Advertisement

Chapter 15

தீபா கண் விழித்தபோது மணி ஏழரை ஆகியிருந்தது. எழுந்து பார்த்தபோதோ அவனைக் காணவில்லை. தலையைத் திருப்பி குளியலறையில் இருக்கிறானோ என்று பார்த்ததில், கழுத்தில் மின்னலாக ஒரு வலி,  இடது பக்கக் கழுத்திலிருந்து விரல் நுனி வரை சுள்ளென்று வலித்தது. அந்த வலியிலும் குளியலறை திறந்திருந்ததையும், உள்ளே யாருமில்லாததையும் கண்கள் கவனித்து விட்டன.

இரவு முழுவதும் ஒரே பக்கமாகச் சாய்ந்து படுத்திருந்ததால், கழுத்து சுளுக்கிக் கொண்டிருந்தது. அதனுடன், இந்தப் புது ஊரில் காலையிலேயே “மாமா எங்கே போனார்?” என்ற கவலையும் சேர்ந்தது. வலியைப் பொறுத்துக் கொண்டு பல் தேய்த்து, குளித்துவிட்டும் வந்தாள். தலைப்பின்னலை அவிழ்த்தவள், இரண்டு கைகளையும் தூக்கிப் பின்ன முடியாமல் விரித்த கூந்தலுடன் ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டாள்.

ஐந்து நிமிடம் கழித்து ஜெய் அறைக்குள் நுழைந்தபோதும், அவள் அப்படியே தான் உட்கார்ந்திருந்தாள். க்ரீம் கலர் ஷார்ட்ஸ்சும், நீல வண்ண டீ-சர்ட்டும் அவனுக்குப் பொருத்தமாக இருந்தது. கையில் இலையில் சுற்றிய பூப்பொட்டலம் ஒன்று இருந்தது. உள்ளே வந்தவன் அவள் முகம் வேதனையில் இருந்ததைப் பார்த்துப் பதறியவனாக, “என்ன ஆச்சு தீபா?” என்று கேட்டபடியே அருகில் வந்தான்.

         பரிதாபமாக, அவனைப் பார்த்தவள், “கழுத்து சுளுக்கிக்கிச்சு மாமா! தலையை அசைக்கவே முடியலை!” என்று அழாத குறையாகச் சொன்னாள்.

 “அவ்வளவு தானா? திரும்பி உட்கார்! நான் மருந்து தேய்ந்து விடுகிறேன்” என்றவன் பையில் இருந்து தைல மருந்தை எடுத்து பின்னங்கழுத்திலிருந்து தோள் எனப் பூசி, இதமாகப் பிடித்து விட்டான். அவன் மெதுவாகப் பிடித்துவிட்டதில், வலி மெல்லக் குறைந்தது.

 அந்தச் சுகத்தில் அவள் கண்கள் மெல்ல மூடின. சிறுவயதில் இதே போல் விளையாடிவிட்டு வரும்போது கால் பிசகிவிட, மாமா அவள் காலில் இதேபோல் தைலம் பூசி, அவள் கண்ணீரைத் துடைத்தது நினைவுக்கு வந்தது.

         அவன் கைகள் தோளில் இறங்கி, முழங்கை வந்து விரல் வரை இறங்கியது. பலமுறை இவ்வாறு செய்த பிறகு அவன் விரல்கள், பின் கழுத்திலிருந்து மெள்ள இறங்கி முதுகு வழியாக இடுப்புவரை வந்தது. இதுவரை வலியின் வசமிருந்த அவள் உடலில், இப்போது ஒரு சிலிர்ப்பு தோன்றியது. அவன் விரல்கள், உருவிவிடும் சாக்கில் அவள் முதுகு, பின்னங்கழுத்து, தோள் என எல்லா இடங்களிலும் ஒடின.

         முதன்முதலாக ஒரு ஆண், அவனுடைய உடலில் மிகவும் நெருக்கமாகக் கைகளைப் பதித்தது…, புதிய உணர்வுகளைத் தூண்டியது. அவள் உதடுகளில் ஒரு பெருமூச்சு எழுந்தது.

         அந்தப் பெருமூச்சுடன், பின்னால் நின்றிருந்த அவன் மேல் மெல்லச் சாய்ந்தாள் அவள். வலி குறைந்து அவள் கவனம் அவன் வசம் திரும்பியதைப் புரிந்து கொண்ட ஜெய், தோள்களைப் பற்றி அவளைத் திருப்பி அணைத்துக் கொண்டான். புது அனுபவத்தின் மயக்கத்தில், கண் மூடி மெல்ல அவன் நெஞ்சில் தலை சாய்ந்தாள் அவள். கைகள் அவன் இடுப்பைச் சுற்றி வளைத்தன.

தாடையைப் பற்றி, மெல்ல அவளது முகத்தை உயர்த்தினான் ஜெய். அவள் முகம் பரவசத்திலும், வெட்கத்திலும் விகசித்திருப்பதைக் கண்டு, தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவனாக, மெல்லத் தன் உதடுகளை அவள் இதழ்களில் பதித்தான். அதுவரை மயக்கத்தில் இருந்த அவள், திடுக்கிட்டுக் கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள்.

         தான் இருந்த நெருக்கமான நிலையை உணர்ந்தவளாக, அவனை விட்டு விலகி நின்றாள்.

         இதுவரை அவள் காட்டிய நெருக்கத்தையும், தற்போதைய விலகலையும் ஆராய்ந்தவன், அவள் தன் அண்மையை வெறுக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டான். மேலும், இந்தப் புதிய உணர்வுகள் அவளுக்குள் ஏற்படுத்தும் பயத்தையும் உணர்ந்து கொண்டவன், எதிர்காலத்தில் எல்லாம் சரியாகும் என்று நம்பினான்.

         எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல், “திரும்பு தீபா! கழுத்து வலி உடனே போகாது. ஒரு கையால் எப்படித் தலையைப் பின்னமுடியும்? நான் பின்னி விடுகிறேன்!” என்று அவளைத் திருப்பினான்.

         தன் உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்ளும் முயற்சியில் இருந்தவள், தன்னிச்சையாக அவன் கூறியபடியே திரும்பி நின்றாள். சீப்பை எடுத்து அவள் கூந்தலை இதமாக வாரி, தளர அவள் கூந்தலைப் பின்னினான். இடையையும் தாண்டிய அவள் முடியழகை ரசித்தவன், தான் வாங்கி வந்த பூப்பொட்டலத்தைப் பிரித்து, அந்த இரு வெள்ளை ரோஜாக்களை அவள் காதோரத்தில் வைத்தான்.

         தீபாவுக்கு ஏனோ அவளுடைய தந்தையின் ஞாபகம் வந்தது. முன்பு ஒருமுறை, அம்மாவுக்குக் கனமான குடத்தைத் தூக்கியதில் மூச்சு பிடித்துக் கொண்டது. மூச்சுவிடவும் முடியாமல் அவதிப்பட்டவள், கணவனிடம் கொஞ்சம் தைலம் தேய்ந்து விடச் சொன்னபோது, அவர் நடந்து கொண்ட முறை நினைவுக்கு வந்தது.

         “போ! போ! எப்ப பாரு கிழவி மாதிரி, அங்க வலி இங்க வலின்னுகிட்டு! எனக்கு வேற வேலயிருக்கு!” என்றபடி அவர் விருட்டென்று சென்ற பின்னர், அம்மா கண்ணீரோடு நின்றது கண்முன் ஓடியது. காதல் திருமணம் தான் என்றாலும், சந்தோஷத்தில் மட்டுமே பங்கு பெற்றார் அவளது தந்தை.

         இப்போது ஜெய் நடந்து கொண்டதை அதனுடன் ஒப்பிட்டபோது, மனதில் ஏதோ புரிபட்டது அவளுக்கு.

         கண்களில் நீருடன் அவளைப் பார்த்தவுடன் அவன் பதறினான். “என்ன தீபா! ரொம்ப வலிக்குதா? கொஞ்ச நேரம் வேணா படுத்துக்கறியா?” என்று கேட்க, அவள் ‘வேண்டாம்’ என்பது போலத் தலையசைத்துவிட்டு, குளியலறைக்குச் சென்று முகம் கழுவப் போனாள்.

         அன்று காலை அவர்கள் உலகளந்த பெருமாள் கோயில், ஏகாம்பரீஸ்வரர் கோயில் முதலிய இடங்களுக்குப் போவதாக இருந்தது. முகம் கழுவியவள் வெள்ளையில் கறுப்புக் கரையுடன் உள்ள க்ரேப் சில்க் அணிந்து கொள்ள, நெற்றியில் கறுப்புப் பொட்டுக்குக் கீழே விபூதிக் கீற்று. நெற்றியின் உச்சியில் குங்குமக் கீற்று. கழுத்தில் கருக மணி என அவளுக்குப் பொருத்தமாக இருந்தது. அவனும் தயாராகி வர இருவரும் கிளம்பினர்.

         கழுத்தில் வலியுடன், வெயிலில் அலைய வேண்டாமென்று காரை எடுத்தான் ஜெய். அவள் கழுத்தில் வலி அதிகமாகாமல் இருக்க, போகும் வழியில் மேடு பள்ளங்களில் மெள்ள இறங்கி, காரை மெதுவாகச் செலுத்தினான். அவனுடைய அக்கறை அவள் மனதுக்கு இதமாக இருந்தது.

         இந்த அக்கறைக்குப் பிறகு இருவருடைய சம்பாஷணையும் இயல்பாகவே இருக்க, கிட்டத்தட்டத் திருமணத்திற்கு முன் அவர்களிடையே இருந்த சுமுக நிலை திரும்பியது போலிருந்தது இருவரும் சந்தோஷமாக ஆலயங்களின் அழகை ரசித்தனர். காஞ்சி நகரில் திரும்பிய இடமெல்லாம் அற்புத ஆலயங்கள் தாம். எத்தனை ஆலயங்களைக் கண்டாலும் சிற்பக் கலையும், தெய்வ சன்னதியில் நிலவிய அமைதியும் தெவிட்டவில்லை அவர்களுக்கு.

         மதிய உணவை உண்ட பிறகு சற்று நேரம் ஓய்வெடுக்க இருவரும் அறைக்குத் திரும்பினர். இரவு முழுவதும் சரியாக உறங்காததோடு அலைச்சலும் ஒன்று சேர, தீபா நன்றாக அசந்து உறங்கி விட்டாள். நாலு மணிக்கு எழுந்தபோது ஜெய் அவளுக்காக வாங்கி வைத்திருந்த சூடான தேநீரை ரசித்து அருந்தினாள். ஜெய்சங்கரோ சானல்களை ஒவ்வொன்றாக மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

         “தீபா! ஈவினிங் என்ன ப்ரொக்ராம்?” என்று திரும்பி அவளைப் பார்த்தபடியே கேட்டான் ஜெய்.

 “கைலாஸநாதர்  கோயிலுக்குப் போகலாமா மாமா? போற வழியில், மறுபடி ஒரு தடவை காமாட்சியம்மன் கோயிலுக்கும் போயிட்டுப் போகலாமா? எனக்கு அம்மனோட முகத்தைப் பார்த்துட்டே இருக்கணும் போலிருக்கு!” என்று ஆர்வமாகக்  கேட்டாள் தீபா.

         “தீபா! நாம வந்திருக்கறது கோயில் சுற்றுலா இல்லை. ஹனிமூன்! நியாயமா பார்த்தா, இப்போ நீ என்னோட முகத்தையும், நான் உன்னோட முகத்தையும்தான் பாத்துட்டு இருக்கணும். நீ பேசறதைப் பார்த்தா புதுசா கல்யாணம் ஆனவங்க பேசற மாதிரியில்ல. ஏதோ, கல்யாணமாகி அறுபது வருஷம் ஆகி அலுத்துப் போன ஒரு பொண்டாட்டி பேசற மாதிரியிருக்கு!” என்ற ஜெய், ஆயாஸத்துடன் கேட்பதுபோல முகத்தை வைத்திருந்தான்.

         தீபா அவன் உண்மையாகவே கேட்கிறனா அல்லது கிண்டல் செய்கிறானா என்பது புரியாமல், அவன் முகத்தையே உற்றுப் பார்த்தாள். ‘உண்மையிலேயே இருவரும் மனமொத்துத் திருமணம் செய்திருந்தால், இப்போது எப்படி இருந்திருப்போம்’ என்ற கேள்வி எழுந்தது மனதிற்குள்.  ஆனால், என்ன செய்திருப்போம் என்பதை யூகிக்கத்தான் அவளுக்கு அனுபவம் போதவில்லை.

         ‘வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறிவிடப் போகிறது!’ என்ற பயம் எழ, இப்படி அவளை விளையாட்டாகச் சீண்டிய பின்பு, பல நாட்கள் மௌன விரதம் இருந்ததை நினைத்துப் பார்த்தான் ஜெய். தன்னுடைய ஆசைகளை, எதிர்பார்ப்புகளை, தாபங்களை அவள் மேல் மொத்தமாகக்  கொட்டிவிட வேண்டும் போல ஒரு வேகம் பலமுறை அவனுள் எழுந்ததுண்டு. ஆனால், அதுவே எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிட்டால் என்ன செய்வது என்ற பயமே அவனைத் தடுத்தது.

Advertisement