Advertisement

எப்போதுமே அம்மாவை மட்டுமல்லாமல் யாரையும் எதிர்த்துப் பேசி அறியாத தீபா, அம்மாவின் பேச்சில் இருந்த அநியாயத்தை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் இருந்து விட்டாள்.  இருந்தாலும், எங்கே தன்னுடைய படிப்பை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் எழுந்தால், தனிமையில் தங்கள் அறையில், தன் விதியை நொந்தபடி கண்ணீா் வடித்தபடியே படுத்திருந்தாள்.

         தன்னுடைய தொழில் தொடர்பான ஒரு தொலைபேசி எண்ணை எடுக்க அறைக்குள் வந்த ஜெய், அவள் அழுதபடியே படுத்திருப்பதைப் பார்த்ததும் பதறிப் போய் அவளருகில் வந்தான்.

         “தீபா! என்னாச்சு? ஏன்  அழறே?” என்று அவளருகில் வந்து அவள் தலைமுடியைக் கோதியபடி கேட்க, அது வரை அவன் வந்ததை அறியாமல் தன் வேதனையில் மூழ்கியிருந்தவள், அவன் குரல் கேட்டு முகத்தை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள்.

         இன்பம் வரும்போது அதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதும், துனபம் வரும்போது அதை உற்றவரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வதும் தானே மனித இயல்பு? அதுபோல, இப்போது தன் கல்விக்கு வந்த கண்டத்தை எண்ணி அழுதவள், மாமாவைப் பார்த்ததும் பொங்கி அழுதாள். சிறு குழந்தை போலத் தாவி அவன் கழுத்தை இரு கைகளாலும் இறுகக் கட்டியபடி, அவன் தோளில் முகம் புதைத்து அழுது தீர்த்தாள்.

         அந்த நேரத்தில், ஜெய் அவளுக்கு ஒரு ஆணாகவோ, விருப்பமில்லாமல் தான் மணந்து கொண்ட கணவனாகவோ தெரியவில்லை. சிறுவயது முதல் தன் கஷ்டங்களையெல்லாம் பகிர்ந்து கொண்டு அரவணைக்கும் தாயுமானவனைப் போல் தோன்றியதால், தன் செயலை அவள் தவறாகவே நினைக்கவில்லை.

         ஆனால், துன்பத்திலாவது தன் மனைவி அவளாகவே தன்னை நெருங்கினாளே என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஜெய், அவளை அணைத்தபடி அவள் முதுகையும், தலையையும் தடவி அவளை ஆறுதல்படுத்த முனைந்தான். அவளுடைய அழுகை மெல்லக் குறைந்து விசும்பலானவுடன், அவள் தோளைப் பற்றி மெள்ள அவளை விலக்கிவிட்டு, கவிழ்ந்திருந்த அவள் முகத்தை நிமிர்த்தினான்.

         “தீபா! என்னம்மா ஆச்சு? ஏன் இப்படி ஆழறே? நீ சொன்னாத் தானே எனக்குத் தெரியும்? ம்…” என்று மென்மையாக கேட்டான்.

         விசும்பலுடன், “மாமா!” என்று ஆரம்பித்து, அம்மா சொன்னதை முழுவதும் சொல்லி முடித்தாள்.

         “மாமா! என்னுடைய படிப்பை நிறுத்திடுவீங்களா?”  என்று கண்ணீரோடு கேட்டாள்.

         அந்த நேரத்தில் தன் காதல் மனைவி மனம் வாடி நின்ற கோலம் தாங்காமல், அவளை அள்ளி அணைத்து, ‘இந்த உலகம் முழுவதிலும் இருந்து வரும் எதிர்ப்பை, தான் தடுத்து நிறுத்திவிட வேண்டும். தான் அவள் மேல் கொண்டிருக்கும் மலையளவு காதலை அவள் மேல் கொட்டி, அவளைத் தன்னுடையவளாக்கிக் கொள்ள வேண்டும்!’ என்று விஸ்வரூபம் எடுத்த எண்ணத்தைக் கஷ்டப்பட்டு அடக்கினான்.

         உணா்ச்சி மிகுதியால் கரகரத்த குரலில், “தீபா! மாமா இருக்கும் போது நீ ஏம்மா கலங்கறே? ஆயா சொன்ன வார்த்தையால ஏற்பட்ட வலியை, அக்கா உன் மேல் கோபமா கொட்டிட்டாங்க. உன் படிப்புக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாம நான் பார்த்துக்கறேன். சரியா?” என்று கூறி அவள் கண்ணீரைத் துடைத்து, கலைந்திருந்த அவள் முடியைக் கோதிவிட்டான்.

         தன் படிப்புக்கு எந்தப் பிரச்சனையுமில்லை என்ற நிம்மதியில் தீபா அவனைப் பார்த்து மெலிதாகப் புன்னகைக்க, அதற்கு மேல் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத ஜெய், அவள் உதட்டின் மேல் தன் உதடுகளை அழுந்தப் பதி்த்தான்.

         “தீபா!” என்று அவன் குரல் தாபத்துடன் அழைக்க, அவன் செய்கையில் உடலில் பாய்ந்த மின்சாரத்தால் மெய்மறந்து நின்றாள் தீபா. அவளிடமிருந்து எதிர்ப்போ, ஒதுங்கலோ இல்லாததால், மேலும் துணிவடைந்து அவன் உதடுகள் அடுத்து அவள் கழுத்தில் ஆழமாகப் புதைந்தன. கைகள் இரண்டும் இரும்பு வளையங்களாக அவளை இறுக்கி அணைத்தன.

         உணா்ச்சி மிகுதியால் தீபா அவன் தோளில் முகம் புதைக்க, அவன் கைகள் அவள் இடுப்பை இறுகப் பற்றின. அதற்கு மேலும் அவன் கைகள் முன்னேற முயல, இயல்பான கூச்சத்துடன், “மாமா!” என்று சிணுங்கியபடி, சிவந்த முகத்துடன் அவனிடமிருந்து விலக முயன்றாள் தீபா.

         சொர்க்கத்தில் இருந்த ஜெய், திடீரென்று தீபா தன்னிடமிருந்து விலக முயல, அவசரமாக அவளுடைய முகத்தைப் பார்த்தான். அதிலிருந்த வெட்கத்தைக் கண்டு, அவள் தன்னை வெறுத்து ஒதுங்கவில்லை. பெண்களுக்கே உரிய இயல்பான கூச்சத்தினால் விலகுகிறாள் என்பதை உணர்ந்தான்.

எதிர்காலத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை மனதில் வர,  ‘அவசரப்படாதேடா மச்சான்! கண்ட்ரோல் பண்ணிக்க’ என்று தன் மனதுக்கு ஒரு ஆணையைப் போட்டு, இறுக்கியிருந்த கைகளைத் தளர்த்தி தீபாவை விடுவிடுத்தான்.

         உல்லாசமாக தீபாவைப் பார்த்துச் சிரி்த்தபடி “என்ன தீபா? அழுத புள்ள சிரிச்சுதா? கழுதைப் பாலைக் குடிச்சுதா?” என்று சின்ன வயதில் அவளைக் கிண்டல் செய்வதற்காகக் கூறிய வார்த்தைகளை மீண்டும் கூறி, கண்களைச் சிமிட்டினான்.

         “போங்க மாமா!” என்றவள், மேலும் சிவந்த முகத்தைத் தலைகுனிந்து மறைத்தபடி நின்றாள்.

         ஆமா தீபா! போக வேண்டியது தான். நான் முக்கியமான ஒரு போன் நம்பரைத் தேடி வந்தேன். ஆனா இங்க நடந்த கலாட்டாவுல, எல்லாத்தையும் மறந்துட்டேன். இப்ப உடனடியா கிளம்பணும்” என்று கூறி, தான் தேடி வந்த தொலைபேசி எண்ணை மேஜை மேலிருந்து எடுத்துக் கொண்டவன், “வரட்டுமா” என்று கேட்டபடி கிளம்பினான்.

அதுவரை அவனைப் பார்த்தபடியே இருந்த தீபா, “மாமா” என்று  அவசரமாக அழைத்தாள்.

         “என்ன தீபா?” என்றபடி ஜெய் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“வேற சட்டையை மாத்திக்கோங்க மாமா.”

         “ஏன் தீபா? இந்தச் சட்டை நல்லா தானே இருக்கு?” என்று கேட்டவனை நோக்கி தீபாவின் கை உயர்ந்தது. அது, அவனது தோளில் இருந்த கறையைச் சுட்டிக் காட்டியது.

         அழுதபோது அவள் நெற்றியில் இருந்த சிவப்பு நிறச் சாந்து கரைந்து, அவன் வெள்ளைச் சட்டையில் படிந்து, நன்றாகத் தெரிந்தது. அதைப் பார்த்தவுடன் ஜெய் அந்தச் சட்டையைக் கழற்றி, ஆசையாக அந்தச் சட்டையை மடித்தபடி, உடைகள் இருந்த பீரோவை நோக்கிப் போனான்.

         “இந்தச் சட்டையைத் தோய்க்க வேணாம் தீபா! இந்தச் சட்டை என் வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான நாளின் நினைவுச் சின்னம்!” என்று கூறியபடி, அதை லாக்கரில் பத்திரமாக வைத்தான்.

         வேறு ஒரு சட்டையை எடுத்து அணிந்தபடி, “போய் வரவா தீபா?” என்று கேட்க, அவன் ஏன் அந்தச் சட்டையை நினைவுச் சின்னம் என்று கூறினான் என்ற நினைவுகளில் மூழ்கி, மனம் நெகிழ்ந்ததால் தலையை மட்டும் அசைத்தாள் அவள்.

         ஜெய் அவளிடம் ஆறுதல் கூறியபடி, அவளுடைய படிப்பிற்கு எந்தத் தடையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான்.

Advertisement