Advertisement

Chapter 11

கோயிலுக்குள் நுழைந்து கடவுளை வணங்கும்போது, தன் மனக் கவலையையெல்லாம் கடவுளிடம் ஒப்படைத்து விட்டு, மனம் உருக வேண்டினாள். கோயிலைச் சுற்றி முடித்ததும் பிரகாரத்தில் ஓரமாக அமர்ந்தனர்.

         சிறிது நேரம் கோயிலின் அமைதியையும், காற்றையும் அனுபவித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தனர்.

சிறு தயக்கத்துடன் “மாமா! எனக்கு இவ்வளவு வாங்கினீங்க. உங்களுக்கு மாமா?” என்று கேட்டாள் தீபா.

         “எல்லாமே எனக்குத் தான்!” என் அவன் சொல்ல, திகைப்புடன் அவள் நிமிர்ந்து பார்த்தபோது,  “ஆமாம் தீபா! இந்த உடை, நகையெல்லாம் அணிந்து, என் மனைவியாக வெளியே நீ போகும் போது, அதனால் எனக்குக் கௌரவம் தானே?” என்று சொன்னான்.

 ‘எப்போதுமே அவன் ஆடம்பரத்திற்கோ, பணத்திற்கோ முக்கியத்துவம் தந்ததில்லை. இவ்வளவு வருடங்களாக அவனிடம் பணம் இருந்தும், எளிமையாகத் தானே இருந்திருக்கிறான்? இப்போது, தங்கள் கல்யாணம் என்பதால் தானே, அவன் இவ்வளவு செலவு செய்கிறான்? ஒருவேளை தான் சொன்னதை அவன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ’ என நினைத்தாள்.

         “வந்து…, நீங்க எனக்கு இவ்வளவு வாங்கியிருக்கீங்க. நான் உங்களுக்கென்று எதுவுமே வாங்கலையே?” என்று மீண்டும் கேட்டாள் தீபா.

         ஒரு புன்னகையுடன், “நீ கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டதே போதும்” என்றபோது, ஒரு எதிர்பார்ப்புடன் அவன் முகத்தையே பார்த்தாள் தீபா.

         ஆமாம் தீபா! நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதாலே தானே, அம்மோவோட நச்சரிப்புல இருந்து என்னாலே தப்பிக்க முடிஞ்சது. கல்யாணத்துக்குக் கல்யாணமும் ஆச்சு! இதைத் தவிர வழக்கம்போல நானும் எந்தப் பிரச்னையும் இல்லாம, என் தொழிலைப் பார்க்கலாம்” என்று அவன் கூறியதைக் கேட்டவுடன் ஏமாற்றமாக உணர்ந்தாள். ஏனோ கூடவே சுறுசுறுவெனக் கோபமும் வந்தது.

 “இவ்வளவு பணம் செலவழிக்கறீங்களே… ஏது இவ்வளவு பணம்? என்று படபடவென யோசிக்காமல் கேட்டாள் தீபா.

         ஒரு நிமிடம் அவள் முகத்தையே கூர்ந்து கவனித்த ஜெய்சங்கர் “என்ன தீபா? இப்பவே நிஜப் பொண்டாட்டி மாதிரி, கணக்கெல்லாம் கேக்கற!” என்று கேலியாகக் கேட்டான்.

         முகம் சிவக்க அவள் தலையைக் குனிந்து கொண்டாலும், விடாதவனாக, “நீ தானே நிஜக் கணவன் மனைவிக்கான உறவு, நமக்குள்ள எதுவுமே இல்லைன்னு சொன்ன… இப்ப உண்மையான பெண்டாட்டியா… அக்கறையா பணக் கணக்கை மட்டும் கேக்கறியே! ம்… அதான் ஏன்?” என்று மீண்டும் கேட்டான்.

         சிவந்த முகத்துடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், அவன் கண்களில் தெரிந்த கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல், தலையைக் குனிந்து கொண்டாள். அவனது கேள்வி அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது. ‘உண்மையான கணவன்-மனைவிக்கான எந்த உறவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இப்போது எந்த உரிமையில், இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்?” என்கிறான். அதற்கான பதிலைத் தான் அவளால் தர முடியவில்லை.

         தலைகுனிந்து உட்கார்ந்திருந்த அவனுடைய நிலைமையைப் புரிந்து கொண்டவனாக, “சரி தீபா! கிளம்பலாமா?” என்று கேட்க, “சாரி மாமா!” என்று தயக்கத்துடன் சொன்னாள் தீபா.

         “தீபா! நீ ரொம்ப யோசிக்கறே. ஏன்… குழப்பிக்கறேன்னும் நினைக்கறேன். எல்லாப் பொறுப்பையும் என்கிட்ட விடு. உன் கவலையையெல்லாம் மயூரநாதர் கிட்ட விட்டுட்டா, மத்ததையெல்லாம் அவர் பாத்துக்குவாரு. இப்பப் போலாமா?” என்றபடி எழுந்தான்.

         கூடவே எழுந்தாலும், இந்த நிகழ்வால் அவள் மனம் குன்றியது. அதனால் மேலே பேசாமல் இருவரும் மௌனமாகவே வந்து காரில் ஏறினர். வீடு வரும்வரை இருவரிடமும் ஒரு சங்கடமான அமைதியே நிலவியது.

வீடு வந்தவுடன் பரபரப்பாக இறங்கியவள், பைகளை எடுத்துச் செல்வதா அல்லது வைத்து விட்டுப் போவதா என்று தயங்கினாள். வைத்து விட்டுப் போனால் அலட்சியமாகத் தோன்றும். உள்ளே கொண்டு போனால், அவற்றுக்காக அலைந்ததாகத் தோன்றும். என்ன செய்வதென்று யோசித்தவளுக்கு, நல்லவேளையாக உள்ளே இருந்து வந்த சுபாவும், சபாவும் கை கொடுத்தனர்.

அவள் வேகமாக இறங்கியதையும், தயங்கியதையும் பார்த்தே அவளது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட ஜெய்சங்கர், ஒரு சிரிப்புடனேயே உள்ளே வந்தான்.

இருவருடைய முகத்தையும் பார்த்த சுபாவுக்கு மாமாவின் சிரித்த முகமும், தீபாவின் சிவந்த… ஆனால் வாடிய முகமும் சுவாரஸ்யத்தைத் தந்தது. ஆளுக்குக் கொஞ்சம் பைகளை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். தீபா கையில் இருந்த நகைப் பெட்டியை நேராக ஆயாவிடம் போய்க் காட்டினாள்.

அதற்குள் சுபா ஆர்வமாக, “என்ன மாமா வாங்கியிருக்கீங்க?” என்று, தனக்கும் ஏதாவது அதில் இருக்கிறதா என்ற நப்பாசையில் கேட்டாள்.

அவனிடம் சோகமாக இருப்பதுபோல் விளையாட்டாக முகத்தை வைத்தபடி, “எல்லாமே உன் அக்காவுக்குத் தாண்டா! எனக்குக் கூட எதுவும் வாங்கல” என்று கூறினான் ஜெய்.

சுபா சஸ்பென்ஸ் தாங்கமுடியாமல், “ஏன் மாமா! எல்லாம் வாங்கித் தந்து பர்ஸ் காலியான நீங்க… சிரிச்சுகிட்டு இருக்கீங்க! ஆனா, எல்லாம் வாங்கிக்கிட்டும், அக்கா ஏன் உம்முனு இருக்கா?” என்று கேட்டாள்.

“போச்சுடா! மச்சினிச்சி கிட்ட எதையும் மறைக்க முடியாது போல இருக்கே. நான் என் பொண்டாட்டிக்கு எல்லாம் வாங்கிக் குடுத்த சந்தோஷத்தல இருக்கேன். அவ, நான் இவ்வளவு காசு செலவு பண்ணிட்டேனேன்ற கோபத்துற இருக்கா! என்று சோகமாக இருப்பதுபோல் பாவனை செய்தான் ஜெய்.

அவன் பதிலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த தீபாவை, அவன் கண்கள் கேலியோடு நோக்கின. ஆயா அவன் பதிலைக் கேட்டு திருப்தி அடைந்தவளாக, “நல்லாயிரு!” என்று பெட்டியை மீண்டும் அவள் கையில் கொடுத்தாள்.

அவர்கள் வந்த விதமும், சுபா கேட்ட கேள்வியும் கவலையைக் கொடுக்க, தம்பியின் பதிலால் சமாதானமானாள் மஹாலக்ஷ்மி.

“தம்பி! அது மட்டுமில்லை. தனக்கு மட்டும் செய்துட்டு, மாமா எதுவும் வாங்கிக்கலையேன்னும் தீபாவுக்கு வருத்தமாயிருக்கும்” என்றாள்.

‘அப்படியா!’ என்பது போல ஜெய் மீண்டும் அவள் முகத்தைப் பார்க்க, அதற்கு மேலும் அங்கே நின்றால் தன் தலை உருளும் என்பதை உணர்ந்தவளாக, ஏதோ வேலையிருப்பது போல் சமையலறைக்குச் சென்று ஒளிந்து கொண்டாள் அவள்.

அதற்குப் பிறகு, அவளால் அடிக்கடி ஜெய்சங்கரைப் பார்க்க முடியவில்லை. கல்யாண வேலை, தொழில் என்று எப்போதும் பிஸியாக அலைந்து கொண்டிருந்தான். அவளுக்கும் வீட்டில் திருமண உடைகளைத் தைக்கக் கொடுப்பது, திருமணப் பலகாரம் செய்ய உதவுவது எனப் பல வேலைகள் இருந்தன.

உறவினர்கள் வரையில் கொடுக்க, திருமணப் பலகாரங்கள் செய்ய சமையற்காரர்களை ஏற்பாடு செய்திருந்தனர். அவர்களுக்குச் சாமான் கொடுப்பது, திருமணத்திற்கு வாங்க வேண்டிய சாமான்களை அம்மாவைக் கேட்டு எழுதுவது, அவற்றை வாங்கி வந்தால் அடுக்குவது என அவளுக்கும் வேலையிருந்தது.

அதனால் முன்போல ஜெய்சங்கருக்கு உணவு பரிமாற அவள் செல்வதில்லை. மஹாலக்ஷ்மியே எல்லாம் செய்தாள். பெண்ணுக்குக் கல்யாணம் பேசியதிலிருந்து கூச்சம். திருமணமானால் எல்லாம் சரியாகி விடுமென்று தீபாவின் ஓதுக்கத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஜெய்சங்கரும் அவளுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டவன் போல அவளைத் தொந்தரவு செய்யமால் விட்டுவிட்டான். ஆனால், தீபாவுக்குத்தான் தவிப்பாக இருந்தது. அவன் தொட்டுப் பேசினாலும் தவிப்பாக இருந்த மனம், இப்போது அவன் விலகிப் போனாலும் வருத்தமாகயிருந்தது.

தீபா இந்த மனநிலையுடனேயே இருக்க, திருமண நாளும் நெருங்கி வந்தது.

Advertisement