Advertisement

Chapter 10

அவளை அழைத்துக் கொண்டு ஒரு பெரிய நகைக்கடைக்குள் நுழைந்தான். எதற்கென்று புரியாமலேயே அவள் திகைக்குமுன், கடையின் உரிமையாளர், “வாங்க தம்பி! கல்யாணம்னு கேள்விப்பட்டேன். ரொம்பச் சந்தோஷம். நம்ம கடையில் நகை ஒண்ணும் வாங்கலியா?” என்று பல்லைக் காட்டினார்.

அவருக்குத் தீபாவை அறிமுகப்படுத்தும் சாக்கில், உரிமையாக அவள் தோள் மீது கைவைத்து அருகே இழுத்தவன், “இவங்கதான் என் வருங்கால மனைவி தீபா. அண்ணாமலை யூனிவர்ஸிடியில, எம்.ஈ. படிக்கிறாங்க!” என்று அறிமுகப்படுத்தினான்.

ஒரே வீட்டில் இத்தனை வருடங்களாக ஒன்றாக இருந்தும், ஜெய் அவளைத் தொட்டுப் பேசியதில்லை. அதுவும், அவள் வளர்ந்து பெரிய பெண்ணான பிறகு, தள்ளி நின்று தான் பேசுவான். அப்படிப்பட்டவன், இப்போது திடுமென…. அதுவும் பொது இடத்தில் தோளில் கைபோட்டு அறிமுகப்படுத்தவும், அவளுக்கு ஆச்சரியமும், கூச்சமுமாக இருந்தது.

அவனுடைய வகுப்பிலேயே, ஆண்களுடன் கை கொடுப்பது, தோளைத் தட்டுவது, அருகில் அமர்ந்து பேசுவது என்று இருந்தாலும் யாரும் அதை வித்தியாசமாக எடுத்துக் கொண்டதில்லை. என்றாலும், அவள் யாருடனும் அவ்வாறு பழகியதில்லை.

நகைக்கடை உரிமையாளர் சிரித்தபடி, “ஜோடிப் பொருத்தம் பிரமாதம்!” என்று சொன்னதோ, அதற்கான ஜெய்சங்கரின் நன்றியோ… அவள் காதில் விழவில்லை.

ஜெய்சங்கர் அவரிடம், “என்னோட ‘வுட் பீ’க்கு, நல்ல நகையா ப்ரஸென்ட் பண்ணலாம்னு வந்தேன்… ரிங் மாதிரி என இழுக்கும் முன்னே “என்ன தம்பி! நம்ம கடைல புது மாடல் நெக்லஸ்லாம் வந்திருக்குது… அதையும் பாருங்க. ரிங்கை அப்புறம் காட்டச் சொல்றேன்!” என வியாபாரியாக மாறினார். தோள் மீது வைத்த கையை எடுக்காமலேயே, அவளை நெக்லஸ் பிரிவிற்க்கு அழைத்துப் போனான் ஜெய்சங்கர்.

முன்னால் போகும் கடைக்காரைப் பார்த்தபடியே, “மாமா…! கை…” என்று கூச்சமாக நெளிந்தாள்.

“பொறுத்துக்கோ தீபா! இதையெல்லாம் விரும்பிக் கல்யாணம் செஞ்சுக்கறவங்ககிட்ட எல்லாரும் எதிர்பார்ப்பாங்க!” என்று சொன்ன போதும், அவனுடைய கூச்சத்தை உணர்ந்து, கையை மட்டும் பிடித்துக் கொண்டான்.

கடைக்காரர் அழகான வேலைப்பாடுகள் நிறைந்த நெக்லஸ்களைக் காட்டச் செய்தார். அவற்றின் விலையைப் பார்த்ததுமே தீபா ஜெய்சங்கரிடம் குனிந்து, “மாமா! இப்பத்தான் எனக்கு நிறைய நகை வாங்கினீங்க. இன்னும் ஏன்?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டான்.

அவள் முகத்தை அன்போடு பார்த்து, “எத்தனை வாங்கினா என்ன? இது, நான் உனக்கு அன்பா கொடுக்கற முதல் பரிசு. அதனால உனக்கு எது பிடிக்குதுன்னு மட்டும் பாரு!” என்று சொல்லிவிட்டு, நவரத்தினங்களும் பூக்களாக அமைக்கப்பட்டிருக்க, நடுவில் தங்கக் கொடியுடன் அருமையான வேலைப்பாட்டுடன் இருந்த நெக்லஸை எடுத்தான்.

“இது எப்பிடி இருக்குன்னு பாரு” என்று காட்ட, கடைச் சிப்பந்திக்கு இருவரும் புதிதாகத் திருமணம் ஆகப் போகிறவர்கள் என்பது புரிய, “மேடம் கழுத்துல போட்டுப் பாருங்க சார்!” என்றார்.

அவனுடைய வற்புறுத்தலுக்காக நெக்லஸைப் போட்டுப் பார்க்க கையை நீட்டிய தீபாவிடம், “திரும்பு தீபா! நானே போட்டு விடறேன். இந்தக் கொக்கி… கொஞ்சம் போடக் கடினமாக இருக்கும்!” என்று சொல்லிவிட்டு, அவளுடைய தோளைத் தொட்டுத் திருப்பினான்.

அவனுடைய இந்தப் புதிய நெருக்கம், கூச்சத்துடன் ஒரு புதிய உணர்வையும் அவளிடம் ஏற்படுத்தியது. மெல்லத் திரும்பி நின்றவளுக்கு அவன் நெக்லஸை இரு கைகளாலும் முன்புறம் கொண்டு வந்து, ஒரு கையால் அவளுடைய கூந்தலை ஒதுக்கி, கொக்கியை மாட்ட எடுத்துக் கொண்ட அந்த ஒரு நிமிட நேரம், ஒரு யுகமாகத் தெரிந்தது. அவனுடைய விரல்கள் கொக்கியை மாட்டுகையில், அவளுடைய பின்னங் கழுத்தைத் தொடுகையில், அவளுடைய உடல் சிலிர்த்தது.

அதோடு விடாமல் அவளுடைய காதருகில் குனிந்து, “இது எப்படி இருக்கு தீபா?” என்று கேட்டான் ஜெய்.

எதிரில் இருந்த கண்ணாடியில் தெரிந்த இருவரின் உருவத்தையும் பார்த்தபடி நின்ற தீபாவுக்கு, அவன் நகையைப் பற்றிக் கேட்கிறானா…, அல்லது தங்கள் பொருத்தத்தைக் கேட்கிருறானா என்று சந்தேகம் வந்தது.

நிமிர்ந்து அவனுடைய முகத்தைப் பார்த்த போது, அவனும் தன்னையே பார்ப்பது தெரிந்தது. களையான முகம், மாநிறமானலும் சராசரிக்கும் கூடுதல் உயரம், சுயதொழில் செய்வதால் ஏற்பட்ட கம்பீரம் என அவனை வசீகரமாகக் காட்டியது. கூர்மையான கண்கள், எடுப்பான நாசி, அளவான உதடுகள், அதன் மேல் எடுப்பான மீசை என அவன் முகம் கவர்வதாக இருந்தது.

இத்தனை ஆண்டுகளாக ஒரே வீட்டில் இருந்த போதும், இதுவரை தான் அவனை இப்படி யோசித்ததே இல்லை. இப்போது முதல் முறையாகத் தான் அவனுடைய தோற்றத்தை ஆராய்வதை திடுக்கிடலுடன் உணர்ந்து  தலையைக் குனிந்து கொண்டாள்.

முதலில் இருந்தே அவள் முகமாற்றத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஜெய்சங்கர், அவள் வெட்கத்துடன் தலை குனிந்ததும், திருப்தியுடன் புன்னகைத்துக் கொண்டான். அவள் மறுக்க மறுக்க, அந்த நெக்லஸை வாங்கினான். கூடவே, அவளுக்குப் பொருத்தமான தோடுகளும், மோதிரமும் இருந்த நகைப்பெட்டியை வாங்கி வைத்துக் கொண்டான்.

மீண்டும் ஒருமுறை அவளுடைய கழுத்தில் கொஞ்சம் சாய்வாகத் திரும்பியிருந்த நெக்லஸைச் சரி செய்வது போல் தொட்டவன், அவள் முகம் அவனுடைய அன்னியோன்னியத்தில் சிவப்பதையும் கவனித்தான். க்ரெடிட் கார்டு மூலம் பணத்தைச் செலுத்திவிட்டு அவளது கையைப் பற்றி வெளியே அழைத்து வந்தான்.

அதோடு விடாமல் பிடிவாதமாக அவளை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த பெரிய துணிக்கடைக்குள் நுழைந்தான். அங்கும் கடைமுதலாளி அவனுக்குத் தெரிந்தவராக இருந்துவிட நல்ல கவனிப்பு. நல்ல வியாபாரமும் கூட.

அவள் மறுக்க மறுக்க, உடைகளை வாங்குவதில் முனைந்தான். சில்க் காட்டன், போச்சம்பள்ளி, எம்பிராய்டரி எனப் பலவகைப் புடவைகளை வாங்கித் தள்ளினான். விலையுயர்ந்த சுரிதார்களையும் எடுத்து வைத்தான். அவன் வாங்கிய உடைகளைப் பார்த்து மலைத்து நின்றாள் தீபா.

கடை முதலாளியிடம், “வீட்டுக்கும் போய்விட்டு, கலரோ டிசைனோ பிடிக்கவில்லையென்றால் திருப்பி விடலாமா?” என்று கேட்டாள் அவள்.

அவளுடைய உட்கருத்தைப் புரிந்து கொண்டவராக “தம்பி! நீங்க ரொம்பக் குடுத்து வெச்சிருக்கீங்க. பாருங்க! நீங்க அதிகமா செலவு செய்யறதை, இப்பவே எவ்வளவு கரெக்டா பாக்கறாங்க!” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

பெருமையுடன் அவள் தோள் மேல் கைவைத்து அழுத்திச் சிரித்தபடி,  “இனிமே, கணக்கு வழக்கெல்லாம் அவங்க கையில்தான் சார். அவங்க சம்மதிச்சா தான், இனிமேல் செலவே பண்ண முடியும்!” என்றான் ஜெய்.

ஏராளமான பைகளைச் சுமந்தபடி வெளியே வந்தனர். அவள் கையிலிருந்த பைகளை வாங்கிக் காரில் வைக்கப் போனான். ஓர் ஓரமாக நின்றிருந்த தீபா, இரு கைகளிலும் பைகளைச் சுமந்தபடி, கம்பீரமான நடையுடன் அவன் வேகமாக செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இது நாள் வரை படிப்பு, வீட்டுவேலை என வேறு எதிலும் செல்லாத தன் மனம், இன்று அவள் செயல்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்ததை உணர முடிந்த அவளுக்கு, இது ஒரு புதுவித அனுபவமாகவும் இருந்தது. நான் என்ன நினைக்கிறோம்… தன் மனம் விரும்புவது என்னவென்றும் எதுவும் புரியாமல் இருந்தது. ஒரு புறம் பரபரப்பான பரசவமாகவும், மறுபுறம் பயமாகவும் இருந்தது அவளுக்கு. ஆனால், எதையும் புரிந்து கொள்ளக்கூடிய அனுபவமோ, அவகாசமோ இல்லை.

அதற்குள் பைகளை வைத்துவிட்டு வந்த ஜெய்சங்கர், “வர்றியா தீபா! மயூரநாதர் கோயிலுக்குப் போகலாம்?” எனக் கேட்டான்.

மேற்கொண்டு கடைகளுக்குப் போக வேண்டியதில்லை என்ற நிம்மதியுடன், உடனடியாக ஒப்புக் கொள்ள, இருவருமாக நடந்து போக ஆரம்பித்தனர்.

போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த ஒரிரு இடங்களில், இயல்பாக அவளுடைய தோளைப் பற்றி அருகில் இழுத்த அவன் செய்கை, அவளுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்க, ஒரக்கண்ணால் அவன் முகம் பார்த்தாள் தீபா. அவன் சாலையில் வண்டிகள் கடப்பதைக் கவனத்துடன் பார்ப்பதைக் கண்ட தீபா, என்ன செய்வதென்று தெரியாமல் மௌனியானாள்.

 ‘ஏன் இப்படியெல்லாம் என்னைத் தொட்டுப் பேசுகிறீர்கள் என்று கேட்டால்…  அதிலென்ன தப்பு! உங்கள் கல்லூரியில் மாணவர்களுக்குள்ளே இப்போதெல்லாம் இப்படித்தானே இயல்பாகப் பேசிக் கொள்கிறீர்கள்?’ என்று கேட்பானா… அல்லது, “நான் உன் வருங்காலக் கணவன். நான் இப்படி நடந்து கொள்வது தான் இயல்பு!” என்று உரிமையை நிலை நாட்டுவானா?” என்ன செய்வதென்று புரியாமல் தவித்தாள்.

அதற்குள் நெரிசல் சீராகிவிட, “வா தீபா!” என்றவன், அவள் தோளிலிருந்து கையை எடுத்துவிட்டு முன்னால் நடக்க, ஒரு கையாலாகாத உணர்வுடன் அவனைப் பின் தொடர்ந்தாள் தீபா.

Advertisement