Advertisement

Chapter 12

குறித்த நாளில் சுபமுகூர்த்த நேரத்தில் ஜெய்சங்கர், தீபாவின் கழுத்தில் மங்கல நாணைப் பூட்டினான். அவன் அழைத்திருந்த தொழில்முறை நண்பர்களுடன், உறவினருடன் மண்டபமே நிறைந்து திருமணம் மிகவும் சிறப்பாக நடந்தது.

தீபாவின் தந்தையை அழைக்க யாருக்குமே விருப்பம் இல்லாததால், கடலூரிலிருக்கும் மஹாலக்ஷ்மியின் பெரியப்பா பெண், தன் கணவருடன் தீபாவைத் தாரை வார்த்துக் கொடுத்தாள்.

மஹாலக்ஷ்மியின் கதை உறவினர் அனைவருக்குமே தெரிந்திருந்ததால், யாருமே இந்த விவரங்களைத் தோண்டவில்லை. மணப்பெண்ணின் தோழிகளாக நன்றாக அலங்காரம் செய்து கொண்ட வசந்தியும், சுபாவும் மகிழ்ச்சியுடன் அவளுக்கு உதவியாக இருந்தனர்.

சாதாரணமாகவே லட்சணமாக இருக்கும் தீபா, மணப்பெண் அலங்காரத்தில் அப்சரஸ் போல ஜொலித்தாள். ஜெய்சங்கரும் பட்டு வேட்டி, சட்டையில் கம்பீரமாக இருந்தான். தொழில்முறையிலான பணக்கார நண்பர்களுடனும் உறவினர்களுடனும் அவன் கம்பீரமாகப் பழகும் விதம், தீபாவிற்கு வியப்பைத் தந்தாலும், கூடவே பயமும் வந்தது.

வீட்டில் இதுவரை பந்தா இல்லாமல் தான் பழகிய மாமா வேறு…, இப்போது பெரிய தொழிலதிபராக இருக்கும் கணவன் வேறு என்பது போல உணர்ந்தாள். ஏற்கனவே திருமணத்தை வெறுத்த மனம், தன்னிடம் நட்பாகப் பழகி, இப்போது தன் கொள்கைக்கு எதிராகத் தான் கைப்பிடித்திருக்கும் மாமாவின் நம்பிக்கைத் துரோகம், தன் எதிர்காலத்தைப் பற்றிய கலக்கத்தோடு, அவனது இந்தப் புதுத்தோற்றமும் சேர்ந்து அவளைக் கலக்கியது.

ஆனாலும், அவள் மனதின் ஒரு ஓரத்தில் நிம்மதியும் தோன்ற, ‘ஏன் இந்த நிம்மதி?’ என்று நினைத்துக் குழம்பியது மனம்.

இப்படியான ஒரு கலவையான மனநிலையில் அவள் இருப்பதை அவள் முகமும் வெளிக்காட்டியது. வாட்டமான அவள் முகத்திற்கு அவரவர் மனதில் தோன்றியபடி சமாதானம் செய்து கொண்டனர். மஹாலக்ஷ்மி அதிகாலை முகூர்த்தம், புகை, தூக்கமின்மையே அவளுடைய முக வாட்டத்திற்குக் காரணமென்று நினைத்தாள். எனவே, அடிக்கடி அவளருகில் வந்து அவள் களைப்பைப் போக்க பால், தண்ணீர் வேண்டுமா என்று கேட்டும், நெற்றியில் அரும்பிய வியர்வையைத் துடைத்தபடியும் அடிக்கடி கவனித்துக் கொண்டாள்.

வசந்தியும், சுபாவும், புத்தகப் புழுவாக இருந்த தீபா, திடிரென்று திருமண வாழ்க்கையில் நுழைய வேண்டிய நிலைமையால், அவள் பயப்படுவதாக நினைத்து, கிண்டல் கேலியால் அவளை உற்சாகப்படுத்த முயன்றனர்.

அவளுடைய உண்மையான மனநிலையைப் புரிந்து கொண்டது ஜெய் மட்டும் தான். தனக்கு வாழ்த்துத் தெரிவிக்க வந்த நண்பரிடம் புன்னகையுடன் நன்றி தெரிவித்து விட்டு, திரும்பி தீபாவைப் பார்த்தான்.

காலையில் புரோகிதர் மணப்பெண்ணை மேடைக்கு அழைத்து வருமாறு கூறியபோது நிமிர்ந்து அவளைப் பார்த்தவன், அரக்கு நிற பட்டுப்புடவை, நகை அலங்காரத்தில் வந்தபோது அசந்து விட்டான். அவள் தலைகுனிந்து வந்ததால், அவளுடைய முகத்தைப் பார்க்கவில்லை. ஒரு நிமிடம் நோக்கிவிட்டு, பின்னரே புரோகிதர் சொன்ன வேலையைத் தொடர்ந்தான். அவனுடைய திகைத்த தோற்றத்தைக் கவனித்து விட்டு, வசந்தியும், சுபாவும் செய்த கிண்டலையும் மகிழ்ச்சியுடனேயே ஏற்றான்.

அவள் அருகில் வந்து அமர்ந்ததும், திரும்பி அவளைப் பார்த்தான். அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்துவிட்டு, உடனே தலையைக் குனிந்து கொண்டாள். அவனுடைய இந்தக் கம்பீரத் தோற்றம், அவளைப் பயமுறுத்துவதை அவன் உணரவேயில்லை.

         அவனுடைய விருப்பமின்மையே அவள் வாட்டத்திற்குக் காரணம் என்று புரிந்து கொண்டான். எனவே குனிந்து அவள் காதில் மட்டும் விழுவது போல, “முகத்தைக் கொஞ்சம் சிரித்த மாதிரி வைத்துக் கொள் தீபா!” என்றான்.

         அவள் திடுக்கிட்டு அவனைப் பார்க்க, அவனது பார்வையின் கூர்மையைத் தாளாமல், அவள் பார்வை தாழ்ந்தது. ‘இவருக்கென்ன! நினைத்தால் உரிமையோடு ஒட்டிப் பழகுவார். பிறகு வாரக் கணக்கில் திரும்பியே பார்க்கமாட்டார். என்னுடைய கவலை, இவருக்கு எங்கே புரியும்?’ என்று நினைத்தவள், தன் எண்ண ஒட்டத்தைப் பார்த்துத் தானே அதிர்ந்தாள்.

         ‘என்ன இது! நான் அவருடைய அருகாமையை விரும்புகிறேனா?’ என்று தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டாள். தான் என்ன விரும்புகிறோம் என்று அவளுக்கே புரியவில்லை.

         தாலி கட்டியவுடன் பொட்டு இடும் போதும், மற்ற சடங்குகளிலும் அவளிடம் நெருக்கமாக நடந்து கொண்டதும், வசந்தி, சுபாவின் கேலிகளுக்கு விளையாட்டாக அவ்வப்போது அவன் கொடுத்த பதிலும் அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.

         குடத்தில் மோதிரத்தைப் போட்டுவிட்டு அதை மணமக்கள் எடுக்கும் சடங்கில், குடத்தின் உள்ளே கைவிட்டு சும்மாயிருந்தவளிடம், மோதிரத்தை எடுத்து அவள் கையில் வைத்து மூடிய விதத்தில், அவள் திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். சிரித்தபடியிருந்த அவன் முகம், அவளைப் பார்த்து குறும்பாய் புருவத்தை உயர்த்த, உள்ளுர ஒரு சிலிர்ப்பாக உணர்ந்தாள்.

         தீபா கையைப் பிரிக்க, அதிலிருந்த மோதிரத்தை எடுத்த ஜெய், அவளுடைய விரல்களைப் பற்றித் திருப்பி மோதிரத்தை மாட்டினான்.

         “என்ன மாமா! இப்பவே அக்காகிட்ட சரண்டரா?” என்று சுபா கிண்டலடிக்க, “கண்டிப்பா!” என்று பதில் சொன்னான்.

         வந்திருந்த தொழில் நண்பர்கள், அக்கம் பக்கத்து வீட்டவர்கள், முகூர்த்தம் முடிந்தவுடன் விடைபெற, உறவினர் மட்டுமே மதிய உணவிற்குத் தங்கியிருந்தனர்.

         மதிய உணவிற்கு மணமக்கள் இருவரையும் ஒன்றாக அமர வைத்து உணவு பரிமாற, சுபா, வசந்தியின் வற்புறுத்தலுக்காக ஜெய்சங்கர், ஒரு வாய் இனிப்பை எடுத்து தீபாவின் வாயில் ஊட்டினான். சுபா, தீபாவிடம் மாமாவிற்கு லட்டை ஊட்டுமாறு வற்புறுத்தினாள்.

         “மாமாவுக்கு அதிக இனிப்பு பிடிக்காது!” என்று தன்னை மறந்து கூறிவிட, எல்லோரும் “ஓ!” என்று கேலி செய்யவும், நாக்கைக் கடித்துக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டாள். ஜெய்சங்கர் பெருமையாக காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டான்.

         பெண்ணின் வாட்டமான முகத்தைக் காலையிலிருந்து பார்த்து சிறிது  கலக்கத்துடனிருந்த மஹாலக்ஷ்மி, இந்த நிகழ்ச்சியைப் பார்த்ததும் மகிழ்ந்து சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

         மதிய உணவிற்குப் பிறகு மண்டபத்தைக் காலி செய்துவிட்டு முக்கியமான நெருங்கிய உறவினர்களுடன் வீட்டுக்கு அனைவரும் வந்தனர். ஜெய்சங்கர் தன் நண்பர்களை முகூர்த்தத்திற்கே அழைத்ததால், வரவேற்புக்கு ஏற்பாடு செய்யவில்லை.

         அதனால் மஹாலக்ஷ்மியின் வேண்டுதலுக்காக, கல்யாண வீட்டினர் அனைவரும் தோனியப்பர் ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை செய்து வந்தனர்.

         ஆலயத்தின் குருக்கள் மாலைகளைத் தந்து மணமக்கள் இருவரையும் அணிந்து கொள்ளச் சொல்ல ஜெய்சங்கர், தீபாவின் கழுத்தில் மாலையைப் போட்டான். அவளும் பதிலுக்கு மாலையைப் போட, அவள் கையைப் பற்றித் தன்னருகில் நிறுத்திக் கொண்டான்.

         தீபா கண்களை மூடிப் பிரார்த்தனை செய்தாள். சிறு வயதில் பல பிரச்சனைகளைச் சந்தித்திருந்தாலும், சில வருடங்களாகத் தெளிந்த நீரோடையாகப் போய்க் கொண்டிருந்த தன்னுடைய வாழ்வில், திடீரென்று சுனாமி வீசுமென்று அவள் எதிர் பார்க்கவில்லை.

         கோவிலில் பூஜை முடித்து அவர்கள் வீட்டுக்கு வரும்போது மணி ஏழாகியிருந்தது. சமையல்காரர்கள் இரவு உணவைத் தயார் செய்திருந்தனர். உறவினர்கள் உண்ண ஏற்பாடுகள் ஒரு புறம் நடக்க, மாடியில் ஜெய்சங்கரின் அறையில் முதலிரவுக்கான அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.

         ஜெய்சங்கர் அதெல்லாம் வேண்டாமென்று மறுத்த போதும், மஹாலக்ஷ்மிதான் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாள். மிகவும் வற்புறுத்திச் சொன்னால் அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படும் என்பதால் ஜெய்சங்கர் விட்டுவிட்டான்.

         நேரமாக ஆக, தீபாவின் மனதில் திகில் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அவளுடைய கலக்கம் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது. இரவு உணவை அவளால் சாப்பிடவும் முடியவில்லை. அருகில் அமர்ந்து உண்ட ஜெய்சங்கர், இதைக் கவனித்தாலும் எதுவும் கூற முடியவில்லை.

         முதலிரவுக்கான அலங்காரத்திற்காக மஹாலக்ஷ்மி அவளை அழைத்தபோது, அவள் ரொம்பவே மிரண்டு போயிருந்தாள். ஒருமுறை தன்னையும் மீறி, “அம்மா! இதெல்லாம் வேண்டாம்மா!” என்று கூடச் சொல்லிப் பார்த்தாள்.

         மஹாலக்ஷ்மி அவளுடைய பயத்தை இப்பொழுது சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. சற்று முன் தான் அவளுடைய அக்கறையைப் பார்த்தாளே! ‘இந்தப் பயமெல்லாம் தானே சரியாகிவிடும்’ என்று நினைத்தாள்.

 ‘இந்தக் காலத்துப் பெண்கள் எவ்வளவு விபரமாக இருக்கிறார்கள்?  இந்தப் பெண் மட்டும் இன்னும் குழந்தையாக இருக்கிறாளே’ என்று செல்லமாக மனதிற்குள் கடிந்தபடியே, தன் வேலையில் ஈடுபட்டாள்.

தீபாவை முதலில் குளித்துவிட்டு வரச் சொல்லிவிட்டு, அவளுக்கு வேண்டிய அணிமணிகளை தயாராக எடுத்து  வைத்தாள். மென்மையான வெண்ணிறப் பட்டில் அரக்குக் கரையுடன், அந்தப் புடவை அழகாக இருந்தது. அரக்குக்கரை ஒரங்களில் சிறு மல்லிகை மொட்டுகள் கொத்துக் கொத்தாக ஜரிகையில் மின்னின. அதற்குப் பொருத்தமாகக் காதணிகள், அரும்புகளாகக் கோர்த்த தங்கமாலை, வளையல்கள் எனத் தயாராக இருந்தன.

         குளித்துவிட்டு வந்தவளை அமரவைத்து, தன் கையாலேயே தலையை வாரி, தளரப் பின்னிவிட்டாள் மஹாலக்ஷ்மி. வெகு நாட்களுக்குப் பிறகு நிம்மதி தெரிந்தது. அவள் முகத்தைக் குனிந்து, தன் மகளின் முகத்தைப் பார்த்திருந்தால் அது குறைந்திருக்கும். அவளை அலங்கரிக்கும் வேலையில் மும்முரமாக இருந்ததால், அதைக் கவனிக்கத் தவறினாள்.

         தளரப் பின்னிய ஜடை, இடுப்பைத் தாண்டி கீழே இறங்கியது. பெருமையுடன் மகளின் கூந்தலை ரசித்தபடி நெருக்கமாகத் தொடுத்திருந்த சந்தன மல்லிச் சரத்தை அவள் தலையில் வைத்தாள். பின் நகைகளை அணிவித்து விட்டு முகத்திற்கான எளிமையான அலங்காரத்தை, தீபாவையே செய்து கொள்ளச் சொன்னாள்.

         ட்ரெஸ்ஸிங் டேபிளின் மேலிருந்த சந்தனப் பவுடரை மெலிதாகப் பூசி, கண்களில் மையிட்டு, நெற்றியில் ஒரு மெரூன் பொட்டை ஒட்டி நிமிடத்தில் தயாராகி நின்றாள் தீபா.

         நாற்காலியில் இருந்து எழுந்து திரும்பி அன்னையின் முகத்தைப் பார்த்த தீபா, அவளது கண்களில் கண்ணீரைக் கண்டதும் திடுக்கிட்டாள். “என்னம்மா?” என்று பரிவுடன் அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

         கண்களில் கண்ணீருடன், ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையை அசைத்தபடி, அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டாள் மஹாலக்ஷ்மி.

         “எட்டு வருஷத்துக்கு முன்னால் உங்கப்பாவால நாம நடுத்தெருவுக்கு வந்தப்போ, உங்க எதிர்காலம் என்ன ஆகுமோன்னு நான் பட்ட கவலை கொஞ்ச நஞ்சமில்ல. நீ இப்போ… இவ்வளவு படிச்சு, வளர்ந்து ஆளாகி என் தம்பியையே கல்யாணம் பண்ணியிருக்கறத நினைச்சா, ரொம்ப நிம்மதியாயிருக்கும்மா. இனிமேல் உங்களைப் பத்தி நான் கவலைப்பட வேண்டியதில்லை’ என்றபின் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

         அம்மாவிடம் வாய்திறந்து தன் பயத்தை, கவலைகளைச் சொல்ல வந்த தீபா, வாயை இறுக மூடிக் கொண்டாள். எட்டு வருடங்களாக எவ்வளவோ கஷ்டப்பட்டு, தன்னைப் பற்றி யோசிக்காமல், குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே யோசித்தத் தன் தாய்க்கு முன், தன் பிரச்னையைக் கூற அவளால் முடியவில்லை.

         இனிமேல், தன் பிரச்னைகளைத் தானே தான் நேருக்கு நேர் எதிர் கொண்டு நின்று சமாளிக்க வேண்டுமென்று உறுதி கொண்டாள்.

“இதுவரை தன் தோழனாக இருந்து ஆதரவு தந்த மாமாவே, இப்போது எதிரியாக மாறிவிட்டாரோ?” என்று நினைத்தாள்.

         மஹாலக்ஷ்மி அவள் கையில் பால் செம்பைக் கொடுத்து, ஜெய் இருந்த அறைவாசல் வரை வந்து கதவைத் திறந்து உள்ளே அனுப்பினாள். போகும்போதே, “பார்த்து நடந்துக்கோம்மா!” என்ற அறிவுரை வேறு.

         தலையைக் குனிந்தபடியே சரியென்பது போல் தலையசைத்தவளாக உள்ளே சென்றாள் தீபா. அதுவரை துணிவாக இருந்த அவள் மனதில், திரும்ப அச்சம் கலந்த  தயக்கம் வந்தது. குனிந்த தலையை நிமிர்த்தாமலே அடிமேல் அடி வைத்து மெல்ல நடந்து, ஜெய்க்கு சிறிது தூரம் வந்ததும் நின்றாள்.

         அவளை ஆழமான ஒரு பார்வை பார்த்தவன், நடந்து சென்று அறைக் கதவைத் தாழிட்டு விட்டு வந்து, அவளெதிரில் நின்றான். மனதிற்குள் திடீரென்று ஏனோ ஒரு சிறைக்குள் அடைக்கப்பட்ட உணர்வு தோன்றியது, சிங்கத்தின் குகையில் தனியாக யாரோ தள்ளி விட்டாற் போல.

         “என்ன தீபா     ! யாரோ உன்னைச் சிங்கத்தோட குகைக்குள்ள தனியா தள்ளிவிட்டா மாதிரியிருக்கா?” என்று கேட்டவன், அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்த பார்வையில், ‘அவள் அப்படித்தான் நினைக்கிறாள்’ என்பதை உணர்ந்தான். அளவு கடந்த வேதனையில் தன் முகம் வாடியதை நிமிடத்தில் உணர்ந்தவன், உடனே இயல்புக்கு மாறினான்.

         தான் பேசுவதை, தான் நினைப்பதை, தன் எண்ணங்களை, தன் உணர்வுகளை எப்போதும் சரியாக உணர்ந்து கொள்ளும் மாமா, இப்போதும் சரியாக யூகித்ததைப் பார்த்து அதிர்ந்திருந்த தீபா, நொடியில் அவன் முகம் வாடியதை உணரவில்லை. ஒருமுறை நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்து விட்டு, தலையைக் குனிந்து கொண்டாள்.

         “தீபா! நீ பயப்படறதுக்குத் தேவையேயில்லை. நம்ப கல்யாணத்துக்கு முன்னால நான் உனக்கு வாக்குக் கொடுத்த மாதிரி,  வெளியில மட்டும் தான் நாம கணவன்-மனைவி. இந்த ரூம்ல அந்த வேஷம் தேவையில்ல. அதனால, நீ நிம்மதியா இந்தக் கட்டிலில் படுத்துக்கோ. நான் கீழே படுத்துக்கறேன்!” என்றவனாக, கட்டிலிலிருந்து ஒரு தலையணையையும், போர்வையையும் எடுக்க முயன்றான்.

         “வேண்டாம் மாமா! நீங்க கட்டில்ல படுங்க. நான் தரையில் படுக்கறேன்!” என்று பதறியபடி அவனது கையைப் பற்றித் தடுத்தாள் தீபா.

         குனிந்து அவன் கைகளைப் பற்றியிருந்த அவள் விரல்களைப் பார்த்தான் ஜெய். நிமிர்ந்து அவள் முகத்தை ஏளனமாகப் பார்க்க, அவசரமாக அவனைப் பற்றியிருந்த தன் கையை எடுத்துக் கொண்டாள் தீபா.

         “உன்னோட அக்கறைக்கு தாங்க்ஸ் தீபா! நாளைக்கு இன்னொரு கட்டிலை இந்த ரூம்ல போட ஏற்பாடு பண்ணிடறேன். இன்னிக்கு நீ ரொம்பக் களைப்பா இருப்பே. நீயே கட்டில்ல படுத்துக்கோ. ஆக்சுவலா, இரண்டு பேர் படுத்துக்க, இந்தக் கட்டிலே போதும். ஆனா… நம்மோட மன இடைவெளிக்கு, இந்த இடைவெளி போதாது. அதனால, நாளைக்கு வேற கட்டில் வாங்கிடலாம். குட்நைட்!” என்று குத்தலுடன் முடித்தான்.

         கட்டிலில் இருந்து போர்வை, தலையணை இரண்டையும் எடுத்தவன், கம்பீரமான நடையுடன் நடந்து சென்று கதவுக்கருகில் தரையில் போர்வையை விரித்து, தலையணையைப் போட்டுப் படுத்தான்.

         “அங்கே படுத்தா, காத்து வராதே!” என்று நினைத்தவள், மேற்கொண்டு ஏதேனும் பேசி அவனிடம் எதையும் வாங்கிக் கட்டிக் கொள்ள விரும்பாமல், விளக்கை அணைத்து விட்டுக் கட்டிலில் படுத்தாள்.

         காலையில் இருந்து சடங்குகள், வேலை என இருந்தாலும், அவளுக்கு உறக்கம் வரவில்லை. திடுமென தன் வாழ்வின் திசை மாறியதை யோசித்தாள். எப்போதும் ஒரு பிரச்சனை என்றால், பேசிப் பகிர்ந்து கொண்டு வழிமுறைகளைச் சொல்லும் அவளது மாமாவே இப்போது பிரச்சனையாக இருப்பதால், யாரிமும்  பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் அவள் மனம் குழம்பிக் கிடந்தது.

         அவனைப் பற்றி நினைத்தவுடன், ‘அவள் என்ன  செய்கிறான்?’ என்ற எண்ணம் வந்ததும், தலையை மட்டும் திருப்பிப் பார்த்தாள்.

         அவனோ, கதவுப் பக்கமாகத் திரும்பிப் படுத்திருந்தான். சீராக ஏறியிறங்கிய முதுகு அவன் உறங்கியதைக் காட்டியது. ‘அங்கே காற்றே வராதே! கொசு வேறு கடிக்குமே!’ என்று கவலை கொண்டவள், மெல்ல எழுந்து ஒரமாக இருந்த டேபிள்ஃபேனை அவன் புறமாகத் திருப்பி வைத்து ஒடவிட்டாள். கொசு விரட்டியின் ஸ்விட்சையும் ‘ஆன்’ செய்துவிட்டு மெள்ள வந்து படுக்கையில் சாய்ந்தவளுக்கு, ‘மெத்தை வாங்கினேன்; தூக்கத்தை வாங்கலை!’ என்ற ஒரு பழைய பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

சிறுவயது முதல் பாயில் படுத்தபோது வந்த தூக்கம், இப்போது மெத்தையில் படுத்துபோது வரவில்லையே!” என்று பலவற்றைப் பற்றிச் சிந்தித்தாள்.

         அவள் நினைத்தது போல் ஜெய் தூங்கவில்லை அவள் சத்தம் போடாமல் ஃபேனைக் கொண்டு வந்து போட்டதை, அவன் உணர்ந்து தான் இருந்தான்.

         அவளுடைய அக்கறை, அவனது நொந்த மனதிற்கு ஆறுதலாக இருந்தது. நாளடைவில் “எல்லாம் சரியாகிவிடும்” என்ற நம்பிக்கை மனதுக்குள் எழுந்தது.

ஓருவர் மேல் ஒருவர் அன்பு கொண்ட உள்ளங்கள், தத்தம் உள்ளத்தில் உள்ள எண்ணங்களை அறியாமல், வாடியபடி தனித்தனியே உறங்காமல் இருந்தனர்.

Advertisement