Advertisement

காதலெனும் தோ்வெழுதி…

 

Chapter 1

“மாமா! சூடா இட்லி எடுத்து வச்சிருக்கேன். வந்து சாப்பிடறீங்களா?” என்று வெங்காயச் சாம்பாரைப் பெரிய பாத்திரத்தில் ஆற வைத்திருந்த சாதத்தில் ஊற்றிக் கலந்தபடியே குரல் கொடுத்தாள் தீபா.

குளித்து முடித்து இடுப்பில் கட்டிய துண்டோடு தன்னுடைய பாண்ட் சட்டைக்கு இஸ்திரி போட்டுக் கொண்டிருந்த ஜெய்சங்கர், அயர்ன் பாக்ஸை நிமிர்த்தி வைத்துவிட்டு சமையலறைக்கு வந்தான்.

“ஏம்மா! இன்னிக்கு உனக்குப் பரிட்சைன்னு சொன்னியே! இப்பக் கூடவா இந்த வேலையெல்லாம் செய்யணும்? இப்பவே கிளம்பினா தான்  சிதம்பரம் பஸ்ஸைப் பிடிச்சு, நீ யூனிவர்ஸிடிக்கு போக சரியாக இருக்கும்! சீக்கிரம் கிளம்பு”

“இதோ கிளம்பிட்டேன் மாமா! எல்லோருக்கும் மதியச் சாப்பாட்டைக் கலந்துட்டேன்; டப்பால போட வேண்டியது தான் பாக்கி. நீங்க வந்து டிபன் சாப்பிட்டீங்கன்னா வேலை முடிஞ்சுடும். அம்மா நிறைய ப்ராஜக்ட் ரிப்போர்ட் ஜெராக்ஸ் எடுக்கற வேலை இருக்குன்னு… காலையிலேயே போயிட்டாங்க. தம்பி ஸ்கூலுக்குப் போகும் போது அப்படியே அம்மாவுக்கு டிபன், சாப்பாட்டைக்  குடுத்துடுவேன். சுபா டைப்பிங் கிளாஸ்க்குப் போய், இப்பத்தான் வந்தா. எல்லா வேலையும் முடிஞ்சுடுச்சு. ஆயாவுக்கும் தாத்தாவுக்கும் கூட டிபனை ஹாட் பேக்ல வெச்சுட்டேன். உங்களுக்குத் தட்டுல வைக்கவா?” என்று கேட்டபடியே, தட்டை மேசையில் வைத்தாள் தீபா!.

“சரி வை… சாப்பிடறேன். நானும் இன்னிக்குச் சீக்கிரம் கிளம்பி சிதம்பரத்திற்குத் தான் போறேன். நீ கிளம்பிட்டேன்னா, உன்னையும் கொண்டு விட்டுர்றேன்.” டைனி்ங் சேரில் வந்தமர்ந்தான்  ஜெய்சங்கர். அவனெதிரே தட்டில் மிருதுவான இட்லிகள் நான்கை வைத்து, வடகம், வெங்காயம் தக்காளி வதக்கி அரைத்த சட்டினியை ஒரத்தில் வைத்தாள் தீபா. அருகில் அவனுடைய வழக்கமான கப்பில் ஓட்ஸ் கஞ்சி பதமான சூட்டில் இருந்தது. ஒரு டம்ப்ளரில் குடிநீர் எனச் செட்டாக இருந்தது. தொட்டுக் கொள்ள என்ன இருந்தாலும், கடைசி இட்லிக்கு, அவனுக்குப் பிடித்த இட்லிப் பொடியும், எண்ணெயும் கூட இருந்தன.

நிமிர்ந்து அவளைப் பார்த்த ஜெய்சங்கர், “தீபா! நீ சாப்பிட்டியா?” என்று கேட்டான்.

“இல்லை மாமா! இனிமே தான். நீங்க சாப்பிடுங்க. உங்களுக்குப் போட்டுட்டு அப்புறம் நான் சாப்பிடறேன்” என்றான்.

“அப்புறம் என்ன? நீயும் என்னோடயே சாப்பிட்டாதான் கிளம்பச் சரியாக இருக்கும். படிச்சியான்னு உன்னைக் கேட்க வேண்டியதில்லை பரிட்சைக்கு வேண்டிய பேனா, ஹால் டிக்கெட் எல்லாம் எடுத்துக்கிட்டியே?”

“எல்லாம் எடுத்து வச்சிட்டேன் மாமா. சாப்பிட்டுக் கிளம்ப வேண்டியது தான். நாளைக்கான பரிட்சைக்கு லைப்ரரில பார்க்க வேண்டியது இருக்கு.  அதனால, நானும் சாப்பாடு எடுத்துக்கிட்டேன். பரிட்சை முடிஞ்சதும் சாப்பிட்டுட்டு, லைப்ரரில படிச்சுட்டு சாயந்திரம் தான் வருவேன்.”

         “சரி, உட்காரு. நீயும் சாப்பிடு; சீக்கிரம் கிளம்பலாம்” என மீண்டும் ஜெய்சங்கர் வற்புறுத்த, தீபாவும் ஒரு தட்டில் இரண்டு இட்லிகளை மட்டும் வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

தானே ஒரு ஸ்பூனால் சட்னியை அவளுடைய தட்டில் போட்டபடியே, “இரண்டு இட்லி சாப்பிட்டேன்னா, மயக்கம் தான் வரும். காலையில இருந்து வேலை செய்யறே; இதையும் சாப்பிடு!” என மேலும் இரண்டு இட்லிகளை வைத்தான்.

அவள் மறுக்க, வற்புறுத்திச் சாப்பிட வைத்தான். பாட்டியிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப, “ம்ம்!” என்று வேறுபக்கம் பார்த்துக் கொண்டு சொன்னார் அவர்.

வெளியில் வரும்போது, தாத்தா ஒரு கவருடன் எதிரில் வந்தார். “ஏம்மா! கிளம்பிட்டியா? நல்ல வஞ்சிரம் மீன் வித்தான்னு வாங்கியாந்தேன். உன்னை வறுக்கச் சொல்லாம்னு நினைச்சேன்!” என்றார்.

அவள் பதில் சொல்லுமுன் முந்திக் கொண்ட ஜெய்சங்கர், “அப்பா! அவ பரிட்சைக்குக் கிளம்பிட்டு இருக்கா. இப்பவே மணி எட்டாச்சு. ஒன்பதரைக்குப் பரிட்சை. இப்பக் கிளம்பினா தான் சரியா இருக்கும். இப்பப்போய் மீனு… கீனுன்னு சொல்லிக்கிட்டு. அம்மாகிட்ட செய்யச் சொல்லிக் கொடுங்க! நீ வா தீபா” என்று படபடவெனக் கூறியபடி மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்தான்.

தீபா, அண்ணாமலை யூனிவரிஸிடியில் எம்.ஈ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறாள். இது முதல் வருடத்தின் இரண்டாம் செமஸ்டருக்கான பரிட்சை. தினமும் சீர்காழியில் இருந்து பஸ்ஸில் தான் போவாள். எப்போதாவது இது போல அவசரம் என்றால், ஜெய்சங்கர் அழைத்துப் போவான்.

ஜெய்சங்கர் சொந்தமாகப் பல தொழில்கள் செய்து கொண்டிருந்தான். அரிசி வியாபாரம் செய்து கொண்டிருந்த அவனுடைய தந்தைக்கு, அவனை பி.காம் வரை மட்டுமே படிக்க வைக்க முடிந்தது. இருபது வயதில் அவன் பொழுதுபோக்காகக் கற்றிருந்த ப்ரிட்ஜ், ஏ.சி மெக்கானிஸம் அனுபவத்தை வைத்து, சிறியதாகக் கடை வைத்தான்.

சிறுகச் சிறுக வளர்ந்து, சில தனியார் அலுவலகங்களிலும் காண்ட்ராக்ட் எடுத்து, கடையை விரிவுபடுத்தினான். கவா்ன்மென்ட் அலுவலகங்களிலும் ஏசி மெயின்டனென்ஸ் காண்ட்ராக்ட் எடுத்துச் செய்தான். இப்போது பிரபல ஏ.சி., ப்ரிட்ஜ், மற்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு அவன்தான் முக்கியமான டீலர். சிதம்பரத்தில் பெரிய கடை இருந்தாலும், சீர்காழியிலும், கடலூரிலும் கிளைகள் இருந்தன. கடையைத் தவிர சர்வீசையும் இன்னும் விடாமல் செய்து கொண்டிருந்தான். அத்தோடு ரியல் எஸ்டேட் பிஸினஸிலும் கால்பதித்து, அங்கங்கே ஏக்கர் கணக்கில் இடம் வாங்கி அதில் சாலைகள் அமைத்து, பிளாட்களைப் பிரித்து விற்பதையும் செய்து கொண்டிருந்தான்.

“அது மட்டுமல்லாது, சிதம்பரம் அண்ணாமலை யூனிவர்ஸிடிக்கு தபால் மூலம் படிக்கும் பல வெளியூர் மாணவ, மாணவிகள் காண்டாக்ட் கிளாஸுக்காக சிதம்பரத்தில் தங்க வேண்டிருந்தது. அப்படி வருபவர்களுக்கு வசதியாக இரண்டு வெவ்வேறு கட்டிடங்களில் ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாக அறைகள் கட்டியிருந்தான்.

ஒவ்வொரு கட்டிடத்திலும் இருபது அறைகள் என நான்கு மாடிகளில் குளியல் வசதியுடன் இருந்தது. அவா்கள் சாப்பிட ஒரு மெஸ்சும் நடத்தினான். கிளாஸுக்கு அருகிலேயே இருந்த அந்த இடம் வசதியாகவும், குறைந்த வாடகையில் தரமான உணவுடனும் கிடைத்ததால், எப்போதும் கூட்டம் நிறைந்திருந்தது.

எல்லா இடங்களிலும் நம்பகமான ஆட்களைப் போட்டிருந்தாலும், காலை முதல் இரவு வரை, எல்லா இடங்களுக்கும் தானே சென்று அலுக்காது பார்வையிட்டான். அதனாலேயே இந்தப் பத்து வருடங்களில் அவனால் இந்த அளவிற்கு வளர முடிந்தது. அதுமட்டுமல்லாமல், அவ்வப்போது எதற்கு டிமாண்ட் அதிகம் என ஆராய்ந்து, செங்கல் சூளை போடுவது, அரிசி, மிளகாய், புளி, பருப்பு என மளிகைச் சாமான்களை மொத்தமாக வயல்களில் கொள்முதல் செய்து, அதை நகரகக் கடைகளில் வினியோகம் செய்வது எனப் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டான்.

இப்போது வசதி பெருகியிருந்தாலும், எளிமையாகவே இருந்தான். கடலூரில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள சிப்காட் பகுதியில் மூன்று இண்டஸ்ட்ரியல் ஷெட்களைக் கட்டி வாடகைக்கு விட்டிருந்தான். இப்போது, தானே அங்கு ஒரு சிறு தொழிற்சாலையைத் தொடங்கும் வேலையில் முனைப்பாக இருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக, தொழில் வட்டாரத்தில் அவனுடைய பெயர் பிரபலமாக ஆரம்பித்திருந்தது. எந்தத் தொழிலைச் செய்தாலும், நாணயத்துடன் கடினமாக உழைத்ததால், அவனுக்கு நல்ல பெயர் இருந்தது. கூடிய சீக்கிரத்தில் இன்னும் பெரிய நிலைக்கு வருவான் என்ற பேச்சும் இருந்தது.

சிதம்பரம் பஸ் ஸ்டாண்டில் யூனிவர்ஸிடிக்குப் போகும் வழியில் வரிசையாகப் பூக்கடைகள் இருந்தன. அழகாக விதவிதமான நிறத்தில் ரோஜாப் பூக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. காரை நிறுத்தி, தீபா அணிந்திருந்த மஞ்சள் நிறச் சுடிதாருக்குப் பொருத்தமாக ஒரு மஞ்சள் ரோஜாவை வாங்கி, அவளிடம் நீட்டினான் ஜெய்சங்கர்.

மகிழ்ச்சியில் கண்கள் மலர, “தாங்க்ஸ் மாமா!” என்று ஆசையாக வாங்கிக் கொண்டாள் தீபா. எதிலும்  பெரிதாக ஆசையில்லாத தீபாவுக்கு, பிடித்த விஷயம்  ரோஜாப்பூ. என்றாவது  இதுபோல அழைத்து  வரும்போது, வழியில் பார்த்தால் வாங்கித் தருவான். அதை ஆசையோடு தன் தலையில் அவள் வைத்துக் கொள்வதைப் பார்த்து ரசித்தான் ஜெய்!

அவளைக் கல்லூரி வாசலில் இறக்கிவிட்டு, ஒரு ‘ஆல் த பெஸ்ட்!’ சொல்லிவிட்டு விடைபெற்றான். தீபா உள்ளே  சென்று தன் தோழிகளுடன் சேர்ந்து கொண்டாள். அவளை அவள் மாமா கொண்டு வந்து விட்டதையம், தலையில் இருந்த புதிய ரோஜாப் பூவையும் பார்த்தவர்கள், அவளைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

“போங்கடி!” என்று அவா்களிடம் சொன்ன தீபா, “உங்களுக்கெல்லாம் இப்படித் தான் நினைக்கத் தெரியும்!” என்று நினைத்துக் கொண்டான். ஆங்கிலத்தில் சொல்வார்கள்… “ப்ரெண்ட், பிலாஸபர், கைடு!” என்று. தன் மனதில், அதற்கு மேலான ஒரு மிக உயர்ந்த இடத்தில் மாமாவை வைத்திருப்பதை இவர்களுக்கெல்லாம் எடுத்துச் சொன்னால் புரியாது” என்று நினைத்தாள்.

Advertisement