்னிரண்டு வயது சுபா, எட்டே வயதான தம்பி சபாபதி– தீடிரென ஒரே நாளில் தெருவில் நிறுத்தியபோது, அதைச் சரியாகப் புரிந்து கொள்ளக் கூட அவளுக்கு வயதில்லை.

பதினெட்டு வயதில் அவளுடைய அம்மா மஹாலக்ஷ்மி, டைப்பிங் கிளாஸுக்குச் செல்லும் வழியில் சந்தித்த ஸ்டாலினைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த போது, அவளுடைய அப்பாவால் அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை.

அரிசி வியாபாரம் செய்து எளிமையாக வாழ்ந்தாலும் ஜாதிப்பற்று அதிகம் இருந்த அவருக்கு, ஜாதிச்சங்கத்தில் நல்ல மரியாதை இருந்தது. அதிக வசதியில்லாவிட்டாலும் கிளி போல இருந்த தன் மகளுக்கு, தன் ஜாதியிலேயே நல்ல மாப்பிள்ளையைத் தேட ஆரம்பித்திருந்தார்.

இருபது வயதிற்குள் பெண்களுக்குத் திருமணம் செய்வதுதான் அவா்கள் ஜாதி்யில் வழக்கம். இந்தத் திட்டத்தில் இருந்த அவருக்கு, தன் மகள், தங்களை விடக் கீழான ஒரு சாதியில் உள்ள ஒரு பையனை விரும்புவதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, அமைதியாகத் தன் மகளை மாற்ற முயன்றார்.

சிறு வயது முதல், அவரது ஓரே மகளாக இருந்ததால், தான் நினைத்ததையெல்லாம் சாதித்துப் பழகிய மஹாலக்ஷ்மி, பிடிவாதத்துடன் வீட்டை விட்டு வெளியேறி ஸ்டாலினை மணந்து கொண்டாள்.

ஆரம்பத்தில் அவர்களுடைய திருமண வாழ்க்கை நன்றாகத் தான் இருந்தது, தீபாவும், அவள் பின்னால் சுபாவும் பிறக்கும் வரை. அதற்குப்பின், ஸ்டாலினுக்கு மஹாலக்ஷ்மியின் அழகு, குணம் எல்லாமே கசந்துவிட்டது. எந்தச் சீரும் இல்லாமல், வெறும் கையுடன் அவள் வந்தது மட்டும் மனதில் வெறுப்பாக உருவெடுத்தது.

வாய்ச் சண்டையில் ஆரம்பித்து அடிதடியில் தொடர்ந்தவனுக்கு, அவனுடைய கிளார்க் வேலையில் முன்பு போல நினைத்தபடிச் செலவு செய்ய முடியவில்லை. இரண்டு  குழந்தைகள் பிறந்து விட, அந்தச் செலவு வேறு கையைக் கடித்தது. அவனுடைய உறவினர்களுடன் முன்பு ஒட்டாதிருந்தவன், இப்போது அவா்கள் பேச்சைக் கேட்க ஆரம்பித்திருந்தான். அவர்களின் ஆலோசனைப்படி மஹாலக்ஷ்மியை பிறந்த வீட்டிற்குப் போய், காசு வாங்கி வர வற்புறுத்தினான்.

“பெற்றோரை எதிர்த்துக் கொண்டு வந்துவிட்டேன்; இனி, நான் அந்த வீ்ட்டுக்குப் போக மாட்டேன்!” என்று பிடிவாதமாக அவள் மறுத்ததில், கோபம் பொங்கியது அவனுக்கு.

அவள் செய்த எதுவும் பிடிக்கவில்லை. சமையலில் குறையைக் கண்டுபிடித்துத் தூக்கியெறிந்தான். சுவரில் மோதி அடித்தான். சிறுகுழந்தைகளான தீபாவையும், சுபாவையும் பார்த்தாலே ஆத்திரமாக முறைத்ததால், இருவருமே அவனைப் பார்த்தாலே பயந்தனர். அம்மாவை அடிக்கும்போது இருவரும் பயந்து அழுதபடி ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு சுவரோரம் ஒடுங்கியபடியே பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

இந்தப் பிரச்சனைகளுக்குப் பிறகு, ஒரு நாள் கூட அவளை வெளியே  அழைத்துப் போனதில்லை. அவளுக்கோ, தன் குழந்தைகளுக்கோ நல்ல துணிமணிகளை வாங்கித் தந்ததில்லை. தன் வரையில் எப்போதும் ‘டீக்‘காக உடையுடுத்தி தன் சௌகரியங்களுக்குப் போக மீதியிருந்த குறைந்த பணத்தை மட்டுமே கொடுத்த போது கூட, மகாலஷ்மி அதைப் பெரிதாக நினைக்கவில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகிவிடும் என்றே அவள் நம்பினாள்.

 ஆனால் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்த பிறகு, நிலைமை இன்னும் மோசமானது. வேறு ஒரு பெண்ணுடன் அவனை அங்கே, இங்கே பார்த்ததாகப் பலர் கூறியபோது, முதலில் மஹாலக்ஷ்மி நம்பவில்லை. ஆனால், அவளே ஒருநாள் நேரி்ல் இருவருமாக வண்டியில் நெருக்கமாகச் சிரித்தபடிப் போனதைப் பார்த்ததும், எல்லாவற்றையும் வெறுத்து விட்டாள். இந்தக் காட்சி பேரிடியாக தலையில் இறங்க, அவளது பொறுமை பறந்து போனது. அவனே சொல்லட்டும் என்று பொறுமையாகக் காத்திருந்தற்கும் ஒரு முடிவு வந்தது.

டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்துப் போடும்படி அவன் வந்து நின்ற போது, அவள் கொதித்து விட்டாள். தன்னைத் துரத்தித் துரத்தி விரும்பிக் காதலித்தவனுக்கு, இப்போது எட்டிக்காய் போல் தான் அடியோடு கசந்து விட்டதை உணர்ந்த போது, விரக்தி மேலிட்டது அவளுக்கு.

இனி, எவ்வளவுதான் போராடினாலும் அதனால் பயன் இல்லை என்று உணர்ந்தவள், அதில் கையெழுத்துப் போட்டாள். கூடவே, தனக்கு ஜீவனாம்சம் தேவையில்லை என்றும் எழுதிக் கொடுத்தாள். அருமையாகப் பெற்ற தன் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிக் கூடச் சிந்திக்காமல், எப்போதும் தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்கும் சுயநலவாதியான அவனுடைய பணம் கூட, தங்களுக்குத் தேவையில்லை என்று முடிவெடுத்தாள். வீட்டை விட்டு மூன்று குழந்தைகளோடு வெளியேறினாள்.

வெளியே வந்தபிறகு தான் தெரிந்தது, தான் எடுத்தது உணர்ச்சிப் பூர்வமான முடிவு என்று. கையில் பணமில்லை, படிப்புமில்லை, வேலையும் கிடையாது. அடுத்த வேளை சாப்பாட்டுக்குக்கூட வழியில்லை. ஸ்டாலினைப் பொறுத்தவரை, இவ்வளவு சுலபமாகப் பிரச்சனை முடியும் என்று அவன் நினைக்கவில்லை. அவர்கள் போனதும், விட்டது தொல்லை என்று அவர்களைச் சுத்தமாக மறந்து விட்டான் அவன்.

பிடிவாதமாக, முன்பின் சிந்தித்துப் பார்க்காமல் எடுத்ததின் முடிவு அவளுடைய வாழ்க்கையும் இப்போழுது அழிந்து விடும் போலிருக்கிறது. வேறு வழியே இல்லாமல், அவளுடைய தந்தை வீட்டு வாசலில் வந்து நிற்கும்படி ஆனது.

Chapter – 3

அனாதையாக மூன்று குழந்தைகளோடு வந்து நின்ற பெண்ணை, ஏற்றுக்கொள்ள அவருக்கு முதலில் மனமில்லை. தன்னுடைய பேச்சைக் கேட்காமல், சாதி ஜனங்களின் நடுவே தன்னைத் தலை குனிய வைத்துவிட்டு, இந்தக் குடும்பத்தையும் உதறிவிட்டுப் போன மகளை, வாசலிலேயே நிறுத்தி வைத்துக் கோபமாகப் பல கேள்விகள் கேட்டார். கூடவே அவனது அம்மாவும் தன்னுடைய கோபத்தைக் கொட்டினாள்.

இடுப்பில் மகன் சபாவும், குட்டியாக தீபாவும், சுபாவும். அம்மாவின் புடவைத் தலைப்பைப் பிடித்தபடி எட்டிப் பார்த்தவர்களுக்கு, தாத்தா பாட்டியின் கோபம் பயமுறுத்தியது. தன்னுடைய முன் கோபமும், பிடிவாதமும், தன்னை மட்டுமின்றி, தன் குழந்தைகளையும் வீதியில் நிறுத்திய நிலையில், வாயைத் திறக்கக் கூட வழியில்லாமல், கண்ணீர் விட்டபடியே தலைகுனிந்து நின்றாள் மஹாலக்ஷ்மி.

பெற்றவர்கள் இருவரும் போட்ட சத்தத்தில், தெருவிலிருந்த அனைவரும் வேடிக்கைப் பார்த்தனர். அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்க அவர்களுக்காகப் பரிந்து பேசியது, அவளது தம்பிகள் ராஜாவும், ஜெய்சங்கரும் தான்.

“அப்பா! அக்கா செஞ்சது தப்புதான். ஆனா இப்போ, போவதற்கு வேற புகலிடம் இல்லாமல் நம்பளை நம்பி வந்திருக்காளே! இந்தக் குழந்தைங்களைப் பாருங்க. உங்க பேச்சைக் கேட்டு பயப்படுதுங்க. தெருவில வேற எல்லாரும் வேடிக்கைப் பாக்கறாங்க! முதல்ல உள்ள கூப்பிடுங்கப்பா!” என்று சொன்ன ஜெய்சங்கர் சபாவை வாங்கிக் கொண்டு, தீபாவையும், சுபாவையும் உள்ளே அழைத்து வந்தான்.

ராஜாவோ, “வாங்க!” என்று சொல்லி மஹாலக்ஷ்மியின் கையிலிருந்த பெட்டியை வாங்கிக் கொண்டு உள்ளே வந்தான்.

உள்ளே வந்த பிறகும் அவர்கள் இருவரும் ஓயவில்லை. “டேய் ராஜா! இவ வேற சாதில கல்யாணம் பண்ணிக்கிட்டு, இப்ப வாழாவெட்டியா இங்கே வந்திருக்கா! இப்பத்தான், உனக்குப் பொண்ணு பாத்துட்டு இருக்கோம். நம்ப சாதியில எல்லாரும் ரொம்பக் கட்டுமானமா இருக்கறவங்க. உனக்கு யாருடா பொண்ணு கொடுப்பா?” என்று அம்மா ஆதங்கமாகக் கேட்டாள்.

மஹாலக்ஷ்மியின் மூத்த தம்பி ராஜா, தமிழ்நாடு எலக்ட்ரிசிடி போர்டில் கிளார்க்காக இருந்தான். ஜெய்சங்கர், அப்போது தான் ப்ரிட்ஜ், ஏசி ரிப்பேர் செய்ய சிறியதாகக் கடை திறந்திருந்தான். ராஜாவுக்கு இருபத்தியாறு வயதும், ஜெய்சங்கருக்கு இருபத்தியொரு வயதும் ஆகியிருந்தது.

“அம்மா! இதைப்பத்தி யோசிக்காதீங்க. எல்லாம் இதுக்கேத்த பொண்ணு வந்தா போதும்!” என்று முடித்துவிட்டான். அண்ணனும், தம்பியும் இல்லாவிட்டால், அந்த வீட்டில் அவர்களுடைய நிலைமை ரொம்ப மோசம்தான்.

பெற்ற அம்மாவாகவே இருந்தபோதும், தன்னை மீறிச் சென்ற பிறகு மஹாலக்ஷ்மி அவர்களுக்குத் தாங்கள் பெற்ற மகளாகத் தெரியவில்லை; வேண்டாத சுமையாகவே தெரிந்தாள். குழந்தைகளோ, ஒடிப்போன வேற்று சாதி அப்பனை நினைவுபடுத்தியதால், இருவருமாக அவர்களை ரொம்பவே கொடுமைப்படுத்தினர்.

மஹாலக்ஷ்மி வந்தபிறகு, நன்றாகவே இருந்த அம்மா, உடம்பு சரியில்லை என்ற காரணம் காட்டி, வீட்டு வேலைகள் முழுக்க இவர்கள் தலையில் கட்டினாள். மஹா சமையல் செய்ய, வீட்டைச் சுத்தம் செய்வது, பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது போன்ற வேலைகள் தீபாவின் தலையில் விழுந்தன. சுபாவும் கூட வேலை செய்யவேண்டும்.

சமைத்தபின் தன் இரண்டு பிள்ளைகளும், தாங்களும் சாப்பிட்ட பிறகே, அவர்கள் சாப்பிட வேண்டும் என்பது சட்டமானது. சமயத்தில் ராஜாவோ, ஜெய்யோ இரண்டு மூன்று மணிக்குச் சாப்பிட்டால், அதுவரை இவர்களும் சாப்பிட முடியாது. ஏதேனும் புதிதாகப் பதார்த்தங்கள் செய்தாலும், இவர்களுக்குக் குறைவாகவே கிடைக்கும்.

சபா ஆசைப்பட்டு இன்னொன்று கேட்டு அழுதால், திட்டு தான் விழும். அதற்குள் பதின்மூன்று வயதான தீபா, பிறந்ததில் இருந்தே இதுபோன்ற நிகழ்வுகளைப் பார்த்தே வளர்ந்திருந்ததால், தன் பங்கையும் தம்பிக்குத் தந்து விடுவாள்.

ராஜா, ஜெய் இருவரும் வீட்டிலிருக்கும்போது இது போல நடந்தால், தங்கள் அம்மாவைத் தட்டிக் கேட்பார்கள். பிறகு, அவள் அப்படித்தான் என்று விட்டு விட்டு, தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தது அவர்கள் தான்.  இருவரும் சுமாரான நிலையில் இருந்தாலும், மூவரையும் அரசுப் பள்ளியில் சேர்த்தனர்.

மூன்று குழந்தைகளும், எது தேவையானாலும் கேட்பது தங்கள் மாமாக்களிடம் தான். அதிலும், அதிகமாக உதவியது ஜெய்சங்கர் தான். தன் வீட்டில் அக்கா இருந்த நிலைமையைப் பார்த்து, இது சரி வராது என்று அவளுக்கென்று ஒரு தொழிலை ஏற்படுத்திக் கொடுத்ததும் அவன்தான்.

மஹாலக்ஷ்மியை பேங்குக்கு அழைத்துச் சென்று சிறுதொழில் செய்ய லோன் வாங்க ஏற்பாடு செய்தான். தானே இடம் பார்த்து, சிறிதாக டெலிபோன் பூத் வைக்க ஏற்பாடு செய்தான். கூடவே இரண்டு ஜெராக்ஸ் மெஷின்களை வாங்கிப் போட்டு, அதன் மூலமாகவும் வருமானம் வர ஏற்பாடு செய்ததும் அவன்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக வருமானம் வர ஆரம்பித்ததும், ஜாடைப் பேச்சுக்கள் குறைந்தாலும், வீட்டில் வேலைகள் மட்டும் குறையவில்லை. இப்போது மஹாலக்ஷ்மி கடைக்குச் செல்வதால், சமையல் வேலையையும் தீபாவும், சுபாவும் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது.

கடந்த காலம் ஒரு நிமிடத்தில் மனதில் ஒடி மறைய, மனதிற்குள் மாமாவை நன்றியோடு நினைத்துக் கொண்டு பரிட்சை எழுதச் சென்றாள் தீபா, கூடிய சீக்கிரமே மாமாவைத் தான் வெறுக்கும் நிலை வரப்போவதை அறியாமல்.

Advertisement