Advertisement

Chapter 16

         அவன் வீட்டுக்கு பதின்மூன்று வயதில் குழந்தையாக தீபா வந்தபோது, அவள் மேல் அவனுக்கு இருந்தது அனுதாபம் மட்டுமே. ஆனால், தன் நிலையுணர்ந்து அந்தச் சிறுவயதிலேயே எல்லாவிதமான கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு, அந்த வீட்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல், படிப்பிலும் கவனம் செலுத்தி, பொறுப்புடன் அவள் நடந்து கொண்ட விதம் அவள் மேல் மதிப்பை ஏற்படுத்தியது.

         அவள் மற்ற பெண்களைப் போல், உடையிலோ, அலங்காரத்திலோ, அரட்டையிலோ நேரத்தைக் கடத்தியதில்லை. ஏன்! அது வேண்டும், இது வேண்டும் என்று எதையும் எதிர்பார்க்காமல், தன் படிப்பே குறியென்றும் தன்னுடைய குடும்பத்தை வளமாக வைத்துப் பார்க்க வேண்டும் என்ற அவளுடைய ஓரே பிடிவாதமும்தான், அவள் மேல் அன்பையே ஏற்படுத்தியது. மேலும் அவளுடைய முயற்சிகளுக்கு கை கொடுக்க வேண்டும் என்ற உத்வேகம் தந்தது.

         பெரிய பெண்ணான பிறகு கூட, அவன் கண்களுக்குக் குழந்தையாகத் தெரிந்த அவள், ஒரே நாளில் அவன் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, அந்தச் சம்பவத்தால் தான். ‘இவள் என்னுடையவ!‘’ என்ற உணர்வை உண்டாக்கியதும் அந்த நிகழ்ச்சிதான். அவளுக்குப் பத்தொன்பது வயது இருக்கும்போது, ஒருநாள் மாலையில் எல்லோரும் ஏதோ காரணமாக வீட்டில் இல்லாது போய்விட, மாடி அறையில் அவன் உறங்கிக் கொண்டிருப்பதை அறியாமல், யாரும் இல்லாத சுதந்திரத்தில் தீபா கிணற்றில் நீர் இறைத்து அங்கேயே குளித்துக் கொண்டிருந்தாள்.

         உறக்கம் கலைந்து, முகம்  கழுவ கொல்லைப் புறத்துக்கு வந்தவன் திகைத்து நின்றான். தூக்கிக் கட்டிய பாவாடையில், தலை முடியைக் கொண்டையாகக் கட்டி, குழந்தை போல நீரை வாரி இறைத்து, சந்தோஷமாகக் குளித்துக் கொண்டிருந்தாள் தீபா.

         ‘குழந்தையாகத் தான் கருதிய தன் அக்கா மகள், உண்மையில் குழந்தையல்ல! வளர்ந்து விட்ட பெண்!’ என்று ஜெய் உணர்ந்ததும் அன்று தான். அவளுடைய தோற்றம் அவனை ஈர்த்ததும் அன்று தான். இரண்டு நிமிடங்கள் தான் அங்கு நின்றிருந்திருப்பான். அதற்குள் அவன் கண்கள், தீபாவின் அகன்ற விழிகள், மாநிறமானாலும் களையான முகம், வேலை செய்ததால் இறுகி மெலிந்த உடல்வாகு, சின்ன இடுப்பு என அவள் உடலின் வளைவுகள் முழுவதும் புகைப்படமாக அவன் மனதில் பதிந்தது.

         அவன் மனதில் பதிந்திருந்த பண்பாடு, உடனே அவனை அறைக்கு விரட்டினாலும், அவள் மனதில் மெல்ல நுழைந்த காதல் எனும் உணர்வை, அவனால் விரட்ட முடியவில்லை. அதுவரை, அவனுமே கூட இது போன்ற ஈர்ப்புகளால் பாதிக்கப்படாதவன் தான். அதுவரை ஜெய்யின் கவனம் முழுதும், தொழிலில் முன்னேறுவதிலும், பணம் சம்பாதிப்பதிலும் மட்டுமே இருந்தது. அதனால், எந்தப் பெண்ணுமே அவன் மனதைக் கவர்ந்ததில்லை.

         ஏன்! தினமும் பேசிப் பழகிய தீபாவையும், சுபாவையும் கூட அவன் அப்படி நினைத்ததில்லை. இன்று தீபாவின் தோற்றத்தை விடக் குறைந்த உடைகளை அணிந்த பெண்களையும் அவன் பார்த்திருக்கிறான் தான். அப்போதெல்லாம் கூட, அவன் மனதில் கவனம்  தோன்றியதேயில்லை. அவன் மனம் முழுவதும் அவனுடைய குறிக்கோளிலேயே குவிந்திருந்தது.

         தன் அறைக்கு மிதப்பவன் போல் சென்று படுக்கையில் சாய்ந்தவன், இன்பமான கனவுகளில் மூழ்கத் தொடங்கினான. சற்று நேரம் கழித்து அவன் அறிவு விழித்துக் கொண்டது. அவனுடைய ஆசை, ‘இப்போதைக்கு இது நிறைவேற முடியாதது!’ என்று சுட்டிக் காட்டியது.

அவன் இப்போதுதான் தொழிலில் மெள்ள முன்னேறிக் கொண்டிருக்கிறான். தீபா இரண்டாம் ஆண்டு பி.ஈ. படிக்கிறாள். எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுக்கும் நேரம் இன்னும் வரவில்லை. இருவருக்குமே, சாதிக்க வேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்கிறது. ஆனாலும், மனம் பிடிவாதமாக “இவள் என்னுடையவள்” என்று சொன்னாலும், இன்னொரு சந்தேகத்தையும் எழத்தான் செய்தது.

ஜெய் டிகிரியோடு படிப்பை நிறுத்தி மெக்கானிக்காக இருக்கிறான். தீபாவோ, பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறான். இன்னும் இரண்டு ஆண்டுகளில் அவள் படிப்பு முடிந்து விடும். படிப்பில் முதலாவதாக இருப்பதால், நிச்சயம் பெரிய கம்பெனியில் வேலையும் கிடைத்துவிடும். அதற்குப் பிறகு அவள் இந்த ஊரை விட்டுவிட்டு, சென்னை, கோவை ஏன் டெல்லி, பூனே என்று தொலைதூரம் சென்று விடுவாள். ஏன்? அவளுடன் படிக்கும் மாணவன் யாருடனாவது காதல் கொண்டு, அவனை மணந்து கொண்டு வெளிநாட்டுக்கே போய்ச் செட்டிலாகலாம்.

         இத்தனைத் தடைகள் இருக்க, தன் ஆசை நிறைவேறுமா என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது. எதையும் அலசி ஆராய்ந்து லாஜிக்கலாக முடிவெடுக்கும் அவன், இதையும் தனக்குச் சாதகமாக்க முடிவெடுத்தான். அப்போதும் தீபா வேறு யாரையாவது விரும்பினால் அதற்குக் குறுக்கே நிற்காமல், அவளுடைய விருப்பத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்மென்றும் மனதிற்குள் உறுதி செய்து கொண்டான்.

         தீபா மற்ற எல்லோரையும் விட, அவனிடம் வெளிப்படையாகப் பேசியது அதற்கு வசதியாக இருந்தது. அவள் மனதில் யாருமில்லை என்பதை அவள் பேச்சிலிருந்தே புரிந்து கொண்டான். தந்தையின் நடத்தையால் தான் அவள் திருமணத்தையே வெறுக்கிறாள் என்பதையும் புரிந்து கொண்டவன், தன் அன்பை முழுவதும் அவள் மேல் கொட்டி வறண்ட அவளது வாழ்க்கையை பூவானமாக்க உறுதி கொண்டான்.

         அதனாலேயே, அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படிச் செய்து, அவளைச் சிதம்பரத்திலேயே மேற்படிப்பு படிக்கச் சேர்த்தான். அம்மா தனக்குப் பெண் பார்த்த போதெல்லாம், தொழில் விரிவுக்காகத் தன் கவனம் முழுவதும் அதில் தேவைப்படுவதாகச் சொல்லி, திருமணத்தைத் தட்டிக் கழித்தான். பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாக, அவனுடைய அக்காவே தீபாவை மணந்து கொள்ளும்படிச் சொன்னவுடன், அந்த வாய்ப்பைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டான்.

         தீபாவின் மனதைக் கவர அவனுக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது.  ஆங்கிலத்தில் “கோர்ட்டிங்” என்பார்களே… அது போல… அவள் மனதைத் தன் பக்கம் திருப்ப, அவனுக்கு அவகாசம் தேவைப்பட்டது.  யாருமில்லாத அவள் மனதில், அவன் அழுத்தமாக உட்காரக் கொஞ்ச நேரம் தேவை. இதை இந்த ஒரு வருடத்தில் செய்ய முடியும் என்று அவன் தன்னம்பிக்கை சொன்னதாலேயே, அவள் ஏற்கும் படியான திட்டத்தைச் சொன்னான் அவன்.

         தீபாவும் அதை ஏற்றுக் கொண்ட பின்பு, திருமணமாகி இரண்டு மாதம் ஆகிவிட்டது. அவ்வப்போது அவளிடம் தெரியும் நெகிழ்வுகள் நம்பிக்கை அளித்தாலும், திரும்பவும் தன் ஓட்டுக்குள் ஒளியும் நத்தையைப் போல அவள் மாறுவதால், எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தவித்தான் ஜெய்.

Advertisement