Advertisement

Chapter 17

         சில நிமிடங்களில் இந்த ஐந்து வருட நிகழ்வுகள் மனதில் ஓடிவிட, அவன் முகத்தையே பார்த்தபடி கவலையும், எதிர்பார்ப்புமாகத் தெரிந்த தீபாவின் குழந்தை முகத்தையே பார்த்தான். மொட்டாகவே இன்னும் உள்ள அவள் மனம், மலர்ந்து மணம் வீசும் காலம் என்றோ?

         எழுந்து அவள் தலையில் செல்லமாகத் தட்டி, “ஏய் தீபா! வர வழியில  எவ்வளவு பட்டுப் புடவைக் கடைகளைப் பார்த்தே; சாயந்தரம் ஷாப்பிங் போகலாம்னு சொல்லுவேன்னு பாத்தா, கோவில் லிஸ்டா படிக்கறியே! ஹுஹூம்! நீ அதுக்குச் சரி வர மாட்ட!” என்றவன் வாய்விட்டுச் சிரித்தான்.

 ‘இதுதான் என்னுடைய மாமா! கல்யாணத்துக்கு முன்ன இப்படித் தானே ஒருத்தரை ஒருத்தர் விளையாட்டா கிண்டலடிச்சுச் சிரிச்சோம்.  இப்பத் தான் மாமா வேற்றாளா தெரியறாரு!’ என்று நினைத்த தீபா, அவனுடைய பழைய முகம் தெரியவும், அந்தச் சுமுக நிலையை இழக்க விரும்பாமல் சிரித்தாள்.

         “மாமா! இப்பத்தானே கல்யாணத்துக்கு அவ்வளவு பட்டுப்புடவை வாங்கினீங்க! அது தவிர மாயவரம் போய், அவ்வளவு டிரெஸ் வாங்கினீங்க! இப்பவே என்கிட்ட முப்பது, முப்பத்திஅஞ்சு செட் ட்ரெஸ்  சேந்திடுச்சு.  போதும் மாமா!” என்று அவசரமாக மறுத்தாள்.

         உண்மையிலேயே தீபா குழந்தை தான் என்ற வாஞ்சை நெஞ்சில் நிறைய, ஜெய் அவள் தலையில் கை வைத்து அசைத்து விட்டு, “தீபா! நீ இப்படியே ஆயுசு முழுக்க என் பொண்டாட்டியா இருந்தேன்னா, நான் கோடீஸ்வரனா ஆயிடுவேன்.  ஒரு பொண்டாட்டி தேவையில்லாத ஷாப்பிங் மோகத்தோட போனா, எந்தக் கோடீஸ்வரனும்  ஏழையா ஆயிடுவான். ஐநூறு செட் டிரெஸ் இருந்தாலும், கடைக்குப் போறது தான் லேடிஸோட வழக்கம்.  நீ இப்பவே போதும்னு சொல்றது ஹூம்! சான்ஸே இல்லை” என்று செல்லமாகச் சலித்துக் கொண்டான்.

         “தீபா! உனக்காக இல்லன்னாலும், ஊருக்குப் போனதும்… எல்லாரும் “ஹனிமூன் போனியே! என்ன வாங்கித் தந்தார் உன் மாமா-ன்னு கேப்பாங்க.  அதனால, ஒரு புடவையாவது வாங்கலாம். சரியா? கிளம்பு!” என்றவன், குளியலறைக்குச் சென்று முகம் கழுவப் போனான்.

         ஏற்கனவே ஜெய் இதுவரை செய்த செலவால் கடனாளி போல மனதில் இருந்த பாரம், அவனிடம் மறுத்துப் பேச வைத்தது. ஆனால், என் ஆசைக்காக ஒரு புடவை வாங்கிக் கொள் என்று சொல்லியிருந்தால், அவள் எவ்வளவோ சந்தோஷப்பட்டிருப்பாள். ஆனால், ஊருக்காக வாங்கிக் கொள் என்று அவன் சொன்னது, அவள் மனதை நோகடித்தது.

காலையில் அவன் காட்டிய அக்கறை தந்த இதம், இப்போது அவன் பேச்சால் போய்விட்டது. திருமணம் ஆனதிலிருந்தே, ஆங்கிலத்தில் சொல்வார்களே  “அவுட் ஆப் டெப்த்”  என்று,  அது போல, ஆழம் தெரியாத இடத்தில் காலை வைத்து உள்ளே இழுப்பது போன்ற தவிப்பு மீண்டும் வந்தது.  எதிலும் மனம் நிலைக்காத அவஸ்தை. மீண்டும் மனதில் பாரமாக உணர்ந்தாள்.

         ஜெய்க்கு தன் அன்பைச் செயலால் காட்ட முடியாத நிலைமை. அவற்றையெல்லாம் பொருளாக வாங்கிக் குவிக்க, எந்த வழியிலாவது அன்பை வெளியிடத் தோன்றியது. இயல்பில் ரொம்ப எளிமையான அவன், தீபாவுக்காகவே எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தான். அவள் வசதிக்காகக் கார்… அதுவும், அவளுக்குப் பிடித்த நீல வண்ணத்தில். பிடித்த பாட்டு, பிடித்த ரோஜாப்பூ, ஏன் நெடுநாள் ஆசையான காஞ்சிபுரம் சிற்பங்கள், கோயில்கள் என, என்றோ அவள் பேசிய போது சொன்ன ஆசைகளை மனதில் ஞாபகம் வைத்து இப்போது அதை நிறைவேற்றினான்.

         இரு வேறு மனநிலையுடன் இருவரும் கிளம்பினர்.  மிகப் பெரிய பட்டு சொஸைட்டிக்குச் சென்று, அவளுக்கு ஒரு பட்டுப்புடவையை அவனே தேர்ந்தெடுத்தான். அதில் ஜரிகையிலேயே ராதா, கிருஷ்ணனின் லீலைகள் நெய்யப்பட்டிருந்தது. கலைநயத்துடன் நெய்யப்பட்டிருந்த அந்தச் சேலை மிகவும் அருமையாக இருந்ததால், தீபாவும் அதை ஏற்றுக் கொண்டாள். அவளுக்குப் பிடித்த நீல வண்ணத்தில் ஜெய் வாங்கித் தந்த அந்தப் புடவையின் விலையோ இருபதாயிரம்.

         புடவை அழகாக இருந்தாலும், அவன் சொன்ன காரணம் இன்னமும் அவள் மனதை நெருடியது.  இருவருமாக ஊர் திரும்பிய போதும், அவர்கள் மனநிலையில் பெரிதாக மாற்றம் இல்லை. தீபாவின் மனநிலையில் அதிகக் குழப்பமும், ஜெய்யின் மனநிலையில் அதிகத் தவிப்பும் அப்படியேதான் இருந்தன.

         காஞ்சிபுரம் போய் வந்து இரண்டு மாதங்கள் ஓடியே விட்டன. சுபாவுக்கும், முரளிக்கும் முகூர்த்தத் தேதி நெருங்கி விட, எல்லோரும் அந்தத் திருமண வேலையில் மூழ்கி விட்டனர். அவர்களும் உணர்வுகளை அவ்வளவாக வெளியில் காட்டாமல் நடமாடியதால், யாருக்கும் ஜெய், தீபா மேல் சந்தேகம் வரவில்லை.

         ஜெய், சுபாவின் திருமணத்திற்கும் பணம் கொடுத்தான். மஹாலக்ஷ்மி தீபாவின் திருமணத்திற்கு அதிகமாகச் செலவு செய்யாததால், கைவசம் இருந்த பணத்தோடு, ஜெய் கொடுத்த பணத்தையும் பயன்படுத்திக் கொண்டாள். முழுச் செலவையும் ஏற்க அவன் முன் வந்த போதும் மறுத்து விட்டாள். ஜெய்யும் ஒரிரு முறை கூறிவிட்டு, பின் விட்டுவிட்டான்.

         திருமணம் முடிந்து சுபாவும் கணவன் வீட்டிற்குப் போய்விட, மறுவீடு அது இது என முடிந்து, பதினைந்து நாட்களுக்குப் பிறகு வீடு இயல்பு நிலைக்கு வந்தது. தேனிலவுக்கு மொரீஷியஸ் போவதாக புதுமணத் தம்பதியரின் திட்டம். சொல்லிக் கொண்டு போக வந்த சுபாவின் மனதில் இருந்த நிறைவும் மகிழ்ச்சியும் முகத்திலேயே தெரிந்தது.

         “மாமா! தேனிலவுங்கற பேர்ல… எங்கக்காவை கோயில்களுக்குப் பேர் போன காஞ்சிபுரம் கூட்டிப் போய், அவளையும் சாமியாரா ஆக்கிட்டீங்க. நீங்க எது சொன்னலும், அக்கா எதிர்த்துக் கேக்கமாட்டா! அதனால, அவளை ஏமாத்திட்டீங்க! இப்பத்தான் எங்க கூட வாங்களேன் மாமா! நீங்களும், அக்காவும் ஜாலியா போய் வரலாம்!” என்று சிணுங்கலுடன் முடித்தாள் சுபா.

         திரும்பி, தீபாவைப் பார்க்க, அவள் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள். ஜெய் சுபாவிடம், “சுபா! ஹனிமூன்-றது ஆயுசுல பத்துப் பதினைந்து நாள் மட்டும் வரதில்ல. நானும், உங்க அக்காவும் காஞ்சிபுரத்திலயும் ஹனிமுனை ஜாலியா தான் கொண்டாடினோம். இப்போவும், நாங்க ஹனிமூன்ல தான் இருக்கோம்! இப்ப உங்கக்கா படிச்சுட்டு இருக்கறதுனால அடக்கி வாசிக்கறோம். அடுத்த வருஷம் பாரு… நீ! நாங்க என்ன  பண்றோம்னு!” என்று முடிக்க, அவன் தங்கள் ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுகிறனா என்ன என்று தீபா திடுக்கிட்டுப் பார்த்தாள்.

    என்ன தீபா? நான் சொல்றது நிஜம்தானே!” என்று அவளருகில் வந்து நெருங்கி நின்றபடிக் கேட்டான். ஜெய்யைப் போலச் சமயோசிதமாக பட்பட்டென்று பேசத் தெரியாமல் விழித்தவள், வெட்கப்பட்டவள் போலத் தலையைக் குனிந்து கொண்டு பேசாமல் இருந்து விட்டாள்.

         ஏற்கனவே காதலித்தவர்கள் வேறு. புதிதாகத் திருமணம் ஆன சந்தோஷத்துடன் சுபாவும், முரளியும் நெருக்கமாக இழைவது, அவளுக்குப் புது அனுபவமாகவும் இருந்தது; கூச்சமாகவும் இருந்தது. அவர்கள், தங்கள் எதிரிலேயே ஒருவரையொருவர் விளையாட்டாகத் தட்டிக் கொள்வதும், தோளில் சுவாதீனமாகக் கை போடுவதுமாக இருந்த நெருக்கம், எல்லோருடைய முகத்திலும் ஒரு சின்னப் புன்னகையையே வரவழைத்தது.

         சுபாவின் நெற்றியில் விழுந்த முடியை இயல்பாக ஒதுக்கிய முரளியைப் பார்த்துவிட்டு, தன்னிச்சையாக தீபா ஜெய்யைப் பார்த்த போது தான், அவன் அதுவரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தது புரிந்தது. அவளைப் பார்ப்பது தெரிந்ததும், முகத்தில் ஒரு புன்னகையுடன் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தி, அவளைப் பார்த்தான். உடனே, உள்ளே ஏதோ வேலையிருப்பது போல ஓடியே போய்விட்டாள் தீபா.

         சுபாவும், முரளியும் அடுத்த நாள் மொரிஷியஸ் கிளம்பிப் போய்விட, வீடு மீண்டும் சகஜநிலைக்கு வந்தது.

Advertisement