Advertisement

Chapter 19

         ஒரு வாரத்தில் அவள் உடல் நலமானவுடன், கல்லூரிக்குச் செல்லத் தொடங்கிவிட்டாள். அவளுடைய பிராஜக்ட் சம்பந்தமாக வேலைகளில் முழுகிவிட்டாள். மீண்டும் வாழ்க்கை பழைய பாதையில் போகத் தொடங்கியது. இதில் ஒரு மகி்ழ்ச்சியான மாற்றம் என்னவென்றால், முன்போல தீபாவும், ஜெய்யும் சகஜமாகப் பேசிக் கொள்ளத் தொடங்கியது தான். ஆனால், திடீரென்று அதற்கும் ஒரு வேட்டு வந்தது.

         திருமணமான இரண்டு மாதங்களிலேயே தான் கருவுற்றிருக்கும் செய்தியோடு சுபா வந்தபோது தான் அந்த வேட்டு வெடித்தது. ஒரு வார இறுதி நாள் மாலையில், எல்லோரும் அதிசயமாக வீட்டில் இருக்கும்போது தான், முகம் நிறைய மலர்ச்சியுடனும், கையில் ஸ்வீட் பாக்ஸோடும் தன் கணவன் முரளியோடு வீட்டிற்கு வந்தாள் சுபா.

         வந்தவள் நேராக ஆயாவிடம் சென்று கையில் இருந்த இனிப்பை நீட்டியபடி, “ஆயா! எங்க ரெண்டு பேரையும் ஆசிர்வாதம் செய்யுங்க!” என்றபடி காலில் விழுந்தாள். ஆயா இனிப்பைக் கையில் எடுத்தபடி, “நல்லாயிருடியம்மா! என்ன விசேஷம்?” என்று  கேட்டார்.

         “நான் முழுகாம இருக்கேன் ஆயா. நாள் தள்ளிப் போயிருக்கு. டாக்டர்கிட்டப் போய், இப்பத் தான் செக் பண்ணிட்டு வரேன்” என்றாள் சுபா.

         இந்தச் செய்தியைக் கேட்டதும் கண்களில் நீர் வழிய சந்தோஷமாக மகளை அணைத்த மஹாலக்ஷ்மி, “மாரியாத்தா! கண்ணைத் திறந்தியா? என் வாழ்க்கை விடியுமான்னு இருந்தவளுக்கு, நல்ல செய்தியாவே கொடுக்கறியே! ரொம்ப நன்றிக் கடன்பட்டிருக்கேன் தாயே!” என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார். “சுபா! டாக்டர் என்னம்மா சொன்னாரு? ரொம்பச் சந்தோஷம் மாப்பிள்ள!” என்று ஆனந்தத்தில் பரபரப்பாக மனதில் தோன்றியதையெல்லாம் பேசினாள்.

         அனைவரும் அவர்களைச் சூழ்ந்து கொண்டு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்ததில், ஆயாவின் முகமாற்றத்தை யாருமே கவனிக்கவில்லை. அதனால், அவள் பேசிய பேச்சு அனைவரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

         “க்கும்! அவ அவ நேத்து கல்யாணமாயி, இன்னைக்கு உண்டாகறா! ஆனா, இந்த வீட்ல அப்படியா? என் புள்ள எப்ப அப்பாவாகப் போறான்னே தெரியல! நம்ம வீட்டுக்கு வந்தது அப்படி. படிச்சுகிட்டே இருந்தா ஆச்சா? காலாகாலத்துல புள்ள குட்டிய பெத்துகிட்டு, குடும்பத்தப் பாப்போம்னு எண்ணம் இருந்தாதானே? ம்ஹும்! எனக்கு என்னிக்கு அந்தக் குடுப்பனை இருக்கோ?” என்று பெருமூச்சு விட்டார்.

         படிப்பறிவு இல்லாததாலும், பழைய காலப் பண்பாட்டிலும் ஊறியிருந்ததால், அவரைப் பொறுத்தவரை அவருடைய குறை அவருக்கு நியாயமாகவே இருந்தது. ஆனாலும், அது அடுத்தவரை எப்படிப் பாதிக்கும் என்பதை அவர் யோசிக்கவேயில்லை.

         மஹாலக்ஷ்மி அதிர்ச்சியுடன் பார்க்க, அம்மா என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ளாத ஜெய், “இப்ப என்னம்மா குறை உனக்கு? நீ என்ன சொல்ல வரே? புரியற மாதிரிச் சொல்லு!” என்று எரிச்சலுடன் கேட்டான்.

         “ஆமாடா! நான் எது கேட்டாலும், உனக்குக் குத்தமா தான் தெரியும். நான் கேட்டதுல என்ன தப்பு? நான் உடைச்சே சொல்றேன்! இதோ நிக்கறாளே… இவ கல்யாணம் முடிஞ்சு இரண்டு மாசம் ஆகறதுக்குள்ள, நல்ல சேதியோட வந்து நிக்கறா. உனக்கும் கல்யாணம் ஆயி ஆறுமாசம் ஆச்சு. மகராசி! அதாண்டா உன் பொண்டாட்டி, ஏதாவது சேதி சொன்னாளா? என்னவோ அவதான் பெரிய படிப்பாளி மாதிரி, காலேசுக்குப் போறா… வரா! இங்கே ஒண்ணும் குடும்பம் நடக்கறா மாதிரியே தெரியலியே. அதது அந்தக் காலா காலத்துல நடக்க வேணாமாடா?

         இப்பவே உனக்கு முப்பது வயசு ஆகுது. நீ எப்பப் புள்ளைகளைப் பெத்து அதுக பாட்டைப் பாக்குறது? ம். இதுக்குத் தான் நான் அப்பலேந்து அடிச்சுகிட்டேன்! சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கடான்னேன். நீ கேக்கல. வேற எத்தனையோ நல்ல பொண்ணுங்களப் பாத்தேன். நீ தான் என்னமோ உலகத்துலயே கிடைக்காத அதிசயம்னு, இந்த ஓடுகாலி பெத்தவளை….” என்று மேலும் பேசிக் கொண்டே போனவரை, “அம்மா!” என்ற ஜெய்யின் கோபக்குரல் தடுத்து நிறுத்தியது.

 அழுது கொண்டே மஹாலக்ஷ்மி சமையலறைக்குச் செல்ல, அதிர்ச்சியுடன் தன் மேல் விழுந்த இந்த அபாண்டமான குற்றச்சாட்டை எதிர்க்க வாயைத் திறந்த தீபாவை, ஜெய் கைக் காட்டி நிறுத்தினான்.

         முரளியின் கைகளைப் பற்றி, “சாரிடா முரளி! உன்னோட சந்தோஷமான மூடை, அம்மா கண்டதையும் பேசிக் கெடுத்துட்டாங்க! ஸாரிடா! அவங்க என்ன பேசறோம்னே தெரியாம பேசிட்டாங்க. தீபா இப்போ படிச்சுட்டு இருக்கறதுனால, நாங்கதான் குழந்தையை ஆறு மாசம் ஓத்திப் போட்டிருக்கோம். அது புரியாம, அவங்க என்னென்னமோ பேசிட்டாங்க. நீ மனசுல வெச்சுக்காதே!

         நீ சொன்ன  சேதியும், எங்க அம்மாவுக்குச் சந்தோஷமான சேதி தான். நீங்க, இப்ப இந்த நல்ல மூடோடயே கிளம்புங்க. இன்னொரு நாள் எங்களுக்கெல்லாம் ட்ரீட் தரணும். சரியா?“ என்று சூழ்நிலையைச் சகஜமாக்கியபடி அவர்களைக் கிளப்பினான்.

         அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்தவன், “ஏம்மா! பேசும்போது என்ன பேசுறோம்னு யோசிக்கவே மாட்டியா? அவங்க எவ்வளவு சந்தோஷமா வந்தாங்க?  அவர்களையும் ‘மூட் அவுட்’ பண்ணிட்ட! அக்கா மேல இன்னும் என்னம்மா கோபம்? என்னிக்கோ… அறியாத வயசுல அக்கா செஞ்ச தப்பை, நீ இன்னும் எத்தனை வருஷம்தான் சொல்லிக் காட்டுவே?

         சரி! அக்கா தப்பு பண்ணுச்சு. இவங்க என்ன தப்பு பண்ணாங்க? இனிமேல், ஓடுகாலி மகள்னு தீபாவைச் சொல்லிக் காட்டாதீங்க. படிக்கிறது ஒரு தப்பா? அந்தப் படிப்பு இல்லாததுனால தானே, அக்கா ஒரு அயோக்கியனை நம்பி ஏமாந்துச்சு. அதனால தானே தன் சொந்தக் கால்ல நி்க்க முடியாம, அடிமையா உன் கால்ல விழுந்து கிடக்குது.

         இந்தப் பொண்ணு, தானும் அப்படி நினைக்கக் கூடாதுன்னுதானே உன் பேச்சையெல்லாம் கேட்டுகிட்டு, நாள் முழுக்க வீட்டுவேலை செஞ்சு, அதோட உழைப்புல காசு சேர்த்துப் படிக்குது. இவங்களும் உன் ரத்தம் தானே! அதை, உங்க ஜாதி வெறி வந்து கண்ணை மறைக்குதாம்மா? எப்பம்மா நீ அடுத்தவங்க கஷ்டத்தைப் புரிஞ்சுப்பே?” என்று அவன் மனதில் இருந்த ஆதங்கம் முழுவதையும் கொட்டிவிட்டான்.

 ஏற்கனவே தாமரை இலைத் தண்ணீர் போல, அவனுடைய மணவாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இப்போது தான் ஏதோ கொஞ்சம் தேவலாம் என்று நினைக்கும்போது, இந்த அம்மா வந்து அதைக் கெடுத்து விட்டாரே!’ என்ற கோபம் அவனுக்கு.

         தீபாவின் மனநிலையோ வேறு மாதிரி இருந்தது. ‘ஆயாவின் இடிச் சொல்லை மட்டுமே, காலம் முழுவதும் கேட்க வேண்டுமா? எவ்வளவுதான் வாய் திறக்காமல் வேலை செய்தாலும், என்னதான் மெனக்கெட்டாலும், அவர் மனம் மாறாதா? தன் மேல் நல்லெண்ணம் வராதா?’ என மனம் கசந்தது. மறுபுறம், முன்பு போலவே மாமாவின் ஆதரவு இன்று மட்டுமல்ல, என்றுமே இருக்கும் என்ற ஆறுதல்.

         இந்த மாமா ஏன் நம்மைக் கல்யாணம் செய்துகொண்டு, இந்தப் பேச்சையெல்லாம் கேட்க வேண்டும்? பேசாமல், ஆயா சொன்னது போல் வேறு பெண்ணைக் கல்யாணம் செய்திருக்கக் கூடாதா?’’ என்ற கழிவிரக்கம் பிறந்ததில், மனம் பல திசைகளிலும் பாய்ந்தது.

         இதற்கு மேல் பேசினால், மகன் சும்மா விடமாட்டான் என்று ஆயா வாயை மூடிக் கொண்டாலும், மஹாலக்ஷ்மி சும்மா விடவி்ல்லை. மகளை வாட்டி எடுத்து விட்டாள்.

         “ஏண்டி! ஆயா கேக்கறது போல, நீ குடும்பம் நடத்தற எண்ணத்துல இருக்கியா…? இல்லையா? நான் தான் கூறு கெட்டு, என் வாழ்க்கையைக் குட்டிச் சுவரா ஆக்கிட்டேன். என்னைப் பார்த்தாவது, உனக்குப் புத்தி வரவேணாம்? இந்தப் படிப்பு மண்ணாங்கட்டியைத் தூக்கிப் போட்டுட்டு, ஒழுங்கா குடும்பம் நடத்தி, குப்பையை கொட்டற வழியைப் பாரு!” என்று பாய்ந்தாள்.

Advertisement